நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 20 ஜூலை, 2019

முனைவர் இரா. பாவேந்தன் மறைவு!


முனைவர் இரா. பாவேந்தன் 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய என் அருமை நண்பரும் பன்னூலாசிரியருமான முனைவர் இரா. பாவேந்தன் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மருத்துவம் பயனளிக்காத நிலையில் இன்று(20.07.2019)  அதிகாலை இயற்கை எய்திய துன்பச் செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றேன். பேராசிரியர் இரா. பாவேந்தன் அவர்களை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். முனைவர் இரா. பாவேந்தனின் உடல் சென்னையிலிருந்து, எடுத்துச்செல்லப்பட்டு இன்று மாலை 6 மணியளவில் அவர்தம் சொந்த ஊரான திருச்சிராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

யான் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த காலம் முதல்(1993-97) நல்ல நண்பர்களாகப் பழகினோம். ஒத்த கொள்கையும், உழைப்பும் எங்களைப் பிணைத்தன. கோவை செல்லும்பொழுதெல்லாம் சந்தித்து உரையாடும் வழக்கத்தினைக் கொண்டிருந்தேன். தம் இல்லத்தில் தங்கிச் செல்லுமாறு வற்புறுத்துவார். கோவைசென்றிருந்தபொழுது வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைக் கடந்து, வேறு ஒரு பணிக்குச் செல்ல உள்ளதைச் சொன்ன, ஒருநாளில் அங்குள்ள சமுதாய வானொலியில் உரையாற்ற, அன்புக் கட்டளை இட்டார். நான் வந்தமையும், வானொலியில் உரையாற்றியதையும் முனைவர் இரா. பாவேந்தன் வழியாக முன்னைத் துணைவேந்தர் பேராசிரியர் க.இராமசாமி அவர்கள் அறிந்தார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முத்தமிழ் விழாவுக்குப் பாவேந்தன் வழியாகவே துணைவேந்தர் பின்னாளில் அழைத்து உரையாற்றச் செய்து மகிழ்ந்தார்.



திராவிட இயக்கப் பின்புலம்கொண்ட குடும்பத்தில் பிறந்த இரா. பாவேந்தன், தமிழ்ப் பற்றும், அறிவியல் சிந்தனையும் கொண்டவர். கறுப்பு சிகப்பு இதழியல், திராவிட நாட்டுக் கல்வி வரலாறு, திராவிட சினிமா, ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு, தமிழில் அறிவியல் இதழ்கள் உள்ளிட்ட நூல்களைத் தமிழுலகுக்கு வழங்கிய பெருமகனார்.

புதுவையில் பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நான் முன்னின்று நடத்தியபொழுது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் வருகைதந்து, மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்குத் துணைநின்றவர். தம் தந்தையாரின் திராவிட இயக்கச் சிந்தனைகளை என்னுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்பவர். தம் உடன்பிறப்பு மருத்துவர் இரா. அமுதக்கலைஞனின் பெயர்க்காரணம் சொல்லி, சொல்லி வியப்பவர்.

முனைவர் இரா. பாவேந்தன் வாழ்க்கைக்குறிப்பு

முனைவர் இரா. பாவேந்தன் 13.04.1970 இல் கோவையில் பிறந்தவர். பெற்றோர் பெயர் பேராசிரியர் அருணா. இராசகோபால், திருமதி செல்லவடிவு. இரா.பாவேந்தனின் தொடக்கக் கல்வி கோவை, மதுரை, சென்னை என்று பல ஊர்களில் இருந்தது. மதுரை யாதவர் கல்லூரியில் இளம் அறிவியல் (இயற்பியல்) பயின்றவர். முதுகலை – தமிழ் இலக்கியப் படிப்பை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். முனைவர் பட்ட ஆய்வைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தவர். மயிலாடுதுறை அ.வ. கல்லூரியில் தம் பேராசிரியர் பணியைத் தொடங்கி, கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தொடர்ந்தவர். கோவை பாரதியார் பல்கலைக்கழத்தில் இவருக்குக் கிடைக்கவேண்டிய பணி, தகுதியற்ற ஒருவருக்கு வழங்கப்பட்டது என்று கல்வி உலகில் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் பேராசிரியர் பணியேற்ற முனைவர் இரா. பாவேந்தன் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முனைவர் இரா. பாவேந்தனுடன் மருத்துவர் இரா. அமுதக்கலைஞன், மருத்துவர் இரா. இளவஞ்சி ஆகியோர் உடன் பிறந்தவர்கள்.

முனைவர் இரா. பாவேந்தின் மனைவி பெயர் சு. செயலட்சுமி. இவர்களுக்கு இரா. கோதை, இரா. கயல் என்ற இரண்டு மக்கள் செல்வங்கள் உள்ளனர்.

   ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமூகத்து மக்கள் முன்னேறுவதற்கு உரிய எண்ணத்துடன் இயங்கிய என் ஆருயிர்த் தோழர் முனைவர் இரா. பாவேந்தனின் இழப்பு, தமிழ் ஆய்வுலகுக்கும் கல்விப்புலத்துக்கும் மிகப்பெரிய இழப்பு!. இரா. பாவேந்தனின் வழியில் இயங்குவது ஒன்றே அவருக்குச் செய்யும் நன்றிக் கைம்மாறாக இருக்கும்!

தமிழிருக்கும் வரை முனைவர் இரா. பாவேந்தனின் சுவடுகள் இருக்கும்!

கருத்துகள் இல்லை: