முனைவர் செல்வநாயகி சிறிதாசு
[முனைவர் செல்வநாயகி சிறிதாசு அவர்கள் இலங்கையில் பிறந்தவர். இப்பொழுது கனடாவில் வாழ்ந்து வருகின்றார். வரி மதிப்பிடுதல் துறையில் பெரும் புலமை பெற்றவர். தமிழ் ஈடுபாட்டின் காரணமாகத் தமிழை முறைப்படி பயின்று, முனைவர் பட்டம் பெற்றவர். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழின் வளர்ச்சிக்கும் முனைந்து தொண்டாற்றி வருபவர். கனடாத் தொல்காப்பிய மன்றத்தின் தலைவராக உள்ள இவரின் முன்னெடுப்பில் கனடாவில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நடைபெற உள்ளது. சங்க இலக்கியம், தொல்காப்பியம் குறித்த பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.]
2016 ஆம் ஆண்டு, சூன் மாதம் 4, 5 ஆகிய நாள்களில் கனடா நாட்டில் நடைபெற்ற உலகத் தொல்காப்பிய மன்றத்தின், கனடாக் கிளையின் தொடக்க விழாவுக்குச் சென்றிருந்தபொழுது அங்குச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்துத் தமிழ்ப்பணிகளைக் கண்ணுறும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அங்குத் தொண்டுள்ளத்துடன் தமிழ்ப்பணியாற்றிக்கொண்டிருந்த முனைவர் செல்வநாயகி சிறிதாசு அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் பிறகு பல்வேறு இடங்களில் நடந்த தமிழாராய்ச்சிக் கருத்தரங்குகளில் முனைவர் செல்வநாயகி அவர்களைச் சந்தித்து, அவர்களுடன் உரையாடும் வாய்ப்பினைப் பெற்றேன்.
சில திங்களுக்கு முன்பாகக் கனடாவில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு 2024, செப்டம்பர் 20, 21, 22 ஆகிய நாள்களில் நடைபெற உள்ள அறிவிப்பினைக் கண்டு பெரும் மகிழ்வுற்றேன். தொல்காப்பியத்துக்கு என்று ஓர் உலகு தழுவிய ஆராய்ச்சி மாநாடு, தன்னார்வலர்களால், எந்தப் பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் கனடா நாட்டில் நடத்தப்படுவது அறிந்து அவர்களின் தமிழ் ஈடுபாட்டையும் தொல்காப்பிய ஈடுபாட்டையும் நெஞ்சார வாழ்த்திக்கொண்டிருந்தேன்.
கனடாவில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டை நடத்தும் பொறுப்பினை ஆர்வமுடன் செய்துவரும் முனைவர் செல்வநாயகி அவர்களின் தமிழ் ஈடுபாட்டினை நான் முன்பே அறிவேன் எனினும் அவர்களின் பணிகளைத் தொடர்ந்து உற்றுநோக்கியபொழுது, அவரின் செயல்திறனும், தமிழ் வளர்ச்சிக்காகத் தம்மை முழுமையாக ஒப்படைத்துப் பணியாற்றும் ஈடுபாடும் கண்டு வியப்புற்றேன். மாநாட்டை ஒருங்கிணைப்பது, கட்டுரைகளைப் பெற்று, அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்துப் பிழையின்றி அச்சிடுவது, பேராளர்களை நேரடியாகவோ, இணையம் வழியாகவோ உரையாற்றச் செய்வது, நிகழ்ச்சி நிரலினை முறைப்படுத்துவது என்று மாநாட்டுக்காகப் பல்வேறு பணிகள் இருக்கும். இதற்குத் தகுந்த ஒரு பணிக்குழு இருந்தால்தான் மாநாட்டைச் சிறப்பாக நடத்திக்காட்ட இயலும். உலக அளவிலான மாநாட்டினை ஒருங்கிணைக்கும் பெரும் பொறுப்பில் இருந்து, தொல்காப்பியத் தொண்டாற்றும் முனைவர் செல்வநாயகி அம்மாவுக்கு என் வாழ்த்துகளைச் சொல்லி, அவர்களின் தமிழ் வாழ்க்கையை நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்கின்றேன்.
முனைவர் செல்வநாயகி அவர்கள் 1942 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் நாள் இலங்கையில், அனுராதபுரத்தில் பிறந்தவர். பெற்றோர் பெயர் செல்லையா வேலுப்பிள்ளை – சௌந்தரம் செல்லையா ஆகும். தொடக்கக் கல்வியை அனுராதபுரத்தில் பயின்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைத் தமிழ் பயின்றவர். முதுகலையும் முனைவர் பட்டமும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். ஓர் ஆண்டுக்கு ஐக்கிய நாடுகளின் புலமைப் பரிசிலைப்பெற்று, ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகளாவிய வரி மதிப்பீடு (International Taxation) குறித்த படிப்பினைப் படித்தவர் (1986-1987).
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக 1966 - 1968 ஆம் ஆண்டுகளில் பணியாற்றியவர். 1968 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் மூத்த வரி மதிப்பாளராகப் பணியாற்றியவர். 2008 ஆம் ஆண்டு முதல் கனடாவில் உள்ள, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிப், பல மாணவர்கள் தமிழ் படிப்பதற்கு உதவியவர். மேலும் 2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நிருவாகப் பணிப்பாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தில் பணியாற்றியவர்.
கனடாவுக்குக் குடிபெயர்ந்த நாள் முதல் செல்வநாயகி அவர்கள் பல்வேறு தமிழ் அமைப்புகளில் இணைந்து, தமிழ்த்தொண்டும், சமூகப் பணியும் ஆற்றி வருகின்றார். தொல்காப்பிய விரிவுரை, சங்க இலக்கிய விரிவுரைகள் ஆற்றித் தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றிவருகின்றார். யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் கனடாவில் இயங்கி வருகின்றது. அதன் தலைவராக இருந்து, செயற்கரும் பணிகளை ஆர்வமுடன் செய்துவருகின்றார். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பெண் சாதனையாளர் விருதினைப் பெற்றவர்(2022). கனடாவில் உள்ள “விழித்தெழு பெண்ணே” அமைப்பின் உயர் சாதனையாளர் விருதினை 2022 இல் பெற்று விருதுக்குப் பெருமை சேர்த்துள்ளார். கனடாவிலிருந்து வெளிவரும் தாய்வீடு இதழில் தொன்மையைத் தேடி என்னும் கட்டுரைத் தொடரை எழுதி, அனைவரின் பாராட்டினையும் பெற்றவர். பேராசிரியர் வித்தியானந்தனின் தமிழர் சால்பு நூல் குறித்த இவரின் அறிமுகவுரை சிறப்பிற்கு உரிய ஒன்றாகும். கீழடியும் சங்க இலக்கியமும் என்ற இவர்தம் கட்டுரையும் அரிய செய்திக் குறிப்புகளை நல்குவன. இலக்கியம், இலக்கணம், தொல்லியல் குறித்த நூற்றுக்கணக்கான கட்டுரைகளை வரைந்து தமிழ்த்தொண்டாற்றி வருபவர்.
திட்டமிடலும், செயல்திறனும் கொண்டு, தமிழ்
உணர்வுடன் தொய்வின்றித் தொண்டாற்றிவரும் முனைவர் செல்வநாயகி சிறிதாசு அவர்களின் தமிழ்த்தொண்டினை
அரசும், தமிழமைப்புகளும் போற்றிக் கொண்டாடும் நாள்தான் தமிழுக்கு வளமூட்டும் நாளாக
அமையும்.