நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 30 ஆகஸ்ட், 2007

நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்(10.09.1862 -30.07.1914)

பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையை அறிவதற்குப் பெருந்துணைபுரிவன சங்கநூல்களாகும். இச்சங்க நூல்களில் ஒன்று நற்றிணை.இந்நூல் தமிழர்தம் அகவாழ்க்கையைக்கூறுவதோடு அமையாமல் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளையும் தாங்கி நிற்கின்றது. ஓலைச்சுவடி களிலிருந்து இந்நூலை அறிஞர்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு வகைகளில் மூலமாகவும்,உரையாகவும் பதிப்பித்துள்ளனர். அவ்வகையில் கற்றோர் அனைவரும் களிப்புறும் வண்ணம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உரையுடன் பதிப்பித்தவர் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் ஆவார்.அவர்தம் வாழ்க்கையையும் உரைச்சிறப்பையும் இங்குக்காண்போம்.

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் இளமைப்பருவம்

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அவர்கள் பிறந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த பின்னத்தூர் ஆகும். பெற்றோர் அப்பாசாமி ஐயர் என்னும் வேங்கடகிருட்டிணன்-சீதாலட்சுமி.இவர் 1862 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்தாம் நாள் பிறந்தார். இவர்தம் இயற்பெயர் இலட்சுமிநாராயண அவதானிகள் என்பதாகும். அவதானி என்பது அவதானக்கலைகளில் வல்லவர்களைக் குறிப்பது (அவதானம்-நினைவுக் கலை). பின்னத்தூர் நாராயணசாமியாரின் முன்னோர் காலம்தொட்டு இவர்தம் குடும்பம் நினைவுக் கலையில் வல்லவர்களாக விளங்கினர். நாராயணசாமியாரின் தந்தையார் மருத்துவ அறிவுபெற்றவர். அனைவருக்கும் அறத்திற்கு மருத்துவம் பார்த்தார். நாராயணசாமியாருடன் உடன் பிறந்தவர்கள் எழுவர். நாராயணசாமியார் மூத்தவர்.

கல்வி

நாராயணசாமியார் பள்ளிக் கல்வியை உரிய காலத்தில் பெற்றார். பின்னர் வடமொழியைச் சிறிது கற்று, மறையோதுதலை மேற்கொண்டார். பின்னத்தூரில் பள்ளி நடத்திய கிருட்டிணாபுரம் முத்துராம பாரதியார் என்பவரிடம் தமிழ்கற்றார். மன்னார்குடியில் வாழ்ந்திருந்த நாராயணசாமிப் பிள்ளை என்பவர் நிகழ்த்திய இராமாயணச் சொற்பொழிவைக் கேட்டபிறகு நாராயணசாமி ஐயருக்குத் தமிழின்பால் மிகுந்த பற்று ஏற்பட்டது. இராமாயணம் முழுவதையும் கற்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதன்பிறகு தமிழின்மேல் அளவிறந்த ஈடுபாடு தோன்றியது. ஐயர் அவர்களின் குடும்பமே நினைவாற்றல் கலையில் சிறந்து விளங்கியதால் ஐயருக்கும் நினைவாற்றல் கலை கைவரப் பெற்றிருந்தது. எனவே கற்றவை யாவும் மனப்பாடமாகப் பதிந்தது.

நாராயணசாமியார் எப்பொழுதும் நூல்களைப்படிப்பதில் நாட்டம் கொண்டிருந்ததை அவர்தம் அத்தை விரும்பில்லை.குடும்பத் தொழிலைக் கவனிக்கும்படி அடிக்கடி கூறுவார்.அதனால் வீட்டிற்குத் தெரியாமல் வயல்வெளிகளில் அமர்ந்து தமிழைப்படிக்கத் தொடங்கினார். நாராயணசாமியார் தாமே தமிழ்படித்ததால் பல்வேறு ஐயங்கள் ஏற்பட்டன.அவர்தம் விருப்பம் நிறைவேறும் வண்ணம் நல்ல சூழலொன்று வாய்த்தது.யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரின் மருகர் பொன்னம்ப்பலபிள்ளை அவர்கள் அப்பொழுது திருமரைக்காட்டில்(வேதாரண்யம்) தங்கித் தமிழ்ப்பணி செய்துவந்தார்.அவரிடம் சென்று தம் தமிழ் ஈடுபாட்டைக்கூறி ஐயங்களைப் போக்கிக்கொண்டார்.மேலும் முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தைப் பாடங்கேட்டார்.

நாராயணசாமியார் மன்னார்குடியில் பொன்னம்பலப்பிள்ளையின் முன்னிலையில் தாம்பாடிய நீலகண்டேசுரக் கோவை என்னும் கோவை நூலை அரங்கேற்றினார். மேலும் அவர் விரும்பியவாறு வடமொழி நூலான காளிதாசரின் பிரகசன நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். மேலும் கோவில்களில் இருந்த கல்வெட்டுகளைப் படித்து அறியும் ஆற்றலையும் பெற்றிருந்தார். தமிழ்ப் புலவர்களின் வரலாறு, அவர்தம் பாடல்களை நன்கு அறிந்திருந்த நாராயணசாமியார் அவற்றை வேண்டிய பொழுது வெளிப்படுத்தும் பேராற்றலைக் கொண்டிருந்தார்.

நாராயணசாமியார்க்குத் தொல்காப்பியப் பொருளதிகாத்தில் நல்ல பயிற்சி இருந்தது. அதன் விளைவால் பொருளதிகாரத்தில் இடம்பெற்ற மேற்கோள்களை அகரவரிசைப்படுத்தி வைத்திருந்தார்.

நாராயணசாமியார் 1899 ஆம் ஆண்டு முதல் தாம் இறக்கும் வரை கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்ததார்.

நாராயணசாமியார் சங்க நூல்கள் பலவற்றையும் உரையுடன் வெளியிடத் திட்டமிட்டிருந்தார். குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு முதலான நூல்களில் அதிக கவனம் செலுத்தி ஆய்வுகளைச் செய்தவர். நற்றிணை உரை அச்சாகிக் கொண்டிருந்தபொழுது புலவர் அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டது. நற்றிணை உரையை இறப்பதற்குள் காணவேண்டும் என்ற அவர்தம் எண்ணம் ஈடேறவில்லை. நீரிழிவு நோய் மேம்பட்டு 1914 ஆம்ஆண்டு சூலைத் திங்கள் 30 ஆம் நாள் தம் பிறந்த ஊரான பின்னத்தூரில் இயற்கை எய்தினார். நாராயணசாமியார்க்கு மணப் பரிசிலாய் இரண்டு பெண்மக்கள் பிறந்தனர்.

பின்னத்தூர் நாராயணசாமியார் இயற்றிய நூல்கள்:

1. நீலகண்டேசுரக்கோவை
2 .பிரகசன நாடகம்
3. இடும்பாவன புராணம்
4. இறையனாராற்றுப்படை
5. சிவபுரானம்
6. களப்பாள் புராணம்
7. அரதைக்கோவை
8. வீரகாவியம்
9. சிவகீதை
10.நரிவிருத்தம்
11.மாணாக்கராற்றுப்படை
12.இயன்மொழி வாழ்த்து
13.தென்தில்லை உலா
14.தென்தில்லைக் கலம்பகம்
15.பழையது விடுதூது
16.மருதப்பாட்டு
17.செருப்புவிடு தூது
18.தமிழ் நாயகமாலை
19.இராமயண அகவல்
20.நற்றிணை உரை

மேற்கண்ட நூல்களுள் இயன்மொழி வாழ்த்து, மாணாக்கராற்றுப்படை, களப்பாள் புராணம் என்னும் நூல்கள் பார்வைக்குக் கிடைக்கின்றன. இந் நூல்கள் நாராயணசாமியார் மிகச் சிறந்த பாட்டியற்றும் ஆற்றல் கொண்டவர் என்பதை மெய்ப்பிக்கின்றன.

இவற்றுள் இயன்மொழி வாழ்த்து என்பது புதுக்கோட்டை மன்னர் இராஜா மார்த்தாண்ட பைரவத் தொண்டமான் பற்றியும் அவர்தம் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த புதுக்கோட்டை நகரின் சிறப்புப் பற்றியும் கூறும் நூலாக விளங்குகிறது. 570 ஆசிரியப்பா அடிகளைக்கொண்டு விளங்குகிறது. நூறாண்டுகளுக்கு முன்பிருந்த புதுக்கோட்டயைப் பற்றி வருணனை செய்யும் நூலாக இது உள்ளது. புதுக்கோட்டை மன்னரின் பிறந்தநாள் வாழ்த்தாகப் பாடப்பட்டுள்ளது.

பின்னத்தூர் நாராயணசாமியார் கும்பகோணத்தில் பணிபுரிந்தபொழுது அவ்வூரின் அழகில் மயங்கினர் போலும். அதன் பயனாய் மாணாக்கராற்றுப்படை என்னும் நூலை இயற்றியுள்ளார். 395 நேரிசை ஆசிரியப்பா அடிகளால் இந்நூல் அமைந்துள்ளது. பாலசுப்பிரமணியபிள்ளை என்பவரால் 1900 இல் கும்பகோணத்தில் லார்டு ரிப்பன் அச்சாபிசில் பதிப்பிக்கப் பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில கும்பகோணத்தில் புகழ்பெற்றிருந்த நாகரிக ஆங்கிலேய வித்தியாசாலை என்னும் கல்வி நிறுவனம் பற்றிப் புகழ்ந்துரைக்கும் வண்ணம் இம் மாணவராற்றுப்படையைப் பாடியுள்ளார்.

'கல்வி பயிலக்கருதி அதற்கு வழி காணாது வறுமையா லேக்கமுற்று வருந்திய மாணாக்கனொருவனைக் கல்வி பயின்று மேம்பட்டு அதனால் இராசாங்கத்தாராற் சிறப்புப்பட்டமும் பெற்று அதிகாரமும் பெற்றானொருவன் ஆற்றுப்படுத்தியதாகப்பொருள் கூறுக' என நூல் நுவல்பொருளை நூலாசிரியர் குறித்துள்ளார்.கும்பகோணத்தின் இயற்கை அழகு பேசப்பட்டுள்ளது.



நற்றிணை உரைச்சிறப்பு

நற்றிணையின் உரை இனிய தமிழ்நடையாகவும், இறைச்சி, உள்ளுறை, துறைவிளக்கம், மெய்ப்பாடு, பயன்என்ற கூறுகளை விளக்குவனவாகவும் உள்ளது.உரை பழந்தமிழ் மரபில் நின்று எழுதப்பட்டுள்ளது. பண்டைய உரையாசிரியர்களின் உரை என்று சொல்லும்படி உரையாசிரியர் ஆழ்ந்த, அகன்ற புலமைத்திறம் வெளிப்படும்படி எழுதியுள்ளார்.

பின்னத்தூர் நாராயணசாமியார் தம் உரை நூல் உருப்பெறுவதற்கு உதவியவர்களை நன்றிப்பெருக்குடன் குறிப்பிட்டுள்ளார். அவர்களுள் ஏடு கிடைக்கச் செய்த சுவாமி வேதாசலம், உ.வே.சாமிநாத ஐயர், தி.த. கனகசுந்தரம் பிள்ளை, மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் உதவி குறிப்பிடத்தக்கன.

நற்றிணை உரையைப் பின்னத்தூர் நாராயணசாமியார் பதிப்பித்தபொழுது 234 ஆம் பாடல் முழுமையாகவும் 385 ஆம்பாடல் பிற்பகுதியும் கிடைக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டுள்ளாமை அவரின் உழைப்பார்வத்தைக் காட்டுகின்றது.

உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் உரைவ்வரைவதில் ஒவ்வொரு போக்கினைக் கைக்கொண்டுள்ளனர். பின்னத்தூர் நாராயணசாமியார் தாம் வரைந்த நற்றிணை உரையில் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொரு செய்யுளுக்கும் உரை வரையும்பொழுது திணை, துறை, துறைவிளக்கம், இலக்கண விளக்கம், பாடல், பாடல் பொருள் விளக்கம் இவற்றைத் தந்துள்ளார். ஒவ்வொரு பாடலடிக்கும் தெளிவான விளக்கம் தருவதில் வல்லவராக விளங்குகிறார்.

அரிய சொல்விளக்கம்,எடுத்துக்காட்டு, இலக்கணக்குறிப்பு,அணி அழகு,இலக்கண, இலக்கிய மேற்கோள், இறைச்சி, உள்ளுறை, பயன், மெய்ப்பாடு, பயன் போன்ற அகப்பொருள் செய்திகளை விளக்கியுள்ளார். பின்னத்தூரார் உரைவரையும் காலத்தில் பழந்தமிழ் நூல்கள் அச்சேறத் தொடங்கியிருந்த காலமாகும். தமிழறிஞர் உ.வே.சாமிநாத ஐயர் முதலானவர்களுடன் பழகும் வாய்ப்பும் பின்னத்தூர் நாராயணசாமியார்க்கு வாய்த்ததால் இவர்தம் உரைச்செழுமை கொண்டமையை உணரலாம்.

பின்னத்தூர் நாராயணசாமியாரின் உரையை ஆராய்ந்த ஆய்வாளர்கள் பல்வேறு உண்மைகளைக்கண்டு வெளிப்படுத்தியுள்ளனர்.சு.இராசாராம் அவர்கள் தம்கட்டுரை ஒன்றில் பின்னத்தூர் நாராயணசாமியார் 111 நற்றிணைப் பாடல்களுக்கு உள்ளுறை கண்டும்,100 பாடல்களுக்கு இறைச்சி கண்டும் விளக்கியுள்ளதைப்பட்டியலிட்டுக்காட்டியுள்ளார்.

பின்னத்தூர் நாராயணசாமியார் வரைந்த நற்றிணை உரையைக் கற்கும்பொழுது அவர்தம் பரந்துபட்ட இலக்கண அறிவு, இலக்கிய அறிவு, வடமொழிப் புலமை,உலகியல் அறிவு, பிறதுறைப் புலமை யாவும் தெளிவாக விளங்குகின்றன. ஒரு நூலுக்கு உரை வரைந்தாலும் அவர்தம் உரைமாண்பால் உலகம் உள்ள அளவும் அவர்தம் பெருமை நின்று நிலவும்.

பின்னத்தார் நாராயணசாமியார் உ.வே.சாமிநாதருடன் நெருங்கிப் பழகியுள்ளார். எனவே உ..வே.சா தம் வாழ்க்கை வரலாற்றில் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார்.

'பிற்காலத்தில் என் புத்தகப் பதிப்புக்கு உதவியாக இருந்த பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் கம்பர் சம்பந்தமான இவ்விஷயங்களை என்னிடம் தெரிந்துகொண்டு இவற்றையும் வேறு சில விஷயங்களையும் சேர்த்துத் தாம் பதிப்பித்த தமிழ்ப்பாடப் புத்தக உரையில் வெளியிட்டிருக்கிறார்'. (என் சரித்திரம், பக்கம் 720).

நன்றி: திண்ணை இணைய இதழ் நாள்: 30.08.2007

புதன், 29 ஆகஸ்ட், 2007

வே.ஆனைமுத்து ஐயா அவர்களுக்குப் பாராட்டு விழா


தந்தை பெரியார் எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்திய கருத்துகளைத் தொகுத்தும், வகைப்படுத்தியும் ஈ.வெ.ரா. சிந்தனைகள் என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக வெளிப்படுத்தியவரும் இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையை நன்கு புரிந்துகொண்டு வெளிப்படுத்தி வருபவருமான தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் பணியையும், தொண்டையும் பாராட்டும் வகையில் சென்னையில் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் பாராட்டுவிழா நடைபெற உள்ளது.

இடம்: வாணிமகால்,தியாகராயர் நகர்,சென்னை

நாள்: 01.09.2007 நேரம்: காலை 10.00 மணி

தலைமை: திரு.கோ.க.மணி

வரவேற்பு: திரு.செ.குரு

பாராட்டுரை:

தோழர் ஆர்.நல்லகண்ணு,

நடுவண் அரசின் சட்டம், நீதித்துறையின் இணையமைச்சர் திரு.க.வேங்கடபதி

திரு.பழ.நெடுமாறன், திரு.தொல்.திருமாவளவன், முனைவர் பொற்கோ, திரு.கொளத்தூர் தா.செ.மணி, தோழர் சங்கமித்ரா, தோழர் க.முகிலன்,தோழர் து.தில்லைவனம், தோழர் இரா. பச்சமலை, தோழியர் கோ.வி.இராமலிங்கம், புலவர் செந்தலை ந.கவுதமன்

பாராட்டுப் பேருரை

மருத்துவர் ச.இராமதாசு
நிறுவனர்-பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை

ஏற்புரை
தோழர் வே.ஆனைமுத்து

அனைவரையும் அழைத்து மகிழும்

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையினர்
சென்னை

செய்தி
மு.இளங்கோவன்

புதன், 15 ஆகஸ்ட், 2007

தமிழ்த்தேசியப் பாவலர் பெருஞ்சித்திரனார் (10.03.1933 - 11.06.1995)


பாவலரேறு பெருஞ்சித்திரனார்

இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பாவலர்களுள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். பன்முக ஆளுமையைக் கொண்ட பெருஞ்சித்திரனாரின் வாழ்க்கையையும் அவர்தம் பாட்டுத்துறைப் பங்களிப்பையும் இங்குத் தொகுத்து நோக்குவோம்.

பெருஞ்சித்திரனாரின் பெருமைமிகு வாழ்க்கை

பாவலரேறு எனவும், பெருஞ்சித்திரனார் எனவும் தமிழ் உணர்வாளர்களால் போற்றி மதிக்கப்படும் பெருஞ்சித்திரனார் 10-03-1933இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆவர். இவர்களுக்குச் சொந்த ஊர் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்பதாகும். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து துரை-மாணிக்கம் எனத் தொடக்க காலத்தில் அழைக்கப்பெற்றவர்.

பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி சேலத்திலும் ஆத்தூரிலும் அமைந்தது. இவருக்கு உயர்நிலைப்பள்ளியில் சேலம் நடேசனாரும், தமிழ் மறவர் பொன்னம்பலனாரும் ஆசிரியர்களாக விளங்கித் தமிழறிவும் தமிழ்உணர்வும் புகட்டினர்.

பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் காலத்தில் தமிழ் ஈடுபாட்டுடன் கற்றவர். "குழந்தை' என்னுவிவிம் பெயரில் கையயழுத்து ஏடு தொடங்கி மாணவர் பருவத்தில் நடத்தியவர். பின்பு அருணமணி என்னும் புனைபெயரில் "மலர்க்காடு' என்னும் கையயழுத்து ஏட்டினை நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றிய பெருமைக்குரியவர்.

பெருஞ்சித்திரனார் 1950 இல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின்னர்ச் சேலம் நகராட்சிக் கல்லூரியில் பயின்றார். பாவாணர் அங்குப் பணிபுரிந்தபொழுது அவர்தம் மாணவராக விளங்கித் தமிழறிவு பெற்றார். இளமையில் பெருஞ்சித்திரனாருக்கு உலக ஊழியனார், காமாட்சி குமாரசாமி முதலானவர்களும் ஆசிரியப் பெருமக்களாக விளங்கினர்.

கல்லூரியில் பெருஞ்சித்திரனார் பயிலும் காலத்தில் பாவேந்தர் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். எனவே தாம் இயற்றிய மல்லிகை, பூக்காரி என்னும் இரு பாவியங்களையும் எடுத்துக்கொண்டு பாவேந்தரைச் சந்திக்க புதுச்சேரி சென்றார். ஆனால் பாவேந்தர் அந்நூல்களைப் பார்க்க அக்காலத்தில் மறுத்துவிட்டதையும் பின்னர் ஒரு நூலைக் கொய்யாக்கனி எனும் பெயரில் அவரே அவர் தம் அச்சகத்தில் அச்சிட்டுத் தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவதுண்டு.

பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பயிலும் போது கமலம் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அப் பெண்ணே தாமரை அம்மையாராக இன்று மதிக்கப்படும் அம்மையார் அவர்கள்.

பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். ஐந்து ஆண்டுகள் புதுவையில் வாழ்க்கை அமைந்தது. அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1959இல் பெருஞ்சித்திரனாருக்குப் பணிமாற்றல் கிடைத்துக் கடலூருக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகர முதலித் துறையில் பணியேற்றார். பாவாணர் விருப்பப்படி தென்மொழி என்னும் பெயரில் இதழை 1959இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்துப் பெருஞ்சித்திரன் என்னும் புனைபெயரில் எழுதினார்.

தென்மொழியின் தொடக்க ஏட்டில் சிறப்பாசிரியர் பாவாணர் எனவும் பொறுப்பாசிரியர் பெருஞ்சித்திரன் எனவும் பெயர்கள் தாங்கி இதழ் வெளியானது. தென்மொழியின் 16 இதழ்கள் வெளிவந்த சூழலில் பொருள் முட்டுப்பாட்டால் இதழ் இடையில் நின்றது. பின்பு கருத்துச் செறிவுடனும் புதுப்பொலிவுடனும் மீண்டும் வந்து கல்லூரி மாணவர்கள் தமிழாசிரியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது.

தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டு ஆற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித் திரனார் அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில்தம் உரையாலும் பாட்டாலும் பெரும் பங்காற்றினார். இந்தி எதிர்ப்புப் போரில் இவர்தம் தென்மொழி இதழிற்குப் பெரும் பங்குண்டு. தம் இயக்கப்பணிகளுக்கு அரசுப்பணி தடையாக இருப்பதாலும் முழுநேரம் மொழிப் பணியாற்றவும் நினைத்து அரசுப்பணியை உதறினார். இவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாற்றப்பெற்றது. இவருக்கு இதனால் சிறைத் தண்டனை கிடைத்தது.வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ்ப்  பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார்.

பெருஞ்சித்திரனார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் பாட்டுகளையும் கட்டுரைகளையும் வரைந்தார். தம்மை ஒத்த பாவலர்களின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்.

பாவாணரின் உலகத் தமிழ்க் கழகம் தோற்றம் பெற்றபொழுது அதில் இணைந்து பணிபுரிந்தவர். அதுபோல் பாவாணர் அகரமுதலி தொகுப்பதற்கு பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கி உதவியவர்.

தென்மொழிப் பணியை முழுநேரப் பணியாக அமைத்துக்கொண்ட பிறகு 1972 இல் திருச்சியில் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு ஒன்றை நடத்தினார். 1973 இல் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு மதுரையில் நடத்த முயற்சி செய்தபோது சிறை செய்யப்பட்டார். இக்காலக்கட்டங்களில் தமிழ் உணர்வுடன் பாடல் வரைந்த உயர்செயல் நினைத்துப் பாவாணர் அவர்கள் "பாவலரேறு' என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.

தமிழகம் முழுவதும் தென்மொழி இதழ் வழியாகவும் பொது மேடைகள் வழியாகவும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனாரின் வினைப்பாடு உலகம் முழுவதும் பரவியது. எனவே மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் அழைப்பினை ஏற்று 1974இல் சிங்கை மலையகச் செந்தமிழ்ச் செலவை மேற்கொண்டார். இச்சுற்றுச் செலவிற்குப் பின் கடலூரில் இருந்து தென்மொழி அலுவலகம் சென்னைக்கு மாறியது.

திரு. செ. பன்னீர்ச்செல்வம் அவர்கள் தென்மொழி வளர்ச்சியிலும் பெருஞ்சித்திரனாரின் குடும்ப வளர்ச்சியிலும் பெரும் துணையாக நின்றார். அதுபோல் பெருஞ்சித்திரனாரின் இதழ் வெளியீட்டுப் பணிகளில் தொடக்க காலங்களில் ம.இலெனின் தங்கப்பா, மு. தமிழ்க்குடிமகன் (சாத்தையா),  பாளை எழிலேந்தி முதலான அறிஞர் பெருமக்கள் துணையாக இருந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தென்மொழி ஏட்டின் வளர்ச்சியில் பெருந்துணையாக இருந்தனர்.

இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன.

பெருஞ்சித்திரனார் தம் இதழ்களில் எழுதியதோடு அமையாமல் பகுத்தறிவு, தென்றல், முல்லை, வானம்பாடி தமிழ்நாடு, செந்தமிழ்ச் செல்வி, விடுதலை, உரிமை முழக்கம், தேனமுதம், சனநாயகம், குயில் முதலிய இதழ்களில் எழுதியவர்.

பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும். இந்நூலின் மூன்று தொகுதிகளுள்ளும் 1. தமிழ், 2. இந்தி எதிர்ப்பும் இன எழுச்சியும், 3. நாட்டுரிமை, 4. பொதுமை உணர்வு, 5. இளைய தலைமுறை, 6. காதல், 7. இயற்கை, 8. இறைமை, 9. பொது என்ற அமைப்பில் பாடல்கள் அமைந்துள்ளன. தமிழ்மொழியின் சிறப்பினையும் தமிழுக்கும் தமக்கும் உள்ள தொடர்பினையும் பெருஞ்சித்திரனார் சீரிய யாப்பமைப்பில் பாடியுள்ளார்.

"என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!''

என்று தமிழ்மொழியின் வளர்ச்சியைவிட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் பெருஞ்சித்திரனார்.

1981 இல் பாவாணர் இயற்கை எய்திய நிகழ்வு பெருஞ்சித்திரனாருக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. மொழிப்பற்றும் இனஉணர்வும் ஊட்டி வளர்த்த தம் ஆசிரிய பெருமகனாரின் மறைவு குறித்துப் பெருஞ்சித்திரனார் எழுதிய கட்டுரை கண்ணீர் வரச் செய்யும் தரத்ததாகும்.

பெருஞ்சித்திரனார் 1981 இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நிறுவித் தமிழகம் முழுவதும் இயக்கம் கட்டி எழுப்பினார். அதன் அடுத்த முயற்சியாக 1982 இல் தமிழ் நிலம் என்னும் ஏட்டைத் தொடங்கி நடத்தினார்.

1983-84 ஆம் ஆண்டில் மேற்கு உலக நாடுகளில் இவர்தம் சுற்றுச் செலவு அமைந்தது. 1985இல் மலேசிய நாட்டிற்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்தார்.

1988 இல் 'செயலும் செயல்திறனும்' என்னும் நூல் வெளிவந்தது. மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாகத் தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 11.06.1995இல் இயற்கை எய்தினார்.

இவர்தம் நினைவைப் போற்றும் வண்ணம் சென்னை மேடவாக்கத்தில் "பாவலரேறு தமிழ்க்களம்' என்னும் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி, தமிழக வரலாற்றில் அளப்பரும் பணிகளைச் செய்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வாழ்வும், படைப்புகளும், இதழ்களும் விரிவாக ஆராயப்பட வேண்டுவனவாகும்.

பெருஞ்சித்திரனாரின் நூல்கள் :

1. எண்சுவை எண்பது
2. பாவியக் கொத்து (இரண்டு தொகுதி)
3. ஐயை
4. கொய்யாக் கனி
5. கற்பனை ஊற்றுக் கட்டுரைகள்
6. பள்ளிப் பறவைகள்
7. மகபுகுவஞ்சி
8. கனிச்சாறு (மூன்று தொகுதிகள்)
9. நூறாசிரியம்
10. தன்னுணர்வு
11. இளமை உணர்வுகள்
12. பாவேந்தர் பாரதிதாசன்
13. இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்
14. வாழ்வியல் முப்பது
15. ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
16. உலகியல் நூறு
17. அறுபருவத் திருக்கூத்து
18. சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்
19. இனம் ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு?
20. செயலும் செயல்திறனும்
21. தமிழீழம்
22. ஓ! ஓ! தமிழர்களே
23. தனித் தமிழ் வளர்ச்சி வரலாறு
24. நெருப்பாற்றில் எதிர் நீச்சல்
25. இளமை விடியல்
26. இட்ட சாவம் முட்டியது
27. நமக்குள் நாம்....

நன்றி: திண்ணை இணையதளம் நாள்: 16.08.2007


திங்கள், 13 ஆகஸ்ட், 2007

புதுவைக்குப் புகழ்சேர்க்கும் அரிக்கமேடு ARIKKAMEDU

 தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரம் பண்டைக்காலத்தில் பல வணிகத்தளங்கள் இருந்தன. அவற்றுள் மாமல்லபுரம், எயில்பட்டினம் (மரக்காணம்), அரிக்கமேடு (Arikkamedu), காவிரிப்பூம்பட்டினம், கொற்கை முதலியன குறிப்பிடத்தக்கன. மேற்கண்ட ஊர்களுள் அரிக்கமேடு என்பது புதுவை மாநிலத்தின் புகழ் சேர்க்கும் முகவரிப் பகுதியாக விளங்குகிறது.

 அரிக்கமேடு எனும் பகுதி புதுவையிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அரியாங்குப்பம் ஆற்றை ஒட்டிய பகுதியாகும். அரியாங்குப்பத்தில் இருந்து வீராம்பட்டினம் செல்லும் பாதையில் காக்காயன்தோப்பு எனும் ஊருக்கு வடக்கே அமைந்துள்ளது. அரிக்க மேட்டின் வடக்கே தேங்காய்த்திட்டும், தெற்கே காக்காயன்தோப்பும், கிழக்கே வீராம்பட்டினமும், மேற்கே அரியாங்குப்பமும் எல்லைகளாக உள்ளன.


(கி.பி.17 ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்ட கட்டடப் பகுதிகள்)


 அரியாங்குப்பம் ஆற்றை ஒட்டிய பகுதியில் பழங்கால அரிக்கமேட்டுப் பகுதியை அகழாய்வு வழி அடையாளம் கண்டுள்ளனர். மிகப்பரந்து விளங்கிய அரிக்கமேடு கடல் அரிப்பாலும் இயற்கை மாற்றங்களாலும் மிகச்சிறிய தீவுப்பகுதியாக இன்று விளங்குகிறது.

 அரிக்கமேடு கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை புகழ்பெற்ற வணிகத்தளமாக விளங்கியது. வரலாற்றியல், தொல்லியல் அறிஞர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர். அயல்நாட்டுப் பயணிகளான பெரிப்புளுஸ், தாலமி முதலானவர்கள் காவிரிப் பூம்பட்டினத்திற்கும் மரக்காணத்திற்கும் இடையே "பொதுகே' என்னும் வணிகத்தலம் (எம்போரியம்) இருந்துள்ளது எனக் குறித்துள்ளனர். பொதுகே என்பது இன்றைய புதுவை சார்ந்த அரிக்கமேடு பகுதியாகும் என மார்ட்டின் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் முதலானவர்கள் கருதுகின்றனர்.




 அரிக்கமேடு ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்குமேல் பண்டைக்காலத்தில் புகழ் பெற்ற ஊராக விளங்கினாலும் அது பற்றிய எந்தக் குறிப்புகளும் தமிழ் இலக்கியங்களில், கல்வெட்டுகளில் பதிவாகாமல் உள்ளமை வியப்பளிக்கிறது. எனினும் அரிக்கமேட்டை அகழாய்வு செய்த அயல்நாட்டு அறிஞர்கள் பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டுவந்துள்ளனர். ரோமானிய அரசன் அகஸ்டஸ் காலத்தில் அரிக்கமேடு புகழ்பெற்று விளங்கியமையை இங்குக் கிடைத்த அகஸ்டஸின் உருவம் பொறித்த காசுகள் தெரிவிக்கின்றன.

 அரிக்கமேடு என்ற ஊரின் பெயர்காரணம் பற்றி அறிஞர்கள் பலரும் பல கருத்துக்களைச் சொல்கின்றனர். அருகர் சமயத்தார் இங்கு மிகுதியாக இருந்தனர். எனவே அருகன்மேடு - அரிக்கமேடு என்றானது என்பர். மேலும் அருகர் - புத்தர். புத்தர் சிலை இங்கு இருந்ததால் அரிக்கமேடு என்றானது என்பர். இவ்வாறு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அரிக்கமேட்டின் இயற்கை அமைப்பைப் பார்க்கும்பொழுது ஆற்று நீரும், கடல் நீரும் பல காலம் பரந்துபட்ட பகுதியை அரித்து மேடாக ஒரு பகுதியை மாற்றியதால் ஊர்மக்கள் வழக்கில் அரிச்சமேடு - அரிக்கமேடு என்று வழங்கி இருப்பார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது.

  அரிக்கமேட்டுப் பகுதியை இன்று பார்வையிடச் சென்றால் இன்று நமக்குப் பழந்தமிழக அகழாய்வுக் காட்சிகள் எதுவும் காண முடியாதபடி மேட்டுப்பகுதியாக மாமரத் தோப்புகளாக மட்டும் காட்சியளிக்கும். ஏனெனில் இங்கு ஆய்வு செய்த அறிஞர்கள் தங்கள் ஆய்வினை நிறைவு செய்த பிறகு அவற்றைப் பாதுக்காப்பாக மூடி விட்டனர். ஆனால் அரியாங்குப்பம் ஆற்றின் கரையோரம் மண்ணரிப்புகளுக்கு இடையே பழைய பானை ஓடுகள், செங்கல், கட்டடச் சுவர் அமைப்புகளின் எச்சம், சிறு சிறு மணிகள் இவற்றை இன்றும் கீழே கிடக்கக் காணலாம்.

  தொல்பொருள் ஆய்வுத்துறை ஏறத்தாழ 21 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றி வைத்துள்ளது. இப்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டு அளவில் கட்டப்பட்டதாக நம்பப்படும் கட்டிடச் சுவர்களின் மேல் பகுதியைக் காணலாம். அழகிய செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடச் சுவரின் இடையே மிக அகலாமான, நீளமான கற்கள் இடம்பெற்றுள்ளன. இவை பழைய அரிக்கமேட்டுக் கல் என நம்புவோரும் உண்டு.

  அரிக்கமேடு பண்டைக்காலத்தில் பெருமைமிக்க ஊராகப் புகழுடன் இருந்தது. கடற்கோளோ, இயற்கைச் சீற்றமோ, சமய மதப் பூசல்களோ, அயல் நாட்டினரின் படையெடுப்போ இவ்வூரின் பெருமையை அறிய முடியாமல் செய்துவிட்டது. ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் தமிழகத்தின் பகுதிகளைக் கைப்பற்றியபோது பிரெஞ்சுக்காரர்களின் ஆளுகைக்குப் புதுச்சேரி வந்தது.

  புதுவையைக் கைப்பற்ற ஆங்கிலேயர்கள் பலமுறை முயற்சி செய்தனர் எனினும் பிரெஞ்சியரின் ஆட்சிக்குட்பட்டுப் புதுச்சேரி இருந்தது. புதுவைக்குப் பிரான்சு நாட்டிலிருந்து பலர் கல்வி, ஆட்சி, ஆய்வின் பொருட்டு வந்தனர். அவர்களுள் லெழாந்தீய் ( Le Gentil ) என்பவர் அரிக்கமேட்டின் சிறப்பை முதன்முதல் வெளியுலகிற்குத் தெரிவித்தார். 1769 இல் இவர் தம் முயற்சி நூலாக வெளிவந்தது. இதில் அருகன்சிலை ஒன்று இருந்ததை வெளியிட்டார். ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஏற்பட்ட போர் முயற்சியால் இவ்வாய்வு முயற்சி தொடரவில்லை போலும்.



  1908-இல் பிரெஞ்சுக் கல்லூரியின் பேராசிரியர் ழவோ துய்ப்ராய் (Jouveau Dubreuil ) என்பவர் அரிக்கமேட்டுப் பகுதியில் சிறுவர்கள் வைத்து விளையாடிய பலவண்ண மணிகள், மட்பாண்ட ஓடுகளைச் சேகரித்தார். துய்ப்ராய் வேண்டுகோளின்படி 1939இல் வியட்நாமில் இருந்து அரிக்கமேட்டு ஆய்விற்கு அறிஞர் ஒருவர் வந்தார். கொலுபேவ் என்னும் அந்த அறிஞரின் ஆய்வின் பயனாக அகஸ்டஸின் தலை பொறிக்கப்பட்ட கோமேதகப் பதக்கமும், ஒருபுறம் யானை உருவமும் மறுபுறம் சிங்கம் பொறிக்கப்பட்ட உரோமானிய நாணயங்களைக் கண்டு வெளியிட்டார்.

 1940 அளவில் அரிக்கமேட்டுப் பகுதியில் பூமியில் தென்னம்பிள்ளை நடுவதற்குக் குழிதோண்டிய பொழுது மண்சாடி, மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன. இதன் விளைவாக 1944இல் மார்ட்டின் வீலர் அரிக்கமேடு பகுதியில் பல்வேறு உண்மைகள் மறைந்து இருக்குமென நினைத்து அகழாய்வில் ஈடுபட்டார். இதில் பல்வேறு உண்மைகள் வெளியுலகிற்குத் தெரியவந்தன.

  1949இல் கசால் என்பவர் அரிக்கமேட்டு உண்மைகளைப் பிரெஞ்சில் நூலாக வெளியிட்டார். 1980இல் அமெரிக்காவின் பென்சில்வேனிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விமலா பெக்லி ஆய்வு செய்து 1983இல் ஒரு கட்டுரை வெளியிட்டார். இதில் அரிக்கமேட்டுப் பகுதியில் கிடைத்த சாயத்தொட்டி உறைகிணறு, மதுச்சாடி, பிராமி எழுத்து அமைந்த பானை ஓடு, யவனக் குடியிருப்பின் சுவர்ப் பகுதிகளைப் பற்றி ஆராய்ந்து எழுதினார். தொடர் ஆராய்ச்சியின் விளைவாக விமலா பெக்லி தம் குழுவினருடன் உருவாக்கிய அரிக்கமேடு தொடர்பான இரண்டு நூல் தொகுதிகள் அரிக்கமேட்டின் பெருமையை முழுவதும் தாங்கியுள்ளன.

முனைவர் மு.இளங்கோவனும், முனைவர் சு. வேல்முருகனும்
(2007 இல் எடுக்கப்பட்ட படம்)


அயல்நாட்டினர் பல்வேறு காலங்களில் உருவாக்கிய ஆய்வு முயற்சிகளைத் தொடர்ச்சியாக இன்று கிடைக்கும் அறிவியல் தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்திச் செய்திருந்தால் மிகப்பெரும் உண்மைகள் தெரிந்திருக்கும். பழமையைப் போற்றாத நம்மக்களுக்கு இது மிகப்பெரிய இழப்பாகும்.

அரிக்கமேட்டுப் பகுதியில் கிடைத்த பொருட்கள் :

  அரிக்கமேட்டுப் பகுதியில் அகழாய்வு செய்துப் பார்த்த அறிஞர்கள் அழகிய செங்கல் சுவர், ஈமத்தாழிகள், பலவண்ண மணிகள், பலவகை ஓடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இங்குக் கிடைக்கும் பல்வேறு மணிகளை ஒத்துக் கிழக்குக் கடற்கரையின் பழந்தமிழக நகரங்களிலும் மணிகள் கிடைக்கின்றன. கழிமுகப் பகுதிகளில், கிடைத்த ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.

  பதினொரு அடி ஆழத்தில் ஒரு மண்டை ஓடும், பூணைக்கண் மணிகளும் கிடைத்துள்ளன. மணி உருக்குச் சட்டங்கள். சாயக்கலவை படிந்த ஓடுகள், கோமேதகக் கல், பச்சைமணிக்கல், படிகமணிகள், அரைத்தான் ஓடுகள், ரோமாணிய காசு, மோதிரம், உறைகிணறுகள் முதலியன குறிப்பிடத்தக்க பொருள்களாகும். இங்குக் காணப்படும் உறைகிணற்றில் சாயம் படிந்து காணப்படுவதால் துணிகளுக்குச் சாயம் ஏற்றும் தொழில் இங்கு நடைபெற்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

  அரிக்கமேட்டுப் பகுதியில் பல்வேறு வடிவங்களில் மணிகள் கிடைப்பதாலும், அவற்றில் வேலைப்பாடுகள் காணப்படுவதாலும் இங்கு மணிஉருக்குத் தொழிற்சாலைகள் இருந்தனவோ என்று எண்ண வேண்டியுள்ளது.

  பண்டைக்காலத்தில் மணிகளை உருக்கி, காய்ச்சி, துளையிட்டு, தூய்மை செய்து மணிகளை உருவாக்கியுள்ளனர். இங்கு நீலமணி, பச்சைமணி, ஊதாமணி, கருப்பு மணி மிகுதியாகக் கிடைத்தன. தங்கக் காசுகளும் செப்புக் காசுகளும் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. ஏறத்தாழ 200 வகையான மட்பாண்ட ஓடுகள் இங்குச் சேகரிக்கப்பட்டுள்ளன. பானை ஓடுகளில் "அண்டிய மகர்', அந்தக, ஆவி, ஆமி, ஆதித்தியன் எனும் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

 கூர்முனைச் சாடிகளில் பழச்சாறு தயாரித்து மண்ணில் புதைத்து உண்டுள்ளனர். பழங்காலத்தில் அயல்நாட்டினரை (ரோமானியர்) யவனர் என்றழைத்தனர். இவர்கள் மது அருந்தும் இயல்பு உடையவர்கள். இந்த யவனர்கள் மிகுதியாக இப்பகுதியில் தங்கியிருந்தமைக்குக் கூர்முனைச் சாடிகள் சான்றுகளாக உள்ளன.

  எலும்பில் அமைந்த எழுத்தாணி, தங்கத்தில் செய்த கலைப்பொருள், மீன் முள்ளாலான கலைப்பொருள்கள் கிடைத்துள்ளன. சுடுமண் பொம்மைகளில் மனித உருவங்கள் கலைநுட்பத்துடன் காட்டப்பட்டுள்ளன. முடி, முலை, முகம் சிறப்புடன் காட்டப்பட்டுள்ளன. கிளிஞ்சல், சங்கு இவற்றால் செய்த பொருள்களும் கிடைத்துள்ளன.

    உரோமானிய விளக்கு, மரச்சாமான்கள், வடகயிறு, மரச்சுத்தி முதலான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் அரிக்கமேட்டு அகழாய்வில் கிடைத்துள்ளன. அரியாங்குப்பம் ஆற்றால் அரணிட்டுக் காக்கப்படும் அரிக்கமேட்டுப் பகுதியில் நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தித் தொடர் ஆய்வு செய்யும்பொழுது, பழந்தமிழகத்தின் பெருமையையும் அயல்நாட்டுடன் கொண்டிருந்த கப்பல் வழி வணிகத்தையும் நிலைநாட்ட முடியும்.

நன்றி: 
தினமணி புதுவைச்சிறப்பிதழ் நாள் :19.07.2007 (அனைத்துப் பதிப்புகளிலும்)

சனி, 11 ஆகஸ்ட், 2007

பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்குப் பாராட்டுவிழா

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர்
பொன்னவைக்கோ அவர்கள் அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழ் இணையப்பல்கலைக்கழத்தின் இயக்குநராக இருந்து தமிழை இணையத்தில் பயன்படுத்துவதற்கு இவர் எடுத்தமுயற்சி அனைவராலும் போற்றப்பட்டது.

தனித்தமிழிலும் தொழில்நுட்பத்திலும் இவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.உலகத்தமிழர்களால் பாராட்டும் பணிகளை இவர்தம் பதவிக்காலத்தில் செய்துமுடித்தார்.

தமிழ்ப்பற்றும், தமிழ்உண்வும் கொண்ட முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களுக்குத் தஞ்சாவூரில் 13.08.2007 ஆம்நாள் மாலை 6 மணிக்குப் பெசண்டு அரங்கில் தமிழியக்கம் சார்பில் பாராட்டுவிழா
நடைபெறுகிறது.

முன்னாள் துணைவேந்தர் முத்தையாமாரியப்பன் அவர்கள்
தலைமையில்விழா நடைபெறுகிறது.

முனைவர் கு.திருமாறன், திரு.சோமசுந்தரம், திரு.கோ.இளவழகன்,
பொறிஞர்பாலகங்காதரன்,மருத்துவர்நரேந்திரன்,பேராசிரியர்திருமுதுகுன்றன்,
முனைவர் இளவரசு, முனைவர் மு.இளமுருகன் உள்ளிட்டதமிழகத்து அறிஞர்கள் கலந்துகொள்கின்றனர்.

தமிழை இணையத்தில் உலவிட்ட தமிழ்ப்பற்றாளரை
நாமும் வாழ்த்துவோம். பாராட்டுவோம்.

முனைவர் மு.இளங்கோவன்
பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரி
புதுச்சேரி,இந்தியா

muelangovan@gmail.com
பேசி: +9442029053

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2007

சென்னை வலைப்பதிவர் பட்டறை 2007

  சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்இலக்கியத்துறை மெரினா வளாக அரங்கில் சென்னை வலைப்பதிவர் பட்டறை 2007 என்னும் தலைப்பில் 2007 ஆகத்து மாதம் 5ஆம் நாள் தமிழ் வலைப்பதிவர் பட்டறை தொடங்கியது. காலை 9.30 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெற்ற பட்டறையில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் அயல்நாடுகளில் இருந்தும் 274 பேராளர்கள் பங்கு பெற்றனர்.

  இப்பட்டறையில் பங்கு பெற்றவர்களை இருவகையில் அடக்கலாம். கணினித் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து கொண்டு தமிழ் வலைப்பதிவு செய்பவர்கள், கணினித் துறை சாராமல் தமிழில் வலைப் பதிபவர்கள் என்பது அவ்வகைப்பாடாகும்.

  இப்பட்டறையில் தலைவர் உரை, வரவேற்புரை, பொன்னாடை அணிவித்தல், பரிசளித்தல் போன்ற எந்தச் சடங்குகளும் இடம்பெறவில்லை. தாங்கள் கற்றதை மற்றவர்களுக்குத் தானே எதிர்பார்ப்பு இல்லாமல் பயிற்றுவித்தலை நோக்கமாகக் கொண்டவர்கள் வந்திருந்தனர். அதுபோல் கணிப்பொறி தொடர்பாகவோ, இணையம் தொடர்பாகவோ எதுவும் தெரியாது, புதியதாகக் கற்க வந்துள்ளோம் என்று வெளிப்படையாகவே சொல்லி கற்கும் நோக்கம் உடையவர்களும் வந்திருந்தனர். இன்னொரு பிரிவினர் கணினி, இணையம் பற்றிய ஓரளவு அறிமுகமான தகவல்களை மெருகேற்றிக்கொள்ள வந்தனர்.

  விழாவின் தொடக்கமாகப் பட்டறையின் அமைப்பாளர்களுள் ஒருவரான விக்கி அவர்கள் பட்டறையின் நோக்கம், பட்டறை நடைபெறும் விதம் இவற்றைக் கூறி யார் வேண்டுமானாலும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளலாம். தகவல் பரிமாறும் பொழுது கூடுதல் தகவல் தெரிந்தவர்கள், இடையில் விளக்கம் சொல்லிப் பங்கேற்கலாம். பங்கேற்போருக்குச் சலிப்பு ஏற்பட்டால் இடையில் தனியே அமர்ந்து பேசிக் கொள்ளலாம் என்று பட்டறையின் விடுதலையான நிகழ் முறையைக் குறிப்பிட்டார். சிவக்குமார் இடையில் புகுந்து மேலும் சில தகவல்களைப் பேராளர்களுக்கு விளக்கினார்.

  ஓசை செல்லா அவர்கள் பட்டறை நிகழ் முறையைத் தம் கைப்பேசி வழியாகப் படம் பிடித்து உடனுக்குடன் உலகிற்கு இணையம் வழியாகத் தெரிவித்தார். இது புதியவர்களுக்கு வியப்பாக இருந்தது. எழுத்தாளர் மாலன் தமிழ் வலைப்பதிவுகளில் பொழுதுபோக்கு அம்சம், நிகழ்ச்சிகள், தனிமனிதச் சாடல்கள் உள்ளனவே தவிர தரமான உள்ளடக்கம் தேவை என வலியுறுத்தினார்.

  புதுச்சேரி மு. இளங்கோவன் அரிக்கமேடு, கோபாலையர், பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் போன்ற தமிழறிஞர்களைப் பற்றியும் நிகழ்காலத் தமிழறிஞர்களைப் பற்றியும் வாழ்க்கைக் குறிப்புகள் இணையத்தில் பதியாமல் உள்ளதை விருப்பத்தோடு குறிப்பிட்டார். இராம்கி ஈழம் சார்ந்த தமிழர்கள் தமிழ் வலைப்பதிவுக்கும் பரவலுக்கும் வழி வகுத்ததை நினைவு கூர்ந்தார்.

  தமிழ் வலைப்பதிவில் ஆர்வமுடன் செயல்படும் பல இளைஞர்கள் தங்கள் வலைப்பதிவு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். லக்கி, பிணாத்தல், பாலபாரதி, செந்தழல்ரவி, ஓசைசெல்வா, விக்கி, சிவா, காசி, பூர்ணா, முகுந்த் முதலானவர்கள் இடையிடையே விவாதங்களில் பங்கேற்றனர். பல தகவல்களைப் பரிமாறிக்கொண்டனர். இஸ்மயில் அவர்கள் கணினியில் இரகசியக் குறியீடுகள் திருடப்படும் விதத்தையும், நமக்குத் தெரியாமல் நம் கணினிச் செய்திகள் யார் யாருக்கு அனுப்பப்படுகின்றன என்பதைக் கண்காணிக்கும் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள விதத்தையும் சொன்ன பொழுது பட்டறையில் இருந்தவர்கள் மருண்டு போயினர். ஏனெனில் நமக்குத் தெரியாமல் நம் கணிப்பொறியை இரகசியமாகக் கண்காணிக்கும் அளவிற்குத் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளதை எண்ணி வியந்தனர்.

  கிராமப் புறங்களில் உள்ள படிப்பறிவு குறைந்த மக்களுக்கும் கணினி, இணையப் பயன்பாட்டைப் புரிய வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இணையம் வழியாக மட்டும் அறிமுகமாகியிருந்த வலைப்பதிவர்கள் நேரடியாக ஒருவருடன் ஒருவர் அறிமுகமாகித் தங்கள் பணிகளைப் பகிர்ந்து கொண்டனர். தோழர் ஆசிப் மீரான், அண்ணா கண்ணன் முதலானவர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் நான் உரையாட முடியாமல் போனமைக்கு வருந்துகிறேன். அண்ணா கண்ணனின் தமிழில் இணைய இதழ்கள் நூலை முன்பே கற்றவன் என்பதை அவரிடம் சொல்லியிருக்கலாம்.

  ஓசை செல்வாவிடம் எப்படியும் என்னை ஒரு படம் எடுத்து உலவவிடுங்கள் என்று கேட்டபொழுது கைபேசியை எங்கோ மறந்து வைத்து வந்ததைச் சொல்லித் தப்பி விட்டார். அவருக்கு உள்ள பல அலுவல்களில் தமிழில் தட்டச்சுச் செய்ய இயலவில்லை என்று சொல்லிப் பலரை நேர்காணல் கண்டு ஒலி வழியாக அறிமுகம் செய்யும் பெரும்பணியைச் செய்து வருகிறார்.

  கணிப்பொறி நிறுவனங்களில் பணிபுரியும் தமிழ்த் தோழர்கள் தமிழ் மொழியை எந்த அளவு நேசிக்கின்றனர் என்பதை இப்பட்டறையில் புரிந்து கொள்ள முடிந்தது. உலகத் தொழில் நுட்பங்களை உடனுக்குடன் தமிழிற்கு அறிமுகம் செய்யத் துடிக்கும் அவ்இளைஞர்கள் வழியாகத் தமிழ் மொழி இன்னும் வளம் பெறும்.

வலைப்பதிவர் பட்டறை நடைபெற்ற விதம்

 வலைப்பதிவர் பட்டறைக்கு வந்தவர்கள் இணையம் வழியான அறிவிப்புகளையும், செய்தித்தாள் செய்திகளையும் கண்டே துல்லியமாக வந்தனர். 274பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர். இன்னும் கூடுதலாக எண்ணிக்கை இருக்கும். காலையில் வந்ததிலிருந்து நிகழ்ச்சி முடியும் வரை உற்சாகத்துடன் அனைவரும் பங்கு பெற்றனர். பகல் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறு குறிப்புச் சுவடி, எழுதுகோல், முகவரி அட்டை, கணிச்சுவடி என்னும் நூல், சாவிக் கொத்து உட்பட அனைவருக்கும் வழங்கப்பட்டது.

 பட்டறை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. கீழ்த்தளத்தில் கணினி, இணையம் தொடர்பான விரிவுரைகள் நடைபெற்றன. மேல்தளத்தில் செய்முறை அரங்காகப் பட்டறை நடைபெற்றது. தமிழ்த் தட்டச்சு, எழுத்து உருமாற்றம், பிளாக்கர் தமிழ், வேர்ட்ஸ் தமிழ், யஹச்.டி.எம்.எல்., ஒலி-ஒளிப் பதிவு, பிளாஷ், புகைப்படம், திரட்டிகள் பற்றி கணிப்பொறியில் செய்முறைப் பயிற்சி முறை விளக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களும் பேராளர்களும் பயிற்சி பெற்றனர்.

 செந்தழல் ரவி பலருக்கு மின்னஞ்சல் முகவரி உருவாக்கம் தொடர்பான அடிப்படையான பணிகளைச் செய்து காட்டினார். பிளாக்கரில் எவ்வாறு செய்திகளை உள்ளிடுவது, இணைப்புத் தருவது போன்ற அவர்தம் விளக்கங்கள் புதியவர்களுக்கு நன்கு பயன்பட்டன. இதற்காக மேல்தள அறையில் பல கணிப்பொறிகள் தற்காலிகமாக நிறுவப்பட்டிருந்தன.

பட்டறையில் பேசப்பட்ட செய்திகள்...

  தமிழில் இணையம் அறிமுகம், தமிழிணைய மைல் கற்கள், தமிழ் வலைப்பதிவுகள் அறிமுகம், வலை நன்னடத்தை, வலைப்பாதுகாப்பு, வலைப்பதிவுகள் மூலம் சம்பாதித்தல், வலைப்பதிவர்களின் சமுதாய அக்கறை, இன்றைய நுட்பமும் நாளைய தொழிலும், தமிழ் சார்ந்த புதிய முயற்சிகள் முதலான பொருளில் பலர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

விக்கியின் பேச்சில்...

  தமிழ் காலத்திற்கு ஏற்பத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழி. உலகின் எந்த மொழியிலும் இதுபோலப் பட்டறை நடைபெற்றதாகத் தெரியவில்லை. தமிழ் வலைப்பதிவு பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க இப்பட்டறை உதவும். கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இப்பயிற்சி வழங்கப்பட வேண்டும். இன்றைய நிகழ்வுகள் யாரையும் பாதிக்காமல் இருக்க வேண்டும். யாரும் யாரையும் சார்ந்திருக்காமல் விடுதலையாக இந்த அரங்கில் செயல்படலாம் என்றார்.

மாலன்...

  தமிழும் தொழில்நுட்பமும் இணையும் இடத்தில் உதவ வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வது வழக்கம். இணையத்தில் இடம்பெறும் தமிழின் உள்ளடக்கம் பற்றி சிந்திக்க வேண்டும். தொழில்நுட்பம் தமிழ்ப்படுத்தப்பட்டுவிட்டது. தமிழ் உள்ளடக்கத்தை நாம்தாம் கொடுக்க வேண்டும். தமிழ் இன்று உலக மொழியாக உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் உலகம் முழுவதிலிருந்தும் தமிழ்ப் படைப்புகள் கொடுக்கப்படுகின்றன. உலகச் சூழலில் இருந்து தமிழை அணுக வேண்டும். மைக்ரோ சாப்ட் நிறுவனம் தமிழைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

  சிங்கப்பூர் அரசு தந்த ஊக்கம் தமிழ் இணைய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. தமிழ் இணைய மாநாடுகள் கணினி முயற்சியை உலக அளவில் ஒருங்கிணைத்தது. எழுத்தாளர்கள் இணையத்திற்குள் வந்ததால் இணைய இதழ்கள் உருவாயின. புது எழுத்தாளர்கள், படிப்பாளிகள் (வாசகர்கள்) இணையத்திற்கென வந்தனர். இணைய இணைப்புகளைக் கிராமங்களில் பெறுவது பெரும் சிக்கலாக உள்ளது. இணையத்தை, கணிப்பொறியைக் கருவி மொழிபெயர்ப்புக்குப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

  கருவி மொழிபெயர்ப்பில் தமிழை நடைமுறைப்படுத்த சில முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்மொழி பேச்சுவழக்கு, நடை வேறுபாடு கொண்ட மொழி என்பதால் கருவி மொழிபெயர்ப்பில் சிக்கல் உள்ளது. இணையம் வழியாக உடனுக்குடன் பின்னூட்டங்களைத் தெரிவிக்க முடியும். வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஊடகமாக வலைப்பதிவு (பிளாக்கர்) உள்ளது. வலைப்பதிவில் எழுதுவதற்குரிய காரணம் என்னவெனில் தொழில் நுட்பத்தால் உற்சாகம் பெற்றவர்கள் எழுத வருகின்றனர். தன் படைப்புகளைப் பிறர் திருத்துவதை விரும்பாதவர்களும் வலைப்பதிவிற்கு வருகின்றனர் உலகம் முழுவதும் படைப்புகள் செல்வதால், தேடுதல் வசதி உள்ளதால், உடனடியாக வெளி வருவதால் இணையத்தில் எழுத அனைவரும் முன்வருகின்றனர்.

  இணையத்தில் மொழியின் நெறிகளுக்கு உட்பட்டு எழுத வேண்டும். தன்னுடைய பக்கத்தை அனைவரும் கவனிக்க வேண்டும் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித்திறமையுடன் வலைப்பக்கத்தை வடிவமைக்கின்றனர்.இணையம் ஒரு கட்டற்ற ஊடகம். இதற்குப் பின்னூட்டம் பெரும் உதவியாக இருக்கும். யாருக்குச் சுதந்திரம் அதிகமாக உள்ளதோ அவருக்குப் பொறுப்புணர்வும் அதிகம். எனவே சுதந்திரமாகச் செயல்பட வாய்ப்புள்ள இணையப்பதிவில் சமூக நலன் நோக்கிப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். என் வலையுடன் தொடர்பில்லாத பின்னூட்டம் இடப்படாது எனவும் தனிநபரைத் தூற்றும் பின்னூட்டம் இடப்படாது எனவும் அறிவிப்புகளுடன் பதிவுகள் இருந்தால் பல்வேறு தொல்லைகள் குறையும்.

சிவக்குமார்....

 தொழில்நுட்பத்தை வெளிநாட்டிலிருந்து பெற முடியும். உள்ளீட்டை நாம்தான் தரவேண்டும். தனிநபர்களால்தான் உள்ளடக்கத்தை உள்ளீடு செய்ய முடியும்.

ஆசீப் மீரான்...

தமிழ் வலைப்பதிவர் பட்டறையைத் துபாயில் நடத்த வேண்டும்.

பத்ரி...
 கணிப்பொறி எழுத்துக்கள், கடிதங்கள், ஆவணங்கள் முதலானவற்றைச் சேமிக்கவும் திரட்டவும் பயன்படுகிறது. மின்னஞ்சல், இணைய உலாவி, உரையாடல், தேடல், வலைப்பதிவு, விவாதங்கள், குரல் பதிவு, படப்பதிவு வசதிகள் இணையத்தால் கிடைத்தன. இணையம் இன்று கருவி என்ற நிலையில் இருந்து மக்கள் ஊடகமாக மாறிவிட்டது. செய்திகளைப் பதிப்பிக்கவும் இலக்கியங்களை வெளியிடவும் அறிவுக் களஞ்சியங்களை உருவாக்கவும் இணையம் உதவுகிறது. வணிகம், அரசாட்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
 தமிழ்த் தட்டச்சு அனைத்துக் கணிப்பொறியிலும் இருக்கும்படி அரசு ஆணையிடவேண்டும். தமிழ் இல்லாமல் தமிழ்நாட்டில் செல்பேசி இருக்கக்கூடாது என்று அரசு ஆணையிட வேண்டும்.

முகுந்து...

  தமிழில் முன்பு திஸ்கி,டேம், டேப், முதலான எழுத்து அமைப்புகள் இருந்தன. இன்று ஒருங்கு குறி வடிவில் எழுத்துச் சிக்கல் இல்லாமல் படிக்கும் நிலை உருவாகியுள்ளது. 1997-98ல் ஒருங்கு குறி அறிமுகமானது. தமிழைப் படித்துச் சொல்லும் தரமான செயலிகள் இன்று இல்லை. சொல்லச் சொல்ல எழுதும் செயலிகள் இல்லை, சொல் திருத்திகள் இல்லை. புத்தகத்தைப்படித்து வலையில் ஏற்றும் செயலி தேவை என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

இராம்கி...

 இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சில படைப்புகள் ஒருங்குகுறியில் இருந்தால் அனைவரும் படிக்க முடியும்.

காசி...

  இன்று இணையத்தை அரசு, தனியார், குழு, கல்வி நிறுவனம், தனிநபர் எனப் பலரும் வைத்துள்ளனர். வலைப்பதிவு செய்வதற்கு முன்பு எழுதுபவர், தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் தேவை. இன்று நாமே தட்டச்சு செய்து வெளியிட்டுவிட முடியும். வாசகர்கள் பங்கேற்கும்படி வலைத்தளங்கள் உள்ளன. வலைப்பதிவில் இடம், காலம், தடையில்லை. எவ்வளவு கடிதங்களையும் வெளியிடலாம். படங்களை வெளியிடலாம்.

வலைப்பாதுகாப்பு பற்றி...

 குடும்பத்தினர் புகைப்படங்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். இப்படங்களை வெளியிடும் போது இவற்றைப் பிறர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. புதிய பதிவாளர்கள் பதிவு மட்டும் செய்தால் போதும், பிற வலைப்பதிவர்களைத் தேவையற்ற விமர்சனம் செய்வதைத் தவிர்த்தல் நன்று.

  ஈழச்செய்திகளை இன்றைய செய்தித்தாள்கள் சரியாகவும், உண்மையாகவும் வெளியிடுவதில்லை. ஆனால் இணையம் வெளியிடுகிறது. சட்டதிட்டங்களை உடைத்துச் செய்திகளை ஆக்கப்பூர்வமாக வெளியிட இணையம் பெரிதும் உதவும். எழுதுபவர், படிப்பவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை உடைத்து அறிவைப் பரவலாக்க, பொதுமைப்படுத்த இணையம் பெரிதும் உதவுகிறது. மென்பொருள்கள் யாவும் இலவசமாக கிடைப்பதால் யார் வேண்டுமானாலும் இணையத்தைப் பயன்படுத்தலாம்.

பெரிய நிறுவனங்களால் மட்டும் செய்தியை உடனுக்குடன் தரமுடியும் என்றில்லை. தனிநபர்களால் தரமுடியும் என்பதற்குச் சற்றுமுன்... என்னும் இணையதளம் பெரிய சான்றாக உள்ளது.

மேற்கண்டவாறு பலரும் பயனுடைய தகவல்களை நிறைவாகப் பரிமாறிக்கொண்டனர்.

பட்டறையின் நிறைகுறைகளைப் படிவத்தில் பதிவு செய்து பேராளர்கள் வழங்கியதுடன் பட்டறையின் வெற்றிக்கு உழைத்தவர்கள் மேடையில் நிறைவாகக் கூடிநின்றனர்.

பயனுடைய சந்திப்பு.பரவ வேண்டிய செய்திகள்.பலரும் மகிழ்ச்சியுடன் விடைபெற்றோம்.

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி, இந்தியா

muelangovan@gmail.com
muelangovan.blogspot.com

நன்றி: திண்ணை இணைய இதழ் 09.08.2007

தமிழ் வலைப்பதிவர் பட்டறை 2007

 தமிழ் வலைப்பதிவர் பட்டறை சென்னைப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் மெரினா வளாகத்தில் 2007 ஆகத்து மாதம் 5 ஆம்நாள் ஞாயிறு காலை 9.30 முதல் மாலை 5.30 வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது. 274 பேராளர்கள் பதிந்துகொண்டு பங்கேற்றனர்.

விரிவான செய்திகளை விரைந்து பதிவு செய்வேன்.

மு.இளங்கோவன்