நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 22 அக்டோபர், 2024

பொன்னி ஆசிரியர் முருகு சுப்பிரமணியனாரின் புகழ் வாழ்வு!

 

முருகு சுப்பிரமணியன்

    பொன்னி என்னும் இலக்கிய இதழைத் தந்த பெருமைக்குரியவர் முருகு. சுப்பிரமணியன் ஆவார். இவரும் இவர்தம் உறவினர் அரு. பெரியண்ணன் ஐயா அவர்களும் இணைந்து இந்த இதழை வெளியிட்டனர்.  திராவிட இயக்க ஏடுகளுள் இந்த இதழுக்கு மிகப்பெரிய இடம் உண்டு. 1947 முதல் 1953 வரை இந்த இதழ் வெளிவந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்தும் சென்னையிலிருந்தும் வெளிவந்த இந்த இதழில் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் 48 கவிஞர்கள் அந்நாளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். பாவேந்தர் பாரதிதாசனாரின் பெருமைகளை உலகுக்கு எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டு, வெளிவந்த இதழின் ஆசிரிய உரைகள் புகழ்பெற்றவை. கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளைக் கொண்டு இந்த இதழ் வெளிவந்துள்ளது. பொன்னி இதழ் வெளியிட்டுள்ள பொங்கல் மலர்கள் புகழ்பெற்றவை. 

பொன்னி ஆசிரியர் முருகு சுப்பிரமணியன் அவர்கள் 1953 இல் மலேசியா நாட்டுக்குச் சென்றார். அங்கு வெளிவந்த தமிழ்நேசன், சிங்கப்பூரில் வெளிவந்த தமிழ் முரசு ஆகிய ஏடுகளில் பணியாற்றியவர். புதிய சமுதாயம் என்ற இதழையும் பின்னாளில் நடத்தியவர். இவர்தம் இதழ்ப்பணிகள் என்றும் நினைவுகூரத்தக்கவை. ஆராயத் தக்கவை. 

முருகு அவர்களின் நூற்றாண்டு விழா 20.10.2024 (ஞாயிறு) மாலை  மலேசியாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக நான் நேரில் செல்ல நினைத்திருந்தேன். அலுவல் காரணமாக வாய்ப்பு அமையவில்லை, என் வாழ்த்துரையைப் பதிவு செய்து அனுப்பியிருந்தேன். நூற்றாண்டு விழாவில் வெளியிட்டு உதவிய முருகு குடும்பத்தினருக்கும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் நன்றி. 

முருகுவின் குடும்பத்தினரும் அண்ணன் பெ. இராசேந்திரன் அவர்களும் இந்தக் காணொளி உருவாவதற்குத் தூண்டுகோலாக இருந்தனர். அவர்களுக்கு நன்றி.

முருகுவின் தமிழ்ப்பணிகளும் இதழியல் பணிகளும் உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டியவை. கொண்டாடுவோம்.

 காணொளி இணைப்பு

முருகுவின் வாழ்க்கைக் குறிப்பு (என் பழைய பதிவு)


வெள்ளி, 18 அக்டோபர், 2024

தமிழியக்கம் ஏழாம் ஆண்டு விழா!

                            




தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தூணென நின்று துணைசெய்யும் அமைப்பு தமிழியக்கம் ஆகும்.  வேலூர்  வி..டி. பல்கலைக்கழகத்தின்  வேந்தர், கல்விக்கோ முனைவர் கோ. விசுவநாதன் அவர்களைத் தலைவராகக் கொண்டு இயங்கும் தமிழியக்கம் அமைப்பின் ஏழாம் ஆண்டு விழா, புதுச்சேரியில் உள்ள புதுவைப் பல்கலைக்கழக மாநாட்டு அரங்கத்தில் 20.10.2024(ஞாயிறு) காலை 9.30 மணி முதல் நடைபெறுகின்றது. இந்த நிகழ்வில் பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டி, பாராட்டு விருதுடன் ஓர்  இலட்சம் உருவா அவருக்குப் பணப்பரிசில் வழங்கப்பட உள்ளது

கால்கோள் அரங்கம், நாடக அரங்கம், இசை அரங்கம், பாங்கறி மண்டபம், விருதரங்கம், நிறைவரங்கம் என்ற தலைப்பில் நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன

இந்த நிகழ்வில் முனைவர் கோ. விசுவநாதன் தலைமையுரையாற்ற உள்ளார். கல்விச் செம்மல் சீனு. மோகன்தாசு வரவேற்புரையாற்ற உள்ளார். புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி. முத்து தொடக்கவுரையாற்ற உள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் . அரங்கசாமி, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் . இலட்சுமிநாராயணன், மாநிலங்களவை உறுப்பினர்  சு. செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர் பி.எம். எல்.  கல்யாணசுந்தரம், தட்சசீலா பல்கலைக்கழக வேந்தர்  . தனசேகரன், புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர் .தரணிக்கரசு, கம்பன் கழகச் செயலாளர் வே. பொ. சிவக்கொழுந்து, கலை, பண்பாட்டுத்துறை இயக்குநர் வி. கலியபெருமாள், முனைவர் மு. இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். 

நிறைவு விழாவில் சூர்யா சேவியர் சிறப்புரையாற்றவும், புதுவை முன்னாள் முதலமைச்சர் வே. நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வெ.வைத்தியலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, புதுவைத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எசு. மோகன்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆ. அன்பழகன், மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் செயலர் இரா. இராசாங்கம், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின்  செயலர் அ.மு.சலீம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலர் தே.வ. பொழிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர். 

பேராசிரியர் ஈரோடு தமிழன்பன், புலவர் வே. பதுமனார். பேராசிரியர் அப்துல்காதர், பேராசிரியர் கு. வணங்காமுடி, பாவலர் மு.அருள்செல்வம், நாறும்பூநாதன், சிவாலயம் செ.மோகன் முதலானவர்கள் உரையாற்ற உள்ளனர். தமிழ் உணர்வாளர்கள் சந்திக்கும் நிகழ்வாக இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

வியாழன், 17 அக்டோபர், 2024

மாவிலி மைந்தனின் மரபு இலக்கியங்கள்

 

மாவிலி மைந்தன் -  சண்முகராசன் சின்னத்தம்பி

[மாவிலி மைந்தன் என்னும் புனைபெயரில் எழுதும் சண்முகராசன் சின்னத்தம்பி யாழ்ப்பாணத்தை அடுத்த நெடுந்தீவில் பிறந்தவர். தற்பொழுது கனடாவில் வாழ்ந்து வருகின்றார். கனடா தொல்காப்பிய மன்றத்தின் செயலாளராக உள்ளவர். செவிலியர் பயிற்சி பெற்று, இலங்கை, ஓமன், கனடாவில் பணியாற்றியவர். மரபுக் கவிதையில் ஈடுபாடு கொண்டவர். வைகறை வானம், னவெளி மேகங்கள், முனையிலே முகத்து நில் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதுடன் தன்னார்வலராக இருந்து பலருக்கும் யாப்பு இலக்கணங்களைப் பயிற்றுவித்து வருகின்றார்.

அண்மையில் கனடாவில் நடைபெற்ற உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின் ஓர் அங்கமாகத் தொல்காப்பியம் குறித்த கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கம் என்றால் பலருக்கும் ஒவ்வாமை இருக்கும். ஒரே வரியைப் பாவலர்கள் மீண்டும் மீண்டும் படித்து, பார்வையாளர்களை எரிச்சலடையச் செய்துவிடுவார்கள். அவ்வாறுதான் இந்தக் கவியரங்கமும் இருக்கும் எனப் பார்வையாளர் வரிசையில் இருந்த நானும் கருதிக்கொண்டிருந்தேன். ஆனால் நடந்ததோ வேறு வகையில் இருந்தது. 

பாவலர் சண்முகராசன் சின்னத்தம்பி தலைமையில் அன்பின் ஐந்திணை என்னும் தலைப்பில் ஐந்து பாவலர்கள் கவிதை படைத்தனர். பாவரங்கத் தலைவர் சண்முகராசன் அவர்கள் தம் தலைமைக் கவிதையை வழங்கியதுடன் பாலை என்னும் திணையைக் குறித்தும் கவிதை படைத்தார். அவரின் சொல்லாட்சியும் எடுத்துரைப்பும் மரபு வடிவத்தை ஆளும் புலமையும் நேரில் கண்டு வியப்புற்றேன். மேடையிலிருந்து இறங்கி வந்ததும் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வேட்கை மிகுந்தது. ஆர்வமுடன் அவர் பணிகளையும் தமிழ்ப் பங்களிப்பையும் அறிந்து வியப்புற்றேன். செவிலியர் பயிற்சிக் கல்லூரியில் பட்டயப் படிப்பினைப் பயின்றவுடன் பணியில் இணைந்த சண்முகராசன் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய பட்டறிவு உடையவர். அவர்தம் வாழ்வியலையும் தமிழ் இலக்கியப் பங்களிப்பையும் இக்கட்டுரையில் வரைகின்றேன். 

சண்முகராசன் சின்னத்தம்பியின் இளமைப் பருவம் 

மாவிலி மைந்தன் என்னும் புனைபெயரில் படைப்புகளை நல்கும் சண்முகராசன் யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவைச் சேர்ந்தவர். 03.05.1947 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் சின்னத்தம்பி, நாகமுத்து அம்மையார் ஆவர். தம் ஏழாம் அகவையில் தந்தையை இழந்த சண்முகராசன் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். பள்ளிக் கல்வியை நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பயின்றவர்(1964). உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பயின்றவர்(1966). செவிலியர் பயிற்சியில் இணைந்து 1967 முதல் 1970 வரை பயின்று, பட்டயச் சான்று பெற்றவர். பின்னர் அத்துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றவர். கொழும்பில் அமைந்துள்ள கல்லூரியில் பட்ட மேற்படிப்புக் கல்வியை நிறைவுசெய்தவர் (1974-77). பேராதனையில் அமைந்துள்ள இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியியல் பிரிவிலும் பயின்று பட்டம்பெற்றுள்ளவர். டொரான்டோவில் அமைந்துள்ள சோர்ச்சு பிரவுன் கல்லூரியில் 2021 ஆம் ஆண்டில் அவசர நோயாளார் பராமரிப்பில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். 

சண்முகராசன் சின்னத்தம்பியின் மருத்துவத்துறைப் பணிகள் 

கொழும்பு மருத்துவமனையில் அவசரப் பிரிவில் செவிலியர் அதிகாரியாக முதன்முதல் பணியேற்றவர்(1970-74). யாழ்ப்பாணம் செவிலியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராக 1977-83 வரை பணியாற்றியவர். மட்டக்களப்பு செவிலியர் பயிற்சிக்கல்லூரியில்  துணை முதல்வராகப் பணியாற்றியவர்(1979-81). 1983 முதல்1999 வரை ஓமன் நாட்டின் மஸ்கட் செவிலியர் கல்லூரியில் மூத்த விரிவுரையாளராகவும், பாடத்திட்ட ஆக்கக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியவர். 1999 ஆம் ஆண்டில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்த பிறகு டொராண்டோ கிழக்குப் பொது மருத்துவமனையின் அவசரப் பிரிவில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கனடா ஜேஆர்எஸ் கல்லூரியில் மருத்துவத்துறைப் பகுதிநேர விரிவுரையாளரகப் பணியாற்றுகிறார். 

தம் தமிழ் ஆர்வத்தின் காரணமாக டொராண்டோ அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தில் ஈராண்டுகள் பயின்று, தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர்(2018). இங்குப் பயின்ற  காரணத்தால் தமிழ் இலக்கண இலக்கியங்களில் நல்ல பயிற்சியும், புலமையும் ஏற்பட்டதால் மரபுக் கவிதைகள் எழுதுவதில் இவருக்குப் பெரிய விருப்பம் உண்டானது. 

சண்முகராசன் சின்னத்தம்பி அவர்கள் முறையாகத் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்ற காரணத்தால் இவர் கவியரங்குகள் பலவற்றைத் தலைமையேற்று நடத்தும் தகுதிப்பாடும் அடைந்தார். இணையம் வழியாகவும், மேடை நிகழ்வாகவும் பல கவியரங்கங்கள் இவ்வாறு நடந்துள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தில் தன்னார்வலராகத் தமிழ் விரிவுரையாளர் பணியும் ஆற்றியவர். கனடாத் தமிழ்க் கவிஞர் மன்றதின் தலைவராகவும் செயல்பட்டவர். 

சண்முகராசன் அவர்கள் கமலாதேவி அவர்களை 21.11.1973 இல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாழினி, மைதிலி, நவநீதன், சாலினி ஆகிய மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். 

சண்முகராசன் அவர்கள் பெற்றுள்ள விருதுகள் 

சண்முகராசன் சின்னத்தம்பியின் தமிழ் இலக்கிய மற்றும் சமூகப் பணிகளைக் கண்டு அரசும், தமிழமைப்புகளும் பல்வேறு விருதுகளை வழங்கிப் பாராட்டியுள்ளன. அவற்றுள் கீழ்வரும் விருதுகள் குறிப்பிடத்தக்கன. 

1.   தன்னார்வத் தொண்டுப்பணி விருது, ஒன்ராரியோ மாகாண அரசு, 2014

2.   சிறந்த தமிழ்ப் பணிக்கான விருது, நினைவுகள் இணையத் தளம் 2020;

3.   சிறந்த மரபுக் கவிதை நூலுக்கான முதற்பரிசு (னவெளி மேகங்கள்), தமிழ்நாடு திருவள்ளுவர் இலக்கியமன்றம், நல்லழகம்மை செல்லப்பன் அறக்கட்டளை 2021

4.   பாடலாசிரியர் விருது, தமிழாழி ஊடகம், மென்றியல் 2021

5.   பாவலர் விருது, கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம், 2022

6.   தமிழ்க் கலைச் சொல்லாக்கப் பங்களிப்புக்கான பாராட்டு அங்கீகாரம், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், தமிழ் நாடு அரசு

7.   தமிழ் இலக்கியப் பணிக்காகத் தங்கப் பதக்கமும் விருதும் - தமிழர் தகவல் மாத இதழ், கனடா (2022)

8.   கவி ஆசான் விருது - கனடாத் தொல்காப்பிய மன்றம்(2022) 

சண்முகராசனின் தன்னார்வத் தொண்டுகள் 

சண்முகராசன் அவர்கள் தம் பணிநேரம் போகத் தம் மனத்துக்கு இனிய பொதுப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு உழைத்தவர். அவ்வாறு இவரின் பணிகள் பல அமைப்புகளின் செயல்பாடுகளுக்கும் வளர்ச்சிக்கும் துணைசெய்துள்ளன. அத்தகைய அமைப்புகளின் விவரம்: 

1.   முன்னாள் அமைப்பாளர், சௌக்கியதான இயக்கம் (மருத்துவ உதவித் தன்னார்வ அமைப்பு), யாழ். கிளை - 1978 - 1985

2.   முன்னாள் தலைவர், நெடுந்தீவுப் பாடசாலைகள் பழைய மாணவர் சங்கம், கனடா -2004

3.   முன்னாள் பொருளாளர், கனடாத் தமிழர் எழுத்தாளர் இணையம் - 2006

4.   முன்னாள் பொருளாளர், நெடுந்தீவு மக்கள் ஒன்றியம், கனடா - 2008

5.   முன்னாள் தலைவர், கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் - 2011 - 2015

6.   செயலாளர்,  தொல்காப்பிய மன்றம், கனடா 2022 - 2024

7.   தமிழ் மரபுரிமைத் திங்கள் செயற்பாட்டுக் குழு உறப்பினர்

8.  ஆசிரியர், கவிதை, யாப்பிலக்கணப் பயிலரங்கம் (சனிக்கிழமை தோறும் கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் நடத்தும் இலவச வகுப்பு)

9.   பங்களிப்பு, தமிழ்க் கலைச் சொல்லாக்கம், செந்தமிழ் சொற்பிறப்பியல்

அகரமுதலித் திட்ட இயக்ககம், தமிழ் நாடு அரசு.

10. பாடலாசிரியர்

11. கவிதையால் இணைவோம், மாவிலி மைந்தனின் கவிதை முற்றம் - அமைப்பாளர், (திங்கள் தோறும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை - சூம் செயலி வழியாகக் 3மணிநேரக் கவியரங்க நிகழ்ச்சி) 

மாவிலி மைந்தனின் தமிழ்க்கொடை 

சண்முகராசன் சின்னத்தம்பி அவர்கள் மாவிலி மைந்தன் என்னும் பெயரில் தமிழில் மரபுக் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். இவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு வைகறை வானம்,(2012), மனவெளி மேகங்கள்(2019), முனையிலே முகத்து நில்(2022) என்னும் நூல்களாக வெளிவந்துள்ளன. இந்த நூல்களில் இடம்பெற்றுள்ள கவிதைகள் யாவும் யாப்பிலக்கணத்தில் வரையப்பட்ட கவிதைகளாகும். புலம் பெயர்ந்த மண்ணில் இவர்போல் இலக்கிய ஈடுபாட்டுடன், யாப்பிலக்கணம் பயின்று கவிதை வரைவோர் குறைவு என்றே குறிப்பிடலாம். 

வைகறை வானம் 

கவிஞரின் முதல் கவிதை நூல் இதுவாகும். பல்வேறு சூழல்களில் எழுதப்பட்ட கவிதைகள் தொகுக்கப்பட்டு வைகறை வானம் என்ற தலைப்பில் நூலாகியுள்ளது. இந்நூல் வெளிவருவதற்கு முன்னர் முழக்கம், உலகத் தமிழர், உதயன், தமிழர் செந்தாமரை, முரசொலி போன்ற இதழ்களில் பல கவிதைகளை இவர் வெளியிட்டுள்ளார்.

 


வைகறை வானம் நூலில் பகுதி 1. மரபுக் கவிதைகள் எனவும், பகுதி 2, கவியரங்கக் கவிதைகள் எனவும், பகுதி 3. விடுதலைக் காற்றில் விரிந்த மொட்டுகள் எனவும் கவிதைகள் பகுத்து வெளியிடப்பட்டுள்ளன. 

மாவிலி மைந்தனின் நூலில் அழகிய சொல்லாட்சிகளும், சிதைவுறாத யாப்பு அமைப்புகளும், அழகிய கற்பனைகளும் உவமைகளும் இடம்பெற்றுள்ளன. இவை படிப்பவர்களுக்கு ஆர்வமூட்டுபவை ஆகும். இவரின் கவிதைகள் கற்பவரின் உள்ளத்தைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல்பெற்றவையாகும். தம் தாய் மண்ணான இலங்கையின் நெடுந்தீவு குறித்த மாவிலி மைந்தனின் பாடல்கள் அவரின் ஊர்ப்பற்றை உரக்கச் சொல்லும் கவிதை என்பேன். 

தெங்குபனை தென்றலிலே தோகையசைத் தாடும்

தோட்டத்து மரக்கிளையில் தேன்குயில்கள் பாடும்

தங்கத்தைக் குழைத்துமுகம் தடவியகீழ் வானம்

தனைவிட்டுக் கதிர்விலகத் தனிமையிலே வாடும்

பொங்குகடல் மீதினிலே மீனவரின் ஓடம்

பொன்மாலைப் போதினிலே பேரணியாய்ப் போகும்

அங்கமெலாம் அணிகலனாய் ஒளிரும்நற் கோலம்

அழகுறவே அமைந்ததெங்கள் அன்னைநெடுந் தீவே! (பக்கம் 59) 

என்னும் பாடலில் செழுமையான யாப்பமைப்பும் கற்பனை நயமும் காட்சிப்படுத்திக் காட்டும் திறமையும் வெளிப்படுகின்றன. இவை பாவேந்தர் பாரதிதாசனாரின் அழகின் சிரிப்பை நமக்கு நினைவூட்டும். 

மருத்துவத்துறையில் மாமணியாக விளங்கிய மாவிலி மைந்தன் நலவெண்பா என்னும் தலைப்பிட்டு வரைந்துள்ள பாடல்கள் உடலோம்பலின் முதன்மையை நமக்கு எடுத்துரைக்கின்றன. 

நன்றாக வேயுண்டு நாளும் உடல்வளர்த்தால்

கொன்றே ஒழிக்கும் கொடுநோய்கள் - இன்றேநீ

செய்வாய் உடற்பயிற்சி சீராக அஃதொன்றே

உய்யும் வழியாம் உணர் 

எனவும், 

சர்க்கரை நோய்தன்னைச் சரிசெய்யா விட்டுவிட்டால்

சிக்கலால் நல்வாழ்வு சீரழியும் – எக்குறையும்

வாராது சக்கரையை வைத்தாலே கட்டுக்குள்

தீராது போமோ துயர் 

எனவும் உடல்நலம் போற்றும் வெண்பாக்களை வரைந்து, மக்களுக்கு நலவாழ்வு வாழ வழிகாட்டியுள்ளார். 

ஈழ விடுதலைக்கு இன்னுயிர் ஈந்தவர்களின் ஈகத்தினைப் போற்றிப் பாடித் தம் நாட்டுப்பற்றையும் நம் பாவலர் மாவிலி மைந்தன் வெளிப்படுத்தியுள்ளார். 

மனவெளி மேகங்கள் 

மனவெளி மேகங்கள் என்னும் நூல் பகுதி 1. பல்சுவைக் கவிதைகள் எனவும் பகுதி   2. வெண்பாச் சரம் எனவும் பகுதி 3. கவியரங்கக் கவிதைகள் எனவும் பகுதி 4. பாமாலை எனவும் தலைப்புகளைக் கொண்டுள்ளது.  78 கவிதைகளால் இந்த நூல் அமைந்துள்ளது. பல்வேறு யாப்பு வடிவங்களிலும் இசைப் பாடல்களுமாக இந்த நூல் உள்ளது. 

அகிலத்தில் அறமோங்க வேண்டும் என்று முருகனை வாழ்த்திப் பாடும் பாடலுடன் இந்த நூல் தொடங்குகின்றது.

 


நயாகரா அருவியின் அழகினை, 

மெல்ல நடந்தவுன் பாதையிற் – காணும்

மேட்டை யமைத்தவர் யாரடி? – நீயும்

செல்லும் வழிபள்ள மாக்கியே – சிறை

தள்ள நினைத்தவர் யாரடி? – அந்தப்

புல்லிய ரைப்பொடி யாக்கவோ – சினம்

பொங்கிப் புலியெனப் பாய்கிறாய்! – வெறும்

கல்லும் மலையும் தடுக்குமோ- உந்தன்

கட்டற்ற வேகத்தைத் தாண்டுமோ! (பக்கம் 47) 

என்று பாடியுள்ளமை இவரின் கற்பனை ஆற்றலுக்குச் சான்றாக உள்ளது. 

முனையிலே முகத்து நில் 

மாவிலி மைந்தனின் முனையிலே முகத்து நில் என்னும் கவிதை நூல் பாரதியாரின் புதிய ஆத்திசூடியின் 110 பாடலடிகளையும் தலைப்பாக அமைத்து 110 கவிதைகளால் அமைந்த நூலாகும். பாரதியாரின் கவிதைகளில் மாவிலிமைந்தனுக்கு உள்ள ஈடுபாடும் சமூக அக்கறையும் இந்த நூலில் காணமுடிகின்றது.

 


அச்சம் தவிர் என்னும் பாரதியாரின் ஆத்திசூடியை உள்ளத்துள் கொண்டு மூன்று எண்சீர் விருத்தங்களை மாவிலி மைந்தன் படைத்துள்ளார். 

உள்ளத்துள் அச்சமெனும் வேரூன்றி விட்டால்

உலகமெலாம் இருண்டதுபோல் உருமாறிப் போகும்

மெல்லமெல்ல அதுவளர்ந்து முழுவிருட்ச மாகி

முழுதாக மூடியுந்தன் மூச்சினையும் நிறுத்தும்!

பள்ளத்தில் தள்ளிவிட்டுப் பலர்பார்க்கச் சிரிக்கும்

பரிதாப நிலைதந்து பக்கத்தில் இருக்கும்

தெள்ளியதாய் இவையனைத்தும் நேர்கொண்டே இன்றே

தீர்க்கமுடன் அச்சமதைத் தவிர்த்திடுதல் நன்றே! (பக்கம், 11) 

என்று அச்சந்தவிர் என்ற ஒற்றை வரியை உள்ளத்துள் கொண்டு பாட்டால் உரைவரையும் மாவிலி மைந்தனின் பாப்புனையும் ஆற்றல் போற்றத்தக்கது. 

பாரதியார் தீமைக்கு எதிராகக் குரல் கொடுத்த தீரர். சிறுமை கண்டு பொங்கியவர். சீறுவோரைக் கண்டால் சீறு என்று புதிய வழிசொன்னவர். சீறுவோர்ச் சீறு என்பது பாரதியம். இதற்கு விளக்கப்பா வரையும் மாவிலிமைந்தன், 

ஓங்கிய அதிகாரம் - தலை

உச்சியில் ஏறிடும் இறுமாப்பு

தாங்கிய கயவர்களின் – சீற்றம்

தன்னையே கண்டுநாம் விழிமூடித்

தூங்கியே வாழுவதோ? – சீறித்

துடித்தெழுந் தெதிர்த்துமே போராடினால்

நீங்கிடும் கொடுமையெல்லாம்- நீண்டு

நிலைத்திடும் நீதியிந் நிலத்தினிலே! (பக்கம் 38) 

என்று பாடியுள்ளமை இவரின் உள்ளம் காட்டும் உயரிய வரிகளாகும். இந்த நூலில் அமைந்துள்ள பாடல்கள் அறுசீர், எழுசீர், எண்சீர் பன்னிருசீர் விருத்தங்கள், கலிவெண்பா, நேரிசை வெண்பா, கலித்துறை, குறள்வெண்பா, ஈரடி வியனிலைச் சிந்து, நேரிசை ஆசிரியப்பா, கலிவிருத்தம், இயற்கும்மி, வெண்கலிப்பா, நொண்டிச்சிந்து, தரவுக்கொச்சகக் கலிப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, கிளிக்கண்ணிகள்,  குறள்வெண்செந்துறை முதலான யாப்பு வடிவங்களில் வெளிவந்துள்ள பாடல்கள் மாவிலி மைந்தனின் யாப்புப் புலமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும். 

 நன்றி: மாவிலி மைந்தனின் மரபு இலக்கியங்கள் கட்டுரையை உதயன் - (கனடா) இதழில் வெளியிட்டு உதவிய  ஆசிரியர், திரு. லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு! 

பண்ணுருட்டி இரா. பஞ்சவர்ணம் ஐயா மறைவு

 

இரா. பஞ்சவர்ணம்  

    கடலூர் மாவட்டம், பண்ணுருட்டி நகராட்சியின் முன்னைத் தலைவரும், தாவரங்கள் குறித்த நூல் எழுதும் பணியில் தம் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டு,  தாவரங்கள் குறித்த 360 – இற்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் எழுதி அளித்தவருமான ஐயா இரா. பஞ்சவர்ணம் அவர்கள் இன்று(17.10.2024) தம் 75 ஆம் அகவையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். கடந்த பதினொரு ஆண்டுகளாக நல்ல நட்பில் இருந்தோம். எம் இல்லத்துக்கு வருகைபுரிவதும், அவர்களின் இல்லத்துக்கு நாங்கள் செல்வதுமாக இருப்போம். எங்களின் ஆய்வுப்பணிகளுக்குப் பெருந்துணையாக இருந்த பெருமகனார். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

இரா. பஞ்சவர்ணம் ஐயாவின் வாழ்க்கைக் குறிப்பு

திரு. பஞ்சவர்ணம் அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியில் பிறந்தவர் (04.07.1949). பெற்றோர் கொ. இராமசாமி கவுண்டர், தைலம்மாள் ஆவர். பள்ளியிறுதி வகுப்பு வரை பண்ணுருட்டியில் பயின்றவர். பிறகு கடலூர் கல்லூரியில் புகுமுக வகுப்பு பயின்றவர். 1968 இல் பேராயக் கட்சியில் இணைந்து அரசியல் பணிகளில் முன்னின்று உழைத்தவர். காமராசர், மூப்பனார் உள்ளிட்ட தலைவர்களின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். இவர்தம் தன்னலம் கருதாத பணிகளில் ஈர்க்கப்பட்ட பண்ணுருட்டிப் பகுதி மக்கள் இவரை இருமுறை நகராட்சித்தலைவராக அமர்த்தி அழகுபார்த்தனர்.

பண்ணுருட்டிப் பகுதியிலும், நகராட்சியிலும் இருந்த நிலைமைகளை ஊன்றிக் கவனித்த பஞ்சவர்ணம் அவர்கள் வெளிப்படையான நிர்வாகம் நடைபெறத் திட்டமிட்டு உழைத்தார். மந்த கதியில் சுழன்ற நகராட்சி நிர்வாகத்தை விரைவுப்படுத்த மக்களுக்குப் பயன்படும் பிறப்பு இறப்புச்சான்று, குடிநீர் இணைப்பு, வீடுகட்ட ஒப்புதல் உள்ளிட்ட பணிகளுக்கு அலைந்து திரிவதைத் தடுக்க அனைத்து விவரங்களையும் கணினியில் சேமித்து மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்க ஆவன செய்தார். இந்திய அளவிலும் உலக அளவிலும் பண்ணுருட்டியின் நகர நிர்வாகம் பத்தாண்டுகளுக்கு முன்னர்ப் பேசப்பட்டது.

ஊழலிலும், சோம்பலிலும் சிக்கி மக்களை இழுத்தடிப்பதில் விருப்பம்கொண்ட அதிகாரிகளால் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமைப்பணிகளின் கூறுகளை மிக எளிதாக மாற்றி மக்களுக்கு வெளிப்படையான ஆளுகையை அறிமுகப்படுத்தியதால் மக்களால் பாராட்டப்பட்டார்.

பண்ணுருட்டிப் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் பஞ்சவர்ணம். இதனால் தாவரங்கள் குறித்த ஈடுபாடு இவருக்கு அதிகமானது. மக்கள் இவரின் மரம் நடும் பணிக்கு ஆதரவாக இருக்க, காலம் காலமாக மக்களிடம் இருக்கும் நம்பிக்கைகளை நினைவூட்டும் வகையில் மரத்தால் விளையும் நன்மைகளைக் கூறி மரம் நடுவதில் ஆர்வத்தை உண்டாக்கினார்.

தமிழ் இலக்கியங்களில் தாவரங்கள் குறித்து இடம்பெற்றிருந்த செய்திகளை ஆய்வுசெய்து நூலாக்கிய பெரும்பணிக்காக இவர் போற்றப்படவேண்டியவர்.

என் பழைய பதிவு

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

செவாலியே, பேராசிரியர் க. சச்சிதானந்தம்

 

செவாலியே க. சச்சிதானந்தம் 

     [செவாலியே க. சச்சிதானந்தம் அவர்கள் புதுச்சேரியைச் சேர்ந்தவர். தமிழ் ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளை அறிந்தவர். பிரஞ்சுக்காரர்களுக்குத் தமிழும், தமிழ் மாணவர்களுக்குப் பிரஞ்சும் பயிற்றுவித்தவர். பிரஞ்சு மொழி இலக்கியங்களைக் கதைகளாகவும், கட்டுரைகளாகவும் மொழிபெயர்த்து வழங்கியவர். முப்பத்தைந்து ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்தம் பணிகளைப் பாராட்டிப் பிரான்சு நாட்டு அரசு இவருக்கு 2006 ஆம் ஆண்டில் “செவாலியே” என்ற உயரிய விருதளித்துப் பாராட்டியுள்ளது. 94 அகவை ஆகும் இப்பெரியோர் பிரஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு நூல்களை மொழிபெயர்த்து வழங்கும் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றார்.] 

பிரான்சிலிருந்து புதுச்சேரிக்கு வந்திருந்த நண்பர் கோவிந்தசாமி செயராமன் அவர்களிடம் பிரான்சில் நடைபெறும் தமிழ் இலக்கிய நிகழ்வுகள் குறித்தும், நூல் வெளியீடுகள் குறித்தும், தமிழர்களின் வாழ்க்கைச்சூழல் குறித்தும் உரையாடிக்கொண்டிருந்தபொழுது எங்களின் பேச்சு, பிரஞ்சுப் பேராசிரியர் ’செவாலியே’ க. சச்சிதானந்தம் குறித்துத் திரும்பியது. பேராசிரியர்  க. சச்சிதானந்தம் அவர்கள் பிரான்சு நாட்டு அரசின் உயரிய விருதான ’செவாலியே’ விருதுபெற்ற பெருமைக்குரியவர். புதுச்சேரியைச் சேர்ந்தவர். அவரைப் பிரான்சில் ஒருமுறை சந்தித்திருந்தாலும்(27.09.2015) மனம் திறந்து அன்றைய பொழுதில் அங்கு உரையாடமுடியாதபடி சூழல் இருந்தது. புதுவைக்கு அருகில் பலவாண்டுகளாக வாழ்ந்துவரும் அவரைச் சந்தித்து, உரையாடி அவர்தம் பணிகளை அறிய நினைத்திருந்தேன். ஆனால் என் விருப்பம் நிறைவேறாமல் காலங்கள் உருண்டோடிக்கொண்டிருந்தன. 

க. சச்சி அவர்களைச் சந்திக்க விரும்பும் என் விருப்பத்தைச் சொன்னவுடன் கோவிந்தசாமி செயராமன் அவர்கள் கடலூர் மாவட்டம் நல்லாத்தூரில் தங்கியிருந்த நம் பேராசிரியரைத் தொடர்புகொண்டு, சந்திக்க வரும் வேட்கையைச் சொன்னார்கள். மறுநாள்(12.10.2024) சந்திக்க, நாளும் நேரமும் உறுதியானது. குறித்த நேரத்தில் புறப்பட்டு, நல்லாத்தூரை அடைந்தோம். நல்லாத்தூர் என்பது சிவப்பிரகாச சுவாமிகள் அடக்கமான ஊராகும். மேலும் புகழ்பெற்ற சிவன்கோவிலும், பெருமாள் கோவிலும் இவ்வூருக்குப் பெருமை சேர்க்கின்றன. இயற்கையான சிற்றூர்ப்புறச் சூழல்களை நிறைத்துக்கொண்டு, நகரத்து மாந்தர்களை ஆர்வமுடன் வரவேற்கும் அழகுநிறைந்த ஊர் இதுவாகும். முன்னமே இவ்வூருக்கு ஒருமுறை சென்றுள்ளேன்; இவ்வூரின் நீர்நிலைகளை ஒட்டிய வயல்வெளிகளில் காலார நடந்துள்ளேன். எனினும் இந்த ஊரில்தான் பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்கள் வாழ்ந்து வருகின்றார் என்ற செய்தி அந்தநாளில் எனக்குத் தெரியாது. இது நிற்க. 

பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்கள் நல்லாத்தூரில் உள்ள தம் தாய் மாமன் வீட்டில் வாழ்ந்து வருகின்றார். எங்களை அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் அன்பொழுக வரவேற்றனர். தாம் பிறந்த இடம் இதுதான் என்று பேராசிரியர்  அவர்கள் இல்லத்தின் ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டி, மகிழ்ந்தார்கள். தமக்கு 94 அகவை ஆகின்றது என்று ஊக்கமுடைய இளைஞரைப்போல் உரைத்தார். கண் பார்வையும் செவிப்புலனும் பேச்சுறுப்புகளும் சிறப்புடன் செயலாற்றுகின்றமையைக் கண்டு மகிழ்ந்தோம். அறிவு ததும்பும் முகமும், அன்பு கனிந்த அகமும் அவரிடம் இருக்கக் கண்டேன். உரையாடலில் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் தெறித்து ஓடின. தம் மனைவியைப் பலவாண்டுகளுக்கு முன்னமே இழந்த நிலையிலும் தம் பிள்ளைகளை வளர்ப்பதற்காக மறுமணம் செய்துகொள்ளவில்லை என்ற உண்மையை மனந்திறந்து உரைத்தார். தம் பிள்ளைகளை யாதொரு குறையுமில்லாமல் படிக்க வைத்து ஆளாக்கியதாகவும் அனைவரும் நல்ல நிலையில் பிரான்சு நாட்டில் பணியிலிருந்தபடி, மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். 

பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது அவரின் இளம்பருவத்து வாழ்க்கையைக் குறித்தும், ஆசிரியர் பணி குறித்தும், குடும்பப் பொறுப்புகள் குறித்தும், தம் பிள்ளைகளின் வளர்ச்சி குறித்தும், தம் ஈடுபாடான பணிகளுக்குக் கிடைத்த பாராட்டுகள், விருதுகள் குறித்தும், தாம் செய்த அறப்பணிகள் குறித்தும் மனந்திறந்து உரையாடினார். அவரின் உயர்வுக்குக் காரணமாக அமைந்தது அவரின் நன்றி பாராட்டும் உள்ளமே என்பதை அவரின் உரையாடல்களின் வழியாக நான் கவனித்தேன். தம் செல்வத்துப் பயன் ஈதல் என்பதை உணர்ந்து, அறக்கட்டளைகள் பல நிறுவித் தம் விருப்பங்கள் தொடர்ந்து நடைபெற வழிசெய்துள்ள பாங்கும், இறையீடுபாட்டின் காரணமாகப் பல பொதுத்தொண்டுகள் ஆற்றியுள்ளதையும் அறிந்து பேருவகையுற்றோம். 

தன் தாய்மாமன் வீட்டில் வளர்ந்தமை, தம் தாய்மாமன் வழி இலக்கிய அறிவு, உலகியல் அறிவு பெற்றதை அவர் எடுத்துரைத்து, அக்குடும்பத்தின் 94 அகவைப் பேரன் என்பதை அவர் நினைவுகூர்ந்தபொழுது அவரின் மேம்பட்ட உயர்ந்த உள்ளம் எனக்குப் புரியத்தொடங்கியது. தம்முடன் பழகியவர்கள் அவ்வப்பொழுது வந்து, தம்மைப் பார்த்துச் செல்வதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். வாய்ப்பு அமையும்பொழுது மீண்டும் வந்து பார்த்துச் செல்லுமாறு எங்களிடமும் சொன்ன, அவரிடம் பிரியா விடைபெற்று வந்தபொழுதும் அவரின் வாழ்க்கை வரலாறு என் நெஞ்சில் நினைவுக்குறிப்புகளாக நிலைபெற்றுள்ளது. 

செவாலியே க. சச்சிதானந்தம் வாழ்க்கைக் குறிப்பு: 

க. சச்சிதானந்தம் அவர்கள் கடலூர் மாவட்டம் நல்லாத்தூரில் 30.11.1930 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் சவுளி அ. சி. கணேசன் முதலியார், செல்வாம்பாள் ஆவர். புதுச்சேரியில் உள்ள சொசியெத்தே புரோகிரெசீஸ்து பள்ளியிலும் பெத்தி செமினார் பள்ளியிலும் தம் தொடக்கக் கல்வியைப் பயின்றவர். பின்னர் தமிழிலும் பிரெஞ்சிலும் பிரவே(Brevet) பயின்றவர். அதன் பின்னர் தமிழில் பி.லிட், முதுகலை பயின்றவர். பிரெஞ்சு மொழியில் பக்கலோரெயா (Baccalaureat), திப்ளோப் சுப்பேரியேர் (D.S.), Alliance Frse, Paris ஆகிய படிப்புகளை நிறைவுசெய்துவிட்டு, ஆசிரியர் பயிற்சியில் சான்றிதழும் பெற்றவர்.(C.A.P. Certificat Aptitude Pedagogique). தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு மொழியில் வல்லுநரான க. சச்சிதானந்தம் அவர்கள் தமிழுக்குப் பிறமொழிச் செய்திகளைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் நூல்வடிவில் தந்து மொழிப்பணியாற்றியுள்ளார். முப்பத்தைந்து ஆண்டுகளாகப் பல்லாயிரம் மாணவர்களுக்குப் பிரஞ்சு மொழியையும் தமிழையும் பயிற்றுவித்துள்ளார். இவர்தம் இலக்கியப் பணியைப் பாராட்டி, பிரஞ்சு அரசு 2006 ஆம் ஆண்டு செவாலியே என்ற உயரிய விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது. 

பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்களின் திருமணம் 09.06.1955 இல் நடைபெற்றது. துணைவியார் பெயர் சாரதாம்பாள் ஆவார். இவர்களுக்கு 1. கலைவாணன் 2. அன்புவாணன் 3. தமிழ்ச்செல்வி என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.

க.சச்சிதானந்தம் அவர்களின் பணிநிலை

 1952, ஆகஸ்டு 4 இல் தமிழ்ஆசிரியராக Collège calve Mission (வ.உ.சி) பணியாற்றினார். பின்னர்த் திருபுவனை, காரைக்கால் புதினக் கல்லூரி, ரெட்டியார்பாளையம் École Centrale  முதலிய பள்ளிகளில் பணியாற்றினார். பிரஞ்சு ஆசிரியராக  1970 இல் Lycée français பணியாற்றத் தொடங்கி, 1988 இல் பணி நிறைவு பெற்றார்.

க. சச்சிதானந்தம் அவர்களுக்குக் கிடைத்துள்ள சிறப்புகள்: 

பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்களின் வாழ்நாள் பணியைப் பாராட்டிப் பல்வேறு இலக்கிய அமைப்புகளும் நிறுவனங்களும் பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் செய்துள்ளன. 

1.   பிரஞ்சு தமிழ் ஆய்வு மாமணி

2.   சான்றோர் மாமணி (2000)

3.   சிறுவர் மனச்செம்மல் (சங்கரதாஸ் நாடக மன்றம்)

4.   மொழியாக்கச் செல்வர் (புதுவைக் குழந்தை எழுத்தாளர் சங்கம்)

5.   செவாலியே தெ. பால்மு அக்காதெமிக் விருது

6.   செந்நாப் புலவர் விருது (2014)

7.   தமிழ்ப்பணிச் செம்மல் விருது (பிரான்சு திருவள்ளுவர் கலைக்கூடம்)

8.   கம்பன் விருது (பாரிசு கம்பன் கழகம்) 

முதலியன குறிப்பிடத்தக்க விருதுகளும் பெருமைகளுமாகும்.  

க. சச்சிதானந்தம் அவர்களின் தமிழ்க்கொடைகள்:



 

1.   அருமைக் கதைகள் 50

2.   அழகுக் கதைகள் 50

3.   ஈய் நகர வானங்

4.   ஏழைகள் (Les Miserables, V. Hugo)

5.   ஒரு நாள் ஒரு கதை (365 கதைகள்)

6.   கட்டுரைக் களஞ்சியம்

7.   கருணை மறவன்

8.   குரங்குக் காடு

9.   சங்கர்

10. சிவப்புப் பாறை

11. சின்னஞ்சிறு பிரஞ்சுக் கதைகள்

12. சுவையான பிரஞ்சுக் கதைகள்

13. சுவையான பிரஞ்சுக் கதைகள் இருபது

14. சுவையான பிரஞ்சுப் பக்கங்கள் -1

15. ஞான மகன்

16. நல்ல கதைகள் 100

17. நல்ல நல்ல கதைகள்

18. நல்லன நானூறு

19. நாள் ஒன்று கதை ஒன்று (365 கதைகள்)

20. நீதி நூல்கள்

21. பரிசு

22. பாடும் பறவை

23. பிரஞ்சு ஆட்சியில் தமிழின் நிலை

24. பிரஞ்சு இலக்கியக் கதைகள்

25. பிரஞ்சுத் தத்துவக் கதைகள்

26. பிரஞ்சு நகைச்சுவை 1, 2

27. பிரஞ்சு நகைச்சுவை-300

28. பிரஞ்சு நன்னெறிக் கதைகள்

29. பிரஞ்சு நாட்டுப்புறக் கதைகள்

30. பிரஞ்சு நாடோடிக் கதைகள் 1, 2

31. பிரஞ்சு வட்டாரக் கதைகள்

32. பிரஞ்சுப் பூக்கள்

33. பிரஞ்சுப் பொன்மொழிகள் 1000

34. பிரெஞ்சுக் கவிதைகள்

35. புகழ்பெற்ற பிரஞ்சுக் கதைகள்

36. பொனாப்பர்த்தின் பகைச் சிறுவன் (Le Moucheron de Bonaparte)

37. போல், விர்ழினி (அச்சில்)

38. மாய ஈட்டி

39. மிகமிக நல்ல கதைகள்

40. விக்தோர் உய்கோ

41.   ஜானகி