நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 18 ஆகஸ்ட், 2021

வரலாற்றைச் சுமந்துநிற்கும் கங்கைகொண்டசோழபுரம்…

    

கங்கைகொண்டசோழபுரம் திருக்கோவில்(தென்புறத் தோற்றம்)

 

                    (கனடா உதயன் இதழ் - 06.08.2021)

 (குறிப்பு: மாமன்னன் இராசேந்திர சோழனின் பிறந்த ஆடித் திருவாதிரைத் திருநாளை முன்னிட்டு,  அப்பெருமன்னன் எடுப்பித்த கங்கைகொண்ட சோழபுரத்தின் சிறப்புகளை விளக்கி, ஓர் அறிமுகக் கட்டுரை வரைந்து, கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் சிறப்பிதழில் (06.08.2021) வெளிவரச் செய்தேன். கட்டுரையை வெளியிட்ட உதயன் ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

இராசேந்திர சோழனின் ஆடித் திருவாதிரைப் பிறந்தநாளினை அரசு சார்பில் கொண்டாட ஆணை பிறப்பித்த தமிழ்நாட்டு மாண்பமை முதலமைச்சர் திரு. மு.. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களுக்கும், இம்முயற்சியில் ஆர்வமுடன் உழைத்த கங்கைகொண்டசோழபுரம் பகுதிவாழ் வரலாற்று ஆர்வலர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.)   

தமிழகத்திற்குச் சுற்றுலா வருபவர்களின் பட்டியலில் மாமல்லபுரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், மதுரை,  இராமேசுவரம், திருச்செந்தூர் போன்ற ஊர்கள் மட்டும் இருக்கும். அவ்வாறு சுற்றுலா வருபவர்களின் பட்டியலில் கங்கைகொண்டசோழபுரம் என்ற ஊரும் இடம்பெறுதல் வேண்டும் என்பது என் விருப்பம். இவ்வூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராசேந்திரசோழன் எடுப்பித்த கண்ணைக் கவரும் கங்கைகொண்ட சோழீச்சுரம் என்னும் பெருவுடையார்கோவில் இன்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் எழிலோடு காட்சி தருகின்றது.  இங்குள்ள சிவலிங்கமும், சண்டேசுவர அனுக்கிரகமூர்த்தியின் சிற்பமும், துவாரபாலகர் சிலையும், கருவறைக்குள் கதிரவ ஒளியை எந்த நேரத்திலும் அனுப்பும் வகையில் அமைந்த நந்தியின் சிலையும், ஒரே கல்லில் அமைந்த  நவ கிரகங்களின் அமைப்பும், சிங்கமுகக் கிணறும் காண்போர்க்குப் பேருவகை தருவன. எனவேதான் யுனெஸ்கோ அமைப்பு இவ்வூர்க் கோவிலை உலகின் பாதுகாப்புச் சின்னமாக அறிவித்துள்ளது(2004).

கங்கைகொண்டசோழபுரத்தின் அருகில் சோழ அரசனின் மாளிகைமேட்டு அகழ்வாராய்ச்சிக் கூடமும், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களின் கண்காட்சிக் கூடமும் உள்ளன. கங்கைகொண்ட சோழபுரத்தின் மேற்கே இரண்டு கல் தொலைவில் பொன்னேரி எனப்படும் சோழகங்கம் என்ற பேரேரி நீர்ப்பிடிப்புக் காலங்களில் அழகோடு காட்சி தரும். இந்த ஏரியை “வெற்றி மயமான நீர்த்தூண்” என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அக்காலத்தில் நான்கு திசைகளிலும் எல்லைக் காளிகளின் கோவில்களை அரசன் அமைத்துள்ளான். அவையும் இன்று காணத்தக்க வகையில் உள்ளன(வீரா ரெட்டித்தெரு, செங்கல்மேடு, அழகர்கோவில் உள்ளிட்ட ஊர்களில் உள்ளன).

ஊர் அமைவிடம்:

தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் கங்கைகொண்ட சோழபுரம் உள்ளது. கும்பகோணம், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய ஊர்களிலிருந்தும் இவ்வூரை எளிதில் அடையலாம். சென்னையிலிருந்து வருபவர்கள் கும்பகோணம் சாலை வழியாக கங்கைகொண்டசோழபுரத்தை அடையலாம் (245 கி.மீ). திருச்சிராப் பள்ளியிலிருந்து 100 கி.மீ. தூரத்திலும் சிதம்பரத்திலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் இவ்வூர் உள்ளது.

தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த இராசராச சோழனுக்கும், வானவன்மாதேவி  எனப்பட்ட திரிபுவன மாதேவி என்ற அரசிக்கும் மகனாகப் பிறந்த, இராசேந்திர சோழனின் தலைநகராக விளங்கிய ஊர்தான் கங்கைகொண்டசோழபுரம்.

இராசராசன் ஆட்சிக்காலத்திலேயே இளவரசனாக விளங்கிய இராசேந்திரசோழன் மிகப்பெரும் வீரனாக விளங்கி, பாண்டிய நாட்டையும், சேர நாட்டையும் தன்வயப்படுத்தியதுடன் அண்டை நாடுகளையும் தன் அடிக்கீழ் கொண்டுவந்தவன். “பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப் பரகேசரிவர்மன்” என்று கல்வெட்டுகள் இவனைப் புகழ்ந்து கூறுகின்றன. மிகச் சிறந்த சிவபக்தனாக விளங்கியவன்.

இலங்கை, மலேசியா, சுமத்தரா, ஜாவா, கம்போடியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குத் தலைநகராகச் சற்றொப்ப இருநூற்றைம்பது ஆண்டுகள் விளங்கிய, பெருமைக்குரிய ஊர்தான் கங்கைகொண்டசோழபுரம். இராசேந்திரசோழன் தன் கங்கை வெற்றியின் நினைவாக இவ்வூர்க் கோவிலை எடுப்பித்ததாகவும், அருகில் உள்ள பொன்னேரி எனப்படும் சோழகங்கத்தை நிறுவியதாகவும்  வரலாறு குறிப்பிடுகின்றது. கங்கைகொண்டசோழபுரத்தில் இராசேந்திர சோழனின் கல்வெட்டு ஒன்றுகூட இடம்பெறவில்லை என்பது வரலாற்று ஆய்வாளர்க்குப் பெரிய வியப்பை ஏற்படுத்துகின்றது. இராசேந்திரன் காலத்திற்குப் பிறகு ஆட்சி செய்த அரசர்களின் கல்வெட்டுகள் உள்ளன. கங்கைகொண்டசோழபுரத்திற்கு அருகில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் பலவும் பல்வேறு வரலாறுகளைச் சுமந்து நிற்கின்றன. கங்கைகொண்டசோழபுரத்தைச் சார்ந்த ஊரில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு இராசேந்திரன் என்று பெயர் வைப்பதை மக்கள் தொடர்ந்து செய்துவருகின்றனர்.

கங்கைகொண்டசோழபுரத்திற்கு அருகில் உள்ள ஆயுதக்களம் என்ற ஊர் ஆயுதங்கள் செய்த இடமாக இருந்திருக்கும் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில் அவ்வூரில் அகழாய்வில் மிகப்பெரிய வாள் ஒன்று கிடைத்துள்ளது. இவ்வூரார் இன்றும் வீரத்தோடு விளங்குவது கவனத்தில் கொள்ளத்தக்க செய்தியாகும். வீரசோழபுரம், வானவநல்லூர், வாணதிரையன் குப்பம், வாணதிரையன் பட்டினம், சோழன்மாதேவி, வானவன்மாதேவி, படைநிலை, பழூர், தொட்டிக்குளம், யுத்தப்பள்ளம், கொல்லாபுரம், வேம்புக்குடி, உள்கோட்டை,  சுண்ணாம்புக்குழி, சலுப்பை, குருகைக்காவலப்பர்கோவில், இடைக்கட்டு, பள்ளிவிடை, உலகளந்தசோழன்வெளி, உடையார்குடி, மாளிகைமேடு, பாகல்மேடு, மண்மலை, மெய்க்காவல்புத்தூர், திறந்தவாசல், மீன்சுருட்டி, கடாரங்கொண்டான், விக்கிரமங்கலம், நாயகனைப்பிரியாள் போன்ற ஊர்களின் பெயர்களைக் கொண்டு இவ்வூரின் தொன்மையையும், பெருமையையும் அறியலாம். கங்கைகொண்டசோழபுரத்துக்கு அருகில்தான் புகழ்பெற்ற வீராணம் ஏரியும் உள்ளது.

கங்கைகொண்டசோழபுரத்தை ஆட்சி செய்த அரசர்கள்

கங்கைகொண்டசோழபுரத்தில் இராசேந்திரசோழன் (102-1044), முதலாம் இராஜாதி ராஜன் (1018-153), இரண்டாம் இராஜேந்திரன் (1052-1063), வீர ராஜேந்திரன் (1063- 1070), அதி ராஜேந்திரன்( 1067-1070), முதலாம் குலோத்துங்கன் (1070-1120), விக்கரமசோழன் ( 1118-1135), இரண்டாம் குலோத்துங்கன் (1135-1150), இரண்டாம் இராஜராஜன் (1146-1166), இரண்டாம் இராஜாதிராஜன் (1166-1180), மூன்றாம் குலோத்துங்கன் (1178-1218) மூன்றாம் இராஜாதி ராஜன் (1216-1257), மூன்றாம் இராஜேந்திரன் (1246-1279) உள்ளிட்ட அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். பாண்டியர்களின் படையெடுப்பால் சிதறுண்ட சோழர் ஆட்சி, பின்னர் தலையெடுக்க முடியாமல் போனது. பின்னாளில் விசயநகர மன்னர்களும், செஞ்சி நாயக்கர்களும், உடையார்பாளையம் ஜமீன்தார்களும் கங்கைகொண்டசோழபுரத்தை ஆண்டுள்ளனர். பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் கங்கைகொண்ட சோழபுரத்தைக் கைப்பற்றுவதற்குப் போர் புரிந்துள்ளமையையும் அறியமுடிகின்றது. போரின்பொழுது சிதறுண்ட கங்கைகொண்டசோழபுரத்துக் கோவிலின் சுற்றுச்சுவர்கள் இடிந்து பலவாண்டுகள் கிடந்தன. ஆங்கிலேயப் பொறியாளர் ஆர்தர் காட்டன் என்பவரின் முயற்சியால் அருகில் உள்ள  அணைக்கரையின் மதகு கட்டுவதற்கு (1840) இக்கோவில் கற்கள் கொண்டுசெல்லப்பட்டன.

கங்கைகொண்டசோழபுரம் கோவில் 1035-36 ஆம் ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கங்கைகொண்டசோழபுரம் கோவிலைப் பற்றி கருவூர்த்தேவர் பதினொரு பாடல்களைப் பாடியுள்ளார். மூவருலா, தக்கயாகப்பரணி போன்ற நூல்களில் கங்கைகொண்டசோழபுரம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கங்காபுரி எனவும், கங்கா குண்டம் (விக்கிரமாங்க தேவசரிதம்), கங்கைகொண்ட பட்டணம் எனவும் இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து 45 கி.மீ. தூரத்தில் உள்ள சிதம்பரம் நடராசப்பெருமானின் திருக்கோவில் சோழமன்னர்களின் வரலாற்றுடன் மிகநெருங்கிய தொடர்புகொண்டுள்ளது. இங்கிருந்த திருமுறைகளை மீட்டதால்தான் இராசராசனுக்குத் திரமுறைகண்டசோழன் என்ற ஒரு சிறப்புப் பெயர் ஏற்பட்டது. குலோத்துங்களின் அவைக்களப் புலவராக விளங்கிய சேக்கிழார் பெருமான் தில்லையில் இறைவன் அடியெடுத்துக் கொடுக்க பெரியபுராணம் பாடியமையைச் சைவப் பெருமக்கள் எடுத்துரைப்பர்.

கங்கைகொண்டசோழபுரத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், சிற்பங்கள், கோவில் சிலைகள், கோவில் அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டு தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புகளையும் கலைநயத்தையும் நாம் அறிந்துகொள்ளமுடியும். கங்கைகொண்டசோழபுரத்தைச் சார்ந்துள்ள ஊரின் அடிப்பகுதியை எந்த இடத்தில் தோண்டினாலும் செப்புக் காசுகளும், செப்புச் சிலைகளும், செங்கல் சுவர்களும், வேலைப்பாடுடைய மண்பாண்டங்களும், கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. கோவிலில் உள்ள சிலைகள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்து, பண்டைக்காலச் சிற்பிகளின் தொழில்திறமையை நமக்குக் காட்டுகின்றன. காரைக்காலம்மையார் இறைவனின் திருநடனத்தை அமர்ந்து பார்க்கும் சிற்பம் இக்கோவிலின் தென்புறப் பகுதியில் அமைந்துள்ளது. கங்கைகொண்டசோழபுரம் கோவில் சுற்றுச்சுவர்களில் சமய இலக்கிய  நூல்களின் செய்திகள் சிற்பங்களாகக் கைதேர்ந்த சிற்பிகளால் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன. அரசர்கள் பல்வேறு காலங்களில் செய்த அறப்பணிகள் கல்வெட்டுகளில் வெட்டப்பட்டுள்ளன.

திருமுறை ஓதுவார்கள், நாட்டியப்பெண்கள், இசைக்கலைஞர்கள், கோவில் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு அரசன் நிலங்களைத் தானமாக வழங்கிச், சமயப்பணிகள் இடையீடு இல்லாமல் நடைபெறுவதற்கு வழிசெய்துள்ளான். எனவே ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இக்கோவிலில் இன்றும் பூசை, சிறப்பு விழாக்களுடன் நல்லநிலையில் வழிபாடு நடைபெறுகின்றது. இக்கோவிலின் திருப்பணிகளைச் சிறப்பாக நடத்துவதற்கு ஒவ்வொரு அரசனும் தங்களால் முடிந்த வகையில் தேவதானங்களாகவும், பிரம்மதேசங்களாகவும் இறையிலி நிலங்களை வழங்கியுள்ளமையைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. நான்கு வேதங்களில் வல்ல பிராமணர்களுக்கு ஸ்ரீ பராந்தகசோழன் சதுர்வேதி மங்கலம் என்ற ஊரினை வழங்கியுள்ளமையை அறியமுடிகின்றது. இவ்வூரின் பெயர் கல்லாத இந்நாளைய மக்களின் நாவில் ஸ்ரீபுரந்தான் என்று அழைக்கப்படுகின்றது.

கங்கைகொண்டசோழபுரத் திருக்கோவில் சிவனுக்கு  உரிய கோவிலாக விளங்கினாலும், அருகில் உள்ள ஊர்களில் பெருமாள் கோவில்களும், புத்தர் வழிபாடும் இருந்துள்ளன. கங்கைகொண்டசோழபுரத்தின் அருகில் சாளுக்கிய சிற்பங்களும், புத்தர் சிலைகளும் மிகுதியாக காணப்படுகின்றன. கணக்கவிநாயகர் கோவில் என்ற கோவில் இங்குள்ள புகழ்பெற்ற கோவிலாகும். நாதமுனிகள் அடக்கமான இடமும் இவ்வூரை ஒட்டிக்  கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது.

கோவில் சிறப்பாலும், கட்டடக்கலை மாண்பாலும், இறையுருவத் திருமேனிகளாலும், அரசாட்சிச் சிறப்பாலும், இலக்கியப் புலவர்களின் ஏற்றமிகு இலக்கியங்களாலும், கல்வெட்டுகளாலும், செப்பேடுகளாலும் நிலைநிறுத்தப்பட்டுள்ள கங்கைகொண்டசோழபுரத்தின் பெருமையை அறிந்துகொள்ள உலகத் தமிழர்கள் ஒருமுறை இந்த ஊருக்கு வந்துசெல்வது நலம் பயக்கும்.

படம் உதவி: விக்கிப்பீடியா

கருத்துகள் இல்லை: