நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

திருவதிகை கற்சிலைகள்



தமிழகத்தில் உள்ள கோயில்கள் ஒவ்வொன்றும் தமிழர்களின் கட்டடக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை, ஓவியக்கலை குறித்த அறிவினைத் தாங்கி நிற்கும் களஞ்சியங்களாக உள்ளன. அண்மையில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலுக்குச் செல்ல நேர்ந்த்து. இக்கோயில் அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர், திலகவதியார் பெருமையை இவ்வுலகிற்கு நினைவூட்டும் வகையில் இன்றும் கண்ணைக் கவரும் கோபுரங்களுடன் நிற்கின்றது. அப்பர் 16 பதிகங்களை இக்கோயில் இறைவன்மீது பாடியுள்ளார். சம்பந்தர் ஒரு பதிகமும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். அருணகிரியார் இக்கோயிலைப் போற்றிப் பாடியுள்ளார். வள்ளலாரும் இக்கோயிலைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

இக்கோயிலில் கருங்கல்லில் வடிக்கப்பெற்ற கற்சிலைகளைக் கண்டு வியப்புற்றேன். அக்கால மக்களின் அணிகலன், உடைகள், ஒப்பனைத் திறன் இவற்றைக் காட்டும் இச்சிலைகளை நம் மக்கள் போதிய அளவு கவனம் செலுத்திப் பாதுகாக்காமல் கைவிட்டதை நினைத்து வருந்தினேன். சிலைகளின் உடல் உறுப்புகளை நம்மவர்கள் சிதைத்துள்ளதை இப்பொழுது சரிசெய்து பாதுகாக்க முன்வந்துள்ளவர்களை நன்றியுடன் போற்ற வேண்டும்.


பல்வேறு இறைப்பெருமைகளை நினைவூட்டும் வகையில் இங்குள்ள சிலைகள் வடிக்கப்பெற்றுள்ளன. சிவன் முப்புரம் எரித்த நிகழ்வு, நாட்டியப்பெண்களின் ஒப்பனை நிறைந்த சிலைகள் கலையுணர்வாளர்களுக்குப் பெருவிருந்தாக இருக்கும். பார்வைக்குச் சில கலைஞர்களின் கைவண்ணத்தைப் படையலாகத் தருகின்றேன்.









திருவதிகையில் 108 கரணங்கள் அடங்கிய சிற்பங்கள்


கரணம் என்பது கையால் செய்யும் வினையம் என்று இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் குறிப்பிடுவார் (த.இ.க. II, பக்கம்44, 45). சிதம்பரம், தஞ்சாவூர், குடந்தை கோயில்களில் 108 கரணங்களை விளக்கும் சிற்பங்கள் உள்ளன என்ற குறிப்பைப் படித்துள்ளேன். கரணங்கள் தமிழர்களின் கூத்து, நாட்டிய மரபுடன் தொடர்புடையன. இது பற்றி இத்துறையில் வல்லுநர்கள் ஆராய வேண்டும். சிலம்பிலும் அதன் உரையிலும் கரணம் பற்றிய குறிப்புகள் மிகுதியாகப் பதிவாகியுள்ளன.

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலின் முகப்பு வாயிலில் 108 கரணங்களை விளக்கும் சிற்பங்களைக் கண்டு வியந்தேன். மொத்தம் நான்கு பகுதியாக இக்கரணங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியும் மூன்று வரிசைகளைக் கொண்டது. ஒரு வரிசைக்கு 9 என்ற வகையில் 3x9=27 என்ற வகையில் 4x 27 ஆக 108 கரணங்கள் திருவதிகை கோயிலில் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு சிற்பத்தையும் தனித்தனியாகப் படம் எடுத்து, அதனைப் பாதுகாக்க வேண்டும். இதற்குத் தரமான புகைப்படக் கருவி, ஒளி ஓவியர், உயரத்தில் அமர்ந்து எடுக்கத்தக்க வகையில் ஏணிகள், உதவியாளர்கள் தேவை. பருந்துப் பார்வையாக நான் எடுத்த சில படங்களைப் பார்வைக்குத் தருகின்றேன். தமிழாராய்ச்சி நிறுவனங்களிலிருந்து விடுபட்டு ஆய்வாளர்கள் களப்பணிக்கு வரும்பொழுது தமிழ் ஆவணங்கள் தொகுக்கப்பட வாய்ப்புகள் உண்டு. அதுவரை இருக்கைகள் தேயுமே தவிர, தமிழாய்வுகள் விடத்தரை இலை அளவுகூட வளர வாய்ப்பு இல்லை.