நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 14 ஜூலை, 2022

தவத்திரு ஊரன் அடிகளார் மறைவு!

 

தவத்திரு  ஊரன் அடிகளார் 

 வள்ளலார் வழியில் வாழ்வு நடத்தியவரும் திருவருட்பாவினைப் பதிப்பிப்பதிலும் வள்ளலார் அவர்களின் வரலாற்றினை விரித்து எழுதியதிலும் பெரும் பங்காற்றிய தவத்திரு ஊரன் அடிகளார் 13.07.2022 நள்ளிரவு, வடலூரில் உள்ள தம் மனையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த துயரத்துடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

 கடந்த இருபதாண்டுகளாக அடிகளாருடன் நன்கு பழகும் பேறு எனக்கு வாய்த்தது. அடிகளார் அவர்களை அழைத்து, பல கூட்டங்களை நடத்தியுள்ளேன். யான் உருவாக்கிய பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை . சுந்தரேசனார் ஆவணப்படத்தில் அடிகளாரின் செவ்வி மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மேலும் அடிகளாரின் வாழ்வியலை ஆவணமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, பல மணி நேரம் அவர்களின் உரையாடலைப் பதிந்து வைத்துள்ளேன். இந்நிலையில் அடிகளாரின் மறைவுச் செய்தி அறிந்து பெருந்துயரில் தவிக்கின்றேன்.

 திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் சார்ந்த ஊர் கண்ணனூர் ஆகும். அதனைச் சார்ந்த நரசிங்கமங்கலம் என்னும் ஊரில் தவத்திரு ஊரன் அடிகளார் 1933 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் நாள் பிறந்தவர். இவர்தம் இயற்பெயர் குப்புசாமி என்பதாகும். ஊரன் அடிகளாரின் தந்தையார் பெயர் இராமசாமிப் பிள்ளை. தாயார் பெயர் நாகரத்தினம் அம்மாள்.

 1967 இல் துறவு பூண்டவர். 1968 முதல் வடலூரில் வாழ்ந்து வந்தவர். பன்னூலாசிரியர். சிறந்த சொற்பொழிவாளர். 

 ஊரன் அடிகளாரின் மறைவு சமய உலகத்திற்கும் வள்ளலார் ஆய்வாளர்களுக்கும் அன்பர்களுக்கும் பேரிழப்பாகும்.

தொடர்புடைய பதிவுகள்:

https://muelangovan.blogspot.com/2014/05/blog-post_1610.html

https://muelangovan.blogspot.com/2017/02/blog-post_16.html

https://muelangovan.blogspot.com/2014/05/blog-post_18.html

ஞாயிறு, 10 ஜூலை, 2022

உலகத் தமிழ் இசை மாநாடு நடத்தும் மலேசியத் தமிழ் அன்பர்களுக்கு உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் வரவேற்பு மற்றும் பாராட்டு விழா!

  

மாண்புமிகு பேரவைத் தலைவர் ஏம்பலம் அரங்க. செல்வம் அவர்கள் மலேசியத் தமிழன்பர்களுக்கு விருது வழங்கி வாழ்த்தும் காட்சி. அருகில் மயிலம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து உள்ளிட்டோர்.


முனைவர் அருள் ஆறுமுகம் விருது பெறுதல்

                                டத்தோ முனீஸ்வரன் அவர்கள் விருது பெறுதல்

மலேசிய நாட்டின் ஈப்போ மாநகரில் 2022 நவம்பர் மாதம் 20 ஆம் நாள் உலகத் தமிழ் இசை மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டினைப் பொறுப்பேற்று நடத்தும் மலேசிய உலகத் தமிழ் இசை மாநாட்டின் தலைவர் முனைவர் அருள் ஆறுமுகம் கண்ணன் தலைமையிலான குழுவினர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தமிழிசை ஆர்வலர்களைச் சந்தித்து மாநாட்டின் நோக்கம், மாநாட்டு நிகழ்வுகள் குறித்து உரையாற்ற புதுவைக்கு  வருகைபுரிந்தனர்(09. 07. 2022).  அவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டும் வகையில் வரவேற்பு மற்றும் பாராட்டு விழாவினை உலகத் தொல்காப்பிய மன்றம் புதுவைத் தமிழ்ச் சங்க அரங்கில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில்  மாண்புமிகு புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் அரங்க. செல்வம் அவர்கள் கலந்துகொண்டு மலேசியத் தமிழ் அன்பர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டுரை வழங்கினார்.  மயிலம் திருமடம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் நிகழ்வில் கலந்துகொண்டு அருளாசி வழங்கினார். 

புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி. முத்து தலைமையில் நடைபெற்ற விழாவில் தூ. சடகோபன் வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சி குறித்த நோக்கவுரையை முனைவர் மு. இளங்கோவன் வழங்கினார். மலேசியா, ஈப்போ, முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் தலைவர் முனைவர் அருள் ஆறுமுகம் கண்ணன்,  மலேசியாவைச் சேர்ந்த வீ. மா. சண்முகம், மா.முனீஸ்வரன் ஆகியோருக்குப் பாராட்டும் விருதும் வழங்கப்பட்டன. முனைவர் அருள் ஆறுமுகம் கண்ணன் மலேசிய உலகத் தமிழ் இசை மாநாடு குறித்து அறிமுகவுரையாற்றினார். 

முனைவர் கா. இராசமாணிக்கம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட, எழுத்தாளர் பூங்குழலி பெருமாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். உலகத் தொல்காப்பிய மன்றத்தைச் சேர்ந்த கோ. முருகன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உலகத் தொல்காப்பிய மன்றத்தினர் செய்திருந்தனர்.