நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 20 நவம்பர், 2023

மலேசியா, “இசைத்தென்றல்” நா. மாரியப்பன்

 

                     “இசைத்தென்றல்” நா. மாரியப்பன் 

இணையவெளியில் உலவிக்கொண்டிருந்தபொழுது 2023 சூன் திங்கள் 10, 11 நாள்களில் (காரி, ஞாயிறு) மலேசியாவின் ஈப்போ மாநகரில்  மரபு கவிதை மாநாடு நடைபெற உள்ளது என்ற குறிப்பைப் படித்து, மாநாட்டுக் குழுவினரைத் தொடர்புகொண்டேன்மாநாட்டு ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான முனைவர் குமரன் வேலு அவர்களைத் தொடர்புகொண்டு, தங்குமிடம், உணவு, போக்குவரவு குறித்த உதவிகள் சிலவற்றைக் கேட்டேன். அவர்களும் மகிழ்ச்சியாக உதவ முன்வந்தார்கள். கோடை விடுமுறைக் காலம் என்பதால் அயல்நாடு செல்வதில் இடர்ப்பாடு இருக்காது என்று செலவுத்திட்டம் வகுத்துக்கொண்டேன். மலையகச் செலவும் உறுதிப்பட்டது. மரபு கவிதை வளர்ச்சிக்குத் தனித்தமிழ் இயக்கத்தாரின் பங்களிப்பு என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வரைந்து மாநாட்டுக் குழுவுக்கு விடுத்தேன். கட்டுரையும் ஏற்கப்பட்டது. 

மாநாட்டில் கட்டுரை படிப்பது ஒரு காரணமாக இருந்தாலும் அங்கு வாழ்ந்துவரும் என் மூத்த நண்பர்கள் சிலரைக் கண்டு உரையாடுவதும், அவர்களிடமிருந்து தமிழிசை சார்ந்த ஆய்வுக்குறிப்புகள் சிலவற்றைப் பெற்று வருவதும், மலையகத்தின் மாண்புறு அழகுக் காட்சிகளைக் கண்டு வருவதும் என் செலவின் உள்நோக்கமாக இருந்தன. 

மலேசியாவில் வாழ்ந்துவரும் மூத்த இசையறிஞர் இசைத்தென்றல் நா. மாரியப்பனார்க்கு என் வருகையை முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். அவரைக் காண்பதற்கும், உரையாடுவதற்கும் வாய்ப்பாக அவர் இல்லத்துக்கு அருகில் தங்கும் அறை இருக்குமாறு விடுதியில் முன்பதிவு செய்திருந்தோம். என் இசைத்தமிழ்க் கலைஞர்கள் - நோக்கீட்டு நூல் உருவாக்கத்தின்பொழுது உலகின் பல பகுதிகளில் வாழ்ந்துவரும் இசைக்கலைஞர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களின் இசை வாழ்க்கையையும் பணிகளையும் அறிந்து, அவர்களை நேரில் காணும் வாய்ப்புக்கு ஆர்வமாகக் காத்துக்கொண்டிருந்தேன். அந்த வகையில் மலேசியாவில் வாழ்ந்துவரும் இசைத்தென்றல் நா. மாரியப்பனாரின் தொடர்பு கிடைத்தவுடன்  ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் அவருடன் உரையாடுவதும் அவர்தம் முக்கால் நூற்றாண்டு(எழுபத்தைந்து ஆண்டு) இசைப்பயணத்தை அறிவதும் என் வழக்கமாக இருந்தது. 

ஈப்போவில் முன்பே  நடைபெற்ற ஒரு  மாநாட்டில் நா. மாரியப்பனாரைக் காணும் வாய்ப்பு அமைந்தாலும் அவருடன் நெருங்கி உரையாடவோ, அவர்தம் கடலளவு இசையறிவை அறிந்துகொள்ளவோ அன்றைய நாளில் பொழுது வாய்க்கவில்லை. அந்த மாநாட்டில் பகலுணவு நேரத்தில் அவரின் இசைப்பொழிவு இருந்ததால் மாநாட்டுக்கு வந்தவர்கள் அனைவரும் உணவுக்கூடம் நோக்கி ஓடினோமே தவிர, தேனொத்த அவர்தம் இசைநிகழ்வைக் கேட்டோமில்லை. இசைத்தென்றலின் இசைமழை பாலைநிலைத்தில் பெய்த பெருமழையாகப் பயனற்றுப் போனது. எனவே, அடுத்த முறை மலேசியா வரும்பொழுது இசைத்தென்றல் நா. மாரியப்பனாரைச் சந்திக்க வேண்டும் என்ற வேட்கையை முதன்மை நோக்கமாக அடைகாத்து வைத்திருந்தேன். 

09.06.2023 மாலை நேரத்தில் மலேசியாவின் வானூர்தி நிலையத்தில் தரையிறங்கினேன். அங்கு வந்து என் உயிர்த்தோழர் ம. முனியாண்டி ஐயாவும் மாணிக்கம் சொக்கலிங்கம் ஐயாவும் இரவிச்சந்திரன் ஐயாவும் எதிர்கொண்டு வரவேற்றனர். அவர்கள் கொண்டுவந்திருந்த மகிழுந்தில் ஏறிக்கொண்டேன். கோலாலம்பூரின் பிரிக்பீல்ட்சு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் கொண்டு வந்து இறக்கிவிட்டு, அன்பர்கள் குழு என்னிடம் விடைபெற்றது. 

மலேசியாவின் பிரீக்பீல்ட்சு நகருக்கு வந்துள்ளதையும் விடுதியில் தங்கியிருக்கும் விவரத்தையும், விடுதியின் பெயரையும் சொல்லி, இசைமேதை நா. மாரியப்பனாரைச் சந்திக்க விரும்பும் ஆர்வத்தைப் பகிர்ந்துகொண்டேன். விவரங்களைக் கேட்டறிந்த ஐயா அவர்களே நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்து, கீழ்த்தளத்தில் வினவிப் பார்த்துள்ளார்கள். கீழே இருந்த தமிழக அன்பர்கள் சிலர் என் வருகை குறித்த விவரத்தை ஐயாவிடம் சரியாகத் தெரிவிக்காத காரணத்தால் என்னைச் சந்திக்க இயலாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். நான் குளித்து முடித்து, மீண்டும் ஐயாவுடன் தொடர்புகொண்டேன். மீண்டும் அவருடன் உரையாடி, விவரங்களைப் பெற்று அருகில் இருந்த இல்லத்துக்கு நானே தேடிச் சென்றேன். ஐயாவும் என் வருகைக்காக அங்கிருந்த கோவில் முகப்பில் அமர்ந்து  காத்திருந்தார்கள். என்னை அழைத்துக்கொண்டு, தம் குடியிருப்பு நோக்கி ஆர்வமாகச் சென்றார்கள்.

 

நா. மாரியப்பனார், மு. இளங்கோவன்

நா. மாரியப்பனாரின் தமிழ் வாழ்க்கை 

நா. மாரியப்பன் அவர்கள் மலேசியாவின் பினாங்கில் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் நாள் பிறந்தவர். பெற்றோர் பெயர் நாகப்பன், பொன்னம்மாள். பினாங்கு, ஆயர் ஈத்தாம் ஊரில் இருந்த மாரியம்மன் கோவில் நினைவாக இவருக்கு மாரியப்பன் என்ற பெயர் அமைந்தது. ஏழாம் வகுப்பு வரை கல்வி பயின்றவர். இவரின் தமிழ் ஆசிரியராக வாய்த்த கா.கு. மாணிக்க முதலியார் அவர்களின் ஊக்குவிப்பில் இசை ஈடுபாடு இவருக்கு அமைந்தது. இளம் அகவையில் நடிப்பாற்றலும் மாரியப்பனார்க்கு இருந்தது. மாரியப்பனாரின் தந்தை நாகப்பன் அவர்கள் தமிழகத்தில் தஞ்சை மாவட்டம்,  நன்னிலம் வட்டம் பாப்னஞ்சேரியில் பிறந்தவர். அம்மா காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்தவர். 

மாரியப்பனார் ஏழாம் வகுப்பு கல்விக்குப் பிறகு, தம் தந்தையார் ஊரான பாப்னஞ்சேரிக்கு வந்து, நாடகக் குழுவில் இணைந்து பயிற்சிபெற விரும்பினார். இராமநாதபுரத்தில் இருந்த ஸ்ரீதேவி நாடக சபாவில் சேர்ந்தார்.  மூன்று ஆண்டுகள் இந்தக் குழுவில் இணைந்து இராமநாதபுரம், குளித்தலை, பரமக்குடி, சிவகங்கை, காரைக்குடி முதலிய ஊர்களில் தங்கி, நாடகத்தில் நடித்தார். பல புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் பாடல்களைக் கேட்டு, பயிற்சிபெற்றார். 1954 இல் மீண்டும் மலேசியாவுக்குத் திரும்பினார். பினாங்கு மாணவர் மணி மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டார். இவரிடமிருந்த இசைப்புலமையை அறிந்து, இவருக்கு மலேசிய வானொலியில் இசையமைக்கவும், பாடவும் வாய்ப்புகள் அமைந்தன. நாடகமேதை டி.கே. சண்முகம் அவர்கள் மலேசியாவின் பினாங்குக்குச் சென்றபொழுது நம் மாரியப்பனார்  “தாமரை பூத்த தடாகமடி” என்ற பாடலை இனிய இசையுடன் பாடினார். பாடலில் ஈர்ப்புற்ற டி.கே. சண்முகம், தாம் கடிதம் தருவதாகவும் தமிழகம் சென்று எம்.ஜி.ஆர் அவர்களைப் பார்க்குமாறும் சொன்னார். அவரிடம் கடிதம் பெற்றுக்கொண்டு மாரியப்பன் அவர்கள்  தமிழகம் வந்தார். 

1957 முதல் 1970 வரை சென்னையில் தங்கிப், பல்வேறு இசைக்கலைஞர்களுடன் பழகவும் பாடவும் வாய்ப்புகளைப் பெற்றார். எம்.ஜி.ஆர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சிதம்பரம் ஜெயராமன் உள்ளிட்டவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் இவருக்கு அமைந்தது. இசையறிஞர் எம்.கே. ஆத்மநாதன் அவர்களைத் தம் குருநாதராகக் குறிப்பிடும் மாரியப்பனார் அந்நாளில் ஒரு பாடல் பாடினால் ஏழரை ரூபாய் ஊதியம் கிடைக்கும் என்கின்றார். சென்னை வானொலியிலும், சென்னையில் பல்வேறு கோவில் திருவிழாக்களிலும் பாடியுள்ளார். 

மாரியப்பன் அவர்கள் 1960 ஆம் ஆண்டில் சாந்தா அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். 1. தமிழ்ச்செல்வி, 2. துருவன், 3. தாமரைச்செல்வி. சென்னையில் பிறந்த இவர்கள் மூவரும் முறைப்படி சென்னையில் இசைக்கல்லூரியில் இசை பயின்றவர்கள். 

1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் மலேசியாவுக்குச் சென்று, ரெ. சண்முகம் அவர்களின் அறிமுகத்துடன் திரு. பாலகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து, மாதம் 32 பாடல்களுக்கு இசையமைக்க வேண்டும் எனவும் அதற்குரிய சம்பளம் 300 வெள்ளி எனவும் உறுதிப்படுத்தப்பட்ட அதன் அடிப்படையில் மலேசிய வானொலிக்கு இசையமைக்கத் தொடங்கினார். அதற்காகச் சிவரஞ்சனி இசைக்குழு உருவாக்கிச் செயல்பட்டார். இக்குழுவில் 12 இசைக்கலைஞர்கள் இணைந்து பணிபுரிந்தனர். 

இசைத்தென்றல் நா. மாரியப்பனாரின் தமிழிசைப் பணியைப் பாராட்டிப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் விருதுகளும் பட்டங்களும் வழங்கியுள்ளனர். அவை: 

1.       இசைத் தென்றல் பட்டம் - பினாங்குத் தமிழிளைஞர் மணிமன்றம் (1956)

2.       சிறந்த இசையமைப்பாளர் விருது - ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி (2010)

3.       திருக்குறள் இசைமணி - திருக்குறள் ஆராய்ச்சி மையம்

4.   வாழ்நாள் சாதனை - கோலாலம்பூர் தமிழ்ச்சங்கம் 

மேற்கண்ட செய்திகளை அவரின் வாய்மொழியாக அறிந்துகொள்ள முடிந்தது.  ஒவியர் எஸ். சந்திரன் அவர்களின் நூலிலும் இச்செய்திகள் பதிவாகியுள்ளன. 

இசைத்தென்றல் மாரியப்பனார் அகவை முதிர்ந்த நிலையிலும் இசைப்பாடல்களை நாள்தோறும் இசைத்து, பயிற்சி செய்துகொண்டுள்ளார்கள். இசை ஈடுபாட்டுடன் அவரைக் காணச் சென்ற என்னைக் கண்டதும் அளவிலா மகிழ்ச்சியுற்றார்கள். தம் வாழ்நாள் பணிகளைச் சற்றொப்ப இரண்டு மணிநேரம் விவரித்துப் பேசினார்கள். கைபேசியில் பதிந்துகொண்டேன். சில படங்களும் நினைவுக்கு எடுத்துக்கொண்டேன்.

 

நா. மாரியப்பனார் 2004 ஆம் ஆண்டில் இசைத்தென்றல் என்னும் தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டதைச் சொல்லி, அந்த நூலின் படியினையும் எனக்கு வழங்கினார். டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு ஐயாவின் வாழ்த்துரை அந்த நூலுக்கு அழகு சேர்க்கின்றது. 

பினாங்கில் பிறந்து வளர்ந்த மாரியப்பனார் பலவாண்டுகள் தமிழகத்தில் தங்கி, இசைப்பயிற்சி, நாடகப்பயிற்சி பெற்றுள்ளார். மலேசிய வானொலியில் பணியாற்றிய காலத்தில் கவிஞர்கள் பலரை இசைப்பாடல் எழுதச்செய்து அதற்கு இசையமைத்து, வானொலியில் உலவ விட்ட பெருமைக்குரியவர். அவ்வகையில் பல்லாயிரம் பாடலுக்கு இசையமைத்துள்ள இப்பெருமகனாரின் இசை ஆவணங்கள் போற்றிப் பாதுகாக்காமல் போனதால் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கின்றன. சிதறிக் கிடந்த பாடல்களுள் கையினுக்குக் கிடைத்த பாடல்களை மட்டும் தொகுத்து இசைதென்றல் என்னும் பெயரில் நூலாக்கி, 282 பக்கத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இந்த நூல் 2004 இல் வெளிவருவதற்கு மலேசியத் தமிழ்த்தொண்டர் காரைக்கிழார் அவர்களின் துணை பெரிதும் உதவியுள்ளது. 

இசைத்தென்றல் நூலில் கவிச்சுடர் காரைக்கிழாரின் 34 பாடல்களும், மணிக்கவிஞர் பாதாசனின் 21 பாடல்களும் வண்ணக்கவிஞர் திருவரசு, எழுச்சிக்கவிஞர் தீப்பொறி, புதுமைக் கவிஞர் பூபாலன், கவிஞர் இளமணி, கவிஞர் காசிதாசன், கவிப்புயல் வேலுசாமி, கவிஞர் அரசன் கனி, கவிஞர் வீரமான் உள்ளிட்ட 17  பெருங்கவிஞர்களின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. மலேசிய நாட்டின் தமிழ் மெல்லிசைப் பாடல் வளர்ச்சியையும் தமிழிசை வளர்ச்சியையும் அறிவதற்கு  இந்த நூல் பெரும் ஆவணமாக உள்ளது. 



இசைத்தென்றல் நா. மாரியப்பனாரின் இசைப்பணிகளுள் முதன்மையானதாகத் திருக்குறளை இனிய இசையில் பாடி வழங்கியுள்ளதைக் குறிப்பிட வேண்டும். 133 அதிகாரங்களிலிருந்தும் ஒவ்வொரு குறட்பா வீதம் 133  திருக்குறளை இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட இராகங்களில் பாடி ஒலிவட்டில் வழங்கியுள்ளமை இவர்தம் இசைப்புலமைக்கு எடுத்துக்காட்டாகும். “அகர முதல எழுத்தெல்லாம்” எனத் தொடங்கும் குறட்பாவைப் பூபாள இராகத்தில் இனிமையுடன் பாடித் தந்துள்ளார். மோகனப் பண்ணிலும் பல குறட்பாக்கள் பாடப்பட்டுள்ளன. ஏழாம் வகுப்பு மட்டும் கல்வியறிவு பெற்ற நா. மாரியப்பனாரிடம் மிகச்சிறந்த இசையறிவு இருப்பதை இவருடன் உரையாடியபொழுது அறிந்துகொள்ள முடிந்தது. தமிழ்நாட்டு இசையறிஞர்கள் பி.யு. சின்னப்பா, டி.ஆர். மகாலிங்கம், கண்டசாலா, டி.எம்.சௌந்தரராஜன், சிதம்பரம் ஜெயராமன், கிட்டப்பா, நடிப்பிசைப்புலவர் கே.ஆர். இராமசாமி, பி,பி. ஸ்ரீனிவாஸ், தியாகராஜ பாகவதர், சீர்காழி கோவிந்தராஜன் என்று அத்தனைக் கலைஞர்களைப் போலவும் பாடும் ஆற்றல் பெற்றவர். மேற்கண்ட ஒவ்வொருவரின் குரலையும் வயப்படுத்தி வைத்துள்ள மாரியப்பனார் அவர்கள். நம் தமிழ்நாட்டுப்  பாடுதுறை வல்லுநர்களைப் போலவே பல பாடல்களைப் பாடி என்னை மகிழ்ச்சிக் கடலுள் ஆழ்த்தினார். 

தொண்ணூறு அகவையிலும் ஒவ்வொரு நாளும் பாடுவதும், பயிற்சிபெறுவதுமாக இருக்கும் இந்தத் தமிழ் இசைமேதையை உலகத் தமிழர்கள் போற்றிப் புரப்பது நம் தலைக்கடனாகும்.

கருத்துகள் இல்லை: