நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 1 ஜனவரி, 2026

சிதம்பரம் புலவர் த. முருகேசனார்

  

புலவர் . முருகேசனார்
(24.06.1921 -18.02.2005) 

[புலவர் த. முருகேசனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்றவர்; தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் பணியாற்றியவர். தமிழ்நாட்டு அரசின் நல்லாசிரியர் விருது, இந்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது முதலிய விருதுகளைப் பெற்றவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் முன்னோடிகளுள் ஒருவர்; மதிப்பியல் தலைவராகவும் இருந்தவர். தமிழ்வழிக் கல்வி இயக்கச் செயற்பாட்டாளர்; தமிழ்ப் பாட நூல்கள் உருவாக்கத்தில் உழைத்தவர்; சிதம்பரத்தில் தமிழ்ப்பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்குப் பல்வேறு அமைப்புகளை உருவாக்கிப் பணியாற்றியவர். பன்னூலாசிரியர்] 

1985 ஆம் ஆண்டளவில் தமிழகத்தில் தமிழ்வழிக் கல்வி இயக்கம் என்னும் அமைப்பானது தோற்றம்பெற்று, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழ்வழியில் கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. மூதறிஞர் வ. சுப. மாணிக்கம் மதுரை, திருச்சிராப்பள்ளி, சென்னை முதலான ஊர்களில் இவ்வமைப்பின் சார்பில் பேரணி, மாநாடுகள் நடத்தி ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர்த் தஞ்சையில் பேராசிரியர் பி. விருத்தாசலனார் முதலான அறிஞர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி இயக்கம் நடத்தினர். தமிழ்ச் சான்றோர் பேரவையும் தமிழ்வழிக் கல்விக்குக் குரல்கொடுத்த அமைப்புகளுள் தலையாயது. தலைநகர்த் தமிழ்ச்சங்கமும் இப்பணியில் முன்னின்றது. இத்தகு தமிழியச் செயற்பாட்டு உணர்வுகள் வெளிப்படுவதற்குத் தமிழ் உணர்வாளர்களின் மொழிப்பற்றே காரணங்களாக இருந்தன. 

தமிழுணர்வாளர்கள் சிதம்பரத்தில் கலந்துகொண்ட ஒரு சந்திப்பில் 1992 ஆம் ஆண்டு அளவில் புலவர் த. முருகேசனார் அவர்களைச் சந்தித்துள்ளேன். அப்பொழுது நடைபெற்ற நிகழ்வில்  நம் புலவர் த.முருகேசனார் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடினார்கள். இற்றைத் தமிழ்த்தாய் வாழ்த்தில் விடுபட்டிருக்கும் 

“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்

உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையா” 

என்னும் வரியைப் புலவர் அவர்கள் பாடியபொழுது எனக்குப் புதுத் தெம்பூட்டுவதாக அவ்வரிகள் புலப்பட்டன. அன்று முதல் புலவர் அவர்களின் பணிகளையும் வாழ்வியலையும் சிதம்பரம் மயில்வாகனன் அவர்கள் வழியாகவும் பேராசிரியர் மது. ச. விமலானந்தம் அவர்கள் வழியாகவும் அறிவேன். காலங்கள் பல உருண்டோடின. முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு புலவர் த. முருகேசனாரின் நினைவு எனக்கு மீண்டும் வந்தபொழுது புலவர் த. இராமலிங்கம், புலவர் துரை. தில்லான் ஆகியோரை வினவி அவர்தம் தமிழ் வாழ்க்கையை இவண் பதிந்துவைக்கின்றேன். 

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழாசிரியர்களின் மேன்மைக்கும் தொண்டுசெய்த புலவர் பெருமக்கள் பலராவர். அவர்களுள் சிதம்பரம் புலவர். . முருகேசனார் தலையாயவர். ஒரு பள்ளியின் தமிழாசிரியர் நாடுபோற்றும் தமிழறிஞராக  விளங்கமுடியும் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். அண்ணாமலை அரசரின் குடும்பத்திற்குத் தமிழ் பயிற்றுவித்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழைத் தாழ்த்திப் பேசும் எவரையும் கண்டிக்கும் அஞ்சாமையும் ஆற்றலும் தமிழ்ப்பற்றும் இப்பெருமகனாருக்கு நிறைந்திருந்தன. தமிழகத் தமிழாசிரியர் கழகம் என்னும் பெயரைச் சூட்டி, ஒருகுடையின் கீழ்த் தமிழக அளவில் தமிழாசிரியர்களை ஒன்றிணைக்கும் பணியைத் தம் வாழ்நாள் முழுவதும் செய்தவர். இப்பணிக்குத் தம் கைப்பொருளைச் செலவிட்டுத் தொண்டாற்றியவர். தமிழாசிரியர்களுக்கு அந்நாளில் இருந்த ஊதிய முரண்பாடுகளை எடுத்துக்காட்டி, மற்ற ஆசிரியர்களுக்குக் கிடைத்த ஊதியம் தமிழாசிரியர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று உரிமைக்குரல் கொடுத்தவர். தமிழாசிரியர்களும் தலைமையாசிரியர்களாக – அதிகாரிகளாக உயரமுடியும் என்பதையும் நிலைநாட்டியவர். தலைமையாசிரியர் பதவியைப் பெறாமல் சாகமாட்டேன் என்று மாநாட்டில் முழங்கிய முருகேசனார் தாமே தலைமையாசிரியராகப் பின்னாளில் உயர்ந்தவர் (இதனைத் தந்தை பெரியார் தம் விடுதலை ஏட்டில் தலையங்கம் எழுதிப் பாராட்டினார்). த. முருகேசனாரின் வாழ்வும் பணியும் தமிழர்கள் அனைவரும் அறியத்தக்கனவாகும். 

புலவர் . முருகேசனாரின் தமிழ் வாழ்க்கை: 

. முருகேசனார் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் தருமநல்லூரில் வாழ்ந்த தங்கவேல் பிள்ளை, பார்வதி அம்மாள் ஆகியோரின் மகனாக 24.06.1921 இல்  பிறந்தவர். சிதம்பரத்தை அடுத்துள்ள எண்ண நகரம் என்னும் ஊரில் வாழ்ந்த இவர்தம் பாட்டனார் சுந்தரம், பாட்டி அருந்ததி ஆகியோரின் ஆதரவில் தாய்மாமன் குஞ்சிதபாதம் அவர்களிடம் தொடக்கக் கல்வியைப் பயின்றவர். சிதம்பரம் மாலைகட்டித் தெருவில் உள்ள சித்தாந்த மெய்கண்ட வித்தியாசாலையில் (ஆறுமுக நாவலர் நிறுவிய பள்ளி)  புகுமுக வகுப்புப் பயின்றவர். இராமலிங்க ஓதுவார் அவர்களிடம் தேவாரம் கற்றவர். 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துப் புலவர் பட்டம் பெற்றவர். இவருடன் ஒருசாலை மாணவராக மூதறிஞர் செம்மல் .சுப. மாணிக்கம் அவர்கள் பயின்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். . முருகேசனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் வகுப்பில் பயின்றபொழுது நாவலர் சோமசுந்தர பாரதியார். இரா. இராகவையங்கார், . மு. வேங்கடசாமி நாட்டார், சர்க்கரை இராமசாமிப் புலவர், மு. அருணாசலம் பிள்ளை, பூவராகம் பிள்ளை, இரா. பி. சேதுப் பிள்ளை, . சிதம்பரநாதன் செட்டியார் முதலானவர்கள் பேராசிரியர்களாக இருந்து கல்வி பயிற்றுவித்துள்ளனர்

. முருகேசனார் புலவர் பட்டம் பெற்றதும் பேராசிரியர் கா.சு. பிள்ளை அவர்களின் பரிந்துரையில் செட்டிநாட்டு அரசரின் கானாடு காத்தான் அரண்மனைக்குச் சென்று இளவரசர் முத்தையா செட்டியார், எம். . எம். இராமசாமி செட்டியார், இலக்குமணன் செட்டியார் ஆகிய மூவருக்கும் தமிழ் பயிற்றுவித்தவர்

. முருகேசனார் மயிலாடுதுறை நகராட்சி உயர்நிலைப் பள்ளி, விருத்தாசலம் அரசு பள்ளி, கள்ளக்குறிச்சி அரசு பள்ளிகளில் தமிழாசிரியராகச் சிலகாலம் பணியாற்றியவர். பின்னர் சிதம்பரம் இராமசாமி செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் 1943 ஆம் ஆண்டு முதல் 1980 வரை பணியாற்றி ஓய்வுபெற்றவர்

புலவர் த. முருகேசனார் சிதம்பரத்தில் பணியாற்றியபொழுது இளங்கோ மன்றம் என்ற இலக்கிய அமைப்பினைத் தோறுவித்து, மாணவர்களுக்குத் தன்மான உணர்வினையும், தமிழ் உணர்வினையும் ஊட்டியவர். மாணவர்களின் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்ப்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்தவர். மாணவர்களின் உடல்திறன்போட்டிகளையும் ஊக்குவித்தவர். நாவலர் பாரதியார், அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சிலம்புச் செல்வர் .பொ.சி, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் முதலானவர்கள் புலவரின் மீது மிகுந்த அன்புடையவர்கள். இவர் அழைப்பின்பேரில் சிதம்பரம் வந்து உரையாற்றியுள்ளனர்.  இவர்தம் இல்லம் வந்து உணவுண்ணும் வகையில் பலரின் தொடர்பு வலிமையாக இருந்தது

. முருகேசனாரின் மாணவர்களுள் முன்னாள் அமைச்சர் எஸ். டி. சோமசுந்தரம், நடராசன்(மும்பை), டாக்டர் நீலகண்டம், பேராசிரியர் சண்முகசுந்தரம், சிதம்பரம் மயில்வாகனன் முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்

. முருகேசனார் தமிழ்நாடு தேர்வாணையக் குழு, நேர்காணல் குழு, பள்ளிப் பாடத்திட்டக் குழு, முதலியவற்றின் உறுப்பினராக இருந்து தமிழ்த் தொண்டாற்றியவர். “தென்னாட்டுப் பதிப்பகம்” என்னும் பெயரில் பதிப்பகம் தொடங்கிப் பாட நூல்களையும் துணைப்பாட நூல்களையும் வெளியிட்டவர். இவர்தம் வாழ்க்கை வழி என்னும் நூல் பள்ளி இறுதி வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குப் பாடநூலாக இருந்துள்ளது

புலவர் த. முருகேசனார் தமிழகப் புலவர் குழுவின் உறுப்பினராக இருந்தவர். தமிழ்வழிக் கல்வி இயக்கம், தில்லையில் திருமுறை பாடும் இயக்கம் முதலான அமைப்புகளில் இருந்து தமிழ்த்தொண்டாற்றியவர். தில்லைத் தமிழ் மன்றத்தின் செயலாளராகவும் இருந்தவர். 

புலவர் த. முருகேசனார் 1954 இல் மாகாணத் தமிழாசிரியர் கழக நான்காவது மாநாட்டினை அண்ணாமலை நகரில் நடத்ததியவர். கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் கலந்துகொண்டு இம்மாநாட்டில் உரை நிகழ்த்தினார். இந்த மாநாடு பேராசிரியர் . சிதம்பரநாதன் செட்டியார் தலைமையில் நடந்தது. தஞ்சையில் நடத்திய மாநாட்டில் முதலமைச்சர் கு. காமராசர் கலந்துகொண்டு, மாநாட்டைத் திறந்து வைத்தார். இம் மாநாட்டில் மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் தலைவராக . சிதம்பரநாதன் செட்டியாரும் பொதுச்செயலாளராக . முருகேசனாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 11.01.1976 இல் தஞ்சையில் நடைபெற்ற பொதுக்குழுவில் மாநிலத் தமிழாசிரியர் கழகத்தின் தலைவராகத் . முருகேசனாரும், பொதுச்செயலாளராக இலால்குடி . அரங்கசாமி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்களைத் தமிழகச் சட்டப்பேரவையில் மேலவை உறுப்பினராக்குவதற்கு விண்ணப்பத்தை முன்மொழிந்து, தொகை கட்டி, வெறிப்பெறச் செய்தவர் நம் முருகேசனார் ஆவார். 

தமிழ் ஆட்சிமொழி ஆவதற்கு எதிரான சட்டத்தைக் கொளுத்திச் சிறைத்தண்டனை பெற்றபொழுது . முருகேசனார் அதனை எதிர்த்து வழக்காடி வென்றார். தலைநகர்த் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்த போராட்டத்தில் கலந்துகொண்டு, கைதானவர்

. முருகேசனாரின் திருமணம் 1940 இல் நடைபெற்றது. இவர்தம் துணைவியார் பெயர் சரசுவதி ஆவார்(துரிஞ்சிக்கொல்லை பாலசுப்பிரமணியன் அவர்களின் மகள்). இவர் தம் திருமணக் கொடையாக 100 பவுன் நகை, 15 ஏக்கர் நிலத்துடன் வந்தவர். இவற்றையெல்லாம் நம் புலவர் அவர்கள் தமிழாசிரியர் கழக வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் விற்றுச் செலவு செய்தார் என்று அறியமுடிகின்றது. . முருகேசனார் - சரசுவதி ஆகியோருக்கு ஆறு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். அவர்கள்: அன்பரசி, இளங்கோவன், மணிமேகலை, வேலன், மங்கலச்செல்வி, சோமு இரேவதி . 

. முருகேசனாரின் மணிவிழாவினை முன்னாள் மாணவர் எஸ். டி. சோமசுந்தரம் நடத்தி, அறுபதாயிரம் பொன்முடிப்பினைப் புலவருக்கு வழங்கினார். அத்தொகையைக் கொண்டு, புலவர் முருகேசனார் அவர்கள் சிதம்பரத்தில் கனகசபை நகரில் வீடு வாங்கினார். 



த.முருகேசனாரின் காதல் காவியம் என்ற நூல் இணைவேந்தர் எம்.ஏ.எம். இராமசாமி செட்டியார் அவர்களுக்குக் காணிக்கையாக்கப் பட்டுள்ளது. இந்த நூல் தமிழக அரசின் பாராட்டையும் பரிசிலையும் பெற்றுள்ளது. காதல்காவியம் நூல் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழியக்கக் காப்பியம் என்று போற்றலாம். தமிழ்ப் பற்று, தமிழ் உணர்ச்சி, தமிழ்த் தொண்டு, தமிழ் வளம், தமிழ் வாழ்வு முதலியன காப்பியம் முழுவதும் விரவியுள்ளன. அறிஞர்கள் தா. ம. வெள்ளைவாரணம், தமிழண்ணல், இரா. இளங்குமரனார்., ச.மெய்யயப்பன் முதலான அறிஞர்களின் அணிந்துரையும், புலவர் முருகேசனாரின் முன்னுரையும் நூலுக்குப் பெருமைசேர்க்கின்றன.

 


புலவர் த. முருகேசனாரின் இலக்கியக் கனவு என்னும் நூல் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்குப் படையல் செய்யப்பட்டுள்ளது. இலக்கியக் கனவு என்னும் நூல் என் உள்ளக் கனவின் வெளிப்பாடு என்று முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். இந்த நூலில் தொல்காப்பியர் முதல் பாரதிதாசன் வரையிலான ஏறத்தாழ இருபது பெருங்கவிஞர்கள் குறித்த கனவுக் குறிப்புகளைக் கவிதையாக்கித் தந்துள்ளார். மேலும் காந்தி, நேரு, பெரியார், பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், காமராசர், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் உள்ளக்கனவு நிறைவேறியுள்ளதை நாம் அறிவோம். சுதந்திரம், சீர்திருத்தத் திருமணம், நில உச்சவரம்பு, மதிய உணவு, பெண்ணுரிமை, அனைவருக்கும் கல்வி, சாலைகள், பாலங்கள், தொழிற்சாலைகள் உண்டாக்குதல், சாதி ஓழிப்பு, தாய்மொழி பயிற்றுமொழியாதல் உள்ளிட்ட பல்வேறு உள்ளக்கனவுகள் நிறைவேறியுள்ளன என்று த. முருகேசனார் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 

த. முருகேசனார் மிகச்சிறந்த பாடல் புனையும் ஆற்றல் பெற்றவர். தமிழாசிரியர்கள் இரண்டாம்தர ஆசிரியர்களாகக் கல்வித்துறையில் அந்நாளில் நடத்தப்பட்டதை உணர்ந்து, மனம் குமைந்து, 

கனியினும் இனிய தனிமொழித் தமிழைக்

 கற்பதால் நற்பயன் காண

நனிநசை கொண்டே நான்உனைக் கற்றேன்

 நவிலவும் படுமோ என்பாடு; போற்றும்

தனித்தமிழ் கற்றேன் தன்மதிப்பிழந்தேன்

 என்பதைப் பிறருணர் வாரேல்

இனிஉனைக் கற்க யார்வரு வாரோ

 இதுவுமுன் ஊழ்வினை தானோ 

என்று பாடியுள்ள பாடல் இவர்தம் செய்யுள் இயற்றும் திறனுக்குச் சான்றாகும். 

 

. முருகேசனார் தமிழ்க் கொடை: 

1.       வாழ்க்கை வழி

2.       நூற்றாண்டு விழா

3.       மரங்கள் (தமிழக அரசின் பரிசுபெற்ற நூல்)

4.       இலக்கியக் கனவு

5.       தமிழாசிரியர் கழக 4-வது மாநாட்டு மலர்

6.       காதல் காவியம்

7. ஆத்திசூடி, கொன்றைவேந்தன்  / உரை புலவர் . முருகேசனார்(1985)

முதலிய நூல்களை எழுதியுள்ளார்.

 



. முருகேசனாரின் ஆசிரியப் பணியைப் பாராட்டி, இவருக்கு இந்திய அரசின் சார்பில் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது(1978). தமிழக அரசின் நல்லாசிரியர் விருதினையும் பெற்றவர். இவர்தம் திருக்குறள் பரப்பும் பணிக்குக் குறள்நெறி விருது வழங்கப்பட்டு, வெள்ளிப் பதக்கமும் அளிக்கப்பட்டுப் பாராட்டப்பட்டுள்ளார்(1985). இவருக்குப் பாரதிதாசன் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

 




. முருகேசனார் தம் இறப்புக்குப் பிறகு தம் உடலை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரிக்கு வழங்குமாறு விருப்பம் தெரிவித்திருந்தார். 18.02.2005 இல் இயற்கை எய்தியபொழுது புலவரின் விருப்பப்படி உடல் அண்ணாமலைநகர் மருத்துவக்கல்லூரிக்கு வழங்கப்பட்டது. 

புலவர் த. முருகேசனாரின் மறைவின்பொழுது நமது தமிழாசிரியர் இதழ்(25.02.2005) இரங்கல் இதழினை வெளியிட்டு, தமிழுலகுக்குப் புலவர் த. முருகேசனார் ஆற்றிய பணிகளை நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளது.

 



 

நன்றி: 

புலவர் துரை. தில்லான், சின்னாளப்பட்டி

சின்ன மணல்மேடு புலவர் த. இராமலிங்கம்

சிதம்பரம் மயில்வாகனன் (நூல்: சிதம்பரம் பெருமக்கள்)

முனைவர் த. சசிகலா, சிதம்பரம்