தமிழ் வாழும் காலம் எல்லாம் இறப்பின்றி வாழ்பவராகப் பாரதியாரால் பாடப்பெற்ற அறிஞர் உ.வே.சாமிநாத ஐயரின் புறநானூற்று முதற்பதிப்பைக் (1894) காணும் வாய்ப்பு எனக்கு அண்மையில் அமைந்தது. அச்சுத் துறை வளர்ச்சியும், ஆராய்ச்சி வன்மையும் தொடக்கநிலையில் இருந்த அக் காலகட்டத்தில் உ.வே.சா அவர்கள் தம் கல்லூரிப் பணிகளுக்கு இடையில் புறநானூற்றைப் பொறுப்புணர்வுடன் பதிப்பித்துள்ள திறம் அறிந்து மலைப்பும் வியப்புமே மேலிடுகின்றன. குடந்தையில் பணிபுரிந்துகொண்டு சென்னையில் அச்சு வேலைகளை மேற்கொண்ட அவர்தம் உழைப்பைஅவரின் வாழ்க்கை வரலாற்றில் பரக்கக் காணலாம். தமிழ் இலக்கிய உலகிற்கு ஆவணமாகப் பல நூல்களைப் பதிப்பித்த அறிஞர் அவர்களின் நூல்களை ஆழ்ந்து பார்க்கும்பொழுது அக்காலப் பதிப்புமுறைகள், அச்சுமுறைகள் யாவும் தெளிவாக விளங்குகின்றன.
ஓலைச் சுவடிகளிலிருந்து கையெழுத்துப் படியாக்கி அவற்றில் காணப்படும் பாட வேறுபாடுகளைப் பல ஏடுகளின் வழி ஒப்பிட்டு உண்மை வடிவம் கண்டு,பொருளுணர்ந்து.உண்மைப்பாடம் வழங்கிய அவரின் உழைப்பைத் தலைவணங்கி மதித்தே ஆதல் வேண்டும்.இன்று அச்சிட்ட புத்தகங்களை மறுபதிப்புச் செய்யும்பொழுது அச்சுப்பிழைகளும், சொல்,தொடர், பத்தி, பக்கம், படிவம் காணாமல் போதல் பற்றி யாரும் அக்கறை காட்டாமல் பதிப்பை ஒரு வணிகத் தொழிலாக்கிவிட்ட நிலையில் உ.வே.சா அவர்களின் பணி மீண்டும் மீண்டும் போற்றத்தக்கதாக விளங்குகிறது.
(படம் 1 புறநானூறு முதற்பதிப்பு முதற்பக்கம்)
புறநானூறு உ.வே.சா அவர்களால் முதன்முதல் 1894 இல் பதிப்பிக்கப்பெற்றது. சீவக சிந்தாமணியை உ.வே.சா அவர்கள் பதிப்பித்தபொழுது நச்சினார்க்கினியர் உரையில் காணப்படும் மேற்கோள்கள் எந்த நூல்களில் வருகின்றன என்பதை ஆராயும்பொழுது அவருக்குப் பொருநராற்றுப்படை முதலான பத்துப்பாட்டு நூல்கள் பற்றி அறிய நேர்ந்ததைத் தம் வாழ்க்கை வரலாற்றில் (பக்கம் 599,600)குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் வேறொரு சுவடியின் 'கொற்றுறைக் குற்றில' என்னும் தொடரைக் கண்டு அது புறநானூற்றின் 95 ஆம் பாடல் என்று உணர்ந்தார். அதுமுதல் புறநானூற்றுப் பாடல்களைத் தனியே தொகுக்கும் முயற்சி மேற்கொண்டார்(பக் 600-01).
புறநானூற்றைப் பதிப்பிக்கத் தொடங்கியபொழுது முன்பே சில நூல்களைப்([சிந்தாமணி,சிலம்பு) பதிப்பித்த பட்டறிவு இருந்ததால் முந்தைய நூல்களைவிடப் பன்மடங்கு புறநானூறு சிறப்பாக வெளிவரவேண்டும் என்று நினைத்தார்.தம்முடன் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்த துரைசாமி அவர்களிடம் இருந்த பைபிள் சிறப்புப் பதிப்பைக் கண்ணுற்றுப் பல புதுமைகளைத் தம் ஆராய்ச்சியில் புகுத்தினார். சங்கப்புலவர்களின் வரலாறு, தொடர்கள்,கருத்துகளைப் பல்வேறு அகராதிகளாக எழுதிவைத்துக்கொண்டு ஆய்வு செய்தார். திருமானூர்க் கிருட்டிண ஐயர், ம.வீ.இராமானுசாசாரியார், சொக்கலிங்கத் தம்பிரான்,ஏம்பல் பொன்னுசாமி உள்ளிட்டவர்கள் இந்தப் பணியில் துணைநின்றதை உ.வேசா அவர்கள் புறநானூற்று முன்னுரையில் நன்றியுடன் பதிவுசெய்துள்ளார்.
(படம் 2 புறநானூறு முதற்பதிப்பு அருஞ்சொல் அகராதி)
புறநானூற்று வரிகள் எந்த எந்த நூல்களில் மேற்கோளாக ஆளப்பட்டுள்ளன என்பதை அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்து எழுதியுள்ளார். அக்காலத்தில் நூல்கள் மூலமும் உரையும் வேறுபாடு காணமுடியாதபடி ஒன்றாகப் பின்னிக்கிடக்கும்.இவற்றைப் படிக்கும் புலவர்கள் தங்களுக்குத் தோன்றும் ஐயங்கள், விளக்கங்களையும் இவ்வேட்டில் எழுதி வைப்பதால் உண்மை வடிவம் காண்பதில் மிகப்பெரும் சிக்கல் இருந்தது.இன்றைக்கு நன்கு நமக்கு அறிமுகமாகியுள்ள பல தொடர்கள் எங்கு வருகின்றன எனத் தெரியாமல் உ.வே.சா அவர்கள் திகைத்ததை முதற் பதிப்பிலே குறிப்பிட்டுள்ளார்.
'அகலிரு விசும்பிற்...பரிதி ' எனும் தொடர் எங்கு இடம்பெற்றுள்ளது என்பதை அறியமுடியாமல் இருந்ததையும் பின்னர்ப் பெரும்பாணாற்றுப்படையில் 1 - 2 அடி என விளங்கியதையும் குறிப்பிடுகிறார். அதுபோல் புறநானூற்று உரையில் இடம்பெறும்,
'ஏவ விளையர் தாய்வயிறு கரிப்ப ' (புறம்.41,78 மேற்கோள்)
'பண்டு காடுமன்' (புறம்.138 உரை)
'பெண்கொலை புரிந்த நன்னன்' (புறம்.147 உரை)
என்ற தொடர்கள் உ.வே.சா அவர்களுக்கு எந்த நூலில் இடம்பெற்றுள்ளது என்பது விளங்காததைப் பெருந்தன்மையுடன் குறிப்பிட்டுள்ளது இன்றைய ஆய்வாளர்களுக்குத் தேவையான ஒன்றாகும்.
புறநானூற்றுக்குப் பழைய உரை உள்ளமையையும்,அதற்கு முன்பே உரை வரையப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் புறநானூற்று முதற்பதிப்பில் உ.வே.சா.பதிவுசெய்துள்ளார். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் விளங்காத பல பகுதிகளுக்கு அத்துறை வல்லாரிடம் கருத்துகளைப் பெற்று நன்றியுடன் அவற்றைப் பயன்படுத்தியுள்ளார்.இவ்வகையில் வி.வெங்கையர்,வி.கனகசபைப்பிள்ளை ஆகியோரின் கருத்துகளை நூலில் இணைத்துள்ளார்.
(படம் 3 புறநானூறு முதற்பதிப்பு நூல் தொடக்கம்)
1893 இல் சனவரி மாதம் சென்னை சூபிலி அச்சகத்தில் புறநானூற்று முதல் பதிப்பின் அச்சுப்பணிகள் தொடங்கின.வை.மு.சடகோப ராமானுசாசாரியார்அவர்கள் பதிப்பு வகையில் மிகப் பெரிய துணையாக விளங்கியதை உ.வே.சா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.1894 செப்டம்பர் மாதம் புறநானூறு பதிப்புவேலை நிறைவெய்தியது. புறநானூறு வெளிவந்தால் தமிழகத்தின் பல வரலாறுகள் வெளிப்படும் என நினைத்து அரசர் வரலாறு,புலவர் வரலாறு,நாடுகள் கூற்றம் பற்றிய பல செய்திகளை உ.வே.சா வெளிப்படுத்தி யிருந்தார்.
புறநானூறு நூல் அமைப்பு
உ.வே.சா பதிப்பித்த புறநானூறு முதல் பதிப்பு பக்க எண்கள் ஒரே சீராக அமைக்காமல் துண்டு துண்டாகப் பக்க எண்கள் உள்ளன.அவ்வகையில் உள்ள பக்கங்களைக் கூட்டினால் 488 பக்கம் உள்ளது.(முகப்பு-2,முகவுரை-12,நாடு முதலியன - 3,பாடினோர் வரலாறு,நாமபேதம் -12+1=13,பாடப்பட்டோர் வரலாறு,நாமபேதம் -18,விஷயசூசிகை -24,மூலம் உரை 310,பாட்டு முதற்குறிப்பு அகராதி - 6,திணை,துறை விளக்கம் -10,அரும்பத அகராதி,புறநானூறு உரை இலக்கணக்குறிப்பு - 83,பிழைத்திருத்தம் -2,வெங்கையர் விசேடக்குறிப்பு - 3,கனகசபைப்பிள்ளை விசேடக்குறிப்பு -2 பக்கம். ஆக 488 பக்கங்கள்).
புறநானூற்று நூலிலும் உரையிலும் கண்ட அரியசொற்கள் இவை எனச் சில சொற்களை உ.வே.சா காட்டியுள்ளார்.
அடார்,அடிக்கீழ்,அணுமை,அதரிதிரித்தல்,அதற்பட,அருப்புத்தொழில்,அல்லிப்பாவை,ஆவுதி,ஆன்பொருந்தம்,இட்டிய,இடைகழி,ஒப்பமிட்ட நீலமணி,ஒருதலை,ஒருவீர்,ஓரிபாய்தல்,ஓரியர்,கட்டிலெய்தினானை,கடாவழித்தல்,கண்ணுறை,கதுவாய்,கந்தாரம்,காவிய,காளாம்பி,குறித்துமாறெதிர்ப்பை,
கூப்பீடு,கைநீட்டு,கொளுத்துச்செறிந்த,கோசர்,சாணாகம்,செண்டுவெளி,தலையாட்டம்,தறிகை,தாளியடிக்கப்பட்ட,துஞ்சிய,நெருநற்று,பல்லியாடிய,
பவணழிந்து,பவாழிந்து,பனைநுகும்பு,பார்ப்பார்ப்படுக்க,பாறுமயிர்,பிசிர்,பெண்டாட்டி,,பையாப்பு,மட்டையாகியதலை,முகுத்தம்,முட்டுக்கள,முதுமக்கட்டாழி,
முழுத்தம்,முழுநெறி,மூரிநிமிர்தல்,வடக்கிருத்தல்,வண்டற்பாவை,வளையமாலை,வேணாவியோர் முதலான அரியசொற்களை உ.வே.சா பட்டியலிட்டு நூலை அனைவருக்குமானதாக மாற்ற முயன்ற அறிவு உழைப்பு இங்கு வெளிப்பட்டு நிற்கின்றது.
புறநானூற்றில் காணப்படும் நாடு முதலியன என்னும் தலைப்பில் நாடுகள், கூற்றங்கள், ஊர்கள், மலைகள்,ஆறுகள் பற்றிய பட்டியலிட்டுக் காட்டும் உ.வே.சா அவர்கள் பின்வருவனவற்றை என்னவென்று அறியமுடியவில்லை என்று விளங்காதவைகளாகப் பட்டியலிடுகின்றார்.ஆராய்ச்சியாளர்களுக்கு மிகச்சிறந்த தோற்றுவாயாகும் இப்பணி.
அரிசில்,இலவந்திகைப்பள்ளி,எருமைவெளி,ஏறை,கண்டீரம்,கள்ளில்,காரி,குராப்பள்ளி,குளமுற்றம்,கூடகாரம்,
கோட்டம்பலம்,சிக்கற்பள்ளி,சித்திரமாடம்,நச்செள்ளை,நாலை,நொச்சி நியமம்,மல்லி, விச்சி,வீரைவெளி, வேண்மாடம் என்பன உ.வே.சா அவர்களின் காலத்தில் விளங்காச் சொற்களாக இருந்தன.இவற்றுள் பெரும்பான்மையான சொற்கள் இன்று பயன்பாட்டிற்கு வந்து அறிமுகமாகியுள்ளதை நினைக்கும் பொழுது தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சிநிலை விளங்கும்.
பாடினோர் வரலாறு என்னும் பகுதியில் புறநானூறு பாடிய புலவர்களின் வரலாற்றைத் தொகுத்து விளக்குகின்றார்.விளக்கம் தெரியும் புலவர்களின் வரலாற்றை விரித்து எழுதும் உ.வே.சா விளக்கம் தெரியாத இடங்களை ' இவராற் பாடப்பட்டவர்கள் பெயரும்,இக்காலத்தவர் இன்னாரென்பதும் விளங்கவில்லை'(அடைநெடுங்கல்லியார் வரலாற்றில்) எனவும் குறிப்பிடுகின்றார்.
ஆலியார் எனும் புலவரைப் பற்றி எழுதும்பொழுது இவர் பெயர் 'ஆனியாரென்றும்' காணப்படுவதைப் பாடவேறுபாடாகக் காட்டுகிறார். அள்ளூர் நன்முல்லையார், ஆலங்குடிவங்கனார், ஒக்கூர்மாசாத்தியார், கணியன் பூங்குன்றனார், கதையங்கண்ணனார், கயமனார், காவற்பெண்டு, கூகைகோழியார், கோடைபாடிய பெரும்பூதனார் , சிறுவெண்டேரையார், தும்பிசேர்கீரனார், நெடுங்கழுத்துப் பரணர்,நொச்சி நியமங்கிழார், பக்குடுக்கை நன்கணியார், பிரமனார், பூங்கணுத்திரையார், பெரும்பதுமனார்,மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார்,,. .மதுரைக் கணக்காயனார்,... மதுரைப் பூதனிளநாகனார், உள்ளிட்ட புலவர் பெருமக்களின் வரலாறு விளங்காமல் இருந்துள்ளது.
ஆசிரியர் பெயர் அறியமுடியது இருந்த பாடல்களின் பட்டியலைத் தந்து 15 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியமுடியவில்லை என்பதையும் உ.வே.சா முதற்பதிப்பில் குறித்துள்ளார். இதுநாள் வரை நம்மால் அப்பெயர்கள் ஆராய்ந்து வெளிப்படுத்தப்படவில்லை என்பதை நினைக்கும்பொழுது உ.வே.சா. அவர்களால் ஒருவேளை புறநானூறு வெளிப்படுத்தப்படாமல் போயிருந்தால் தமிழர்களின் வீர வரலாறு அறியப்படாமல் போயிருக்கும் என்று கருதுவதில் தவறில்லை.
பாடியவர்களின் பெயர் வேறுபாட்டை ஓலைச்சுவடிளின் துணையுடன் விளக்கியுள்ளார்.
ஆவியார் / ஆனியார்
உறையூர் முதுகூத்தனார் / உறையூர் முதுகூற்றனார்.
ஆவூர் கிழார் / ஆவூரழகியார்
ஐயூர் முடவனார் / ஐயூர் கிழார் / உறையூர் முடவனார்
ஓரேருழவர் / ஒன்னாருழவர்
காக்கைபாடியார் நச்சென்னையார் / காக்கைபாடியார் நச்செள்ளையார்
குறுங்கோழியூர் கிழார் / குறுங்கோளியூர் கிழார்
கோதமனார் / கெளதமனார்
சோழன் நல்லுருத்திரன் / சோழன் நல்லுத்தரன்
மோசிகீரனார் / மோசுகீரனார்
வெண்ணிக்குயத்தியார் / வெண்ணிற்குயத்தியார்
வெறிபாடிய காமக்கண்ணியார் / வெறியாடிய காமக்கண்ணியார்
என்று உ.வே.சாவின் முதற் பதிப்பு நூல் அக்காலத்தில் இருந்த ஆராய்ச்சி இடர்ப்பாடுகளை நமக்கு உணர்த்துகிறது.
ஓலைச்சுவடியிலிருந்த புறநானூற்றுச் செய்யுள்களை நூலுருவாக்கம் செய்தபொழுது மிகக் கவனமுடனும் எச்சரிக்கை உணர்வுடனும் செயல்பட்டுள்ளார். ஓலையிலிருந்து தாளில் எழுதி,அவற்றின் பாட பேதங்களைக் குறிப்பிட்டு, விளங்கா இடங்களை விளக்கியும்,விளக்கமுடியாத இடங்களைக் குறிப்பிட்டும், பாடவேறுபாடுகளை நிரல்படுத்தியும், அருஞ்சொற்பட்டி முதலியவற்றை முன்னே தந்தும் (பின்னாளில் நூலின் பிற்பகுதியில்
அமைக்கும் முறையை உ.வே.சா கையாண்டார்.). பாட்டு முதற்குறிப்பு அகராதி வழங்கியும், திணை, துறை விளக்கம் தந்தும், அரும்பதங்களுக்கு அகரவரிசையில் விளக்கம் தந்தும், புறநானூற்று உரையில் இடம்பெறும் இலக்கணக் குறிப்புகளுக்கு அகராதி வரிசையில் பொருள் தந்தும், புறநானூற்றின் தொடர்களைப் பிற நூல்களுக்கு உரைவரைந்த உரையாசிரியப் பெருமக்கள் எந்த எந்த இடங்களில் பயன்படுத்தியுள்ளனர் என்பதை அரும்பாடுபட்டுப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.
மலையைக் குடைந்து எலி பிடித்த கதையாக அக்காலத்தில் அறிமுகம் ஆகாத ஒரு நூலின் வரிகளைப் பிற நூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களைப் பட்டியலிடுவது என்பது ஆராய்ச்சி வல்லார்க்கே விளங்கும்.
புறநானூற்றின் வரிகள் பின்வரும் நூல்களில் இடம்பெற்றுள்ளதைக் காட்டும் செயல் அவர்தம் அறிவுத்திறன் காட்டும்.
1.இலக்கண விளக்கவுரையில் 94 இடங்களில்
2.கலி.நச்சர் உரை 3 இடம்
3.சிலம்பு.அடி. 19 இடம்
4.சிலம்பு.அரும் 2 இடம்
5.சீவகசிந்தாமணி 22 இடம்
6.திருக்குறள் 25 இடம்
7.திருச்சிற்றம்பலக்கோவையார் 2 இடம
8.தொல்.சொல்.சேனா. 43 இடம்
9.தொல்.எழுத்து.நச்சர். 11 இடம்
10.தொல்.சொல்.நச்சர். 98 இடம்
11.தொல்.பொருள்.நச்சர். 216இடம்
12.நன்னூல்,விருத்தி. 46 இடம்
13திருமுரு. 2 இடம்
14பொரு. 1 இடம்
15.சிறுபாண். 1 இடம்
16.பெரும்பாண். 1 இடம்
17.மது.கா. 1 இடம்
18.பட்டி. 1 இடம்
19.புறத்திரட்டு 35 இடம்
20.யாப்பருங்கல விருத்தி 8 இடம்
மேற்கண்டவாறான பல பட்டியல்கள் புறநானூறு முதற்பதிப்பில் இடம்பெற்றுச் சங்க நூல்களைக் கற்பார்க்கு மயக்கம் ஏற்படும் இடங்களுக்குத்தாமே படித்துப் பொருள் விளங்கிக்கொள்ளும் வகையில் உ.வே.சாவின் பதிப்பு முறை அமைந்துள்ளது. பிழைத் திருத்தப்பட்டியும் துறை சார் அறிஞர்கள் வழங்கியுள்ள இணைப்புக் கட்டுரையும் கொண்ட இப்பதிப்பு தமிழ்ப்பதிப்பு வளர்ச்சியைஆராய விரும்புவார்க்கும்,அக்காலத்திய தமிழ்மொழி நிலை அறிய விழைவாருக்கும் பேருதவி நல்கும் பல்வேறு வரலாற்றுச் செய்திகளைத் தாங்கியுள்ளது.
நனி நன்றி : திண்ணை இணைய இதழ் 25.04.2008
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக