தமிழகத்திலிருந்து ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிகளில் இன்று மிகுதியான மக்களால் பார்க்கப்படும்,விரும்பப்படும் தொலைக்காட்சியாக மக்கள் தொலைக்காட்சி மாறிவருகிறது. தமிழகம்,புதுச்சேரி சார்ந்த பல நிலைப்பட்ட மக்களிடம் பழகும்பொழுது இதனை அறிகிறேன். தமிழகத்தில் மட்டும் அல்லாமல் மலேசியா,எத்தியோப்பியா,துபாய்,ஆத்திரேலியா உள்ளிட்ட அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் பலரும் எனக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல்கள், தொலை பேசி அழைப்புகளில் இது உறுதியாகியுள்ளது.
தமிழர்கள் இப்பொழுது அயல்நாடுகளில் பலர் வாழ்வதால் தங்கள் வேர்மூலத்தை விரும்பத் தொடங்கியுள்ளனர்.இவர்கள் தங்கள் குடும்பத்தை ஒத்தவர்களைப் பார்க்க விரும்புகின்றனர். தங்கள் குடும்ப நிகழ்வுகள்,வாழ்க்கை,மொழி இவற்றை நேசிக்கின்றனர்.இவர்களுக்கு மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உறவுடையது போன்ற தோற்றத்தைத் தருகின்றன.தாங்கள் இளம் அகவையில் கண்ட மக்கள்,கலைஞர்கள்,கலைகள்,மொழி சார்ந்த செய்திகள் மக்கள் தொலைக் காட்சியில் இடம்பெறுவதால் இவற்றை விரும்பிப் பார்க்கின்றனர்.சுருங்கச்சொன்னால் தங்கள் மண்ணையும் மக்களையும் அயல்மண்ணில் இருந்தாலும் நினைத்துக்கொண்டே காலம் கழிக்கும் இவர்களுக்கு மனத்தில் உள்ள ஏக்கம் என்ற உள்காயத்தை மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மருந்தாக இருந்து ஆற்றுகிறது.
தமிழகத்திலிருந்து புறப்பட்ட திரைப்படங்கள் உயர்சாதியினரின் வாழ்க்கையை வெளிப்படுத்திய காலகட்டத்தில் இயக்குநர் பாரதிராசாவின் சிற்றூரை மையமாகக் கொண்ட படங்கள் மக்களைக் கவர்ந்தன. அதுபோல, பெண்களை இழிவாகக் காட்டிக் காசு பறித்த காலகட்டத்தில் இயக்குநர் தங்கர்பச்சானின் அழகி,சொல்லமறந்த கதை,சேரனின் ஆட்டோகிராப்,தவமாய் தவமிருந்து முதலிய படங்கள் தமிழகத் திரைப்பட வரலாற்றை மாற்றிப்போட்டன. அவைபோல மக்கள் தொலைக்காட்சியின் வருகையும் பண்பாடு மீட்கும் - ஆவணப்படுத்தும் நிகழ்ச்சிகளும், மொழிக் காப்பும், தொலைக்காட்சிகள் பலவற்றைக் கதிகலங்கச் செய்துள்ளது.
ஏனெனில் தமிழ் மொழியை உயிருக்கு உயிராகப் போற்றும் நேசிக்கும் தமிழர்கள் உலகம் முழுவதும் தங்கி வாழ்க்கை நடத்தினாலும் தங்கள் தாய்மொழி காப்புப் பணிக்கு ஆக்கமான பல வேலைகலையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.இவர்கள் செய்யும் இத்தகு தமிழ்ப்பணிகளுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தருவனவாக மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளன.எனவே உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் மக்கிள் தொலைக்காட்சி வளர்ந்து வருவதே பிற தொலைக்காட்சியினரின் கலக்கத்திற்குக் காரணம்.
மக்கள் தொலைக்காட்சியில் இடம்பெறும் சந்தனக்காடு தொடர் வீரப்பனின் வாழ்க்கையைக் காட்டும் மிகச்சிறந்த காவியமாக மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளது. சிற்றூர்ப் பெண்கள் இன்று விரும்பித் திருப்பும் தொடராகச் சந்தனக்காடு உள்ளது. இயக்குநர் வ.கொளதமன் அவர்கள் மிகத் திறம்படப் பணியாற்றியுள்ளார்.
தமிழ் தெரியாத நடிகர், நடிகைகளை அழைத்துக் கொண்டு சுவிசு.ஆத்திரேலியா,நியூசிலாந்து பறந்து நட்சத்திர விடுதிகளில் குடித்துக் கும்மாளமிட்டு பனிச்சருக்கும் மலைகளைப் படம்பிடிக்க முனையும் கோடம்பாக்க இயக்குநர்கள் யாரை விடவும் தான் ஒரு மிகப்பெரும் கலைஞன் என்பதையும், ஆளுமைத்திறம் உடையவர் என்பதையும் வ.கொளதமன் உறுதிபட இத் தொடரில் காட்டியுள்ளார்.
வீரப்பனை மீண்டும் உயிரோடு உலவ விட்டுள்ளார்.காடு,கரம்புகளில் அலைந்து களப்பணியாற்றி, சட்டச் சிக்கலிலிருந்து விடுபட்டு, மிகப் பெரிய படப்பிடிப்புக் குழுவைக் கட்டியமைத்து இயக்கி, சந்தனக்காட்டில் ஒரு சாம்ராச்சியம் நடத்தி வந்துள்ளார்.இவ்வகையிலும் தமிழ் நிகழ்வுகள் பலவற்றாலும் புகழ்பெற்ற மக்கள் தொலைக்காட்சி 2008 பொங்கல் நிகழ்ச்சிகளை வழங்கிவரும் வகையில் மீண்டும் ஒரு புகழ் மணியைத் தம் படைப்புப் பணிக்குப் பெற்றுள்ளது.
ஆம்...
தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் சில தமிழ்,தமிழர்களின் பண்பாடு தெரியாத நடிகர்,நடிகையர்களைக் கொண்டும் திரைப்படக் கலைஞர்களை நம்பியும் 'கேப்பிப் பொங்கல்'வைத்தன. சில தொலைக்காட்சி நிறுவனங்கள். திரைப்படம், திரைக்கூத்தர்களை நம்பிக் கடைவிரித்து,அருவருக்கத் தக்க உடலில்,அருவருக்கத் தக்க உடையை ஒட்டிக்கொண்டு ஆடும் ஆடவரையும் பெண்டிரையும் மனம்போன போக்கில் ஆடவிட்டு அவர்களின் பாலியல் விளையாட்டுகளைக் கலைகள் என்னும் பெயரில் காசாக்கின. இந்த நாளில், கரந்துறைப் போருக்கு ஆயத்தமான மறவனைப்போல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் சிதறி வாழும் நாட்டுப்புறக் கலைஞர்களை அவர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று சிற்றூர்ப்புறச் சூழலில் அவர்களிடம் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்தம் மரபுக் கலைகளை ஒளிப்பதிவு செய்து, 'தமிழர்களே! இதுதான் உங்கள் மரபுச்செல்வங்கள்' எனக் காட்டிய மக்கள் தொலைக்காட்சிக்குத் தமிழுலகமே கடமைப்பட்டுள்ளது.
மக்கள் தொலைக்காட்சியில் பொங்கல் திருநாளில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள்,ஆடவர்கள்,அரசியல் தலைவர்கள்,நாட்டுப்புறவியல் கலைஞர்கள்,மக்கள் தொலைக்காட்சி பணியாளர்கள்,தமிழறிஞர்கள் என இதுவரை உயர்தட்டு ஊடகங்களால் புறக்கணித்த அனைத்து முகங்களையும் பாகுபாடின்றிக் காட்டியது. மக்கள் தொலைக்காட்சி தமிழர்களையும் தமிழையும் உண்மையாகவே காக்கும் 'மருத்துவரின்' கைமருந்து என்ற உணர்வை அனைவரின் நெஞ்சிலும் விதைத்துள்ளது.
தமிழறிஞர் நன்னன் ஐயாவின் தமிழ்ப்பணியை நன்கு மதித்துவரும் மக்கள் தொலைக்காட்சி அவர்தம் பிறந்த ஊருக்கு அவரை அழைத்துச் சென்று காவனூரையும் வெள்ளாற்றங்கரையில் வாழும் அவர்தம் தோழர்களையும் நமக்கு அறிமுகம் செய்தது.இதனைவிட அவருக்கு வேறு எந்தப் பட்டத்தைப், பதவியை வழங்கி நம்மால் பெருமை செய்யமுடியும்?.வாழும் காலத்திலே உண்மையான தமிழறிஞர்கள் உரிய வகையில் மதிக்கப்படவேண்டும் என்பதை இந்நிகழ்ச்சி சொல்லாமல் சொல்லியது.
நடையா இது நடையா? என்னும் பெயரில் வனப்பு மிகுந்த வண்டிமாடுகளை அழகிப்போட்டிக்கு(!) நிகராகவே நடத்திக்காட்டி உழவர்களையும் மாடுகளையும் மதித்த உழவர்களின் தொலைக் காட்சியாக மக்கள் தொலைக்காட்சி விளங்கியது.மாடுகள் விரும்பி உண்ணக்கூடியது,விரும்பாதது, மாட்டுவகை,உழவரின் பெயர்களை காட்டிப் புதுமையாக இந் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமை அனைவரின் பாராட்டுக்கும் ஆளானது.இந்நிகழ்ச்சிக்கு இசையமைத்த இசையமைப்பாளர் உள்ளங்களில் வாழும் வகையில் இசையமைத்திருந்தார்.
மருத்துவர் இராமதாசு,தொல்.திருமாவளவன் இருவரும் வயல்காட்டுடன் உறவுடையவர்கள் என்பதைப் பெருமையாகச் சொன்னமை, வியர்வையறியாத வெள்ளுடை வேந்தர்களுக்கு நடுவே இவர்கள்தான் மக்கள் தலைவர் என்ற உணர்வை உண்டாக்கியது.தமிழகத்தின் பெரும்பான் மையான மக்கள் செய்யும் தொழில் உழவு. அவ்வுழவர்களுக்கு உரிய இடர்ப்பாடுகள் இன்னொரு உழவருக்குத்தான் தெரியும்.அவ்வுழவுத் தலைவர்களை வயல் வரப்புகளில் கண்ட மக்கள் அந்நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்த்தனர்.
மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிபவர்கள் தங்களை யார் என மக்கள் கண்டுபிடிக்கின்றார்களா? என்பதை அறியும் 'எங்கேயோ பார்ந்த முகம்' நிகழ்ச்சியும் அனைவரையும் ஊக்கமடையச் செய்தது.
கல்லூரி மாணவிகள் பங்குபெற்ற பல்சுவை நிகழ்ச்சிகளில் புட்பவனம் குப்புசாமி அவர்களின் பாடலுக்கு ஒற்றை ஆட்டம் ஆடிய பெண்ணின் உடல் இயக்கம் அவரின் மிகச்சிறந்த ஆற்றலைக் காட்டியது அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை மக்கள் தொலைக்காட்சி வழங்கலாம்.பானை சுமத்தல்,மாவு ஊதி உரொட்டிக்கடித்தல் முதலியனவும் நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாகும். அர்ச்சுணன் தவசு தெருக்கூத்து நம்மைச் சிற்றூருக்கு அழைத்துச்சென்றது.'நான்பேச நினைப்பதெல்லாம்' என்னும் நிகழ்ச்சியில் மாடுகள் பேசுவதுபோல் அமைத்திருந்ததை அனைவரும் விரும்பிப் பார்த்தனர்.கலைவாணன் உள்ளிட்ட கலைஞர்கள் மிகப்பெரும் கலையுள்ளம் கொண்டவர்கள் என்பதை நிகழ்ச்சி மெய்ப்பித்தது.
முக்கூடல் என்னும் பெயரில் அமைந்த நிகழ்ச்சி தமிழ் சார்ந்த நிகழ்ச்சியகும்.பெரும்பாலான மக்களுக்குத் தெரிய வேண்டிய தமிழ் எண்களை அறிமுகம் செய்ய இதுபோன்ற முயற்சி கட்டாயம் தேவை.உறுமியின் பல்வேறு அடைவுகளை விளக்கி அவற்றை இயக்கிக் காட்டியமை பாராட்டிற்கு உரியது.
தென்தமிழகத்தில் வளர்ந்துள்ள பல்வேறு கலைகளையும் தமிழகத்தின் கொங்குமண்டலத்திலும் பிற பகுதிகளிலும் வழக்கில் உள்ள கலைகள்,இசைகள்,ஆடல்கள்,பண்பாட்டுக்கூறுகள் யாவும் உரிய வகையில் இடம்பெற்றமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும்.
மக்கள் நேரடியாகப் பங்கேற்கும் நேரலை நிகழ்ச்சிகள்,தொலைபேசி வழி உரையாடல்கள் யாவும் மக்களுக்கு உரியவாக அமைந்ததால் ஆர்வமுடன் மக்கள் பங்கேற்றனர்.விடாது மழை என விளம்பரப்படுத்தப்பட்டது போலத் தமிழ் மழை மக்களின் உள்ளத்தில் படிந்திருந்த தூசுகளை நீக்கித் தமிழ் உள்ளமாக்கிய நிகழ்ச்சிகள் இவை.
கோடம்பாக்கமே தமிழகம் என்று நினைப்பவர்களுக்கு உண்மையான தமிழகத்தையும் தமிழ்மக்களையும் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் அறிமுகம் செய்தன.பொங்கல் முதல் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் செல்பேசியில் பார்க்கும்படி வளர்ச்சிபெற்றுள்ளது பாராட்டிற்கு உரிய ஒன்றாகும்.மக்கள் தொலைக்காட்சி தன் பாதையில் தொடர்ந்து சென்று தமிழ்ப்பணிபுரிய வாழ்த்துவோம்.