நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

தொலைக்காட்சிகளில் கணினி, இணையம் சார்ந்த உரை...

அண்மைக்காலமாகக் கணினி, செல்பேசி சார்ந்த உரையாடல், பேச்சுகள் தொலைக்காட்சிகளில் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் செப்டம்பர் ஒன்றாம் நாள் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள ஒரு நிகழ்ச்சி பற்றிய குறிப்பைப் புதுக்கோட்டைப் புலவர் முத்துநிலவனார் என்னுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துகொண்டார். அந்தச்செய்தி விவரம் கீழே:

//கடந்த 27 சனிக்கிழமை அன்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பட்டிமன்ற ஒளிப்பதிவு. 'கைபேசியோடும் கணினியோடும் செல்லும் இன்றைய பயணம்...

சிகரத்தை நோக்கியே... சிரமத்தை நோக்கியே..."

என்பதில் நான் சிகரத்தை நோக்கிப் பேசினேன்... அதில் பேச்சின் இடையே உங்கள் 'இணையம் கற்போம்' நூலைப் பார்வையாளர்களுக்கு உயர்த்திக்காட்டி 'இதுமாதிரி நூல்களையெல்லாம் படிங்க' அப்படின்னு சொன்னேன்... பின்னர் பேசிய திரு லியோனி 'அய்யா வீரமணிக்குப் பிறகு மேடையில் பேசும்போது புத்தகங்களைக் காட்டிப் பேசியது அனேகமாக நிலவனாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்' அப்படின்னார்... அதைத் தான் உங்களுக்குக் குறுஞ்செய்தியில் தெரிவித்தேன் ... செப்.ஒன்றாம் தேதி காலை ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகிறது... பார்க்கலாம்... எப்படி வருகிறது என்று...

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

சென்னையில் த.மு.எ.க.சங்கம் சார்பில் தமிழ் இணையம் அறிமுகம்


பார்வையாளர்கள்

சென்னை, கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள டிஸ்கவரி புத்தக நிறுவனத்தில்(புதுச்சேரி விருந்தினர் இல்லம் அருகில்) த.மு.எ..க. சங்கம் சார்பில் தமிழ் இணையம் அறிமுகம் 28.08.2011 பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற்றது.வகுப்பிற்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் வந்திருந்தனர். இவர்களுள் மாணவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. த.மு.எ.க.சங்கம் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இவர்களுக்குத் தமிழ் இணையம் அறிமுகம், தமிழ்த்தட்டச்சு, பயனுடைய இணையதளங்கள், வலைப்பூ உருவாக்கம், விக்கிப்பீடியா, நூலகம் சார்ந்த தளங்களை அறிமுகம் செய்தேன். பலருக்கு மின்னஞ்சல் உருவாக்கும் பயிற்சியையும் வழங்கினேன்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களைத் தோழர் இலக்கியா வரவேற்று, நிகழ்ச்சி பற்றிய அறிமுகம் செய்தார். தோழர் பாரதிகண்ணன் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

என் மாணவர் பிரேம் அவர்கள் வந்திருந்து எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார்.

பார்வையாளர்கள்


ஒருங்கிணைப்பாளர் தோழர் பாரதிகண்ணன்


வரவேற்புரையாற்றும் தோழர் இலக்கியா


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்

என் இணையம் கற்போம் உள்ளிட்ட நூல்கள் இனி சென்னையில் உள்ள டிஸ்கவரி புக் பேலசில் கிடைக்கும்படி ஏற்பாடு செய்து திரும்பினேன்.

டிஸ்கவரி புக் பேலசு (DISCOVERY BOOK PALACE),
எண் 6, மகாவீர் காம்பளக்சு, முதல்மாடி,
முனுசாமிசாலை,
கலைஞர் கருணாநிதி நகர் (மேற்கு),
சென்னை 600 078

பேசி: 044 - 6515 7525
செல்பேசி: 994044650

மின்னஞ்சல்: discoverbookpalace@gmail.com

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

ஊற்றங்கரை தமிழ் இணையப் பயிலரங்கக் காட்சிகள்

பயிலரங்கத்தின் சில காட்சிகள்












ஊற்றங்கரை வித்தியாமந்திர் கல்லூரியில் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று காலை பத்து முப்பது மணியளவில் தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது.ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெற்று வருகின்றனர். பள்ளியின் தாளாளார் திரு.வே.சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் திரு.பழ. பிரபு உள்ளிட்ட விடுதலை வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். சென்னையிலிருந்து பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் கலந்து கொண்டு இணையப் பயிலரங்கத்தை அறிமுகம் செய்து உரையாற்றினார். புதுவை மு.இளங்கோவன் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் தமிழ் இணைய அறிமுகம் செய்தார். உணவு உடைவேளைக்குப் பிறகு செய்முறைப் பயிற்சி தொடங்க உள்ளது.


வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

ஊத்தங்கரையில் தமிழ் இணையப் பயிலரங்கம்

கிருட்டினகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை(21.08.2011) காலை 10 மணியளவில் வித்யா மந்திர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுகின்றது. திரு. பழ.பிரபு அவர்களின் முயற்சியால் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. கல்லூரி,பள்ளி மாணவர்கள் கலந்துகொள்வதுடன் தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டு தமிழ் இணையப் பயன்பாட்டை அறிய உள்ளனர்.

சென்னையிலிருந்து பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களும், புதுவையிலிருந்து மு.இளங்கோவனும்,ஊத்தங்கரையிலிருந்து கவி செங்குட்டுவனும் கலந்துகொண்டு தமிழ் இணையம் சார்ந்த செய்திகளைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர். கல்லூரி முதல்வர் பேராசிரியர் அருள்,கணினித்துறைத் தலைவர் பேராசிரியர் செந்தில்நாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு வருவோரை அன்புடன் வரவேற்க உள்ளனர். அனுமதி இலவசம். கணினி, இணைய ஆர்வலர்களை ஊத்தங்கரையில் சந்திக்க ஆர்வமுடையவர்கள் கலந்துகொள்ளலாம்.

ஆர்வலர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் : திரு.பழ.பிரபு + 91 9942166695

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஆராய்ச்சி வித்தகர் கு.திருமேனி அவர்கள்


பேராசிரியர் கு.திருமேனி அவர்கள்

 பேராசிரியர் கு.திருமேனி அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் சீர்காழி வட்டம் தென்னிலக்குடி என்னும் ஊரில் வாழ்ந்த குமாரசாமி என்னும் பெரியார்க்கு மகனாக வாய்த்தவர்.

 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர், பி.ஓ.எல் பட்டங்களையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டத்தையும், கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர்.

 நாடகச்சிலம்பு, கோவலன், பூம்புகார்ப் பொற்றொடி, தென்றமிழ்ப்பாவை, கம்பருக்குக் கதைகொடுத்தவர் வான்மீகரா?, கோவூர்க்கிழார், மனோன்மணியத் திறனாய்வு, வாலி ஒரு திறனாய்வு, சிலம்பணி மகளிர், தூய சிந்தையாள் (கைகேயி) ஆகிய ஆய்வுநூல்களை எழுதியவர். இவரின் நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடநூலாக இருந்த பெருமைக்குரியன.

 திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் முதுகலைப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

 இரண்டாவது உலகத் தமிழ்மாநாட்டிலும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்திலும் கட்டுரை படித்த பெருமைக்கு உரியவர்.

 ஆராய்ச்சிச்செல்வர், கம்பராமாயண வித்தகர் போன்ற பட்டங்களைப் பெற்றவர். திருச்சிராப்பள்ளி செண்பகத் தமிழரங்கில் இவர் ஆற்றிய பேருரைகள் ஒலிப்பதிவில் பாதுகாக்கப்படுகின்றன. சிலப்பதிகாரத்திலும் கம்பராமாயணத்திலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வகையில் புலமை பெற்றவர் என்று அறிஞர் உலகு இவரின் புலமையைப் போற்றும். தமிழ் ஆங்கில மொழிகளில் வல்லார் என்று புலமையாளர் போற்றுவர்.

நன்றி: செண்பகத் தமிழ்க்கோவை

புதன், 10 ஆகஸ்ட், 2011

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் தமிழ் இணையப் பயிலரங்கம்




அழைப்பிதழ்



கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெற உள்ளது.தமிழ் இணைய ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம்.

நாள் :21.08.2011 ஞாயிற்றுக் கிழமை காலை 9 .45 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,காட்டேரி, ஊற்றங்கரை


புதுச்சேரி முனைவர் .மு .இளங்கோவன், பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட தமிழ் இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயிற்சி வழங்குகின்றனர்.

காலையில் தொடங்கும் விழாவிற்குப் பழ.பிரபு (செயலாளர் விடுதலை வாசகர் வட்டம்) வரவேற்புரையாற்றுகின்றார்.

வித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள் நிறுவுநர் உயர்திரு .வே .சந்திரசேகரன் தலைமையில் விழா நடைபெறுகின்றது.

முன்னிலை : கே.சி.எழிலரசன், பழ.வெங்கடாசலம், தணிகை.ஜி.கருணாநிதி

அறிமுகவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்


நன்றியுரை: அண்ணா.சரவணன்

பங்கேற்கும் பேராளர்களின் கவனத்திற்கு ...

*தமிழ் இணையம் ,தமிழ்த் தட்டச்சு,மின்அஞ்சல்,உரையாடல்,வலைப்பூ உருவாக்கம், பயன்பாட்டுக்குரிய தளங்கள்,தமிழ் விக்கிப்பீடியா,நூலகம் சார்ந்த தளங்கள், மின்னிதழ்கள், தமிழ்க் கல்விக்குரிய தளங்களை அனைவரும் அறிந்து கொள்ளவே ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் இப் பயிலரங்கை ஏற்ப்பாடு செய்துள்ளது.

* பயிலரங்கத்தில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் வருகையை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதிவிற்குத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 9443910444 /9865817165 /9942166695

பதிவு செய்ய கடைசி நாள் 18 /8 /11

* பயிலரங்கத்தில் பங்கேற்க ஊற்றங்கரை நகரத்தில் இருந்து காட்டேரி வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செல்ல வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .ஊற்றங்கரைC.A.K .பெற்றோலியம் பேங்க் அருகில் இருந்து காலை 9 மணி அளவில் ஒரு பேருந்தும் 9 .30 மணி அளவில் மற்றொரு பேருந்தும் புறப்படும்.

பயிலரங்கத்தில் பங்கேற்கும் அனைவர்க்கும் மதிய உணவு ,தேநீர் ,குறிப்பேடு ,எழுதுகோல் வழங்கப்படும் .

* பயிலரங்கத்தில் அனைவரும் காலை 9 .30 மணி முதல் மாலை 4 மணி வரை முழுமையாக பங்கு கொள்ள வேண்டும் .

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

கு.சின்னப்ப பாரதி இலக்கியப் பரிசுக்கு இணையம் கற்போம் நூல் தேர்வு!




நாமக்கல்லில் அமைந்துள்ள கு.சின்னப்ப பாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளையின் சார்பில் 2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான பரிசில் அறிவிக்கப்பட்டுள்ளது. முனைவர் மு.இளங்கோவன் எழுதிய இணையம் கற்போம் நூல் சிறப்புப் பரிசுக்கு உரிய வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பரிசாக உருவா பத்தாயிரமும் சான்றிதழும் அக்டோபர் இரண்டாம் நாள்- ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் செல்வம் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளன.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

தமிழ் வளர்ச்சியில் இணையம்




தமிழ் வளர்ச்சிக்குக் கணினி, இணையத் தொழில்நுட்பம் பெரிதும் பயன்படுகிறது. இணையம் வந்த பிறகுதான் தமிழ்த் தகவல்கள் கடல்கடந்த நாடுகளுக்கு உடனுக்குடன் பரவின. இணையம் உலகத்தை ஒரு சிற்றூராக்கியது.

எழுத்துருச் சிக்கல், தட்டச்சுப் பலகைச்சிக்கல் தொடக்கத்தில் இருந்தன. இதனால் பல தமிழ் மென்பொருள்கள் உலகம் முழுவதும் தமிழர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் உருவாக்கப்பட்டன.

தமிழ்த் தட்டச்சுப் பலகை குறித்த சிக்கல் ஓரளவு தீர்ந்த நிலையிலும் எழுத்துருச் சிக்கல் இருந்து வந்தது. முகுந்து உள்ளிட்ட பொறியாளர்களின் முயற்சியால் ஒருங்குகுறி நுட்பத்தில் தமிழ்த் தட்டச்சுக்கு வழி பிறந்ததால் (2003) தமிழில் செய்தி பரவுவதில் இருந்த தடை நீங்கியது.

அச்சு இதழ்கள்போல தமிழ் மின்னிதழ்கள் எண்ணற்றவை தோன்றின. தமிழ்ப்படைப்புகளையும் படைப்பாளிகளையும் உலக அளவில் அறிமுகப்படுத்துவதில் வலைப்பூக்கள் பெரும்பங்காற்றுகின்றன.

செய்திகளையும் வலைப்பூக்கள் முந்தித் தருகின்றன. கட்டற்றுச் செய்திகளை வெளிப்படுத்தும் தன்னுரிமையை வலைப்பூக்கள் வழங்குவதால் வலைப்பதிவர்கள் பலர் எழுத வந்தனர்.
வலைப்பூக்களில் படைப்புகள் மட்டுமன்றி படங்கள், ஓவியங்கள், காணொளிகள், ஒலிப்பதிவுகள் எனப் பல வடிவில் தமிழ்ச் செய்திகள் கிடைக்கின்றன. இதனால் உலகம் முழுவதுமிருந்து தமிழ்ப்படைப்புகளும் படைப்பாளிகளும் கிடைத்தனர். அச்சுவழி கிடைத்த தமிழ்ப்படைப்புகளில் குறிப்பிட்ட எழுத்தாளர்களின் படைப்புகள்தான் படிக்கக் கிடைக்கும் என்ற நிலை மாறி இணையத்தால் புதுப்புது எழுத்தாளர்கள் கிடைத்தனர். தமிழ்ப்படைப்புகளின் வாசகர்தளமும் விரிவடைந்தது.

இணையம் சார்ந்த பல கலைச்சொற்கள் தமிழில் உருவாக்கப்பட்டு வழக்கத்துக்கு வந்துள்ளன. குறிப்பாக மின்னஞ்சல், மின்வருடி, மென்பொருள், வன்பொருள், படிமக்கோப்பு, பதிவர், வலைப்பதிவு, வலைப்பூ, சமூக வலைத்தளம், இணையக்குழு, விசைப்பலகை, திரை, மடிக்கணினி, மேசைக்கணினி, சுட்டி முதலான சொற்கள் பயன்பாடு நோக்கித் தமிழில் உருவாக்கம் பெற்றுள்ளன. இச்சொற்களின் வருகையால் தமிழ்மொழியில் கலைச்சொல்வளம் மிகுந்து வருகிறது.

இணையத்தின் வரவால் அச்சு வடிவ அகரமுதலிகள் போல் மின் அகரமுதலிகள் உருவாயின. சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி, க்ரியா அகராதி, கதிரைவேற்பிள்ளை அகராதி, வின்சுலோ அகராதி, பெப்ரிசியசு அகராதி உள்ளிட்ட அகராதிகள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. தமிழ் இணையத்தில் தமிழ்சார்ந்த செய்திகள் பல இடப்பட்டிருந்தாலும் இன்னும் உள்ளிட வேண்டிய செய்திகள் பல உள்ளன. உள்ளிடப்பட்டவற்றையும் பயன்படுத்துவோர் எண்ணிக்கையளவில் குறைவாகவே உள்ளனர். தமிழைப் பயன்படுத்தி மின்னஞ்சல் செய்ய இயலும், உரையாட இயலும் என்று தெரியாமல் கணினித்துறையில் பலர் இருப்பதையும் இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழ் இணையத்தை வளர்த்தெடுக்கப் பல மாநாடுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், வலைப்பதிவர் சந்திப்புகள் நடத்தப்பட்டன. தமிழ் இணையத்துக்கு எனப் பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. உத்தமம் என்ற அமைப்பு தமிழ்க்கணினி, இணையத் தொழில்நுட்பத்துக்கு என்று உலகெங்கும் பரவி வாழும் தொழில்நுட்பம் தெரிந்த அறிஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கணினித் தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பும் தமிழ் கணினித்துறை வளர்ச்சிக்கு உதவுகிறது.

மதுரைத் திட்டம் என்னும் தளம் தமிழின் அரிய நூல்கள் 353-ஐ தம் பக்கத்தில் யாரும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வைத்துள்ளது. தமிழ் மரபுச்செல்வங்களை வெவ்வேறு வடிவங்களில் தரும் வண்ணம் பல இணைய தளங்கள் தமிழ்ச் செய்திகளைத் திரட்டிப் பாதுகாத்து வருகின்றன.

அவற்றுள் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற தளம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அரிய நூல்கள், ஓலைச்சுவடிகள், படங்கள், ஒலிப்பதிவுகள் எனத் தமிழரின் மரபுச்செல்வங்களைத் தாங்கி அத்தளம் உள்ளது.

ஈழத்தமிழர்களின் நூல்களையும் இதழ்களையும் பாதுகாக்கும் நூலகம் என்ற தளம் அரிய நூல்களையும் இதழ்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சிங்களப் பேரினவாதிகள் யாழ்ப்பாண நூலகத்தை அழித்த பிறகு இனித் தமிழர் அறிவுச்செல்வங்களை யாரும் அழிக்க இயலாதபடி நூலகம் தளத்தில் பாதுகாத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
உலகெங்கும் எழுதும் வலைப்பதிவுகளைத் திரட்டித் தரும் திரட்டிகள் தமிழ்மொழிக்கென உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி என்னும் பெயர்கொண்ட திரட்டிகள் தமிழ் எழுதும் பதிவர்களின் படைப்புகளை உலக அளவில் திரட்டித் தந்து தமிழ்ப்படைப்புகளுக்கு உலக அளவில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழ்ச்சொற்களை அகரவரிசையில் தரும் வண்ணம் மென்பொருள்கள் இணையத்தில் உள்ளன. தட்டச்சிட்டால் ஒலித்துக்காட்டும் மென்பொருள்கள் வெளிவந்துள்ளன. விரும்பியவண்ணம் எழுத்துகளை மாற்றித் தரும் எழுத்துமாற்றிகளும் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளன.

இணைய வளர்ச்சியால் தமிழ் மொழி பெயர்ப்பு புதிய வீச்சும் வேகமும் பெற்றுள்ளது. தமிழ்க்கல்வியை எளிமைப்படுத்தி வழங்கும் வகையில் பல இணையதளங்கள் உள்ளன.
இன்றைய அனைத்து அதிர்வுகளையும் உலக அளவில் உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளும் இணையத்திற்கு ஈடுகொடுத்துள்ள தமிழ் வளர்ச்சி வருங்காலத்தில் இன்னும் விரைவாக இருக்கும்.

நனி நன்றி: தினமணி 02.08.2011