நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 14 ஜனவரி, 2008

ஏறு தழுவுதல்(சல்லிக்கட்டு)வரலாறு


ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், சல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பலபெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது. இவ்விளையாட்டு, முல்லைநில (ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது. முல்லைநில மக்களின் வீர விளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது. பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் பற்றி இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இங்கு நோக்குவோம்.

பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலிலும்(330-335), பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.

குறிஞ்சி நில மக்களும் முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமைவாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொருதும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர். இதனை,

'இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' (மலை.330-335)

என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.

ஏறுதழுவுதலுக்கு முதல்நாள் அல்லது அன்றைய நாளில் குரவைக்கூத்து நடைபெறும். முதல்நாள் நடந்தால் பெண்கள் ஏறு தழுவும் வீரன் வெற்றிபெற வேண்டிப் பாடுவர். ஏறு தழுவும் நாளின் மாலையில் குரவைக்கூத்து நடைபெற்றால் வெற்றிபெற்ற வீரனின் வெற்றியைப் புகழ்ந்து பாடுவர்.

சிலப்பதிகாரத்தில் ஏறுதழுவுதல்
வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சிலப்பதிகாரம்,

'மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இம்
முல்லையம் பூங்குழல் தான்' (சிலம்பு.ஆய்ச்சி. கொளு.3)

என்று குறிப்பிடும்.

கலித்தொகை
கலித்தொகையின் முல்லைக்கலியில் இடபெறும் பகுதியில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞர்களின் செயல், பரண்மீது அமர்ந்து ஏறு தழுவுதலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறபாகக் காட்டப்பட்டுள்ளன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்குமுறைக்குள் வந்து விட்ட இவ் ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்கவேண்டும்.

பிடவம்பூ, செங்காந்தள்பூ, காயாம்பூ உள்ளிட்ட மலர்களை அணிந்த ஆயர்கள் தம் காளைகளை அடக்குபவர்களுக்குத் தம் மகளைத் தருவதாக உறுதியளித்துச் சிவபெருமானின் குந்தாலிப்படை போன்று மாட்டின் கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர். அவ் எருதுகள் இடி ஒலி போல முழக்க மிட்டுத் தொழுவுக்கு வந்தன. அந்த எருதுகளைத் தழுவியவருக்கு அளிப்பதாகச் சொன்ன மகளிர் வரிசையாய் நிற்பர். அல்லது பரண்மீது அமர்ந்து பார்ப்பர்.

ஏறு தழுவுதற்கு முன்பாக அத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் நீர்த்துறைகளிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி முறைப்படித் தொழுவில் பாய்ந்து காளைகளை அடக்குவர். அவ்வாறு அடக்க முற்படுபவனின் மார்பைக் காளைகள் குத்திக்கிழிப்பது உண்டு. அக்காட்சி பாரதக் கதையில் திரொளபதையின் கூந்தலைத் தொட்ட துச்சாதனனின் மார்பைப் பிளந்த வீமனைப்போல் இருந்தது என்று  முல்லைக்கலியில் விளக்கப்பட்டுள்ளது.

பல வகை காளை மாடுகள் ஓரிடத்தில் (பட்டி) அடைக்கப்பட்டு, பின்பு மாடுபிடிக்க விடப்படும். அவ்வாறு அடைக்கப்படிருந்த பல மாடுகளின் காட்சி ஒரு குகையில் சிங்கம், குதிரை, ஆண்யானை, முதலை முதலியவறை ஒரே இடத்தில் அடைத்தால் ஏற்படும் நிலைபோலப் பட்டியில் இருந்தது எனச் சங்க இலக்கியப் புலவன் குறிப்பிட்டுள்ளான்.

காளைமாடு ஒன்று இளைஞன் ஒருவனைக் கொம்பால் குத்துகிறது. அவன்குடல் சரிந்து வெளி வருகிறது. அவற்றை அவன் எடுத்து வயிற்றில் இடுகின்றான்; வேறொரு காளை மாட்டில் தொத்திக் கிடப்பவன் காளைமாட்டின் மேல் இடப்பட்ட மாலைபோல் இருந்தான் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலரை மாடுகள் குத்திக் கிழிப்பாதல் மாடுபிடி களம் குருதிக் கறையுடனும் மரண ஓலத்துடன் விளங்கித் தோன்றியுள்ளது. இது துரியோதனன் உள்ளிட்டவரைக் காவுகொண்ட படுகளம் போல் இருந்தது என(104-4) ஒரு பாடல் குறிப்பிடுகிறது.

எனவே நம் முன்னோர்கள் பல உயிர்களைக் கொல்ல வாய்ப்புள்ள இடமாகவும், பலருக்குக் காயம் முதலியன விளைவிக்கும் இடமாகவும், நிகழ்வாகவும் உள்ளதை நன்கு அறிந்திருந்த சூழலிலும் ஏறு தழுவுதலை வீரக்கலையாகவே ஏற்றுக்கொண்டிருந்தனர்.

'கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே, ஆயமகள்' (கலி.முல்லை.103 63-64)

என ஏறுதழுவும் இளைஞர்களைப் பண்டைத்தமிழ்ப் பெண்கள் விரும்பி மணம் முடித்தமையை முல்லைக்கலி குறிப்பிடுகின்றது.

கொலைத் தொழிலையுடைய காளையை அடக்கும் வலிமையில்லா தவனைப் பண்டைக்கால ஆயமகளிர் மணப்பது இல்லை. எனவே தமிழர்களின் திருமண வாழ்வுடன் தொடர்புடைய ஏறு தழுவுதல் மிகப்பெரிய இனக்குழு அடையாளமாகக் கருதலாம். காலப் பழைமையால் பல்வேறு மாற்றங்களுடனும், சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டாலும் இது தொன்மையானது என்பதிலும், மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை. தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான ஏறுதழுவுதலை மறக்காமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் கவனம்செலுத்த வேண்டும்.

10 கருத்துகள்:

bala சொன்னது…

முனைவர் மு இளங்கோவன் அய்யா,

மஞ்சு விரட்டு வீர விளையாட்டை ,ஸ்பெயின் நாட்டிலிருந்து திருடி ஆரியம் புகுத்தியது என்று சொல்றாங்களே?இதப் பத்தி தொல்காப்பியம் கூட அரசல் புரசலா சொல்வதாகவும் அறிஞர்கள் ஒரு கருத்தை வைக்கிறாங்களே?அதைப் பற்றி முனைவர் அய்யாவோட கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.திராவிடத்தின் ஒரிஜினல் வீர விளையாட்டுக்களான, கோழி விரட்டு,காக்கா விரட்டு, போன்ற அழிந்தொழிந்த வீர விளையாட்டுக்களை மீட்டு மீண்டும் தமிழரிடம் சேர்க்க மருத்துவர் அய்யா ஆவன செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் எழுகிறது.

பாலா

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வணக்கம்.
தங்கள் அன்பிற்கு நன்றி.
நமக்கு உள்ள இலக்கியச் சான்றுகள்,
இலக்கணச் சான்றுகள் போன்று பிற
நாட்டினருக்கு உண்டா? என்றால் யான் அறிந்தவரை இல்லை.ஈராயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே விழா எடுத்தல்,
மரபுவழி நின்று விழா நடத்துதல் என்பது நாகரிகமுள்ள இனத்திற்கே அமையும்.எனவே தமிழர்கள் பண்பட்ட
வீர இனம்.இதனையே ஏறு தழுவுதல் விழா எடுத்துக்காட்டுகிறது.

விரிவாகப் பின்பும் எழுதுவேன்.

மு.இளங்கோவன்

பாரதிய நவீன இளவரசன் சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

ஜல்லிக்கட்டு பற்றிய அருமையான தகவலுக்கு நன்றி.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

பாராட்டிற்கு நன்றி.
மு.இளங்கோவன்

தமிழநம்பி சொன்னது…

ஐயா, வணக்கம்.
சரியான நேரத்தில் சரியான நோக்கத்தில் இக்கட்டுரையை எழுதியிருந்தீர்கள். நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொளகிறேன்.சிறு செய்தி... தட்டச்சுப் பிழையாக, சிலப்பதிகார எடுத்துக்காட்டில் 'கொளு3' என்பது 'கொளு8' என்றுள்ளது. இவ் எடுத்துக்காட்டின் முதலடி இறுதியில், 'உரியள்,இம்',
'உரியள்,இக்' என்றுள்ளது. அருள்கூர்ந்து இரண்டிடங்களையும் திருத்திவிடுங்கள்! - முழுச்செப்பம் பெறும். நன்றி.
- அன்பன், தமிழநம்பி, விழுப்புரம்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

ஐயா வணக்கம்.
கட்டுரை படித்தமைக்கும்,திருத்தம்
செப்பியமைக்கும் நன்றி.திருத்தம்
செய்துவிட்டேன்.நன்றி.

மு.இளங்கோவன்

bala சொன்னது…

//என்பது நாகரிகமுள்ள இனத்திற்கே அமையும்.எனவே தமிழர்கள் பண்பட்ட
வீர இனம்.இதனையே ஏறு தழுவுதல் விழா எடுத்துக்காட்டுகிறது.//

முனைவர் மு இளங்கோவன் அய்யா,

அடப் பாவி;இந்த கண்றாவியை பண்பாட்டின் அடையாளம்,நாகரிகத்தின் இலக்கணம்னு கூசாம சொல்றீங்களே!அலங்காநல்லூர் கும்பல் மஞ்சு விரட்டுவதை பாத்தா ஒட்டு மொத்தமா தமிழ் கும்பலே கேவலமான காட்டுமிராண்டி கும்பல் என்று தானே மத்தவங்க முடிவுக்கு வருவாங்க.இந்த சொறியனுங்க மிரண்டு போன காளையை துரத்துவாங்க;அதைப் பாத்தா முல்லை வாழ் பெண்டிருக்கு காதல் வருமா?இதை விட முல்லை வாழ் பெண்டிரை கேவலமா பேச முடியாது.இந்த மூஞ்சிங்க ஏன் மலைப் பாம்பு தழுவுதல்,புலி விரட்டு,சிங்க ஏறுதல் போன்ற வீர விளையாட்டுக்களை விளையாடி முல்லை வாழ் பெண்களை மனம் மகிழ்வித்து மணம் புரியக்கூடாது?
இந்த கேவலத்தையெல்லாம் பாத்து தான்,மலையாளப் பசங்களெல்லாம் நம்ம ஊர் பசங்களைப் பாத்து கிண்டலா "எலே பாண்டி"ன்னு கூப்பிடறானுங்க.

பாலா

PRABHU RAJADURAI சொன்னது…

ஐயா,

வரலாறு.காமில் சல்லிக்கட்டு பாற்றி கட்டுரை உள்ளது. அதுகுறித்து தங்கள் கருத்து என்ன?

நா. கணேசன் சொன்னது…

>வரலாறு.காமில் சல்லிக்கட்டு பற்றி
>கட்டுரை உள்ளது. அதுகுறித்து
>தங்கள் கருத்து என்ன?

வழக்கறிஞர் பிரபு,

இதையும் படித்துப் பாருங்க,
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html

நா. கணேசன்
http://nganesan.blogspot.com

K. ASOKAN சொன்னது…

தங்களி்ன் பதிவு மிக்க பயனுள்ளதாக அமைந்துள்ளது. தங்களி்ன் பதிவினை திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களின் அறிவுரைக்கிணங்க என்னுடைய வலைத்தளத்தில் தங்களது பதிவினை இணைத்துள்ளேன். மிக்க நன்றி