நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 9 ஜூலை, 2011

ஏல் பல்கலைக்கழக நினைவுகள்…


முனைவர் பெர்னார்டு, மு.இ,முனைவர் சுதிர்,பாஸ்டன் பாலா

 26.06.2011 காலை ஒன்பது முப்பது மணியளவில் நண்பர் பாலா இல்லத்திலிருந்து எங்கள் மகிழ்வுந்து புறப்பட்டது. கனெக்டிக் கட் மாநிலத்தில் உள்ள நியுகெவன் பகுதியில் உள்ள ஏல் பல்கலைக்கழகத்தை நோக்கி இரண்டு மணி நேரம் பயணம் செய்தோம். பல வளநகர், காடு, மலை கடந்தோம். இயற்கை அழகினை வியந்தவனாய்ச் சென்றேன். அமெரிக்காவின் கல்விமுறை பற்றியும் மக்கள் வாழ்க்கை பற்றியும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.

 ஏல் பல்கலைக்கழகம் உலக அளவில் புகழ்பெற்ற பல அறிஞர்கள் பணிசெய்த இடம்; புகழ்பெற்ற பலர் பயின்ற இடமாகவும் அது விளங்குகின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை அறிஞர் அண்ணா அவர்களின் வாழ்க்கையை நினைக்குந்தொறும் ஏல் பல்கலைக்கழகம் நினைவுக்கு வருவது உண்டு. அறிஞர் அண்ணா அவர்கள் அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற இந்திய மாணவர்களின் அழைப்பை ஏற்று உரை நிகழ்த்தியதாகவும், அறிஞர்களுடன் கலந்துரையாடியதாகவும், திருக்குறள் நூலை அங்குள்ளவர்களுக்கு அறிமுகம் செய்ததாகவும் பெரியோர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். (இது பற்றிய முழுவிவரம் அறிந்தோர் அறிவிக்க அறிவேன்). அத்தகு புகழ்மிக்க ஏல் பல்கலைக்கழகத்தின் மானுடவியல்துறையில் முனைவர் பெர்னார்டு பேட் அவர்கள் பணிபுரிவதால் அவரைப் பார்க்கவும் எண்ணியிருந்தேன். பெர்னார்டு பேட் தம்மைப் “பழனி” என்று தமிழ்ப்பெயரில் அழைக்க விரும்புவார்.

 பெர்னார்டு பேட் அவர்களை 1995 முதல் அறிவேன். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அறிஞர் வ.சுப.மாணிக்கனார் பற்றி உரையாற்றச் சொன்றபொழுது முதன்முதல் கண்டுள்ளேன். அதன்பிறகு பலவாண்டுகளுக்குப் பின்னர்ப் புதுச்சேரியில் பிரஞ்சு ஆய்வு நிறுவனத்தில் கண்டு உரையாடியுள்ளேன். அவர்களுக்கு என் வருகை முன்பே தெரிவிக்கப்பட்டது. மேலும் என் அருமை நண்பர் வெட்டிக்காடு இரவிச்சந்திரன் அவர்களுக்கு என் அமெரிக்கப் பயணம் தெரிந்தபொழுது அவரின் நெருங்கிய நண்பர் பேராசிரியர் சுதிர் அவர்களைக் கண்டு உரையாடும்படி பயணத்தை அமைக்கச் சொன்னார். வெட்டிக்காடு திரு. இரவி அவர்கள் இந்தியாவில் தொலைத்தொடர்புக்கு வித்திட்ட அறிஞர் முனைவர். சாம் பிட்ரோடா அவர்களுடன் இணைந்து பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

 பேராசிரியர் சுதிர் அவர்கள் ஏல் பல்கலைக்கழகத்தில் மேலாண்மையியல் துறையில் பணிபுரிகின்றார். என் வருகை அறிந்து என்னை வரவேற்க ஆயத்தமாக இருந்தார். பெர்னார்டு பேட் அவர்கள் ஏல் பல்கலைக்கழகத்திலிருந்து வேறு ஒரு பல்கலைக்கழகத்திற்குப் பணி கிடைத்துச் செல்ல இருந்தார். மேலும் அவர்கள் வீட்டில் ஒரு மங்கல நிகழ்வும் அன்று இருந்தது. இருப்பினும் அதிலிருந்து சிறிது விடுபட்டு எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கி வந்தார். இதனிடையே எங்கள் மகிழ்வுந்து ஏல் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நுழைந்தது.

 ஏல் பல்கலைக்கழக வளாகம் பெரிய பரப்பை உடையது. பல கட்டடங்களாகவும் கோவியன் தெருக்களாகவும், கொடித்தேர்த் தெருக்களாகவும் காட்சியளித்தன. சில வெள்ளைக்காரப் பெருஞ்செல்வர்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகளை அன்பளிப்பாகப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியுள்ளனர் எனவும் அந்த வீடுகள் ஒவ்வொன்றில் ஒவ்வொரு உயராய்வு நிறுவனங்கள் உள்ளன என்றும் அறிந்தேன். அத்தகு ஒரு வளமனையில் பேராசிரியர் சுதிர் அவர்களின் அலுவலகம் இருந்தது. எங்கள் வருகை அறிந்து பேராசிரியர் சுதிர் அவர்கள் எதிர்கொண்டு அழைத்தார்.

 ஞாயிற்றுக் கிழமையாக இருந்தாலும் அவரும் அவர் மாணவர் ஒருவரும் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். பணிநாளில் பின்சென்று முன்வரும் நம் பேராசிரியர்களின் நினைவு எனக்கு வந்தது. ஞாயிற்றுக் கிழமையிலும் ஆய்வில் ஈடுபட்ட அவர்களின் ஆய்வார்வம் அறிந்து வியந்தேன். என் நூல்களைச் சுதிர் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினேன். என் தமிழ் இணைய ஈடுபாடு அறிந்து மகிழ்ந்தார். அவர் அலுவலகத்தில் உள்ள கணினியில் தமிழில் தட்டச்சிடும் விசைப்பலகையை நிறுவினேன். தமிழில் தட்டச்சிடும் முறைகளை எடுத்துரைத்தேன். மகிழ்ந்தார். நண்பர் பாலா, நான், பேராசிரியர் சுதிர் மூவரும் நியுகெவனில் உள்ள சிதார் இந்திய உணவகத்துக்கு வந்தோம்.

 பகல் 12.30 மணியளவில் பேராசிரியர் பெர்னார்டு பேட் அவர்களும் எங்களுடன் வந்து இணைந்துகொண்டார். எங்களுக்கான இந்திய உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து எடுத்துவந்து இருக்கையில் அமர்ந்தபடி உண்டோம். பேராசிரியர் பெர்னார்டு பேட் அவர்கள் ஒரு குளம்பி மட்டும் போதும் என்றார். எங்கள் அறிமுகம் சிறப்பாக நடந்தது.

 பேராசிரியர் பெர்னார்டு பேட் அவர்கள் தமிழ் மேடைப்பேச்சு குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழகத்தில் பாரதியார் எந்த நாளில் எந்த ஊரில் பேசினார் என்பது தொடங்கி ஆறுமுக நாவலர் இலங்கையில் நிகழ்த்திய முதல் உரை, தந்தை பெரியாரின் பேச்சுகள், அறிஞர் அண்ணாவின் உரைகள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பேச்சாளர்களின் பேச்சுகள் பற்றிய மிக விரிவான செய்திகளை மனத்தில் பதிந்து வைத்துள்ளார்.

 பேராசிரியர் சுதிர் அவர்களின் உரையாடல் வழி அமெரிக்காவின் கல்விமுறைகள் பற்றியும் தமிழகத்தின் கல்வி முறை, பற்றியும் அரசியல் சூழல்கள் பற்றியும் உரையாடினோம். தமிழகத்தில் உயர்கல்வித் துறையில் பலபொழுது தகுதியற்றவர்கள் துணைவேந்தர்கள், பேராசிரியர் பணிகளை பெறுவதுபோல் அமெரிக்காவில் உண்டா? என்று வினவினேன். உயர்கல்வியில் தகுதிக்கும் திறமைக்கும் மட்டும் அமெரிக்காவில் மதிப்பு உண்டு என்று அறிய முடிந்தது.

 தகுதியற்றவர்கள் பலர் உயர்கல்வியில் முறையற்று நுழைந்து விடுவதால்தான் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழங்களின் முதல் இருநூறு இடத்தில் இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம்கூட இடம்பெறவில்லை என்று அறிந்தேன். இந்திய அளவில் ஒரு பல்கலைக்கழகமும் தேறவில்லை என்று சொன்னால் தமிழகத்தின் நிலையைக் கேட்க வேண்டாம்.

 ஒரு மணி நேரம் வகுப்பெடுத்து மாணவர்களைச் சந்திக்காதவர்கள்கூடத் தமிழகத்தின் அரசியல் செல்வாக்காலும், பணப்பெருக்கத்தாலும் தமிழகத்தில் துணைவேந்தர்களான நிலை எண்ணி உள்ளங் குமைந்தேன். கல்லூரி முதலாளிகள் பலர் துணைவேந்தர்களாகிக் கல்வியாளர் போர்வையில் கல்வியைச் சீரழிக்கும் நிலை மாறவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

 அமெரிக்காவின் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலர் இளங்கலை மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதில் ஆர்வமாக இருப்பதையும் அறிந்து மகிழ்ந்தேன். நோபல் பரிசு பெற்றவர்களும் இதில் அடக்கம் என்று அறிந்தபொழுது வியப்பு பன்மடங்கானது. துணைவேந்தர்கள் கல்வியாளர்களாக இருப்பதை விடுத்துப் பேரரசர்களுக்குக் கப்பம் தண்டும் சிற்றரசர்களாக இருக்கும் நிலை எண்ணிக் கவன்றேன். கல்விக்கும் தகுதிக்கும் மதிப்பளிக்கும் அமெரிக்கமுறை நம் நாட்டிலும் நடைமுறைக்கு வரும்பொழுது இந்தியாவில் உயர்கல்வியின் தரம் உயரும்.

 இரண்டு மணியளவில் அனைவரும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம். இரண்டு மணிக்கு ஏல் பல்கலைக்கழகத்தின் வளாகச் சுற்றுலா நடைபெறும் இடத்தை அடைந்தோம். வரவேற்பறையில் முதலில் எங்களுக்கு ஏல் பல்கலைக்கழகத்தின் சிறப்பு, கல்விச்சூழல் விளக்கும் காணொளி ஒன்றைத் திரையிட்டுக் காட்டினர். என்னைப் போல் ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பல திறத்தவரும் அதனைக் கண்டு மகிழ்ந்தோம். அதனை அடுத்து அங்குப் பயிலும் மாணவி ஒருவர் நெறியாளராக இருந்து எங்களுக்கு ஏல் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற கட்டடங்கள், நூலகம், வகுப்பறைகள், மாணவர் சேவை நடுவங்கள், அரிய கையெழுத்துக் காட்சியகம், சிற்றுண்டியகம், எழுதுபொருள் கடை உள்ளிட்ட முதன்மை இடங்களைக் காட்டினார்.

 அங்கு ஒரு குடிப்பகம் (Bar) இருந்தது. மாணவர்கள் உள்ள இடத்தில் இதுபோல் உள்ளதே என்று நண்பர் பாலாவை வினவினேன். மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது. தேவையானவற்றைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்பதே ஏல் பல்கலைக்கழகத்தின் குறிக்கோளாக உள்ளதை எடுத்துரைத்தார்.

 அங்கிருந்த கடையொன்றில் குறிப்புச்சுவடிகள், எழுதுபொருள்கள், கோப்புகள் ஆடைகள் யாவும் ஏல் பெயர் பொறித்து இருந்தன. நண்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்க சில எழுதுபொருள்களை வாங்கிக்கொண்டு மாலை 4 மணிக்கு மேல் அங்கிருந்து புறப்பட்டோம்.. ஒரு மணி நேரப் பயணதை அடுத்து அமெரிக்க மக்களின் பொழுது போக்கு இடமான “கழகம்” ஒன்றிற்கும் சென்று பார்த்தோம்.


முனைவர் சுதிர் அவர்களுக்குத் தமிழ்த்தட்டச்சு பற்றி 
மு.இளங்கோவன் விளக்குதல்


முனைவர் மு.இ, முனைவர் பெர்னார்டு பேட்


பாலா, முனைவர் சுதிர்


ஏல் பல்கலைக்கழகத்தின் சிறப்பறியும் ஆர்வலர்களுடன் மு.இ


ஏல் பல்கலை வளாகத்தின் சிலையருகில் மு.இ


ஏல் பல்கலை வளாகத்தில் மு.இ


ஏல் பல்கலைக்கழகத்தின் நூலகம் முகப்பு

1 கருத்து:

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

ஐயா! இந்தியாவின் உயர் கல்வி குறித்த தங்களின் ஒப்பிடலும், ஏல் பல்கலை குறித்த தங்கள் பதிவும் கருத்து நிறைந்தவை. கல்வியில் மறுமலர்ச்சி தோன்றட்டும்.