வெள்ளி, 29 ஏப்ரல், 2011
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா –படங்கள்
மேனாள் புதுவை அரசின் கல்வி அமைச்சர்கள் க.இலட்சுமிநாராயணன், எசு.பி.சிவக்குமார், பொறியாளர் பாலு, கோ.பாரதி உள்ளிட்டோர் பாவேந்தர் சிலைக்கு மலர் அணிவித்து வணங்குதல்
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் இன்று(29.04.20110) காலை 10 மணியளவில் புதுச்சேரியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பாவேந்தரின் திருமகனார் மன்னர்மன்னன் அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றார்கள். பாவேந்தரின் பெயரர் கோ.பாரதி அவர்கள் முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்தார். புதுச்சேரி அரசின் முன்னாள் கல்வி அமைச்சர்கள் க.இலட்சுமிநாராயணன், எசு.பி.சிவக்குமார், பொறியாளர் பாலசுப்பிரமணியன், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பாவேந்தர் சிலைக்கு- படத்திற்கு மலர்தூவி வணங்கினர். சிறுவர்கள் பாவேந்தரின் இசைப்பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர். பாவேந்தரின் குடும்பத்தினர், பாவேந்தர் பற்றாளர்கள் பலர் கலந்துகொண்டனர்
மேனாள் புதுவை அரசின் கல்வி அமைச்சர்கள் க.இலட்சுமிநாராயணன், எசு.பி.சிவக்குமார், பாவேந்தரின் பெயரர் கோ.பாரதி,மு.இளங்கோவன் உள்ளிட்டோர் பாவேந்தர் சிலைக்கு மலர் அணிவித்து வணங்குதல்
மேனாள் புதுவை அரசின் கல்வி அமைச்சர்கள் க.இலட்சுமிநாராயணன், சிவக்குமார் உள்ளிட்டோர் பாவேந்தர் சிலைக்கு மலர் அணிவித்து வணங்குதல்
நன்றி: படங்கள் மதி போட்டோ,புதுச்சேரி
புதுச்சேரியில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
தமிழ் மக்களைப் பகுத்தறிவுப்பாடல்கள் வழியாகவும், மொழியுணர்வுப் பாடல்கள் வழியாகவும் விழிப்புணர்வு அடையச்செய்த பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் இன்று(29.04.2011)
காலை பத்து மணியளவில் புதுச்சேரி, பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள
பாவேந்தர் அருங்காட்சியகத்தில் கொண்டாடப்படுகின்றது.
முன்னதாகப் புதுவைப் பாரதிப்பூங்காவில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் சிலைக்குத்
தமிழறிஞர்களும் அரசு அதிகாரிகளும்,பாவேந்தர் பற்றாளர்களும் மாலை அணிவித்துச் சிறப்பிக்கின்றனர்.பாவேந்தர் அருங்காட்சியகத்தில் உள்ள பாவேந்தர் சிலைக்குப் பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன் அவர்களும் பிற பாவேந்தர் பற்றாளர்களும் மலர்வணக்கம் செலுத்தி மகிழ்வர். பாவேந்தர் புகழ்ப்பாடல்களைப்பாடியும், பாவேந்தர் குறித்துக் கலந்துரையாடியும் மகிழ உள்ளனர்.
திங்கள், 25 ஏப்ரல், 2011
கயிலைமாமுனிவர் சதாபிசேக விழா மலர்
கயிலைமாமுனிவர் சதாபிசேக விழாமலர்
திருப்பனந்தாள் காசித்திருமடத்தின் அதிபர் தவத்திரு கயிலைமாமுனிவர் முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்களின் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா அண்மையில்(06.04.2011) திருப்பனந்தாள் காசித் திருமடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தவத்திரு கயிலைமாமுனிவர் அடிகளார் அவர்களின் பன்னருஞ் சிறப்பினை எடுத்துரைக்கும் சதாபிசேக மலர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சற்றொப்ப நானூறு பக்கம் அளவுள்ள மலரில் தமிழகத் திருமடங்களைச் சார்ந்த சான்றோர்களின் வாழ்த்துரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் தவத்திரு அடிகளாருடன் நெருங்கிப் பழகியவர்கள் அவர்களின் பட்டறிவுகளை மிகச்சிறப்பாக எழுதியுள்ளனர். தவத்திரு கயிலைமாமுனிவர் அவர்களின் துறவு வாழ்க்கையின் அரிய படங்கள் பல இடம்பெற்றுள்ளன.
திருப்பனந்தாள் திருமடம் தவத்திரு குமரகுரபரர் அடிகளால் காசியில் நிறுவப்பட்ட மடத்தின் கிளைமடமாகும். இம்மடத்தின் இருபத்தொன்றாம் அதிபராக இருந்து பல்வேறு சமய நூல்களைக் குறைந்த விலையில் வெளியிட்டும், கல்விநிறுவனங்கள் பலவற்றை நிலைநிறுத்தியும், பல அறக்கொடைகள் நிறுவியும் தமிழ்த்தொண்டு புரிந்துவரும் தவத்திரு அடிகளார் அவர்களின் வாழ்க்கை வரலாறும் திருமடத்துப்பணிகளும் மிகச்சிறப்பாக இந்த மலரில் இடம்பெற்றுள்ளன.
கவிதைகள், கட்டுரைகள் யாவும் தவத்திரு கயிலைமாமுனிவர் அவர்களின் அருள் வாழ்க்கையை எடுத்துரைக்கும் ஆவணங்களாக உள்ளன. தமிழகத்திலிருந்தும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் அயல் நாட்டிலிருந்தும் அறிஞர்கள் தமிழ், ஆங்கிலமொழியில் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கண்ணைக் கவரும் வண்ணத்தில் அச்சான இந்த மலர் பாதுகாக்கும் தரமுடையது. மலரை அழகிய வடிவில் உருவாக்கிய இணைஅதிபர் தலைமையிலான மலர்க்குழு பாராட்டுக்கு உரியது.
வியாழன், 21 ஏப்ரல், 2011
பாவேந்தர் நினைவுநாள் காட்சிகள்
பாவேந்தர் சிலை(நினைவில்லத்தில்)
பாவேந்தரின் 47 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று புதுச்சேரியில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது. புதுச்சேரி பெருமாள்கோயில் தெருவில் உள்ள பாவேந்தர் அருங்காட்சியகத்தில்(நினைவில்லம்) காலை பத்துமணிக்குத் தமிழறிஞர்கள், பேராசிரியர்கள்,அரசு அதிகாரிகள், திராவிட இயக்கம்சார்ந்த தோழர்கள், பாவேந்தர் குடும்பத்தினர், பாவேந்தர் பற்றாளர்கள் வந்து சேர்ந்தனர்.
பாவேந்தரின் இளைய மகள் அம்மா வசந்த தண்டபாணி அவர்கள் முன்னதாகவே வந்து சேர்ந்தார்கள். பாவேந்தர் நினைவுகளை அவர் வழியாக அறிந்தேன். பாவேந்தர் எழுதிய பாட்டுச் சூழல்களை வசந்தா அம்மா அவர்கள் நினைவுகூர்ந்தார்கள். அவற்றைச் சிறிது நேரம் ஒலிப்பதிவு செய்துகொண்டேன்.
பாவேந்தரின் திருமகனார் ஐயா மன்னர்மன்னன் அவர்களும் பாவேந்தரின் பெயரர் பாவலர் பாரதி அவர்களும் பாவேந்தர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நினைவில்லம் வந்தனர். அவர்களின் வருகையை ஒட்டிக் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர், சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமிநாராயணன் உள்ளிட்டவர்கள் வந்தனர்.
கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் அவர்கள் பாவேந்தர் சிலைக்கு மலர்தூவி அகவணக்கம் செலுத்தினார். அதன்பிறகு ஒவ்வொருவராக மலர்தூவி வணக்கம் செலுத்தினோம். பாவேந்தர் பற்றாளர்கள் பாவேந்தரை நினைவுகூர்ந்து உரையாடினர். சிலர் பாவேந்தரின் இசைப் பாடல்களைப் பாடி மகிழ்ச்சியூட்டினர். பாவேந்தரின் நினைவு தமிழ் வாழும் காலம் எல்லாம் இருக்கும் என்பதை இந்த நிகழ்வு காட்டியது.
சட்டமன்ற உறுப்பினர் இ.இலட்சுமிநாராயணன் மலர்தூவி வணங்குதல்
முனைவர் மு.இளங்கோவன் மலர்தூவி வணக்கம் செலுத்துதல்
பாவேந்தரின் கொள்ளுப்பெயர்த்தி,மன்னர்மன்னன்,மு.இளங்கோவன்,சிவ.இளங்கோ
பாவேந்தரின் இளையமகள் வசந்தா,மு.இ
மு.இளங்கோவன்,மன்னர்மன்னன்,கோ.பாரதி
இன்று(21.04.2011) பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள்...
பாவேந்தர் பாரதிதாசன்
தமிழர்களைத் தன்மானப்பாட்டுகள் வழியாக உணர்வுபெறச்செய்த புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 47 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று புதுச்சேரியில் சிறப்பாக நினைவுகூரப்பட உள்ளது.
ஏப்ரல் 21 காலை 8.30 மணிக்குப் புதுச்சேரி வைத்திக்குப்பம் பாப்பம்மாள் இடுகாட்டில் உள்ள பாவேந்தரின் நினைவிடத்தில் தமிழ் அறிஞர்கள், அரசு அதிகாரிகள் அகவணக்கம் செலுத்துவர். காலை 10.0 மணிக்குப் புதுச்சேரி பாரதிப் பூங்காவில் உள்ள பாவேந்தர் சிலைக்கு மாலையிட்டு வணங்குவர். 10.30 மணிக்குப் புதுச்சேரி பெருமாள்கோயில் தெருவில் உள்ள பாரதிதாசன் அருங்காட்சியகத்தில் தமிழறிஞர்கள், பாவலர்கள், அரசியல்தலைவர்கள் மலர்தூவி அகவணக்கம் நிகழ்த்துவார்கள். பாவேந்தரின் திருமகனார் மன்னர்மன்னன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.
பாவேந்தர் வாழ்ந்த இல்லத்துக்கு அருகில் என் வீடு இருப்பதால் நானும் கலந்துகொள்ள நினைத்துள்ளேன்.
மாலையில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ஔவை.து.நடராசன் அவர்கள் தலைமையில் பாரதிதாசனார் படைப்புகளில் பெரிதும் விஞ்சி நிற்பவை கவிதை வளமே! கருத்துச்செறிவே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகின்றது. விருது வழங்கும் விழாவில் நடுவண் அமைச்சர் வே.நாராயணசாமி,முனைவர் வி.முத்து,சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமிநாராயணன், மேனாள் நடுவண் அமைச்சர் க.வேங்கடபதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மா.இராமநாதன், மருத்துவர் ச.இரத்தினசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.
திங்கள், 18 ஏப்ரல், 2011
திரைப்பட இயக்குநர் வ.கௌதமனின் தாயார் வ.பரஞ்சோதி அம்மாள் படத்திறப்பு விழா
வ.பரஞ்சோதி அம்மாள்
சந்தனக்காடு நெடுந்தொடர் இயக்குநரும் கனவே கலையாதே, மகிழ்ச்சி திரைப்படங்களின் இயக்குநருமான வ.கௌதமன் அவர்களின் தாயார் வ.பரஞ்சோதி அம்மாள் அவர்கள் கடலூர் மாவட்டம் பாளையம் என்னும் தம் சொந்த ஊரில் 29.03.2011 இயற்கை எய்தினார்கள். அவர்களின் படத்திறப்பு 19.04.2011 பிற்பகல் மூன்று மணிக்குப் பாளையம் என்னும் சிற்றூரில்(திட்டக்குடி அருகில்) நடைபெறுகின்றது. தமிழின உணர்வாளர்கள், கலை இலக்கிய உலகு சார்ந்த முன்னோடிகள் பலர் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு அன்னையாரின் நினைவைப் போற்ற உள்ளனர்.
தோழர்கள் வே.ஆனைமுத்து, பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், அறிவுமதி, செ.குரு, சீமான், தயாரிப்பாளர் மணிவண்ணன், சிவசக்திபாண்டியன், சி.மகேந்திரன், கொளத்தூர்மணி, பெ.மணியரசன், தி.வேல்முருகன், இராசேந்திரசோழன், ஓவியர் வீரசந்தனம் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.
மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற ஆண்டிமடம் சௌபாக்யா கல்வியியல் கல்லூரித் தமிழ் இணையப் பயிலரங்கம்
தாளாளர் இர.சண்முகநாதன்
தமிழகத்தில் இணைய அறிமுகத்துக்குச் செல்லும்பொழுதெல்லாம் ஒவ்வொரு பட்டறிவு எனக்கு ஏற்படுவது உண்டு. பெரும்பாலும் வாய்ப்புகளை உருவாக்கவேண்டியிருக்கும். ஆனால் ஆண்டிமடம் பயிலரங்கிற்கான வாய்ப்பினை அக்கல்லூரியில் கணினித்துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் இராசமோகன் அவர்கள் உருவாக்கினார். கல்லூரியின் தாளாளர் திரு.இர.சண்முகநாதன் அவர்களுக்கு என் இணையம் கற்போம் நூலினைக் கொடுத்து என்னை அறிமுகம் செய்துள்ளார்.
பேராசிரியர் இராசமோகன் அவர்கள் எனக்கு மின்னஞ்சல்வழியான நண்பர்தான். என் முயற்சிகளை அவ்வப்பொழுது இணையத்தில் கண்டு என்னைத் தாம் பணிபுரியும் கல்லூரிக்கு அழைக்க பல நாளாகத் திட்டமிட்டார். எனக்கும் வாய்ப்பான நாள் அமையாமல் இருந்தது. கோடைவிடுமுறையில் எப்படியும் என்னை அழைத்துவிடுவது என்று முடிவுசெய்தனர். நானும் ஞாயிற்றுக்கிழமை(17.04.2011) கலந்துகொள்கின்றேன் என்று உறுதியளித்தேன். அதன்படி வைகறை 4 மணிக்குப் புறப்பட்டுப் புதுச்சேரி-வடலூர்-நெய்வேலி-விருத்தாசலம் வழியாக ஆண்டிமடத்தை காலை 9.15 மணிக்கு அடைந்தேன். இடையில் விருத்தாசலத்தில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டேன்.
விடுமுறை நாள் என்பதால் மாணவர்கள் பத்துமணிக்கு வந்துசேர்ந்தனர். அரங்கை நோட்டமிட்டேன். கல்லூரி வளர்ந்துவரும் நிறுவனம் என்பதால் கட்டடங்கள் புதியதாக எழுந்தவண்ணம் இருந்தது. அடுத்த ஆண்டுகளில் கல்லூரியில் அனைத்து வசதிகளும் ஏற்பட்டுவிடும் என்று தோன்றியது. எனினும் நிகழ்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தாளாளர் அறிந்து உடன் கிடைக்கும்படி செய்தார்கள். அவரின் இணைய இணைப்புதான் கைகொடுத்தது. உருப்பெருக்கி மட்டும் வந்தது. திரைக்கு நான்கு முழ வேட்டியைச் சுவரில்பொருத்தித் திரை உருவாக்கினோம். மின்னாக்கியும் வந்து சேர்ந்தது.
மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்தோம். எதிர்பார்த்தபடி மாணவர்கள் நூற்றுக்கணக்கானவர் வந்து குழுமினர். என் நண்பர் சுந்தரவடிவேல் அவர்களும் அங்கு வந்துசேர்ந்தார்.
கல்லூரியின் முதல்வர், நிர்வாக அதிகாரி, பேராசிரியர்கள், தாளாளர் என அனைவரும் 10.30 மணியளவில் ஒன்றுசேர்ந்து நிகழ்ச்சியைத் தொடங்கினோம். தொடக்க விழா எளிமையாக நடந்தது. இணைய அறிமுகத்திற்கு முதன்மையளித்துப் பேச்சைக் குறைத்துக்கொண்டோம்.
தாளாளர் இர.சண்முகநாதன் அவர்கள் இளம் அகவையினர், கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். நிறுவனத்தைக் கவனிக்கத் தம் பணியை விட்டுவிட்டு முழுமையாகக் கல்லூரி வளர்ச்சியில் கவனம்செலுத்துகின்றார். மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்கவேண்டும் என்பதில் துடிப்பு மிக்கவராக இருந்தார். என் நூல்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தும் என் முயற்சியைப் பாராட்டியும் சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்.
நான் தமிழ் இணையத்தின் தோற்றம் வளர்ச்சியை எடுத்துரைத்தேன், தமிழ்த்தட்டச்சு அறிமுகம் நடந்தது. மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், தமிழ் விசைப்பலகை அறிமுகம், மதுரைத்திட்டம், தமிழ்மரபு அறக்கட்டளை, நூலகம், தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, இணைய இதழ்கள், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழ் இணைய மாநாடுகள், விக்கிப்பீடியா, விக்சனரி, மின்நூல்கம்,மின்னகரமுதலிகள்,இணையவழித் தமிழ்ப்பாடங்கள்,சமூகவலைத்தளங்கள் பற்றிய பல செய்திகளை எடுத்துரைத்தேன்.
மாணவர்கள் சிற்றூர்ப்புறம் சார்ந்தவர்கள் என்பதால் பொறுப்புடன் குறிப்பெடுத்துக்கொண்டனர். ஆர்வமுடன் கேட்டனர். காலை 10.30 மணிக்குத் தொடங்கிப் பகல் 1.30 வரையில் என் உரை தொடர்ந்தது. அரைமணிநேரம் உணவு இடைவேளை. பிறகு இரண்டுமணிமுதல் நான்குமணிவரை செய்முறையாக வலைப்பூ உருவாக்கம் முதல் இணையவழிக் கல்வி பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டேன்.
நிறைவாகப் பயிற்சி பெற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் கருத்துகளை வழங்கினர். பயிற்சிபெற்ற மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பயிலரங்க நிகழ்வை விவாதித்து, மீண்டும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்துகொள்ளவேண்டும் என்று செல்பேசியில் பகிர்ந்துகொண்டனர். தமிழகத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் நடந்த பயிலரங்குகளுள் ஆண்டிமடம் சொளபாக்யா கல்லூரி நிகழ்வு குறிப்பிடத்தகுந்தது. இரவு பத்து மணிக்குப் புதுச்சேரி மீண்டேன்.
ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்
கல்லூரியின் பேராசிரியர்கள், தாளாருடன் மு.இளங்கோவன்
ஞாயிறு, 17 ஏப்ரல், 2011
ஆண்டிமடம் சௌபாக்யா கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு தொடங்கியது...
தலைமையுரையாற்றும் கல்லூரியின் தாளாளர் சண்முகநாதன்
தொடக்க விழா
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சௌபாக்யா கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(17.04.2011) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. கல்லூரித்தாளாளர் இர.சண்முகநாதன் அவர்கள் தலைமையில் இனிதே தொடங்கியது. கல்லூரி முதல்வர் கு.முத்துக்குமரன் நோக்கவுரையாற்றினார். கல்லூரி விரிவுரையாளர் இராச்மோகன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்டு தமிழ் இணைய வளர்ச்சி பற்றி அறிந்தனர்.
புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கினார். உணவு இடைவேளைக்குப் பிறகு செய்முறை பயிற்சி நடைபெறுகிறது....
பயிற்சி பெறும் மாணவிகள்
பயிற்சி பெறும் மாணவர்கள்
சனி, 16 ஏப்ரல், 2011
ஆண்டிமடம் சௌபாக்யா கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்
அழைப்பிதழ்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-விருத்தாசலம் சாலையில் அமைந்துள்ள சௌபாக்யா கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் 17.04.2011 காலை 10.00 மணிமுதல் மாலைவரை நடைபெறுகின்றது.
மாணவர்களுக்கான குடிமைப்பயிற்சி முகாம் என்னும் தொடர்நிகழ்வில் ஒருநாள் நிகழ்வாக இது நடைபெறுகின்றது.
கல்லூரி விரிவுரையாளர் திரு வை.சுவாமிநாதன் அவர்கள் கொடியேற்றிவைக்க நிகழ்ச்சி தொடங்குகிறது. கணிப்பொறித்துறையின் விரிவுரையாளர் திரு.ம. இராச்மோகன் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார்.
கல்லூரியின் தாளாளர் திருநிறை இர.மு.பா.சண்முகநாதன் அவர்கள் தலைமையுரை வழங்க உள்ளார்.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் கலந்துகொண்டு தமிழ் இணையத்தின் பயன்பாடுகளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து காட்சி விளக்கத்துடன் உரையாற்றுகின்றார்.
கல்லூரி இயல்அறிவியல் துறை விரிவுரையாளர் கலையரசி அவர்கள் நன்றியுரை வழங்குகின்றார்.
விழாவிற்கான ஏற்பாடுகளைச் சௌபாக்யா கல்லூரியின் நிறுவனத்தினர் மிகச்சிறப்பாகச் செய்துள்ளனர்.
அழைப்பிதழ்
வியாழன், 7 ஏப்ரல், 2011
திருச்சிராப்பள்ளி உருமு தனலெட்சுமி கல்லூரியில் தமிழ் இணையதளங்கள் அறிமுகம்
உருமு தனலெட்சுமி கல்லூரியின் வனப்புமிகு தோற்றம்
திருச்சிராப்பள்ளி உருமு தனலெட்சுமி கல்லூரியில் தமிழ் இணையதளங்கள் அறிமுகம் செய்யும் வாய்ப்பு 06.04.2011அறிவன்(புதன்) கிழமை பகல் 12 மணிமுதல் 1.30 மணி வரை எனக்கு அமைந்தது. கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் சா.சேகர் அவர்கள் என் தமிழ் இணையப்பணியை நன்கு அறிந்தவர்கள். சென்ற ஆண்டு சிங்கப்பூர்,மலேசியா சென்றபொழுது என் பணிகளை உற்றுக் கவனித்தவர்கள்.
இந்தமுறை உருமு தனலெட்சுமி கல்லூரியில் முனைவர் பட்டம்,இளம் முனைவர் பட்டம் படிக்கும் ஆய்வுமாணவர்கள், பேராசிரியர்கள் தமிழ் இணையப் பயன்பாடுகளைக்கொண்டு
தமிழ் ஆய்வை உலகத்தரத்திற்கு எவ்வாறு செய்வது என்ற நோக்கில் ஒரு பயிலரங்கம் நடத்த நினைத்தனர்.அதற்கு என்னை உரையாற்ற அழைத்திருந்தனர்.ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழாய்வுத்துறைப் பேராசிரியர் ஆ.கருணாநிதி அவர்களும் ஏனைய துறைப்பேராசிரியர்களும் நிகழ்ச்சியை நன்கு வடிவமைத்திருந்தனர். உருமு தனலெட்சுமி கல்லூரியின் எழிலார்ந்த தோற்றமுடைய கலையரங்கில் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்த்தட்டச்சு தொடங்கி, இன்றைய தமிழ் இணைய வளர்ச்சியின் பல முனைகளைக் காட்சி வடிவத்துடன் எடுத்து விளக்கினேன். புதிய காலதரைத்(சன்னல்) திறந்துவிட்ட மனநிறைவில் மாணவர்கள் இருந்தனர். உரிய இடத்தில் தமிழ்ச்செய்திகள் பயன்பட்டனவே என்ற மன நிறைவு எனக்கும் ஏற்பட்டது. உருமு தனலெட்சுமி கல்லூரியின் முதல்வர் போல் தமிழ்நாட்டின்
கல்வி நிறுவனத்தார் தமிழ் இணையத்துக்கு முதன்மையளித்தால் தமிழ்க் கல்வியுலகில் இணையம் விரைவில் கோலோச்சும்.
பேராசிரியர் கோ.வீரமணி,பேராசிரியர் எ.இரா.இரவிச்சந்திரன், பேராசிரியர் விசயசுந்தரி உள்ளிட்ட பழகிய நண்பர்களைக் கண்டு உள்ளங்கலந்து பேசும் வாய்ப்பு அமைந்தது.
பேராசிரியர் சா.சேகர் அவர்கள்(முதல்வர்)
ஆய்வுமாணவர்களும் பேராசிரியர்களும்
ஆய்வாளர்களும்,பேராசிரியர்களும்
செவ்வாய், 5 ஏப்ரல், 2011
மயங்கொலிகள் (உயிர்எழுத்து வரிசை)
அவ்வப்பொழுது இலக்கணம் சார்ந்த ஐயங்களுக்குத் தெளிவு வேண்டி எனக்கு சில தொலைபேசிகள் வருவதுண்டு. இதழியல்துறை சார்ந்தவர்கள் அச்சேறும் செய்தியில் பிழை நீக்கி வெளியிட விரைந்து அழைப்பதும் உண்டு. நான் அந்த நேரம் வகுப்பில் இருந்தாலும், பேருந்துகளில் சென்றாலும் விடை சொல்ல முடியாமல் தவிப்பது உண்டு.
அண்ணன் வையை கோ.வீரக்குமரன் அவர்கள் (வணிகவில் பேராசிரியர், கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகம்) தமிழை எழுதும்பொழுது ஏற்படும் ஐயங்களைப் போக்கிக்கொள்ள இணையத்தில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று எனக்கு அவ்வபொழுது அன்புக்கட்டளை போடுவார்கள். ஆங்கிலத்தில் அடிக்கடித் தவறு செய்யும் இடங்களை அடையாளப்படுத்தி, ஆங்கிலத்தைப் பிழையின்றி எழுத வழிவகுத்துள்ளதாகவும் தமிழில் அதுபோன்று செய்யவேண்டும் என்றும் கூறுவார்கள்.
எனக்கிருக்கும் பல்வேறு பணிகளில் இவற்றில் ஈடுபடமுடியாமல் இருந்தேன். இவ்வாறு பல மணி நேரம் முயன்று செய்தாலும் தமிழகத்துக் கல்விச் சீர்கேட்டுச்சூழலில் இவற்றுக்கெல்லாம் எவ்வகையான மதிப்போ, சிறப்போ இல்லை என்பதை அண்மைக் காலமாக அறிந்து மனம் வருந்தி இருக்கும்பொழுது அயலகத்தில் வாழும் தமிழ் உணர்வுபெற்ற தமிழர்களுக்காக இம்முயற்சியில் ஈடுபட்டுச் சில மயங்கொலிச் சொற்களை எடுத்துக்காட்டி அவற்றின் பொருள்வேறுபாட்டை எழுதுகிறேன்.
வேலூர்ப் பேராசிரியர் கா.பட்டாபிராமன் ஐயா, புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் மு.சதாசிவம், முனைவர் மருதூர் அரங்கராசன் போன்றவர்கள் இத்துறையில் மிகுதியாக உழைத்துள்ளனர். அவர்களின் நூல் செய்திகள் இணையத்தில் ஏறும்பொழுது உலகத் தமிழர்களுக்குப் பெரும் பயன் நல்கும். உயிர்எழுத்து வரிசைச்சொற்கள் சிலவற்றை இப்பொழுது தொகுத்து வழங்குகின்றேன். பிறகு உயிர்மெய்எழுத்து வரிசைச் சொற்களைத் தொகுத்தளிப்பேன்.
றகர-ரகர வேறுபாடு
அ வரிசை
அறம் – தருமம்
அரம் – அராவும் கருவி
அரவு - பாம்பு
அறவு – அறுதி
அரவே – பாம்புதான்
அறவே – முழுவதும்
அரன்- சிவன்
அறன் – தருமம்
அரா – பாம்பு
அறா – நீங்காத
அரி- திருமால்
அறி- தெரிந்துகொள்
அரிந்தவர் –காய்கறி வெட்டியவர்
அறிந்தவர் – கல்வியறிவு பெற்றவர்
அறிப்பு- உணர்கை
அரிப்பு- தினவு
அருகு – பக்கம்
அறுகு – அறுகம்புல்
அருபொருள் – அருமையானபொருள்
அறுபொருள் – பரம்பொருள்
அறுவர் – ஆறுபேர்
அருவர் – தமிழர்
அறுமை- நிலையின்மை
அருமை- மிகச்சிறப்பு
அறவை- ஆதரவற்ற நிலை
அரவை – மாவு அரைத்தல்
அறை –வீட்டின் சிறியபகுதி
அரை- பாதி
ஆ வரிசை
ஆற – குணமாதல்
ஆர – நிறைய
ஆறல்- குணமாதல்
ஆரல் – மீன்
ஆரறிவு- நிறைந்த அறிவு
ஆறறிவு – ஆறு அறிவு
ஆறாத –தனியாத
ஆராத – பொருந்தாத
இ வரிசை
இற- செத்துப்போ
இர- பிச்சை
இறக்கம்- கீழே இறங்குதல்
இரக்கம்- கருணை
இரந்தகாலம்-பிச்சை எடுத்தகாலம்
இறந்தகாலம்- கடந்த காலம்
இறா-ஒருவகைமீன்
இரா-இரவு
இரு-இரண்டு
இறு- வடிகட்டு
இருவரை-இரவர்(எண்ணிக்கை)
இருவறை- பெரிய மலை
இறைத்தல்- நீரை இறைத்தல்
இரைத்தல்-மூச்சிரைத்தல்
ஈ வரிசை
ஈறல்- நெருக்கம்
ஈரல்- உறுப்பு
ஈறு- கடைசி
ஈரு- பேன்
உ வரிசை
உறவு- சொந்தம்
உரவு-- வலிமை(அறிவு)
உறல்- பெறுதல்
உரல்- கல் உரல்
உறி- மோர்ப்பானை வைக்கும் தூக்கு
உரி- நார் உரித்தல்
உருக்குதல்- உள்ளம் இளகுதல்
உறுக்குதல்-மிரட்டுதல்
உறுமு- கத்துதல்
உருமு-இடி,அச்சம்
உறை - இருப்பிடம்,புத்தக உறை,தலையணை உறை
உரை- பேசு,நூலுக்கு உரை(பரிமேலழகர் உரை)
உறைப்பு- காரம்,
உரைப்பு –சொல்லுதல்
ஊ வரிசை
ஊற- கிணற்றில் நீர் ஊறல்
ஊர- மெல்ல நகர்தல்
ஊறு-இடையூறு
ஊரு- அச்சம்
எ வரிசை
எறி-வீசு
எரி-நெருப்பு
எறிப்பு- கடுமையான வெயில்
எரிப்பு-பொறாமை
ஏ வரிசை
ஏரல்-கிளிஞ்சல்
ஏறல்- ஏறுதல்
ஏரி-நீர்நிலை
ஏறி- மரத்தில் ஏறி
ஏறு- அரிமா(சிங்கம்)
ஏரு- ஏர்(கலப்பை)
ஒ வரிசை
ஒரு-ஒன்று
ஒறு-தண்டித்தல் (ஒறுத்தாரை-திருக்குறள்)
ஒறுத்தல்-தண்டித்தல்
ஒருத்தல்-விலங்கினத்தில் ஆண்
திங்கள், 4 ஏப்ரல், 2011
ஒரு கிழமை உலா நினைவுகள்...
இராசகுரு பதின்நிலைப்பள்ளி, காடாம்புலியூர்(பண்ணுருட்டி வட்டம்)
மு.இளங்கோவன்,சா.செல்வம்,சி.ஆர்.இலட்சுமிகாந்தன்,இரா.குருநாதன்(தாளாளர்)
அண்மைக்காலமாக எனக்குப் பணி மிகுதியாகி வருகின்றது.அவற்றுள் வெளியூர்ச் செலவுகள் மிகுதியாவதால் உடனுக்குடன் பல செய்திகளைப் பதிந்துவைக்கமுடியவில்லை.சனவரித் திங்கள் சிங்கை, மலையகச்செலவுகள்.
பிப்ரவரியில் இரண்டு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற பேராசிரியர் பணிக்கு நேர்காணலில் கலந்துகொண்டேன். மார்ச்சுத் திங்களில் வழக்கம்போல் கல்லூரிப்பணி; ஓய்வுநேரங்களில் வெளியூர்ச்செலவுகள்.
மார்ச்சு 30 இல் கோவையில் ஜி.ஆர்.தாமோதரன் கல்வியியல் கல்லூரியில் நடைபெறும் புத்தொளிப் பயிற்சிக் கருதரங்கில் பங்கேற்கும்படி பேராசிரியர் இரா.சானகி அம்மா அவர்கள் அழைத்திருந்தார்கள். அவர்கள் சென்ற ஆண்டு புதியதலைமுறை இதழில் என் நேர்காணல் கண்டு,அன்றிலிருந்து அவர்கள் கல்லூரியில் என்னை அறிமுகப்படுத்த வேண்டும் என்று காத்திருந்தார்கள்.
அவர்களின் அன்புக்குக் கட்டுண்டு ஒருநாள் ஈட்டிய விடுப்பு எடுத்துக்கொண்டு கோவைக்குச் சென்றேன். அதற்கு முதல்நாள்தான் (28.03.2011) சுவிசு நாட்டு அறிஞர் கு.கல்யாணசுந்தரம் அவர்களைப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் பேசவைக்கும் ஒரு நிகழ்ச்சி. அதற்கு அழைப்பிதழ் அச்சடித்தல், வழங்கல், பதாகை அச்சிடல் எனப் பல பணி. சிறப்பாகச் செய்துமுடித்து ஐயா கு.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு விடைதந்து அனுப்பினேன்.
29.03.2011 இரவு கோவைக்குச் செலவு.
என் வருகை கோவை அன்பர்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டதால் பலரைக் கண்டு உரையாடும் ஒரு சூழலையும் உருவாக்கினோம்.
30.03.2011 காலை ஏழு மணிக்குக் கோவை ஜி.ஆர்.டி கல்லூரி விருந்தினர் இல்லத்தை அடைந்தேன். மைசூர் இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தின் பேராசிரியர் நடராசபிள்ளை அவர்களும் பேராசிரியர் இரத்தினசபாபதி அவர்களும் பேராசிரியர் தூ.சேதுபாண்டியன் ஐயாவும் அங்கு இருந்தார்கள். அவர்களிடம் உரையாடியபடி நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குப் புறப்பட அணியமானோம்.
காலை 10.30 மணியளவில் புத்தொளிப் பயிலரங்கம் நடந்தது.மொழிகற்பித்தல் சார்ந்த பயிற்சிகளைப் பயிற்றுவித்தலில் பல்லாண்டு பட்டறிவுகொண்ட நடராசப்பிள்ளை, இரத்தினசபாபதி, சேதுபாண்டியனார் ஆகியோர் தம் கருத்துரைகளை வழங்கினர்.
மாலை 3.15 மணிமுதல் 4.30 வரை தமிழ்பயிற்றுவிக்கும் இணையதளங்கள் குறித்து என் உரை அமைந்தது. அனைவரும் ஆர்வமுடன் என் உரையைச் செவிமடுத்தனர். என் நிகழ்ச்சி தொடங்கும் முன் திரு.கோபால் ஐயா அங்கு வந்தார்கள். அவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் இருக்கின்றனர். அமெரிக்காவில் ஐயா அவர்கள் இருந்தபொழுது இணையம் வழி அவர்கள் எனக்குத் தொடர்புகொண்டார்கள். இப்பொழுது கோவைச் செலவில் இருவரும் நேரில் கண்டு உரையாடினோம்.மிகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர். மேலும் நுகர்வோர் உரிமைக்குத் தொடர்ந்து குரல்கொடுப்பவர். அவர்களின் அன்பு கண்டு மகிழ்ந்தேன்.
புத்தொளிப்பயிற்சி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மாலை 5 மணி அளவில் விருந்தினர் இல்லம் சென்றேன். அங்குத் தமிழ்ப்பற்றாளர் செம்பியன் வல்லத்தரசு அவர்கள் தம் மகிழ்வுந்தில் வந்து சேர்ந்தார்கள். இருவரும் அங்கிருந்த அன்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு நகரம் நோக்கிச் சென்றோம். நேரே எங்கள் மகிழ்வுந்து எழுத்தாளர் நாஞ்சில்நாடன் இல்லம் சென்றது. எங்கள் வருகையை முன்பே தெரிவித்திருந்ததால் நாஞ்சில்நாடன் எங்களை எதிர்கொண்டழைத்தார். அமைதியான சூழலில் நாஞ்சிலின் வீடு உள்ளது. எளிமையான அனைத்து வசதிகளும் கொண்டு நாஞ்சில் வீடு இருந்தது.
செம்பியன் ஐயா உரிமையுடன் தமக்குப் பசிக்கின்றது. உடன் உணவு வேண்டும் என்று அம்மாவிடம் கேட்டார். வீட்டில் நுழையும்பொழுது இவ்வாறு கேட்கவேண்டும் என்றால் முன்பே இவர்கள் நன்கு பழகியிருக்கவேண்டும் என்று உணர்ந்துகொண்டேன். ஏன் என்றால் செம்பியன் ஐயா அவர்கள் ஒரு தமிழ் ஆர்வலர் என்று மட்டும் தெரியுமே தவிர அவர் பற்றிய மற்ற விவரங்கள் எனக்குத் தெரியாது. 1993-1997 ஆம் ஆண்டுகளில் ஓரிருமுறை செம்பியன் ஐயாவை அண்ணன் அறிவுமதி அறையில் சென்னையில் சந்தித்தது உண்டு.அதன்பிறகு
அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற பேராசிரியர் அருளி ஐயா அவர்களின் மகன் தம்பி தெள்ளியன் மணவிழாவில் சந்தித்தேன். அதனால் செம்பியன் ஐயாவும் நஞ்சில்நாடனும் உரையாடுவதை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தான். சில தின்பண்டங்கள் உண்ணத் தந்தார்கள். உண்டபடியே எங்கள் உரையாடல் நடந்தது.
நாஞ்சில் மிக எளிதாகப் பழகினார்.அவருக்கு என் நூல்கள் சிலவற்றை அளித்தேன். அவரும் எனக்கு ஒரு நூலைப் பரிசளித்தார்கள். சிறிது நேர உரையாடலும் இலக்கியம் சார்ந்தே இருந்தது. பேராசிரியர் சிற்பி அவர்கள் பற்றியும் மகிழ்ச்சியுடன் பேசினோம்,. நாஞ்சில் ஒருமுறை சாய்க்கடையோரமாக இருந்த பழைய புத்தகக்கடையில் யாப்பருங்கலக்காரிகை புத்தகம் ஒன்றைப் பார்த்ததாகவும் குறைந்த விலைக்கு வாங்கியதாகவும் குறிப்பிட்டார். பின்னர் அந்தப் புத்தகத்தைக் கட்டடம் செய்து வைத்துள்ளதாகவும் காட்டினார். அதில் இடப்பட்டிருந்த கையெழுத்தைப் பார்த்த சிற்பி அவர்கள் இது சிவராசப்பிள்ளை பயன்படுத்திய நூல் என்றும் அவர் கையெழுத்து இது என்றும் கூறியதாகக் குறிப்பிட்டார்கள்.
நாஞ்சிலுக்கு அணிந்துரைக்காக வந்த "சூரல் பம்பிய சிறுகான்ஆறு" என்ற நூல் பற்றியும் புகழ்ந்து பேசினார்கள்.
உரையாடலை நிறுத்திக்கொண்டு மரபின்மைந்தன் முத்தையா அவர்களின் அலுவலகத்திற்குச் சென்றோம்.வழியில் நாஞ்சில் அவர்களின் இலக்கிய ஈடுபாடு எழுத்தார்வம் பற்றி பேசிபடி வந்தேன். எழுத்தாளர் செயமோகன் அவர்கள் வழியாகவும் நாஞ்சில் பற்றி முன்பே அறிவேன் என்று கூறினேன்.
முத்தையா அண்ணன் எங்களை அன்புடன் வரவேற்றார். பத்துப்பேர் திரண்டிருந்தனர். தமிழ் இணையம் பற்றி உரையாடினோம். முத்தையா அண்ணன் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வெற்றித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர். மேலும் இரசனை ,நமது நம்பிக்கை இதழ்களின் ஆசிரியராகவும் பல நூல்களின் ஆசிரியராகவும் விளங்குபவர். அங்கு நடந்த நிகழ்வுகளை முடித்துக்கொண்டு புறப்பட்டபொழுது ஒரு தோழர் தாடி தடவியபடி என்னை உற்றுநோக்கிய வண்ணம் இருந்தார். அவர் தயங்கியபடியே என் ஊர் என்ன? என்றார். அவரின் பேச்சைக்கொண்டு தாங்கள் இளங்கோவா என்றேன். ஆம் அவர்பெயர் இளங்கோ என்பதுதான். திருப்பனந்தாள் கல்லூரியில் நான் பயின்றபொழுது 1992 இல் அந்த இளங்கோ வணிகவியல் இளங்கலை பயின்றவர். கராத்தே பயிற்சி பெற்றவர். எங்களுடன் பல மேடைகளில் பேசியவர். சற்றொப்ப இருபதாண்டுகள் கடந்த பிறகு அன்புக்குரிய நண்பர் ஒருவரைக் கண்ட மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. இப்பொழுது அந்த இளங்கோ கோவையில் இந்துத்தான் கல்லூரியில் வணிகவியல்துறையில் பேராசிரியராகப் பணிபுரிகின்றார்.
நானும் செம்பியன் ஐயாவும் அன்னபூரனா உணவகத்தில் இரவு உணவு முடித்தோம். இரவு பத்துமணிக்கு எனக்குரிய பேருந்து நிலையில் கொண்டு வந்து ஐயா அவர்கள் இறக்கிவிட்டார்கள்.வரும்வழியில்தான் செம்பியன் ஐயாவின் வாழ்க்கைக் குறிப்பை அறிந்து மகிழ்ந்தேன். அவர்களின் கலையுணர்வும், தமிழ்ப்பற்றும், இறையுணர்வும், பொதுவுடைமைச்சிந்தனைகளும், போராட்ட வாழ்க்கையும் அறிந்து அவர்களின் மேல் உயர்ந்த அன்பும் மதிப்பும் ஏற்பட்டது. செம்பியன் ஐயாவிடம் விடைபெற்றுக்கொண்டேன்.
காடாம்புலியூர் இராசகுரு பள்ளி விழா
01.04.2011 மாலை 7 மணிக்குப் பண்ணுருட்டி வட்டம் காடாம்புலியூரில் உள்ள இராசகுரு பதின்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழாவுக்கு வரும்படி ஆறு திங்களுக்கு முன்பே தாளாளர் திரு.இரா.குருநாதன் ஐயா அவர்கள் அழைத்திருந்தார்.
தொடர்ந்து நினைவூட்டியபடி இருந்தார். கல்லூரியில் நிறைவுப்பணி நாள் என்பதால் அக்கடமையை நிறைவேற்றி ஐந்து மணியளவில் புறப்பட்டு 7 மணிக்கு நான் காடாம்புலியூர் சென்றேன். ஒரு சிற்றூர்ப்புறச்சூழலில் முதன்மைச்சாலையில் பள்ளி 4 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. பள்ளி வளாகத்தில் முந்திரி,பலா,தேக்கு என்று மரங்களின் அழகிய காட்சி. இன்னும் சில ஆண்டுகளில் இந்தப் பள்ளி மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்று தோன்றுகின்றது. முந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விபெறுகின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்குச் சிதம்பரம் திரு.சி.ஆர்.இலட்சுமிகாந்தன்(மேனாள் சட்ட மேலவை உறுப்பினர்) அவர்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மக்கள்தொடர்பு அதிகாரி திரு.செல்வம் அவர்களும் வந்திருந்தனர்.உள்ளூர் அன்பர்கள் பலரும் கலந்துகொண்டனர். நானும் திரு.குருநாதன் அவர்களின் முயற்சியைப் பாராட்டி,சிற்றூரில் இதுபோன்ற பணிகள் தேவை என்று வாழ்த்திப் பேசினேன்.
இரவு 8.30 மணியளவில் விடைபெற்றுப் புதுவைக்குத் திரும்பினேன்.
பேராசிரியர் சானகி அம்மா
முனைவர் தூ.சேதுபாண்டியன்,முனைவர் இரத்தினசபாபதி,முனைவர் நடராச பிள்ளை
மு.இளங்கோவன்,மரபின் மைந்தன் முத்தையா
முனைவர் மு.இளங்கோவன்,எழுத்தாளர் நாஞ்சில்நாடன்
தனித்தமிழ் அன்பர் செம்பியன்வல்லத்தரசு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)