நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 9 ஏப்ரல், 2009

கயிலைமாமுனிவர் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார்


தவத்திரு கயிலைமாமுனிவர் முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார்

 தமிழகத்துத் திருமடங்களுள் திருப்பனந்தாள் காசித் திருமடத்திற்குத் தனி இடம் உண்டு. தவத்திரு குமரகுருபர சுவாமிகளின் பெருமுயற்சியால் உருவான காசித் திருமடத்தின் கிளை மடமாகத் திருப்பனந்தாளில் இம்மடம் அமைக்கப் பெற்றாலும் காசியில் இருக்கும் மடத்தை நிருவகிக்கும் அளவிற்கு இம்மடம் இன்று சிறப்புற்று விளங்குகிறது.

 தமிழ் மொழியை, தமிழர் சமயத்தை வடநாட்டில் நிலைபெறச் செய்த பெருமை இம் மடத்திற்கே உண்டு. இசுலாமியர் காலத்தில் சைவத்தையும் தமிழையும் வளர்த்துப் பாதுகாத்த வகையில் தமிழர்கள் இந்தத் திருமடத்தை என்றும் நன்றியுடன் போற்றியாக வேண்டும்.

  இசுலாமியர் ஆட்சியில் இசுலாமிய சமயமும் இசுலாமியர்களின் அரபி, உருது மொழிகளும் செல்வாக்குப் பெற்றிருந்த சூழலில் இசுலாமிய மன்னன் தம்மை மதிக்கும்படி "மண்கண்ட வெண்குடை கீழாக மேற்பட்ட மன்னரும் என் பண்கண்ட அளவில் பணியச்செய்வாய்" என்று பாடித் தமிழ் வளர்த்தவர் தவத்திரு குமரகுருபர அடிகளார் ஆவார். அவர்தம் திருமரபில் இன்று காசித் திருமடத்தின் இருபத்தோராம் அதிபராக விளங்கித் தமிழ் மொழிக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றி வருபவர் கயிலைமாமுனிவர் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் ஆவார். இவர்தம் வாழ்க்கைக் குறிப்பை இங்குச் சுருக்கமாக வரைய விரும்புகிறேன்.


திருப்பனந்தாள் கல்லூரியின் இன்றைய முகப்பு


கல்லூரியின் அழகிய முகப்பு

  காசித் திருமடத்திற்கு உரிமையான செந்தமிழ்க் கல்லூரியில் யான் 1987- முதல் 1992 வரை ஐந்தாண்டுகள் தமிழ் கற்றேன். கண்டிப்புக்கும்,நெறிமுறைகளுக்கும் பெயர்பெற்ற அக் கல்லூரியில் தமிழகத்தின் புகழ்பெற்ற பல அறிஞர்கள் பேராசிரியர்களாகப் பணிபுரிந்துள்ளமை யையும் பலர் கல்வி கற்றுள்ளமையையும் இங்குச் சுட்டியாக வேண்டும்.

  அவ்வகையில் பேராசிரியர். கா. ம. வேங்கடராமையா, தி.வே.கோபாலையர், தண்டபாணி தேசிகர், மு.சுந்தரேசன் பிள்ளை, கு. சுந்தரமூர்த்தி, தா.ம. வெள்ளைவாரணம், ம.வே.பசுபதி உள்ளிட்ட பேராசிரியர்கள் அக்கல்லூரியின் புகழ்பெற்ற பேராசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். மேற்கண்ட பேராசிரியர்களுள் சிலர் அக்கல்லூரியின் மாணவர்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

 மேலும் ம.வே. செயராமன், பொற்கோ, செ.இராசு உள்ளிட்ட அறிஞர்கள் அக்கல்லூரியில் கற்றவர்களே. தமிழகத்திலும் அயல்நாடுகளிலும் இக்கல்லூரியில் கற்ற பலர் தமிழ்ப்பணி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்தகு வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்லூரிக்கு என் ஆசிரியர் வாரியங்காவல் புலவர் ந.சுந்தரேசனார் அவர்களின் நெறிப்படுத்தலில் யான் தமிழ் கற்கச் சென்றேன்.

 எனக்குப் பேராசிரியர்களாக வாய்த்தவர்களுள் முனைவர் கு.சுந்தரமூர்த்தி, புலவர் ம.வே.பசுபதி என்னும் இருவரும் குறிக்கத்தக்க சான்றோர்கள். அதுபோல் பேராசிரியர்கள் சி. இராமன், சொ.இரவி, ப.பாசுகரன், திருவாட்டி வே. சீதாலெட்சுமி, சிவ. பங்கயச்செல்வி, நா. மாதவி, க. மாரியப்பன், சி.மனோகரன். ச. திருஞானசம்பந்தன், துரை. லோகநாதன் உள்ளிட்ட பேராசிரியர் பெருமக்களும் எனக்குத் தமிழறிவு ஊட்டியவர்களே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிறப்பிற்கு உரியவர்கள்.


கயிலைமாமுனிவரின் வலக் கையருகில் நான்
(நாடகம் ஒன்றில் மாணவப்பருவத்தில்)

  இங்குத் தமிழ் கற்ற பொழுதே தமிழ்நூல்கள் எழுதத் தொடங்கிவிட்டேன். பல கட்டுரைகள் வரையுவும், கல்லூரிகளில் உரையாற்றவும் பயிற்சி பெற்றேன். தனித்தமிழ் இலக்கியக் கழகத்தில் தங்கப்பதக்கம், வெள்ளிச் சுழற்கோப்பை முதன் முதல் பெற்றதும் இக்கல்லூயில் பயின்றபொழுதுதான். தமிழோசை நற்பணி மன்றத்தின் தங்கப்பதக்கம் பெற்றதும் இக் கல்லூரியில் பயின்றபொழுதுதான். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாவேந்தர் நூற்றாண்டில் பல்கலைக்கழக அளவில் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதும் இங்குப் பயின்ற பொழுதுதான்.


நெல்லையில் வெள்ளிச்சுழற்கோப்பை,தங்கப்பதக்கத்துடன் பெற்றபொழுது (பனசைக் கல்லூரி வளாகத்தில்)

  பல இதழ்களுக்கு எழுதத் தொடங்கியதும் இங்குப் பயிலும்பொழுதுதான். முனைவர் மு. தமிழ்க்குடிமகன் உள்ளிட்ட தமிழறிஞர்களை முதற்கண் கண்டதும் (தருமபுரம் சென்று) இக்கல்லூரியில் பயின்றபொழுதுதான்.

  திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் உள்ள நூலகத்தின் அனைத்து நூல்களையும் தொட்டுப் படித்துப் பார்த்ததும் அக்கல்லூரியின் நூலகர் பேராசிரியர் திரு சம்பத்குமார் அவர்களின் உதவியால் பல நூல்கள், இதழ்களைப் படித்து மகிழ்ந்ததும் இக்கலூரியில்தான். இங்குப் படிக்கும்பொழுதுதான் வானொலியில் உரையாற்றும் வாய்ப்புகள் அமைந்தன .என் மாணவராற்றுப்படை, பனசைக்குயில் கூவுகிறது, அச்சக ஆற்றுப்படை, அரங்கேறும் சிலம்புகள் நூல்கள் உருவானதும் இக்கல்லூரியில் பயின்றபொழுதுதான்.

  காசித்திருமடத்திற்கு உரிமையான ஏழுகடை மாடியில் தங்கியிருந்து மன்னியாற்றங்கரையில் இயற்கை வளங்களைக் கண்டபடி தமிழ் கற்ற இந்தக் கல்லூரி என் வாழ்வில் இரண்டறப் பின்னிக் கிடப்பது என்று சொன்னால் மிகையில்லை.


கயிலைமாமுனிவர் அவர்களிடம் நான் பரிசு பெறல்(1989 அளவில்)

  இக்கல்லூரியில் கற்ற பொழுது நடந்த பல்வேறு கட்டுரை,கவிதை, பேச்சு,ஒப்புவித்தல், முதல்மதிப்பெண் எடுத்தல் எனப் பல போட்டிகளில் பரிசில் பெறும்பொழுது அன்பொழுகப் பரிசுப் பொருள்களை வழங்கி வாழ்த்திய பேரறிவாளரே நம் வணங்குவதற்குரிய கயிலை மாமுனிவர் அவர்கள்.மேலும் திருமடத்திலிருந்து வெளிவந்த குமரகுருபரர் என்னும் இதழில் கட்டுரைகள் எழுத வாய்ப்பு நல்கியவரும் தவத்திரு அடிகளாரேயாவார்கள்.

  எனவேதான் என் முதல் நூலான மாணவராற்றுப்படை வெளிவந்த பொழுது அடிகளாரின் இத்தகு தமிழுள்ளம் நினைத்து என் முதல் நூலைக் கயிலைமாமுனிவர் அவர்களுக்குப் படையலிட்டுச் செந்தமிழ்க் கல்லூரியைப் புரந்தருளிய தவதிரு கயிலைமாமுனிவர் அவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்தேன்.மாணவப்பருவத்தில் உருவான மாணவராற்றுப்படை நூலைக் கண்ணுற்று உரூவா ஐந்நூறு அந்நாளில்(1990)மகிழ்ச்சியுடன் வழங்கிப் புரந்தருளி எதிர்காலத்தில் பல நூல்கள் உருவாக,வெளியாக வழியமைத்த தவத்திரு கயிலைமாமுனிவர் அவர்களின் நினைவுகளைச் சுமந்தபடி இப்பதிவை இட்டு வைக்கின்றேன்.

கயிலை மாமுனிவர் அவர்களின் தமிழ் வாழ்க்கை

  தென்னார்க்காடு மாவட்டம் திருக்கழிப்பாலையை ஒட்டிய காரைமேடு என்னும் சிற்றூரில் மாணிக்கம் பிள்ளை, குஞ்சம்மாள் ஆகியோரின் மூன்றாம் குழந்தையாக 22.03.1931 இல் பிறந்தவர் கயிலைமாமுனிவர் அவர்கள். இவர் தம் பிள்ளைப் பருவத்துப் பெயர் நடனசபாபதி ஆகும். நடனசபாபதியின் பாட்டனார் பெயர் சபாபதி என்பதாகும். இச் சபாபதியார் கங்கை கொண்டசோழபுரம் திருக்கோயிலில் அதிகாரியாகப் பணி செய்த பெருமைக்குரியவர்.

  நடனசபாபதியை அவர் உறவினர் இராசமாணிக்கம் பிள்ளை அவர்கள் சிதம்பரத்தில் இருந்த காசி மடத்தின் கிளை மடத்துக்கு அழைத்துச் சென்று தம் கண்காணிப்பில் சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் படிக்க வைத்தார். எட்டாம் வகுப்புப் படிக்கும் வரை நடனசபாபதி அவர்கள் காசி மடத்திலேயே தங்கிப் பயின்றார். இராசமாணிக்கம் பிள்ளை திருமடப் பணியிலிருந்து விலக நேர்ந்ததால் அவருடன் தங்கிப் பயின்ற நடனசபாபதி தம்பெற்றோருடன் தங்கித் தம் கல்வியைத் தொடரவேண்டிய நிலை ஏற்பட்டது. பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்ற பிறகு உடல் நலக்குறைவால் இவர் படிப்பு தடைப்பட்டது. பிறகு தருமையாதீனத்தில் இவர் எழுத்தர் பணி புரிந்தார். இதற்கு முன் இந்தப் பணியைக் கவனித்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் ஆவார்.

  1953 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் துறவு மேற்கொண்டார்.15.11.1953 இல் சமயத் தீட்சை வழங்கப்பெற்றது. தம் மகன் துறவு மேற்கொண்டதில் பெற்றோருக்கு உடன்பாடு இல்லை. துறவுக்குப் பிறகு பல ஆண்டுகளாகத் தந்தையார் அடிகளாரைப் பார்த்ததும் இல்லை. தாய் மகன் நினைவிலான ஏக்கத்துடன் உடல் நலம் குன்றி இயற்கை எய்தினார். இத்தகு துயர நிகழ்வுகள் நடந்தாலும் பற்றற்றான் பற்றினைப் பற்றிய அடிகளார் தம் தவ வாழ்வில் உறுதியுடன் விளங்கினார்.

  தருமையாதீன அடிகளாரின் அருளாணையின் வண்ணம் தருமையாதீனப் பல்கலைக் கல்லூரியில் பயின்று (1955-59) சென்னைப் பல்கலைக்கழகழகத்தின் வழியாக வித்துவான் பட்டம் பெற்றவர். 1960 ஆம் ஆண்டு காசித்திருமடத்தின் இளவரசாக அமர்த்தப்பட்டார். இதன் பிறகு காசித்திருமடத்தின் நிருவாகங்களைச் சிறப்பாகச் செய்து இருபதாம் பட்டத்தில் சிறப்புடன் விளங்கிய அருள்நந்தித் தம்பிரான் அடிகளார் அவர்களின் நம்பிக்கைக்குரியவராக விளங்கினார்.

  காசித் திருமடத்தின் கல்விப்பணிகள், இலக்கியப் பணிகள், அறக்கொடைகள் இவற்றைச் சிறப்புடன் நடத்த உழைத்தார். இவர்கள் இளவரசாகப் பணியாற்றியபொழுது திருக்குறள் உரைக்கொத்து, கந்தபுராணம், திருவிளையாடல் புராணம் ஆகியன உரைநடை வடிவில் வெளிவந்தன. 11 ஆண்டுகள் காசித்திருமடத்தின் இளவரசாகப் பணியாற்றினார்கள்.

  1972 மே மாதம் 16 ஆம் நாள் இருபதாம் பட்டத்து அதிபர் தவத்திரு அருள்நந்தித்தம்பிரான் அடிகளார் இயற்கை எய்தியதும் 21 ஆம் அதிபராகத் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் பட்டம் பெற்றார்கள்.

  18.10.1978 முதல் குரமரகுருபரர் என்னும் இதழ் வெளிவரத் துணைசெய்தவர். 15.07.1982 இல் இவர் கயிலைக்குச் சென்று இறைவனை வழிபட்டதன் நினைவாக 16.08.1982 இல் இவருக்குக் "கயிலை மாமுனிவர்" பட்டம் தருமையாதீனத் தலைவரால் வழங்கப்பெற்றது. 20.03 1991 இல் இவருக்கு மணிவிழா சிறப்பாக நடைபெற்றது.

  இவர்மேல் சிற்றிலக்கியங்கள் பல பாடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள் பலவற்றை உருவாக்கியதாலும், அறக்கொடைகள் பல நிறுவி உணவளித்தல், பதிப்பித்தல் வழியாகத் தமிழ்நூல்கள் பல வெளிவர உதவியதாலும் இவரைப் போற்றி வணங்க வேண்டும்.


காசிமடத்தின் முகப்பு


காசிமடத்தின் அரண்மனை போன்ற சுவர்

கருத்துகள் இல்லை: