நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 29 ஜனவரி, 2011

உணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடர்கின்றது...


பார்வையாளர்கள்



பார்வையாளர்கள்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மகாராசா கல்லூரியின் தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்கின்றது. பயிலரங்கின்
சிறப்பு நோக்கிய நிர்வாகத்தினர் கூடுதலாகக் கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களையும் அரங்கில் கலந்துகொண்டு பயன்பெற விரும்பினர்.எனவே கூடுதல் மாணவர்களுடன் பயிலரங்கம் தொடர்கின்றது...

பெருந்துறை மகாராசா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்


தமிழ்த்தாய் வாழ்த்து

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மகாராசா இருபாலர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(29.01.2011) காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. கல்லூரியின் சிறப்பு அலுவலர் பேராசிரியர் இரா.இந்திரலேகா அவர்களால் பயிலரங்கம் தொடங்கிவைக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் பா.பரமேசுவரி அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ந.மகாலட்சுமி அவர்கள் விருந்தினரை அறிமுகப்படுத்தி இணையத்தின் தேவையை வலியுறுத்திப் பேசினார். புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு
பேராசிரியர்கள்,மாணவர்களுக்குத் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்து உரையாற்றினார். 250 மாணவர்களுக்கு மேல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். உணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடர்ந்து நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி நூலகர் தருமராஜ் அவர்களும் பேராசிரியர்களும் சிறப்பாகச் செய்துள்ளனர்.


கலந்துகொண்ட பேராசிரியர்கள்,மாணவர்கள்(ஒரு பகுதியினர்)

வெள்ளி, 28 ஜனவரி, 2011

சிங்கை மலையகச் செலவு


சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங் மாநகரத் தந்தை தியோ கோ பின் அவர்கள் மு.இளங்கோவனுக்கு நினைவுப் பரிசில் வழங்கல் அருகில் பொறியாளர் மூர்த்தி அவர்கள்.


சிங்கப்பூரில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்துகொள்ளும்படி பொறியாளர் மூர்த்தி அவர்கள் என்னைத் தொலைபேசியில் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூர் பேராசிரியர் சுப.திண்ணப்பன் போன்றவர்கள் நாட்டுப்புறவியல் துறையில் எனக்கிருந்த ஈடுபாட்டை அறிந்து என் பெயரை நிகழ்ச்சிக்கு முன்மொழிந்துள்ளனர். தமிழ் வள்ளல் திரு. முஸ்தபா போன்றவர்களும் என் வருகை அமையவேண்டும் என்று ஆர்வம் காட்டினர். சிராங்கூன் டைம்ஸ் இதழாசிரியர் திரு. அலி அவர்களும் திரு.பாலு.மணிமாறன் உள்ளிட்டவர்களும் திரு.குழலி, திரு.நிலவன், பொறியாளர் சலுப்பை புருசோத்தமன் உள்ளிட்ட தோழர்களும் பாவாணர் பற்றாளர் ஐயா கோவலங்கண்ணனார் அவர்களும் என் வருகைக்குக் காத்திருந்தனர்.

திட்டமிட்டபடி சென்னையில் 21.01.2011 வானூர்தி ஏறிச் சிங்கப்பூரை அடைந்தோம். முதல்நாள் (22.01.2011) சிங்கப்பூரில் தங்கியிருந்ததையும், நண்பர்களைக் கண்டதையும் தஞ்சாவூர் சின்னப்பொண்ணு அவர்களுடன் நாட்டுப்புறப் பாடல் ஒத்திகையில் ஈடுபட்டதையும் முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். படித்திருக்கலாம்.

இனி 22.01.2011(ஞாயிறு) நிகழ்வுகள்...

காலை நெடுநாழிகை ஓய்வில் இருந்தேன். நண்பர் மன்னார்குடி இராசகோபால் அவர்கள் இல்லத்தில் காலையுணவு. அவரும் அவர்களின் துணைவியாரும் மருத்துவமனைக்குப் பல் மருத்துவரைப் பார்க்கச்சென்றனர். நான் வீட்டிலிருந்தபடி எனக்கு வந்த மின் மடல்களைப் படிப்பதில் கவனம் செலுத்தினேன். பதிவு ஒன்றும் வெளியிட்டேன். மீண்டும் ஓய்வில் இருந்தேன்.

பகலுணவுக்குப் பிறகு சிறிது ஓய்வெடுத்து நான்கு மணிக்கு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப் புறப்பட்டோம். அதற்குள் என்னை அழைத்துச் செல்வதற்கு என் மலேசியா நண்பர் திரு. முனியாண்டி ஆசிரியர் அவர்கள் தம் மகிழ்வுந்தில் சிங்கப்பூர் விழா நடக்கும் இடத்துக்கு வந்திருந்த செய்தி எனக்குக் கிடைத்தது. அரங்கில் என் வருகைக்காகக் காத்திருந்த முனியாண்டி அவர்களைக் கண்டு மகிழ்ந்தேன். எங்கள் பகுதி சார்ந்த பல இளைஞர்கள் அங்கு வந்து கூடினர். அனைவரும் ஒன்றாகப் படம் எடுத்து ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம்.

அண்ணன் இரசீத் அலி அவர்களை அரங்கில் கண்டு அறிமுகம் ஆனேன். பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்களையும் வேறு பல அன்பர்களையும் கண்டு வணங்கினேன்.

பொறியாளர் முத்துமாணிக்கம் என்ற அன்பர் திரு.மூர்த்தி அவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்து விழா ஏற்பாடுகளைக் கவனித்து வந்தார். தஞ்சாவூரிலிருந்த ஓர் அன்பர் விழாவுக்காக வந்திருந்தார்.

பொங்கல் விழாவுக்கு நகரின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் வந்திருந்து பொங்கல் வைத்துப் பொங்கினர். 111 பானைகள் பொங்கல் வைக்கப்பட்டன. மாட்டு வண்டி ஊர்வலத்துக்கு மாடுகள் பிடித்துவரப்பட்டு மாநகர மேயர் திரு தியோ கோ பின் அவர்கள் வண்டியில் ஏறிக் காட்சி தர, விழாத் தொடங்கியது. நகரின் குறிப்பிட்ட தெருக்களில் மாட்டு வண்டி ஊர்வலம் வந்தது.

பல சீனமொழி பேசும் நண்பர்கள் வேட்டி அணிந்துகொண்டும் பல சீனப்பெண்மணிகள் பொங்கல் வைத்தும் மகிழ்ந்தனர். மாநகரத் தந்தை அனைத்துப் பொங்கல் பானை வைத்த பெண்களையும் தனித்தனியாகப் பாராட்டினார். தொலைக்காட்சி நிறுவனத்தினர் படம் எடுத்தனர். குருதிக்கொடை வழங்கும் நிகழ்வும் சார்பு நிகழ்வாக நடந்தது. மாநகரத் தந்தை தியோகோ பின் அவர்கள் அரங்க நிகழ்ச்சிக்கு வந்தார். 5.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. நாட்டுப்புறக் கலைஞர் தஞ்சாவூர் சின்னபொண்ணு அவர்கள் வரவேற்புப் பாடலையும் மாநகரத் தந்தையைப் புகழ்ந்து உரைக்கும் பாடல்களையும் பாடினார். நான் இரண்டு நாட்டுப்புறப் பாடல்களைப் பாடினேன். பின்னர் மாநகரத் தந்தை தியோ கோ பின் பேசினார். எங்களுக்கு நினைவுப் பரிசில் வழங்கினார்.

பொங்கலிட்டவர்கள் பாராட்டப்பெற்றனர். பிறகு முறைப்படியான நாட்டுப்புறப் பாடல் கலை நிகழ்ச்சி தொடங்கியது. சிங்கப்பூர் திரு.நாதன் தலைமையிலான இசைக்கழுவினர் கருவிகள் முழக்கினர்.

தஞ்சாவூர் சின்னபொண்ணு அவர்களின் கணவர் திரு. குமார் அவர்கள் தவில் என்னும் இசைக்கருவியை இசைத்து எங்களை ஊக்கப்படுத்தினார். நானும் பல நடவுப் பாடல்களைப் பாடினேன்.

இடையிடையே தமிழில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்பைப் பாடி விளக்கினேன். நாட்டுப்புறப் பாடல்களைத் திரைத்துறையினர் பயன்படுத்துவதையும் இலங்கை, மலையாள நாட்டுப்புறப் பாடல்களையும் பாடிக் காட்டினேன். சின்னபொண்ணு அவர்கள் திரையில் பாடிய, ஒலி நாடாக்களில் பாடிய பல பாடல்களைப் பாடி அவையினரை மகிழ்ச்சிப் படுத்தினார். என் பாடல்கள் சிலவற்றுக்குப் பின்குரல் கொடுத்துப் பாடலைச் சிறக்கச் செய்தார். வெளிநாட்டில் வாழும் பொதுமக்களிடம் நான் கலந்துகொண்டு அரங்கில் குழுவுடன் இசைக்கருவிகளுக்கு இடையே பாடியது இதுதான் முதல்முறை. புதிய பட்டறிவாக இருந்தது. திரு.வினாயகம் என்ற இளைஞரும் பாடினார். காதல்பாடல்களை அவர் பாடினார்.

இரவு ஒன்பது முப்பது மணியளவில் எங்கள் கலை நிகழ்வு நிறைவுற்றது. உணவு உண்டோம். அனைவரிடமும் விடைபெற்று, திரு.முனியாண்டி அவர்களுடன் மன்னார்குடி இராசகோபால் இல்லம் வந்து சேர்ந்தோம்.

இரவு ஓய்வுக்குப் பிறகு காலை 5.30 மணிக்கு மலேசியா புறப்படுவது எங்கள் திட்டம். அப்படியே நடந்தது. திரு.முனியாண்டி அவர்களுக்குச் சிங்கப்பூர் பாதை புதியது. அவருக்குத் தூக்க கலக்கம் இருந்தது.

நான் தயங்கியபடியே மகிழ்வுந்தில் இருந்தேன். எங்களுக்குச் சரியான வழியை இராசகோபால் தாளில் குறித்துத் தந்தார். அந்த வழியில் வந்து ஒருவழியாகச் சிங்கப்பூர் எல்லையை நெருங்கினோம்.

அங்கு எங்களுக்கு இரண்டு நிமிடத்தில் வெளியேற இசைவு கிடைத்தது. சில கல் தொலைவில் நாங்கள் மலேசியா எல்லையில் நுழைவுதற்கு இசைவுபெற்றோம். அதுவும் இரண்டு நிமிடங்களில் முடிந்தது. இன்னும் நம் கற்கால சென்னை நடைமுறைகள் என்னை மருளச்செய்தன. பொழுது மெதுவாக விடிவதை உணர்ந்தேன். மலேசியத் தாய் எங்களுக்கு இளங்காலைக் கதிர்களை அனுப்பி, வரவேற்றாள். மலேசியாவின் நெடுஞ்சாலையில் எங்கள் மகிழ்வுந்தை நண்பர் முனியாண்டி அவர்கள் சிறப்பாக ஓட்டி வந்தார். அவருக்கு உறக்கம் வராமல் இருக்க பேச்சு கொடுத்தபடியே வந்தேன்.

வழியில் உள்ள நெடுஞ்சாலைக் கடைகளில் அதன் அழகைக் கண்டு முன்பே மகிழ்ந்துள்ளதால் வழியில் குளித்து உணவு முடிக்கத் திட்டம். ஆனால் முனியாண்டி அவர்கள் போகும் வழியில் மலாக்கா நகரம் உள்ளது அங்குச் சில முதன்மையான இடங்கள் உள்ளன கண்டு மகிழலாம் என்றார். அண்ணன் அறிவுமதி அவர்கள் முன்பு மலாக்க பற்றியும் அங்குள்ள மலாக்கா செட்டிகள் பற்றியும் எனக்குச் சொன்னமை நினைவுக்கு வந்தன.

காலைச் சிற்றுண்டியை ஒரு தமிழர் கடையில் உண்டு முடித்தோம். பிறகு நகர்வலம் அமைந்தது. மலாக்கா என்பது மலேசியாவில் குறிப்பிடத்தக்க ஒரு நகரம் ஆகும் அங்குப் போர்ச்சுக்கல் நாட்டினர் ஆட்சி செய்திருந்தமைக்கான பல நினைவிடங்கள் உள்ளன.

டச்சுக்காரர்களின் நினைவிடங்களும் உள்ளன. கோட்டைகள், தெருக்கள், கப்பல்கள் பழைமை மாறாமல் பாதுகாக்கப்படுகின்றன. யாவற்றையும் நினைவுக்காகப் படம் எடுத்துகொண்டோம். பார்க்க வேண்டிய பகுதிகளைப் பார்த்துவிட்டு மீண்டும் நெடுஞ்சாலைக்கு வழிதெரியாமல் சுற்றிச் சுற்றி வந்தோம். ஒரு வழியாக நெடுஞ்சாலை வந்தது. இரு மருங்கும் செம்பனை மரங்களும் இயற்கைக் காட்சிகளும் அமைந்திருந்தன. கண்டு வியந்து வந்தேன்.

குளிப்பதற்கு இடம் தேடும்பொழுது திரு.முனியாண்டி அவர்கள் ஐம்பது கி. மீட்டர் உள்ளே அடங்கியிருந்த பெந்திங் என்ற தம் ஊரில் உள்ள தம் வீட்டுக்குச் செல்வோம் என்றார். முன்பொரு முறையும் முனியாண்டி அவர்களின் வீட்டுக்குக் கோவலனைப் போல் இரவில் சென்று வைகறையில் வெளியேறியுள்ளேன். சரி இந்த முறை வீட்டைப் பார்க்கலாம் என்று சென்றேன். குளித்து முடித்து ஓய்வுக்காகப் படுத்தேன். பத்து நிமிடத்தில் எழுப்பி, எனக்காகப் பேராசிரியர் மன்னர்மன்னன் அவர்கள் கோலாலம்பூரில் காத்திருப்பதாகச் சொன்னார்.

இருவரும் கிள்ளான் வழியாகக் கோலாலம்பூர் மலேசியா பல்கலைக்கழகம் சென்றோம். பேராசிரியர் மன்னர்மன்னன் அவர்கள் அன்பொழுக வரவேற்றுப் பகலுணவுக்கு அழைத்துச்சென்றார். மலேசியத் தமிழ் இலக்கியப் போக்கு பற்றி உரையாடியபடியே உண்டு மகிழ்ந்தோம். மீண்டும் மலேசியா பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் சிலபொழுதுகள் படித்தேன். நான்கு மணிக்கு மொழித்துறையில் மாணவர்களுக்கு உரையாற்றும் ஒரு வாய்ப்பைப் பேராசிரியர் உருவாக்கியிருந்தார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் இன்றைய நாளில் மலேசியாப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியருமான முனைவர் கி. கருணாகரன் அவர்களும் கலந்துகொண்டு என் உரையைச் செவிமடுத்தார்கள். இந்தியவியல்துறை துறைத்தலைவர் பேராசிரியர் குமரன் அவர்களும் கலந்துகொண்டார். மாணவர்கள் 35 பேர் அளவில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்து இரவு உணவு உண்டு நான் பேராசிரியர்கள் குடியிருப்பில் பேராசிரியர் மோகன்லால் அவர்களுடன் தங்கினேன். பேராசிரியர் மோகன்லால் அவர்கள் மைசூர் நடுவண் மொழிகள் நிறுவனத்தில் பேராசிரயர் க. இராமசாமி அவர்களுடன் பணிபுரிந்த பட்டறிவுகளையும் தம் முனைவர் பட்ட ஆய்வுக்காகப் பழங்குடி மக்களிடம் களப்பணியாற்றிய பட்டறிவுகளையும் நினைவுகூர்ந்தார்.

25.01.2011 காலை 7.15 மணிக்குப் பல்கலைக்கழகம் புறப்பட்டோம். 5 நிமிடத்தில் பல்கலைக்கழகத்தில் இருந்தோம். 21 பேராசிரியர்கள் மொழித்துறையில் உள்ளனர். பேராசிரியர் மோகன்லால் கணிப்பொறியில் தன் வருகையைப் பதிந்துகொண்டார். அவருக்கு முன்பாக 7 பேர் வந்து பெயரைக் கணிப்பொறியில் பதிந்துள்ளதைப் பேராசிரியர் காட்டி, அவர்களின்
கல்வியார்வத்தையும் பணி ஈடுபாட்டையும் காட்டினார். கண்ணாரக் கண்டு மகிழ்ந்தேன்.


பேராசிரியர் மோகன்லால் அவர்கள்

நாங்கள் இளம் முனைவர் பட்டம் படிக்கும்பொழுது பத்து மணிக்குரிய பல்கலைக்கழகத்திற்கு எங்கள் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் 8 மணிக்கு வந்துவிடுவார். நாங்கள் சிலர் 7.30 மணிக்கு வந்துவிடுவோம். இவை யாவும் பேரறிஞர் வ.ஐ.சுப்பிரமணியம் அவர்களின் மாணவர்களிடமும் அவர்களின் கொடிவழி மாணவர்களிடமும் பதிந்துள்ள நற்பண்புகளாகும்.

காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மலேயா பல்கலைக்கழகம்
பணிநேரத்தைக் கொண்டது. ஆனால் 7 மணிக்கே பேராசிரியர்களும் மாணவர்களும் வரத்தொடங்கினர். என் நினைவுகள் நம் கல்வி நிலையங்களின் பக்ககம் ஓடியது.

இசைவுகளும், தற்செயல் விடுப்புகளும், ஈட்டிய விடுப்புகளும், மருத்துவ விடுப்புகளும், பேறுகால விடுப்புகளும், மதவிழாக் கொண்டாட்டங்களும், உள்ளூர் விடுப்புகளும், கோடை விடுமுறை, குளிர்கால விடுப்புகளும் அரசு விடுப்புகளும் போதாமல் காலை 9 மணிக்குக் கல்லூரி, பல்கலைக்கழகம் என்றால் 10 மணிக்கு வந்து நுழைவதும். வந்து நுழைந்ததும் கொண்டுவரும் உணவுப் பெட்டகத்தைத் திறந்து கடை பரப்புவுதும், 11 மணிக்குத் தேநீருக்குப் பறப்பதும் பிறகு பகல் உணவு, பிறகு மீண்டும் தேநீர், சிறப்பு இசைவில் மூன்று மணிக்குப் பை தூக்குவதும் என்ற நிலையிலிருந்து நாம் என்று விடுபடுவோம் என்ற பெரிய ஏஏஏஏக்கமே எனக்குப் படர்ந்தது.

காலை ஒன்பது மணியளவில் இந்தியவியல் துறையில் துறைத்தலைவர் குமரன் அவர்கள் மாணவர்களை ஒன்றுகூடச்செய்து நான் உரையாற்றுவதற்கு உரிய வாய்ப்பை உருவாக்கியிருந்தார்கள்.

ஒரு வகுப்பறையில் கூடினோம். உரையாற்றும் என்னை அறிமுகம் செய்துவைத்தார். நானும் தமிழக நாட்டுப்புற இலக்கியம், பிற இலக்கியம் சார்ந்து உரையை அமைத்தேன். பிற்பகுதியில் தமிழ் இணைய அறிமுகத்தையும் அமைத்தேன். பல மாணவர்களுக்கு இணையம் முன்பே அறிமுகம். நான் கூறிய பல செய்திகள் அவர்களுக்குப் புதியதாக இருந்ததையும் உண்ரந்தேன்.

கூட்டம் நடந்த அரங்கில் மாணவர்கள் மிகுதியானதால் இடநெருக்கடி ஏற்பட்டது. எனவே சிறிய இடைவெளியில் பெரிய அரங்கில் மாணவர்கள் ஒன்றுகூடினர். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் திரண்டதை அறிந்து மகிழ்ந்தேன். ஒரு மணி நேரம் என்ற என் உரை இரண்டு மணி என்றாகி, மூன்று மணிநேரம் என நீண்டது. அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் விடைபெற்றேன். இணைப் பேராசிரியர் சபாபதி, பேராசிரியர் இராசேந்திரன், இணைப்பேராசிரியர் முனைவர் கிருட்டினன் ஆகியோரைக் கண்டு உரையாடி மீண்டேன். நல்ல பட்டறிவாக இதனை உணர்ந்தேன்.

25.01.2011 பிற்பகல்…

கிள்ளானில் இருந்த திரு.மாரியப்பனார் அவர்களைக் காண்பதை நோக்காகக் கொண்டு அவர் இல்லம் சென்றேன். மாரியப்பனார் தமிழகம் வந்துள்ள செய்தி அறிந்து அவர்களின் குடும்பத்தினரைக் கண்டு உரையாடி மீண்டேன். என்னை அழைக்க மீண்டும் முனியாண்டி அவர்கள் மகிழ்வுந்தில் வந்தார். இருவரும் பெட்டாலிங் செயா என்று பகுதியில் உள்ள நூலக அரங்கம் சென்றோம்.

திரு.இளந்தமிழ் அவர்களின் ஏற்பாட்டில் கூடியிருந்த அன்பர்கள் நடுவே இரண்டுமணி நேரம் தமிழ் இலக்கியம் நாட்டுப்புறப் பாடல்கள், சிலப்பதிகாரம் பற்றி உரையாற்றினேன். மலேசியா தொலைக்காட்சி சார்பில் என்னை நேர்காணல் செய்ய திரு. இராமாராவ் அவர்கள் வந்திருந்தார். தமிழ்ப்பற்றுடைய அவர்கள் கேட்ட வினாக்களுக்கு விடை தந்தேன்.

மறுநாள் மலேசியாவில் என் நேர்காணல் ஒளிபரப்பாகியுள்ளது. இது நிற்க

26.01.2011 காலை 9.30 மணிக்கு மலேசியா கோலாலம்பூர் தொடர்வண்டி நிலை அருகில் தனியார் பேருந்து ஒன்றில் பேராசிரியர் மன்னர் அவர்கள் என்னை ஏற்றி விட்டார். மலேசியாவின் கவின்பெறும் வனப்பைக் கண்டவண்ணம் சிங்கப்பூர் நோக்கி எங்கள் பேருந்து விரைந்தது. சாலை ஒழுங்கால் செலவு களைப்புத் தெரியவில்லை. ஐந்து மணி நேரத்தில் சிங்கப்பூர் வந்து சேர்ந்தேன்.

பகல் 3.30 மணிக்குச் சிங்கப்பூர் வந்த என்னை வரவேற்க என் நண்பர் பொறியாளர் புருசோத்தமன் மகிழ்வுந்துடன் காத்திருந்தார். பகலுணவு உண்டேன்.

முசுதபா கடையில் சில பொருட்கள் வாங்கிக்கொண்டேன். சிங்கப்பூர் பொங்கல் விழா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு. மூர்த்தி அவர்கள் மீண்டும் தம் நண்பர்களுடன் வந்து இணைந்துகொண்டார்.

மீண்டும் கடையில் அவர் வற்புறுத்தலில் மீன் குழம்புடன் சிறப்பு உணவு உண்டோம். எங்கள் மகிழ்வுந்து 7 மணிக்குப் புறப்பட்டது. அரை மணி நேரத்தில் சாங்கி வானூர்தி நிலையம் வந்தோம்.

எங்களுக்கு முன்னதாக திரு ரசீத் அலி அவர்கள் வந்திருந்தார்கள். அனைவரும் என் பெட்டியை ஒழுங்கு செய்து பொருள்களை அடுக்கி உரிய ஆய்வுகளை முடித்து என்னை வானூர்தி நிலையத்தின் உள்ளே அனுப்பிவைது, நீங்கா விடைபெற்றனர். மிக எளிதான பாதுகாப்பு ஆய்வுகளை முடித்து இரவு 9.15 மணிக்கு வானூர்தி புறப்பட்டது. இந்திய நேரப்பட்டி 10.45 மணியளில் சென்னை வந்தேன்.

அங்கிருந்து பேருந்தேறிப் புதுவைக்கு விடியற்காலை 3.30 மணிக்கு வந்து சேர்ந்தேன்.


பேராசிரியர்கள் குமரன், மன்னர், சபாபதி, கிருட்டினன் மற்றும் பார்வையுறும் மாணவர்கள்


மலேயா பல்கலைக்கழகத்தின் இந்தியவியல்துறை துறை மாணவர்கள்


மொழித்துறை மாணவர்கள்,பேராசிரியர்கள்(ஒரு பகுதியினர்)



மலேசியா அரசு தொலைக்காட்சிக்கு நேர்காணல்


மொழித்துறை மாணவர்கள், பேராசிரியர்கள்



பேராசிரியர் சுப.திண்ணப்பன் மற்றும் நண்பர்கள்


மலாக்காவில் பழைய கோட்டை


மலாக்காவில் பழைய கப்பல்


எழுத்தாளர் இரசீத் அலி,மு.இளங்கோவன், சின்னப்பொண்ணு


பெட்டாலிங் செயா நூலக அரங்க நிகழ்வில் கலந்துகொண்டவர்களுடன் மு.இ, பேராசிரியர் மன்னர், இராமாராவ், இளந்தமிழ்


இந்தியவியல் துறை மாணவர்கள்


பரமேசுவரி(சீனப்பெண்-தமிழ் பாடகி),சின்னப்பொண்ணு,மு.இ


மு.இ,சின்னப்பொண்ணு அவர்களுடன்


பொறியாளர் மூர்த்தி, மு.இ, முத்துமாணிக்கம், புருசோத்தமன் (வழியனுப்ப வானூர்தி நிலையில்)

வியாழன், 27 ஜனவரி, 2011

பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா இணையதளத் தொடக்கவிழா


 திருப்பனந்தாள் கல்லூரியின் மேனாள் முதல்வரும் கல்வெட்டியல் அறிஞரும் பன்னூலாசிரியரும் பன்மொழியறிஞருமான பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா அவர்களின் அறிவுக்கொடை, தமிழ்ப்பணிகளைத் தாங்கி நிற்கும் இணையதளம் தொடக்க விழா நடைபெற உள்ளது. 30.01.2011 ஞாயிறு காலை 10.30 மணிக்குத் திருப்பனந்தாள் திருமடத்தின் அதிபர் தவத்திரு. கயிலைமாமுனிவர் முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்களின் திருக்கையால் திருப்பனந்தாள் திருமடத்தில் நடைபெறும் விழாவில் இணையதளம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

 காசித் திருமடத்தின் இணை அதிபர் தவத்திரு சுந்தரமூர்த்தித் தம்பிரான் அடிகளார் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரைக்க உள்ளார்கள்.

 கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சுப்பிரமணியன், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருட்டினன், பாலசுப்பிரமணியன், விசயராகவன், இரா.சுப்பராயலு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைக்க உள்ளனர்.

 பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்கள் தொகுப்புரை வழங்கவும் பேராசிரியர் அரங்க. சிவப்பிரகாசம் அவர்கள் வரவேற்கவும் உள்ளனர். புலவர் இராம.சுவாமிநாதன் அவர்கள் நன்றியுரையாற்றுவார்.

இணையதள முகவரி:

www.venkataramaiah.org

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

சிங்கப்பூர் செலவு


அழைப்பிதழ்

சிங்கப்பூரில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு தமிழக நாட்டுப்புறப்பாடல்களை அறிமுகம் செய்து பாடுவதற்கு நானும் தஞ்சாவூர் சின்னபொண்ணு அவர்களும் சிங்கப்பூர் வந்துள்ளோம். நேற்று(22.01.2011) காரிக்கிழமை காலையில் சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையத்திற்குக் காலை 7.45 மணிக்கு வந்து சேர்ந்தோம்.

எங்களை வரவேற்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு.மூர்த்தி அவர்கள், நண்பர் மதி அவர்களுடன் வந்து காத்திருந்தார்(மதி உத்தமம் உறுப்பினர் என்ற அடிப்படையிலும் சின்ன தாராபுரம் பாவலர் இறையரசன் அவர்களின் மகன் என்ற அடிப்படையிலும் முன்பே எனக்கு அறிமுகம்). திரு.மூர்த்தி அவர்கள் செல்பேசி உரையாடல் வழியாக மட்டும் அறிமுகம். அவர்தான் என்னை நிகழ்ச்சிக்கு அழைத்து அறிமுகம் செய்பவர். அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி நேராகத் திரு.மதி அவர்களின் இல்லத்திற்குச் சென்றோம்.

நாங்கள் சென்று இறங்கியதும் எங்களுடன் வந்து பொறியாளர் திரு.புருசோத்தமன் அவர்கள் இணைந்துகொண்டார். திரு.புருசோத்தமன் அவர்களைப் பற்றி அண்மையில்தான் சென்னை உயர்நயன்மை மன்ற வழக்கறிஞர் க.பாலு அவர்கள் வழியாக அறிந்தேன். அனைவரும் காலையில் திரு.மதி இல்லில் காலையுணவை உண்டோம். பிறகு திருவாட்டி. சின்னபொண்ணு அவர்களையும் அவர்களின் கணவர் திரு.குமார் அவர்களையும் ஓய்வெடுக்கச்சொல்லி அவர்களிடமிருந்து விடைபெற்று நானும் புருசோத்தமன் அவர்களும் இராசமன்னார்குடியைச் சேர்ந்த திரு. இராசகோபால் இல்லம் சென்றோம்.

போகும் வழியில் திரு.புருசோத்தமன் அவர்களிடம் உரையாடியபடியே சென்றேன். திரு.புருசோத்தமன் அவர்கள் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், மீன்சுருட்டிக்கு அருகில் உள்ள சலுப்பை என்ற ஊரைச்சேர்ந்தவர் என்றார். மீன்சுருட்டியில் + 2 வில் "ஏ" பிரிவில் படித்தவரா என்றேன். அப்பொழுதுதான் நானும் அவரும் ஒரே காலத்தில் ஒன்றாகப் படித்தவர்கள் என்ற நினைவில் மூழ்கினோம். 26 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த எங்களை உருவம் மாற்றியிருந்ததே தவிர உணர்வால் ஒன்றுபட்டோம். என் ஊர்மேலும் எங்கள் பகுதி மக்கள் மேலும் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு என்று நம்பி வந்த என்னைவிட, ஊர்மேலும் மக்கள் மேலும் மிகுந்த பற்றுக்கொண்டராக திரு.புருசோத்தமன் தெரிந்தார். மேல்மருவத்தூர் அடிகளார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பு முடித்துக் கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணிபுரிகின்றார். தம் மகள் பூங்குழலியைத் தமிழிசை அறியும்படி செய்து கங்கைகொண்ட சோழபுரம் கோயில் சார்ந்து சில இசைக்குறுவட்டுகளைத் தம் சொந்த பொறுப்பில் வெளியிட்டுள்ளார் என்று அறிந்து வியந்தேன். பின்னும் இவர் பற்றிய நினைவுகளை எழுதுவேன்.

இராசமன்னார்குடி இராசகோபால் அவர்கள் எங்கள் வருகைக்காகக் காத்திருந்தார். அனைவரும் அறிமுகமாகி உரையாடினோம். குளித்து முடித்து நன்கு ஓய்வெடுக்கும்படி நிகழ்ச்சி பொறுப்பாளர் திரு.மூர்த்தி அவர்கள் அன்புக்கட்டளையிட்டிருந்தார்.அவருக்காக அரைமணிநேரம் ஓய்வெடுத்தேன்.

என் வருகை சிங்கப்பூரிலிருந்த என் நண்பர்கள் பலருக்கும் தெரிந்தது.எனவே பலரும் தொடர்புகொண்டவண்ணம் இருந்தனர். மலேசியாவிலிருந்து ஆசிரியர் திரு.முனியாண்டி அவர்கள் தொடர்புகொண்டு என்னை மலேசியாவுக்கு அழைத்துச்செல்ல இன்று வருவதாக உரைத்தார். பொறியாளர் அத்திக்காடு இரவிச்சந்திரன் அவர்களும் என்னைச் சந்திக்க உள்ளதை உறுதிப்படுத்தினார்.

நானும் இராசமன்னார்குடி இராசகோபால் அவர்களும் பாவாணர் பற்றாளர் ஐயா கோவலங்கண்ணன் அவர்களைக் கண்டு உடல்நலம் வினவச்சென்றோம். கோவலங்கண்ணன் அவர்கள் பாவாணரின் நூல்கள் வெளிவருவதற்குப் பல வகையில் உதவியவர். பாவாணரின் வறுமைச் சூழலை நேரில் கண்டு தாம் அணிந்திருந்தவற்றை அப்படியே கழற்றி வழங்கிய குமண வள்ளல். அவர் அண்மையில் நெஞ்சாங்குலை அறுவைப்பண்டுவம் செய்துகொண்டவர். அவரின் கால் பகுதி இயல்பாக இயங்கத் தடையாக உள்ளதை முன்பே எனக்குத் தொலைபேசியில் தெரிவித்தார். உடன் புதுச்சேரியில் புகழ்பெற்ற ஓமியோ மருத்துவர் ப.உ.இலெனின் அவர்களிடம் பேசி ஐயா கோவலங்கண்ணன் அவர்களுக்கு ஒரு மாதத்துக்குரிய மருந்துகளை இருகிழமைக்கு முன்பே வாங்கி சென்னையில் இருந்த ஐயாவின் மகன் பொற்கைப்பாண்டியன் வழியாக அனுப்பினேன். இதுபற்றியெல்லாம் பேசி ஐயாவுக்கு அன்புமொழிகள் சொல்லவும் இச்செலவை யான் அமைத்துக்கொண்டேன்.

ஐயாவிடம் நான் அவருக்குப் படையல் செய்த நாட்டுப்புறவியல் நூலின் கூடுதல்படிகளை வழங்கி மகிழ்ந்தேன். ஐயாவும் உரையாடி எங்களுக்குப் பிரியா விடைகொடுத்தார்கள். அங்கிருந்து மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி ஒத்திகைக்காக நாங்கள் விழா நடைபெறும் புக்கிட் பாஞ்சாங் திறந்தவெளி அரங்கிற்குச் சென்றோம்.

தஞ்சாவூர் சின்னப்பொண்ணுவும் வந்து சேர்ந்தார். இசைக்குழுவுடன் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டோம்.ஒத்திகை இரவு 9 மணி வரை நடைபெற்றது. இந்த நிலையில் கணிப்பொறித்துறைப் பொறியாளர் திரு.நிலவன் என்னைக் காண வந்தார். அவருடன் பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து உரையாடினோம். பல அன்பர்கள் வந்து இணைந்தனர். எங்கள் ஊர் சேர்ந்த பொறியாளர் முத்துமாணிக்கம் அவர்கள் புதியதாக அறிமுகம் ஆனார். அவர் மகிழ்வுந்தில் திரு.இராசகோபால் அவர்களின் இல்லம் வந்தபொழுது இரவு பன்னிரண்டரை மணியிருக்கும். பிறகு ஓய்வெடுதேன்.

இன்று மாலை பொங்கல் விழா நிகழ்ச்சி முடிந்ததும் நாளை மலேசியா செல்கின்றேன். மலேசியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்குரிய வாய்ப்பினைப் பேராசிரியர் மன்னர்மன்னன் அவர்களும் மறுநாள் சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்ற திரு.மாரியப்பன் ஆறுமுகம் அவர்களும் ஏற்படுத்தியுள்ளனர்.

வியாழன், 20 ஜனவரி, 2011

தமிழ் இணைய அறிமுகம்

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ் இணைய அறிமுக வகுப்பு நண்பகல் 12.30 மணிக்குத் தொடங்கியது. இரண்டு மணி வரை தமிழ் இணையத்தின் பல்வேறு பயன்பாடுகள் வளர்ச்சிகளை விளக்கி வருகின்றேன்.

முத்தமிழ் மன்ற விழா



புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரியில் இன்று(20.01.2011) காலை பத்து மணிக்கு முத்தமிழ் மன்ற விழா நடைபெறுகின்றது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா. பொன்னுத்தாய் அவர்கள் வரவேற்புரையாற்றவும், கல்லூரி முதல்வர் முனைவர் து.சாந்தி அவர்கள் தலைமையுரையாற்றவும் உள்ளனர்.

சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் இரத்தின. வேங்கடேசன் அவர்கள் "சிங்கப்பூரில் தமிழும் தமிழரும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.

இரண்டாவது அமர்வு பகல் பன்னிரண்டு மணிக்குத் தொடங்குகிறது.இதில் தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் மாணவர்களுக்குக் காட்சி வழியாக இணையத்தையும் அதன் பயன்பாடுகளையும் விளக்க உள்ளார். கல்லூரியின் தமிழ்த்துறை மாணவிகள் முந்நூறுபேர் இந்த அமர்வில் கலந்துகொண்டு பயன்பெற உள்ளனர்.

வெள்ளி, 14 ஜனவரி, 2011

புதுவை முதல் சென்னை வரை...


இணையம் கற்போம் நூலைக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் வழங்கிமகிழும் மு.இ...

ஒரு கிழமையாக ஓய்வில்லாதபடி செலவுகள் அமைந்தன.

சென்ற காரிக்கிழமை(08.01.2011) காலையில் சென்னை புறப்படுவதற்குத் திட்டமிட்டேன். புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதும், மாலையில் சென்னை முகப்பேரில் தங்கி மறுநாள்(09.01.2011) காலையில் சமத்துவப் பொங்கலில் பங்கேற்பதும் திட்டம். காரிக்கிழமை காலையில் என் மக்கள் தேர்வு எழுதிய மதிப்பெண் அறிக்கை தருகின்றார்கள் என்றும் நான் கட்டாயம் வரவேண்டும் என்று அடம்பிடித்தனர். எனவே அங்குச்சென்று மதிப்பெண் அறிக்கை வாங்குவது இன்றியமையாத வேலையாக இருந்தது. இதனிடையே காரைக்குடியிலிருந்து திருக்குறள் திலீபன் அவர்களும் அவர்களின் தந்தையாரும் புதுவையில் வேறொரு நிகழ்ச்சிக்கு வருவதாகவும் என் இல்லம் வந்து சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்தனர். அவர்களுக்காகக் காத்திருந்தேன். வந்தார்கள்.

இரண்டுமணிநேரம் உரையாடினோம்.அவர்களிடம் விடைபெற்று, காலத்தாழ்ச்சியுடன் சென்னைக்குப் பகலில் புறப்பட்டேன். காரிக்கிழமை மாலை 6 .30 மணிக்குச் சென்னைக் கண்காட்சிக்குச் சென்றேன். அண்ணன் கூழமந்தல் உதயகுமார் எனக்காகக் காத்திருந்தார். விழிகள் பதிப்பகம் சென்று ஐயா வேணுகோபால் அவர்களைக் கண்டேன். சண்டே இண்டியன் அரங்கில் திரு.சுந்தரபுத்தன் இருந்தார். கழகம்,மணிவாசகர் பதிப்பகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம்,புதிய தலைமுறை உள்ளிட்ட பல அரங்குகளில் புதியதாக வந்த நூல்கள் பற்றி வினவினேன்.

புத்தகக் கண்காட்சி அரங்கிலிருந்து வெளியே வந்தேன். வரும் வழியில் புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும் என் பழைய நண்பருமான கவிஞர் நந்தலாலா அவர்களைக் கண்டு உரையாடினேன். அண்ணன் அறிவுமதி அவர்களின் அறையில் 1997 இல் ஒன்றாக நாங்கள் இருந்து பணிதேடிய பழைய நினைவுகளை அசைபோட்டோம். அவருக்கு என் இணையம் கற்போம், நாட்டுப்புறவியல் நூல்களைப் பரிசளித்தேன்.

நந்தலாலா அவர்கள் வடமொழி புராணங்கள்,இதிகாசக் கதைகளில் மிகப்பெரிய பயிற்சி உடையவர்.தொனி பற்றி நன்கு அறிந்தவர். அது குறித்த பல நூல்களைக் கற்றவர். அப்பொழுது நான் பணி வாய்ப்பு இல்லாமல் நம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு உழன்ற காலம். அதனால் கவிஞர் நந்தலாலா அவர்களின் தொனி பற்றிய செய்திகளை அரைகுறையாகக் கேட்பேன். அதுபோல் இன்றையப் பாடலாசிரியர் முனைவர் முத்துக்குமார் அவர்களுக்கு "இசை" என்று நாங்கள் அழைக்கும் அண்ணன் சாந்தகுமார் அவர்கள் பாடல் எழுதும் பயிற்சி வழங்குவார்கள். இருவரும் பாடல் கோர்ப்பு வேலைகளில் இருப்பர். இவற்றையெல்லாம் நான் நம்பிக்கை இன்றியே கேட்டுக்கொண்டிருப்பேன்.அனைவரும் தங்கள் விடாப்பிடியான முயற்சியால் அவரவர் துறைகளில் முன்னேறியமை மகிழ்ச்சி தருகின்றது. அண்ணன் அறிவுமதி அவர்கள் எங்களுக்கு வளர்ப்புத் தந்தை என்று சொன்னால் மிகையில்லை. இது நிற்க.

இரவு முகப்பேர் நிகழ்ச்சிக்கு விருந்தினன் என்பதால் அங்குத் தங்க வைக்க விழாக்குழுவினர் நினைத்தனர். ஆனால் என் நாகர்கோயில் நண்பர் இயக்குநர் செல்வதரன் எழும்பூரில் ஒருவிடுதியில் தங்க ஏற்பாடு செய்திருந்தார். ஐயா செந்தீ நடராசன் அவர்களும் எங்களுடன் அறையில் உரையாடி மகிழ்ந்தார். நடு இரவு அனைவரும் உறங்கினோம். காலையில் எழுந்து 6.30 மணி அளவில் புறப்பட்டு 7 மணிக்கு முகப்பேர் சென்றோம். பொங்கல் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கலை பண்பாட்டுத்துறை ஆணையர் திரு. மணி அவர்களும் நானும், திரைப்பட நடிகை ஒருவரும், மருத்துவர் ஒருவருமாகப் பங்கேற்றோம். நகரத்தில் வாழ்ந்தாலும் அனைவரும் சிற்றூர்புற ஆர்வலராக இருந்தமை மகிழ்ச்சி தந்தது.

காலையில் குடிப்பதற்குக் கேழ்வரகு கூழ் வழங்கினர். நான் ஆர்வத்துடன் ஒரு வெங்காயத்துடன் கேட்டு வாங்கி உண்டேன். அதன்பிறகு கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. நான் சில நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி மகிழ்வூட்டினேன். பொய்க்கால்குதிரை ஆட்டம், மயிலாட்டம், பறையிசை எனச் சென்னை மாநகரைத் துயிலெழுப்பினோம். மாட்டு வண்டி பூட்டப்பெற்று நகர்வலம் வந்தனர். பெண்கள் கோலப்போட்டியில் கலந்துகொண்டனர். இடையில் நண்பர் தளவாய் வந்து அறிமுகம் ஆனார். அவருடன் நெடு நாழிகை உரையாட இயலாமல் பிரிந்தோம்.

பொங்கல் சிறப்பாகப் பொங்கினர். காலையில் பத்துமணிக்கு நிகழ்ச்சிகள் ஓரளவு நிறைவுக்கு வந்தன. அனைவரிடமும் விடைபெற்று, மீண்டும் புத்தகக் கண்காட்சிக்கு வந்தேன். பல அன்பர்களைக் கண்டேன். மாலை 4.30 மணிவரை கண்காட்சியில் இருந்தேன்.

நண்பர் திரு ப.சரவணன் அங்கு வந்தார். அவரின் சில பதிப்பு முயற்சிகளை முன்பே அறிவேன். இருவரும் பெருமழைப்புலவரின் பதிப்பு முயற்சி பற்றி உரையாடத் தொடங்கினோம். ப.சரவணன் அவர்கள் 1998 இல் கொடுக்கூர் ஆறுமுகம் கொலைச்சிந்து என்ற ஆய்வேட்டைப் படியெடுக்க எனக்கு உதவியவர்.முன்பின் அறிமுகம் இல்லாத நான் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை நேரில் கண்டு நன்றி சொன்னேன். திரு.சரவணன் போன்றவர்கள் தமிழில் மிகப்பெரும் பேரறிவு பெற்றதனால் பல்கலைக்கழகத்திற்குள்ளோ, கல்லூரிக்குள்ளோ நுழையமுடியாதபடி நம் பேராசிரியர்கள் பார்த்துக்கொண்டனர்.


தமிழாய்வாளர் ப.சரவணன்

எனவே அவர் படிப்பும் ஆய்வும் பள்ளிக்கூடத்தில் சிறிய மாணவர்களுக்குக் கிடைத்து வருகின்றது என்று அறிந்து வருந்தினேன். இவர்களைப் போன்றவர்களை வெளியே வைத்திருப்பதற்கு உயர்கல்வித்துறை சார்ந்தவர்கள் வெட்கி, நாண வேண்டும். உரையாடல் இன்றையக் கல்வித்துறையின் சீர்கேடு பற்றி அமைந்தது. தரமற்ற ஆசிரியப்பெருமக்கள் கல்வித்துறையில் மலிந்து தமிழைச் சீரழிப்பதை இருவரும் பேசி வருந்தினோம். இன்றைய நிலை நீடித்தால் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குத் தமிழ் வளர்ச்சி என்பதற்கு வாய்ப்பில்லை என்பது புலனானது.

தமிழ் எழுத்துச்சீர்திருத்த முயற்சியினரின் இரண்டகச் செயல்பற்றியும், கிரந்தத்திணிப்பு பற்றியும், கணினி,இணையப் பயன்பாட்டு வளர்ச்சியை வரவேற்காத தமிழக நிலையைப் பற்றியும் பேசி வருந்தி நின்றோம். நேரம் போனதே தெரியவில்லை. கண்காட்சிக்கு வந்த புத்தக ஆர்வலர்கள் எங்களை, உரையாடலைக் கவனிக்காதவர்களாய்க் கையில் சுஜாதாக்களையும்,சாரு நிவேதாக்களையும்,சோதிட, பக்திப் பனுவல்களையும் வாங்கிச்சென்றவண்ணம் இருந்தனர். இடையில் பல அன்பர்கள் தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் எனப் பலரைக் கண்டு உரையாடினேன். பேராசிரியர் ஆறு.அழகப்பன் அவர்களை உணவுக்கூடத்தில் கண்டு வணங்கினேன்.

ஞாயிறு மாலை ஆறு மணிக்கு இரகமத் அறக்கட்டளையின் புத்தக நிறுவனம் திறப்பு விழாவுக்குச் சென்றேன். அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை, கவிப்பேரரசு வைரமுத்து, சிற்பி, அப்துல் இரகுமான், மேத்தா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்வுக்கு ஐயா சிங்கப்பூர் முஸ்தபா அவர்கள் வரும்படி அன்பு அழைப்பு விடுத்திருந்தார். நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடந்தது.பல நண்பர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் என் இணையம் கற்போம் செம்பதிப்பு நூலை அன்புடன் வழங்கி வாழ்த்துப்பெற்றேன். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் அழகிய அணிந்துரை அந்த நூலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இரவு அனைவரிடமும் விடைபெற்று மீண்டும் நள்ளிரவு புதுச்சேரி வந்தேன்.
பிறகு ஒரு கிழமையாகக் கல்லூரிப் பணி. பொங்கலை ஒட்டி என் பிறந்த ஊர் சென்று ஒரு நாள் பொங்கலிட்டு மகிழ எண்ணியுள்ளேன்.
அனைவருக்கும் புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துகள்.

சனி, 8 ஜனவரி, 2011

சென்னையில் பொங்கல் திருவிழா!



தமிழர்களின் தனிப்பெரும் திருநாளாம் பொங்கல் திருவிழா இன்னும் ஒரு கிழமையில் வர உள்ளது.

ஒவ்வொருவரும் தத்தம் இல்லத்தில் பொங்கலிட்டு மகிழ்வர். இந்த நல்ல நாளை நகரத்தில் இருப்பவர்கள் தாங்கள் வாழ்ந்த சிற்றூர்ப்புற நினைவுகளை மறவாமால்
கொண்டாட விரும்புவது உண்டு. நகரத்தில் வாழும் பலர் சிற்றூருக்கு வந்து பொங்கலைக் கொண்டாடித் திரும்புவதும் உண்டு. சென்னை போன்ற பெரு நகரங்களில்
இருக்கும் தமிழன்பர்கள் முன்கூட்டியே பொங்கல் திருவிழாவை முன்னிட்டுச் சிற்றூர்போன்று குறிப்பிட்ட நகரப்பகுதியில் ஒன்றுகூடிப் பொங்கலிட்டு மகிழும் விழாவைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதை அறிவேன்.

இந்த ஆண்டும் அத்தகுப் பெரு விழா சென்னையில் நடைபெறுவதாகவும் வந்து கலந்துகொள்ளும்படியும் நண்பர்கள் வேண்டினர். அவ்வகையில் நாளை(09.01.2011) ஞாயிறு காலை சென்னையில் முகப்பேர் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் நடக்கும் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வான பொங்கல் பற்றியும், தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் பற்றியும் சிறப்புரை நிகழ்த்த உள்ளேன். தமிழ் ஆர்வலர்களும், பண்பாட்டுக் காவலர்களும் கலந்துகொண்டு மகிழ்ச்சியூட்டலாம்.மகிழலாம்.

வியாழன், 6 ஜனவரி, 2011

சென்னை இரகமத் அறக்கட்டளையின் இசுலாமியப் புத்தக நிறுவனம் திறப்பு விழா


அழைப்பிதழ்

சென்னையில் உள்ள இரகமத் அறக்கட்டளையின் சார்பில் இசுலாமியப் புத்தக நிறுவனம் (ISLAMIC BOOK CENTRE ) திறப்பு விழா வரும் ஞாயிறு (09.01.2011) மாலை ஆறு மணிக்குச் சென்னைக் கதீட்ரல் சாலையில் உள்ள சோழா ஓட்டலில் நடைபெறுகின்றது.

பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் புத்தக நிறுவனத்தைச் சந்திரயான் திட்ட இயக்குநர் அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் திறந்து வைக்கின்றார்கள்.

கவிக்கோ அப்துல் இரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, பேராசிரியர் மேத்தா, பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசுகின்றனர்.

வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் அமீது அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றார்.

மௌலவி சா.யூசுப் சித்தீக் மிசுபாகி அவர்கள் நன்றியுரை வழங்குவார்.

புதன், 5 ஜனவரி, 2011

திருக்குறள் திலீபன் வளர்க! வாழ்க!


திருக்குறள் திலீபன்

 இடைவிடாத பணிகளுக்கு இடையே அவ்வப்பொழுது மகிழ்ச்சிச் செய்தி ஏதேனும் காதில் விழுந்து ஊக்கம் தருவது உண்டு. அவ்வகையில் ஓரிரு நாளுக்கு முன்பு செல்பேசியில் ஓர் அழைப்பு வந்து. திருவாளர் ம. தங்கச்சாமியார் பேசினார். காரைக்குடியில் வாழும் அண்ணன் மு.பாரி அவர்கள் அந்த அன்பரை என்னிடம் ஆற்றுப்படுத்தியிருந்தார் என்று அறிந்தேன்.

 திரு.தங்கச்சாமியார் மகன் பெயர் திலீபன் என்றும் பதினொன்றாம் வகுப்பில் படிக்கின்றார் என்றும் அறிந்தேன். கவனகக் கலையில் வல்லவர் என்றும் திருக்குறளின் குறட்பாக்கள் அனைத்தும் மனப்பாடம் என்றும் குறிப்பிட்டார். கி.பி.முதல் நூற்றாண்டு முதல் கி.பி. 10,000 ஆம் ஆண்டு வரை உள்ள எந்த மாதம், ஆண்டு, நாள் குறிப்பிட்டாலும் கிழமையைச் சொல்லும் பேராற்றல் பெற்றவன் என்றும் அறிந்தேன். தன்னையொத்த குழந்தைகளுக்கு இலவசமாக நினைவுக்கலையையும், திருக்குறளையும் பயிற்றுவிக் கின்றாராம். குறள்மணிகள் சிறுவர் நூலகம் அவர் இல்லில் உள்ளது. உலக நாடுகளின் பெயரை ச்சொன்னால் தலைநகரைச் சொல்வார் என்றார். தமிழக அரசு திருக்குறள் முழுமையும் சொன்னால் மாதந்தோறும் 1000 உருவா வழங்கும் திட்டத்தில் திலீபன் நிதியுதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்(பல ஆண்டுகள் ஆகியும் நிதி இன்னும் யாருக்கும் வழங்கப்படவில்லை). அப்படி என்றால் அவர் பற்றிய குறிப்பை உடன் அனுப்பும்படி வேண்டிக்கொண்டேன். அதன்படி இன்று ஒரு குறுவட்டும், செய்திக்குறிப்பும் வந்தன. குறுவட்டை இயக்கிப் பார்த்தேன்.

செயா தொலைக்காட்சியில் திருக்குறள் திலீபனை இயக்குநர் விசு அவர்கள் அறிமுகப்படுத்தியதைக் கண்டு மகிழ்ந்தேன். முன்பே நான் திருக்குறள் பிரதிபா அவர்களின் கவனகக் கலையைக் கண்டு வியந்தவன். அவர்களைப் போல் பிள்ளைகளுக்குத் திருக்குறளை அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்தவன். நான் முன்பு பணி செய்த கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் இருந்த அஞ்சல் அலுவலகத்தில் பணி செய்த இரமேசு என்ற அஞ்சல் அதிகாரி என்னைப் பற்றி அறிந்து ஆரணி அடுத்துள்ள திமிரி என்ற ஊரிலிருந்து ஒரு பள்ளி மாணவியை அழைத்து வந்து என்னிடம் அறிமுகம் செய்தார்.

அந்த மாணவியின் பெயர் தீபா. எட்டாம் வகுப்பு அவர் படித்தார் என்று நினைவு. அவரின் திருக்குறள் ஆர்வத்தை அறிந்து அவர்களை நெறிப்படுத்தி 1330 குறட்பாக்களும் அறிந்தவராக மாற்றினேன். எங்கள் கல்லூரியின் தாளாளரும் மிகச்சிறந்த திருக்குறள் பற்றாளருமாகிய சக்தி ப.அன்பழகன் அவர்களின் கவனத்திற்குத் தீபாவின் திருக்குறள் ஈடுபாட்டைச் சொல்லி அறிமுகப்படுத்தினேன். எங்கள் தாளாளர் அவர்கள் பணப்பையை எடுக்க மறந்தாலும் அவர் வழிப்பயணத்தில் திருக்குறளை மறவாமல் எடுத்துச் செல்வதும், ஓய்வு நேரங்களில் படிப்பதும் நம் போலும் தமிழறிஞர்களிடம் திருக்குறள் பற்றி, வள்ளலார் பாடல் பற்றி உரையாடுவதும் அவர்களின் வழக்கம். எங்கள் தாளாளர் சக்தி ப.அன்பழகன் அவர்கள் பள்ளி மாணவி தீபாவைத் தம் செலவில் கல்லூரியில் உரிய காலத்தில் படிக்க வைக்க விரும்பினார்கள். அவருக்கு ஓர் உயர்பரிசில் உடனடியாக வழங்க நினைத்துத் தம் அறையில் அழகுடன் காட்சி தந்த ஒரு விலை உயர்ந்த கடிகாரத்தைப் பரிசிலாக வழங்கினார்கள். இவ்வாறு திருக்குறள் அறிந்தவர்களைப் போற்றிய எனக்குத் திலீபன் பற்றி செய்தி கிடைத்தால் விடுவேனா?

திருக்குறள் திலீபன் காரைக்குடியில் உள்ள மீ.சு.வி.மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கின்றார். இந்தப் பள்ளி கவியரசு முடியரசனார் உள்ளிட்ட பெருமக்கள் பணிபுரிந்த பெருமைக்குரியது. 97 ஆண்டுகளாகக் கல்விப்பணியாற்றும் இந்தப் பள்ளியில்தான் இயக்குநர் சுப.முத்துராமன் உள்ளிட்டவர்கள் படித்தனர்.


மழலைகளுக்குத் திருக்குறள் பயிற்றுவிக்கும் திருக்குறள் திலீபன்


திருக்குறள் திலீபன்(இன்னொரு தோற்றம்)

அப்பள்ளியில் நன்கு படித்து வரும் திருக்குறள் திலீபன் எதிர்காலத்தில் உயர்படிப்பைத் தொடர உதவுவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகக் கருதுகின்றேன். திருக்குறள் திலீபனின் தந்தையார் திரு.ம.தங்கச்சாமி ஐயா அவர்கள் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிகின்றார். தமிழ்ப்பற்றும்,இனப்பற்றும் கொண்ட பெருமகனாரின் குழந்தை அவர்களின் குடும்பத்திற்கு மட்டும் உரிய குழந்தை என்று கருதிவிட முடியாது. திருக்குறள் திலீபன் உலகத் தமிழரின் சொத்து. அவரைப் போற்றுவதும் பாராட்டுவதும் உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்களின் கடமையாகும். திரைப்பட நடிகைகளை, நடிகர்களையும் பட்டிமன்றப் பேச்சாளர்களையும் அழைத்துத் தமிழ்ச்சங்கம் திறப்புவிழா நடத்தும் தமிழர்கள் தங்கள் செயலை நிறுத்தித் திருக்குறள் திலீபன் போன்ற அறிவுச்செல்வங்களைப் போற்றினால் நம் இனத்தில் இன்னும் பல திலீபன்கள் தோன்றுவார்கள்.

திருக்குறள் திலீபன் பதின்கவனகத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.

அவை: 1.குறள் கவனகம், 2.எண் கவனகம் 3. எழுத்துக் கவனகம் 4. கூட்டல் கவனகம், 5.பெயர்க் கவனகம், 6.ஆண்டுக் கவனகம், 7. மாயக் கட்டம் 8. வண்ணக் கவனகம், 9.தொடு கவனகம், 10.ஒலிக் கவனகம்

திலீபனின் தந்தையார் திரு. தங்கச்சாமியார் மேல் எனக்கு மதிப்பு ஏற்பட்டதற்குக் காரணம் திலீபன் என்னும் அறிவுச்செல்வத்தை வழங்கியது மட்டும் அன்று. திரு.தங்கச்சாமியார் அவர்கள் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் உழைத்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மேல் பெரும் மதிப்புடையவர் என்பதும் ஐயாவுடன் பல காலம் பழகியவர் என்பதும் அறிந்து அவர்மேல் பன்மடங்கு மதிப்பு ஏற்பட்டது.

திருக்குறள் திலீபனைத் தொடர்புகொள்ள:

திருக்குறள் த.திலீபன்,
த / பெ. திரு.ம.தங்கச்சாமி,
4 / 1 நான்காவது வீதி,
முடியரசன் சாலை,
காரைக்குடி-630 001
சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு
மின்னஞ்சல் : dhileebanthangam@gmail.com

செல்பேசி + 91 94865 62716
செல்பேசி + 91 94872 14745

செவ்வாய், 4 ஜனவரி, 2011

செய்யுளாக்கத்தில் தொடை


பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள் உரையாற்றுதல்

 தொல்காப்பியம் செய்யுளுக்குரிய உறுப்புகளாக முப்பத்து நான்கு உறுப்புகளைக் (26+8=34) குறிப்பிடுகின்றது. அவை மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவு, திணை, கைகோள், கூற்று, கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு, வண்ணம், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்பனவாகும். இவற்றுள் ஒன்பதாம் இடத்தில் குறிப்பிடப்படும் தொடைச் சிறப்பை இங்கு எண்ணிப் பார்ப்போம்.

  தொடை என்பது தொடுக்கப்படுவது ஆகும். தொடுக்கப்படும் மாலையைத் தொடையல் என்பது போல் செய்யுளில் அடிகளும், சீர்களும் ஒன்றுடன் ஒன்று பொருத்தமுறத் தொடுப்பது தொடையாகும். காண்போர் கண்ணையும் மனத்தையும் ஈர்த்து வியப்படையப் பூத்தொடுப்போர் பலவகையில் தம் திறன்காட்டிப் பூவைத் தொடுப்பர். அதுபோல் செய்யுளியற்றும் ஆசிரியர்கள் தங்கள் புலமைநலம் வெளிப்படத் தொடையமைப்புகளைத் திறம்படப் பயன்படுத்திச் செய்யுளியற்றிப் படைப்பின்பால் அறிவார்ந்த மக்களை ஈர்ப்புறச் செய்வது உண்டு. எனவே இடத்திற்கு ஏற்பத் தொடையமைப்புகள் இருந்து கற்போர்க்கு இனிமை பயப்பதால் தொடையமைப்பைப் பழந்தமிழ் மக்கள் போற்றியுள்ளனர்.

  செய்யுளின் அழகுக்கு அழகு சேர்த்த தொடைகள் பின்னாளில் வளர்ந்து பல்கி எண்ணிக்கையில் மிகுந்து சலிப்பூட்டும் அளவிற்கு நின்றது. இன்று புதுப்பாக்கள் புறப்படும் காலச்சூழலில் தொடைகளைத் துலங்கச்செய்தல் புலவர்கள் கடமையாக உள்ளது.

  தொல்காப்பியர் தொடை பற்றிக் குறிப்பிடும் இடத்து முதற்கண் நான்கு தொடைகள் நெறிப்பட நிற்பன என்று சிறப்பித்துக் கூறுகின்றார். மற்ற தொடைகளை அடுத்த நிலையில் வைத்து நூற்பா செய்துள்ளது இங்கு எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. மேலும் தொல்காப்பியர் தொடையினது பாகுபாடு பதின்மூவாயிரத்து அறுநூற்றுத் தொண்ணூற்றொன்பது என்று குறிப்பிடுவதும் (செய்யுளியல் 97) இதற்கு உரையாசிரியர்கள் கணக்கிடும் முறைகளும் பழந்தமிழகத்தில் செய்யுள் வல்லாரின் உரையாராய்ச்சியின் தன்மை நம்மை வியப்படையச் செய்கின்றது. செய்யுள் உறுப்புகளில் தொடை விரிவாக ஆராய்ந்து கணக்கிட்டு உரைக்கத் தகுந்த மிகப்பெரிய பிரிவாக உள்ளது. இன்றைய புதிய கணக்கீட்டு முறைகளின் துணைகொண்டு தொடையமைப்பு விரிவாக ஆராய்வதற்கு இடந்தருகின்றது.

  தொடையை முதற்தொடை எனவும் தொடை விகற்பம் எனவும் இரண்டாகப் பகுத்துப் பார்க்கலாம். ஓரடிக்கும் மற்றோர் அடிக்கும் இடையில் உள்ள பொருத்தத்தைக் காட்டுவது முதற்தொடை என்று அழைக்கப்படும். இவ்வாறு அல்லாமல் ஓரடியில் உள்ள சீர்களுக்கு இடையே உள்ள பொருத்தப்பாட்டினைத் தொடை விகற்பம் என்பர்.

  பொதுவாகத் தொடையழகு இன்னோசைக்கும், செய்யுளைச் சிறப்பிக்கவும் இடம்பெறுகின்றது. புலமைநலம் வாய்த்த கவிஞர்களின் செய்யுள்களில் தொடைநயம் நிரம்பக் கிடந்து கற்போருக்கு இன்பம் நல்கும். சங்கச் செய்யுள்களிலும், பக்திப் பனுவல்களிலும், காப்பியங்களிலும் தொடையமைப்புகள் இலக்கியத்துறையின் படிக்கட்டுகளாக உள்ளன. செய்யுள்களைச் சிறக்கச் செய்த தொடை நயம் இன்றும் புகழ்பெற்ற பேச்சாளர்களின் நாவிலும் சிறக்கக் காண்கின்றோம். செய்யுள் சிறப்பிற்குத் தொடை முக்கியப் பங்காற்றுவதால் "தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்" என்ற பழமொழி மக்கள் வழக்கில் உண்டு.

  தொடை என்னும் உறுப்பைப் பற்றித் தொல்காப்பியர் பதினாறு நூற்பாக்களில் பேசியுள்ளதை அறிஞர் சோ.ந. கந்தசாமியார் எடுத்துக்காட்டுவார். (தொல்-பொருள்- இளம்.393-408). தொடையின் வகைகளைத் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். ஆனால் தொடை என்றால் என்ன என்று தொல்காப்பியர் விளக்கவில்லை. தொல்காப்பியத்திற்குப் பிறகு எழுந்த காக்கைபாடினியம் போன்ற நூல்கள் தொடை பற்றி விளக்கியுள்ளன.

  காக்கைபாடினியத்தில்,
 "எழுத்து, சொல், பொருள் என்பனவற்றை ஒருவித ஒழுங்கில் நிறுத்தி அடியோடு அடியிடைத் தொடுக்கப்படும் செய்யுள் உறுப்பே தொடை எனப்படும்" (யா.க,வி.ப.136).

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல் மயேச்சுரர் யாப்பில் " எவ்வகைப்பட்ட பாவிலும் அடியிரண்டு தொடுத்து வழங்குதல் தொடை எனப்படும்" (யா.க.வி.ப.136). என்று கூறப்பட்டுள்ளது.

  நாற்சீர்கொண்ட அடிகளன்றி, இரண்டு முதலான சீர்களைக் கொண்டு வரும் அடிகளில் தொடை வாராதென்பர் தொல்காப்பியர். தொல்காப்பியர் மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, பொழிப்பு, ஒரூஉ, செந்தொடை நிரல்நிறை, இரட்டையாப்பு எனப் பத்துத் தொடைகளை முதற்கண் குறிப்பிட்டு முதலில் உள்ள எட்டிற்கும் சிறப்பிலக்கணம் கூறி, நிரல்நிறையும் இரட்டை யாப்பும் சொல்லதிகார எச்சவியலில் மொழிந்துள்ளார்.

  இங்கு இரட்டை என்பது ஒரு சீர் அடி முழுவதும் வருவதாகும். எ.கா. "ஒக்குமே யக்குமே யக்குமே யக்கும்".

  உரையாசிரியர் மூவரும் "மொழிந்த வற்றியலான் முற்றும்" என்பதற்கு நிரல்நிறையும் இரட்டை யாப்பும் மேல்மொழிந்த மோனை முதலானவற்றின் இலக்கணத்தால் அவற்றுள் அடங்கி முடியவும் பெறும் என்று கூறி நிரல் நிறையையும் இரட்டைத் தொடையையும் நீக்கிவிட்டுத் தொடையை எட்டாகக் கொண்டு அந்த எட்டுடன் தொல்காப்பியர் கூறாத பல தொடைகளையும் கூட்டித் தொடைத்தொகை கொண்டுள்ளதாகப் பேராசிரியர் அடிகளாசிரியர் குறிப்பிடுவர்.

 தொடைவகையை விளக்குமிடத்து உரையாசிரியர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

  பிற்காலத்துப் புலவர்களும் உரையாசிரியர்களும் மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, என்னும் ஐந்தும், அடி, இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என்னும் எட்டுடன் கூடி(5x8=40) நாற்பதாகவும், அந்தாதி, இரட்டை, செந்தொடை என்னும் மூன்றினைப் பெற்று தொடைவிரி நாற்பத்து மூன்றாக வரும் என்று கூறுவதும் உண்டு.

  மோனை, எதுகை, முரண், இயைபு என்ற நான்கு தொடைகளும் தொன்மையான மரபுகளை உடையன. இவை பழைமையான தொடைகளாகக் கருதப்படுகின்றது. இவற்றுள்ளும் மோனையும் எதுகையும் அடிப்படைத் தொடைகளாகும். மேற்கண்ட நான்கு தொடைகளுடன் அளபெடைத் தொடையை ஐந்தாவது தொடையாகக் குறிப்பிடுவர்.

தொல்காப்பியர் காட்டும் தொடைப் பாகுபாடு

அடிகளுக்கு இடையே அமையும் தொடையை அடித்தொடை எனலாம். இவை மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்று குறிப்பிடப்படும்.

"மோனை யெதுகை முரணே யியைபென
நானெறி மரபின தொடைவகை யென்ப" (தொல்.பொருள்.செய்.84)

என்னும் நூற்பாவில் முதன்மைத் தொடையாக நான்கு தொடைகள் குறிப்பிடப்படுகின்றன(4).

"அளபெடை தலைப்பெய வைந்து மாகும்" (தொல்.பொருள்.செய்.85)

என்னும் நூற்பாவில் அளபெடைத்தொடையையும்(5) முதன்மைத் தொடையாக அடுத்துக் காட்டியுள்ளார்.

  பேராசிரியர் முதல் நூற்பாவுரையில் "நானெறி மரபு என்பது நெறிப்பட்ட தொடையிலக்கணம் மோனை எதுகை முரண் இயைபு எனக் கூறப்படுவதாம். எனவே அளபெடைத் தலைப்பெய வைந்துமாகும்" என்றவழி இதுபோலச் சிறந்ததன்று அளபெடைத் தொடை என்பதாம். என்னை? அதுவும் வழுவமைத்துக்கொண்ட எழுத்தாகலான் என்று உரை வரைவர். எனவே மோனை, எதுகை, முரண், இயைபு என்ற நான்கு தொடைகளுக்கு முதலாசிரியர் முதன்மையளித்துள்ளார் என்று கருத இடம் உண்டு. ஒருபுடை ஒப்புமைகருதி அளபெடைத்தொடையை அடுத்த நூற்பாவில் வைத்தனர் போலும்.

மேலும்,

"பொழிப்பு மொரூஉஞ் செந்தொடை மரபும்
அமைந்தவை தெரியி னவையுமா ருளவே" (தொல்.பொருள்.செய்.86)


என்னும் நூற்பாவில் பொழிப்பு, ஒரூஉ, செந்தொடை(6,7,8) என்பனவும் தொடையாகக் குறிப்பிடுவார். இவ்வாறு ஒத்த தன்மையுடைய தொடைகளை (எட்டையும்) முதல்நூலாசிரியர் ஒரே நூற்பாவில் அடக்காமல் தனித்தனி நூற்பாவாக அமைத்துள்ளமைக்குக் காரணம் இவற்றினிடையே நுட்பமான வேறுபாடு உள்ளதைக் காட்டுவதற்கு ஆகும்.

 நிரல்நிறையும், இரட்டைத் தொடையும் முன்புகூறிய தொடைகளுடன் ஒக்கும் என்று கருதிய தொல்காப்பியர் அடுத்த நூற்பாவில் குறிப்பிடுகின்றார்

"நிரனிறுத் தமைத்தலு மிரட்டை யாப்பும்
மொழிந்தவற் றியலான் முற்று மென்ப" (தொல்.பொருள்.செய்.86)

 நிரல் நிறைப் பொருள் வகையால் தொடுக்குந் தொடையும், வந்த சீரே நாற்கால் தொடுக்குங் தொடையும் முன்னைத் தொடைப்பாற்பட்டு அடங்கும் என்கின்றார் பேராசிரியர். அவ்வாறு கூறிய பேராசிரியர்,

"அடலமர் வேனோக்கி நின்முகங் கண்டே
உடலும் மிரிந்தோடு மூழ்மலரும் பார்க்குங்
கடலுங் கனையிருளு மாம்பலும் பாம்புந்
தடமதிய மாமென்று தாம்"

என்னும் பாடலை எடுத்துக்காட்டி உடலுங் கடலுமென நிரல்நிறைத் தொடைமேற் கூறுமாற்றான் எதுகைத் தொடையாய் அடங்கும் என்று எழுதுகின்றார்.

"பரவை மாக்கடல் தொகுதிரை வரவும்
பண்டைச் செய்தி யின்றிவள் வரவும்"

என்னும் தொடரைக் காட்டி என இவ்வாறு நிரனிறுத்தலும் ஒன்று; அஃது இயைபின்பாற்படுமென்ப" என்கின்றார்.

இங்கு ஈரடிகளிலும் ஈற்றில் வரவும் வரவும் என்று வருவதால் இது இயைபாயிற்று.

இரட்டைத்தொடை என்பது ஒரு சொல்லே நான்கு சீராகி வரும் என்பது அஃது. அதனை இரண்டு வாகையாக்கிக் காட்டுகின்றார் பேராசிரியர்.

அவை 1. குறையீற்று இரட்டை 2. நிறையீற்று இரட்டை

குறையீற்று இரட்டை எ.கா. ஒக்குமே ஒக்குமே யக்கும் யக்கும் என வருவது. இதில் ஒக்குமே ஒக்குமே எனவரும் அடியில் ஈற்றுச்சீரில் ஏகாரம் இன்மையின் இது குறையீற்று இரட்டையாகும்.

நிறையீற்று இரட்டை: எ.கா.

"பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ
பாவீற் றிருந்த புலவீர்காள் பாடுகோ"

என்னும் அடியில் நான்குசீரும் குன்றாது வருவது கவனத்திற் கொள்ளத்தக்கது.

1.அடித்தொடை

அடிகளுக்கு இடையே தொடுக்கப்படும் தொடைகளைப் பற்றி முதலில் நோக்குவோம். அடிகளுக்கு இடையே தொடுப்பனவற்றுள் மோனைத்தொடை முதன்மையானதாகும்.

1.மோனைத் தொடை

"அடிதொறுந் தலையெழுத் தொப்பது மோனை" (தொல்.பொருள்.செய்.88)

அடிதோறும் முதலெழுத்து ஒன்றாக வரும்படித் தொடுப்பது மோனைத் தொடாயாகும்.

எ.கா.

"கண்டல் கானற் குருகின மொலிப்பக்
கரையாடு அலவன் அளைவயிற்" (அகம்-260)

எனவும்

"கோதை மார்பிற் கோதை யானுங்
கோதையைப் புணர்ந்தோர் கோதையானும்" (புறம்-48)

எனவும் வரும் தொடர்கள் மோனைத்தொடைக்கு எடுத்துக்காட்டுகளாகும். இதில் அடிதோறும் முதற்சீரின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுக்கப்பட்டுள்ளது.

மோனை எனினும் முதற்றொடை எனினும் ஒன்றாகக் கருதப்பெறும். மோனைத் தொடை 566 என்று பேராசிரியர் எண்ணிக்காட்டுவார். (தொல். பொருள்.). அவர் மேலும் பலவாறு பெருக்கிக் காட்டுவதும் உண்டு. தொல். பொருள். செய்யுள், பக்கம் 371)

2.எதுகைத்தொடை

முதலெழுத்து அளவொத்து இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகைத்தொடை எனப்படும்.

"அஃதொழித் தொன்றி னெதுகை யாகும்" (தொல்.பொருள்.செய்.405)


இந்த எதுகையும் அமைப்பு முறையால் இரண்டாகப் பகுத்துக் காட்டலாம். இவ்வெழுத்துகளில் முதல் இரண்டு எழுத்துகள் ஒத்து வருவது ஒருவகையாகவும், சீர்முழுவதும் ஒத்து வருவது என்று ஒருவகை எதுகை காணப்படுவதும் உண்டு. சீர்முழுவதும் ஒன்றி வருவது தலையாகு எதுகை என்பர். இரண்டாம் எழுத்து மட்டும் ஒன்றி வருவது அடியாகு எதுகை என்பர்.

"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்" (தொல்.அகத்.5)

என்பதில் மாயோன், சேயோன் என நின்று சீர் முழுவதும் ஒத்து வருவதால் தலையாகு எதுகையாக அமைகின்றது.

"அகலிரு விசும்பிற் பாயிருள் பருகி
பகல்கான்று எழுதரு பால்கதிர்ப் பரப்பி"

இரண்டாம் எழுத்து(க) மட்டும் ஒன்றி அடி எதுகையாக நிற்கின்றது.

அடி எதுகையை இடையாகு எதுகை என்பர். ஒழிந்தன கடையாகு எதுகை என்பர்.

மோனைத் தொடை எதுகைத் தொடை இரண்டிற்கும் எடுத்த எழுத்தேயன்றி வருக்க எழுத்து(கிளை எழுத்து) வருதலும் உண்டு. ப, பா, பி, பீ என வருதலும், ற றா என வருதலும் கிளை எழுத்து வருதலுக்குச் சான்று. இவற்றை வருக்க எதுகை என்பது பிற்கால வழக்கு.

இதனை,

"ஆயிரு தொடைக்குங் கிளையெழுத் துரிய" (தொல்.பொருள்.செய்.406) என்னும் நூற்பா வழியும் அதற்குப் பேராசிரியர் வரைந்த உரை வழியும் அறியலாம்.

3.முரண்தொடை

அடிதோறும் சொல்லையும் பொருளையும் மாறுபடத் தொடுப்பது அடிமுரண் என்பர். எனவே முரணைச் சொல்முரண் தொடை, பொருள்முரண் தொடை என இரண்டாகப் பகுக்கலாம்.

"மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே"(தொல்.பொருள்.செய்.407)
இது தொல்காப்பியம்.

சொல்லும் பொருளும் முரணுதல் ஐவகையில் அமையும் என்று பேராசிரியர் காட்டுகின்றார்.

1.சொல்லும் சொல்லும் முரணுதல்
2.பொருளும் பொருளும் முரணுதல்
3.சொல்லும் பொருளும் சொல்லொடு முரணுதல்
4.சொல்லும் பொருளும் பொருளடு முரணுதல்
5.சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளடும் முரணுதல்

என்பன அவையாகும்.

"செவ்வி வாய்த்த செம்பாட்டு ஈரத்து
வெள்ளை வெண்மறி மேய்புலத்தொழிய"

என்னும் தொடரில் செவ்வி,வெள்ளை என்பனவற்றுள் பொருளன்றி சொல்லும் சொல்லும் முரணி நிற்பதை நோக்குக.

"நீரோரன்ன சாயல்
தீயோரன்ன என் உரனவித்தின்றே" (குறுந்தொகை 95)

என்பனவற்றுள் நீர், தீ என்று பொருளும் பொருளும் முரணி நிற்பதை அறியலாம்.

"தண்ணிய லற்ற தயங்கறற் கானத்து
வெந்நீர்ப் பொருள் நசைஇ முன்னிச் சென்றோ"

என்பது சொல்லும் பொருளும் சொல்லொடு முரணியது.

"தீநீர் நஞ்சந் திருமிடற் றொடுக்கிய
உவரி யன்ன உடைப் பெருஞ் செல்வர்"

என்பது சொல்லும் பொருளும் பொருளடு முரணியது.

"செவ்வேற் சேஎய் திருமண மறுத்த
கருவிற் கானவன் வரிலவ நிலரே"

இதில் சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளடும் முரணி நிற்கின்றது.

நோய், மருந்து எனப் பகைப்பொருள் முரணுதலும் கருமை செம்மை என நிறப்பொருள் முரணுதலும் பகல், இரவு எனப் பொழுது முரணுதலும் உண்டு.

எனினும் இளம்பூரணர் சொல்முரன், பொருள் முரண் என்ற இருவகையை மட்டும் பேசுகின்றார்.

4. இயைபுத் தொடை

ஈரடியின் இறுதி எழுத்து, அசை, சீர் ஏதேனும் ஒன்று இயைந்து வருவது இயைபு எனப்படும். எழுத்தடி இயைபு, சொல்லடி இயைபு என்று இதில் இருவகை உண்டு.

"இறுவா யன்ற லியைபின் யாப்பே" (தொல்.பொருள்.செய்.408) என்னும் நூற்பாவால் இதனை அறியலாம்.இந்த நூற்பாவுக்கு உரை வரையும் பேராசிரியர் இரண்டு பாடலடிகளை எடுத்துக்காட்டி இருவகை இயைபை விளக்கியுள்ளார்.

" அவரோ வாரார் கார்வந்தன்றே
கொடிதரு முல்லையுங் கடிதுஅரும் பின்றே" என்பது எழுத்தியைபு

" பரவை மாக்கடற் றொகுதிரை வரவும்
பண்டைச் செய்தி யின்றிவள் வரவும்"

என்பது சொல்லடியியைபு.

5. அளபெடைத் தொடை

அளபெடை என்பது அடிதோறும் முதற்கண் எழுத்துகள் அளபெடுப்பது அளபெடையாகும். அளபெடை இருவகைத்து. 1. உயிரளபெடை 2. ஒற்றளபெடை. உயிரளபெடைக்கு அறிகுறியாக நெடிலையடுத்து இனமான குற்றெழுத்து இடம்பெறும்.

" பாஅ லஞ்செவிப் பணைத்தாள் மாநிரை
மாஅல் யானையடு மறவர் மயங்கி" (கலித்.5)

இது உயிரளபெடைக்கு எடுத்துக்காட்டு.

" கஃஃ றென்னுங் கல்லதர்க் கானிடைச்
சுஃஃ றென்னும் தண்டோட்டுப் பெண்ணை" ( ) என்பது

ஒற்றளபெடையாகும்.

இவை கட்டளையடியடு தொகுக்குங்கால் உயிரளபெடை முந்நூற்று முப்பத்து மூன்றாகும் என்று பேராசிரியர் கணக்கிட்டு உரைப்பர் (பக்கம் 387).


தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியரால் அடிவகை அளபெடையும் சீர்வகை அளபெடையும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.

2. சீர்வகைத்தொடை

1.பொழிப்பெதுகைத் தொடை

பொழிப்பு எதுகை என்பது முதற்சீரும் மூன்றாம் சீரும் ஒன்றிவரத் தொடுப்பது ஆகும்.

"ஒருசீ ரிடையிட் டெதுகை யாயிற்
பொழிப்பென மொழிப புலவ ராறே" (தொல்.பொருள்.செய்.410)
-
------------- ---- ------------- ----

2. ஒரூவெதுகைத்தொடை

"இருசீ ரிடையிடி னொரூஉ வென மொழிப" (தொல்.பொருள்.செய்.411)
இரு சீர் இடையிட்டு எதுகையாயின் பொழிப்பு என்பர். அதாவது முதற்சீரும் நான்காம் சீரும் இரண்டெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது அதனை ஒரூஉ என்பர்.

எ.கா. "உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை" (ஐங்குறு.)

வந்த எழுத்தே வருவது ஒருவது ஒருவகையாகவும், கிளையெழுத்து வருவது ஒருவகையாகவும் கொண்டு ஒரூஉ எதுகை இருவகைப்படும்.

கிளையரூஉ வெதுகை

" சூரலங் கொடுவளி யெடுப்ப வாருற்று"

என்பதனுள் வந்த எழுதே வராமல் அதனை கிளை எழுத்து வந்துள்ளமையால் இது கிளையரூஉ வெதுகை எனப்படும்

ஒரூஉத் தொடை இரண்டாலும் பெற்ற தொடை எண்ணிக்கை ஆயிரத்தெட்டு என்று பேராசிரியர் கணக்கிடுவார்.

3.செந்தொடை

தொடைகள் என்று குறிப்பிட்ட வகையில் அடங்காமல் வரின் அதனை இயற்கைச் சொல்லால் செய்யுள் செய்யும் புலவர் அது செந்தொடை என்பர்.

இதனைத் தொல்காப்பியம்,

"சொல்லிய தொடையடு வேறுபட் டியலிற்
சொல்லியற் புலவரது செந்தொடை யென்ப" (தொல்.பொருள்.செய்.412)
என்று குறிப்பிடுகின்றது.

எ.கா.

"பூத்த வேங்கை வியன்சினை யேறி
மயிலினம் அகவு நாடன்
நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே"

இப்பாடலுள் எத்தகு தொடையமைப்பும் பொதியாமல் இருப்பதால் இதனைப் புலவர் செந்தொடை என்பர்.

தொடை எண்ணிக்கை

தொடைகளின் எண்ணிக்கையைத் தொல்காப்பியர் 13,699 என்று குறிப்பிட்டுவிட்டு, அடுத்த நூற்பாவில் தொடையையும் தொடை விகற்பத்தையும் பெருக்கின் கணக்கில என்று குறிப்பிடுகின்றார்.

"மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே
ஐயீராயிரத் தாறைஞ்ஞூற்றொடு
தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று
ஒன்பஃ தென்ப வுணர்ந்திசி னோரே" (தொல்.பொருள்.செய்.413)

எனவும்,

"தெரிந்தனர் விரிப்பின் வரம்பில பல்கும்"

எனவும் வரும் நூற்பாக்கள் இதனை எடுத்துரைக்ககும்.

முதலில் உள்ள நூற்பாவைப் புரிந்துகொள்ள இந்த விளக்கம் உதவும்.

ஐயீராயிரம் =5x2000= 10,000
ஆறைஞ்ஞூறு = 6x500 = 3000
பத்துக்குறை எழுநூறு = 700-10 690
ஒன்பஃதென்ப = 90
தொண்டு தலையிட்ட = 9

  தொல்காப்பியர் குறிப்பிடும் தொடைகளின் வகைகளும் எண்ணிக்கையையும், அவர் காலத்தில் தமிழ் யாப்பின் வளர்ச்சி நிலையை நமக்குக் காட்டி நிற்கின்றன. தொடை குறித்து உரையாசிரியர்கள் தரும் விளக்கம் அவர்களுக்கு யாப்பில் இருந்த ஆழமான புலமை நலத்தைக் காட்டுகின்றது. இந்த விளக்கங்களை எளிமைப்படுத்தி அட்டவணைகளாகத் தமிழுலகிற்கு வழங்கினால் பண்டைத் தமிழரின் செய்யுள் மாண்பும் கணக்கறிவும் உலகுக்குத் தெளிவாகத் தெரியும்.


மு.இளங்கோவன் உரை


பேராசிரியர் மதுரை சந்திரன், முனைவர் துரை.லோகநாதன், மு.இளங்கோவன்


உற்றுழி உதவிய நூல்கள்:

1.சோ.ந.கந்தசாமி, தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், 1989

2.அடிகளாசிரியர்(ப.ஆ), தொல்காப்பியம் பொருளதிகாரம், செய்யுளியல், தமிழ்ப் பல்கலைக்கழகம், 1985

3.கு.சுந்தரமூர்த்தி,(ப.ஆ),தொல்காப்பியம்,பொருளதிகாரம்- பிற்பகுதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,1985



(செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய தொல்காப்பியச் செய்யுளியலும் செய்யுளாக்க மரபும் என்னும் பொருண்மையிலான கருத்தரங்கில் 04.01.2011 இல் படிக்கப்பெற்ற கட்டுரை.)

சனி, 1 ஜனவரி, 2011

குறுந்தொகையில் இடம்பெறும் ஒருத்தல் எருதா? பன்றியா?


காட்டுப் பன்றி

சங்க இலக்கியத்தில் சில சொற்கள் இடத்திற்கு ஏற்பப் பொருள்கொள்ளும் பாங்கில் உள்ளன. ஓரிடத்தில் ஒரு பொருள் தரும் சொல் பிறிதொரு இடத்தில் பிரிதொரு பொருளைத் தருவது உண்டு. அவ்வகையில் குறுந்தொகையை மொழிபெயர்த்து வரும்பொழுது, ஒருத்தல் என்ற சொல்லை மொழிபெயர்க்க முயன்ற என் நண்பரும் பிரஞ்சுப் பேராசிரியருமான முனைவர் வெங்கடசுப்பராய நாயக்கர் அவர்கள் ஒருத்தல் என்ற சொல்லை எவ்வாறு மொழிபெயர்ப்பது என்று ஓர் ஐயத்தை எழுப்பினார்.

அயல்மொழிக்குத் தமிழ்நூல்கள் செல்லும்பொழுது உரியவாறு செல்ல வேண்டும் என்பதில் விருப்பம்கொண்ட நானும், பேராசிரியரும் குறுந்தொகையில் இடம்பெறும் ஒருத்தல் பற்றி எண்ணிப் பார்த்தோம்.

ஒருத்தல் இடம்பெறும் பாடல் பின்வருமாறு அமைகின்றது.

"உவரி யொருத்த லுழாது மடியப்
புகரி புழுங்கிய புயனீங்கு புறவிற்
கடிதிடி யுருமிற் பாம்புபை யவிய
இடியொடு மயங்கி யினிதுவீழ்ந் தன்றே
வீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர்
கையற வந்த பையுண் மாலைப்
பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்ஞை
தாநீர் நனந்தலை புலம்பக்
கூஉந் தோழி பெரும்பே தையே" (குறுந்தொகை 391)

பொன்மணியார் என்னும் புலவர் இயற்றியது இப்பாடல்.

தலைவனைப் பிரிந்து வருந்திய காலத்தில் தோழியை நோக்கி, "கார்காலம் வந்தது. மயில்கள் கூவின; அவை பேதைமை உடையன போலும்" என்று தலைவி கூறியதாக இப்பாடலுக்கு அறிஞர்கள் துறை விளக்கம் தருகின்றனர்.

உ.வே.சா. தரும் பாடலின் பொருள்: "தோழி எருதானது வெறுத்து, உழாமல் சோம்பிக் கிடக்கும்படி, மான் வெம்மையோடு கிடந்த, மழை நீங்கிய முல்லை நிலத்தில் விரைந்து இடிக்கும் உருமேற்றினால் பாம்புகளின் படம் அழிய இடியோடு கலந்து மழை இனிதாகப் பெய்தது. அங்ஙனம் பெய்த பெரிய மழையொடு பொருந்தித் தலைவரைப் பிரிந்த மகளிர் செயலறும்படி வந்த துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில் மலரையுடைய கொம்பிலிருந்த, போழ்ந்தால் போன்ற கண்களையுடைய மயில்கள் பாய்கின்ற நீரையுடைய அகன்ற இடம் தனித்து வருந்த கூவுகின்றன"

பெரும் பேராசிரியர் உ.வே.சா.அவர்கள் ஒருத்தல் என்பதை எருது என்று பொருள்கொண்டு உரை வரைகின்றார். இதே பாடலுக்கு உரை வரைந்த பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் ஒருத்தல் என்பதற்குப் "பன்றி" என்று பொருள்கொள்கின்றார்.

"பன்றிகள் வெறுத்து நிலத்தைக் கிளைக்காமல் சோம்பிக் கிடப்ப, மான்கள் வெம்மையுற்ற மழை வறந்த முல்லை நிலத்தில் விரைந்து இடிக்கின்ற இடியானே பாம்புகளின் படம் அழியும்படி இடியோடே கலந்து மழை பெய்யா நின்றது."

இருபெரும் அறிஞர்களும் இரு பொருள் கொள்வதால் எதனை ஆள்வது என்று எங்களுக்கு ஐயம் ஏற்பட்டது. இதுகுறித்த இலக்கண இலக்கியங்கள் நிகண்டு நூல்கள் பலவற்றையும் பார்த்தேன்.

பிங்கல நிகண்டில்

"கவரி யானை பன்றி கரடி
யுரிய வாகு மொருத்தற் பெயர்க்கொடை" (பிங்கல நிகண்டு 2563)

என்னும் நூற்பாவில் ஒருத்தல் என்னும் சொல் மேற்கண்ட(கவரிமான், யானை, பன்றி, கரடி) விலங்குகளைக் குறிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எருது பற்றி இடம்பெறாமை கவனத்தில் கொள்ளத்தகும்.

தொல்காப்பியத்தில்

"புல்வாய் புலியுழை மரையே கவரி
சொல்லிய கராமொ டொருத்த லொன்றும்" (தொல்.பொருள்.மரபு.590)

"வார்கோட்டி யானையும் பன்றியு மன்ன" (தொல்.பொருள்.மரபு.590)

"ஏற்புடைத் தென்ப வெருமைக் கண்ணும்" (தொல்.பொருள்.மரபு.590)

வரும் நூற்பாக்களில் ஒருத்தல் என்பது பன்றியைக் குறிக்கின்றது.

குறுந்தொகையில் இடம்பெறும் பாடல் முல்லைநிலப்பாடல் என்பதாலும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் யாவும் தெற்றென விளங்கித் தோன்றுவதாலும் பாடல் உணர்த்தும் சூழலாலும் ஒருத்தல் என்பதற்குப் பெருமழைப் புலவர் கண்ட பன்றி என்ற சொல்லே பொருத்தமாகத் தெரிகின்றது.

ஒருத்தல் என்னும் சொல் குறுந்தொகை 396 ஆம் பாடலில் யானையையும் குறிக்கின்றது. "ஓமை குத்திய உயர்கோட் டொருத்தல்"(396:4)(பொருள்: ஓமை மரத்தைக் குத்திய உயர்ந்த கொம்பையுடைய ஆண் யானை)

இது நிற்க.

குறுந்தொகை 179 ஆம் பாடலில் கடமா என்று ஒரு விலங்கு குறிக்கப்படுகின்றது. அந்த விலங்கு எது?எவ்வாறு இருக்கும்? என்று பிரஞ்சுப் பேராசிரியர் வினா எழுப்பினார்?

"கல்லென் கானத்துக் கடமா வாட்டி,
எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன;
செல்லல்-ஐஇய!-உது எம் ஊரே;
ஓங்கு வரை அடுக்கத்துத் தீம் தேன் கிழித்த
குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப்
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடையதுவே.

(பொருள்: கல்லென்னும் ஆரவாரத்தையுடைய காட்டின்கண் கடமாவை நீ அலைப்பப் பகற்பொழுதும் மங்கியது; நாய்களும் நின்னுடன் வேட்டையாடி இளைப்பை அடைந்தன. எனவே நீ உன் ஊருக்குப் போகற்க; உயர்ந்த மலைப் பக்கத்தில் இனிய தேனிறாலைக் கிழித்த கூட்டமாகிய பசிய மூங்கில்களின் குருத்தைத் தின்ற, ஆழ்ந்த வாயையுடைய பேதைமையுடைய யானை தின்றதனால் கூழையாகிய மூங்கிலையுடைய உச்சியின் இடையே உள்ளதாகிய அஃது எமது ஊராகும். எனவே எம்மூர் அருகில் இருப்பதால் இரவில் தங்கிச் செல்க என்பதாம்)

இது பகலில் வந்து தலைவியுடன் அளவளாவிய தலைவனை நோக்கி, எம் ஊருக்கு வந்து இரவில் தங்கிச் செல்வாயாக என்று தோழி கூறுவதாகத் துறை அமைந்துள்ளது.
குட்டுவன் கண்ணன் என்ற புலவர் இயற்றியது.

இப்பாடலில் மலையும் அதில் உறையும் கருப்பொருளும் உரியவாறு சங்கப் புலவரால் காட்டப்பட்டுள்ளது. குறிஞ்சி நிலத்துக்குரிய ஒழுக்கமும் இங்கு நுண்மையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கடமா என்னும் சொல்லுக்கு ஒருவகை விலங்கு என்றே உரையாசிரியர்கள் குறிப்பு வரைகின்றனர். இருப்பினும் கடமா பற்றி வேறு விளக்கங்கள் தமிழ் நூல்களில் இருக்கின்றனவா? என எண்ணிக்கொண்டிருக்கும்பொழு காட்டுப்பசு என்று இளம் அகவையில் நான் படித்தது நினைவுக்கு வந்தது.

மேலும் பாவாணர் கடம் என்றால் காடு என்று எழுதியதாகவும் நினைவு.வேங்கடம்(திருப்பதி) என்றால் வெப்பம் நிறைந்த காட்டுப்பகுதி என்று பொருள் என்று படித்ததாக நினைவு. எனவே கடம்+ ஆ= காட்டுப்பசு; காட்டுப்பசு என்று குறிக்கலாம் என்றேன். போதிய சான்றில்லாததால் என் கருத்தையும் அழுத்திக்கூறாமல் இருந்தேன். கடமா பற்றித் தொடர்ந்து எண்ணியபடி இருந்தேன். ஆமா என்றால் காட்டுமாடு அல்லது எருது,இது நாவால் தடவினால் சாவு நேரும் என்று கருதப்படுகிறது என்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (முதல் மடலம்,இரண்டாம் பாகம்,ப.109)யின் விளக்கம் கண்டேன்.சிறப்பாக இருந்தது.

"அந்தழைக் காடெலாந் திளைப்ப வாமானினம்" (சீவக சிந்தாமணி,1902) எனவும்,

"ஆமானினந் திரியும் தடஞ்சாரல்" (தணிகை.களவு.333)

எனவும் பிற்கால நூல்களில் ஆமா பதிவாகியுள்ளது.

இணையத்தில் தேடியபொழுது கடமா, காட்டுப்பசு, காட்டா, மரை, கட்டேணி, காட்டுபோத்து என்று பல பெயர்களில் வழங்கப்படுவதை அறிந்தேன்.மேலும் இந்தியா உள்ளிட்ட தென்னாசிய நாடுகளில் இந்தக் காட்டுப்பசு இனம் இருப்பதையும் அதன் உருவத்தையும் விலங்கினப் பெயரையும் அறிந்து மகிழ்ந்தேன்.



தமிழ் விக்கிப்பீடியாவில் கடமா பற்றி சுவையான செய்திகள் கீழ்வருமாறு காணப்படுகின்றன.

"கடமா ஒரு பகல் விலங்காகும். இது காலை மற்றும் மாலை நேரங்களில் மிகவும் சுறுடசுறுப்புடன் இரை தேடும். பெரும்பாலான அதிக வெட்பமான மதிய நேரங்களை மரநிழல்களில் கழிக்கும். தற்சமயம இவ்விலங்கு வாழும் காடுகளில் மனிதர்களால் ஏற்படும் தொல்லைகளைத் தவிர்ப்பதற்கு இரவு நேரங்களில் இரை தேடுகின்றது. இவற்றின் இருப்பிற்கு நீர் மிகவும் அவசியமானதாக இருந்தாலும் நீர் எருமைகளை போல இவை நீரில் புரளுவதில்லை. கடமா மந்தைகள் 2 முதல் அதிகபட்சமாக 40 நபர்களைக் கொண்டதாக இருக்கும். ஒரு மந்தையை வயதான ஆண் தலைமையேற்று நடத்திச் செல்லும். மந்தையின் ஒரு நபர் எச்சரிப்பு ஒலி எழுப்பினால் அனைத்தும் கனப்பொழுதில் காட்டிற்குள் ஓடி மறைந்துவிடும்.

இனப்பெருக்க காலத்தில் எருதுகள் மந்தைகளில் இருந்து விலகித் தனித்துப் புணர்வதற்காகப் பசுக்களைத் தேடிச்செல்லும். பெரும்பாலும் பெரிய உடலைக் கொண்ட எருதையே பசுக்கள் இனப்பெருக்கம் செய்யத் தேர்ந்தெடுக்கும். புணரும் போது எருதுகள் தனித்துவமான ஒலியெழுப்பும், அவ்வொலி சுமார் 1.6 கி.மீ சுற்றளவு கேட்டக்கூடியதாக இருக்கும்.

இவை புல், செடிகள் மற்றும் பழங்களை உணவாக உட்கொள்ளும். இவற்றின் இயற்கை எதிரிகள் புலி, சிறுத்தை, செந்நாய் போன்ற கொன்றுண்ணிகள் ஆகும்."

எனவே கடமா என்றால் காட்டுப்பசு என்று பேராசிரியர் மொழிபெயர்க்கலாம் என்று குறிப்பிட்டேன்.