நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

சிட்னியில் யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளாருக்குச் சிலைத் திறப்பு…

  

விபுலாநந்த அடிகளார் சிலைத் திறப்பு விழா- சிட்னி (29.03.2024)
குணரத்தினம் ஐயா, மனோ அம்மா, பேராசிரியர் பாலசுந்தரம், சந்திரிகா சுப்பிரமணியம், அனகன் பாபு, மன்னர் மன்னன், மு.இளங்கோவன்

விபுலாநந்த அடிகளார் சிலைத் திறப்பு விழா- சிட்னி

  ஆத்திரேலியா நாட்டின் சிட்னி மாநகரில் யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளாருக்குச் சிலை ஒன்று நிறுவ வேண்டும் என்று அங்கு வாழும் உதயசூரியன் இதழாசிரியர் திரு. குணரத்தினம் அவர்கள் பலவாண்டுகளாக முயற்சி செய்துவந்தார்கள். 2019 ஏப்ரல் திங்களில் நான் முதல் முறையாக ஆத்திரேலியா சென்றபொழுதும் என்னிடம் நேரில் நினைவூட்டினார்கள். அன்று முதல்  ஒற்றை மாந்தராகக் கடுமையாக உழைத்து, ஒரு சிலையை நிறுவுவதற்குப் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்து, நிறைவாகச் சிலையைத் திறப்பதற்கு நாளும், நேரமும் குறித்தார்கள். சிலைத்திறப்பின் பொழுது அடிகளாரின் பெருமைகளை நினைவுகூரும் கட்டுரைகள், வாழ்த்துச் செய்திகளைத் திரட்டி, நினைவு மலர் ஒன்று வெளியிடவும் முனைந்தார்கள். 

விபுலாநந்த அடிகளார் சிலைத்திறப்பு நிகழ்வில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ் அன்பர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பிக்க வேண்டும் என்ற வகையில் பலரையும் மகிழ்ச்சியுடன் விழாக்குழுவினர் அழைத்தார்கள். அவ்வகையில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை உருவாக்கி, அடிகளாரின் பெருமைகளை உலக அரங்கில் அனைவரும் மீண்டும் நினைவுகூர்வதற்கு வழியேற்படுத்திய நானும் பங்கேற்க வேண்டும் என்று விரும்பி, திருவாளர் குணரத்தினம் ஐயா  அவர்களும் அவர்களின் துணைவியார் மனோ அம்மா அவர்களும் எனக்கும் அன்பு அழைப்பு விடுத்தார்கள்.  கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தாலும் பணிச்சுமையும், முன்பே ஏற்றுக்கொண்ட சில பணிகளும், குடும்பப் பொறுப்புகளும் மனத்துக்குள் தயக்கத்தை ஏற்படுத்தின. இருப்பினும் திரு. குணரத்தினம் ஐயா அவர்களின் அன்பும் அம்மா அவர்கள் என் மீது காட்டும் பாசமும் ஆத்திரேலியாவுக்குச் செல்ல வேண்டும் என்ற உந்துதலை எனக்குத் தந்தன. 

அந்த நாட்டிற்குச் செல்வதற்கு நுழைவுச் சீட்டு எடுக்கும் பணியில் முனைந்தபொழுது என் கடவுச்சீட்டைப் புதுப்பித்தல் நலம் என்று பயண முகவர் குறிப்பிட்டார். உடன் கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டேன். இரண்டு கிழமையில் கடவுச்சீட்டின் புதுப்பித்தல் பணி முடிந்தது. பின்னர் நுழைவுச்சீட்டினைப் (விசா) பெறுவதற்குரிய ஆவணங்களைத் திரட்டி, அதனையும் குறிப்பிட்ட நாளுக்குள் பெற்றேன். இவை யாவும் முடிவதற்குள் விழா நடைபெறும் நாளும் நெருங்கியது. இறுதி நேரத்தில் பயணத்தை உறுதிப்படுத்தியதால் வானூர்திச் சீட்டு விலை அதிகமாக இருந்தது. எனினும் ஆத்திரேலியா நாட்டிற்குச் செல்வதையும் அடிகளார் குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதையும் மகிழ்ச்சியான தமிழ்க் கடமையாக ஏற்றுக்கொண்டு, புறப்பட்டேன். 

ஆயிடை, 

சிட்னியில் 29.03.2024 இல் நடைபெறும் விபுலாநந்த அடிகளார் சிலைத்திறப்பு விழாவில் கனடா நாட்டிலிருந்து பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்களும், அவர்களின் துணைவியாரும், மலேசியாவிலிருந்து ஆசான் மன்னர் மன்னன் மருதை அவர்களும், இலங்கையிலிருந்து மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்துப் பொறுப்பாளர்களும், மெல்பர்ன் நகரத்திலிருந்து எழுத்தாளர் செயராம சர்மா, பொறியாளர் நடேசன் சுந்தரேசன், வழக்கறிஞர் “பாடும்மீன்” சிறீ கந்தராசா உள்ளிட்ட தமிழ் அன்பர்களும் கலந்துகொள்ள உள்ளதை அறிய முடிந்தது. அனைவரும் முதல் நாளே சிட்னிக்கு வந்துசேர்ந்திருந்தார்கள். 

29.03.2024 மாலை 5 மணிக்கு, சிட்னி, துர்க்கையம்மன் கோவிலின் அரங்கத்தில் விழாவில் கலந்துகொள்ளும் நோக்கில் விபுலாநந்த அடிகளார் மீது அன்புகொண்டிருந்த தமிழன்பர்கள் ஒன்றுதிரண்டிருந்தனர். திரு. குணரத்தினம் ஐயா அவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் நண்பர்களும் திரண்டிருந்தனர். எழுத்தாளர் மாத்தளை சோமு ஐயா, வழக்கறிஞர்  மாறன் நந்தன் சிதம்பரம், வழக்கறிஞர் சந்திரிகா சுப்பிரமணியன், தொழிலதிபர் அனகன் பாபு, “இன்பத் தமிழ் ஒலி” பிரபாகரன் பாலசிங்கம், “தாயகம் ஒலிபரப்புச் சேவை” பாலா விக்னேஸ்வரன், ஒளி ஓவியர் இலாவண்யன், கண்ணன் உள்ளிட்ட நண்பர்களை அரங்கில் கண்டு உரையாடியமை மகிழ்ச்சியளித்தது. அரங்கத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த விபுலாநந்த அடிகளாரின் சிலை, அறிஞர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. மலர்தூவி அனைவரும் அடிகளார் படிமத்தை வணங்கினோம். பின்னர் அரங்கில் நடைபெற்ற மேடை நிகழ்வில் அடிகளாரின் பெருமைகளை விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களாகிய நாங்கள் அரங்கில் இருந்த ஆர்வலர்களுக்கு எடுத்துரைத்தோம். விழா மலரும், நினைவு விருதும் எங்களுக்கு வழங்கப்பட்டன. 

இலங்கையின் மட்டக்களப்பை அடுத்துள்ள காரைதீவில் பிறந்த விபுலாநந்த அடிகளார் யாழ் நூல் உருவாக்கியமையாலும், சிவாநந்த வித்தியாலயம் உள்ளிட்ட கல்வி நிலையங்களைத் தோற்றுவித்ததாலும், இராமகிருஷ்ண மடத்தின் துறவியாக இருந்து, சமயப்பணிகள் பல ஆற்றியதாலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் பணியாற்றி, அளப்பரிய தமிழ்த்தொண்டாற்றியதாலும் நம் நெஞ்சங்களில் என்றும் நிலைபெற்று வாழ்வார். அடிகளாரின் சிலையைச் சிட்னியில் நிலைபெறச் செய்தமையால் திரு. குணரத்தினம் அவர்களும் நீடுபுகழ் பெற்று, நெடுவாழ்வு வாழ்வார் என்பதில் ஐயமில்லை.


குணரத்தினம்  அவர்கள் மு.இளங்கோவனுக்குச் சான்றிதழ் வழங்குதல்


விபுலாநந்த அடிகளார் சிலைத் திறப்பு விழா- சிட்னி


மாத்தளை சோமு, ந. சுந்தரேசன், மு.இளங்கோவன், இலாவண்யன்








ஒளி ஓவியர் கண்ணன், மு.இளங்கோவன்