நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

சொற்குவைத் திட்டம் - வல்லுநர் குழுவின் கலந்துரையாடல் கூட்டம்




சொற்குவைத் திட்டத்தின் கலந்துரையாடலுக்கு வருகைபுரிந்த
 அறிஞர் பெருமக்கள், பல்துறை வல்லுநர்கள்

 மாண்புமிகு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராசனார்க்கு
 என் நூலினை வழங்கும் காட்சி
     மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் அவர்களை இயக்குநராகக் கொண்டு, தமிழ்நாட்டு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தை நிறுவி(08.05.1974), கடந்த நாற்பதாண்டுகளாக அரும்பெரும் அகரமுதலிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இதுவரை 31 மடலங்களாக அகரமுதலிகள் வெளிவந்துள்ளமை தமிழுக்கு மிகப்பெரும் ஆக்கமாகும்.

     செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் மேலும் பல திட்டங்களின் வழியாகத் தமிழுக்குப் பெருமைசேர்க்கும் அகரமுதலிகளை உருவாக்கி வருகின்றது. இவ்வியக்ககத்தின் இயக்குநராகத் திருவாளர் தங்க. காமராசு அவர்கள் அமர்த்தப்பெற்ற பிறகு இயக்ககம் மிகச் சிறந்த பாய்ச்சலுடன் பணிகளை முன்னெடுத்துள்ளது.

     செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் சொற்குவைத் (Word Corpus) திட்டம் என்ற பெயரில் தமிழில் உள்ள சொற்களைத் தொகுக்கவும், கலைச்சொற்களை உருவாக்கி இணைக்கவுமான பெரும்பணியைச் செய்வதற்கு இத்துறை ஆர்வலர்களும், அறிஞர்களும் கலந்துகொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் ஒன்று 25.02.2019 காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை, சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கின் தரைத்தளத்தில் நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல்துறை அறிஞர்கள் வருகைபுரிந்து, தத்தம் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

     சொற்குவைத் திட்டத்தில் பேரீடுபாடுகொண்ட மாண்புமிகு தமிழ் வளர்ச்சி (ம) பண்பாட்டுத்துறை அமைச்சர் திரு. க. பாண்டியராசனார் அவர்கள் கலந்துகொண்டு, அறிஞர்கள் ஒவ்வொருவருடனும் உரையாடி, அவர்களின் தமிழ்ப்பணிகளை அறிந்ததுடன், சொல் தொகுப்புக்குரிய நெறிகாட்டல்களைக் கேட்டுப் பெற்றமை அரங்கில் இருந்த அறிஞர் பெருமக்களுக்குப் பெரு மகிழ்வாக இருந்தது. தமிழ் வளர்ச்சிக்குத் தாம் எண்ணியுள்ள எண்ணங்களை எல்லாம் எடுத்துரைத்ததுடன் சொற்குவையை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல்களையும் அறிஞர்களிடம் அமைச்சர் அவர்கள் வேண்டினார்கள்.

     தமிழில் உள்ள எல்லாச் சொற்களையும் தொகுப்பது, தமிழைப் பேசுபவர்களின் எண்ணிக்கையைத் துல்லியமாக அறிவது, இலக்கிய வளம் சார்ந்த ஆவணங்களைப் பாதுகாத்தல், யுனெசுகோவில் மொழிபெயர்க்கும் தகுதிபெறும் மொழியாகத் தமிழை நிலைப்படுத்த வழிவகைசெய்தல், சொல்லாக்கப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்பன போன்ற விருப்பங்களை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் எடுத்துரைத்து உரையாற்றினார்.

     இந்த நிகழ்ச்சியில் அறிஞர்கள் தெ. ஞானசுந்தரம், ந. தெய்வசுந்தரம், ப. மருதநாயகம், கு. அரசேந்திரன், கோமதிநாயகம், கு.மோகனராசு, இரேணுகாதேவி, ப.கிருஷ்ணன், ந. வெற்றியழகன், இ. சூசை, பாலசுப்பிரமணியன், ப.க.நடராசன், அருப்புக்கோட்டை சரவணன், அப்துல் சபார், புலவர் பதுமனார், சேதுமணி மணியம், பிரேம்குமார்(மைசூர்), மதன்கார்க்கி, "கவிக்கோ’ ஞானச்செல்வன், மருத்துவர் அ.செந்தில், மருத்துவர் மு. குமரேசன், தஞ்சை இறையரசன், கிருங்கை சேதுபதி, மு.பழநியப்பன், பெ.இளையாப்பிள்ளை, உல. பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் அ. மதிவாணன், மு.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

     செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்ந்த தங்க. காமராசு அவர்களின் வரவேற்புரையும், இணைப்புரையும், நிகழ்ச்சியை நெறிப்படுத்திய பாங்கும் வருகைபுரிந்த அறிஞர் பெருமக்களால் பெரிதும் போற்றப்பட்டது. இயக்ககத்தில் பணிபுரியும் அலுவலர்களும் திரளாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.


கலந்துரையாடலில் பங்கேற்றோர்


கலந்துரையாடலில் பங்கேற்றோர்

கலந்துரையாடலில் பங்கேற்றோர்


மாண்புமிகு அமைச்சர் க.பாண்டியராசனார் அவர்களிடம், டென்மார்க்கிலிருந்து வருகைபுரிந்த இராமச்சந்திரமூர்த்தி அவர்கள்  தம் அமைப்பினர் வெளியிட உள்ள ஆத்திசூடி டேனிசு மொழிபெயர்ப்பு குறித்து உரையாடல்.


படங்கள் உதவி: நேதாஜி பாபு



திங்கள், 11 பிப்ரவரி, 2019

புதுச்சேரியில் தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் – தொடக்கவிழா



புதுச்சேரி சட்டப்பேரவைத் துணைத்தலைவர் வே.பொ சிவக்கொழுந்து அவர்கள் ஆவணப்படத்தைத் தொடங்கிவைக்கும் காட்சி. அருகில் மயிலம் சிவஞான பாலய சுவாமிகள், தூ.சடகோபன், மருத்துவர் பால் ஜோசப் (கனடா), புலவர் சீனு.இராமச்சந்திரன், புலவர் ஆதிகேசவன், மு.இளங்கோவன்



புதுவைப் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் இயக்கத்தில் உருவாக உள்ள தொல்லிசையும் கல்லிசையும் என்ற ஆவணப்படத்தின் தொடக்க விழா 11.02.2019 (திங்கள் கிழமை) மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை புதுச்சேரியில் உள்ள செயராம் உணவகத்தில் நடைபெற்றது.

.தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் வெளியீட்டு விழாவில்  புதுச்சேரி அரசின் சட்டப்பேரவையின் துணைத்தலைவரும், புதுச்சேரி கம்பன் கழகத்தின் தலைவருமான வே.பொ. சிவக்கொழுந்து கலந்துகொண்டு ஆவணப்படத்தைத் தொடங்கிவைத்தார் மயிலம் திருமடத்தின் அதிபர் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற  ஆவணப்படத் தொடக்க விழாவில் புதுவைத் தமிழறிஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி ஆல்பா கல்வி நிறுவனங்களின் தலைவர் வ. பாசிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.

கனடாவிலிருந்து வருகைபுரிந்த மருத்துவர் பால் ஜோசப், டென்மார்க்கிலிருந்து வருகைபுரிந்த இராமச்சந்திர மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன் தம் ஆவணப்படத்தின் நோக்கத்தினை எடுத்துரைத்தார். இந்த ஆவணப்படத்தில் பணிபுரிய உள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் விழாவில் சிறப்பிக்கப்பட்டனர்.

கலைமாமணி கா. இராசமாணிக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவும், முனைவர் அரங்க. மு. முருகையன் வரவேற்புரையாற்றவும், புலவர். . ஆதிகேசவன், தமிழ்மாமணி சீனு. இராமச்சந்திரன், தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன், தூ. சடகோபன் ஆகியோர் முன்னிலையுரையாற்றினர். இன்னிசைவேந்தன் கழுவினரின் அறுமுகனம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. கு.அ. தமிழ்மொழி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.





புதன், 6 பிப்ரவரி, 2019

தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் - தொடக்கவிழா!





     அருந்தமிழ் உறவுடையீர், வணக்கம்.

     தமிழை இயல், இசை, நாடகம் என மூவகைப்படுத்தி நம் முன்னோர் உரைப்பர். இவற்றுள் நடுவணாக உள்ள இசைத்தமிழ் நீண்ட வரலாறுகொண்டது. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சேக்கிழாரின் பெரியபுராணம், சீவக சிந்தாமணி, அருணகிரிநாதரின் பாடல்கள், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் வண்ணப்பாடல்கள்  உள்ளிட்ட நம் தமிழ் நூல்களில் இசைகுறித்தும், இசைக்கருவிகள் குறித்தும், இசைக்கலைஞர்கள் குறித்தும். மிகுதியான செய்திகள் இடம்பெற்றுள்ளன. மேலும் தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளிலும் இசை குறித்த செய்திகள் பதிவாகியுள்ளன.

     இருபதாம் நூற்றாண்டில் ஆபிரகாம் பண்டிதர், விபுலாநந்த அடிகளார், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், வீ.ப.கா. சுந்தரம் உள்ளிட்ட இசை அறிஞர்கள் இசைத்தமிழ் ஆய்வில் தம் வாழ்நாளை ஒப்படைத்துப் பணியாற்றியுள்ளனர். அண்ணாமலை அரசர் தமிழிசை இயக்கம் கண்டு நிலைத்த புகழ்பெற்றார். "பொங்கு தமிழ்ப் பண்ணிசை மன்றம்", "தந்தை பெரியார் தமிழிசை மன்றம்" உள்ளிட்ட அமைப்புகளும் தமிழ்நாட்டில் மீண்டும் ஓர் இசைப்புரட்சிக்கு வித்திட்டன.

 ’நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய’ அடியவர்களைக் கண்ட இத்தமிழ்நாட்டில் இசைத்தமிழ் ஆவணங்கள் யாவும் முறைப்படித் தொகுத்துவைக்கப்படாத ஒரு நிலை உள்ளது. ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டு வரலாறுகொண்ட இசைத்தமிழின் வரலாற்றை விளக்கும் வகையில் முனைவர் மு. இளங்கோவன் இயக்கத்தில் தொல்லிசையும் கல்லிசையும் என்ற ஆவணப்படத்தை உருவாக்க உள்ளோம். இந்த ஆவணப்படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தங்களை மிகுந்த மகிழ்வுடன் அழைக்கின்றோம்.

இன்னவண்ணம்
வயல்வெளித் திரைக்களம்
புதுச்சேரி - 605 003
தொடர்புக்கு: 94420 29053

நாள்: 11.02.2019, திங்கள் கிழமை,
நேரம்: அந்திமாலை 6. 00 மணி - 8. 30 மணி
இடம்: செயராம் உணவகம், புதுச்சேரி


 நிகழ்ச்சி நிரல்
அந்திமாலை 6.00 முதல் 6.30 வரை
கலைமாமணி சு.கோபகுமார் மாணவர்கள் வழங்கும்
அறுமுகனம் இன்னிசை

தமிழ்த்தாய் வாழ்த்து: கலைமாமணி கா. இராசமாணிக்கம்
வரவேற்புரை: முனைவர் அரங்க. மு. முருகையன்

முன்னிலை
புலவர். ந. ஆதிகேசவன், தமிழ்மாமணி சீனு.இராமச்சந்திரன்,
தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன், திரு. தூ. சடகோபன்

தலைமை: தவத்திரு. சிவஞான பாலய சுவாமிகள்
மயிலம் திருமடம்

ஆவணப்படத்தைத் தொடங்கிவைத்தல்
மாண்புமிகு சட்டப்பேரவையின் துணைத்தலைவர்
திரு. வே. பொ. சிவக்கொழுந்து

சிறப்புரை
முனைவர் பா. மீ. சுந்தரம்
இசையாய்வறிஞர், புதுச்சேரி

பாராட்டுரை
திரு. இரா.சிவா, சட்டமன்ற உறுப்பினர் &
தலைவர், புதுவை அரசின் தொழில் வளர்ச்சிக் கழகம்
முனைவர் சீனி. திருமால்முருகன்
தலைவர், அதியமான் கல்வி நிறுவனங்கள், ஊத்தங்கரை
திரு. வ. பாசிங்கம்
தலைவர், ஆல்பா கல்வி நிறுவனங்கள்

வாழ்த்துரை
திரு. கே. பி. கே. செல்வராஜ் (தலைவர், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்)
முனைவர் வி. முத்து (தலைவர், புதுவைத் தமிழ்ச் சங்கம்)
மருத்துவர் பால் ஜோசப். கனடா
முனைவர் ஒப்பிலா. மதிவாணன்
திரு. சோழன்குமார்
முனைவர் ப. சிவராசி, இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடி

தொகுப்புரை: செல்வி கு. அ. தமிழ்மொழி
நன்றியுரை: திரு. செ. திருவாசகம்

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

பேராசிரியர் சரசுவதி வேணுகோபால் - சிறப்பு நேர்காணல்கள்!


பேராசிரியர் சரசுவதி வேணுகோபால்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நாட்டுப்புறவியல் ஒரு பாடமாக அமைக்கப்பட்டு, மாணவர்கள் கற்று வருகின்றனர். பலர் இத்துறையில் ஆய்வுகளைத் தொடர்ந்து நிகழ்த்திவருகின்றனர். பல்கலைக்கழகங்களில் நாட்டுப்புறவியல் தனித்துறையாகச் செயல்படுவதையும் இங்கு நினைவிற்கொள்ளவேண்டும். தமிழக நாட்டுப்புறவியல் துறை ஆய்வாளர்களுள் பேராசிரியர் சரசுவதி வேணுகோபால் அவர்கள் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு நல்கியவர் ஆவார்.

மதுரை  காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுசெய்து பட்டம் பெற்றவர். அப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து, நாட்டுப்புறவியல் ஆய்வு செழிக்க அருந்தொண்டாற்றியவர். பன்னூலாசிரியர். பல ஆய்வுத்திட்டங்களை வகுத்து, நிறைவுசெய்தவர். அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளைச் சார்ந்த மாணவர்களுக்குக் கல்வி கற்பித்த பட்டறிவாளர். கடந்த ஐம்பதாண்டுகளாக வளர்ந்துவரும் நாட்டுப்புறவியல் துறைசார்ந்த தம் பட்டறிவுகளைச் சற்றொப்ப இரண்டரை மணிநேரம் என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள்.

இந்த நேர்காணலில் நாட்டுப்புறவியல் துறை தமிழகத்தில் எவ்வாறு வளர்ந்தது என்பதை மிகச் சிறப்பாக நம் பேராசிரியர் அவர்கள் நினைவுகூர்ந்தார்கள். அயல்நாட்டு அறிஞர்கள் தமிழக நாட்டுப்புறவியல் துறை ஆய்வுக்குச் செய்துள்ள பங்களிப்புகள், தமிழகத்தில் நிகழ்ந்துள்ள மிகச் சிறந்த நாட்டுப்புறவியல் ஆய்வுகள் என யாவற்றையும் தம் நினைவிலிருந்து பகிர்ந்துகொண்டார்கள். தமிழகத்தின் மூத்த அறிஞர் பெருமக்களின் தமிழ்ப்பணிகளும் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளன. பேராசிரியர்கள் தெ.பொ.மீ, முத்துச்சண்முகனார், மு.வ., வ.சுப.மாணிக்கம், தமிழண்ணல், வெள்ளைவாரணனார் உள்ளிட்டோர் தம் ஆய்வுக்குத் துணைநின்ற பாங்கினை நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

என் வேண்டுகோளை ஏற்று, நேர்காணலுக்கு உதவிய பேராசிரியர் சரசுவதி வேணுகோபால் அவர்களுக்கும், அவர்களின் கணவர் முனைவர் விசய வேணுகோபால் ஐயா அவர்களுக்கும் தமிழுலகின் சார்பில் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எங்களின் ஆவணமாக்கும் முயற்சிக்குத் துணைநிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
தமிழக நாட்டுப்புறவியல் என்ற தலைப்பிலும், தொல்காப்பியத்தில் நாட்டுப்புறவியலின் தாக்கம் என்ற தலைப்பிலும் இரண்டு நேர்காணலைப் படத்தொகுப்பு செய்து, இணையவெளியில் இணைத்துள்ளேன். நாட்டுப்புறவியல் ஆர்வலர்கள் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.

தமிழக நாட்டுப்புறவியல் காணொளியைப் பார்க்க இங்கு அழுத்துக.

தொல்காப்பியத்தில் நாட்டுப்புறவியல் கூறுகள் காணொளியைப் பார்க்க இங்கு அழுத்துக.

பேராசிரியர் சரசுவதி வேணுகோபால் அவர்களுடன் மு.இளங்கோவன்