நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 23 அக்டோபர், 2009

புதுவை அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இணையப்பயிற்சி!

தமிழ் இணையம் அறியும் ஆசிரியர்கள் 

   புதுவை அரசின் பள்ளிக்கல்வித்துறை புதுவை மாநிலம் முழுவதும் பணிபுரியும் தமிழாசிரியர்களுக்குப் புத்தொளிப்பயிற்சியை வழங்குகிறது. பல அணிகளாகத் தமிழாசிரியர்கள் வந்து புத்தொளிப்பயிற்சி பெறுகின்றனர். புதுச்சேரியில் நான் பணிபுரிவதால் முனைவர் இராச.திருமாவளவன் அவர்களின் (ஒருங்கிணைப்பாளர்) அழைப்பில் நான் பல நூறு தமிழாசிரியர்களுத் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்துள்ளேன். 

  எனக்கு இன்று இருந்த பல்வேறு பணி நெருக்கடிகளுக்கு இடையிலும் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் இன்று (23.10.2009) பிற்பகல் 3.15 மணிக்குப் பெருந்தலைவர் காமராசர் நினைவுக் கல்வி வளாகத்தில் உள்ள பயிலரங்க அரங்கை அடைந்தேன். முனைவர் இராச.திருமாவளவன் அவர்கள் பயிற்சிபெறும் தமிழாசிரியர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார். பெரும்பாலும் அவரின் அறிமுகம் இன்று தேவையில்லாமல் போனது. நான் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற உள்ளதை இன்றைய தினத்தந்தி செய்தியாக வெளியிட்டிருந்ததால் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர். 

     3.30 மணியளில் தொடங்கிய என் உரை 5.10 வரை நீண்டது. தமிழ்த் தட்டச்சு, இணையத் தளங்கள் வரையறை, மதுரைத் திட்டம், தமிழ்மரபு அறக்கட்டளை, சென்னை நூலகம், காந்தளகம் நூலகம் உள்ளிட்ட சில தளங்களைப் பார்வையிடச் செய்தேன். மேலும் தமிழ் இதழ்கள் மின்னூல்களாக வருவதையும் பார்வையிட வைத்தேன். மின்னஞ்சல் உரையாடல் வசதிகளையும் பார்வைக்கு வைத்தேன். 

  தட்சு தமிழின் இணையாசிரியர் திரு.அறிவழகன் இணைப்பில் வந்து அனைவருக்கும் வாழ்த்து சொன்னார். அவையினர் மகிழ்ந்தனர். அதுபோல் அமெரிக்காவிலிருந்து வேந்தன் அரசு இணைப்பில் வந்து வியப்பூட்டினார். சுரதா தளத்துக்கு அனைவரையும் அழைத்துச் சென்று அனைத்துத் தளங்களையும் பார்வையிடும் வசதியை எடுத்துரைத்தேன். மேலும் பொங்குதமிழ் எழுத்து மாற்றும் செய்தியையும் சொன்னேன். அதில் உள்ள சின்னக்குட்டியின் தளத்தில் உள்ள காணொளிப் படங்களையும் காட்டினேன். என்.எச்.எம். மென்பொருள் தரவிறக்கம், தமிழா.காம் மற்றும் எ.கலப்பை பற்றி விரிவாக எடுத்துரைத்தேன். 

   மேலும் இணையத்தின் தேவை, அதன் சிறப்பு, வாழ்க்கையில் அதன் தாக்கம் பற்றி என் உரை சிறப்பாக அமைந்தது. செர்மனியில் இன்று நடைபெறும் இணைய மாநாடு பற்றியும் எடுத்துரைத்தேன். அங்கு உரையாற்றும் வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் அதே நாளில் தமிழ் இணையம் பற்றி புதுச்சேரியில் சிந்தித்தது மகிழ்ச்சி தருகிறது. 

ஆசிரியர்கள் (ஒரு பகுதியினர்) 

  முனைவர் இராச. திருமாவளவன் 

ஆசிரியர்கள்(ஒரு பகுதியினர்) 

பயிற்சியளிக்கும் நான் (மு. இ)

2 கருத்துகள்:

Yuvaraj சொன்னது…

தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!

இது தமிழ்கணினி வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் முயற்சி!!

பயன்பாடு இருக்கும் போது அதன் தேவை அதிகரிக்கும்.
தேவையை உண்டாக்கும் பணியை நீங்கள் செய்கிறீர்கள்!

மகிழ்ச்சி!

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

அருமையான பணி. பயிற்சியளித்த உங்களுக்கும் ஏற்பாடு செய்த அரசுக்கும் பங்கேற்ற ஆசிரியர்களுக்கும் என் வாழ்த்துகள்.

**

புதுவை அளவில் சிறியதாக இருப்பதால், அரசு மூலமான பல்வேறு தமிழ் வளர்ச்சிப் பணிச் சோதனைகளுக்கும், ஒரு முன்னோடி மாநிலமாக விளங்க இயலும்.