நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
#தொல்லிசையும் கல்லிசையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#தொல்லிசையும் கல்லிசையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

சப்பானியப் பேராசிரியர் சுசுமு ஓனோ நூற்றாண்டு விழாவும் முனைவர் மு. இளங்கோவனின் தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழாவும்


பேராசிரியர் சுசுமு ஓனோவின் படத்தைத் திறந்துவைத்த முனைவர் பொற்கோ, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து,  சப்பான் நாட்டு மாணவி அயகா, மு.இளங்கோவன், முனைவர் இளமதி சானகிராமன்




தொல்லிசையும் கல்லிசையும் நூலைப் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து வெளியிட, பாவலர் வையவன் முதல்படி பெறுதல். அருகில் முனைவர் பொற்கோ, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், முனைவர் இளமதி சானகிராமன் உள்ளிட்டோர்.


சப்பானியப் பேராசிரியர் சுசுமு ஓனோவின் நூற்றாண்டு விழாவும், புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையப் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் எழுதிய தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழாவும் புதுச்சேரி, செயராம் உணவகத்தில் நடைபெற்றன (23.08.2019). மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து,  சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தொல்லிசையும் கல்லிசையும் நூலினை வெளியிட்டு, தமிழ் மொழியின் சிறப்பினையும் இன்றைய நிலையில் உள்ள தமிழின் நிலையினையும் எடுத்துரைத்துப் பேசினார். நூலின் முதல்படியினைத் திருவண்ணாமலைப் பாவலர் வையவனும், தியாகி மு. அப்துல் மஜீதும் பெற்றுக்கொண்டனர்.

பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார் தொல்லிசையும் கல்லிசையும் என்ற நூலை அறிமுகப்படுத்திப் பேசினார். புதுவைப் பல்கலைக்கழகப் புலமுதன்மையர் முனைவர் இளமதிசானகிராமன், மயிலம் தமிழ்க்கல்லூரியின் முதல்வர் ச. திருநாவுக்கரசு, ரோட்டரி சங்கத்தைச் சார்ந்த செ. திருவாசகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புதுவைத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி, புதுச்சேரித் தன்னுரிமைக் கழகத் தலைவர் தூ. சடகோபன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அரங்க. மு. முருகையன் வரவேற்புரையாற்ற, முனைவர் மு.இளங்கோவன் ஏற்புரை நிகழ்த்தினார்.

 சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் முனைவர் பொற்கோ கலந்துகொண்டு, பேராசிரியர் சுசுமு ஓனோவின் படத்தினைத் திறந்து வைத்து, சுசுமு ஓனோ தமிழ் கற்ற வரலாற்றையும் அவர் செய்த ஆராய்ச்சிகளையும் எடுத்துரைத்தார். சுசுமு ஓனோவுக்கு ஜப்பான் நாட்டு மக்களும் அரசும் செய்த சிறப்புகளை எடுத்துரைத்தார். தமிழ்மொழிக்கும், ஜப்பான் மொழிக்கும் உள்ள உறவுகளை வெளிப்படுத்துவதில் சுசுமு ஓனோவின் ஆராய்ச்சி எந்த அளவு இருந்தது என்பதை வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் எடுத்துரைத்தார். முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மொழியையும் ஜப்பான் மொழியையும் இணைத்து ஆராய்ச்சி செய்த சுசுமு ஓனோவின் நினைவினைத் தமிழகத்து மக்கள் போற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஜப்பானிய மாணவி அயகா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சுசுமு ஓனோவின் பெருமைகளைப் பேசினார்.

கலைமாமணி கா. இராசமாணிக்கம் இறைவாழ்த்துப் பாடினார். முனைவர் இரா. கோவலன் நன்றியுரை வழங்க, எழுத்தாளர் பூங்குழலி பெருமாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். புதுவையிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் தமிழ் ஆர்வலர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தொல்லிசையும் கல்லிசையும் நூலைப் பெற்றுக்கொண்ட சப்பான் நாட்டு மாணவி அயகா, எழுத்தாளர் பூங்குழலி பெருமாள் உள்ளிட்டோர்.


வியாழன், 8 ஆகஸ்ட், 2019

மலேசியாவில் முனைவர் மு. இளங்கோவனின் தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழா!





முனைவர் மு. இளங்கோவன் எழுதிய தொல்லிசையும் கல்லிசையும் என்ற நூலின் வெளியீட்டு விழா, கோலாலம்பூரில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தின் ஆதரவுடன், தமிழ்ப் பெருமக்கள் செறிந்து வாழும் மலேசியத் திருநாட்டில் நடைபெற உள்ளது.

கோலாலம்பூர் - பிரிக்பீல்ட்சில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தில் 10.08.2019 சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும் நூல் வெளியீட்டு விழா, இறையருட் கவிஞர்  சீனி நைனா முகமது அவர்கள் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகின்றது. ஆசான் மன்னர் மன்னன் மருதை வரவேற்புரையாற்றவும் மலேசியா, திருமுருகன் திருவாக்கு பீடம் தவத்திரு பாலயோகி சுவாமிகள் அருளுரை வழங்கவும் உள்ளனர்.

மேனாள் துணை அமைச்சர் மாண்புமிகு டான் ஸ்ரீ க. குமரன் தலைமையில் நடைபெறும் விழாவில், மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் நூலறிமுகம் செய்ய உள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தின் இயக்குநர் க. அய்யனார், சபாய் (பகாங்) சட்டமன்ற உறுப்பினர்    தமிழச்சி காமாட்சி,  மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன், தமிழ்நெறி வாழ்வியல் இயக்கம் சார்ந்த அருள்முனைவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். மலேசியாவின் மூத்த தமிழறிஞர் முனைவர் முரசு. நெடுமாறன் வாழ்த்துக் கவிதை வழங்க உள்ளார். தமிழிசைப் பாடல்களை ந. வளர்மதி பாட உள்ளார். முனைவர் மு. இளங்கோவன் ஏற்புரையாற்றவும், ம. முனியாண்டி நன்றியுரை வழங்கவும் உள்ளனர். நிகழ்ச்சியைத் ’தங்கக் குரலோன்’ தங்கமணி தொகுத்து வழங்க உள்ளார்.

தொடர்புக்கு: 
ம. மன்னர் மன்னன் 013 341 7389 
சரசுவதி வேலு 012 318 9968 
ம. முனியாண்டி 016 444 2029                                                           


                                                                                     

திங்கள், 11 பிப்ரவரி, 2019

புதுச்சேரியில் தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் – தொடக்கவிழா



புதுச்சேரி சட்டப்பேரவைத் துணைத்தலைவர் வே.பொ சிவக்கொழுந்து அவர்கள் ஆவணப்படத்தைத் தொடங்கிவைக்கும் காட்சி. அருகில் மயிலம் சிவஞான பாலய சுவாமிகள், தூ.சடகோபன், மருத்துவர் பால் ஜோசப் (கனடா), புலவர் சீனு.இராமச்சந்திரன், புலவர் ஆதிகேசவன், மு.இளங்கோவன்



புதுவைப் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் இயக்கத்தில் உருவாக உள்ள தொல்லிசையும் கல்லிசையும் என்ற ஆவணப்படத்தின் தொடக்க விழா 11.02.2019 (திங்கள் கிழமை) மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை புதுச்சேரியில் உள்ள செயராம் உணவகத்தில் நடைபெற்றது.

.தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் வெளியீட்டு விழாவில்  புதுச்சேரி அரசின் சட்டப்பேரவையின் துணைத்தலைவரும், புதுச்சேரி கம்பன் கழகத்தின் தலைவருமான வே.பொ. சிவக்கொழுந்து கலந்துகொண்டு ஆவணப்படத்தைத் தொடங்கிவைத்தார் மயிலம் திருமடத்தின் அதிபர் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற  ஆவணப்படத் தொடக்க விழாவில் புதுவைத் தமிழறிஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி ஆல்பா கல்வி நிறுவனங்களின் தலைவர் வ. பாசிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.

கனடாவிலிருந்து வருகைபுரிந்த மருத்துவர் பால் ஜோசப், டென்மார்க்கிலிருந்து வருகைபுரிந்த இராமச்சந்திர மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன் தம் ஆவணப்படத்தின் நோக்கத்தினை எடுத்துரைத்தார். இந்த ஆவணப்படத்தில் பணிபுரிய உள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் விழாவில் சிறப்பிக்கப்பட்டனர்.

கலைமாமணி கா. இராசமாணிக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவும், முனைவர் அரங்க. மு. முருகையன் வரவேற்புரையாற்றவும், புலவர். . ஆதிகேசவன், தமிழ்மாமணி சீனு. இராமச்சந்திரன், தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன், தூ. சடகோபன் ஆகியோர் முன்னிலையுரையாற்றினர். இன்னிசைவேந்தன் கழுவினரின் அறுமுகனம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. கு.அ. தமிழ்மொழி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.





புதன், 6 பிப்ரவரி, 2019

தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் - தொடக்கவிழா!





     அருந்தமிழ் உறவுடையீர், வணக்கம்.

     தமிழை இயல், இசை, நாடகம் என மூவகைப்படுத்தி நம் முன்னோர் உரைப்பர். இவற்றுள் நடுவணாக உள்ள இசைத்தமிழ் நீண்ட வரலாறுகொண்டது. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சேக்கிழாரின் பெரியபுராணம், சீவக சிந்தாமணி, அருணகிரிநாதரின் பாடல்கள், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் வண்ணப்பாடல்கள்  உள்ளிட்ட நம் தமிழ் நூல்களில் இசைகுறித்தும், இசைக்கருவிகள் குறித்தும், இசைக்கலைஞர்கள் குறித்தும். மிகுதியான செய்திகள் இடம்பெற்றுள்ளன. மேலும் தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளிலும் இசை குறித்த செய்திகள் பதிவாகியுள்ளன.

     இருபதாம் நூற்றாண்டில் ஆபிரகாம் பண்டிதர், விபுலாநந்த அடிகளார், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், வீ.ப.கா. சுந்தரம் உள்ளிட்ட இசை அறிஞர்கள் இசைத்தமிழ் ஆய்வில் தம் வாழ்நாளை ஒப்படைத்துப் பணியாற்றியுள்ளனர். அண்ணாமலை அரசர் தமிழிசை இயக்கம் கண்டு நிலைத்த புகழ்பெற்றார். "பொங்கு தமிழ்ப் பண்ணிசை மன்றம்", "தந்தை பெரியார் தமிழிசை மன்றம்" உள்ளிட்ட அமைப்புகளும் தமிழ்நாட்டில் மீண்டும் ஓர் இசைப்புரட்சிக்கு வித்திட்டன.

 ’நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய’ அடியவர்களைக் கண்ட இத்தமிழ்நாட்டில் இசைத்தமிழ் ஆவணங்கள் யாவும் முறைப்படித் தொகுத்துவைக்கப்படாத ஒரு நிலை உள்ளது. ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டு வரலாறுகொண்ட இசைத்தமிழின் வரலாற்றை விளக்கும் வகையில் முனைவர் மு. இளங்கோவன் இயக்கத்தில் தொல்லிசையும் கல்லிசையும் என்ற ஆவணப்படத்தை உருவாக்க உள்ளோம். இந்த ஆவணப்படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தங்களை மிகுந்த மகிழ்வுடன் அழைக்கின்றோம்.

இன்னவண்ணம்
வயல்வெளித் திரைக்களம்
புதுச்சேரி - 605 003
தொடர்புக்கு: 94420 29053

நாள்: 11.02.2019, திங்கள் கிழமை,
நேரம்: அந்திமாலை 6. 00 மணி - 8. 30 மணி
இடம்: செயராம் உணவகம், புதுச்சேரி


 நிகழ்ச்சி நிரல்
அந்திமாலை 6.00 முதல் 6.30 வரை
கலைமாமணி சு.கோபகுமார் மாணவர்கள் வழங்கும்
அறுமுகனம் இன்னிசை

தமிழ்த்தாய் வாழ்த்து: கலைமாமணி கா. இராசமாணிக்கம்
வரவேற்புரை: முனைவர் அரங்க. மு. முருகையன்

முன்னிலை
புலவர். ந. ஆதிகேசவன், தமிழ்மாமணி சீனு.இராமச்சந்திரன்,
தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன், திரு. தூ. சடகோபன்

தலைமை: தவத்திரு. சிவஞான பாலய சுவாமிகள்
மயிலம் திருமடம்

ஆவணப்படத்தைத் தொடங்கிவைத்தல்
மாண்புமிகு சட்டப்பேரவையின் துணைத்தலைவர்
திரு. வே. பொ. சிவக்கொழுந்து

சிறப்புரை
முனைவர் பா. மீ. சுந்தரம்
இசையாய்வறிஞர், புதுச்சேரி

பாராட்டுரை
திரு. இரா.சிவா, சட்டமன்ற உறுப்பினர் &
தலைவர், புதுவை அரசின் தொழில் வளர்ச்சிக் கழகம்
முனைவர் சீனி. திருமால்முருகன்
தலைவர், அதியமான் கல்வி நிறுவனங்கள், ஊத்தங்கரை
திரு. வ. பாசிங்கம்
தலைவர், ஆல்பா கல்வி நிறுவனங்கள்

வாழ்த்துரை
திரு. கே. பி. கே. செல்வராஜ் (தலைவர், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்)
முனைவர் வி. முத்து (தலைவர், புதுவைத் தமிழ்ச் சங்கம்)
மருத்துவர் பால் ஜோசப். கனடா
முனைவர் ஒப்பிலா. மதிவாணன்
திரு. சோழன்குமார்
முனைவர் ப. சிவராசி, இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடி

தொகுப்புரை: செல்வி கு. அ. தமிழ்மொழி
நன்றியுரை: திரு. செ. திருவாசகம்