நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

அரித்துவாரமங்கலப் பயணம்…

  

கோபாலசாமி இரகுநாத இராசாளியார்

 தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரித்துவாரமங்கலம் பல்வேறு பெருமைகளை உள்ளடக்கிய அழகிய சிற்றூர்.  உலகப் புகழ்பெற்ற தவில் கலைஞர் திருவாளர் ஏ.கே. பழனிவேல் அவர்களால் இவ்வூர்ப் பெயரை நாம் அறிந்திருப்போம். அண்மைக் காலமாகத் தொல்காப்பியப் பதிப்புகளைப் படிக்கும்பொழுதும், தொல்காப்பிய அறிஞர்களுடன் அளவளாவும்பொழுதும் இந்த ஊர்ப்பெயர் என் கண்ணிலும் கருத்திலும் ஊடாடிக்கொண்டே இருந்தது. அரித்துவாரமங்கலத்தில் வாழ்ந்த கோபாலசாமி இரகுநாத இராசாளியார் (1870-1920) அவர்கள் மும்மொழிப் புலமை பெற்றதுடன் தமிழ்ப்புலவர்களை ஆதரித்த பெரும் வள்ளலாகவும் விளங்கியமையை ஆய்வுநூல்களைக் கற்கும்பொழுது அறிந்தேன். மேலதிக விவரங்களை ஆய்வறிஞர் கு. சிவமணி ஐயா, முனைவர் இரா. கலியபெருமாள் ஐயா (தஞ்சாவூர் நாட்டார் கல்லூரியின் பேராசிரியர்) உள்ளிட்ட பெருமக்களுடன் வினவிப் பெறுவது என் வழக்கம்.

 ஆறு திங்களுக்கு முன்பு என் பிறந்த ஊரான கங்கைகொண்டசோழபுரம் அடுத்திருக்கும் இடைக்கட்டு சென்றிருந்த சூழலில், அரித்துவாரமங்கலம் நினைவு மேலிட, பிற்பகலில் அரித்துவாரமங்கலத்திற்குப் பயணமானேன். கும்பகோணத்திலிருந்தும், தஞ்சையிலிருந்தும் இந்த ஊருக்குப் பேருந்து வசதிகள் உண்டு. எனினும் கும்பகோணம் – பாபநாசம் வழியாகச் சுற்றிக்கொண்டு எம் மகிழுந்தில், பசுமை வயல்களின் வனப்பினைச் சுவைத்தவாறு சிற்றூர் பல கடந்து அரித்துவாரமங்கலத்தை அடைந்தோம். இது சுற்றவழி என்பது பின்னரே தெரிந்தது. சற்றொப்ப ஆயிரம் குடும்பங்கள் வாழும் இந்த ஊரில் சிவன்கோவில், பெருமாள்கோவில் என இரண்டு புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. ஆற்று வளத்தால் செழுமையாக உள்ள இந்த ஊருக்கு நூறாண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் புலவர்கள் பலர் வந்து சென்றுள்ளமையை எண்ணி எண்ணி மகிழ்ந்தேன்.

  அரித்துவாரமங்கலத்திற்கு இதுதான் முதல் பயணம் என்பதாலும் எனக்கு முன்பின் தெரிந்தவர் அந்த ஊரில் யாரும் இன்மையானும், ஊர் நடுவிடத்தில் உந்து வண்டியை நிறுத்தி, இங்கு இராசாளியார் வீடு எது? என்று வினவினேன். நாங்கள் எல்லோரும் இராசாளியார் வழிவந்தவர்கள்தான் என்று இளைஞர்கள் சிலர் முன்வந்து விவரம் சொல்ல, ஆயத்தம் ஆனார்கள். இராசாளியார் சிலை எங்கு உள்ளது? என்று வினவியதும் சிலை உள்ள இடத்தையும், சிலை குறித்து விவரம் சொல்வோர் குறிப்பையும் சொல்லி, அந்த இளைஞர்கள் எங்களை ஆற்றுப்படுத்தினர்.

  சாலையை ஒட்டி, இராசாளியாரின் மார்பளவு சிலை இருப்பதைக் கண்டு, அருகில் இருந்த வீட்டினரிடம்  இராசாளியார் குடும்பம் பற்றி வினவினேன். திரு. மகாதேவன் அவர்கள் இராசாளியார் குறித்த விவரங்களைச் சொன்னதுடன் தம்மிடம் இருந்த படங்களையும் நூலினையும் வழங்கி இராசாளியார் மரபினர் இன்று எந்த எந்த ஊர்களில் உள்ளனர் என்ற விவரத்தையும் ஆர்வமுடன் பகிர்ந்துகொண்டார். உறவினர்கள் சிலரையும் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். இராசாளியார் வாழ்ந்த வீட்டையும், அவர் நடந்த சாலையையும் ஆர்வமுடன் பார்த்தேன். மிகப்பெரும் கோட்டை போலும் வீடமைத்து, அதில் அரச வாழ்க்கை வாழ்ந்த இராசாளியார் பற்றியும் அவர் செய்த தமிழ்த்தொண்டுகளையும் கேட்டு வியப்புற்றேன். தமிழ்ப்புலவர்களைத் தம் ஊருக்கு அழைத்து ஆதரித்த அவர்தம் கொடைநலம் நினைந்து போற்றினேன்.

  அரசஞ் சண்முகனார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், உ.வே.சாமிநாதையர், விஞ்சைராயர், சர்க்கரை இராமசாமி புலவர், அருணாசலக் கவிராயர்,  கோபாலகிருஷ்ணன், சேதுராம பாரதியார், தூத்துக்குடி முத்தையா பிள்ளை, சாமிநாத பிள்ளை, வேங்கடேசப் பிள்ளை, முத்துசாமி ஐயர், நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார், கந்தசாமிப் பிள்ளை, பரிதிமாற் கலைஞர், இராகவ ஐயங்கார் உள்ளிட்டோர் நம் இராசாளியரால் சிறப்பிக்கப்பட்ட புலவர்களுள் தலையாயவர்கள். இப்புலவர் பெருமக்கள் எழுதிய நூல்களில் நன்றிப்பெருக்குடன் இராசாளியாரின் உதவிகளைப் பதிவு செய்துள்ளனர்.

  இராசாளியார் வீட்டில் அரிய ஆராய்ச்சி நூலகம் அக் காலத்தில் இருந்துள்ளது. புலவர் பெருமக்களின் ஆராய்ச்சிக்கும் பதிப்புப் பணிக்கும் இந்த நூலகம் பெரிதும் பயன்பட்டுள்ளது. அரசஞ் சண்முகனாரின் அரிய உயிரைக் காப்பாற்றியவர் நம் இராசாளியார். அரசஞ் சண்முகனார்  நோயுற்றிருந்தபொழுது, தம் ஊருக்கு அழைத்து வந்து, மருத்துவம் பார்த்து, அவருக்கு உரூ. 300 அன்பளிப்பாக அளித்தமையைத் தாம் எழுதியத் தொல்காப்பியப் பாயிர விருத்தி நூலின் முகப்பில் சண்முகனார் எழுதியுள்ளார். வா. கோபாலசாமி ரகுநாத ராஜாளியாரவர்களால் தஞ்சை ஸ்ரீ வித்தியா விநோதினி முத்திராசாலையில் பதிப்பிக்கப்பட்டது என்று நூல் முகப்பில் பதிவாகியுள்ளது(1905). மேலும், ’பாயிர விருத்தி முதலாய நூலை அச்சிடுவதற்குத் தஞ்சை சென்றபொழுது, சுரம் கண்டு, உணவு உண்ண முடியாத நிலையில், கோபாலசாமி ரகுநாத ராசாளியார் தம் ஊருக்கு அழைத்துச் சென்று பல நன் மருத்துவரைக் கொண்டு மருந்தளித்தும் வேதமுணர்ந்த அந்தணரைக்கொண்டு கிரகசாந்தி முதலாயின செய்தும் பிணிதீர்த்து வெண்பொற்காசு முந்நூற்றின்மேலாக என் நிமித்தஞ் செலவு செய்ததூஉமன்றி, பாயிரவிருத்தி நூலினைப் பதிப்பிக்கும் பணியில் இராசாளியார் முன்னின்று உழைத்ததையும்’ அரசஞ் சண்முகனார் பதிவு செய்துள்ளார்.

 சமயப்பணி, சமூகப்பணி, தமிழ்ப்பணி, தேசப்பணி எனத் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட இராசாளியார் அந்நாளில் கோடைக்காலத்தில் ஊட்டியில் தங்கியிருப்பது வழக்கம். அப்பொழுது குன்னூரில் நூலகம் தொடங்க 10,000 உரூபாய் நன்கொடை வழங்கியதுடன் (இன்றைய மதிப்பு 60 இலட்சம்) நூலகத்தில் 10. 09. 1911 ஆம் ஆண்டில் தொல்காப்பியருக்கு முதன்முதல் சிலை நிறுவியுள்ளமை இவரின் தொல்காப்பிய ஈடுபாடு அறிய உதவும் சான்றாகும். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அரங்க. வேங்கடாசலம் பிள்ளை அவர்கள் தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரையினை 1929 இல் பதிப்பித்தபொழுது, பதிப்புச் செம்மைக்கு இராசாளியார் இல்லத்தில் இருந்த தொல்காப்பிய ஓலைச்சுவடி பேருதவியாக இருந்தமையைக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பிய ஆய்வாளர்களை இராசாளியார் தொடர்ந்து போற்றியதால் தொல்காப்பியம்: இராசாளியார் வீட்டுச் சொத்து  என்று புலவர் பெருமக்கள் குறிப்பிடுவது உண்டு. மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் வளர்ச்சிக்கு இராசாளியாரின் பங்களிப்பு மிகுதி.

   பழுத்த வைணவ ஈடுபாட்டாளரான இராசாளியார் அரித்துவாரமங்கலம் பெருமாள் கோவிலுக்குக் கோபுரம் எடுத்தமையைக் கோபுரக் கல்வெட்டு இன்றும் நினைவூட்டுகின்றது. சிவன்கோவிலுக்கும் கொடைநல்கிய பெருமைக்குரியவர்.

  மறைமலையடிகளாரை அரித்துவாரமங்கலத்தில் சிறப்புரையாற்றச் செய்த பெருமையும் இராசாளியார்க்கு உண்டு. செல்வத்துப் பயனே ஈதல் என்ற தெளிந்த சிந்தனையுடன் வாழ்ந்த கோபாலசாமி இரகுநாத இராசாளியார் என்றும் தமிழ் இலக்கிய உலகில் நினைவுகூரப்படும் அறப்பணிச் செல்வராகப் போற்றப்படுவார்.

  அரித்துவாரமங்கலத்திலிருந்து இராசாளியாரின் நினைவுகளைச் சுமந்தவாறு ஆறுமாதத்திற்கு முன் ஊர் திரும்பியிருந்தாலும் மீண்டும் செல்லத் தகுந்த ஊராக அரித்துவாரமங்கலத்தை நினைக்கின்றேன்.

 

   இராசாளியார் சிலை முன்பு மு.இளங்கோவன், திரு. மகாதேவன்

 


  •  இன்றைய (11.04.2021) இந்து தமிழ் நாளிதழில் தொல்காப்பியம்: இராசாளியார் வீட்டுச் சொத்து என்ற என் கட்டுரை வெளிவந்துள்ளது. ஆர்வலர்கள் படித்து மகிழுங்கள். https://www.hindutamil.in/news/opinion/columns/657629-tholkappiyam.html 

கருத்துகள் இல்லை: