நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

மகிழ்ச்சியில் இயக்குநர் வ.கௌதமன்…


மகிழ்ச்சித் திரைப்படத்தில் ஒரு காட்சி

நேற்று இரவு ஓர் எழுத்துப் பணியில் ஆர்வமுடன் மூழ்கிக் கிடந்தேன். அப்பொழுது செல்பேசியில் ஒரு தவறுதல் அழைப்பு வந்து நெடுநாழிகை ஆகியும் பார்க்காமல் இருப்பதைக் கண்டேன். சிலபொழுதுகளில் முதன்மையான பணிகளில் ஈடுபட்டிருந்தால் அழைப்புகளை ஏற்கமுடியாமல் இப்படி நேர்வது உண்டு.அழைத்தவர்களின் இயல்புக்குத் தக அவர்களுக்கு நானே பேசிப், பேச விழைந்ததன் நோக்கம் என்ன என வினவுவது உண்டு.அப்படி இந்தமுறை அழைத்தவர் யாரெனக் கவனித்தால் திரைப்பட இயக்குநர் வ.கௌதமனின் அழைப்பாக இருந்தது.அவரின் மகிழ்ச்சி திரைப்படப் பாடல் வெளியீடு அண்மையில் நடந்ததை அன்பர்கள் வழியாக அறிந்திருந்தேன்.தம் திரைப்படம் சார்ந்த முயற்சிகளை அவ்வப்பொழுது எம் போலும் இளையர்களிடம் பேசி இயக்குநர் மகிழ்வது உண்டு.எனக்கும் ஓய்வாக இருக்கும்பொழுது அப்படி அழைப்பு வரும். திரைப்போக்குகள்,உலகப்போக்குகள் பற்றி உரையாடுவோம்.

நான் இயக்குநர் கௌதமன் அவர்களைச் செல்பேசியில் அழைத்தேன்.தாம் திருவாரூர் செல்வதாகவும் இடையில் புதுச்சேரியில் என்னைக் காண விரும்புவதாகவும் இயக்குநர் சொன்னார். அவர் உலவிக்கொண்டிருந்த புதுச்சேரிக் கடற்கரைப் பகுதிக்கு அடுத்த பத்து நிமையத்தில் சென்றேன். இயக்குநர் அவர்களுடன் ஐந்தாறு நண்பர்களும் உலவியபடி இருந்தனர்.


இயக்குநர் வ.கௌதமன்

அந்தப் புதுவைக் கடற்கரையில் மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியில் நம் பெருமைக்குரிய இயக்குநர் யாரென அடையாளம் தெரியாததால் நாங்கள் விடுதலையாக நடந்து சென்றோம். அங்குள்ள சட்டப்பேரவை அலுவலகத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினரைச் சந்தித்துவிட்டு அண்ணன் கௌதமன் அவர்கள் திருவாரூர் செல்வது திட்டம்.சட்டமன்ற உறுப்பினரைப் பார்க்கும் முயற்சிக்கு இடையே மகிழ்ச்சி திரைப்படம் பற்றியும் அதன் கதை, ஒளிப்பதிவு, பாடல், இசை பற்றியும் சிறிது உரையாடினோம்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மிகச்சிறப்பாக இருபாடல்களைத் தந்துள்ளதையும் அண்ணன் அறிவுமதி ஒருபாடல் எழுதியுள்ளதையும் நண்பர் பேராசிரியர் பச்சியப்பன் அவர்கள் இரு பாடல் எழுதியுள்ளதையும் இசையமைப்பாளர் வித்தியாசாகர் மிகச்சிறப்பாக இசையமைத்துள்ள பாங்கையும் இயக்குநர் மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டார்.

மகிழ்ச்சி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் விளக்கணி விழாவு(தீபாவளி)க்கு வெளிவர உள்ளது.அதற்குள் மருத்துவர் ச.இராமதாசு ஐயா அவர்களும் உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் முன்காட்சியாகப் படத்தைப் பார்த்து வெகுவாகப் பாராட்டியதையும் இருவர் உள்ளத்தையும் படம் உருக்கியதையும் ஆர்வம்பொங்க மகிழ்ச்சியுடன் இயக்குநர் கௌதமன் வெளிப்படுத்தினார்.

மிகப்பெரிய சோகத்தில் சிக்கிக் கிடக்கும் உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியோடு இந்தப் படம் வெளிவர உள்ளது.இதில் இயக்குநர் கௌதமனே கதைத்தலைவனாக நடித்துள்ளார்.இயக்குநர் சீமான் அவர்களும் சிறப்பாக நடித்துள்ளார். கலைநயம் பொருந்திப் பாசமழை பொழியும் இந்தப் படம் எழுத்தாளர் நீல பத்மநாபன் அவர்கள் எழுதிய தலைமுறைகள் புதினம் மகிழ்ச்சிப் படமாக மாறியுள்ளது கூடுதல் செய்தி.எனக்கும் பாடல்கள் அடங்கிய ஒரு குறுவட்டை இயக்குநர் வழங்கினார்.

ஊத்துத் தண்ணி ஆத்தோட
ஆத்து ஓடம் காத்தோட..

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாடல் மீண்டும் ஒரு சிற்றூர்ப்புற வாழ்வைப் பொதிந்துவைத்துள்ளது.

”ஆரால்மீனு சேத்தோட”

என்று சூழலுக்குத் தக என் சிற்றூரின் சேறு குழப்பி எழுத இனி ஒரு கவிஞர் பிறந்து வருவாரா என்று ஏங்குகிறேன் கவிப்பேரரசே!.


இயக்குநருடன் மு.இளங்கோவன்


மகிழ்ச்சிப் படத்தில் ஒரு காட்சி

வெள்ளி, 1 அக்டோபர், 2010

குறும்பட இயக்குநர் குணவதிமைந்தன்

குணவதிமைந்தன்

 உழவுத்தொழிலை நம்பியிருக்கும் இந்தப் பகுதி மக்களுக்கு வீராணம் ஏரிதான் செவிலித் தாய். ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றுச் சிறப்புடைய வீராணம் ஏரியின் தண்ணீர் சென்னைக்குக் குடிநீரான சூழலில் இந்தப் பகுதி மக்கள் வாழ்க்கையில் அச்சம் கவ்வியது. இனி நம் வேளாண்மை கட்டாயம் பாதிக்கும் என்று கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தனர்.

 வீராணம் ஏரியால் வளம்கொழிக்கும் ஊர் காட்டுமன்னார்கோயில் அருகில் இருக்கும் திருமூலத்தானம்.

 இது காட்டுமன்னார்கோயிலுக்குத் தென்கிழக்கே உள்ள ஊர். நெல்லும், கரும்பும், உளுந்தும் அறுவடை செய்து மாளாது. அறுப்பதும் அடிப்பதும் உழுவதும் அன்றாடம் நடக்கும். இப்படி இயற்கை வளம் இருந்தாலும் எந்தச் செயலுக்கும் காட்டுமன்னார்கோயில்தான் தலைமையிடம்.

 காட்டுமன்னார்கோயிலை அடுத்துள்ள பல ஊர்களில் வேளாண்மைத் தொழில் சிறப்பாக நடந்தபொழுது திருச்சிராப்பள்ளி மாவட்டம் உள்ளிட்ட பிற மாவட்டத்து மக்கள் வேலைக்கு வந்து ஓரிரு மாதங்கள் தங்கி வேலை செய்து, ஆண்டு முழுவதுக்குமான வருமானத்துடன் வீடு திரும்புவார்கள்.

 இப்பொழுது வீராணம் ஏரித்தண்ணீரை அரசு இயந்திரங்கள் உறிஞ்சி எடுத்தபொழுது பல்லாயிரக்கணக்கான மக்கள் செய்வது அறியாது கவலையுடன் கண்ணீர் மல்க அமர்ந்தனர். அந்தப் பகுதியில் இருந்த அரசியல்காரர்களோ, சமூக இயக்கங்களோ செய்வதறியாமல் கைபிசைந்து நின்றனர்.

 அந்த நேரத்தில் தன் அறிவு, ஆற்றல், நட்பு, ஊடகத்துறையின் ஒத்துழைப்புடன் ஓர் இளைஞர் கையில் ஒளிப்பதிவுக் கருவியுடன் வீராணத்துக்கரையில் வந்து நின்றார். அந்தப் பகுதி மக்களின் சோக வாழ்க்கையை ஒளிப்பதிவுக்கருவியில் படமாக்கினார். கல்கி முதலான வரலாற்றுப் புதின ஆசிரியர்களுக்குப் புலப்படாத வீராணத்து ஏரிக்கரையின் உண்மையான சோக வரலாற்றை அந்த ஏரித்தண்ணீர் குடித்து வளர்ந்த அந்த இளைஞர் உலகத்துக்குப் புதுப்பார்வையில் வெளிப்படுத்தினார். அண்ணன் அறிவுமதி அவர்கள் அந்த வீராணம் ஏரியின் ஒளிப்பதிவு ஆவணத்தை வெளியிட்டுத் தழுதழுத்த குரலில் அதனை இயக்கிய அந்த இளைஞரைத் தன் தம்பியாக அறிமுகம் செய்த அந்தச் செய்தி ஏடுகளில் வெளிவந்தபொழுது எனக்கு அறிமுகமான பெயர்தான் குணவதிமைந்தன்.

ஆம்.

 குறும்படம், ஆவணப்படம் எனப் பல படங்கள் எடுத்து முழுநீளப் படத்தை இயக்கும் ஆற்றல் பெற்றுள்ள அவரைப் பற்றி அறியும் ஆர்வம் எனக்குப் பல நாளாக இருந்தது.

 கல்லூரிப் பணியில் நான் கவனமுடன் இருந்தபொழுது குடும்பவிளக்கு குறும்படம் வெளியீட்டு விழா அழைப்பிதழுடன் வந்த குணவதிமைந்தன் அவர்களைக் கண்டேன். அவரின் பழகும் பண்பும், திறமையும், ஆற்றலும் அவர் தம்பியர்கூட்டத்துள் ஒருவனாக என்னையும் கொண்டுபோய் சேர்த்தது. கடந்த ஐந்தாண்டுகளாக நல்ல தொடர்பில் இருக்கின்றோம். அவரின் வாழ்க்கையையும் குறும்படங்களையும் இங்கு ஆவணப்படுத்த விரும்புகிறேன்.

 குணவதிமைந்தன் என்று குறும்பட உலகில் அறிமுகமான இவர்தம் இயற்பெயர் இரவி. காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள திருமூலத்தானம் என்னும் ஊரில் 18.05.1965 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் இராமையன், குணவதி அம்மா. தொடக்கக் கல்வியைக் காட்டுமன்னார்கோயிலில் முடித்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, இளம்முனைவர் பட்டங்களைப் பெற்றவர். முனைவர் பட்டத்துக்குச் சுற்றுலாத்துறை சார்ந்த தலைப்பில் ஆய்வுசெய்து பட்டம் பெற்றவர்.

 உழைக்கும் மக்களின் வாழ்க்கைச் சூழலைக் கண்முன் கண்டதால் இதழியல்துறையில் ஈடுபாடு கொண்டவர். இளமை முதல் அஞ்சாது நாட்டு நடப்புகளை எழுதியவர். படைப்பாகவும் செய்தியாகவும் இவர் ஆக்கங்கள் தொடக்கத்தில் வெளிப்பட்டன.

 இதழியல் துறையில் 1988 இல் ஈடுபட்டு, வணிக ஒற்றுமை என்னும் இதழில் எழுதத் தொடங்கி, பின்னர் கீதாமஞ்சரி, கண்கள் தமிழ்மலர், உள்ளிட்ட சிற்றிதழ்களில் எழுதினார். 1989 முதல் தினகரன், மாலைமலர், தினமலர், தினமணி உள்ளிட்ட நாளிதழ்களில் செய்தியாளராகப் பணிபுரிந்தவர்.

 1992 முதல் புதுச்சேரியில் தினமணி செய்தியாளராகப் பணியாற்றினார். பின்னர் பணி உயர்வுபெற்று இந்தியன் எக்சுபிரசு குழுமத்தில் மேலாளராகப் பணிபுரிகின்றார். தாம் ஏற்றுக்கொண்ட பணியினைச் சிறப்பாகச் செய்து முடிக்கும் இவர்தம் ஆற்றல் மற்ற இதழாளர்களுக்கு எடுத்துக்காட்டானதாகும்.

 படிக்கும் காலத்தில் திரைத்துறையில் ஈடுபாடுகொண்டு விளங்கினாலும் தம் பணிச்சூழலால் அந்தத் துறையில் தொடக்கத்தில் சுடர்விடமுடியவில்லை. எனினும் திரைத்துறை தயாரிப்பில் தன்னை எப்பொழுதும் புதுப்பித்துக்கொண்டே வந்தார்.

 இந்த நேரத்தில்(1990) “போர்த் எஸ்டேட்” என்ற குறும்படத்தை இயக்கினார். இதில் இதழாளர்கள் படும் துன்பம் பதிவானது. எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் இதழாசிரியராகவும், இயக்குநர் அருண்மொழி இதழாளராகவும் நடித்தனர். சமூக நடப்புகளை எடுத்துக்காட்டும் இதழ்களில் பணிபுரிபவர்களின் வாழ்க்கை இதில் எதிரொலித்தது. நாற்பது நிமிடம் ஓடும் படம் போர்த் எஸ்டேட்.

 அதனை அடுத்துச் சமூகப் பிரச்சனையை மையமாகக் கொண்டு வீராணம் ஏரி பற்றிய பதிவைக் குறும்படமாக எடுத்து, அந்தப் பகுதி மக்களின் சார்பில் இந்தச் சமூகத்தில் நீதிகேட்டுப் போராடினார். இதற்காக இவர் திரட்டிய வரலாற்றுச் சான்றுகள், துறைசார்ந்த வல்லுநர்களின் நேர்காணல்கள் இந்தப் படத்தின் உண்மையை நிலைநிறுத்தின. தென்னார்க்காடு மாவட்டத்து மக்களின் உயிராதாரமாக இருக்கும் வீராணம் ஏரித்தண்ணீர் சென்னை மக்களுக்குக் கொண்டு செல்வதால் தென்னார்க்காடு மாவட்டமே பாலைவனமாக மாறும் என்று இந்தப் படம் சித்திரித்து. இது இன்று கண்கூடான உண்மையாயிற்று. ஆண்டுக்கு மூன்றுமுறை அறுவடை செய்த மக்கள் இன்று ஒருமுறை அறுக்கவே துன்பப்படுகின்றனர் என்பதைக் கண்ணால் கண்டு வருந்துகிறோம். இத்தகு சமூக நிகழ்வை ஆவணப்படுத்திய இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

 பாவேந்தரின் படைப்புகளில் முதன்மையான நூல் குடும்பவிளக்கு நூலாகும். குடும்ப விளக்கில் இடம்பெறும் ஒருநாள் நிகழ்வை உண்மை வாழ்க்கையில் நடக்குமா என்று பாவேந்தரை ஏற்காத சிலர் தாழ்வாகப் பேசுவர். அவர்களின் பொய்யுரைகளை உடைத்து இயல்பான காட்சிகளாக்கிக் குடும்பவிளக்கு இன்றைய தமிழுலகத்திற்குத் தேவை என்று குணவதிமைந்தன் நிலைநாட்டினார்.

குடும்பவிளக்கு வெளியீடு


குடும்பவிளக்கு

அறிவியல் தொழில்நுட்ப உலகில் இன்று படிப்பதற்கு நேரம் குறைவாக உள்ளது. தொலைக்காட்சி, திரைப்படம் உள்ளிட்ட பொழுதுபோக்கு ஊடகங்களால் இன்று நெடுநாழிகை அமர்ந்து படிப்பது இயலாத செயலாக உள்ளது. இத்தகு நிலையில் பாவேந்தரின் குடும்ப விளக்கு நூலின் செய்திகளை எளிய நிலை மக்களும் புரிந்துகொண்டு சுவைக்கும்படியாகக் காட்சி வழியாக விளக்கியுள்ளார். தமிழ்ப்பற்றாளர்களும், பாவேந்தர் பற்றாளர்களும் வாங்கிப் பார்க்கத் தகுந்த குறும்படம் குடும்பவிளக்காகும்.

குடும்பவிளக்குப் படத்தின் சிறப்பு உணர்ந்த திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இந்தப் படம் இயக்கிய குணவதிமைந்தனை அழைத்துப் பாராட்டிச் சிறப்பு செய்தது.

புதுச்சேரியில் பாரதி

இந்திய விடுதலைப்போருக்குக் கனல் கக்கும் பாடல்களை வடித்துத் தந்த பாரதியாரின் புதுச்சேரி வாழ்க்கை அவரை ஒரு மிகச்சிறந்த இதழாளராக மாற்றியது. புகழ்பெற்ற படைப்புகள் யாவும் பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்த பத்தாண்டுகளின்பொழுதே படைக்கப்பப்பட்டன. பத்திரிகையாளரான குணவதிமைந்தன் பாரதியின் போராட்ட வாழ்க்கையை இந்தப் படத்தில் மிகச்சிறப்பாகத் தந்துள்ளார். இப்படங்கள் புதுச்சேரியில் அறிமுகமான அளவு உலகத் தமிழர்களின் பார்வைக்கு இன்னும் அறிமுகம் ஆகாமல் இருப்பது ஒரு குறையே ஆகும். ஒருமணிநேரம் ஓடும் இந்தப் பாரதி புகழ்பரப்பும் படத்தை அனைவரும் பார்க்கலாம். பாரதியோடு அருகில் வாழ்ந்த மன நிறைவை இந்தப் படம் வழங்குகின்றது.

காப்பியப் புகழ் கம்பனின் வாழ்க்கை பற்றிய புதிர்கள் இன்னும் ஆய்வாளர்களால் விடுவிக்கப்படாத சூழலில் துணிந்து நின்று கம்பனின் காவிய வாழ்வைப் படமாக்கிக் கவிச்சக்கரவர்த்தி கம்பன் என்னும் பெயரில் தமிழ் இலக்கிய உலகில் ஒரு பெரும்பணியாற்றியுள்ளார் குணவதிமைந்தன். இந்தப் படம் பிரான்சு. சுவிசர்லாந்து உள்ளிட்ட அயல்நாடுகளிலும் திரையிடப்பட்டது என்பது தனிச்சிறப்பு. ஒருமணி நேரம் ஓடும் இந்தப் படத்தில் நடிகர் இராம் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் குறும்படம் வெளியீடு


கவிச்சக்கரவர்த்தி கம்பன்

இந்திய விடுதலைக்கு உழைத்த அரவிந்தரை ஆன்மீகவாதியாக அனைவரும் அறிவோம். அவரின் இந்திய விடுதலைப் போராட்டப் பணிகளை யாவரும் உணரும்படியாகப் புதுச்சேரி அரசின் தயாரிப்பாக ஒன்றரை மணி நேரம் ஓடும் படமாகக் குணவதிமைந்தன் தந்துள்ளார். புதுச்சேரி, சந்திரநகர், கல்கத்தா, டார்சிலிங்கில் இந்தப் படம் படமாக்கப்பட்டது. நடிகர் இராம் இந்தப் படத்தில் அரவிந்தராகவே வாழ்ந்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களாகிய இருளர்களின் இருண்ட வாழ்க்கையைப் பதிவுசெய்து சமூகத்தில் அவர்களுக்கு உரிய உரிமையை மீட்க உதவும் படமாக இருளர்கள் குறித்த படத்தையும் குணவதிமைந்தன் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் இருளர்கள் வாழ்வில் முன்னேற்றங்கள் கிடைக்க, பல நல்ல திட்டங்களை அரசு உருவாக்க உதவியது.

இவை தவிரப் பல்வேறு கல்வி நிறுவனங்களையும் அவற்றின் பணிகளையும் அறிமுகப்படுத்தும் வகையில் குணவதிமைந்தன் பல படங்களை உருவாக்கித் தந்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், அறியப்பட வேண்டியத் தமிழ் இலக்கியப்பகுதிகளை அனைவரும் அறியவும் தம் ஒளிப்பயணத்தைத் தொடங்கியுள்ள குணவதிமைந்தன் தமிழ் இலக்கியத்தின், குறிபாகச் சங்க காலத் தமிழர் வாழ்க்கையினை வெளிக்கொணரும் படங்களை உருவாக்க வேண்டும் என்பது நம் விருப்பம். அவ்வாறு உருவாக்கும்பொழுது உலகத் தமிழர்கள் இத்தகு உலகு தழுவிய முயற்சிக்கு உதவ வேண்டும். குறைந்த அளவு இவருக்கு உரிய இடத்தையும் பாராட்டையும் நாம் தெரிவிக்க வேண்டும். நம் கரம் நீண்டால், குணவதி மைந்தன் அவர்கள் எடுக்கும் படங்களின் தரம் நீளும்.