ஆய்வரங்கில் உரையாற்றும் நான்
பழங்காலத் தமிழர்களின் வாழ்க்கையை எடுத்துரைப்பதில் சங்க நூல்கள் முதன்மை பெறுகின்றன.தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, இரட்டைக் காப்பியங்கள் தமிழ்மொழியையும் பழந்தமிழக மக்கள் வாழ்க்கையையும் படம்பிடிக்கின்றன. பண்டைக் காலத்தில் எண்ணாகவும் எழுத்தாகவும் இருந்த தமிழர்களின் அறிவுக்கருவூலம் யாவும் எழுதி வைத்துப் படிக்கப்பெற்றன என்பதிலும் வாய்மொழியாக அடுத்த தலைமுறைக்குப் பரவின என்னும் கருத்து அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
சங்க நூல்கள் செவ்வியல் தன்மையுடயனவாக இருப்பினும் அவற்றில் வாய்மொழி மரபுகள் பல காணப்படுகின்றன.அறிஞர் க.கைலாசபதி அவர்கள் தம் தமிழ் வீரநிலைக்கவிதை (TAMIL HEROIC POETRY) என்னும் முனைவர் பட்ட ஆய்வில் இதனை மிகச் சிறப்பாகத் தக்க சான்றுகளுடன் ஆராய்ந்துள்ளார். அவர்களின் ஆய்வை அடியொற்றிச் சங்க நூல்களில் காணப்படும் வாய்மொழிப் பாடல்களின் தாக்கம் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.
செவ்வியல் படைப்புகள் வாய்மொழிப்படைப்புகள் வேறுபாடு
படைப்புகள் என்பவை படித்தவுடன் விளங்குவதும் உண்டு. ஆழ்ந்து எண்ணி, எண்ணி, உணரக்கூடியதும் உண்டு. வாய்மொழி மரபு என்பது படித்தவுடன், கேட்டவுடன், பார்த்தவுடன் விளங்குவது ஆகும். செவ்வியல் மரபு என்பது எண்ணிப்பார்க்குந்தோறும் புதுப்புது பொருள் விளைப்பது ஆகும். அறிதோறும் அறியாமை என்பது போல் இருக்கும்.அன்றன்றும் புதுமையாக இருக்கும்.
செவ்வியல் படைப்புகளைப் பலாப்பழம் என்று உவமை காட்டலாம். பலாவைச் சுவைக்க முயற்சி தேவை. பழத்தைப் பூரி (வகுந்து) எடுக்கவேண்டும். தேவையற்ற பகுதிகளை நீக்க வேண்டும். அதன் பிறகு சுவைக்க வேண்டும். வாய்மொழிப் படைப்பைக் கொடிமுந்திரி (திராட்சை) எனலாம். சுவைக்க எந்த முயற்சியும் தேவையில்லை.எடுத்து உடன் சுவைக்கலாம்.
படித்தவுடன் விளங்குவதால், கேட்பதால் புரிவதால் வாய்மொழி மரபுகளை-படைப்புகளை எளிய படைப்பு என்று நினைக்க வேண்டாம்.இதில் கற்பனையிருக்கும். அறிவுச் செழுமை வெளிப்பட்டு நிற்கும். பழைமை காட்சி தரும்.புதுமை பொலிவு காட்டும். அதுபோல் செவ்வியல் மரபு என்பது பன்னெடுங்கால அறிவுத் தொடர்ச்சியைக் கொண்டிருக்கும். இத்தகு செவ்வியல் மரபுகள் வாய்மொழி மரபுகளின் செழுமை வடிவமாகக் கொள்ளலாம்.
நாட்டுப்புற மக்களின் படைப்புகள் கால ஓட்டத்தில் செவ்வியல் தன்மையுடையனவாக மலர்ச்சி பெறுவது உண்டு. மிகச்சிறந்த செவ்வியல் படைப்பாளிகளாக இருந்தாலும் பழந்தமிழ் மரபுகளை உள்வாங்கியே சிறந்த படைப்புகளை உருவாக்கியுள்ளனர். இதனைச் சங்க இலக்கியம் முதல் பாரதியார் காலம் வரை அறியமுடிகின்றது. குறுந்தொகையில் இடம்பெறும் "அகவன் மகளே அகவன் மகளே"என்பது பழங்காலத்தில் இருந்த கட்டுவிச்சிப் பாடலின் சாயல் எனலாம். சிலம்பில் இடம்பெறும் குரவைப்பாடல்கள், ஆய்ச்சியர் பாடல்கள் என்பவை அக்கால மலையுறை, காடுறை மக்களின் பாடலாக நமக்குப் புலப்படுகின்றன. இவற்றில் இடம்பெறும் சொற்கள், நிகழ்வுகள் யாவும் வாய்மொழி மரபுகளுக்கு உரிய தன்மைகளைக் கொண்டு விளங்குகின்றன.
எனவே படைப்புகளை நுகரும்பொழுது அவற்றை ஆழ்ந்து, நுணுகி நோக்கித் தன் கற்பனையைக் கொண்டு, சிந்தனையின் துணையுடன் படைப்பை அணுகிப் பார்த்து அதன் அழகினை உணர்வது செவ்வியல் தன்மையாக வரையறை செய்யலாம். படைப்பைக் கேட்டவுடன் பார்த்தவுடன் புலப்பட்டுத் தெற்றென விளங்குவது நாட்டுப்புற மரபு அல்லது வாய்மொழி மரபு எனலாம்.
தொல்காப்பியர் எட்டுவகை வனப்புகளைக் குறிப்பிடும் இடத்தில்,
"சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்
புலன் என மொழிப புலனுணர்ந்தோரே"(தொல்.செய்.241)
என்று புலன் பற்றி பாடியுள்ளமை நாட்டுப்புற மரபு அல்லது வாய்மொழி மரபு அறிய உதவும்.
இவ்வடிப்படையில் சங்க இலக்கியங்களை ஆழ்ந்து பார்த்துச் சிந்தித்துக், கற்பனையால் நிகழ்வுகளை மனக்கண்ணில் காண்பது வழக்கமாக உள்ளது. இவ்வாறு செவ்வியல் பண்புகளைப் பெற்ற சங்க இலக்கிய உருவாக்கம் என்பது எளிய நிலை மக்களின் வாழ்க்கையில் தோன்றிய பாடல்கள், கதைகள், மரபுகள், நடப்புகளை உள்வாங்கிக்கொண்டு உருவாகியுள்ளது. அதற்குரிய சான்றுகளைச் சங்க இலக்கியப்பரப்பில் திளைக்கும்பொழுது உணரமுடிகின்றது.
எனவேதான் சங்க இலக்கியப் புலவர்கள் அகச்செய்தியைப் பாடினால்கூடப் புறப்பொருள் சார்ந்த வரலாற்றை நினைவு கூர்கிறார்கள். புறப்பொருளைப் பாடினால் அகச்செய்தியை இணைத்துப் பாடுகிறார்கள். இவற்றை வெளிப்படுத்தும் பொழுது அந்த அந்த நிலத்தின் மக்கள் வாழ்க்கை முறைகளைப் பாடுகிறார்கள். அரசர்களைப் போற்றிப்பாடும் சூழலிலும் அந்த அந்த நிலத்து வாழும் எளிய நிலை மக்களின் மரபுகளைப் புலவர்கள் பாடியுள்ளனர்.
எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறு,நற்றிணை,குறுந்தொகை இவற்றில் செவ்வியல் தன்மை மிகுந்து காணப்படுகின்றன.மற்ற நூல்களில் வாய்மொழி மரபுகள் மிகுந்து காணப்படுகின்றன.
ஒரு வீரனைப் புகழ்ந்து பாடினால் அவனின் வீரம் மிகுத்துப் பேசும்பொழுது அவனைச்சார்ந்து புராண உருவாக்கமும், நாட்டுப்புறப்பண்பாடும் இயல்பாகவே உருவாகின்றன. அதுபோல் ஒரு தலைவியின் அழகினை மிகுத்துப் பேசும்பொழுதோ, அவளின் தனிமைத் துயரினைக் காட்சிப்படுத்தும் பொழுதோ சமூகச்சடங்குகள், நம்பிக்ககள், வழிபாடு, கடவுள்,இசை சார்ந்த செய்திகள் பதிவாகின்றன.
சங்க நூல்களில் இடம்பெறும் செய்திகளைக் கொண்டு அவற்றைச் சங்க நூல் என்பதிலும் பாண்பாட்டு எனவும் அரசவைப்பாட்டு எனவும் அழைப்பதைப் பொருத்தமெனக் கைலாசபதி குறிப்பிடுகின்றார் (பக்.10).காரணம் தெரிந்தோ, தெரியாமலோ அரசவையுடன் தொடர்புடையனவாகப் பல பாடல்கள் உள்ளன.அக்காலத்தில் பாடுதுறை வல்லுநராக இருந்த பாணர்கள் இந்தப் பாடல்களைப் பாடிப் பரவியதாலும், பெரும்பான்மையான பாடல்களில் பாணர், பொருநர், கூத்தர் என்னும் பாண்மரபினர் சிறப்பிக்கப்படுவதாலும் இப்பெயர் பொருத்தமாகிறது.
பாணர்கள் என்பவர்கள் எப்பொழுதும் அரசவையைச் சார்ந்தவர்களாகவே இருந்துள்ளனர். வீரநிலைக் காலத்தில் பாட்டுக்கலை என்பது தொழில்முறைப் பாணர்களின் வாய்மொழிகளாகவே இருந்துள்ளன. வாய்மொழிப்பாடல் புனைபவர்கள் எளிதாகப் பாடல் பாடச் சில வாய்பாடுகளை மொழியில் கொண்டுள்ளனர். இந்த வாய்பாடுகள் யாவும் வாய்மொழி இலக்கியங்களில் பொருந்திக்கிடக்கின்றன.
வாய்மொழிப்பாடல்களை ஆராயும்பொழுது இதனைக் கல்வியறிவில்லா மக்கள் இயற்றியிருப்பினும் அதிலும் அழகிய இலக்கண அமைப்புகளைக் காணமுடிகின்றது.
மோனை, எதுகை, இயைபு, அந்தாதி, உவமை, உருவகம், புராணச் செய்திகளைக் காணமுடிகின்றது.
பாடலடிகள் திரும்ப வரும் உத்திகள் வாய்மொழிப் பாடல்களில் மிகுதி.ஒருபொருள் மேல் பலவடுக்கும் உத்திகள் உண்டு. சொற்கள் யாவும் மக்களிடம் நன்கு அறிமுகமானவைகளாக இருக்கும்.மக்களின் உணர்வுகளைத் தொடும் வண்ணம் பாடலின் உட்பொருள் இருக்கும். இசையுடன் பாடுவதற்கு இயைய அமைந்திருக்கும். மக்களுக்கு அறிமுகமான செய்திகள் இருக்கும். (தொடக்கத்தில் திரைப்படம் வந்தபொழுது ஊமைப்படமாக இருந்தபொழுது மக்களுக்கு அறிமுகமான பாரத, இராமாயணக்கதைகள் இடம்பெற்றன. அக்கதை மக்களுக்கு நன்கு அறிமுகமானதால் படத்தைப் புரிந்துகொள்ள முடியும். இதுபோல் மக்களுக்கு அறிமுகமான இசை, கதையாக இருந்தால் படைப்புகள் எளிதில் சென்று சேரும் என நினைத்த புலவர்கள் மக்கள் வடிவங்களைத் தம் புலமை நயம் வெளிப்பட படைப்புகளாக உருவாக்கினர்.)
தொல்காப்பியத்தில் பல இடங்களில் வாய்மொழி மரபுகளுக்கு முதன்மையளிக்கப் பட்டுள்ளன. "கண்படை கண்ணிய கண்படை நிலையும்" (தொல்.பொருள்.புற.29)என்ற நூற்பாவடி அரசர்கள் உறங்குவதற்கு முன்பாகப் பாடல் இசைத்தமையை நினைவூட்டுகிறது.
யாப்பு வகைகளைத் தொல்காப்பியர் குறிப்பிடும்பொழுது ஏழு வகையான யாப்புகளைக் குறிப்பிடுகின்றார்.
"பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல்லொடு அவ்வேழ் நிலத்தும்(தொல்.செய்.79)
என்னும் இடத்தில் எழுவகை யாப்புகளைக் குறிப்பிடுகின்றார்.மேலும் அடிவரையறை இல்லாத வகைகள் என்று,
"அவைதாம்
நூலினான உரையினான
நொடியொடு புணர்ந்த பிசியினான
ஏது நுதலிய முதுமொழியான
மறைமொழி கிளந்த மந்திரத்தான
கூற்றிடை வைத்த குறிப்பினான" (தொல்.செய்.165)
என்று பாடியுள்ளார்.
மேற்கண்ட நூற்பாவில் விடுகதை (பிசி என்றும்), பழமொழி (முதுமொழி என்றும்) நாடோடிக் கதைகள்(உரை என்றும்), அக்கால மக்களின் வாழ்வுச் சடங்குகளில் இருந்த பெரு வழக்கான மந்திரம், குறிப்புமொழி முதலிய செய்திகளையும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. பொருளதிகாரத்தில் குரவைக்கூத்து, அமலைக்கூத்து, வள்ளிக்கூத்து, வேலன் வெறியாட்டு, நடுகல் வழிபாடு போன்ற பலவகையான சடங்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றின் வழியாக அக்காலத்தில் பாடப்பெற்ற பாடல்கள் பற்றியும் உய்த்துணர வாய்ப்புகள் உள்ளன.
பண்ணத்தி என்று வாய்மொழியாகப் பாடப்பெறும் பாடல் பற்றியும் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். பண்ணத்தி என்பது கற்பனைகள் நிறந்தது எனவும் வாய்மொழியாக வழங்குவது எனவும் பொருள் கொள்ளலாம். பண்ணத்தி வடிவத்திற்குப் பேராசிரியர் சில பாடல் வடிவங்களையும் சான்றாகக் காட்டியுள்ளார்.
1.பாட்டுமடை(கூத்துகளின் பொழுது பாடப்படுவது)
2.வஞ்சிப்பாடல்(ஓடப்பாடல்)
3.மோதிரப்பாட்டு(நாடக நூல் வகை)
4.கடகண்டு(பழைய நாடக நூல்)
இவற்றின் வழியாகப் பழங்காலத்தில் வாய்மொழி மரபுகள் செழித்திருந்தன என்ற முடிவுக்கு வர இயலுகின்றது.
மேலும்"அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்"(தொல்.எழுத்து.33) என்னும் நூற்பாவின் துணைகொண்டு அக்காலத்தில் செழித்திருந்த பாடல்களையும், இசை இலக்கண நூல்களையும் உய்த்துணரமுடிகின்றது. இத்தகு இசைமரபுப் பின்புலத்தில் படைக்கப்பெற்ற சங்க இலக்கியத்தில் அக்காலத்தில் நிலவிய வாய்மொழி மரபுகள் உரிய இடங்களில் பதிவாகிக் கிடக்கின்றன.
சங்கப்பாடல்கள் உள்ளிட்ட மரபுப் பாடல்களைப் பாடி விளக்குவதுதான் அண்மைக்காலம் வரை இருந்தது. ஆனால் இன்று முற்றாகப் பாடிப் பயிற்றும் மரபு இல்லாமல் போனது. தமிழின் பாடல்களான திருக்குறள் உள்ளிட்ட சங்கப் பாடல்களை மலையாள மொழி பேசுவோர் மொழிபெயர்ப்பையும் இன்று பாடி நடத்தும் மரபு இங்குச் சிந்திக்கத்தக்கது.
வாய்மொழிப் பாடல்களைப் பாடத் தொடங்கும்பொழுது தொடக்கம் ஒரே மாதிரியாக இருப்பது உண்டு.விளித்தல் மரபை மிகுதியும் காணலாம்.
1."இராசாத்தி உன்னை எண்ணி இராப் பகலா கண் விழிச்சன்"
2."காக்கா குருவிகளா கருணனோட தோழர்களா"
3."ஆத்துக்குள்ள அஞ்சரளி தன்னானே போடு தில்லேலே போடு
அல்லி மலர்க்கொடியே"
4."சீரகம் பாத்தி கட்டி செடிக்குச் செடி குஞ்சம் கட்டி
சீமானார் பெத்த மவ அன்னபொண்ணு நடையே! "
5."கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மா தாயே!"
உள்ளிட்ட மக்களுக்கு அறிமுகமான நாட்டுப்புறப் பாடல்களைச் சான்றாகச் சுட்டலாம்.
கிரேக்க வாய்மொழிப் பாடல்களை,ஸ்லேவோனிய வீரநிலைப் பாடல்களை ஆராய்ந்த "பரி"(M.Parry,Whole Formulaic Verses in Greek and South Slavic Heroic Song,1933) பாடல்களின் தொடக்கம், முடிவு பற்றி எழுதியுள்ளார். குறிப்பிட்ட தொடக்கம், குறிப்பிட்ட முடிவுகள் இருப்பதை உணர்ந்தார். அதுபோல் தமிழ்ச்சங்கப் பாடல்களைப் பார்க்கும்பொழுது பாடல்களின் தொடக்கம், முடிவுப் பகுதிகள் சில வாய்பாடுகளுக்கு உட்பட்டு பாடப்பட்டுள்ளன என்கின்றார் கைலாசபதி அவர்கள்.நம் நாட்டுப்புறப் பாடல்களில் விளித்தல் மரபு காணப்படுவதை முன்பே கண்டோம்.
அதுபோல் எட்டுத்தொகை நூல்களில் இடம்பெறும் பல பாடலடிகளின் தொடக்கம் பழந்தமிழ்ப் பாடல்கள் விளித்தல் மரபைக் கொண்டிருந்தன என்பதற்குச் சான்றாக விளங்குகின்றன. இதனைக் கைலாசபதி மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார்.
"அன்னாய் வாழி வேண்டன்னை"(அகம் 48:1),"அம்ம வாழி தோழி"(ஐங்குறு.31)
என்னும் தொடக்கத்தன இதற்குச் சான்றாகும்.
பாடலின் முடிவு குறித்தும் ஒரு வாய்பாடு உண்டு.சங்க இலக்கியத்தில் பல இடங்களில் இந்த முடிவுகள் காணப்படுகின்றன.
"பஃறுளி மணலினும் பலவே!"
"காவிரி எக்கரிட்ட மணலினும் பலவே"
"நாடு கிழவோயே!"
"மலைகிழவோயே!"
என்பன யாவும் முடிவை ஒரு வாய்பாட்டுக்குள் அமைத்துப் பண்டைக்காலப் புலவர்கள் பாடியுள்ளனர் என்பது விளங்கும்.
சங்க இலக்கியத்தில் வீரனைப் புகழும்பொழுது இன்னோன் வழியில் வந்தவன் என்று குறிப்பிடுவது உண்டு."மருக"என்று விளிப்பது உண்டு.இத்தகு விளித்தல் முன்னோரின் சிறப்பு கூறுவது ஆகும்.
"பிழையா வள்ளன்மை மிக்க கௌரியர் வழித்தோன்றல்"
"அஞ்சு தகு படையின் செம்பியன் வழித்தோன்றல்"
என்று வரும் இடங்களில் முன்னோரின் சிறப்பு நினைவு கூரப்படுகின்றன.
இதுபோல் மரபுகூறும் முறை நாட்டுப்புறப் பாடல்களிலும் காணப்படுகின்றது.
"விருத்தா சலத்திலேயும் வீம குலத்திலேயும்
விசயா வயித்திலேயும் எங்கள் அம்மாவே
வேதனைக்குப் பெண்பொறந்தேன் பெத்த மாதாவே"
என்று குலம் பேசப்படுகிறது.
சங்க இலக்கியத்தில் அடைமொழிகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.இவை வாய்மொழி மரபில் மிகுதியாக இருப்பதுபோல் உள்ளன. வாய்மொழிப் பாடல்களில் ஓசைக்கும், இசைக்குமாக அடைமொழிகளைக் கலைஞர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
"பச்ச உருள மஞ்ச பத்தன்கட கொத்துமஞ்ச"
"காஞ்ச உருள மஞ்ச கன்னான்கட கொத்துமஞ்ச"
"கருப்பு நல்லா எம்மா இரயிலு வண்டி"
என்பன போன்ற பல அடைமொழிகளை நாட்டுப்புறப் பாடல்களில் காணமுடிகின்றன. அதுபோல் சங்க நூல்களில் பல இடங்களில் காணலாம்.
"கல்லா வன்பறழ்"
"கல்லாநீள்மொழி"
"கல்லா இளைஞர்"
"வெண்கோட்டு யானை"
"வெண்டலைப்புணரி"
என்று வரும் சங்க இலக்கியத் தொடர்கள் அடைமொழிகளாக அமைந்து சங்க நூல்கள் வாய்மொழியாகப் பாடப்பட்டன என்பதை உணர்த்தி நிற்கின்றன.
சங்க இலக்கியம்,காப்பியங்கள், தேவாரம், சிற்றிலக்கியம் உள்ளிட்ட பாடல்கள் யாவும் பாடும் மரபில் இருந்தவை. குருகுல கல்வி காலம் வரை இசையுடன் இருந்த தமிழ் இலக்கியங்கள் பின்னாளில் அனைவரும் பட்டப்படிப்புக்குப் படிக்கும் நிலைக்கு வந்த பிறகு படிப்படியே பாடும் நிலையை இழைந்துவிட்டது. அதன் பிறகு யாரேனும் பாடி நடத்தினால் வியப்புடன் நோக்கும் நிலை தமிழகத்தில் உருவாகிவிட்டது.
பின்னாளில் பாடல்களைப் பாடுபவர்கள் இல்லாமல் போனதால் சங்க இலக்கியங்கள் வாய்மொழியாகப் பாடப்பட்டது என்று நிறுவ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
பா என்றால் பரந்துபட்டு செல்லல்வதோர் ஓசை என்பர் உரையாசிரியர்கள்.
வாய்மொழிப்பாடல்களில் கூறியது கூறல் இடம்பெறுவது இயல்பாக இருக்கும். எழுத்து,அசை, சீர், அடி யாவும் கூறியது கூறலாகப் பல இடங்களில் இடம்பெறும்.அதுபோல் ஒரு பொருள்மேல் அடுக்கி வருவதும் இயல்பே.
"அணைஞ்சிருந்து பால் கறக்க அணகயிறும் பொன்னால
சாய்ஞ்சிருந்து மோர்கடைய சாருமோட பொன்னால"
என்று நல்ல தங்காள் கதைப்பாடலில் இடம்பெறும் வரிகளில் எழுத்துகள்,சீர்கள் அடிக்கடி இடம்பெறுவதைக் காணலாம்.
"சின்னச் சம்பா நாத்தெடுத்து ஏலேலங்கடி ஏலோ நீங்க
சேர்ந்து நல்லா நடுங்கடியோ ஏலேலங்கடி ஏலோ"
"குண்டு சம்பா நாத்தெடுத்து ஏலேலங்கடி ஏலோ நீங்க
குனிஞ்சு நல்லா நடுங்கடியோ ஏலேலங்கடி ஏலோ"
"அழகுச் சம்பா நாத்தெடுத்து ஏலேலங்கடி ஏலோ நீங்க
அடுக்கி நல்லா நடுங்கடியோ ஏலேலங்கடி ஏலோ"
என்று வரும் நாட்டுப்புறப் பாட்டடியில் ஒருபொருள்மேல் மூன்றடுக்கி நிற்கும் மரபைக் காண்கிறோம்.
‘ஓராம் கரகம் எடுத்துகிட்ட கன்னியா
ஓரூரு மோளங்கள் கொட்டிகிட்ட கன்னியா
கொட்டி முழக்கிகிட்டு போரகன்னி யாரோடி
நான்தாண்டி கன்னி வழியோட போறவ
வழியோட போறியா வனம்பாக்க போறியா
வாடுற பொண்ணுக்காக வாதாட போறியா
வாதாட போறியா சூதாட போறியா
சீர்காழி அம்மானோட தெண்டனிட போறியா....
இரண்டாம் கரகம் எடுத்துகிட்ட கன்னியா
இரண்டூரு மோளங்கள் கொட்டிகிட்ட கன்னியா
கொட்டி முழக்கிகிட்டி போர கன்னி யாரோடி...’
என்று வரும் வாய்மொழிப் பாடலில் அடியும், சீரும் அடிக்கடி பாடலில் இடம்பெறுவதைக் காண்கிறோம். இதே அமைப்பைச் சங்க நூல்களில் பல இடங்களில் காணமுடிகின்றது. இசைக்கு முதன்மை தரும் கலிப்பாவில் இத்தகு அமைப்பு மேம்பட்டு நிற்பதைக் காணமுடிகிறது.
"அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்
கடியவே கனங்குழாய் காடென்றார் அக்காட்டுள்
துடியடி கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறுஎனவும் உரைத்தனரே
இன்பத்தின் இகந்து ஒரீஇ,இலை தீந்த உலவையால்
துன்புறூஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள்
அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
மென்சிறகால் ஆற்றும் புறவுஎனவும் உரைத்தனரே
கல்மிசை வேய் வாடக் கனைகதிர் தெறுதலான்
துன்னரூஉம் தகையவே காடு என்றார் அக் காட்டுள்
இன் நிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
தன்நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை எனவும் உரைத்தனரே"(கலித்தொகை, 11)
எனவும் வரும் பாடலடிகள் இசையுடன் வாய்மொழியாகச் சங்கநூல்கள் பாடப்பட்டமைக்கு அரிய சான்றாக விளங்குகின்றன.
வாய்மொழிப்பாடல் என்பது ஒரு பாடலில் இடம்பெறும் சொல்,தொடர் அதே மாதிரியாக வேறுபாடலில் இருக்கும். குறிப்பாகத் தாலாட்டில் வரும் தொடர் வேறொரு ஒப்பாரிப்பாடலில் இடம்பெறுவது உண்டு.சில நேரங்களில் வருணனைகள் ஒன்றாக இடம்பெறுவதும் உண்டு,
அதுபோல் சங்க இலக்கியங்களில் ஒரு இடத்தில் இடம்பெறும் சில தொடர்கள் அதே செறிவுடன் வேறு இடங்களில் இடம்பெறுவது உண்டு. பாடல்களைப் பிற பாடல்களுடன் ஒப்பிடுவது வாய்மொழிப் பாடலின் மரபாகும். அதே தன்மையில் பல இடங்களில் ஒப்பிட்டு நோக்கும் தன்மையில் சங்க இலக்கிய அடிகள் உள்ளன. உ.வே.சா.வின் சங்க இலக்கியப் பதிப்புகளின் துணையுடன் இவ் ஒப்பீட்டு இடங்களை அறியலாம்.
அறிஞர் கைலாசபதி அவர்கள் இந்தக் கூற்றை மெய்ப்பிக்க முல்லைப்பாட்டு நூலின் முதல் 31 பாடலடிகளை எடுத்துக்காட்டி இதில் இடம்பெறும் பல சொற்கள் தொடர்கள் சங்க இலக்கியத்தின் பல இடங்களில் இடம்பெறுவதைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றார். 31 பாடலடிகளில் 33 இடங்களில் கூறியது கூறல் பண்பு இருப்பதை எடுத்துக்காட்டுகிறார். குறிப்பாக நனந்தலை யுலகம், வலம்புரி பொறித்த, தடக்கை, நீர்செல நிமிர்ந்த மாஅல்போல, பாடிமிழ் பனிக்கடல், வலனேர்பு, கொடுஞ்செல வெழிலி, பெரும்பெயல் பொழிந்த, சிறுபுன் மாலை, அருங்கடிமூதூர், இனவண்டார்ப்ப, நறுவீ முல்லை, அரும்பவிழ் அலரி, எனவரும் பாடலடிகள் சங்க நூல்களில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளதைச் சங்க நூல் பயிற்சியுடையார் யாவரும் அறியலாம்.
சிலப்பதிகாரம் இசையுடனும்,பிற கலையுடனும் நெருங்கியத் தொடர்புடைய நூலாகும். சிலப்பதிகாரம் நாடகக்காப்பியம் என்பதும் முத்தமிழ்க் காப்பியம் என்பதும் பண்டைக் காலத்தில் இந்த நூல் இசையுடன் பாடப்பட்டது என்பதைக் காட்டும். அடிகளார் அக்காலத்தில் மக்களின் வாய்மொழி இசையை உள்வாங்கிப் பல இடங்களில் செவ்விசையாக்கி அளித்துள்ள பாங்கை அறிஞர்கள் சிலம்பில் காண்கின்றனர். தமிழர்களின் கூத்து மரபில் வாழ்த்துப் பாடல் பாடித் தொடங்குவது மரபாக உள்ளது.அத்தகு வாழ்த்து இறை வாழ்த்தாகவோ, அரச வாழ்த்தாகவோ இருக்கும். ஆனால் அடிகளார் இயற்கை வாழ்த்தைப் பாடித் தம் காப்பியத்தில் புதுமை செய்துள்ளார்.மேலும் ஐவகையாகப் பிரிக்கப்பட்ட தமிழர் நிலத்தில் இருந்த மக்களின் வாய்மொழிப் பாடல் மரபுகளை, கூத்துகளை உள்வாங்கிக்கொண்டு அவ்வந்நில மக்களின் வாய்மொழியாகப் பல பாடல்களைத் தந்துள்ளார். கந்துகவரி என்று பந்தடிக்கும் பாடல்களை அறிமுகப்படுத்தும் அடிகளார் அக்காலத்தில் இருந்த வாய்மொழி வடிவான பந்தடிப் பாடலைத் தம் காப்பியத்தில் கந்துகவரியில் வாழ்வித்துள்ளார்.
"பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய்கோதை வில்லிட
மின்னிலங்கு மேகலைக ளார்ப்பவார்ப்ப வெங்கணும்
தென்னன் வாழ்க வாழ்கவென்று சென்றுபந்தடித்துமே
தேவரார மார்பன்வாழ்க வென்று பந்தடித்துமே" (சிலம்பு.வாழ்த்துக்காதை 20)
என்பது கந்துகவரிப் பாடலாகும்.
மேலும் அதே வாழ்த்துக் காதையில் அம்மானைவரி என்னும் அமைப்பில் பெண்கள் கண்ணகியை வாழ்த்திப் பாடிய,
"வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணங் காத்த வுரவோன்யா ரம்மானை
ஓங்கரணங் காத்த வுரவோ னுயர்விசும்பில்
தூங்கெயின் மூன்றெறிந்த சோழன்கா ணம்மாணை
சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை"(சிலம்பு.வாழ்த்து. 16)
என்னும் பாடலடிகள் சிலம்பு உள்ளிட்ட நூல்கள் மக்களின் வாய்மொழியில் இருந்தமையை நமக்கு எடுத்துரைக்கின்றன.
மேலும் கானல்வரியில் இடம்பெறும் ஆற்றுவரி,சார்த்துவரி,திணைநிலைவரி உள்ளிட்ட வரிப்பாடல்கள் யாவும் மக்கள் வழக்கில் இருந்த இசைகொண்டு அடிகளாரால் பாடப்பட்டுள்ளது. அதுபோல் முல்லை நில மக்களின் இசையான முல்லைப் பண்ணை (செம்பாலை-அரிகாம்போதி) ஆய்ச்சியர் குரவையிலும், குறிஞ்சிநில மக்களின் இசையான படுமலைப் பண்ணை (குறிஞ்சி யாழ்-நடபைரவி) நடுகற் காதையிலும், குன்றக்குரவையிலும், நெய்தல் நில மக்களின் இசையான விளரிப்பாலை, செவ்வழிப் பண்ணைக்(தோடி) கானல் வரியிலும், மருதநில மக்களின் பண்ணான கோடிப்பாலையை (கரகரப்பிரியா) வேனிற் காதையிலும், பாலைநில மக்களின் இசையான அரும்பாலையைப் (சங்கராபரணம்) வேட்டுவ வரியிலும், புஞ்சேரி இறுத்த காதையுள்ளும் விளக்கியுள்ளார். எனவே தமிழர்களின் செவ்விசை, வாய்மொழியிசை காட்டும் சிலப்பதிகாரத்தின் வழியாகவும் சங்கப்பாடல்களில் வாய்மொழி மரபுகள் புதைந்து கிடப்பதை உணரலாம்.
பேராசிரியர் குமரன்
புலவர் செ.இராசு அவர்களுடன் நான்
(தஞ்சாவூர் அடுத்த பூண்டி திருபுட்பம் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்திய சங்க இலக்கியப் பயிலரங்கில் 21.02.2010 இல் சங்க இலக்கியங்களில் வாய்மொழிப் பாடல்களின் தாக்கம் என்ற தலைப்பில் ஆற்றிய உரை இது. பேராசிரியர் செ.இராசு (ஈரோடு), பேராசிரியர் குமரன்,பேராசிரியர் மனோகரன், பேராசிரியர் மு.செல்வராசு உள்ளிட்ட அறிஞர்கள் பார்வையாளர்களாக இருந்து உரை கேட்டனர். மாணவர்கள், ஆய்வாளர்கள் பார்வையாளர்களாக இருந்து சிறப்பு சேர்த்தனர். பேராசிரியர் செ.இராசு அவர்களும் பேராசிரியர் குமரன் அவர்களும் மாணவர்கள் சார்பில் வேண்டிக் கொண்டதன் பேரில் பின்னுரையாகப் பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக் காட்டினேன். மீண்டும் ஒருமுறை கல்லூரியின் சிறப்புப் பேச்சுக்கு நாட்டுப்புறப் பாடல்கள் என்ற தலைப்பில் உரையாற்ற அழைத்தனர். அந்த அளவு சங்க இலக்கியங்களில் இருந்த வாய்மொழி மரபுகளையும் நாட்டுப்புறப் பாடல்களையும் இசையுடன் பாடிக்காட்டி விளக்கினேன்.)