நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 31 மார்ச், 2007

சிலப்பதிகாரம் தமிழரின் இசையறிவுக் கருவூலம்

 தமிழில் எண்ணற்ற இலக்கியங்கள் தோன்றியுள்ளன எனினும் மற்ற நூல்களுக்கு இல்லாத சிறப்புக்கூறுகள் பல சிலப்பதிகாரத்திற்கு உண்டு. இந்நூலை முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என இதன் பொருண்மையுணர்ந்து பெயரிட்டு அழைப்பது உண்டு. இதன் காவியச்சுவையில் மயங்கி நெஞ்சையள்ளும் சிலம்பு எனப்பாராட்டுவதும் உண்டு. இவ்வாறு பலவகையில் சிலம்பைச் சுவைத்து மகிழ்ந்து பாராட்டினாலும் சிலப்பதிகாரக் கடல் முழுவதையும் நீந்திக் கரைகண்டவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்று கூறும் அளவில்தான் உள்ளது. இசைமேதை வீ.ப.க.சுந்தரம் அவர்கள் பத்தாண்டுகள் சிலப்பதிகாரத்தைத் தொடர்ச்சியாகக் கற்ற பிறகே சிறிதளவு விளங்கிற்று எனவும், அறுபது ஆண்டுகள் கற்ற பிறகும் இன்னும் பல இடங்கள் விளங்கவில்லை எனவும் கூறிய கூற்றுகள் (கட்டுரையாளர் இசைமேதை அவர்களின் உதவியாளர்) சிலப்பதிகாரத்தின் ஆழ அகலங்களைக் குறிப்பிடும் சான்றுகளாகும். 
 சிலப்பதிகாரம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய நூல் என்பது பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகும். அதன்படி இன்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டநூலாகக் கருதலாம்.அக்காலத்தில் தமிழ்மொழியில்,தமிழ்இசையில்,தமிழ்நாடகத்தில்,தமிழ்ப்பண்பாட்டில் அயலவரின் ஆதிக்கம் மிகுதியாக இல்லை.எங்கும்தூய தமிழ்ச்சொல்வழக்குகளே புலவர்களால் ஆளப்பட்டுள்ளது(ஓரிரு அயற்சொற்கள் கலந்துள்ளமையை நெறிவிலக்காகக் கொள்க) அத்தூய தமிழ்ச்சொல்வழக்குகள் கொண்டு அமைந்த,ஒப்புமை சொல்ல முடியாத உயர்காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இசையுண்மைகளைக் குறிப்பிடும் சொற்கள் பலவற்றிற்கு இற்றை அறிஞர்களால் தெளிவான பொருள்காணமுடியாதபடி இசைத்துறை நமக்குத்தொடர்பில்லாத துறையாக ஆகிவிட்டது. இசைத்துறை வல்லார் தமிழறிவு இல்லாமலும் தமிழறிவு உடையார் இசையறிவு இல்லாமலும் ஆனமை சிலப்பதிகாரம் போன்ற நூலின் முழுத்தன்மையும் உணரமுடியாமல் போனமைக்குக் காரணங்களாகும் (இவ்விரு துறையில் வல்ல அறிஞர்கள் சிலர் வரைந்த விளக்கங்கள் - வெளிப்படுத்திய ஆய்வுகள் எளிமைப் படுத்தப்படாமல் புதிய குழப்பம்தரும் விளக்கங்களாகவே உள்ளன).

 சிலப்பதிகாரத்தில் இசை முதன்மை

 சிலப்பதிகாரம் தமிழர்களை ஒன்றிணைக்க எழுந்த காப்பியம் என்று கதையமைப்பு,காண்டங்களின் பகுப்பு முதலியவற்றைக்கொண்டு அறிஞர்கள் குறிப்பிடுவர். இக்கருத்து உண்மை என்பதற்கு வலிவான சான்றுகள் உள்ளன. எனினும் இந்நூல் இளங்கோவடிகளின் இசை, கூத்து அறிவினை வெளிப்படுத்திக்காட்டவும், தமிழர்களின் இசை,கூத்து மரபுகளின் அறிவுச் செழுமையை நிலைநாட்டவும் எழுதப்பட்டது. ஏனெனில் கோவலன் கண்ணகி கதையை மட்டும் கூறுவது அடிகளாரின் நோக்கம் என்றால் பல்வேறு இடங்களில் இசை, கூத்து பற்றிய செய்திகளை மேலோட்டமாகச் சொல்லியிருக்கலாம். அவ்வாறு இல்லாமல் இசைக்கருவிகள் பற்றியும், இசைக்கலைஞர்களைப் பற்றியும், இசைக்கருவிகளை இயக்கும்முறை பற்றியும், இயக்கும்பொழுது ஏற்படும் நிறை, குறை பற்றியும் பதியவைத்துப் பொறுப்புள்ள சமூகக்கலைஞராக அடிகளார் விளங்குகிறார். காப்பியவோட்டத்தில் இசையிலக்கணச் செய்திகளைப் பதிவுசெய்த ஓர் இலக்கிய ஆசிரியனை உலக இலக்கியங்களில் காண இயலவில்லை.

 முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்து நிலங்களில் வாழும் மக்கள் அவரவரும் தத்தம் நிலம்சார்ந்த இசைக்கருவிகளையும், பண்ணையும் பயன்படுத்தினர். சிற்றூர் மக்கள் தங்கள் நாட்டுப்புற இசைவடிவங்களைப் பயன்படுத்தினர். இவற்றையெல்லாம் திட்டமிட்டவாறு அடிகளார் உரிய இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.

 இளங்கோவடிகள் குறிப்பிடும் இசைக்கருவிகள், இசைக்கருவிகளை வரிசைப்படுத்தி இயக்கியமுறைகள், இசைகுறித்த சொற்கள் யாவும் தமிழ்நெறி சார்ந்தன. ஆனால் அண்மை நூற்றாண்டுகளில் இசை, நாட்டியத் துறைகளில் புகுந்த அயலவர்களின் செல்வாக்கால் நம் தமிழ்ப்பண்கள், அடவுமுறைகள் முதலியவற்றிலெல்லாம் பயன்படுத்தப்பட்ட தமிழ்ச்சொற்களை அழித்து, அதற்கு வடமொழிப்பெயர்களை இட்டு வழங்கியதால் இப்பொழுது உண்மையை இனங்காண முடியாதபடி சூழல் உள்ளது. இத்தெளிவின்மையை மாற்றிப் புத்தொளி பாய்ச்சி சிலம்பை விளங்கவைக்க முயன்றவர்களுள் ஆபிரகாம் பண்டுவர், விபுலானந்தர், இராமநாதனார், குடந்தை ப.சுந்தரேசனார், சிலம்புச்செல்வர், வீ. ப.கா.சுந்தரனார், ச.வே.சு, இரா.திருமுருகனார் முதலானவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

 காரைக்காலம்மையார். ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், சேக்கிழார், அருணகிரியார், திரிகூடராசப்ப கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, கோபாலகிருட்டிண பாரதியார் வரை வளர்ந்து வந்த தமிழிசை மரபு இன்று இடையீடுபட்டுள்ளதையும் தெலுங்கிசை அந்த இடத்தில் பரப்பப்படுவதையும் யாவரும் அறிவோம். அதுபோல் கோயில்களில் நாட்டியமாடத் தேவரடியார்களாக இருந்து நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்த தமிழகத்துப் பெண்களிடத்திருந்து, நாட்டியத்தைக் கைப்பற்றிக் கொண்டவர்கள் பரத முனிவர்தான் (கி.பி. நான்காம் நூற்றாண்டு) வடமொழியில் நாட்டியத்தை முதன்முதல் இலக்கணமாக எழுதியுள்ளார் என்று ஆங்கில நூல்கள் வழி உலகிற்குப் பொய்யுரை புகலும் கூட்டத்தினர் தமிழகத்தில் பரவலாக உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 சிலம்பின் இசைநுணுக்கம் உணரத் துணைபுரிபவர்கள்

 சிலப்பதிகாரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுந்த நூல் என்பதால் அதனை உரையாசிரியர்களின், இசையாய்வு அறிஞர்களின் துணைகொண்டே முழுமையாக உணரமுடியும். அவ்வகையில் அரும்பதவுரைகாரர் (11-ஆம் நூற்றாண்டு) அடியார்க்குநல்லாரின் உரைக்குறிப்புகள் (11ஆம் நூற்றாண்டு), ஆபிரகாம் பண்டிதரின் விளக்கங்கள், குடந்தை ப.சுந்தரேசனார், வீ.ப.கா.சுந்தரனார், இராமநாதனார் முதலானவர்களின் விளக்கங்களின் துணைகொண்டே சிலப்பதிகார இசைநுட்பங்களை உணரமுடியும்.இவற்றுள் அரும்பதவுரை என்பது சில இடங்களில் அரிய உண்மைகளை எடுத்துரைக்கிறது. அரும்பதவுரையைத் தழுவியதாகவே பல இடங்களில் அடியார்க்குநல்லார் உரை உள்ளது. அடியார்க்குநல்லார் உரை கிடைக்காத சில இடங்கள் அரும்பதவுரையின் துணைகொண்டே உணரமுடிகின்றது. 

 அரும்பதவுரைகாரர் மேற்கோள்வரிகளைத் தொடக்கம் முடிவு மட்டுமே தருவார். பஞ்சமரபு முதலான பழந்தமிழ் இசை இலக்கண நூல்களைக் கற்றவராக அரும்பதவுரைகாரர் விளங்குவதை வீ.ப.கா.சுந்தரம் எடுத்துரைப்பார். அரும்பதவுரைகாரர் உரையைக் குறிப்புகளாக வரைந்துள்ளார். இவர் காலத்தில் பல இசையிலக்கண நூல்கள் இருந்துள்ளமையை இவர்தம் உரையை ஆழ்ந்து கற்கும்பொழுது உணரமுடிகிறது. சிலப்பதிகாரம் இசைபற்றிய பல உண்மைகளை எடுத்துரைப்பது போல அதற்கு உரையெழுதிய அரும்பதவுரைகாரர், அடியார்க்குநல்லார், நூல்பதிப்பித்த உ.வே.சா முதலானவர்கள் பல இசைச் செய்திகளைத் தெளிவுபடுத்துகின்றனர். சிலப்பதிகாரத்தில் பொதிந்துள்ள இசைச்செய்திகளை ஒவ்வொரு அறிஞர்களும் விளக்க புகுந்து, அவரவர்களுக்குக் கிடைத்த சான்றுகளின் துணைகொண்டு விளக்கியுள்ளனர். உ.வே.சாவால் விளக்கமுடியாத இடங்கள் ஆபிரகாம் பண்டிதராலும், விபுலானந்தராலும், குடந்தை ப.சுந்தரேசனாராலும், வீ.ப.கா.சுந்தரம் அவர்களாலும் விளக்கம் பெற்றுள்ளன. 

 பஞ்சமரபு என்னும் நூல் 1972,1991 இலும் இருமுறை பதிப்பு கண்டுள்ளது. இரண்டாம் முறையாக (1991) பஞ்சமரபு வீ.ப.கா.சுந்தரம் உரையுடன் வெளிவந்தபொழுது சிலப்பதிகாரத்தின் பல இடங்கள் விளக்கம் பெற்றன. அதிலும் சிறு திருத்தங்கள் செய்யவேண்டிய பகுதிகள் உள்ளதை நுட்பமாகச் சிலம்பையும், பஞ்சமரபையும் கற்கும்பொழுது தெரியவருகின்றது. பேராசிரியர் மு.அருணாசலம்பிள்ளை அவர்கள் பஞ்சமரபு வெண்பாக்கள் 24 சிலப்பதிகாரத்தில் உள்ளது எனச் சிலம்பு ஏழாம் பதிப்பில் இணைப்பாகத் தந்துள்ளார். ஆனால் வீ.ப.கா.சுந்தரம் 31 வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளதை எடுத்துக்காட்டுகிறார். வீ.ப.கா.சு காட்டும் எண்ணிக்கையில் மிகுந்து பஞ்சமரபு வெண்பாக்கள் சிலம்பில் இடம்பெற்றுள்ளன(பின்பு இது பற்றி விளக்குவேன்).

 பஞ்சமரபு நூல் கிடைக்காமல் போயிருந்தால் சிலம்பு இசையின் உண்மை வரலாறு உணரமுடியாமல் போயிருக்கும். அடியார்க்குநல்லார் பஞ்சமரபு வெண்பாக்களைக் காட்டும்பொழுது எந்தவகையான குறிப்பும் இல்லாமல் பாடலை மட்டும் காட்டுவதால் இது பஞ்சமரபு வெண்பா என உணரமுடியாமல் போகின்றது. பஞ்சமரபு நூலுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்பொழுதே உண்மை வரலாறு உணரமுடிகிறது.

 சிலப்பதிகாரத்தில் இசைத்தமிழ் இலக்கணம் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல் அவ்விலக்கணத்திற்குப் பொருந்தும் படியான இசை உருப்படிகள் பலவும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு கதையின் ஊடே இசையின் இலக்கணமும், இசைப்பாடலும் கொண்ட ஒரு நூல் தமிழிலும் பிற மொழிகளிலும் இல்லை எனலாம்.

சிலப்பதிகார இசையிலக்கணத்துடன் ஒருபுடை ஒப்புமை கொண்ட இசையிலக்கண நூல்கள்

 இசைநுணுக்கம் - சாரகுமாரன் அல்லது சயந்தகுமாரன் (அடியார்க்கு.) இந்திரகாளியம் - யாமளேந்திரர் பஞ்சமரபு - சேறை அறிவனார் பரதசேனாபதியம் -ஆதிவாயிலார் மதிவாணர் நாடகத்தமிழ்-பாண்டியன் மதிவாணனார்

 சிலப்பதிகார நூலில் தமிழர்கள் பிரித்துப்பார்த்த ஐந்து நில மக்களின் வாழ்க்கை,அவர்தம் இசை முறைகளை முறையாக இளங்கோவடிகளார் பதிவுசெய்துள்ளார். முல்லை,குறிஞ்சி,மருதம்,நெய்தல்,பாலை எனும் ஐந்து நிலமக்களின் இசையை முறையே ஆய்ச்சியர் குரவையிலும் (முல்லையாழ்), நடுகற்காதை, குன்றக் குரவையிலும் (குறிஞ்சி), வேனிற் காதையிலும் (மருதயாழ்), கானல்வரியிலும் (நெய்தலுக்குரிய விளரி, செவ்வழி) புறஞ்சேரியிறுத்த காதையிலும் (பாலையாழ்) விளக்கியுள்ளார். சிலப்பதிகார நூலுள் இசையிலக்கணச் செய்திகள் கொட்டிக்கிடப்பது போன்று அடியார்க்குநல்லார் வரைந்த பதிகவுரை மிகப்பெரும் இசை வரலாறுகளை உறுதிப்படுத்துகின்றது. அடியார்க்குநல்லார் உரைவழியும் அவ்வுரையின் துணைகொண்டு இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் வரைந்துள்ள இசைக்களஞ்சிய விளக்கங்கள் வழியும் தொடரந்து கற்றல் முயற்சியில் ஈடுபடும்பொழுது தமிழரின் இசைக்கருவூலம் சிலப்பதிகாரம் என்பதை அனைவருக்கும் தெளிவுப்படுத்தலாம்.

 சிலப்பதிகார ஆசிரியர் மங்கல வாழ்த்துப் பாடலிலும் பிற காதைகளிலும் சிறுதொடர்கள் வழியாகக்கூட மிகப்பெரும் இசை உண்மைகளைப் பதிவு செய்துள்ளார். அத்தொடர்களில் உள்ள உண்மைகளை இன்றுவரை முற்றாக வெளிப்படுத்த இயலாதவர்களாய் உள்ளோம். முரசியம்பின, முருடதிர்ந்தன ,முறையெழுந்தன, பணிலம் வெண்குடை அரசெழுந்ததொர் படியெழுந்தன, வகலுண்மங்கல வணியெழுந்தது (46-47) என்னும் சந்த நயமிக்க தொடர்களைப் படிக்கும் போது கோவலன் கண்ணகி திருமணத்தில் முழங்கிய பல்வேறு இசைக்கருவிகள் இன்றும் நம் காதுகளில் ஒலித்தவண்ணம் உள்ளன. ஆடல் அரங்கையும் திரைச் சீலைகளின் அமைப்பையும் அடிகளார் தம் காப்பியத்தில் நிலையான வகையில் காட்சிப் படுத்தியுள்ளார்.

1 கருத்து:

naveen சொன்னது…

mikka nandri enadhu seyalthittathirkku migavum udhaviyaga irundhadhu