பேராசிரியர்
மு. பழனி இராகுலதாசன்
திருவாடானை அரசு கல்லூரியின் முத்தமிழ் மன்ற
விழா அண்மையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் சிறப்புரையாற்றி முடித்ததும் பகலுணவுக்குப்
பிறகு திருவாடானையிலிருந்து தேவகோட்டை வழியாகக் காரைக்குடிக்குத் திரும்புவது என் பயணத் திட்டம். அத் திட்டப்படியே பேருந்தில்
ஏறினோம்.
எனக்கு வழித்துணையாய் அமைந்த
முனைவர் பட்ட ஆய்வாளர் சனகர்
அவர்கள் தேவகோட்டை ஊரினர். அவரின் தந்தையார்
தமிழ்ப் பேராசிரியர் என்பதறிந்தேன். தேவகோட்டையில் வாழும் பேராசிரியர் பழனி
இராகுலதாசன் ஐயாவைத் தெரியுமா? என்று
நண்பர் சனகர் அவர்களைக் கேட்டேன்.
மகிழ்ச்சியுற்ற சனகர் அவர்கள், பேராசிரியர் ஐயா தம்
குடும்ப நண்பர் எனவும், ஊரில்
உள்ளார்களா? என வினவித் தகவல்
சொல்வதாகவும் தெரிவித்தார். சற்று நேரத்தில் பேராசிரியர் மு. பழனி இராகுலதாசன் ஊரில் இருக்கும் விவரம்
கிடைத்தது. மகிழ்வுற்றேன்.
பழனி இராகுலதாசனைப் பல
நாளாகச் சந்திக்கும்
விருப்பம் எனக்கு இருந்ததால், காரைக்குடிக்குப்
பேருந்தில் நேரே செல்வதைத் தவிர்த்து,
தேவகோட்டையில் இடையில் இறங்கினோம். பேருந்து நிலையத்திலிருந்து நடைதூரத்தில் உள்ள பழனி இராகுலதாசன்
இல்லம் செல்லும் முன்பாகக் கையுறைப்பொருளாகப் பழங்கள் சிலவற்றை வாங்கிக்
கொண்டு ஐயாவைக் காண ஆர்வமுடன்
சென்றோம்.
பழனி இராகுலதாசன் அவர்கள்
என் வருகையை அறிந்து, தெருவின்
முகப்பிற்கு வந்து, அன்புடன் தம்
இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்கள். தமிழரின் விருந்தோம்பலைப் பயிற்றுவித்த பேராசான் அல்லவா?
பழனி இராகுலதாசனும் அவரின் துணைவியார் பொன்னியம்மாளும்,
உடன் மு.இளங்கோவன்
பழனி இராகுலதாசன் அவர்களின்
இல்லம் முழுவதும் நூல்களால் நிரம்பியிருந்தது. கால் வைக்க இடமில்லை.
திரும்பும் திசையெல்லாம் தமிழ்ச்செல்வங்கள் அடுக்கப்பட்டிருந்தன.
இருந்த குறுகிய இடத்தில் அமர்ந்தோம்.
அதற்குள் பேராசிரியர் அவர்களின் துணைவியார் திருவாட்டி பொன்னியம்மாள் அவர்கள்
குளம்பியுடன் வந்து நின்றார். வணங்கி,
அறிமுகம் ஆனோம். நம் ஐயா
அவர்கள் தேவகோட்டையில் உள்ள சிறீ சேவுகன்
அண்ணாமலை கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தம் பணி ஓய்வுக்காலத்திலும் நூல்கள் எழுதுவதும்
மொழிபெயர்ப்பதும் என்று அமைதி வழியில்
வாழ்ந்து வருபவர்கள். அவர்களுடன் உரையாடியதன் வழியாக அவர்களின் தமிழ்
வாழ்க்கையை அறியமுடிந்தது.
பேராசிரியர் மு. பழனி இராகுலதாசனின் இயற்பெயர் பழனி என்பதாகும்.
பௌத்த
சமயக் கொள்கைகளில் நம் பேராசிரியர் அவர்களுக்குப்
பின்னாளில் பெரும் ஈடுபாடு உண்டாயிற்று. அதனால்
புத்த பகவானின் மகனான இராகுலன் நினைவாக இராகுலதாசனாக
உயர்ந்தார். அடிப்படையில் பொதுவுடைமைக் கொள்கையாளர். எளிமையும் அன்பும் தமதிரு கண்களாகக் கொண்டவர்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் வல்லவர். இவர்தம் சொந்த
ஊர் மதுரையை அடுத்துள்ள சோழவந்தானுக்கு
அருகில் உள்ள நெடுங்குளம் என்பதாகும்.
நெடுங்குளத்தில் வாழ்ந்த க. முத்துத்
தேவர், முனியம்மாள் ஆகியோரின் மகனாக 21.03.1944 இல் மு. பழனி பிறந்தவர். நெடுங்குளம்
திண்ணைப்பள்ளியில் பயின்றவர். இராசாமணி என்னும் ஆசிரியரால் பயிற்றுவிக்கப்பட்டவர்.
திருவேடகத்தில் ஆறாம் வகுப்பு முதல்
8 ஆம் வகுப்பு வரை பயின்றவர்.
எட்டாம் வகுப்பில் தோல்வியடைந்ததால் மீண்டும் சோழவந்தான் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பிலிருந்து சேர்ந்து படித்தவர். சோழவந்தானில் படித்தபொழுது இன்றைய பட்டிமன்றப்
பேச்சாளர் பேராசிரியர் கு. ஞானசம்பந்தம் அவர்களின் தந்தையார் குருநாத பிள்ளையிடம் பயின்றவர்
என்பது குறிப்பிடத்தகுந்தது. பள்ளியிறுதி வகுப்பு
வரை அங்குப் படித்து முடித்து,
மதுரைக் கல்லூரியில் புகுமுக வகுப்பினைப் படித்தவர்.
மதுரை தியாகராசர் கல்லூரியில்
ஐந்தாண்டுகள் பயின்றவர். இளங்கலைப் பொருளாதாரமும், தமிழில்
முதுகலைப் பட்டமும் பெற்றவர். பேராசிரியர் சுப. அண்ணாமலை அவர்களின்
அன்புக்குரிய மாணவராக விளங்கித் திருமுறைகளையும்
திருவருட்பாவையும், தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும்
கற்றவர்.
1970 ஆம் ஆண்டு தேவகோட்டை
சிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் மு. பழனி பயிற்றுநராகப் பணியில் இணைந்து விரிவுரையாளர்,
தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிப் பணி ஓய்வு
பெற்றவர்(2000). பல்லாயிரம் மாணவர்களுக்குத் தமிழிலக்கியங்களை
அறிமுகம் செய்த பெருமைக்குரியவர்.
பேராசிரியர் மு. பழனி இராகுலதாசன் அவர்கள் 1970 இல் பொன்னியம்மாள் என்பவரைத்
திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு மணிமேகலை (ஆங்கிலப் பேராசிரியர்),
மணிவாசகன் என்னும் இரு மக்கள்
செல்வங்கள் உள்ளனர்.
கண்ணதாசனின் கண்ணதாசன் ஏட்டுக்கு “நிழல்” என்ற சிறுகதையை
1972 இல் அனுப்பியபொழுது இராகுலதாசன் என்ற புனைபெயரில் அனுப்பினார்.
அவ்விதழில் படத்துடன் சிறுகதை வெளிவந்துள்ளது. கவிஞர்
மீராவின் அன்னம் விடு தூது
இதழிலும் எழுதியவர். தாமரை, செம்மலர் இதழ்களிலும்
எழுதிப் புகழ்பெற்றவர்.
நிகழ்காலங்கள், அக்கரைப்பூக்கள் என்னும் இரு சிறுகதைத்
தொகுதிகளைப் பழனி இராகுலதாசன் வெளியிட்டுள்ளார்.
சீனத்துச் சிறுவர் கதைகள் நூலையும்
வெளியிட்டுள்ளார். வீடும் வீடு சார்ந்தும்
என்னும் கவிதைத் தொகுதி விரைவில்
வெளிவர உள்ளது.
சாகித்ய அகாதெமிக்காக இந்திய
இலக்கியச் சிற்பிகள் என்ற தலைப்பில் சுப.
அண்ணாமலை, ஸ்ரீ மத் சுவாமி
சித்பவானந்தர், பி.எஸ். இராமையா
ஆகிய நூல்களை எழுதியுள்ளமையுடன் ஸ்ரீஸ்ரீ
யின் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் பெயர்த்துள்ளார். மேலும் கேசவ தேவின் (மலையாளம்) தன்வரலாற்றை ஆங்கிலத்தின் வழித் தமிழுக்குப் பெயர்த்துள்ளார்.
இந்த நூல்களையும் சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ளது.
மு.இளங்கோவனும், பேராசிரியர் மு. பழனி இராகுலதாசனும்
தமிழ்ப்பேராசிரியராகவும் சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கும் பேராசிரியர்
மு. பழனி இராகுலதாசன் அவர்கள் நலத்துடனும் வளத்துடனும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, தமிழன்னைக்கு நற்பணிகளாற்ற நெஞ்சார வாழ்த்துகின்றேன்.