நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 27 டிசம்பர், 2023

மதுரகவி, பேராசிரியர் தா. ம. வெள்ளைவாரணம்

 

                   பேராசிரியர் தா. . வெள்ளைவாரணம் 

தா. . வெள்ளைவாரணம் அவர்கள் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியின் முன்னாள் மாணவராகவும், பேராசிரியராகவும் விளங்கியவர். பதிப்பாசிரியராகவும், சொற்பொழிவாளராகவும், வினா - விடை நூல்களை வழங்கியவராகவும், உரையாசிரியராகவும் தமிழுலகில் நன்கு அறியப்பட்டவர். இவர்  வெளியிட்ட வினா - விடை நூல்கள் (Notes) வித்துவான் தேர்வாளர்கள், புலவர் வகுப்பில் பயின்ற  மாணவர்கள், இளங்கலை (பி.லிட்), முதுகலை மாணவர்கள்  நடுவே இவரை  நன்கு அறிமுகம் செய்திருந்தன. திருவாசகம், சைவ சித்தாந்தம் குறித்து இவர் ஆற்றிய உரைகள் சைவ சமய அன்பர்களால் என்றும் நினைவுகூரப்படுபவை

பேராசிரியர் தா. ம. வெள்ளைவராணம் அவர்கள் 06.09.1927 இல் கும்பகோணத்தில் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் மகாலிங்கம் செட்டியார், செகதாம்பாள் ஆவர். குடந்தையில் வாழ்ந்துவரும் சோழபுரம் சைவச் செட்டியார் மரபு வழியில் இவர் வந்தவர். 

குடந்தை நகராட்சி தொடக்க, உயர்நிலைப் பள்ளியிலும் குடந்தை சிறிய மலர் உயர்நிலைப் பள்ளியிலும் இளமைக் கல்வியை நிறைவுசெய்தவர். தம் பட்டப்படிப்பை மயிலாடுதுறை மெய்கண்டார் தமிழ்க் கல்லூரி, திருப்பனந்தாள் காசிவாசி சாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் வித்துவான் படிப்பை 1945 ஆம் ஆண்டு முதல் 1950 வரை அமைந்த காலத்தில் நிறைவுசெய்தவர்.

 தா. ம. வெள்ளைவாரணம் அவர்களின் துணைவியார் பெயர் விசாலாட்சி அம்மாள் ஆகும். இவர்களின் திருமணம் 1950 ஆம் ஆண்டளவில் நடைபெற்றது.

பேராசிரியர் தா. ம. வெ. அவர்கள் தாம் பயின்ற திருப்பனந்தாள் காசிவாசி சாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பணி ஓய்வுக்காலத்திற்குப் பிறகு தரங்கம்பாடியை அடுத்த பொறையாற்றில் அமைதி வாழ்க்கை வாழ்ந்தவர். 

கல்லூரிப் பணிக்காலத்தில் வகுப்பில் இனிய இசையில் பாடல்களைப் பாடி, விளக்கும் ஆற்றலால் மாணவர்கள் நடுவே அனைவராலும் விரும்பத்தக்க பேராசிரியராக விளங்கியவர். அவரிடம் படித்த மாணவர்கள் மட்டுமன்றி, அவரிடம் பழகியவர்களும் ஐயாவின் நினைவில் திளைப்பது உண்டு. 1991 இல் நான்  எழுதிய பனசைக்குயில் கூவுகிறது என்னும் நூலில்,

“கிள்ளைகளும் காக்கைகளும் குரக்கினமும் குயிலினமும்

வெள்ளைவா ரணத்திடமே விரும்புதமிழ் கற்றுநிற்கும்,

பிள்ளைத்தமிழ் விளையாட்டாய்ப் பாவலர்கள் பாடிவர

பள்ளிகள்தாம் பலநிறையும் பழம்பனசை புலமைகாண்”

என்று இருபொருளில் யான் எழுதிய பாடலில் வெள்ளைவாரணம் ஐயாவின் சிறப்பினை முன்னோர் வழியாக அறிந்து பதிவுசெய்திருப்பேன்.

தம் பணியோய்வுக் காலத்தில் காசித் திருமடத்திலிருந்து வெளிவரும் குமரகுருபரர் இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியும் திருமடத்துப் பதிப்புப் பணிகளில் துணைநின்றும் தமிழ்த்தொண்டாற்றியவர். 



பேராசிரியர் தா. ம. வெள்ளைவாரணம் அவர்களின் முத்துவிழா கும்பகோணத்தில் 24. 08. 2007 இல் நடைபெற்றது. பேராசிரியரைக் குருவாகவும் ஆசிரியராகவும் ஏற்றுக்கொண்ட அன்பர்கள் முன்னின்று இவ்விழாவை பக்திப் பெருக்கோடு நடத்தினர். 

பெற்ற விருதுகளும் பட்டங்களும் 

தா .ம. வெள்ளைவாரணம் அவர்களின் தமிழ் ஈடுபாட்டைக் கண்ட மதுரை ஆதீனம் தவத்திரு சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 1959 ஆம் ஆண்டில் “திருமுறைச் செம்மல்” பட்டம் வழங்கிப் பாராட்டினார்கள். திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் தவத்திரு அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் 1960 இல் “மதுரகவி” பட்டமும், சென்னை மாம்பலம் ஆரோக்கியாச்சிரமம் 1969 இல் “பண்டித ரத்னா” பட்டமும் செம்பொன்னார்கோவில் மணிவாசகர் மன்றம் 1997 இல் “சைவத்தமிழ் நாவலர்” பட்டமும், திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் கயிலை மாமுனிவர் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அவர்கள் 1998 இல் “சைவத்தமிழ் மணி” என்னும் பட்டமும் வழங்கிப் பாராட்டியுள்ளனர். 

திருவாவடுதுறை ஆதீனம் தவத்திரு. சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் 08. 02. 2003 ஆம் ஆண்டில் “திருவாவடுதுறை ஆதீனப் புலவர்” என்னும் தகுதியை வழங்கிப் பாராட்டியுள்ளார்கள். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பு அமைப்பு  28.05.2004 இல் நடத்திய தொல்காப்பியத் தமிழ் ஆய்வு மாநாட்டில் “தொல்காப்பியச் செம்மல்” என்னும் உயர் தகுதியை அளித்துச் சிறப்பித்துள்ளது. 25. 01. 2007 இல் திருவாவடுதுறை ஆதீனத்தின் குருமகா சந்நிதானம் அவர்கள் “சைவத் தமிழ்ச் சீராளர்” என்னும் விருதினை வழங்கிப் பாராட்டினார்கள். 25.01.2010 இல் “சிவநெறி உரைச்செம்மல்” என்னும் பட்டத்தினையும் வழங்கித் திருவாடுவதுறை ஆதீனம் பாராட்டியுள்ளது. 

தா. ம. வெள்ளைவாரணம் அவர்களின் குருவாக விளங்கியவர் மீனாட்சிசுந்தர தேசிக பரமாச்சாரிய சிவாக்ரக யோகிகள், ஆவர். 

தா. ம. வெள்ளைவாரணம் அவர்களின் உயர் பண்புகள்: 



பேராசிரியர் தா.ம. வெள்ளைவாரணம் தம்  மாணவர்களிடத்து அறிவார்வம் காணப்பட்டால் அவர்களை உரியவாறு பாராட்டி ஊக்கப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டவர். நன்னூல் உள்ளிட்ட பல நூல்களை அந்நாளில் அச்சிட்டு, இலவசமாக வழங்கியவர்கள். வறுமை நிலையிலும் உதவி தேவைப்படும் நிலையிலும் உள்ள மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்  படிக்கச் செய்யும் இயல்பினர். தம் இல்லத்தில் சில மாணவர்களைத் தங்கச் செய்து அவர்கள் சிறப்பாகக் கல்வி கற்பதற்கு ஆதரவு காட்டியதை நன்றியுடன் பல மாணவர்கள் இன்றும் குறிப்பிடுகின்றனர். நாளும் சிவபூசை நிகழ்த்தும் இயல்புடைய தா.ம. வெள்ளைவாரணம் அவர்கள் தம் வழியில் பல மாணவர்களை ஆன்மீக உலகில் உருவாக்கிச் சென்றுள்ளதை நன்றியுடன் குறிப்பிடுதல் வேண்டும். 



தா. ம. வெள்ளைவாரணம் பதிப்பித்த, வெளியிட்ட நூல்கள்: 

பி.லிட்.(தமிழ்), முதுகலை உள்ளிட்ட தமிழ் படிக்கும் மாணவர்களுக்குக் கல்வெட்டியல், கோயிற்கலை என்னும் பாடநூல்களும் தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கண நூல்களும் பாட நூல்களாக அந்நாளில் இருந்தன. மாணவர்களின் கற்கும் இடர்ப்பாட்டினை அறிந்து அவர்களுக்கு உதவும் வகையில் கல்வெட்டியல், கோயிற்கலை வினா - விடைகளை நூலுருவில் உருவாக்கித் தந்ததுடன் இலக்கண நூல்களுக்கும் வினா விடை நூல்களையும் உருவாக்கித் தந்துள்ளார். இவற்றால் தமிழ் படிக்கும் மாணவர்கள் பாடங்களை எளிதாக அறிந்துகொள்ள முடிந்தது. அவ்வகையில் பேராசிரியர் உருவாக்கி, சென்னை மோகன் பதிப்பகத்தால் கீழ்வரும் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

தா.ம. வெள்ளைவாரணம் அவர்களின் வினா விடை நூல்கள் 

·         தொல்காப்பியம் – எழுத்து – இளம்பூரணம்

·         தொல்காப்பியம் – எழுத்து – நச்சினார்க்கினியம்

·         தொல்காப்பியம் – சொல் – சேனாவரையம்

·         தொல்காப்பியம் – பொருள் – இளம்பூரணம்

·         தொல்காப்பியம் – பொருள் – நச்சர், பேராசிரியர்

·         நன்னூல் – விருத்தியுரை

·         நன்னூல் – காண்டிகையுரை

·         அகப்பொருள் விளக்கம்

·         புறப்பொருள் வெண்பா மாலை

·         யாப்பருங்கலக் காரிகை

·         தண்டியலங்காரம்

·         மாறனலங்காரம்

·         பன்னிருபாட்டியல்

·         வண்ணத்தியல்பு

·         கல்வெட்டும் கல்வெட்டியலும்

·         கோயிற்கலை

·         தொல்காப்பியம் – சொல் – இளம்பூரணம்

·         தமிழ்மொழி வரலாறும் ஒப்பிலக்கணமும்

·         தொல்காப்பியப் பாயிரவிருத்தியும் சூத்திரவிருத்தியும்

·         கட்டுரைக் கனிகள் 1 & 2 

முதலிய நூல்களை வினா - விடை அமைப்பில் தந்துள்ளார். 

பேராசிரியர் தா. ம. வெள்ளைவாரணம் அவர்கள் சமய இலக்கியங்களிலும் சைவ சித்தாந்த சாத்திர நூல்களிலும் ஆழ்ந்த பயிற்சியுடையவர். எனவே இவற்றை அறிந்துகொள்ள விழையும் அன்பர்களுக்குப் பயன்படும் வகையில் அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பல்வேறு நூல்களை எளிய விலையில் குறைந்த பக்கங்களில் கிடைப்பதற்கு வழிசெய்துள்ளார். அவ்வகையில் 

·         உருத்திராக்க மகிமை

·         தலத்துக்கொரு தேவாரம்

·         தேவாரம் பாடியவாறு அட்டவணை

·         கயிலை மாமுனிவர் தோத்திரத் திரட்டு

·         நாகூர் நாகநாத சுவாமி திருக்கோயில் தல வரலாறு

·         திருப்பெருந்துறை தல வரலாறு

·         மாலை மாற்றுப் பதிகம் உரை

·         அபிராமி அந்தாதியும் பதிகங்களும் உரை

·         கருவூர்தேவர் திருவிசைப்பாப் பதிகங்கள் உரை

·         ஏழ் கிழமை பாராயணத் திரட்டு

·         ஆணை நமதே பதிகங்கள் உரை

·         திருமுறை ஆசிரியர்கள் வரலாறு

·         திருச்செந்தூர் அகவல் உரை

·         காரைக்கால் அம்மையார் பிரபந்தங்கள் உரை

·         திருந்துதேவன்குடி தல வரலாறு

·         திருமாந்துறை தல வரலாறு

·         திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை – திருக்குடந்தை தலபுராணம் உரைநடையாக்கம்

உள்ளிட்ட நூல்களைத் தமிழ்,  சமய உலகம் செழிக்க வழங்கியுள்ளார். மேலும் இவர் வழங்கியுள்ள, 

·         சைவ சித்தாந்த வினாடி வினா

·         மெய்கண்ட சாத்திரங்கள் 14 ஓர் அறிமுகம்

·         ஆறாறு தத்துவம் ஏது? (36 தத்துவ விளக்கம்)

·         சிவஞானபோதம் & சிவஞான சித்தியார் தெளிவு

·         மெய்கண்ட சாத்திரம் 14 நூல்களில் வினாக்கள்

·         திருவாவடுதுறை ஆதீனப் பண்டார சாத்திரங்கள் 14 – ஓர் அறிமுகம்

·         திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் தெளிவு

·         முந்நூல் தெளிவு 

உள்ளிட்ட நூல்களும் சைவ சித்தாந்தம் பயிலும் மாணவர்களுக்குப் பேருதவியாக உள்ளன. 

தா. ம. வெள்ளைவாரணம் பொழிவுகளும் சிறப்புரைகளும் 

திருவிடைமருதூர், சிதம்பரம், நெய்வேலி ஆகிய நகரங்களில் பெரியபுராணத் தொடர் விரிவுரைகள் பல ஆண்டுகள் நிகழ்த்தியவர். திருவிடைமருதூரில் திருவாசகத் தொடர் விரிவுரை ஓராண்டு முழுவதும் வாரந்தோறும் நிகழ்த்தியவர். சிதம்பரத்தில் திருவிளையாடல் புராணம் தொடர் விரிவுரை நிகழ்த்தியுள்ளார். சிதம்பரத்தில் திருவாசகத் தொடர் விரிவுரையும் நிகழ்த்தியுள்ளார். சிதம்பரம், திருவாருர், சீர்காழி ஆகிய நகரங்களில் திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மைய வகுப்புகளை நடத்தி, பலருக்குச் சைவ சித்தாந்த பேருண்மைகளைப் பயிற்றுவித்தவர். 

தா. ம. வெள்ளைவாரணம் அவர்கள் திருவிடைமருதூரில் திருவாசகத் தொடர் விரிவுரை செய்தபொழுது சிவபுராணத்துக்கு அமைந்த பேச்சுரையை மட்டும் தமிழாசிரியர் சபா. ப. மகாலிங்கம் அவர்கள் எழுத்தில் பெயர்த்தெழுதி, திருவரங்கம் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் திருக்கூட்டம் சார்பில் நூலுருவம் பெற்றுள்ளது. இந்த நூலில் சிவபுராணம் சார்ந்த நுட்பமான கருத்துகள் பல இடங்களில் பதிவாகியுள்ளன. இந்த முயற்சியில் தா.ம.வெள்ளைவாரணனாரின் அணுக்கத் தொண்டர் சிவ. ஸ்ரீதரன் அவர்கள் ஈடுபட்டமை பாராட்டினுக்கு உரியது. அதுபோல் சிதம்பரத்தில் வாழ்ந்துவரும் சிவனியச் செல்வர் சீனு. அருணாசலம் அவர்கள் தா.ம.வெள்ளைவாரணம் அவர்களின் எண்ணங்கள் யாவும் எழுத்துருவம் பெறுவதற்குப் பெருந்துணைபுரிந்துள்ளார்கள். 

பொறுப்புகளும் பதவிகளும் 

திருவாவடுதுறை ஆதீனப் புலவர், திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் கல்விக் குழுமச் செயற்குழு உறுப்பினர், சோழபுரம் சைவச் செட்டியார் கல்வி வளர்ச்சிச் சங்கச் செயற்குழு உறுப்பினர், செம்பொன்னார் கோவில் மணிவாசக மன்றத்தின் சிறப்புத் தலைவர், பொறையாறு அம்பலவாணர் அருள்நெறிக் கழகத்தின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து, தாம் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளில் அழுத்தமான சுவடுகளைப் பதிவு செய்த பெருமகனார் தா.ம. வெள்ளைவாரணனார் ஆவார். 

26.02.2010 இல் பேராசிரியர் தா. ம. வெள்ளைவாரணம் இறையடி எய்தினார். அவர்தம் நூல்களும் பொழிவுகளும், பணிகளும் அவரை நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.








 

 

கருத்துகள் இல்லை: