தமிழ் விக்கி பெரியசாமித் தூரன் விருதாளர்
முனைவர் மோ.கோ. கோவைமணி
பேராசிரியர் (ப.நி.), ஓலைச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 010.
நேரிசை ஆசிரியப் பாவில் நேர்த்தியாய்
சீரிசை முத்தாய் இணைய வரலாறு
நீரிசை போலாய் நேர்த்தி செய்து,
சேரிசை எங்கும் சேர்க்கும் இந்த
இணைய ஆற்றுப் படையெனும் நூலை
இணைந்தே ஆக்கிப் பதித்த இணையர்
இன்றும் என்றும் பல்லாண்டு காலம்
வாழ்ந்து பலப்பல வாழும் இலக்கியம்
சீர்சால் நடைபோ லியல்தமிழ் போற்ற,
மேலும் படைக்க வாழ்த்து கின்றேன்.
இணைய ஆற்றுப் படையெனும் நூலில்
தமிழின் மேன்மை, தமிழர் சால்பு
இமிழும் பொழுதில் துவண்டு போனேன்.
தமிழகச் சிறப்பை உலகுய்யச் செய்த
தகைசால் வரிகள் உன்னத மாகும்.
எத்துறை யானாலும் அத்துறை தமதென
உலகில் முந்தி நிற்கும் தமிழர்
செய்த அளப்பெறும் பணிகள் எண்ணில.
எனிலும், உலகம் உய்யப் போற்றும்
கணினி வரவில் தமிழர் பங்கை
நிரல்பட ஓதி, கலப்பின மில்லாது
சிறப்புடன் எடுத்தே ஓவியம் தீட்டிய
இளங்கோ நெஞ்சை ஏற்றுப் போற்றுவேன்.
இலங்கைத் தமிழர் இன்னல் கூறி
இலக்கப் பயணம் வெற்றி கொண்ட
கலக்க மில்லா திலக மேற்றி,
நிலைக்க வைத்த பாங்குக் கண்டேன்.
புதுப்புது வரவுகள் உலகில் பலப்பல
புதுவது இயல்புதான் என்றா னாலும்
கணினி புகுந்த நன்நா ளன்று
உலகின் கன்னித் தமிழ்மகள் பிறந்தாள்.
சங்கம் தொடங்கி இன்று வரையும்
சங்கேத மெனுவென இருந்த போதும்
சத்தமே இடாமல் சட்டை செய்த
எத்துறையிலு மிக்கது இத்துறை என்ன
பல்துறையும் இணைய ஆற்றுப் படையில்
பற்றிடச் செய்து உலவ விட்டு,
புற்றி லடங்கா ஈசல் போலக்
கடித்த எறும்பும் திரும்பிப் பார்க்கும்.
ஓரிட மிருக்கும் ஓம்புமின் தமிழை
விரல்நுனி சொடுக்கில் கண்முன் காட்டும்
விந்தை சாதனை இணைய ஆற்றுப்படை.
பழங்கலை யெல்லாம் மடியும் நாளில்
துளிர்விடத் தொடங்கிய இணையப் பணியில்
எத்தனை அன்பர் எத்துணை அன்பர்
இத்துறை போற்றிப் பரப்பும் வேளையில்
இளங்கோ ஆக்கிய இணைய ஆற்றுப்படை
இனிக்க வில்லை என்றாலும், சுவைக்க
நிலைக்க திளைக்கவே செய்கிறது என்னை.
மாற்றமே நிகழா திருந்த நாளில்
மாற்றம் பலப்பல நிகழ்த்திக் காட்ட
எத்துறை யாகினும் அத்துறை நமதெனப்
பற்றுக் கொண்டு சத்தாய் உயர்ந்த
கணினியின் உன்னத வளர்ச்சி தன்னை
உயர்வாய்க் காட்டி உயர்த்திய கொடியோ
இணைய ஆற்றுப் படையென நிலத்தில்
சிந்தை சேர்த்த சீரிய முயற்சியை
பழந்தமிழ்ச் சுவடியை இணையம் ஏற்றியவன்
மின்னூல் பலப்பல இணையம் ஏற்றியவன்
வலையொளி வழியாகச் சுவடியியல் தந்தவன்
என்றிந்தத் தகுதிப் பாட்டில் வாழ்த்துகிறேன்.
நின்று நீங்கா நிலைத்திட
என்றும் வாழ்த்தும் அன்பன் இவனே.