தவத்திரு பாலயோகி சுவாமிகள் தொல்லிசையும் கல்லிசையும் நூலை வெளியிட, மருத்துவர் செல்வம் பெற்றுக்கொள்ளும் காட்சி.
தொல்லிசையும் கல்லிசையும் நூலைப் பெற்றுக்கொண்ட தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும்
ஆய்வரங்குகளுக்கு என யான் எழுதிய பத்தொன்பது கட்டுரைகளைத் தொகுத்து, தனி நூலாக்க விரும்பினேன். பல நண்பர்களின் பார்வைக்கும், திருத்தங்களுக்கும் பிறகு தொல்லிசையும் கல்லிசையும் என்ற தலைப்பில் 208 பக்கங்கள் கொண்டு, நூலும் கவினுற அச்சானது. மலேசியாவில் தமிழ்ப்பணிகளிலும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு உழைக்கும் பொறியாளர் இரா. பெருமாள் அவர்களுக்கும், அவர்தம் துணைவியார் திருவாட்டி சரசுவதி வேலு அவர்களுக்கும் இந்த நூல் படையல் செய்யப்பட்டுள்ளது. என் நண்பர் ம. முனியாண்டி அவர்கள் இந்த நூல் வெளிவருவதற்கும், மலேசியாவில் வெளியிடுவதற்கும் ஆர்வம்கொண்டு அதற்குரிய ஒழுங்குகளைச் செய்ய விரும்பினார். ஆசான் மன்னர் மன்னன் அவர்கள் என் மீது நிறைந்த அன்புகொண்டவர் என்பதால் அவரின் நெறிகாட்டலின்படி மலேசியாவில் நூல் வெளியிடுவதற்குரிய நாளும் நேரமும் குறிக்கப்பட்டன. மலேசியாவில் அமைந்துள்ள திருமுருகன் திருவாக்கு பீடம் தவத்திரு பாலயோகி சுவாமிகளின் நல்லாசியுடன் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்தன.
கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சு பகுதியில் அமைந்துள்ள இந்திய அரசின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தில் 10.08.2019 காரி(சனிக்கிழமை), மாலை 7 மணி முதல் 9.30 மணி வரை நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடந்தது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக இறையருட் கவிஞர் சீனி நைனா முகமது அவர்கள் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பெற்றது; மங்கல மகளிர் குத்துவிளக்கேற்றி, நிகழ்வைத் தொடங்கிவைத்தனர். ஆசான் ம. மன்னர் மன்னன் அரியதோர் உரையாற்றி அனைவரையும் வரவேற்றார். மலேசிய அரசின் மேனாள் இணையமைச்சர் டான் ஸ்ரீ குமரன் அவர்கள் தமிழ் உணர்வுகொண்ட தலைமையுரை வழங்கி, இசைத்தமிழினைக் காப்பதற்குத் தமிழர்கள் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என்ற வேட்கையை வெளிப்படுத்தி, நூலாசிரியரின் இசைத்தமிழ்ப் பணிகளைப் பாராட்டினார்.
மலேசிய நாட்டிலும் உலகின் பிற நாடுகளிலும் முருகவழிபாடும், சமய நெறிகளும் தழைத்து விளங்க நற்பணியாற்றும் எங்களின் வணக்கத்திற்குரிய தவத்திரு. பாலயோகி சுவாமிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நூலாசிரியர் மு.இளங்கோவன் செய்துவரும் பணிகளைத் தாம் கவனித்து வருவதாகவும், இசைத்தமிழ் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு உருவாக்கிவரும் தொல்லிசையும் கல்லிசையும் என்ற ஆவணப்படம் உருவாக்கத்திற்குத் தம் திருபீடம் துணைநிற்க விரும்புவதாகவும் சொல்லி, கருணைகூர்ந்த அறிவிப்பினை வெளியிட்டார்கள். அவர்களுடன் தமிழ்ப்பற்று நிறைந்த சில அன்பர்களையும் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து, நிகழ்ச்சி சிறக்க பெருந்துணைநின்றார்கள்.
மலேசியா நாட்டில் தமிழ்நெறி தழைக்க உழைத்துவரும் திருவாளர் இரா. திருமாவளவன் அவர்கள் தொல்லிசையும் கல்லிசையும் நூலினை மிகச் சிறப்பாக அறிமுகம் செய்து, நூலின் மாண்பினையும், நூல் நுவல் பொருளையும் தெளிவாக எடுத்ததுரைத்து, நூலாசிரியரின் முயற்சிக்கு அனைவரும் துணைநிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தவத்திரு பாலயோகி சுவாமிகள் தொல்லிசையும் கல்லிசையும் என்ற நூலினை வெளியிட, மலேசிய மருத்துவர் செல்வம் அவர்கள் நூலின் முதற்படியினைப் பெற்றுச் சிறப்பித்தார். அவரைத் தொடர்ந்து பொறியாளர் இரா. பெருமாள் உள்ளிட்ட தமிழார்வலர்கள் நூலினைப் பெற்று நூலாசிரியரைப் பாராட்டினர்.
மலேசிய நாட்டில் தமிழ் உணர்வுடன் செயல்பட்டுவரும் பகாங் சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி காமாட்சி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மைய இயக்குநர் க. ஐயனார், தமிழ்நெறி வாழ்வியல் இயக்கம் சார்ந்த அருள்முனைவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மலேசியாவின் மூத்த தமிழறிஞர் முனைவர் முரசு. நெடுமாறன் வாழ்த்துப்பா இசைத்து நூலாசிரியரைப் பாராட்டினார். ஆசிரியர் ம. முனியாண்டி நன்றியுரை வழங்கினார். நூலாசிரியர் முனைவர் மு.இளங்கோவன் ஏற்புரை வழங்கி, நிகழ்வு சிறக்க துணை நின்ற அனைவரையும் நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்ந்தார். மலேசியத் தமிழர்களைத் தம் குரல்வளத்தால் வயப்படுத்தி வைத்திருக்கும் தங்கக் குரலோன் தங்கமணி நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
மலேசியாவில் வாழும் தமிழ் உணர்வாளர்கள் பலரும் திரளாக நிகழ்ச்சிக்கு வந்திருந்து வாழ்த்தினர். வருவதற்கு வாய்ப்பு அமையாதவர்கள் தொலைபேசி வழியாக வாழ்த்துரைத்து, நூலினை அஞ்சலில் பெற்றுக்கொள்ள முன்பதிவுசெய்துகொண்டனர்.
க.ஐயனார் அவர்களின் வாழ்த்துரை
ஆசான் ம. மன்னர் மன்னன் வரவேற்புரை
பார்வையாளர்கள்(ஒரு பகுதி)
ம. முனியாண்டி, நன்றியுரை
சிறப்பு விருந்தினர்கள் நூல் பெறுதல்