நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

வரலாற்றைத் தேடிய ஓர் இனிய பயணம்!...


குடுமியான்மலை இசைக் கல்வெட்டு

               பழைய வரலாறுகளை அறிந்துகொள்வதிலும் ஆவணப்படுத்துவதிலும் எனக்கு எப்பொழுதும் ஈடுபாடு உண்டு. அதற்குத் தகுந்தாற்போல் நான் பணிபுரியும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க எனக்கு ஒதுக்கப்படும் பாடங்களும் அமைந்துவிடும். கல்வெட்டியல், நாட்டுப்புறவியல், சங்கப்பாடல்கள், இலக்கணம் என்று நான் பயிற்றுவிக்கும் பாடங்கள் இருக்கும். அதுபோல் இன்றைய புதிய தொழில்நுட்பம் சார்ந்த இணையத் தமிழைக் கற்பிக்கவும் எனக்கு வாய்ப்பு அமையும். அதனால்தான் பழைய செய்திகளைத் தேடி எடுப்பதும் அதனைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்வதும் என் விருப்பமான வேலையாக உள்ளது. எனவேதான் என் பேராசிரிய நண்பர் முனைவர் ப.இரவிக்குமார் அவர்கள் என்னைப் பற்றி ஒருவரியில் ஒரு மதிப்பீடு செய்தார். அந்த மதிப்பீடு இதுதான்: பழைமை + புதுமை » மக்கள் = மு.இளங்கோவன்.

     முந்தைய வரலாற்றை அறிந்துகொள்ளும் ஒரு மாணவனாக வரலாற்றுச் சிறப்புமிக்க சில இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு அண்மையில் எனக்கு அமைந்தது. உடன் என்னிடம் பயிலும் மாணவர்களையும் அழைத்துச்செல்லும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. மாணவர்கள் இருபதின்மரும், என்னுடன் பணியாற்றும் பேராசிரியர்கள்  மூவருமாக நாங்கள் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு முதலில் சென்றோம். என் பிறந்த ஊர் என்பதால் அங்குள்ள சிற்பங்கள், கட்டடக்கலை அமைப்புகள், கல்வெட்டுச் செய்திகள், வாய்மொழி வரலாறுகள் அனைத்தையும் மாணவர்களுக்கு நேரில் அறிமுகம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றேன்.

     எங்கள் சுற்றுலாக்குழு அடுத்து, அருகில் உள்ள திருப்பனந்தாள் காசித்திருமடத்திற்குச் சென்றது. திருப்பனந்தாளில் உள்ள செஞ்சடையப்பர் திருக்கோவில் பாடல்பெற்ற இடம் என்பதைத் திருமுறை அன்பர்கள் நன்கு அறிவர். அதுபோல் திருப்பனந்தாளின் முகவரியாக விளங்கும் காசித்திருமடம் சார்பில் செந்தமிழ்க் கல்லூரி நடைபெற்றதையும் (இன்று கலை, அறிவியல் கல்லூரியாக மலர்ந்துள்ளது), சைவ இலக்கியங்களும், சாத்திர நூல்களும் இங்குக் கணக்கின்றிப் பதிப்பிக்கப்பட்டு, உலக மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கப்பெறுகின்றமையும் தமிழுலகம் நன்கு அறியும். நீதிநெறி விளக்கம், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் உள்ளிட்ட அருந்தமிழ்ப் பனுவல்களை ஆக்கித் தந்த தமிழ் மாமுனிவர்  குமரகுருபர அடிகளாரின் மரபில் செழித்து வளரும் திருமடம் இது என்பதையும் இவண் நினைவூட்ட விரும்புகின்றேன். திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் உருவா தமிழ்ப்பரிசில் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகும். தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களைப் புரந்தருளிய திருமடம் திருப்பனந்தாள் மடம் என்பதையும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மடத்தினை அருளாட்சி செய்துவரும் தவத்திரு. முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்களைச் சந்தித்துக் காசித்திருமடத்தின் பதிப்புப்பணிகளை அறிந்துகொள்ளச் சென்றோம். எங்களை அன்புடன் வரவேற்ற திருமடத்தினர் எங்களுக்கு உரிய செய்திகளை மகிழ்வுடன் வழங்கினர். சில நூல்களையும் மாணவர்கள் அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கினர்.

தாராசுரம்கோவில் இசைப்படிக்கட்டுகள்


     எங்களின் சுற்றுலாக்குழு அடுத்ததாகக் கும்பகோணம் எனப்படும் குடந்தையை அடுத்துள்ள தாராசுரம் கோவிலுக்குச் சென்றது. இங்கு இரண்டாம் இராசராசன் காலத்தில் கட்டப்பெற்ற அரிய கோயில் உள்ளது. இங்குள்ள சிற்பங்களும், கல்வெட்டுகளும் பழந்தமிழகத்துச் செய்திகளைப் பாதுகாத்து வைத்துள்ளன. இந்தியத் தொல்லியல்துறை உள்ளிட்ட அமைப்புகளால் இக்கோயில் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றது. இங்குள்ள இசைப்படிக்கட்டுகளை எந்தமிழ் மக்கள் சிதைத்தமை கண்டு வேலியிட்டுப் பாதுகாக்கின்றனர். ஒவ்வொரு படியிலும் ஒரு சுரத்திற்குரிய இசை தோன்றுமாறு இந்தப் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளதை அறிந்து வியந்தோம்.

     பகலுணவு நேரத்துக்குத் தஞ்சையைச் சென்றடைந்த நாங்கள், மராட்டிய அரசர்களின் அரண்மனை, அங்குள்ள அரசவை, காட்சியகம், கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்களைப் பார்த்து மகிழ்ந்தோம். நான் இளம் முனைவர் பட்டம் பயின்றபொழுது (1992-93) மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் என்ற தலைப்பில் ஆய்வு செயததால் இந்த இடமும், வரலாறும் எனக்கு நன்கு அறிமுகமானவை. அவற்றை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டேன். சரசுவதி மகால் நூலகத்தின் அமைப்பினையும், பதிப்புப் பணிகளையும் கூடுதலாக அறிந்தோம். அங்குக் காட்டப்படும் ஒலி, ஒளிக் காட்சிக்கூடத்தில் ஒளிபரப்பப்பட்ட தஞ்சாவூர் சிறப்புரைக்கும் விவரணப்படம் அருமையாக இருந்தது. அரைமணி நேரத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பெருமைகளை மிகச் சிறப்பாகத் தெரியவைத்தனர். குளிரூட்டப்பட்ட அழகிய அரங்கில் இந்த ஆவணப்படத்தை அனைவரும் விரும்பிப் பார்த்துச் செல்கின்றனர். அனைத்துக்குமாக முன்பே நுழைவுச்சீட்டை வாங்கிக்கொண்டு செல்ல வேண்டியிருந்தது.

     முதல்நாள் மாலைப்பொழுதின் நிறைவு நிகழ்வாக அடுத்து நாங்கள் தஞ்சாவூர்ப் பெரிய கோவிலுக்குச் சென்றோம். அங்கு நல்லாசிரியர் கரந்தை செயக்குமார் அவர்கள் தம் ஆசிரிய நண்பருடன் இணைந்து எங்களை வரவேற்றுத் தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் வரலாற்றையும் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். தஞ்சாவூர் கோயிலின் தொன்மை, வேற்று நாட்டினரின் படையெடுப்புகள், போற்றுவாரின்றிக் கிடந்த கோவிலின் சிறப்பை ஆங்கிலேயர்கள் உலகுக்கு அறிவித்தமை, அங்கு நடைபெற்ற ஆய்வுகள், வெளிவந்த நூல்கள் யாவற்றையும் எங்களுக்கு எடுத்துரைத்தார். தஞ்சாவூரில் உள்ள கல்வெட்டுகளில் ஆடற்கலைக்கும், கோவில் பராமரிப்புக்கும் அரசன் செய்துள்ள கொடைகளைக் கரந்தை செயக்குமார் நினைவூட்டினார். மாணவர்களும் தாங்கள் கற்ற வரலாற்று, கல்வெட்டுப் பாடங்களை நினைவூட்டினர். தஞ்சாவூர் கோவிலில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்வுகளைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு, புதுக்கோட்டையை நோக்கி எங்கள் மகிழ்வுந்து புறப்பட்டது. புதுக்கோட்டையில் இரவு தங்கினோம்.

     சுற்றுலாவின் இரண்டாம் நாள் காலையில் தங்கியிருந்த இடத்திலிருந்து காலை 9 மணிக்குப் புறப்பட்டோம். எங்களுடன் பேராசிரியர் முத்தழகன் அவர்கள் இணைந்துகொண்டார்கள். புதுக்கோட்டை சார்ந்த வரலாற்றுச் செய்திகளை இவர் விரல்முனையில் வைத்திருப்பவர். பேராசிரியர் பே.க.வேலாயுதம் ஐயாவிடம் பயிற்சி எடுத்தவர் என்பதால் தமிழார்வமும், வரலாற்று ஈடுபாடும் இவருக்கு மிகுதியாக உண்டு. அனைவரும் 9.30 மணியளவில் சித்தன்னவாசல் சென்றடைந்தோம். எங்களின் மூடுந்துப் பயணத்திலேயே பேராசிரியர் முத்தழகன் புதுக்கோட்டை வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துரைத்தார். ஒவ்வொரு ஊர்ப்பெயருக்கும் உரிய வரலாற்றை நினைவூட்டினார். சாலையின் இருமருங்கிலும் இருந்த கற்பதுக்கைகளை அறிமுகம் செய்தார். சமண மதம் புதுக்கோட்டைப் பகுதியில் சிறப்பாக வளர்ச்சி பெற்றிருந்ததை வரலாற்றுச் சான்றுகளுடன் எங்களுக்கு நினைவூட்டினார். சித்தன்னவாசலை நெருங்கினோம். அன்னவாசல் என்ற ஊரின் அருகில் இருப்பதால் இந்த ஊர் சித்தன்னவாசல் (சிறிய அன்னவாசல்) என்று அழைக்கப்படுகின்றது (தமிழர்களின் பெயரிடும் முறை நினைந்து வியந்தேன்).

கற்பதுக்கைகள்

கற்பதுக்கைகள்

சித்தன்னவாசல் முகப்பு

     சித்தன்னவாசல் பாறை ஓவியங்களைப் பார்வையிட உரிய நுழைவுச்சீட்டை வாங்கிக்கொண்டு, பெரும் மலைப்பாறையில் குடையப்பட்டுள்ள குடைவரைக் கோவிலுக்குச் செல்லும் முன்பாகச் சில படங்களை நினைவுக்கு எடுத்துக்கொண்டோம். வரலாற்றுப் பாட நூல்களில் படித்த சித்தன்னவாசல் ஓவியச் சிறப்பை நேரில் கண்டு வியந்தோம். தாமரைப் பொய்கையும், அன்னப்பறவைகளும், நாட்டிய மங்கையர்களுமாக இருந்த ஓவியங்களின் நுணுக்கமான பகுதிகளைப் பேராசிரியர் முத்தழகன் எங்களுக்கு விளக்கினார். இதுவரை சித்தன்னவாசல்  சார்ந்து நடந்துள்ள ஆய்வுகளையும், ஆய்வாளர்களையும், அவர்கள் வெளியிட்டுள்ள நூல்களையும் எங்களுக்கு அறிமுகம் செய்தார். ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வில் தடுமாறி நின்றுள்ள இடங்களையும் எங்களுக்கு எடுத்துரைத்தார். அங்கிருந்த கல்வெட்டுகள், எழுத்துகள், சமண முனிவர்களின் சிலைகள் யாவற்றையும் நின்று, நிதானித்துப் பார்த்தோம். சித்தன்னவாசல் ஓவியத்தைப் பிரிய மனமின்றிப் பிரிந்து, மலைமீது இருக்கும் ஏழடிப்பாட்டம் சமணப்படுக்கை நோக்கிப் புறப்பட்டோம்.
ஏழடிப்பாட்டம்

     மலையடிவாரத்தில் பெயர்ப்பலகை நின்று ஏழடிப்பாட்டம் பகுதியின் சிறப்பை எடுத்துரைக்கின்றது. முன்பு மலையில் ஏறுவதற்கு வசதிகள் இல்லாமல் இருந்ததையும், இப்பொழுது படிக்கட்டுகள், பாதுகாப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் பேராசிரியர் முத்தழகன் எடுத்துரைத்தார். பாதுகாப்புக்குக் காவலர்கள் இருப்பதால் அச்சமின்றி மலைக்குச் செல்ல இயலும். மலையின் உயரே சமண முனிவர்கள் படுப்பதற்குப் படுக்கைகள் 17 அமைக்கப்பட்டுள்ளன. அதில் தமிழி எழுத்துகளில் வெட்டப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அரிய வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டதாக அக்கல்வெட்டுகள் இருப்பினும் நம் கல்லாக் காளையரும், கழிநிலைப் பாவையரும் தத்தம் பெயர்களைப் பொறித்து, பழைமையைச் சிதைத்துள்ளதைக் கண்டு மனம் வருந்தினேன். நம்மவர்களின் மூடத்தனம் எண்ணிக் குமைந்தேன். சமணர் பள்ளிகள் காற்றோட்டமும் வெளிச்சமும் நிறைந்து காணப்படுகின்றன. எத்தனை அறிவர்கள் இந்த இடத்தில் கால்பதித்தனரோ என்று எண்ணியவாறு அங்கிருந்து மலையடிவாரம் வந்தோம். இது நிற்க.

சமணர் படுக்கை(ஏழடிப்பாட்டம்- சித்தன்னவாசல்)

சமணர் படுக்கையில் பழைய கல்வெட்டு

மு.இளங்கோவன், பேராசிரியர் முத்தழகன்(சமணர் படுக்கை செல்லும்வழி)

     சித்தன்னவாசலிலிருந்து புறப்பட்ட நாங்கள் குடுமியான்மலை இசைக் கல்வெட்டுகளைக் காண்பதற்குப் புறப்பட்டோம் இடையில் சாலையோரங்களில் இருந்த சில சமணச் சிற்பங்களைக் கண்டோம். சமண மதத்தைச் சார்ந்த நல் உள்ளம் கொண்ட பெரியோரின் முயற்சியால் சமணச் சிற்பங்கள் வேலியிட்டுப் பாதுகாப்பது எங்களுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.
சமணச் சிற்பம் அருகில் மு.இ.(அன்னவாசல்)

     குடுமியான்மலையின் பெயர்க்காரணம் என்ன என்று பேராசிரியர் முத்தழகனிடம் கேட்டேன். திருநலக்குன்றம் என்பது இந்த ஊரின் பெயர் எனவும் நலம் என்பதைச் சுகம் என்றாக்கி, சுகம் என்பது சிகை என்றாக்கி, சிகை என்பது குடுமி என்றாக்கி, இன்று குடுமியான்மலை என்று ஆகிவிட்டது என்றார்.. பல்யாகசாலை  முதுகுடுமி என்ற பாண்டிய மன்னன் பெயரையும் இணைத்துப் பார்க்க எனக்குத் தோன்றியது. இதுவும் நிற்க.

 குடுமியான்மலையின் திருக்கோயில் பின்னாளில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய கோவில் என்பது பாறையைக் குடைந்து வடிவமைத்துள்ளனர். புதிய கோவிலைக் கடந்து, பழைய கோவிலுக்குச் சென்றோம். கோவில் பகுதிகளில் தேனீக்களின் பெருங்கூட்டு வாழ்க்கையினைக் கண்டோம். ஒலி எழுப்பாமல் வருமாறு பாதுகாவலர்கள் கூறினர். அனைவரும் பேச்சின்றி, நடந்து அங்குள்ள இசைக்கல்வெட்டுகளைத் தூரத்திலிருந்து பார்த்தோம். மாணவர்கள் அனைவரும் அடுத்த பகுதிக்குச் சென்ற பிறகு, தேனீயின் தாக்குதல் நடந்தாலும் எதிர்கொள்ளும் முன்னேற்பாட்டுடன் நான்மட்டும் இசைக்கல்வெட்டினை நெருங்கிப் பார்த்தேன். சில படங்கள் எடுத்துக்கொண்டேன். இசைக்கல்வெட்டு சமற்கிருத மொழியில் கிரந்த எழுத்துகளில் இருப்பதை முன்பே படித்துள்ளேன். தமிழ்ச்செய்திகள்தான் இவ்வாறு பிறமொழிகளிலும், பிற எழுத்துகளிலும் எழுதப்பட்டுள்ளன. கிரந்த எழுத்தில் எழுப்பட்டிருந்ததைப் படி எடுத்தவர்கள் தேவநாகரி எழுத்தில் படி எடுத்துள்ளனர் என்பதைப் பின்பு அறிந்தேன். எத்தனை இடியாப்பச் சிக்கலில் தமிழனின் இசையறிவு உள்ளது என்பதை அறிந்து மனம் கவன்றது. நம்மிலிருந்து பிரிந்துபோன இசையுண்மைகளை அறிய இயலாத நிலைக்கு வருந்தி, மீண்டும் ஒருமுறை தனித்து வந்து இந்த இடத்தை ஆராய வேண்டும் என்ற முடிவுடன் அடுத்த பகுதியில் இருந்த மலைக்குடைவரைக் கோவிலுக்குச் சென்றேன்.

குடுமியான்மலை இசைக்கல்வெட்டு அருகில் மு.இ.

பரிவாதிநி என்ற இசை குறித்த கல்வெட்டு

     மலைக்குவடைவரையில் சிவன்கோவில் உள்ளது. பரிவாதிநி என்று எழுதப்பட்ட இசைக்குறிப்பு அடங்கிய கல்வெட்டு ஒன்றும், வேறு சில கல்வெட்டுகளும் அங்கு இருந்தன. அவற்றை எழுத்து, எழுத்தாகத் தடவிப்பார்த்து, வியந்தேன். 


 பரிவாதிநி என்று குறிப்பிடப்படும் இசைக்கல்வெட்டு பற்றியோ, குடுமியான் மலை இசைக்கல்வெட்டு பற்றியோ முற்று முழுதான தெளிவான விளக்கம் இதுவரை கிடைக்கவில்லை என்று சொல்லலாம். ஆனால் ஆய்வாளர்கள் தொடர்ந்து பல நூல்களையும், கட்டுரைகளையும் வரைந்து தம் ஆய்வுகளைத் தொடர்ந்தவண்ணம் உள்ளமையை அறிந்தபொழுது உண்மைகளை நெருங்கிக்கொண்டுள்ளோம் என்பது புலப்பட்டது. குடுமியான்மலை இசைக்கல்வெட்டு 1904 இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் முனைவர் டி.என்.இராமச்சந்திரன் என்பவர் 1931 இல் இதுபற்றி எழுதியுள்ளார் எனவும், முனைவர் பிரேமலதா உள்ளிட்ட ஆய்வாளர்கள் இதுபற்றி ஆராய்ந்து எழுதியுள்ளனர் எனவும் அறிந்தேன். பரிவாதிநி இசைக்குறிப்புக் கல்வெட்டுடன் தொடர்புடைய செய்திகள் வேறு சில கோவில் கல்வெட்டுகளில் உள்ளதையும் அறிந்தேன்( இது பற்றி விரித்துப் பின்னர் எழுதுவேன்)
திருநலக்குன்றம் என்று எழுதப்பட்டுள்ள குடுமியான்மலைக் கல்வெட்டு

குடுமியான்மலை இசைக்கல்வெட்டுகள் பற்றி விபுலாநந்த அடிகளார் தம் யாழ்நூலில் விரிவாக எழுதியுள்ளார். மூத்த அறிஞர் வ.ஐ.சுப்பிரமணியம் அவர்கள் இந்த ஊரைப் பார்வையிட்டு வியந்ததாகவும் அறிந்தேன். இவ்வாறு மக்கள் பார்வையில் படும்படி இசைச்செய்திகள் குடைவரைக் கல்வெட்டில் பதிந்துள்ளமையால் இசையறிஞர்கள், மாணவர்கள் ஒன்றுகூடும் இடமாக இந்த ஊர் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. மேலும் சமற்கிருதத்தில் கல்வெட்டு இருப்பதாலும், கிரந்த எழுத்தால் செய்திகள் எழுதப்பட்டுள்ளதாலும், தமிழும் இக்கல்வெட்டில் ஆளப்பட்டுள்ளதாலும் நீள நினைந்து ஆழப்பயின்றால் பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வர இயலும்.(இதுவும் நிற்க)

     குடுமியான்மலையைப் பார்வையிட்ட நாங்கள் திருமயம் (திருமெய்யம்)  கோட்டையையும் பார்வையிட்டோம். எங்கள் பயணம் அடுத்ததாகக் கீழடி அகழாய்வு இடம் நோக்கி அமைந்தது. இடையில் நெடுமறம் என்ற ஊரில் வண்டியை நிறுத்திப் பகலுணவு உண்டோம். திருப்பத்தூர் கடந்து, மதுரை மேலூர் வழியாக, வைகையாற்றைக் கடந்து சிலைமான் வழியாகக் கீழடியை மாலை 4.30 மணியளவில் அடைந்தோம். கீழடி இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக இருந்தது; வாழையும், தென்னையும் வளத்தைக் காட்ட, செழித்திருந்தன. தென்னந்தோப்புக்கு இடையில் நுழைந்து அகழாய்வு நடைபெற்ற இடங்களைக் கண்டோம். அகழாய்வு நடைபெற்ற இடங்கள் பணி முடிந்ததால் பாதுகாப்பாக மூடப்பட்டிருந்தன.  முன்பே சென்றிருந்தால் அகழாய்வுப் பணிகளை நேரில் பார்த்திருக்கலாம். இருப்பினும் உரிய இடத்தை நேரில் கண்ட மன நிறைவும், அருகில் வாழ்ந்தவர்களிடம் அகழாய்வுப் பணிகள் குறித்து உரையாடி, விவரம் பெற்ற மகிழ்ச்சியும் எங்களுக்கு இருந்தது. கீழடி நிலங்களில் கிடந்த சில பானை ஓடுகள், செங்கல் சிதைவுகளை நினைவுக்கு எடுத்துக்கொண்டு மதுரை ஆலவாய் அண்ணலுடன் உறையும் அங்கயற்கண்ணி அம்மையையும் அவர்கள் எழுந்தருளியிருக்கும் கோவிலையும் காண்பதற்கு எங்கள் குழு ஆயத்தமானது...!

கருத்துகள் இல்லை: