நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 2 ஜனவரி, 2009

இசைமேதை காஞ்சிபுரம் நயினாப்பிள்ளை நினைவுச் சொற்பொழிவு

இடம் : மகாலட்சுமி திருமண மண்டபம்,
9.அ,வணிகர் வீதி,காஞ்சிபுரம்(அறிஞர் அண்ணா அரங்கம் பின்புறம்)

நாள் : 04.01.2009,ஞாயிறு,பிற்பகல் 2.30 மணி.

கர்நாடக இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்புகளை ஆராயும் நோக்கில் காஞ்சிபுரம் ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சிமையம் காஞ்சிபுரத்தில் ஒரு சிறப்பு ஆய்வரங்கை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.பேராசிரியர் ப.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் வில்லிசைக் கலைஞர் மா.பழனி அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்கள்.

சென்னை,கலை-பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் வ.செயபால்,தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி முதல்வர் முனைவர் கே.ஏ.பக்கிரிசாமி பாரதி,புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் முனைவர் மு.இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

மருதம் இளந்தமிழன் அவர்கள் நன்றியுரையாற்றவும் பொன்மனோபன் தொகுப்புரை வழங்கவும் உள்ளனர்.நாட்டுப்புறவியல் கலைஞர்கள் ஒன்றுகூடும் விழாவில் அனைவரும் கலந்துகொள்ளலாம்.

வியாழன், 1 ஜனவரி, 2009

திருவள்ளுவர் விருது பெறும் மொழியியல் அறிஞர் பொற்கோவுக்கு வாழ்த்துகள்.


முனைவர் பொற்கோ

தமிழக அரசின் திருவள்ளுவர் விருது இந்த ஆண்டு(2008) சென்னைப் பல்கல்லைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ ஐயா அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.இவர் மொழியியல் ஆய்வுகளில் ஈடுபட்டுத் தமிழின் பெருமையை உலக அளவில் நிலைநாட்டியவர். அயல்நாட்டு மாணவர்கள் பலருக்குத் தமிழ்மொழி,இலக்கியம் கற்பித்த பெருமைக்கு உரியவர். உலக மொழியியல் வல்லுநர்களால் மதிக்கப்படுபவர்.

தமிழ் இலக்கணம்,இலக்கியம்,நாட்டுப்புறவியல் உள்ளிட்ட பல துறையறிவு பெற்றவர்.சப்பான் மொழிக்கும் தமிழுக்கும் உறவு உள்ளமையை அறிஞர் சுசுமு ஓனோ அவர்களுடன் இணைந்து மெய்ப்பித்தவர்."இக்கால இலக்கணம்" இவர் வழங்கிய தமிழ்க்கொடைகளுள் குறிப்பிடத் தகுந்தது. திருக்குறளுக்கு இவர் வழங்கிய உரை ஆழமானது.

அன்னாரின் தமிழ்ப்பணியை மதிக்கும் வகையில் திருவள்ளுவர் விருதைத் தமிழக அரசு வழங்க உள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும்.முனைவர் பொற்கோ அவர்களைப் புத்தாண்டில் வணங்கி வாழ்த்துகிறேன்.

அறிஞர் பொற்கோ பற்றி முன்பும் என் பதிவில் செய்திகள் உள்ளன.காண்க.