ஆனந்த விகடன் இதழின் இணைப்பு இதழாக வெளிவரும் என் விகடன் இதழில் (21.09.2011) செய்தியாளர் திரு.முருகன் அவர்கள் என்னை நேர்காணல் செய்து எழுதியுள்ளார். என் விகடனில் வெளிவந்த இந்த நேர்காணல் பகுதி புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மட்டும் கிடைக்கும். அனைவரும் காணும் வகையில் என் வலைப்பக்கத்தில் பதிகின்றேன். செய்தியாளர் திரு.முருகன் அவர்களுக்கும் ஆனந்தவிகடன் நிறுவனத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ் பயிற்றுவிக்கும் பணிகளுக்கு இடையே நேரம் கிடைக்கும்பொழுது தமிழ் இணையப் பரவல் பணிகளிலும், தமிழ்நூல் பதிப்பிலும், இசையாய்வுகளிலும், நாட்டுப்புறப் பாடல்கள் தொகுப்பிலும் நான் ஈடுபட்டு வருவதை அறிந்து இந்த நேர்காணலில் சில செய்திகளைப் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து இந்தத் துறைகளில் உழைக்கும் ஊக்கத்தை இந்த நேர்காணல் எனக்கு வழங்கியுள்ளது. படித்து மகிழ்ந்து வாழ்த்துரைத்த தூய நெஞ்சங்களுக்கு என் நன்றி உரியதாகும்.
இவருக்கும் தமிழ் என்று பேர்!
தமிழ் வளர்ச்சி என்பது பலருக்கும் வயிறு வளர்க்கும் வாய்ச் சொல் வார்த்தை. ஆனால், பேராசிரியர் இளங்கோவனுக்கோ அது அர்த்த பூர்வமான வாழ்க்கை!
புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி தமிழ் விரிவுரையாளரான இளங்கோவன், இணையத்திலும் அச்சிலும் தமிழ் இலக்கியங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், தமிழர் வரலாறு ஆகியவற்றை அடர்த்தியாகவும் ஆழமாகவும் பதிவுசெய்பவர். இவருடைய தமிழ்ப் பணிக்காக, மத்திய அரசின் 'செம்மொழி தமிழாய்வு நிறுவனம்’ சார்பில், 'செம்மொழி இளம் அறிஞர்’ என்ற விருதினை ஜனாதிபதியிடம் பெற்றுள்ளார்.
ஐ-பாடில் சீவக சிந்தாமணியை டிரான்ஸ்ஃபர் செய்துகொண்டு இருந்தவர், முகமலர்ச்சியுடன் வரவேற்று மனம் மகிழப் பேசினார். ''கங்கை கொண்ட சோழபுரத்துக்கு அருகில் உள்ள இடைக்கட்டு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். எனது ஊரில் இருந்து 13 கி.மீ-யில் உள்ள மீன்சுருட்டியில்தான் உயர்நிலைக் கல்வி. சைக்கிள் வாங்கும் அளவுக்கு வசதி இல்லாததால் பள்ளிக்குத் தினமும் நடந்துதான் சென்றுவர வேண்டும். 12-ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால், அப்பா என்னை விவசாயத்தில் ஈடுபடுத்தினார். பிறகு, தமிழ் ஆசிரியர் சுந்தரேசனார் ஆலோசனையின் பேரில், திருப்பனந்தாள் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை, முதுகலைப் பட்டங்களை முடித்து கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். கல்லூரிக் காலத்திலேயே தமிழ் ஆர்வத்தால் 'மாணவராற்றுப்படை’ என்ற நூலை எழுதினேன். பிறகு, படிப்படியாக முனைவர் பட்டமும் பெற்றேன்!'' - என்று சொல்லும் இவர், இதுவரை 17 புத்தகங்களை எழுதி இருக்கிறார்.
தமிழ்(எழுத்து)ச் சீர்திருத்தம், கிரந்த கலப்பு போன்றவை தொடர்பாக நடக்கும் உலக அளவிலான விவாதங்களில் கலந்துகொள்வது, கிராமங்களுக்குச் சென்று ஒப்பாரிப் பாடல்கள், நடவுப் பாடல்களைத் தொகுப்பது என்று ஆர்வத்துடன் ஆய்வுகள் மேற்கொள்கிறார். குறிப்பாக, இணையத்தில் தமிழ் அறிஞர்கள் குறித்து இவர் ஏற்றி உள்ள தரவுகள், மிகவும் பயன் உள்ளவை.
'' 'ஜீவா’ என்று இணையத்தில் தேடினால், முதலில் நடிகர் ஜீவாதான் வருகிறார். அதற்குப் பிறகுதான், தோழர் ஜீவானந்தம் பற்றிய குறிப்புகளே வருகின்றன. அதனால் தமிழ் அறிஞர்களைப் பற்றிய வரலாறுகளையும் அவர்களுடைய புத்தகங்களையும் அவர்களின் புகைப்படங்களோடு வலை ஏற்றினேன். சங்க இலக்கியங்கள், அக நானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற பல நூல்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்ற ஆரம்பித்தேன். சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப்படை போன்றவற்றை இசை அமைத்துப் பாடிய இசைமேதை குடந்தை ப.சுந்தரேசன் அவர்களைப்பற்றி 20 ஆண்டு காலங்கள் தேடி, அவர் பாடிய பாடல்களைக் கண்டுபிடித்து, அதில் சிலவற்றை வலை ஏற்றி இருக்கிறேன். திருத் துறைப்பூண்டியைச் சேர்ந்தவரும் அகநானூறு, புறநானூறு போன்றவற்றுக்கு விளக்க உரை எழுதியவருமான பெருமழைப் புலவர் திரு. போ.வே.சோமசுந்தரனார் அவர்களுடைய குடும்பம், வறுமையின் கோரப்பிடியில் இருக்கிறது என்று இணையத்தில் எழுதி இருந்தேன். அது தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க... அவருடைய குடும்பத்துக்கு 10 லட்சம் கொடுத்து கௌரவப் படுத்தியது.
தொடர்ச்சியான எனது செயல் பாடுகளால் கவரப்பட்ட 'வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை’ (ஃபெட்னா), பெருமழைப் புலவனாரின் நூற்றாண்டு விழாவில் என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்து விழா மலரை வெளியிடவைத்தனர்!'' என்று சொல்லும்போதே பெருமிதம் பெருமழையாகப் பொழிகிறது இளங்கோவனின் வார்த்தைகளில்.
பழைமையைப் பாதுகாப்பது, புதுமையைப் பயன்படுத்திக்கொள்வது என்ற நோக்கங்களைக் கொண்டு செயல்படும் இளங்கோவன் போன்றவர்கள்தான், தமிழர்களின் இன்றைய தேவை!
- ஜெ.முருகன்
9 கருத்துகள்:
வாழ்த்துக்கள்!
முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்கு வணக்கம்.
ஆனந்த விகடனில் உங்கள் பேட்டி படித்து மகிழ்ந்தோம்.
உங்கள் தமிழ்ச் சேவையைப் பராட்டுகிறோம்.
உங்கள் தமிழ்ப்பணி வளர வாழ்த்துக்கள்.
நாஞ்சில் இ. பீற்றர்
வாசிங்டன் வட்டார(த்) தமிழ்ச்சங்கம்
@ நேரம் கிடைக்கும்பொழுது தமிழ் இணையப் பரவல் பணிகளிலும்...
நீங்கள் நேரம் ஒதுக்குகிறீர்கள் என்பதே உண்மை.
தங்கள் பணியில் மேலும் பலர் அணிதிரள வேண்டுமென்பது என் அவா.
திறமூல தமிழ்க் கணிய மன்றத்தில்
http://groups.google.com/group/freetamilcomputing/about தங்களை இணைத்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் ஐயா. மென்மேலும் தங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா. இக்கட்டுரையை வெளியிட்ட ஆன்ந்த விகடன் (என் விகடன்) இதழுக்கும் , செய்தியாளர் திரு.முருகன் அவர்களுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள் ஐயா. மென்மேலும் தங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா. இக்கட்டுரையை வெளியிட்ட ஆன்ந்த விகடன் (என் விகடன்) இதழுக்கும் , செய்தியாளர் திரு.முருகன் அவர்களுக்கும் நன்றி.
எதிர் பார்த்ததுதான் :) உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..!!! இனி நீங்கள் செய்யவேண்டியது இளைஞர் அணி திரட்டுவதுதான்..!!
உங்களைப் போன்றோரால்தான் இணையத் தமிழ் இணையில்லாததாய்த் திகழ்கிறது.அதனை நேர்காணல் வழியாக வெளியிட்டு உங்களைப் பெருமைப்படுத்திய விகடனுக்கு எங்களின் நன்றியும் உரித்தாகுக.
தங்கள் தமிழ்ப்பணி மேன்மேலும் சிறப்பாய் தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ஐயா.இக்கட்டுரையை வெளியிட்டு சிறப்பு செய்த ஆன்ந்த விகடன்(என் விகடன்) இதழுக்கும்,செய்தியாளர் திரு.முருகன் அவர்களுக்கும் நன்றி.புகைப்படம் வாயிலாக தங்களுடைய தொடர்பு கிடைத்தது எனக்கு,நான் கதிரையாவை ஆவணப்படுத்த உள்ளேன் என்று கூறியதும் தங்களிடம் இருந்த அந்த அறிய புகைப்படங்களை தந்து உதவிய நாட்களை என்னால் மறக்க முடியவில்லை.புகைப்படங்களை பார்த்தபிறகு தான்,என்னால் ஆவணப்படத்தை முடிக்க முடியும் என்ற நம்பிக்கையே வந்தது!முதன் முதலில் எனது ஆவணப்படத்தை பற்றி இணையத்தில் செய்தியை வெளிட்டது தாங்கள் தான்.அதற்காக நன்றிகள் பல...தங்களுடைய பணி பாரட்டுக்குரியது.மேன்மேலும் தொடர வாழ்த்துகள்...நன்றி வணக்கம்.
சி.ம.மணி
ஆவணப்பட இயக்குனர்
மயிலாடுதுறை
தங்களை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது முனைவரே..
வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக