நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 2 செப்டம்பர், 2024

மலேசியத் தமிழ் நெறியாளர் கு. மு. துரை மறைவு

 

கு. மு. துரை  (02.02.1951 - 01.09.2024) 

    மலேசியத் திருநாட்டில் பிறந்து, தமிழ் உணர்வுடன் இயங்கி, தமிழ் நெறிகளைத் தம் வாழ்வியலில் இணைத்துக்கொண்டு வாழ்ந்த, எங்கள் அன்பிற்குரிய அண்ணன் கு. மு. துரை அவர்கள் 01.09.2024 அன்று காலை 9.30 மணிக்கு மலேசியாவில்  இயற்கை எய்திய செய்தியை அறிந்துஇடியுண்ட மஞ்ஞை போல்” பெருங்கவலைகொண்டேன். அண்ணன் கு. மு. துரை அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினர், தமிழ் நெறி வாழ்வியல் இயக்கத் தோழர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இரண்டு திங்களுக்கு முன்பாக எங்களின் தமிழ்வள்ளல் மாரியப்பன் ஆறுமுகனாரை இழந்த துயரத்துடன் இத்துயரமும் இணைந்து என்னை அழுத்திக் கவலையைப் பன்மடங்காக்கியுள்ளது. 

    மலேசிய நாட்டுக்கு நான் செல்லும்பொழுதெல்லாம் இலக்கியச் சந்திப்புகளை ஒருங்கிணைத்து, என்னை வரவேற்பதில் தமிழ் உணர்வாளர்கள் மாரியப்பனார், அருள்முனைவர் ஆகியோர்க்குப் பெருந்துணையாக இருந்தவர் கு. மு. துரை அவர்கள். துரை ஐயா இல்லாமல் எந்த நிகழ்வும் இல்லை என்று கூறும் அளவிற்கு, எல்லா நிகழ்விலும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, உணர்வுபொங்க உரையாற்றுவார். தம்மால் இயன்ற கைப்பொருளைக் கொடையாக வழங்கி, நிகழ்வைச் சிறப்பாக்குவார். தமிழகத்திற்கும் வந்து, தமிழ் உணர்வுடன் நிகழ்வுகளில் கலந்துகொள்வார். மலேசியாவில் நடைபெறும் தமிழ் ஆர்வலர்கள் ஏற்பாடு செய்யும் எந்த நிகழ்விலும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு, தம்மால் ஆன பங்களிப்புகளை நல்குவார். தமிழறிஞர் அ.பு. திருமாலனார் பட்டறையில் உருவான கொள்கை மறவர்களுள் நம் கு. மு. துரை ஐயா அவர்கள் முதன்மையானவர்கள். 

    கு. மு. துரை அவர்கள் வானூர்திப் பொறியாளராகப் பலவாண்டுகள் பணியாற்றியவர் (இவரின் தமிழ்ப்பணிகளைக் கண்ணுற்ற யான் பலவாண்டுகள் இவரை ஒரு தமிழாசிரியர் என்றே கருதிக்கொண்டிருந்தேன்). மலேசியன் ஏர்லைன்சு நிறுவனத்தில் தொடக்கத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். பின்னர் வேறு நிறுவனங்களில் தம் பணியைத் தொடர்ந்தவர். தம் குடும்ப நிகழ்வுகளையும் தம்மைச் சார்ந்தவர்களின் குடும்ப நிகழ்வுகளையும் தமிழ் உணர்வுடன் முன்னெடுத்தவர். மலேசியாவில் பொங்கல் விழாக்களை முன்னின்று நடத்தியவர். தமிழ் வழியில் பிறப்பு, இறப்புச் சடங்குகளை நடத்தித் தாம் ஒரு தமிழர் என்று வாழ்ந்துகாட்டிய பெருமகனார் கு. மு. துரை அவர்கள். தமிழ்ப்பள்ளிகள் நலிவடைந்து, மூடப்படும் சூழல் மலேசியாவில் எங்கேனும் நிகழ்ந்தால் முதலாமவராக அங்குத் தோன்றி, அப்பள்ளியைத் தொடர்ந்து நடத்துவதற்கு உரிய வழிவகைகளைச் செய்தவர். 

    கு. மு. துரை அவர்கள் மலேசியாவில் 02. 02.1951 இல் பிறந்தவர். பெற்றோர் குஞ்சுப்பிள்ளை முத்தம்மாள் ஆவர். தொடக்கத்தில் தமிழ்ப்பள்ளியில் பயின்ற கு.மு. துரை அவர்கள் பின்னர் ஆங்கிலப்பள்ளியில் பயின்று தம் அறிவை வளப்படுத்திக்கொண்டவர். பின்னர் மின்னியலில் பட்டயப் படிப்பு முடித்து, கல்வித்தகுதியை உயர்த்திக்கொண்டவர். வானூர்திப் பொறியாளராக (Aircraft Engineer) தம் அறுபதாம் அகவை வரை பணியாற்றிவிட்டு, அதன் பிறகு தமிழ்ப்பணியில் தம்மை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டவர். 

    கு. மு. துரை அவர்கள் 1989 ஆம் ஆண்டில்  பழ. அழகம்மாள் அவர்களை மணந்துகொண்டு, இல்லறப் பயனாய் நான்கு ஆண் மக்கள் செல்வங்களைப் பெற்று நிறை வாழ்வு வாழ்ந்த பெருமகனார். தம் பிள்ளைகளுக்குத்  துரைஅரசன், இளந்துரை, இளம்பரிதி, இளங்கதிர் என அன்பொழுகத் தமிழ்ப்பெயரிட்டு, அழகுபார்த்தவர். அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்விச்செல்வம் தந்து, அறிஞர்களாக உயர்த்தியவர். 

    கு. மு. துரை அவர்களின் மறைவு மலேசியத் தமிழ் உணர்வாளர்களுக்குப் பேரிழப்பாக அமைந்துவிட்டது. கு. மு. துரை அவர்களின் தமிழ்ப்பணிகளை என்றும் நினைவுகூர்வோம். அவரின் எண்ணங்களைச் செயல்படுத்தி, அவருக்கு நம் நன்றியைப் படையலிடுவோம். வாழ்க கு. மு. துரை அவர்களின் புகழ்!

கு. மு. துரை



கருத்துகள் இல்லை: