நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

அந்தாதி அரசர் பா. சு. அரியபுத்திரனார்(11.11.1911 - 29.09.2006)



 அந்தாதி அரசர் பா. சு. அரியபுத்திரனார்

புதுச்சேரியில் புகழுடன் விளங்கிய தமிழறிஞர்களுள் அந்தாதி அரசர் பா. சு. அரியபுத்திரனார் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். அந்தாதி வகை இலக்கியங்கள் படைப்பதில் ஆற்றல் உடையவர். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் நல்ல புலமைபெற்றவர். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மாணவரான இவர் புதுச்சேரியில் நன்மாணாக்கர் பலர் உருவாகக் காரணமாய் அமைந்தவர். பள்ளிப் பணிகளுக்கு இடையே தமிழ்சார்ந்து நடைபெற்ற பல்வேறு அறப்போர்களில் கலந்துகொண்டு ஆதரவு நல்கியவர். இவர்தம் தமிழ்ப்பணிகளை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

இளமை வாழ்க்கை

அந்தாதி அரசர் பா. சு. அரியபுத்திரனார் அவர்கள் 11.11.1911 இல் புதுச்சேரியை அடுத்த கவுண்டம்பாளையத்தில் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் சுப்புராயன், பார்வதி அம்மையார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரியபுத்திரன் என்பதாகும். இவருக்குக் காசிநாதன் என்ற ஒருபெயரும் உண்டு. இவர் இளம் அகவையில் திண்ணைப்பள்ளி ஒன்றில் பயின்றார். பின்னர் அரசு பள்ளியில் பயின்று, பிரெஞ்சியர் நடத்திய பிரவே (Brevet) தேர்வில் வென்றவர். பாவேந்தரின் மாணவராக அரசு பள்ளியில் படித்த பெருமைக்குரியவர். புதுச்சேரியில் உள்ள சொசியெத்தே தே புரோகரேசீசுத்  என்ற தனியார் பள்ளியில் தொடக்க காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்னர் பிரெஞ்சு ஆளுநரின் பரிந்துரையில் இவர் அரசு பள்ளியில் பணியில் இணைந்தார்.

இல்லற வாழ்க்கை

அந்தாதி அரசர் பா. சு. அரியபுத்திரனார் அவர்கள் சரசுவதி அவர்களை மணம் செய்துகொண்டு, குலசேகரன், பாரிவள்ளல், பரிமேலழகன் என்ற ஆண்மக்களையும், பூங்கோதை, புனிதவதி, வாசுகி என்ற பெண்மக்களையும் மக்கட் செல்வங்களாகப் பெற்றவர்.

இலக்கியப் பணிகள்

அந்தாதி அரசர் பா. சு. அரியபுத்திரனார் அவர்கள் பல்வேறு அந்தாதி நூல்களைப் படைத்துள்ளார். அவையாவன:

பார்த்தசாரதி அந்தாதி
நாகாத்தம்மன் அந்தாதி
தமிழ்த்தாய் அந்தாதி
சரசுவதி கையறுநிலை அந்தாதி
வள்ளலார் அந்தாதி
அகத்தியர் அந்தாதி
சிவசடையப்பர் அந்தாதி
வலம்புரி விநாயகர் அந்தாதி
பச்சைவாழியம்மன் அந்தாதி
ஆதிபராசக்தி அந்தாதி (56 பாடல்கள் மட்டும்)

அந்தாதி அரசர் பா. சு. அரியபுத்திரனார் அவர்கள் தம் மனைவியார் சரசுவதி அம்மையார் இயற்கை எய்தியபொழுது அவருக்குத் தம் வீட்டின் முன்பாகச் சிறிய கோயில் கட்டினார். தம் மறைவுக்குப் பிறகு தமக்கும் ஒரு சிலை தம் மனைவி சிலைக்கு அருகில் அமையும்படி முன்னேற்பாடு செய்திருந்தார். அதன்படி சிலையும் அமைக்கப்பட்டது.

நன்னூல் வகுப்பு

அந்தாதி அரசர் பா. சு. அரியபுத்திரனார் அவர்கள் பன்மொழி வல்லுநர். எனினும் தமிழ் இலக்கணம், இலக்கியம் அனைவருக்கும் பரவ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் கொண்டவர். இலக்கணப் பாடங்களை ஆர்வலர்களுக்குப் பயிற்றுவித்துள்ளார். புதுச்சேரி அம்பலத்தாடையார் தெருவில் உள்ள பொதுநிலைக் கழகத்தில் இவர் மூன்றாண்டுகள் நன்னூல் பாடம் நடத்தி அனைவருக்கும் இலக்கணக் கல்வியைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். தம் வாழ்நாளில் 1671 தமிழ்த் திருமணங்களை இவர் நடத்தி வைத்துள்ளார்.

நாவன்மை மிக்கவராகவும், பெரும் புலமைகொண்டவராகவும் விளங்கிய அந்தாதி அரசர் பா. சு. அரியபுத்திரனார் அவர்கள் 30.09.2006 இல் தம் 95 ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.

நனி நன்றி:
புலவர் அரங்க. நடராசனார்
கவிஞர் கி. பாரதிதாசன் (பிரான்சு)



புதன், 18 பிப்ரவரி, 2015

குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் குறித்து வானொலி, பொதிகைத் தொலைக்காட்சியின் மேனாள் இயக்குநர் பி.யு அய்யூப் அவர்களின் மதிப்பீடு





அன்புள்ள டாக்டர் மு.இளங்கோவன் அவர்களுக்கு, நலம். நலமறிய ஆவல். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் ஆவணப்படம் தொடர்பாக நம்மிடையே இணக்கம் நேர்ந்து இருப்பதை இனிய அனுபவமாய்க் கருதுகிறேன். தாங்கள் அனுப்பிய ஒளிவட்டுக் கிடைத்தவுடன் அதற்கு இரண்டு படிகள் எடுத்து ஒன்றினைத் திருச்சி அறிவாளர் பேரவைக்கும், இன்னொன்றைத் திருச்சி ரசிக ரஞ்சன சபாவுக்கும் அனுப்பி உள்ளேன். சம்பந்தப்பட்டவர்களிடம் பேசியும் உள்ளேன். அவர்களின் முகவரியும் தொலைபேசி எண்ணும் கீழே குறிப்பிட்டு உள்ளேன். தாங்கள் தேவைக்கு ஏற்பத் தொடர்புகொள்ளவும். ….

செண்பகத் தமிழ் அரங்கோடும் முயன்றேன். அந்த நண்பர் இளங்கோவன் உங்கள் தொடர்பை வியந்து கூறினார். இவர்கள் எல்லோரும் காண்பதற்கு முன்னால் ஒளிவட்டை நான் காண நேர்ந்தது இறைவன் அருளேயன்றி வேறில்லை அன்றோ?  இனி ஒளிவட்டைப் பற்றி சில வார்த்தைகள்.


எடுத்த எடுப்பிலேயே என் இனிய சகோதரர் ரஹ்மத் பதிப்பக உரிமையாளர் ஹாஜி முஸ்தபா அவர்களைப் பற்றிய குறிப்பைப் பார்த்ததும் குளிர்ந்தது என் மனம்.

ஒளிவட்டின் ஒவ்வொரு அம்சமும் மிக நேர்த்தியாக வந்துள்ளன. சிறந்த ஒலி, ஒளி அமைப்பு, இசைக்கூட்டு, தேர்ச்சி பெற்ற நடனக் கலைஞர் தேர்வு, இயற்கைக் காட்சிகள், காவேரியின் பாய்ச்சல் இவை எல்லாமே உங்களுடைய திறமைக்கும், தகுதிக்கும் சான்று கூறுபவையாக அமைந்து உள்ளன.

ஆவணப்படம்  நெடுகிலும் கனீர் என்ற குரலில் பாடியிருக்கும்  பண்ணாராய்ச்சி வித்தகரின் பாடல்கள் மனதைக் கவர்கின்றன. சிலப்பதிகாரத்தின் மங்கல வாழ்த்தில் தொடங்கிக் கானல்வரி, ஆய்ச்சியர் குரவை முதலிய பாடல் பகுதிகளும், திருவாசகம், மற்றும் இன்ன பிற பகுதிகளும் மிகச் சிறப்பாகப் பதிவாகி உள்ளன.

அறிஞர்கள் நட்புமிகு அவ்வை நடராசன், சிலம்பொலி செல்லப்பன், இலட்சுமிநாராயணன் இன்னும் பல அறிஞர்கள் கருத்துக்கோர்வைகள் கற்கண்டாய் இனித்தன. மொத்தத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் பற்றிய ஒளிவட்டு குடந்தையாரின் தமிழ்ப்பணிக்கு ஒரு மணிமுடி. உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.

அருமை நண்பர் முத்துக்குமாரசாமி அவர்களுக்கும் விவரங்கள் கூறுங்கள்.

பிற பின் என்றும் தங்கள்
அன்பில் இன்புறும்

பி. யூ. அய்யூப்


14.02.2015 நாளிட்டு எழுதிய மடல்.