நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 23 செப்டம்பர், 2009

கவிஞர் பாலா இயற்கை எய்தினார்!


பேராசிரியர் பாலா

கவிஞர் பாலா என அறியப்பட்ட பேராசிரியர் பாலச்சந்திரன் அவர்கள் 22.09.2009 சென்னையில் தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை இன்று
(23.09.2009) காலை கல்லூரிக்குச் சென்றபொழுது நண்பர்கள் சொன்னார்கள்.

நான் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தபொழுது பேராசிரியர் பாலா பற்றி நன்கு அறிந்தேன்.பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் என் முனைவர் பட்ட ஆய்வு நடந்துகொண்டிருந்தபொழுது பேராசிரியரின் புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை என்ற நூல் என்னை ஈர்த்தது.அவரை நாகப்பட்டினத்தில் நடந்த பேராசிரியர் அரசமுருகுபாண்டியன் அவர்களின் திருமணத்தில் முதன்முதல் கண்டேன்.(1994அளவில்).அரசமுருகுபாண்டியனின் சில தலித் கவிதைகளும் என்ற நூலை வெளியிட்டுப் பேராசிரியர் ஆற்றிய உரை சிறப்பிற்கு உரிய ஒன்றாகும்.அதன் பிறகு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடந்த பல்வேறு இலக்கியக்கருத்தரங்குகளில் கண்டு உரையாடியுள்ளேன்.அவரின் எளிமையும் அன்பு ததும்பும் சொற்களும் அவரை நம் உள்ளத்தில் பதியச்செய்யும்.அவரைக் காணுந்தோறும் அண்ணன் அரச முருகு பாண்டியனைத் தொடர்புகொள்ளச் சொல்லுங்கள் என்பார்.அண்ணனுக்குச் செய்தி சொல்வேன்.வழக்கமான அவர் சோம்பலால் தொடர்புகொள்ள மாட்டார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கவிஞர் பாலா பணி செய்ததால் பல்கலைக்கழகத்திற்குப் பெருமை ஏற்பட்டது.சாகித்திய அகாதெமி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.பேராசிரியர் சிற்பி உள்ளிட்டவர்களின் அன்புக்குரியவராக விளங்கியவர்.தமிழ்நாட்டு இளைஞர்களை அரவணைத்துக் கவிதைத் துறைகளில் அவர்களை ஈடுபாடு கொள்ளச்செய்தவர்.

மொழிபெயர்ப்புப் பணிகளாலும் படைப்பு நூல்களாலும் தமிழ் உலகில் அவர் புகழ் என்றும் நின்று நிலவும்.

பேராசிரியர் பாலா அவர்களை இழந்து வாடும் பேராசிரியர்கள்,மாணவர்கள்,அவர்தம் குடும்பத்தார் என அனைவருக்கும் என் ஆழ்ந்து வருத்தமும் இரங்கலும் உரிய!

பேரா.பாலா பற்றி மேலும் அறிய
http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=ce81bb2d-cb83-440b-abf5-9e976c3ec5e8&CATEGORYNAME=TCHN

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

கோவை உலகத் தமிழ்மாநாட்டை வரவேற்போம்!

கோவையில் உலகத் தமிழ்மாநாட்டை நடத்தும் விருப்பத்தைத் தமிழக முதலமைச்சர்
மாண்புமிகு கலைஞர் அவர்கள் அறிவித்த அறிவிப்பால்(17.09.2009) உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களும் தமிழ் ஆய்வாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அறிஞர் அண்ணா அவர்கள் இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டைச் சென்னையில் நடத்திய பெருமைக்கு உரியவர்கள்.அவரின் நூற்றாண்டு நிறைவுவிழா நடைபெற்ற நாளையொட்டி(15.09.2009) இத்தகு அறிவிப்பு வெளிவந்துள்ளமையால் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் தமிழக முதலமைச்சரைப் பாராட்டியவண்ணம் உள்ளனர்.

கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்மாநாட்டில் பல்வேறு ஆய்வரங்குகள் நடைபெற
வாய்ப்புள்ளது.அப்பொழுது கணிப்பொறி,இணையம் சார்ந்த அரங்குக்கு முதன்மையளித்து ஆய்வரங்குகள் அமைக்கப்பெற வேண்டும். இணையத்தில் தமிழ் வளர்ந்துள்ள போக்கு, இன்னும் செல்ல வேண்டிய தூரம் யாவும் அறிஞர்களால் விவாதிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் அண்மைக்காலமாக நடைபெறாதத் தமிழ் இணைய மாநாட்டுக் குறையை இந்த அரங்கு நிறைவு செய்வதாக இருக்கும்.


தமிழுக்கு வாய்ப்பான நேரம் இது.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில்தான் தமிழ் விசைப்பலகை 99 அறிமுகம் செய்யப்பட்டது,தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது என்ற வரலாற்று முதன்மை வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்றன.எனவே உலகெங்கும் பரவி வாழும் இணையத்தமிழறிஞர்கள், கணினித்துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு தமிழ் இணைய வளர்ச்சிக்கு உரிய ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்க இந்த மாநாட்டடைப் பயன்படுத்திக்கொள்வோம்.


கொங்கு மண்டலத்தில் தமிழ் வளர்ச்சிக்குரிய பல பணிகள் நடைபெற்றுள்ளன.சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் முதல் தெய்வசிகாமணி கவுண்டர் ஐயா உள்ளிட்டவர்கள் உலவிய மண் இஃது.மன வளமும், பணவளமும்,இடவசதிகளும் நிறைந்த பகுதி. வானூர்தி,தொடர்வண்டி,பேருந்து உள்ளிட்ட போக்கு வரவு ஏந்துகள் உடைய மாநகரம். அருகில் உதகை, பொள்ளாச்சி உள்ளிட்ட எழில்கொழிக்கும் பகுதிகள் உண்டு. உலகத் தமிழ் அறிஞர்களை வரவேற்கத் தகுந்த ஊரைத் தேர்வு செய்தமைக்கு முத்தமிழறிஞரைத் தினமணி பாராட்டியுள்ளது பொருத்தமேயாகும்.

கோவை உலகத் தமிழ்மாநாட்டை வரவேற்போம்.