நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 8 மார்ச், 2009

தமிழ்நெறிப் பாவலர் அ.பு.திருமாலனார்


அ.பு.திருமாலனார்

 சிங்கப்பூரில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் கலந்துகொண்டு பழையன புகுதலும்... என்ற தலைப்பில் கட்டுரை படித்தேன் (2001,செப்டம்பர்). உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்துகொண்ட உண்மையான பன்னாட்டுக் கருத்தரங்காக அது நடந்தது. மலேசியாவிலிருந்து அம்மாநாட்டில் கலந்துகொண்ட ஓர் அன்பர் என் பேச்சைக்கேட்டு, கைகுலுக்கி என்னை மலேசியாவுக்கு வந்து அவர்களின் நிறுவனத்தில் மாணவர்களுக்கு இலக்கணம் நடத்தும்படி வேண்டுகோள் வைத்தார்.

 அவர் பெயர் பேராசிரியர் மன்னர் மன்னன் (இன்று மலேசியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்). அவர் தம்பி பெயர் இளந்தமிழ். இன்னொரு உடன் பிறப்பு அண்ணாத்துரை. தங்களுக்கு எவ்வாறு இத்தகைய பெயர்கள் வைக்கப்பட்டன? என்று வினவினேன்.

 தந்தையார் அவர்கள் தமிழ் உணர்வு உடையவர்கள் எனவும் பாவேந்தர் பாடல்களில் நல்ல பயிற்சி என்பதால் எனக்கு மன்னர்மன்னன் எனவும் அறிஞர் அண்ணாவின் கொள்கையில் ஈடுபாடு என்றதால் தம்பிக்கு அண்ணாத்துரை எனவும் பெயர் வைத்ததாகக் கூறினார். அவர் அழைப்பை ஏற்று மலேசியா சென்றபொழுது தமிழகம் போலவே தனித்தமிழ் உணர்வும் பகுத்தறிவும் அங்கும் சுடர்விட்டு இருப்பதை அறிந்து உள்ளம் மகிழ்ச்சியடைந்தேன். பல ஊர்களில் தனித்தமிழ் அன்பர்கள் தமிழ் வளர்ச்சிக்கு இயன்ற பணிகளைத் தொடர்ந்து செய்துவருகின்றனர்.

 தமிழ்நெறி சார்ந்த வாழ்க்கை வாழ மலேசியத் தமிழர்களை நெறிப்படுத்தியவர் பாவலர் அ.பு.திருமாலனார் என்பது அறிந்து வியந்தேன். அவர் பற்றி அங்குள்ள பலரிடமும் வினவி அவர்தம் தமிழ்ப்பணிகளைத் தமிழகத்தாருக்கு அறிவிக்க நினைத்தேன். அ.பு.திருமாலனார் தனி மாந்தரல்லர். அவர் ஓர் இயக்கம். அவரின் உணர்வு தாங்கியவர்கள் மலேசியா முழுவதும் பரவி வாழ்கின்றனர். அவர் ஒரு பாவலர். படைப்பாளி. கட்டுரையாளர். மெய்ப்பொருளியில் சிந்தனையாளர். அனைவரையும் ஒன்றிணைத்துச் செயல்படும் தலைவர். தமிழ் உணர்வாளர்கள் தமிழகத்திலிருந்து சென்றால் அவர்களை உணர்வு வழியாக அழைத்து, விருந்தோம்பி, சொற்பெருக்காற்ற வாய்ப்பமைத்து, வழி அனுப்பும் இயல்பினர். இத்தொடரின் வழிப் பாவலர் திருமாலனார் பணிகளை இங்கு நினைவுகூர்கிறோம்.

 அ.பு.திருமாலனார் என்று அழைக்கப்படும் இவர் தம் இயற்பெயர் நாராயணசாமி என்பதாகும். பெற்றோர் மு.அரிப்புத்திரனார், சி.அன்னப்பூரனி அம்மாள் .இவர்களின் இரண்டாவது மகனாக 08.06.1936 இல் பிறந்தவர். செலாமாவைச் சேர்ந்த ஒலிரூட் என்னும் தோட்டத்தில் பிறந்தவர். மாலிய நெறிசார்ந்த குடும்பம். எனவே பெற்றோர் இவருக்கு நாராயணசாமி என்னும் பெயரிட்டனர். தனித்தமிழ் உணர்வு வரப்பெற்றதும் திருமாலனார் ஆனார். இவருடன் பிறந்தவர்கள் தமக்கையார் வீரம்மாள். தம்பி மணியனார் ஆவர்.

 அ.பு.திருமாலனாரின் குடும்பம் இசையும், நாடகமுமாக அமைந்த கலைக்குடும்பம். இளமையிலேயே இராமாயண, பாரதக் கதைகளை எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர். படிப்பிலும் முதல்வராக விளங்கினார். ஒலிரூட்டில் மூன்றாண்டுகள் படித்தும் பின்னர் தைப்பிங் இந்து வாலிபர் சங்கத் தமிழ்ப் பாடசாலையில் ஏழாம் வகுப்பு வரையில் படித்தார். அந்நாளில் ஏழாம் வகுப்புப் பயில்வது மலேசியாவில் ஆசிரியர் பணிக்குத் தகுதியான படிப்பாக விளங்கியது.பின்னர் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியர் தகுதி பெற்றார். தாயாரைப் பிரிய மனமின்றி ஆசிரியர் பணிக்குச் செல்லவில்லை.

 குடும்பக் கடமைகளைச் செய்து வந்த திருமாலனார் பொதுப்பணிகளில் ஈடுபாடு கொண்டவராகவும் பகுத்தறிவு, தமிழ் உணர்வு சார்ந்த பணிகளில் தம் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டார். "சுந்தமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்" என்ற பகுத்தறிவு சான்ற நூல் கற்று அதன் பிறகு புராணங்களில் உள்ள பொருத்தமற்ற கதைகளை மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். தம் 19 ஆம் அகவையிலேயே இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டதால் பாவலருக்கு எதிர்ப்பு உருவானது.

 பகுத்தறிவு தழுவிய இறைநெறி கொண்ட திருமாலனார் 1953-57 இல் ஒலிரூட் பகுதியின் தோட்டத் தொழிற்சங்கத்தில் துணைத் தலைவராகப் பணிபுரிந்தார். தொழிலாளர் ஒற்றுமைக்காகவும், பகுத்தறிவுப் பரப்பலுக்கும். சாதியொழிப்பிற்கும், மது ஒழிப்புக்கும் ஆதரவாக செயல்பட்டார். தாம் பிறந்து வளர்ந்த தோட்டத்திலும் பிற தோட்டங்களிலும் வாழும் மக்களுக்கு ஆதரவாக வாழ்ந்தார். படித்த படிப்புக்கு நல்ல வேலைக்குச் சென்றிருக்க முடியும்.மக்கள் பணியாற்ற கிடைத்த வாய்ப்பெண்ணி அதில் ஈடுபட்டு உழைத்தார். 1954 ஆம் ஆண்டில் சமூக மறுமலர்ச்சிக்கு உதவும் வகையில் தமிழ்த் திருமணம் ஒன்றை நடத்திவைத்து மலேசியாவில் சீர்திருத்தத் திருமணம் தழைத்து வளர அடிக்கல் நாட்டினார். அந்தத் திருமண விழாவில் தமிழர்களின் தாலி பற்றிய சிந்தனையை அங்குச் சிறப்பாகப் பேசி அறிமுகம் செய்துவைத்தார்.

 1970 இல் மலேசியத் திராவிடர் கழகக் கிளையைத் தொடங்கி 13 ஆண்டுகள் அதன் வளர்ச்சிக்கு உழைத்தவர். மலேசியாவில் சிறப்புற்று விளங்கிய திராவிடர் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப் பணிபுரிந்தவர்.

 திருமாலனாருக்கு இசை, நாடகம் உள்ளிட்ட துறைகளில் நல்ல ஈடுபாடு உண்டு. தைப்பிங்கில் இருந்தபொழுது மெல்லிசை, நாடகம் உள்ளிட்டவற்றில் நல்ல பயிற்சி பெற்றதால் பின்னாளில் தாமே நாடகம், பாடல் எழுதும் ஆற்றல் பெற்றார்.1951 இல் செலாமா தமிழ்ப்பள்ளி கட்டட நிதிக்கு நாடகம் எழுதி, இயக்கி, நடித்து நிதிதிரட்டி வழங்கினார்.

 முந்நூறுக்கும் மேற்பட்ட நாடகத்திற்கு உரிய பாடல்களை இயற்றியுள்ளார். ஆர்மோனியம் என்ற இசைக்கருவியை இசைப்பதில் வல்லவர். பாவத்தின் பரிசு, சூழ்ச்சி, மலர்ந்த வாழ்வு, என்னும் நெடுநாடகங்களையும் திருந்தியத் திருமணம், பரிசுச்சீட்டு, சந்தேகம், பாட்டு வாத்தியார் பக்கிரிசாமி, என்று விடியும், மீண்டும் இருள் என்ற குறுநாடகங்களையும் இயற்றியவர்.

 22.10.1962 இல் திருமாலனார் கெ.மீனாட்சியம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். ஐயாவின் பணிக்கு உதவியாக அம்மா விளங்கினார்கள். இவர்களுக்கு அரிப்புத்திரன், அரிநாயகன் என்ற ஆண்மக்களும், அன்பரசி, அன்புமலர் என இருபெண்மக்களும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர்.

 பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பாடல்கள் எழுதத் தொடங்கியவர். திருக்குறள் போலும் அரிய உண்மைகளைச் சொல்லும் ஈரடிக்குறள் இயற்றினார். இதனால் நண்பர்கள் இவரை ஈரடியார் என்று போற்றியதும் உண்டு. வாழ்க்கைக்காக எழுதாமல் சமூக மாற்றத்திற்குத் தம் எழுத்துகளைத் திருமாலனார் பயன்படுத்தினார். கட்டுரைகள் 15 எழுதியுள்ளார் கவிதைகள் இருநூறுக்கும் மேல் எழுதியுள்ளார். அருணகிரிநாதரைப் போல் வண்ணப்பாக்கள் 100 வரைந்தவர்.அவை திருவிசைப்பா என்னும் தலைப்புடையது.

 கனல், இனப்பற்று, தமிழ் நெறி விளக்கம், தேவையற்றது எழுத்துச் சீர்திருத்தம், தமிழர் வாழ்வறத்தில் தாலி என்னும் அரிய ஆய்வுநூல்களை வெளியிட்டுள்ளார். தமிழர் வாழ்வறத்தில் தாலி என்ற நூலில் அரிய ஆய்வுச் செய்திகள் பல உள்ளன.


தமிழர் வாழ்வறத்தில் தாலி நூல் மேலட்டை

 தமிழர்த் திருமண முறை எவ்வாறு இழிவுப்படுத்தப்பட்டு ஆரியமயப்படுத்தப்பட்டது என்பதை விளக்கியுள்ளார். கற்பு குறித்த இவர்தம் விளக்கமும் சிறப்பாக உள்ளது. மேலும் தமிழ்நெறி விளக்கம்(2),கனல், தமிழர்ச் சமயம், வள்ளலார் கண்ட தமிழர்ச்சமய நெறி, புதுக்குறள் உள்ளிட்ட நூல்களும் வெளியிடாமல் உள்ளன.இவை தவிர தென்மொழி, தமிழ்நிலம், தமிழ்நேசன், தமிழ்மலர், தமிழ் ஓசை. தினமணி உள்ளிட்ட ஏடுகளிலும், பல்வேறு சிறப்பு மலர்கள்,ஆய்விதழ்களிலும் படைப்புகளை வழங்கியவர்.

 தமிழ்நெறிக் கழகம் என்னும் அமைப்பை உருவாக்கி 1983 முதல் பணிபுரிந்தவர் பெருஞ்சித்திரனாரின் தென்மொழி, தமிழ்நிலம் இதழ்கள் மலேசியாவில் பரவவும் அதன் வளர்ச்சிக்கும் பணியாற்றியவர். தென்மொழி, தமிழ்நிலம் இவற்றின் புரப்பாளராகப் பணியாற்றியவர். தென்மொழி 1986, ஆகத்து, செபுதம்பர் இதழில் புரப்பாளர் வரிசையில் இவர் பெயரும் இடம்பெற்றுள்ளது (சா.சி.சுப்பையா பெயரும் இடம்பெற்றுள்ளது). பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களை மலேசியாவுக்கு இரண்டாம் முறையாக அழைத்து ஒரு திங்களில் முப்பத்தொரு நிகழ்ச்சிகள் நடத்தி மலேசியாவில் தமிழ் உணர்வு பரப்பியவர்.

 பெருஞ்சித்திரனாரின் தென்மொழி ஏட்டில், திருமாலனார் மலேசியாவில் பேசிய பேச்சொன்று தழைக தமிழ்நெறி என்னும் தலைப்பில் மூன்று தொடராக வெளிவந்துள்ளது (திசம்பர் 1986, சனவரி,பிப்,87). இவ்வுரையில் மிகச்சிறந்த தமிழியற் கொள்கைகளைக் கொண்டவர் இவர் என்பது அறியக் கிடக்கின்றது.

 படிப்பதும் எழுதுவதும் சிந்திப்பதும் அன்பர்களுடன் உரையாடுவதுமாக இருந்த திருமாலனார் தமிழ்நெறிக்கழகத்தின் இரண்டு கண்களாக திருமாவளவன், திருச்செல்வன் என்னும் இரண்டு செயல்மறவர்களை உருவாக்கித் தமக்குப் பின்னரும் தமிழ் இன உணர்வு மலேசியாவில் தழைக்கப் பாடுபட்டவர். இவர்களைப் போலவே பல மான மறவர்கள் மலேசியாவில் தமிழ்ப்பணிகளில் முன்நிற்கிறனர்.

 அ. பு. திருமாலனார் 29.04.1995 இல் புகழுடம்பு எய்தினார்.

கையளவு நெஞ்சம் வைத்தான்;-அதில்
கடலளவு ஆசை வைத்தான்;
மெய்யுடனே பொய்கலந்து
மேதினியில் ஏன்படைத்தான்?...

மெய்யாகிப் பொய்யாகி
மேதினியை உருட்டுகின்றான்!
செய்யாத வினையெல்லாம்
செய்தெம்மை யாட்டுகின்றான்!

என்று இறையுணர்வு கலந்து பாடியுள்ள வரிகள் இவர்தம் பாட்டு உணர்வு காட்டும்.

நனி நன்றி:
தமிழ் ஓசை களஞ்சியம், அயலகத் தமிழறிஞர்கள், தொடர் 24: நாள்:  08.03.2009
முரசு.நெடுமாறன் (ம.த.க.களஞ்சியம்), ம. மன்னர் மன்னன், மாரியப்பன் ஆறுமுகம், இரா. திருமாவளவன், கோவி.மதிவரன், சுப.நற்குணன், தென்மொழி, தமிழ்நிலம்.

4 கருத்துகள்:

அறம் செய விரும்பு சொன்னது…

உங்கள் எழுத்தின் தேடல் . இன்னும் நிறைய தமிழ் எழுத்தளர்களை எம் போன்ற தமிழார்வர்களுக்கு அறிமுகப் படுத்திட வாழ்த்துக்கள் !!!

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

வணக்கம் ஐயா.

மலேசியத் தமிழ்நெறிப் பாவலர் அ.பு.திருமாலனார் பற்றிய அரிய செய்திகளை அழகுபட தொகுத்து அளித்துள்ள தங்களுக்கு இருகரம் கூப்பி நன்றி மொழிகின்றேன்.

செலாமா எனும் தொல்லூரில் பிறந்த திருமாலனார் என்ற இந்தத் தமிழ் ஞாயிறுதான் ஒட்டுமொத்த மலேசிய மலேசிய மண்ணுக்கும் தமிழ்நெறியை அறிமுகப்படுத்தியவர்; தமிழ்நெறிக்காகப் பல்லாற்றானும் பாடாற்றியவர்; தமிழ்நெறியை வென்றெடுத்தவர்.

அன்னாரின் பாசறையில் வளர்ந்தோர் பலர் இன்றும் மலேசியாவில் தமிழ்நெறிப்பணிகளை அயராமல் ஆற்றிவருகின்றனர்.

அன்னார் காட்டிய வழியில் நடைபயிலும் இளைய தலைமுறையைச் சார்ந்தவன் என்பதில் அடியேன் பெருமிதம் கொள்கிறேன்.

இன்றும் மலேசியாவில் தனித்தமிழ் வாழ்கிறது.. வளம்பெறுகிறது என்றால் அதற்கு முழுமுதற் கரணியம் பாவலர் ஐயாதாம்.

அன்னாரின் தமிழ்திருப்பணிகள் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என இறைஞ்சுகிறேன்.

பி.கு:- அண்மைய சில காலமாக கடுமையான பணி அழுத்தம் காரணமாக தங்களுக்குக் குறித்த நேரத்தில் பாவலர் ஐயா அவர்களைப் பற்றிய குறிப்புகளைக் கொடுத்து உதவ முடியாமல் போய்விட்டது. அதற்காக மிகப்பணிந்து மன்னிப்பு கோருகிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

பயன் மிக்க கட்டுரை ஐயா...

கோவி.மதிவரன் சொன்னது…

வணக்கம் வாழ்க

மலேசியத்தின் தமிழ் ஞாயிறு ஐயா அவர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை உலகத் தமிழர்களுக்குக் கொடுத்தமைக்கு நன்றியன்.

இவரைப் போன்று ஆயிரமாயிரம் தமிழ் மான மறவர்கள் இன்றும் மலையகத்தில் தனித்தமிழ்ப் பணியாற்றுகின்றனர்.

இனி தொடர்ந்து மலையகத்தில் தமிழுக்கு உழைத்த தமிழ்ச்சான்றோர்களை உலகத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.

நன்றி.