நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 15 டிசம்பர், 2011

திண்டுக்கல் இணையப் பயிலரங்க நினைவுகள்…

ஐபேடில் தமிழ் கற்கும் வசதியை விளக்குதல்(தினகரன்)

தினகரன் மதுரைப் பதிப்பு(15.12.2011) 

  மதுரை பாத்திமா கல்லூரியில் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் இணையப் பயிலரங்கப் பணியினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 13.12.2011 இரவு 7.30 மணிக்குத் திண்டுக்கல் வந்தேன். புகழ்பெற்ற பார்சன் விடுதியில் தங்குவதற்கான ஏற்பாட்டினை மிகச்சிறப்பாகச் செய்திருந்தார்கள். நண்பர் பாரதிதாசன், அமைதி அறக்கட்டளை நிறுவுநர் திரு.பால் பாஸ்கர் ஆகியோர் இரவு அறைக்கு வந்து இணையப் பயிலரங்கம் தொடர்பில் கலந்துரையாடினர். இரவு உணவு அனைவரும் உண்டோம். திரு.பால் பாஸ்கர் அவர்களை முன்பே அறிவேன். அண்ணன் இரா.கோமகன், வழக்கறிஞர் கே.பாலு, கடலாய்வு வல்லுநர் ஒரிசா பாலு, அண்ணன் ஜெயபாஸ்கரன் ஆகியோர் வழியாகப் பால் பஸ்கர் அவர்களின் சமூகப்பணிகளை அறிவேன். இருவரும் இன்றுதான் நேர்கண்டு உரையாடும் சூழல் அமைந்தது. 

  14.12.2011 காலை பத்து மணியளவில் அமைதி அறக்கட்டளையின் அரங்கிற்குச் சென்றோம். மாணவர்களும் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் காத்திருந்தனர். நிகழ்ச்சி தொடங்கியது. தொடக்கவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. திரு.பால் பாஸ்கர் தலைமையுரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் வரவேற்புரையாற்றினார். அருளகம் சார்ந்த பாரதிதாசன் அறிமுக உரையாற்றினார். தமிழ் இணையம் வளர்ந்த வரலாற்றையும் தமிழ் இணையம் பற்றி அறிய வேண்டியதன் தேவையையும் நான் காட்சி விளக்கத்துடன் அரங்கிற்குத் தெரிவித்தேன். ஐ பேடு உள்ளிட்ட கருவிகள் கல்வி, படிப்புக்கு உதவும் பாங்கினை விளக்கினேன். மாணவர்கள் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு என் உரை தேவையானதாகத் தெரிந்தது. அனைவரும் என் முயற்சியை ஊக்கப்படுத்தினர். மாணவர்கள், பொதுமக்கள் உள்ளம் நிறைவடையும் வகையில் மிக எளிய தமிழில் தமிழ் இணையப் பயன்பாட்டைச் சொன்னதும் அனைவரும் புரிந்துகொண்டனர். 

 தமிழ்த் தட்டச்சினை அறிந்து அரங்கிலிருந்தபடி ஒரு மாணவர் என் மின்னஞ்சலுக்குத் தமிழில் தட்டச்சிட்டுப் பயிலரங்கம் சிறப்பாகச் செல்கின்றது என்று ஒரு பாராட்டு மடல் விடுத்தார். அரங்கில் அந்த மடல் பற்றி ஆர்வமுடன் உரையாடினோம். வேலூர் மென்பொருள் பொறியாளர் ஒருவருடன் ஸ்கைப்பில் உரையாடினோம். அனைவருக்கும் மகிழ்ச்சி. 

 தமிழ்த் தட்டச்சு தொடங்கி, சமூக வலைத்தளங்கள், நூலகம் சார்ந்த தளங்கள், கல்வி சார்ந்த தளங்கள், மின்னிதழ்கள் என ஓரளவு பார்வையாளர்களுக்குப் பயன்படும் செய்திகளைப் பகிர்ந்துகொண்டேன். தொலைக்காட்சி, பண்பலை வானொலி, நாளிதழ் சார்ந்த ஊடகத்துறையின் பல செய்தியாளர்கள் நிகழ்ச்சி பற்றிய செய்திகளை ஆர்வமுடன் வெளியிட்டனர். மதுரைப் பதிப்பில் அனைத்து முன்னணி ஏடுகள் வழியாகப் பல மாவட்டங்களைக் கடந்து திண்டுக்கல் பயிலரங்கச் செய்திகள் சென்றன.

தினமணி நாளிதழில் செய்தி 

 * ஊடகத்துறையின் அனைத்துத் தோழர்களுக்கும் நன்றி.

5 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தங்கள் பணி பெருமிதம் கொள்ளத்தக்கதாக உள்ளது முனைவரே..

வாழ்த்துக்கள்..

ராம்ஜி_யாஹூ சொன்னது…

மகிழ்வான செய்தி , தொடரட்டும் உங்கள் நற்பணி

மணிச்சுடர் சொன்னது…

ஐ பேட் மூலம் தமிழ் கற்கும் முறையினை அறிமுகம் செய்ததன் மூலம் தமிழ் இணைய வளர்ச்சி வரலாற்றில் மேலும் ஒரு உச்சத்தைத் தொட்டுள்ளமை பாராட்டுதலுக்குரியது. தொடரட்டும் தங்கள் தமிழ் இணையப் பயன்பாட்டுப் பணி. வாழ்த்துகளுடன் பாவலர் பொன்.க புது்க்கோட்டை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பகிர்விற்கு நன்றி நண்பரே!
என் வலையில் :
"நீங்க மரமாக போறீங்க..."

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் அய்யா, தொடருங்கள்.