நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 13 பிப்ரவரி, 2014

இடக்க நாட்டு பொண்ணு வடக்க போனா வாழாது!



இன்று பேராசிரியர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது எங்கள் பேச்சு மரக்கானம் என்ற ஊர் பற்றி நீண்டது. மரக்கானத்தை அடுத்து இடைக்கழிநாடு என்ற ஊர் உள்ளது பற்றி நான் நினைவுகூர்ந்தேன். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தி வளமுடன் இருந்த அந்த ஊர் பற்றியும் அங்கு வாழ்ந்த மக்கள் பற்றியும் இலக்கியங்கள் கூறும் பகுதியை எடுத்து விளக்கினேன். இன்று அந்த ஊரின் நிலை பற்றி உரையாடிக்கொண்டிருந்தபொழுது பேராசிரியர் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.

திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த அந்தப் பேராசிரியருக்கு இடைக்கழிநாட்டில் திருமணத்திற்குப் பெண் பார்த்தார்களாம். ஊர்ப் பெரியோர்கள் அந்த ஊரில் வளமாக வாழ்ந்த பெண்கள் வெளியூரில் திருமணம் செய்துகொடுத்தால் இவ்வூரில் உள்ள வளங்கள் கிடைக்காமல் வாடுவார்கள் என்று நீண்ட தொலைவில் திருமணம் செய்துகொடுப்பதில்லை என்றும் அருகில் உள்ள ஊர்களில் உறவினர்களுக்கு மணவினை முடிப்பார்கள் என்றும் கூறியதைப் பகிர்ந்துகொண்டார். இதனை நினைவூட்டும் வகையில் “இடக்க நாட்டுப் பொண்ணு வடக்க போனா வாழாது” என்று ஒரு பழமொழி நிலவுகின்றது என்றும் கூறினார். இலக்கியத்துடன் தொடர்புடைய பழமொழியைக் கேட்டு வியப்பெய்தினேன்.

செவி வழிச்செய்தியாகப் பலவாண்டுகளாக நிலவி வரும் இந்தப் பழமொழி ஓராயிரம் உண்மைகளைத் தாங்கி நிற்கின்றது. இடைக்கழி நாடு கடற்கரை ஒட்டிய இயற்கை வளம் வாய்ந்த பகுதியாகும். மா,  தென்னை, நெல், முந்திரி, பலா என்று இயற்கை வளம் நிறைந்து காணப்படும் ஊரில் நீர்வளம் மிகுதி. குளிர்ச்சியான நிழல்தரும் மரங்கள் இன்றும் அதிகம் காணப்படும். கடல்வளம் அருகில் உள்ளதால் கடல்படுபொருள்களும் இங்கு மிகுதி. இந்த இடைக்கழி நாட்டை அடுத்துதான் நல்லூர் என்ற ஊர் உள்ளது. இங்குதான் நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர்பெருமகனார் வாழ்ந்துள்ளார். இவர் பாடிய நூல்தான் சங்க நூல்களுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படை.


புதுச்சேரியிலிருந்து கிழக்குக் கடற்கரைச்சாலை வழியாகச் சென்னை செல்வோர் கடப்பாக்கம் என்ற ஊரை நெருங்கும்பொழுது இடைக்கழிநாடு என்ற பெயர்ப்பலகைகளைக் காணலாம். சங்க இலக்கியச் செய்திகள் உண்மை என்பதற்கு இந்த நூலின் வருணனைகள் சான்றாக உள்ளன.

சனி, 8 பிப்ரவரி, 2014

யாழ்நூல் விபுலாநந்தரின் சிறப்புகள்



விபுலாநந்த அடிகளார்(1942 இல் தோற்றம்)

சிலப்பதிகாரத்தை வரி வரியாகக் கற்கும்பொழுது புதுப்புது உண்மைகள் எனக்குப் புலனாவது உண்டு. மூல நூல் தரும் அறிவு விருந்து ஒரு புறம் எனில் உரையாசிரியர்கள் கண்டுகாட்டும் உண்மைகள் பெருவிருந்தாகக் கண்முன் விரிந்து தெரியும். இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களுடன் உடனுறைந்து சிலம்பிலும் தமிழிசையிலும் தோய்ந்தமையே இவற்றிற்கெல்லாம் காரணம் என்று பணிவுடன் தெரிவிப்பதில் மனநிறைவு அடைகின்றேன்.

சிலப்பதிகாரத்தை அண்மையில் ஊன்றிக் கற்றவண்ணம் இருந்தேன். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுகாதையில் வரும் யாழாசிரியனின் அமைதியைப் பற்றிக் குறிப்பிடும் வரிகள் மீண்டும் மீண்டும் நினைவில் தோன்றின. இந்த வரிகள் உணர்த்தும் உண்மையை முழுமையாக உள்வாங்கமுடியவில்லையே என்ற ஏக்கம் எழுந்தது. யாழ் பற்றி எழுந்த யாழ்நூலைப் படித்துப்பார்ப்போமே என்று நுழையும்பொழுது சிலம்பில் கூறப்படும் யாழ் குறித்த 25 அடிகளை விளக்கத்தான் விபுலாநந்தர் யாழ்நூல் உருவாக்கியுள்ளார் என்று அறிந்தபொழுது வியப்பு பன்மடங்கானது.

பன்மொழிப் புலவரான விபுலாநந்தர் இராமகிருட்டிண மடத்துப்பணி, இலங்கைப் பேராதனை பல்கலைக்கழகப் பணி, அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணி என்று பல நிறுவனங்களில் பணிபுரிந்தவர். கிழக்கிலங்கையில் சிவானந்த வித்தியாலயம் என்ற பாடசாலையை நிறுவி வழிநடத்தினார். வழக்கொழிந்த இசைக்கருவியையும் தமிழர்களின் இசையையும் மீட்க அவர்கொண்டிருந்த இடைவிடா முயற்சி எண்ணி எண்ணி வியக்கின்றேன்.


அடிகளார் அவர்களின் யாழ்நூல் கரந்தைத் தமிழ்ச்சங்கம் வாயிலாக 1947 இல் வெளிவந்தது. 05.06.1947 இல் திருக்கொள்ளம்பூதூரில் ஆளுடைய பிள்ளையார்  திருநாளில் அக்கோயிலின் திருமுன்றிலில் அறிஞர்கள் முன்னிலையில் நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் வெளிவருவதற்கு கோனூர் ஜமீன்தார் பெ. ராம. ராம. சிதம்பரஞ் செட்டியார் பேருதவி புரிந்துள்ளதை நூல்வழி அறியமுடிகின்றது. சித்திரபானு ஆண்டு, ஆவணித் திங்களில் முன்னுரை எழுதப்பட்டு, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நூலின் முடிவுரை எழுதப்பட்டுள்ளது. முன்னுரையும் முடிவுரையும் நூலுக்கு இணையான பெருமைக்கு உரியன. பாயிரவியல்யாழுறுப்பியல்இசை நரம்பியல்பாலைத் திரிபியல்பண்ணியல்தேவாரவியல்ஒழிபியல் என,  7 இயல்களால் ஆனது இந்த நூல்.





பத்தொன்பதாம் நூற்றாண்டின் 1892 ஆம் ஆண்டு தமிழர்களின் இலக்கிய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க ஆண்டாகும். அந்த ஆண்டில்தான் பெரும் பேராசிரியர் உ.வே.சா. அவர்களால் சிலப்பதிகாரம் முழுமையான பதிப்பாகத் தமிழர்களுக்குக் கிடைத்தது. அந்த ஆண்டில்தான் மார்ச்சுத் திங்கள் 29 ஆம் நாள் தவத்திரு விபுலாநந்தர் அவர்கள் மயில்வாகனன் என்னும் இயற்பெயரில் பிறந்தார்.

கொழும்பில் வாழ்ந்த கைலாசப்பிள்ளை முதலியார் அவர்களிடம் சிலப்பதிகாரத்தைக் கற்ற விபுலாநந்தர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியபொழுது தஞ்சை க. பொன்னையா பிள்ளை அவர்களிடம் இசைநுட்பங்களைக் கற்றுள்ளார்.

1936 மாசித் திங்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பழந்தமிழரின் இசை சிற்பம் கலையறிவு என்ற தலைப்பில் ஆறு விரிவுரைகள் நிகழ்த்தியுள்ளார். செனட் அவுசில் நடைபெற்ற இந்த விரிவுரை ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பெற்றதால் பிறமொழியினரும் கேட்டுப் பாராட்டியுள்ளனர். இந்து நாளிதழில் (The Hindu) இவ்வுரை விவரம் வெளிவந்துள்ளது. யாழ்க்கருவியை ஓவியமாக வரைந்து அடிகளார் விளக்கியுள்ளார். இந்த உரையை நேரில் கேட்ட பெரும் பேராசிரியர் உ.வே.சா. அவர்கள் தனிநூலாக இதனை வெளியிடும்படிக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிகழ்வுகளையெல்லாம் அடிகளாரின் முன்னுரை வாயிலாக அறியலாம்.

அடிகளாரின் உரை திருச்சிராப்பள்ளி வானொலியிலும் (இருமுறை), சென்னை வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ளது.

விபுலாநந்தரின் ஆக்கங்கள் 4 தொகுதிகளாக வெளியிடப்பெற்றுள்ளன (மதங்க சூளாமணி மொழிபெயர்ப்பு, யாழ்நூல்தவிர).இசைபற்றிய கட்டுரைகளை அதிகம் எழுதியுள்ளார். தமிழர் நாகரிகம் இலக்கியவரலாறு நாடகம் மொழியியல் தொடர்பாகவும் அவரது ஆய்வுகள் அமைந்துள்ளன.

தமிழிசை மீட்சிக்கு தவத்திரு விபுலாநந்தர் அவர்கள் ஆற்றியுள்ள பணியும் யாழ்நூலும் விரிவான ஆராய்ச்சிக்கு உரியன.