புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறையும், ஆத்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் தமிழ்ச்சங்கமும், இணைந்து மொழிபெயர்ப்பும் உரைபெயர்ப்பும் (Translating and Interpreting) என்னும் தலைப்பில் 27, 28, 29 - 09 - 2021 ஆகிய மூன்று நாள்களில் இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கினை நடத்தின. இதன் தொடக்க விழா 27. 09. 2021 பிற்பகல் 3 மணிக்குக் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.
நிறுவன இயக்குநர் முனைவர் மூ. செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா. நிர்மலா வரவேற்புரை வழங்கினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறையின் முன்னாள் துறைத்தலைவர் பேராசிரியர் ஒப்பிலா. மதிவாணன் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்க மலரினை வெளியிட்டார். முதல் படியை மூத்த தமிழறிஞர் கு. சிவமணி பெற்றுக்கொண்டார். புதுச்சேரி வானொலி நிலையத்தின் இயக்குநர் கண்ணையன் தட்சணாமூர்த்தி, சீன வானொலியின் தமிழ்ப்பிரிவு செய்தி ஆசிரியர் முனைவர் கி. மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. இளங்கோவன் நன்றியுரை வழங்கினார்.
27.09.2021 மாலை 4 மணிக்கு முதல்நாள் அமர்வு இணையம் வழியாகத் தொடங்கி, சிங்கப்பூர்ப் பேராசிரியர் சுப. திண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது. முதல் அமர்வில் மெல்பர்ன் தமிழ்ச்சங்கத் தலைவர் ந. சுந்தரேசன் ஒருங்கிணைப்பில் ஆஸ்திரேலிய நாட்டின் சிறப்பு அமர்வு நடைபெற்றது. இதில் திருமதி சாந்தா ஜெயராஜ்(ஆஸ்திரேலியா), பசில் கெலிஸ்டஸ் பெர்ணாண்டோ (ஆஸ்திரேலியா), திரு. தெ. செல்வக்குமார் (கனடா), ஆய்வறிஞர் கு. சிவமணி(இந்தியா) ஆகியோர் உரையாற்றினர். முதல் அமர்வு இரவு 6. 30 மணிக்கு நிறைவுற்றது.
28.09.2021 மாலை நான்கு மணிக்கு இரண்டாம் நாள் கருத்தரங்க அமர்வு தொடங்கியது. இலங்கைப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமர்வில் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்(இலங்கை), திரு. கு.பாலசுப்பிரமணியன்(சென்னை), திருமதி மஞ்சுளா மோகனதாசு(பின்லாந்து), முனைவர் கி.மணிகண்டன்(சீன வானொலி), திரு. பு. யோகநாதன்(செர்மனி), பொறியாளர் அருள்நிதி இராதாகிருட்டினன்(நோர்வே) ஆகியோர் தத்தம் நாடுகளில் நடைபெறும் மொழிபெயர்ப்பு, உரைபெயர்ப்புப் பணிகள் குறித்து உரையாற்றினர்.
29.09.2021 – இல் நடைபெற்ற மூன்றாம் நாள் கருத்தரங்கிற்குப் பேராசிரியர் இ. பாலசுந்தரம் (கனடா) அவர்கள் தலைமைநேற்றார். இக் கருத்தரங்கில் பொறியாளர் சதீசு (சப்பான்), ’ஆசான்’ மன்னர் மன்னன் மருதை (மலேசியா), திரு. கண்ணையன் தட்சணாமூர்த்தி (இயக்குநர், புதுச்சேரி வானொலி நிலையம்), சிறீ கதிர்காமநாதன் (கனடா), எழுத்தாளர் ஜீவகுமாரன் (டென்மார்க்கு), கலாநிதி ஜீவகுமாரன்(டென்மார்க்கு), இராணி நடராஜன் (மியான்மர்) ஆகியோர் தத்தம் நாடுகளில் நடைபெறும் மொழிபெயர்ப்பு, உரைபெயர்ப்புப் பணிகளை எடுத்துரைத்தும், தாம் செய்துவரும் மொழிபெயர்ப்புப் பணிகளை நினைவூட்டியும் உரையாற்றினர்.
நிறைவுநாளில் பேராசிரியர் கு. சிவமணி அவர்களுக்குத் தமிழ்நாட்டரசின்
உயரிய விருதான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி விருது (2019) அறிவிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து
அவர்களை நிறுவனம் சார்பில் பாராட்டி, வாழ்த்துரை வழங்குமாறு வேண்டிக்கொண்டோம். கு.சிவமணியாரின்
வாழ்த்துரையுடன் மூன்றுநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிறைவுற்றது.