நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 19 அக்டோபர், 2009

எய்போல் கிடந்தான் ஏறு!


முள்ளம்பன்றி

புறப்பொருள் வெண்பாமாலை என்ற இலகண நூலை முற்றாகச் சுவைப்பதற்குப் புறநானூறு,பதிற்றுப்பத்து உள்ளிட்ட பழந்தமிழரின் புறநூல்களின் பின்னணி அறிந்திருப்பது நன்று.ஏனெனில் தமிழர்கள் அறத்தில் மறத்தையும் மறத்தில் அறத்தையும் மேற்கொண்டிருந்தவர்கள்.ஆம் அறத்தை நிலைநாட்ட மறத்தை மேற்கொண்டதையும் மறத்தை நிலைநாட்டும்பொழுது அறத்தை நிலைநாட்டியதையும் நம் பழைய நூல்கள் பல இடங்களில் தெரிவிக்கின்றன.முருகபெருமான் அறத்தை நிலைநாட்ட சூரபத்மாவை அழித்ததை நினைவிற்கொள்க. மறத்தை நிலைநாட்டும்பொழுது "ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களை"யும்(புறம்) வெளியேறும்படி செய்ததும் இதனை மெய்ப்பிக்கும்.

போர் நடைபெறும் பொழுது போரில் இயலாதவர்களுக்குத் துன்பம் வரக்கூடாது என்று நினைத்து ஆக்கள்(பசுக்கள்), பார்ப்பனர்கள், பெண்கள்,கருவுற்ற மகளிர்,பிணியில் வாடும் மாந்தர் என இவர்களை அப்புறப்படுத்துவதும் அதன்பின் போர் தொடுப்பதும் தமிழர்களின் போரியல் நடைமுறை.இதைத்தான் புறநானூறு என்ற சங்க இலக்கியம் சாற்றும்.ஆனால் உலக நாடுகள் இன்று மக்களை வாட்டுவதும் வதைப்பதும் சிறைப்பிடிப்பதும்,நேருக்கு நேராகச் சுட்டுக்கொள்வதும்,மூக்கில் சுடுவதும்,தலையில் சுடுவதும்,கை,கால்களைக் கட்டிச் சுடுவதும் போரியல் நடைமுறையாகக் கொண்டுள்ளன.உயிர் போக்கும் குண்டுகளை வீசுவதும், கொடிய நச்சுப்புகைகளைப் பரப்புவதும்,வானூர்திகளில் பறந்து பறந்து தொடர்த்தாக்குதல் நடத்துவதும் வழக்கத்தில் உள்ளன.சப்பான் போன்ற நாடுகளில் நடந்த பேரவலம் உலகையே நடுங்கச் செய்தது.

ஆனால் பழந்தமிழகத்தில் போர்முறை பற்றி அறியும்பொழுது நமக்கு வியப்பாக உள்ளது. வீரத்தாயின் கூற்றாக வரும் ஒரு புறப்பொருள் வெண்பாமாலையில் ஒரு பாடல் நம் நெஞ்சைப் பிழியச்செய்யும் தன்மையில் உள்ளது.ஏறாண் முல்லை என்ற பகுதியில்(வாகைத்திணை) வரும் பாடலின் பொருள் இதுதான்:

என் தந்தை முதல்நாள் நடந்த போரில் இறந்து நடுகல்லானான்;என் கணவனும் போர்க்களத்தில் இறந்தான்;என் உடன் பிறந்தோரும் பகைவர்முன் நின்று போர்க்களத்தில் விழுப்புண்பட்டு இறந்தனர்;என் மகன் அஞ்சி ஓடிய தன் படை மறவருக்குப் பின்னாக நின்றான்.தன் படையைக் கெடுத்த பகைவர்களோடு போர்செய்ய விரைந்தான்.அவனின் பகைவர்கள் தொடுத்த அம்பு அவன்மீது மிகுதியாகத் தைத்தன.அதனால் அவன் அம்பு தைக்கப்பட்ட முள்ளம்பன்றி போல் போர்க்களத்தில் கிடந்தான் என்று தாய் குறிப்பிடுகிறாள்.

முள்ளம்பன்றியின் உடலில் உள்ள தோல் பகுதியில் முள்போன்று அமைப்பு இருக்கும். பகைவர்களிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முள்ளம்பன்றி தன் உடலில் கம்பி போன்ற உறுதியான முள்ளைப் படரவிட்டுத் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும். முள்ளம் பன்றியின் உடலைப் பார்க்காதவர்களுக்கு இந்தக் காட்சியைப் புரிந்துகொள்ள முடியாது. போரியல் நுட்பம் தெரிந்த பழந்தமிழ்ப் பாவலன் இயற்கையறிவு பெற்றிருந்தது நம்மை வியப்படையச்செய்கிறது.

போருக்குச் சென்று பலர் மடிவதும் எஞ்சியிருப்பவர்கள் போரை வழிநடத்துவதும் தமிழர்களுக்குப் புதிய குணம் அன்று.தொன்றுதொட்டு வருவதாகும் எனபதை எய்போல் கிடந்த று வழியாக அறியலாம்.

புறப்பொருள் வெண்பாமாலையின் பாடல் பின்வருமாறு:

கல்நின்றான் எந்தை; கணவன் களப்பட்டான்;
முன்னின்று மொய்யவிந்தார் என்னையர்- பின்னின்று
கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி
எய்போல் கிடந்தான்என் ஏறு

(கல்=நடுகல்;எய்= முள்ளம்பன்றி;களம்=போர்க்களம்)

ஏறாண்முல்லை என்று இதற்குத் துறை வகுக்கப்பட்டுள்ளது.ஏறாண் முல்லை என்பது மறப்பண்பு மேலும் மேலும் வளர்தலுடைய மறக்குடியின் ஒழுக்கத்தை மேம்படுத்திச்சொல்வதாகும்."மாறின்றி மறங்கனலும் ஏறாண்குடி எடுத்துரைத்தன்று" என்று இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும்.

2 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றிங்க

நா. கணேசன் சொன்னது…

எய் விலங்குக்கு முதுகில் முள்ளம்பு, ஆனால் மறவனுக்கோ மாரில் போரம்பு.

எய் விலங்கின் முட்சிலிர்ப்பை, களத்தில் கிடப்பவனின் அம்பு தைத்த மார்புக்கு உவமை.

நன்றி!
நா. கணேசன்