நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 21 மார்ச், 2020

பாவாணர் பற்றாளர் மா. பஞ்சாட்சரலிங்கனார்…



 மா. பஞ்சாட்சரலிங்கனார்

மலேசியாவில் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத் தலைவராக விளங்கும் அருமை நண்பர் இரா. திருமாவளவன் தம் முகநூல் பதிவொன்றில் பஞ்சாட்சரலிங்கம் (பஞ்ச+அட்சர+இலிங்கம்) என்னும் தமிழ்த்தொண்டரைக் குறித்து எழுதியிருந்த பதிவொன்றைக் கண்டு, அடுத்தமுறை நான் மலேசியா வரும்பொழுது திரு. பஞ்சாட்சரலிங்கனாரைக் காண்பதற்கு ஒழுங்குசெய்ய வேண்டும் என என் விருப்பத்தைத் தெரிவித்திருந்தேன். திருவாளர் பஞ்சாட்சரலிங்கனாரை நான் காண வேட்கைகொண்டமைக்கு அவரிடம் பாவாணர் எழுதிய மடல்கள் பல இருக்கின்றமையும், பாவாணர் குறித்த அரிய செய்திகள் உள்ளமையுமே காரணமாகும். பாவாணர்மேல் மிகுந்த பற்றுக்கொண்ட பஞ்சாட்சரலிங்கனார், பாவாணர் ஐயாவின் விருப்பத்தின்படி அவருக்கு 700 வெள்ளி மதிப்பில் நாடாப்பதிவான் ஒன்று வாங்கி அந்நாளில் திருவாட்டி கங்கா நாயர் என்ற தம் உறவினர் வழி அனுப்பியும், சென்னைக்கு வந்து பாவாணரைக் கண்டு(1975) உரையாடித் தம்மால் இயன்ற பொருட்கொடை நல்கியும் தமிழ்த்தொண்டராக அடையாளம் காணப்பட்டவர். பாவாணரின் பணிகளுக்குத் துணைநின்ற, பாவாணரின் ஆய்வுகளில் பேரீடுபாடு கொண்ட மலேசியாவில் வாழும் பஞ்சாட்சரலிங்கனாரைக் காண்பதற்குரிய நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். அதற்குரிய வாய்ப்பும் சென்ற மாதம் (பிப்ரவரி, 2020) கனிந்தது.

பஞ்சாட்சரலிங்கனார் ஊரில் இருப்பதையும், எம்மைக் காண ஆர்வமுடன் இருப்பதையும் இரா. திருமாவளவனார் சொல்ல, மாலையில் அவர்தம் இல்லம் செல்லும் வகையில் திட்டமிட்டோம். 10.02.2020 மாலை 7 மணியளவில் யான் தங்கியிருந்த அருக்காணி பசுமை மையத்திற்குத் திருமாவளவனார் மகிழுந்தில் வந்து சேர்ந்தார். அங்கிருந்து இருவரும் புறப்பட்டோம். போக்குவரவு நெருக்கடி இல்லையாதலால், அரைமணி நேரத்தில் பஞ்சாட்சரலிங்கனார் இல்லம் சென்று சேர்ந்தோம். மகிழுந்தை நிறுத்தும் சாலையோரத்தில் பல்வேறு மூலிகைச் செடிகளைக் காட்டி, இவை யாவும் பஞ்சாட்சரலிங்கனாரால் பாதுகாத்து, வளர்க்கப்படுகின்றன என்று திருமாவளவனார் எடுத்துக்கூறினார். பப்பாளி, வாழை உள்ளிட்ட பயன்மரம் சிலவும் நீண்டு செழித்து நின்றிருந்தன. அருகில் உள்ள கோவில்கள், பொது இடங்களில் எல்லாம் மூலிகைச் செடிகளை வளர்ப்பதைத் தம் ஆர்வப் பணியாகச் செய்து, தமிழ் மூலிகை மரபு மலேசியாவில் தழைக்க உழைத்தவர் நம் பஞ்சாட்சரலிங்கனார் ஆவார்.

கதவைத் திறந்து வரவேற்ற பஞ்சாட்சரனார், முதுமை காரணமாகவும், கால்வலி காரணமாகவும் கையில் தடியூன்றி வந்து, அன்பொழுக, எம்மை அழைத்துச் சென்று இருக்கையில் அமருமாறு வேண்டிக்கொண்டார். தம் ஆருயிர் மனைவியை அழைத்து, எங்கள் வருகையைச் சொன்னதும் அந்த முதுபெரும் தாயார் மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். இந்தோனேசியப் பணிப்பெண் ஒருவர் தேநீர் கொண்டுவந்து எங்களுக்கு வழங்கி, ஓரிரு மலாய்ச் சொற்களை வீசி, அவர்தம் அன்புமொழிகளை எங்களுக்குப் பரிசளித்தார்.

மா.பஞ்சாட்சரலிங்கம் அவர்களுடன் மு.இளங்கோவன்

இரா. திருமாவளவனார் பஞ்சாட்சரலிங்கனாரிடம் என்னை முறைப்படி அறிமுகம் செய்துவைத்தார். பாவாணர்மேல் நான் கொண்டிருக்கும் மதிப்பினையும், அன்பினையும் சொல்ல, அமைதியாகத் தம் பழைய நினைவுகளைப் பஞ்சாட்சரலிங்கனார் மீட்டத் தொடங்கினார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

மலேசியாவில் வாழ்ந்த க. மாணிக்கம், அமுதம் ஆகியோரின் மகனாக 15.09.1936 இல் நம் பஞ்சாட்சரலிங்கம் பிறந்தவர். இவர்தம் முன்னோர் இலங்கையின் வடமராட்சி ஊரினர். மலேசியாவில் போர்ச்சூழல் நிலவியதால் 1939 இல் தம் மூன்றாம் அகவையில் இவர் தம் தாயாருடன், தம் முன்னோர் நாடான இலங்கைக்குச் சென்றார். அங்கு (இலங்கையில்) எட்டாம் வகுப்பு வரை படித்த இவர், மலேசியாவில் அமைதி மீண்டும் திரும்பியதும் 1949 இல் நாகைப்பட்டினத்தில் கப்பலேறி, மலேசியாவின் பினாங்கிற்குத் திரும்பினார். பஞ்சாட்சரலிங்கனாரின் தந்தையார் மலேசியாவில் இரயில்வே துறையில் பணியில் இருந்தவர். தந்தையார் பாவாணரைப் பார்க்கச் சென்றபொழுது கொழும்புக் குடை வாங்கிச் சென்றமையைப் பஞ்சாட்சரலிங்கனார் நினைவுகூர்ந்தார். அதுபோல் தொடர்வண்டியில் பயன்படுத்தப்படும் வார்ப்பு இரும்பில் அமைந்த தோசைக்கல், கரண்டி உள்ளிட்டவற்றையும் பாவாணர் இல்லத்திற்கு நம் பஞ்சாட்சரலிங்கனார் வேறு வேறு சூழல்களில் அனுப்பிவைத்துள்ளார்.

பஞ்சாட்சரலிங்கனார் மிகச் சிறந்த ஓட்டப் பந்தய வீரர். 24 கி.மீ. தூரம் ஒடி, பல்வேறு பரிசுகளையும் கோப்பைகளையும் பெற்றுள்ளார். மலேசியா, சிங்கப்பூரில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்துகொண்டு, தாம் பெற்ற பரிசுகளை நினைவாக வீட்டில் வைத்துள்ளமையைக் கண்டு மகிழ்ந்தோம். மலேசிய அரசின் பதிவுத்துறையில் எழுத்து வினைஞராக (Clerk) பணிபுரிந்தபொழுது, பல்வேறு தொழிலதிபர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தமையையும் அத்தொடர்பைப் பயன்படுத்தி, பாவாணருக்கு நிறைய உதவிகள் செய்யமுடிந்தமையையும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். பாவாணருக்கு வேண்டிய அழகிய எழுதுபொருள்கள், தூவல்கள், தாள்கள், பொத்தான்கள் உள்ளிட்டவற்றை வாங்கி அனுப்புவதில் மகிழ்ச்சிகொண்டிருந்தார்.

பாவாணரின் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் நூலினைப் படித்த பஞ்சாட்சரலிங்கனார்க்குப் பாவாணர்மேல் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. மலேசியாவில் வாழ்ந்த நெற்குப்பை ஊரைச் சேர்ந்த திருவாளர் செ. சொக்கலிங்கம் அவர்கள் வழியாகத் தென்மொழி உள்ளிட்ட இலக்கிய இதழ்களைப் பெற்று, பஞ்சாட்சரலிங்கனார் படித்துள்ளார்.

மலேசியாவில் வாழ்ந்த சா. சி. சுப்பையா (குறிஞ்சிக் குமரனார்), முருகு. சுப்பிரமணியன், கு. அழகிரிசாமி, சி.வேலுசாமி, அருட்தந்தை தனிநாயகம் அடிகளார், தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம், சுப. நாராயணன், கோ. சாரங்கபாணி உள்ளிட்ட பெருமக்கள் குறித்த பல்வேறு செய்திகளைப் பஞ்சாட்சரலிங்கனார் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். பெருஞ்சித்திரனார் மலேசியா சென்றபொழுது(1972 அளவில்) சோகூர்பாரு ஊரில் வாழ்ந்த தமிழ்ச்செல்வர் ஒருவர் ரோல்சு ராய்சு (Rolls Royce) மகிழுந்தில் கோலாலம்பூருக்கு அனுப்பி வைத்தமையை எடுத்துச் சொல்லி, தமிழ்ப் புலவர் ஒருவர் ரோல்சுராய்சு மகிழுந்தில் வந்து இறங்கியமை தங்களுக்குப் பெரும் மகிழ்வைத் தந்தது என்று குறிப்பிட்டார்.

மு.இளங்கோவன், மா. பஞ்சாட்சரலிங்கம்


பஞ்சாட்சரலிங்கனார் தாய்வழிப் பாட்டனார் திரு. பண்டாரம் வழியாக மூலிகைச் சிறப்புகளை அறிந்தமையையும், சண்டி இலை உள்ளிட்டவற்றை இலங்கையிலிருந்து கொண்டு வந்து மலேசியாவில் பதியம் இட்டதையும் நினைவுகூர்ந்தார். இவ்விலையை இன்று சுண்டி இலை எனவும் சொல்வர் என்று கூறி, இதனைக்கொண்டு கால்முறிவினைச் சரிசெய்யலாம் என்றார். கோவில், ஊர்ப்பொது இடங்களில் மூலிகைகளை, மரங்களை வளர்ப்பதை விருப்பமாகச் செய்யும் பஞ்சாட்சரலிங்கனார் அவர்களின் இயற்கை ஈடுபாடு அறிந்து மகிழ்ந்தோம்.

ஓடுவதும் நடப்பதும் பஞ்சாட்சரலிங்கனார்க்கு விருப்பமான செயல்களாகும். பத்துமலைக் கோவில் படிக்கட்டில்  மூன்று முறை ஏறி இறங்குவதைப் பொழுதுபோக்காகச் செய்தவர் இவர். சிலாங்கூர் மாநிலத்தில் இருபத்து நான்கு கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி, முதல் பரிசு பெற்று, கோப்பை வென்றவர். அக்கோப்பையை கி.ஆ.பெ. விசுவநாதம், கோ. சாரங்கபாணியார் முன்னிலையில் ஏலம்விட்டு, அத்தொகையைத் தமிழ்வளர்ச்சிப் பணிக்கு வழங்கியமையை நினைவுகூர்ந்தார்.

பெருஞ்சித்திரனார் மலேசியா சென்றிருந்தபொழுது அவரின் பேச்சுக்கு மாறுபட்டு, முருகு. சுப்பிரமணியன் பேசியதை நினைவூட்டிய பஞ்சாட்சரலிங்கனார் முருகு. சுப்பிரமணியனாரின் தமிழ்நேசன் பணிகள், அரசியல் செல்வாக்கு, அவரின் எழுத்துப்பணிகள் குறித்த விவரங்களையும் பகிர்ந்துகொண்டார்.

நாங்கள் விடைபெறும் விருப்பத்தைச் சொன்னதும் பஞ்சாட்சரலிங்கனாரும், அவர் துணைவியாரும் அன்பொழுக வாழ்த்தி வழியனுப்ப முனைந்தனர். மறுநாள் என் பிறந்தநாள் என்பதை இரா. திருமாவளவனார் நினைவூட்டியதும், சிறு கரண்டி (தங்க முலாம் பூசப்பெற்றது) ஒன்றை எனக்கு நினைவுப் பரிசாக வழங்கி, வழியனுப்பினர். நானும் இரா. திருமாவளவரும் தமிழ்வளர்ச்சிக்கு அறிஞர் பெருமக்கள் மலேசிய மண்ணில் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்தபடியே அருக்காணி பசுமை மையத்தை நள்ளிரவு 12 மணியளவில் வந்தடைந்தோம்.


 மா. பஞ்சாட்சரலிங்கம், அவரின் துணைவியார், 
மு.இளங்கோவன், இரா. திருமாவளவன்

மு.இளங்கோவன், மா. பஞ்சாட்சரலிங்கம் 


நன்றி: இரா. திருமாவளவன்(மலேசியா)

கருத்துகள் இல்லை: