முனைவர் இல.தியாகராசன்(முதலில் நிற்பவர்) தம் நண்பர்களுடன்...
அரியலூர் அரசு கல்லூரியில் வரலாற்றுத்துறையின் தலைவராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள முனைவர் இல. தியாகராசன்
அவர்களின் கல்வெட்டு ஆராய்ச்சிப் பணிகளையும், வரலாற்றுத்துறைக்கு அவர்
வழங்கியுள்ள பங்களிப்புகளையும் அண்ணன் பொறியாளர் இரா. கோமகன் அவர்கள் எப்பொழுதும் நினைவூட்டிக்கொண்டே
இருப்பார். அவர்போல் உடையார்பாளையம் அரண்மனையைச் சார்ந்த அரசகுடும்பத்து நண்பர்களும்
பேராசிரியர் இல.தியாகராசன் அவர்களின் சிறப்புகளை அடிக்கடி எடுத்துரைப்பார்கள். அண்மையில்
அவர்தம் அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி - 1 என்ற நூலைப் படிக்க
நேர்ந்தது. தொடர்ச்சியாக அவர்தம் கங்கைகொண்டசோழபுரம் கல்வெட்டுக்கள் என்ற நூலையும்
படிக்க நேர்ந்தது. பேராசிரியர் இல. தியாகராசன் அவர்களின் கடும் உழைப்பும், வரலாற்றுத்துறையில்
அவருக்கு உள்ள பெரும் புலமையும் இந்த நூல்களின் வழியாகக் கண்டு வியப்புற்றேன். பெரும்பணியைச்
செய்திருந்தாலும் இவர்களைப் போலும் அறிவாளர்கள் போற்றப்படாமல் உள்ளமை தமிழகத்தின் போகூழேயாகும்.
பேராசிரியர் அவர்களின் வாழ்க்கையையும், அவர்கள் செய்துள்ள பணிகளையும் உலகத் தமிழர்களின்
பார்வைக்கு வைப்பதில் மகிழ்கின்றேன்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க
ஊரில் வாழ்ந்த ம. இலட்சுமண நாயக்கர், அரங்கநாயகி ஆகியோரின் மகனாக இல. தியாகராசன் 15.11. 1955 இல் பிறந்தவர். வேட்டவலம் என்னும் ஊர், சங்க காலத்தில் திருக்கோவிலூர் மலையமான்
மன்னர்கள் ஆண்ட மிலாடு(மலையமான் நாடு என்பதன் மருஉ) நாட்டின் தலைநகரமாக இருந்தது. கி.பி.
1151 இல் எழுதப்பட்ட இரண்டாம் இராசராசனின் கல்வெட்டில் “மிலாடான வேட்டைவலம்” என்று
அழைக்கப்பட்டது. பின்னாளில் சமீன்தார்களின் ஆட்சியில் சிங்கவரம், சிங்கநகர் என்றெல்லாம்
அழைக்கப்பட்டது. இத்தகு பெருமைக்குரிய ஊரில் பிறந்தவர் நம் பேராசிரியர் இல. தியாகராசன்
அவர்கள்.
இல. தியாகராசன் பிறந்த ஊரான வேட்டவலத்தில்
பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றவர். புகுமுக வகுப்பையும், இளங்கலை வகுப்பையும்(1975) திருவண்ணாமலையில்
பயின்றவர். முதுகலைப் படிப்பை (வரலாறு) வாணியம்பாடி
இசுலாமியாக் கல்லூரியில் பயின்றவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று “சுதந்திரப்
போராட்டத்தில் வடார்க்காடு மாவட்டத்தின் பங்கு” என்ற தலைப்பில் ஆய்வேடு பணித்து, இளம்
முனைவர் பட்டம் பெற்றவர்(1979). 1980 இல் தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையில்
கல்வெட்டு, தொல்லியல் முதுகலைப் பட்டப் பெருஞ்சான்றிதழ்ப் பயிற்சி பெற்றவர்(1980).
1981 இல் கல்வியியல் பட்டம் பெற்றவர். தமிழ்நாட்டு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையில்
வரலாற்றுக்கு முந்தைகால அகழாய்வாராய்ச்சிப் பிரிவின் அலுவலராகப் பணியாற்றியவர்.
1982 முதல் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறையில் பேராசிரியராகப் பணியில்
இணைந்தார். பின்னர்த் துறைத்தலைவர், கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர்-.
“அரியலூர் வட்டாரத்து வரலாற்றுத் தொல்லியல், கி.பி.1817 வரை - ஓர் ஆய்வு” என்ற தலைப்பில்
முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்து, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்
வழியாகப் பட்டம் பெற்றவர். 2014 இல் கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் தொடர்ந்து
வரலாற்று ஆய்வுகளை ஆர்வமுடன் செய்துவருபவர்.
முனைவர் இல. தியாகராசன்
கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வுசெய்து, வெளிவராத பல
வரலாற்றுச் செய்திகளை, உலகிற்கு அறிவித்துள்ளார். அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தின்
பல்வேறு ஊர்களில் உள்ள கல்வெட்டுகள், தொல்லியல், கோவிற்கலை சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு
இவர் ஆற்றியுள்ள பணிகளுக்கு வரலாற்றுத்துறையினர் மிகுந்த நன்றிக்கடன்பட்டுள்ளனர். தம்
கண்டுபிடிப்புகளைக் கட்டுரைகளாகவும், நூல்களாகவும், அறிக்கைகளாகவும் வெளியிட்டு மக்களுக்கு
உண்மைத் தன்மையை எடுத்துரைத்துள்ளார்.
முனைவர் இல. தியாகராசனும்
முனைவர் கோ. தங்கவேலுவும் இணைந்து எழுதிய சம்புவராயர் வரலாறு என்னும் நூல் வரலாற்றுத்துறை
அறிஞர்களின் பெரும் பாராட்டினைப் பெற்றுள்ளது.
முனைவர் இல. தியாகராசன்
திருவண்ணாமலை மாவட்டத்துக் கல்வெட்டுகள், கோவில்கள் குறித்து அரிய நூல்கள் பலவற்றை
எழுதிவைத்துள்ளார். இராசேந்திர சோழனின் அனைத்துக் கல்வெட்டுகளும் அடங்கிய நூலினையும்
உருவாக்கி வைத்துள்ளார். இவை யாவும் வெளிவரும்பொழுது தமிழகத்தின் வரலாறு துலக்கம் பெறும்.
இல. தியாகராசன்
தம் கல்லூரிப் பணிகளுக்கு இடையே, தம் மாணவர்கள் வரலாற்று ஆர்வலர்களுடன் களப்பணிக்குச்
சென்று பல்வேறு கல்வெட்டுகளை வெளிப்படுத்தியுள்ளார். தமக்குப் பிறகு கல்வெட்டுகளைப்
படியெடுக்கும் வகையில் பல மாணவர்களை உருவாக்கியுள்ளார். அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம்
பேருந்து நிலையத்துக்கு மேற்கில் உள்ள ஆவேரி என்னும் ஏரியில் இருந்த கல்வெட்டைக் கண்டுபிடித்து,
வெளியிட்டபொழுது இப்பகுதி மக்களும் மாணவர்களும் மகிழ்ந்தனர்.
செயங்கொண்டசோழபுரம்
என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் செயங்கொண்டமும் அதனைச் சார்ந்த பகுதிகளும் சோழர்
ஆட்சியில் முதன்மை வாய்ந்த ஊர்களாக இருந்தன. சோழநாட்டின்மீது படையெடுத்த பாண்டிய மன்னன்
மாறவர்மன் சுந்தரபாண்டியனின் படையினர் சோழ நாட்டின் ஊர்கள், ஏரிகள், வயல்கள் பலவற்றைச்
சிதைத்தனர். இதனால் மக்கள் குடிநீருக்குத் தவித்தனர். செயங்கொண்டம் அக்காலத்தில் வணிக
நகரமாக விளங்கியது. சாடவர்ம சுந்தரபாண்டியன் அரியணை ஏறியதும்(1251-1271). இவர் ஆட்சிக்காலத்தில்
1261 ஆம் ஆண்டு, பெரம்பலூரை அடுத்துள்ள நன்னை என்ற ஊரைச் சேர்ந்த திருவிக்கிரமன் என்பவர்
செயங்கொண்டத்தில் இந்த ஏரியை உருவாக்கினார் எனவும், ஜெயங்கொண்ட சோழ பேராவி என்பது இக்குளத்தின்
பெயர் எனவும், இப்பெயர் மருவி, ஆவேரி என்று மாறியது என்றும் முனைவர் இல. தியாகராசன்
கல்வெட்டின் துணையால் படித்துக்காட்டியபொழுது ஆய்வாளர்கள் மகிழ்ந்தனர். ஊரினர் வியந்தனர்.
ஆவேரி கல்வெட்டு:
“ஸ்வதிஸ்ஸ்ரீ கோச்சடபன்மர் திருபுவநச் சக்கரவர்த்திகள்
ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவற்க்கு யாண்டு ய-அவது வைய்காசி மாத முதல் செயங்கொண்ட சோழப் பேராவி அகவாயில் நன்னையுடையார்
திருவிக்கிரமற் வெட்டின தன்மக்குளத்தில் யிறைக்குதல்,
நீர்பாச்சுதல் செய்ய நினைத்தார் உண்டாகில் நகரத் துரோகி நம்மி லொருத்தரல்ல உ." என்று
உள்ளது.(அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், தொகுதி 1, பக்கம்177,178,179)
இவ்வாறு அரிய கல்வெட்டுகள்
பலவற்றை வெளிப்படுத்தியும் படித்தும், உலகுக்கு அறிவித்துவரும் உண்மை ஆய்வாளரான முனைவர்
இல. தியாகராசனின் தமிழ்ப்பணியும் வரலாற்றுப்பணியும் தொடர்வதாகுக.
முனைவர்
இல. தியாகராசனின் தமிழ்க்கொடைகளுள் சில:
1.
சோழகேரளன்
2.
கானக்கிளியூர் நாடு
3.
கடந்தையார் வரலாறு
4.
அரியலூர் ஜமீன்தார்களின் கல்வெட்டுகளும் செப்பேடுகளும்
5.
வந்தலை வரலாறு
6.
வாலிகண்டபுரம் அருள்மிகு வாலீசுவரர் திருக்கோயில் தலவரலாறு
7. பெண்ணாகடம் அருள்மிகு வீற்றிருந்த பெருமாள் திருக்கோயில்
வரலாறு
8.
நத்தம் ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில் தலவரலாறு
9.வெண்பாவூர் அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வரர்
திருக்கோயில் தல வரலாறு
10.கங்கைகொண்டசோழபுரம்
வரலாறு(புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து EFEO)
11.உடையவர் தீயனூர்
அருள்மிகு அமிர்தாம்பிக்கை உடனுறை ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு
12.விக்கிரமங்கலம்
அருள்மிகு பூரணசந்திரகலாம்பிகை உடனுறை சோழீசுவரர் திருக்கோயில் தல வரலாறு
13. மேலப்பழுவூர் அருள்மிகு
மீனாட்சியம்மன் உடனுறை சுந்தரேசுவரர் தலவரலாறு
14. காமரசவல்லி அருள்மிகு
பாலாம்பிகை உடனுறை சௌந்தரேஸ்வரர் கோயில் வரலாறு
15. கீழப்பழுவூர் அருள்மிகு
அருந்தவ நாயகி உடனுறை ஆலந்துறையார் கோயில்
16. கீழையூர் அருள்மிகு
அபிதகுஜாம்பாள் உடனுறை அகத்தீசுவரர்-சோழீசுவரர் கோயில்கள் வரலாறு
17. ஓலைப்பாடி அருள்மிகு
சௌந்தரநாயகி உடனுறை பசுபதீசுவரர் கோயில் வரலாறு
18.ஸ்ரீபுரந்தான் அருள்மிகு
பிரகன்நாயகி உடனுறை கைலாசநாதர் (பிரகதீஸ்வரர்) மற்றும் சிவபாதசேகர ஈசுவரர் (ஒட்டக்கோயில்)
திருக்கோயில்கள் வரலாறு
19. செந்துறை-நெய்வனம்
20.அருள்மிகு பிரகன்நாயகி
உடனுறை சிவதாண்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
21. சிறுகளப்பூர் அருள்மிகு
காமாட்சியம்மன் உடனுறை காளத்தீசுவரர் திருக்கோயில் வரலாறு
22. வேட்டவலம் வரலாறு
23. வேட்டவலம் ஜமீன்வரலாறு
24. உடையார்பாளையம்
ஜமீன் வரலாறு
25. ஆவூர் அகத்தீசுவரர்
குகை வரதராசபெருமாள் கோயில்கள் வரலாறு
26. கோவிந்தப்புத்தூர்
கங்காஜடாதீசுவரர் கோயில் வரலாறு
27. திருமழபாடி,கீழப்பழுவூர்,
பொம்மனப்பாடி கோயில்களின் தலவரலாறு
28. அரியலூர் மாவட்டக்
கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி-1, 2
29. அரியலூர் மாவட்ட
வரலாறு
30. அரியலூர் மாவட்டக்
கோயில்கள்
31. கல்வெட்டுக்கள்
கூறும் அரியலூர் மாவட்ட ஊர்ப்பெயர்கள்
32. அரியலூர் அருள்மிகு
கோதண்டராமசாமி திருக்கோயில் வரலாறு
33. பெரம்பலூர் மாவட்டக்
கல்வெட்டுக்கள், செப்பேடுகள்
34. கல்வெட்டுக்கள்
கூறும் பெரம்பலூர் மாவட்ட ஊர்ப்பெயர்கள்
35. பெரம்பலூர் மாவட்ட
வரலாறு
36. பெரம்பலூர் மாவட்டக்
கோயில்கள்
37. கங்கைகொண்டசோழபுரம்
கல்வெட்டுக்கள்...