நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 2 ஜனவரி, 2019

காலம் தந்த பரிசு க. பாஸ்கரன்!


 க. பாஸ்கரன் 

     விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கும் நோக்கில் இலங்கைக்குச் சென்றிருந்தபொழுது எனக்குக் கிடைத்த தமிழ் உறவினர்களுள் திருவாளர் கணபதி பிள்ளை பாஸ்கரன் அவர்களைத் தனித்துச் சுட்டியாக வேண்டும். படப்பிடிப்பின்பொழுது நான் தங்கியிருந்த விடுதிக்கு ஒரு வைகறைப் பொழுதில் வந்திருந்தார். அவரைச் சந்தித்து, என் நூல்களைக் கொடுத்தேன். ஏற்றுக்கொண்ட அவர் நிறைந்த நெஞ்சுடன் வாழ்த்தினார். அன்றுமுதல் இன்றுவரை ஆர்வம்குறையாத உறவுடன் உள்ளமை அவர்தம் நல்லுள்ளத்திற்குச் சான்றாகும்.

     ஆவணப்படம் சார்ந்து, பொறியாளர் கோணேசப் பிள்ளை அவர்களைச் சந்திப்பதற்கு உரிய ஒழுங்குகளைச் செய்துதந்தவர் நம் பாஸ்கரனார் ஆவார். அண்ணன் சிவம் வேலுப்பிள்ளையுடனும், காசுபதி நடராசா ஐயாவுடனும் கோணேசப் பிள்ளையைச் சந்தித்து, விபுலாநந்த அடிகளாருடன் அவருக்கு அமைந்த உறவினை நேர்காணல் செய்து பதிந்துகொண்டோம். அப்பொழுது மண்டூர் உள்ளிட்ட ஊர்களின் சிறப்புகளை அறியும் வாய்ப்பும் பாஸ்கரன் அவர்களால் ஏற்பட்டது. அதன் பிறகு கண்ணம்மா அக்காவினை இரண்டாவது முறையாகச் சந்திப்பதற்கான ஒழுங்குகளையும் செய்து தந்தார். பின்னர் விபுலாநந்த அடிகளாரின் தங்கை மகனும் கண்டியில் வாழ்ந்து வரும் பொறியாளருமான கணேசன் ஐயாவைச் சந்தித்துப் படப்பிடிப்பு நடத்துவதற்கு உரிய ஒழுங்குகளையும் நம் பாஸ்கரனார் அவர்களே செய்து தந்தார். பாஸ்கரன் ஐயா அவர்களின் துணையால் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தில் அரிய காட்சிகள் பல இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டன. எனவே விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை வரவேற்கும் நல்லுள்ளங்கள் எங்களுக்கு உதவிய பாஸ்கரன் அவர்களையும் நன்றியுடன் கொண்டாட வேண்டும் என்று இந்நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

     இலங்கைக்குச் செல்லும்பொழுதெல்லாம் திரு. பாஸ்கரன் அவர்களிடம் தனித்து உரையாடவோ, அமைதியாக அமர்ந்து பேசவோ நேரமின்றி, இலங்கை முழுவதும் சுற்றிச் சுழன்று விபுலாநந்த அடிகளார் குறித்த ஆவணங்களைத் திரட்டியவண்ணம் இருந்தேன். ஓர் அமைதிச் சூழலில் பாஸ்கரனார் அவர்களின் பணிகள் குறித்தும், குடும்பநிலை குறித்தும் அறிவதற்கு வாய்ப்பு அமைந்தது. அப்பொழுது நடைபெற்ற ஓர் உரையாடலில் அவர் வெளிப்படுத்திய உண்மையொன்று அவர்மேல் எனக்கு ஏற்பட்ட மதிப்பினைப் பன்மடங்காக்கியது. அந்த உண்மை இதுதான்:

     இலங்கையின் தேற்றாத்தீவில் பிறந்து, அரிய தமிழ் நூல்கள் பலவற்றை அச்சிடும் மனோகரா அச்சகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்து, காலச் சூழலால் கனடா நாட்டுக்குச் சென்று, அங்கும் தமிழ்ப்பணியும் இலக்கியப் பணியும் செய்து மறைந்த நாங்கள் வழிபடுதெய்வமான ஈழத்துப்பூராடனார் குறித்து 1994 அளவில், ’ஈழத்துப்பூராடனாரின் இலக்கியப் பணிகள்’ குறித்து ஒரு கட்டுரையைச் செந்தமிழ்ச் செல்வி இதழில் எழுதியிருந்தேன். இதனை அடிப்படையாக வைத்து, ஈழத்துப்பூராடனாருக்குக் கிழக்குப் பல்கலைக்கழகம் மதிப்புறு கலாநிதிப் பட்டம் கிடைக்க வழி செய்தவர் நம் பாஸ்கரனார் ஆவார். இந்த அரிய செய்தியைக் கேட்டபொழுது திரு. பாஸ்கரனார் அவர்களின் மேல் எனக்கு நாளும் நாளும் மதிப்பு உயர்ந்தது. முன்பின் அறியாத நிலையில் என் கட்டுரை ஒருவருக்கு மதிப்புறு கலாநிதிப் பட்டம் கிடைப்பதற்குக் காரணமாக அமைந்ததை நினைத்தால் இப்பொழுதும் நான் மகிழ்ச்சியடைவது உண்டு. அந்தச் செயற்கரும் செயலுக்குக் காரணமாக இருந்தமை பாஸ்கரனாரின் தூய உள்ளத்திற்குச் சான்றாகும்.

     விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் குறித்து நாளும் பாஸ்கரனார் தொலைபேசியில் உரையாடும் சூழல் தொடர்ந்தது. ஆவணப்படத்தைப் பெரும் முயற்சிக்குப் பிறகு உருவாக்கி, அமெரிக்காவில் முதன்முதல் வெளியிட்டோம். அதன் பிறகு தவத்திரு விபுலாநந்த அடிகளார் வாழ்ந்த மட்டக்களப்பில் வெளியிடும் சூழலை நம் பாஸ்கரனார் உருவாக்கித் தந்தார்கள். அதற்காக நான் இலங்கைக்கு அழைக்கப்பட்டேன். விபுலாநந்த அடிகளார் நூற்றாண்டு விழாச் சபையினர் அதற்கான விழா ஒழுங்குகளைச் செய்து, என்னைச் சிறப்பு விருந்தினராக ஏற்றுப் போற்றிப் பாராட்டினர். அப்பொழுதுதான் பொறியாளர் கணேசன் ஐயாவை முதன்முதல் நேரில் கண்டேன். இலங்கையின் புகழ்பெற்ற மனிதர்கள் பலைரையும் அந்த நிகழ்வில் சந்தித்தேன்.

அடுத்து இலங்கை அரசு சார்பாக நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் குறித்த சிறப்பு நிகழ்வுகளிலும் சிறப்பு விருந்தினனாக அழைக்கப்பெற்றுச் சிறப்பிக்கப்பட்டேன். இதற்கெல்லாம் பின்புலமாக இருந்து, நான் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்திற்கு உழைத்த உழைப்பையும், விபுலாநந்தருக்குக் காலத்தில் நான் செய்த தொண்டினையும் முற்றாக அறிந்தவர் நம் பாஸ்கரனார் ஆவார். ஆவணப்படம் உருவானபொழுது ஏற்பட்ட தோல்விகளையும், இழப்புகளையும், ஏமாற்றங்களையும் நன்கு உணர்ந்த திரு. பாஸ்கரனார் உலகின் பல பாகங்களில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிட்ட பொழுதெல்லாம் அகம் குளிர்ந்து பாராட்டிய பெருமகனார் என்பதை இங்கு நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

     க. பாஸ்கரன் அவர்கள் தம் குடும்பத்தினருடன் புதுச்சேரிக்கு ஒரு முறை சுற்றுலா வந்திருந்தார். காலைப் பொழுதில் சந்தித்து, சிற்றுண்டி உண்டு, அனைவருக்கும்  விடைகொடுத்து, அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றேன். என் அலுவல்பணியில் மூழ்கியிருந்ததால், என் பகலுணவு நேரத்துக்குப் பிறகு அவருடன் தொடர்புகொண்டேன். அவரை அழைத்துச் செல்ல  வேண்டிய மகிழ்வுந்தின் ஓட்டுநர் இந்நேரம் வரை வரவில்லை என்று சொன்னதும் அதிர்ந்துபோனேன். காலை உணவுக்கும் பகலுணவுக்குமான இடைவெளிவரை அவர் குடும்பத்தினருடன் விடுதி வாயிலில் காத்திருக்க நேர்ந்துவிட்டதே என்று பதறியடித்து, உடனடியாக அவர்கள் இருந்த இடம் சென்று, வேறு மகிழ்வுந்தில் ஏற்றிச், சென்னைக்கு அனுப்பிவைத்தேன். அந்த நிகழ்வில் ஏற்பட்ட அவர்தம் கசப்பான பயண அனுபவத்திலும் அவர் அமைதி காத்த பெருந்தன்மை நினைத்து நான் வியப்புற்றேன். தமக்குத் தொல்லையாக அமைந்த அந்த ஓட்டுநரின்மீது பரிவுகாட்டிய பாஸ்கரன் அவர்களின் சகிப்புத்தன்மையை நினைத்து அவர் ஒரு பேருள்ளம் வாய்த்த மாமனிதர் என்று முடிவுசெய்துகொண்டேன். தொல்லை தந்தவருக்கும் உதவும் தூய மனிதராக ஐயா பாஸ்கரன் மிளிர்பவர் என்று அவரை நாளும் நினைத்துப்பார்ப்பேன்.

     பின்பு ஒருமுறை இலங்கை சென்றபொழுது என் மனைவுயுடன் அவர்தம் இல்லம் சென்றிருந்தேன். எங்களை அன்புடன் வரவேற்றுத் தம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்துவைத்தார். மட்டக்களப்புப் பண்ணியங்கள் பலவற்றை அன்பு மேலீட்டால் வழங்கி மகிழ்ந்தார் மட்டக்களப்பு வாவியொட்டிய அவர்தம் குடியிருப்பில் சில மணிநேரம் கழித்த அந்த இனிய பொழுது இன்றும் என் மனக்கண்ணில் உள்ளது.

     பழகுதற்கு இனிய பண்பாளரும், பிறருக்கு உதவும் உயர்ந்த உள்ளத்தினரும், ஏற்றுக்கொண்ட பணியைத் திறம்படச் செய்யும் செயல் மறவரும், துன்பம் தந்தவருக்கும் பரிந்துபேசும் கருணை உள்ளத்தினருமான க. பாஸ்கரனார் அவர்கள் இலங்கை அரசின் கல்வித்துறையில் திறம்படப் பணியாற்றியவர். இவரைப் போன்ற பண்புடைய மக்களால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டுள்ளதைப் "பண்புடையார் பட்டுண்டு உலகம்" என்று சான்றோர் குறிப்பிடுவது உண்டு.  அன்பொழுகும் உள்ளமும் அருளொழுகும் செயல்பாடுகளும் கனிந்த திரு. பாஸ்கரனார் அவர்களின் மணிவிழாச் செய்தியறிந்த நெஞ்சம் மகிழ்கின்றேன். மணிவிழாச் சிறக்கவும், மணிவிழா மலர் பொலிவுற்றுப் பூத்துக் குலுங்கவும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.

# திரு. க. பாஸ்கரன் அவர்களின் மணிவிழா மலரில் இடம்பெற்றுள்ள நினைவுரை(2018).

கருத்துகள் இல்லை: