பேராசிரியர் அ. அ. மணவாளன்
சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ் மொழித்துறைத் தலைவரும், பன்மொழிப்
புலமை கொண்டவருமான பேராசிரியர் அ. அ. மணவாளன் அவர்கள் 30.11.2018 இரவு இயற்கை எய்தினார் என்ற செய்தியை
ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். யான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்
முனைவர் பட்டம் பயின்றபொழுது, கருத்தரங்க நிகழ்வு ஒன்றிற்கு வருகைதந்தபொழுது ஓர் இரவு
முழுவதும் அவருடன் உரையாடிய பசுமையான நினைவுகள் வந்துபோகின்றன. திருச்சிராப்பள்ளி சமால்
முகமது கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர் என்பதையும், சென்னைப் பல்கலைக்கழகத்தின்
தமிழ்மொழித் துறைத்தலைவராகப் பணிபுரிந்தவர் என்பதையும் கேட்ட எனக்கு வியப்பும் பெருமகிழ்வும் அப்பொழுது ஏற்பட்டது. பின்னாளில் பேராசிரியரின் மலையளவு திறமையை அறிந்து, அவர்மீது அளவுக்கு அதிகமான
மதிப்பினைக் கொண்டிருந்தேன். எளிமையும், தெளிந்த புலமையும் ஒருங்கே வாய்த்த பேராசிரியரை
இழந்து வருந்தும் குடும்பத்தினர், அவர்தம் அன்புக்குரிய மாணவர்கள் என அனைவருக்கும்
என் ஆழ்ந்த இரங்கல்.
பேராசிரியர் அ.
அ. மணவாளன் அவர்களின் தமிழ் வாழ்க்கை
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை
மாவட்டம் மோசவாடி என்ற ஊரில் 1935 இல் பிறந்தவர். கோவை- பேரூர் தமிழ்க் கல்லூரியில்
தமிழ் பயின்றவர். பின்னர் திருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரியில் ஆங்கில இலக்கியம்
பயின்றவர். தமிழ் முதுகலைப் பட்டத்தைத் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில்
பயின்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறையில் விரிவுரையாளராகவும், இணைப்பேராசிரியராகவும்
பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் 1978 - 1996 ஆம் ஆண்டுகளில் பணிபுரிந்தவர்.
1988-89 ஆம் ஆண்டில் புல்பிரைட் உதவித்தொகை பெற்று இந்தியானா, சிகாகோ, இவான்சுடன்,
கொலம்பியா, வாசிங்டன், நியூயார்க்குப் பல்கலைக்கழகங்களில் ஒப்பாய்வுத்துறையில் மதிப்புறு
பேராசிரியராகப் பணியாற்றியவர்.
இலக்கியக்கோட்பாடுகள்,
இலக்கிய ஒப்பாய்வு, மொழிபெயர்ப்புத் துறைகளில் வல்லுநர். 13 இலக்கியத் திறனாய்வு நூல்களையும்,
4 மொழிபெயர்ப்பு நூல்களையும், 5 இலக்கியக் கோட்பாடுகள் நூலையும் இயற்றியுள்ளார். மில்டன்-
கம்பனின் காப்பிய மாந்தரின் தலைமைப் பண்பு(1984), இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக்
கோட்பாடுகள்(1995), பக்தி இலக்கியம்(2004), இலக்கியப் பண்பாட்டு ஒப்பாய்வு(2010) உள்ளிட்ட
புகழ்பெற்ற நூல்கள் இவரின் பெயர் சொல்லும் பெருமை மிக்க படைப்புகளாகும். அரிஸ்டாட்டிலின்
கவிதையியலை இவர் மொழிபெயர்த்து வழங்கியதன் அடிப்படையில் தமிழ்க் கல்வி உலகிற்கும்,
ஆய்வுலகிற்கும் பெரும்பணியாற்றியவர்.
உலகத் தமிழ் இலக்கிய
வரலாறு (கி.பி. 901 முதல் 1300 வரை) எழுதி வழங்கியவர்.
இராமகாதையும் இராமாயணங்களும்(2005)
என்ற இவரின் நூலுக்கு பிர்லா அறக்கட்டளையின் சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்டது.
தமிழ், ஆங்கிலம்,
தெலுங்கு, இந்தி மொழிகளில் ஆழ்ந்த புலமையுடைவர்.
பேராசிரியர் அ. அ. மணவாளன் பிர்லா அறக்கட்டளை விருது பெறுதல்
நன்றி: வாழும் காவியம் பேராசிரியர் அ. அ. மணவாளன் சிறப்பு மலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக