நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 26 நவம்பர், 2016

நாள் மங்கல வாழ்த்து!



எங்கள் வாழ்க்கையில் இணைந்த தமிழுறவே!
தேயம் கடந்த தங்களின் வாழ்க்கை
நேயம் மலிந்ததை நினைத்துப் பார்க்கின்றோம்!
பற்பல ஆண்டுகள் பாரில் வாழினும்
நிற்கும் படியான நிலைத்த செயல்களைச்
சிற்சிலர் மட்டும் செய்து வைப்பர்;
அத்தகு மாந்தரின் அரும்பெரும் வரிசையில்
படிக்கும் மாணவர்க்குப் பல்திற உதவியை
நொடிக்கு நூறுமுறை செய்து உவந்தீர்!
காட்டிலும் கரம்பிலும் வாழ்ந்த உறவிற்கு
வீட்டினை அமைத்திட விரும்பி அளித்தீர்!
உறுப்புகள் இழந்தவர்க்கு ஓடோடி உதவி
பொறுப்பினைக் காட்டிப் புவியில் உயர்ந்தீர்!
அண்டையில் வாழ்வோர் அலமரல் உற்றால்
முண்டியடித்து முதலில் நீளும் உம்கை!
விழாக்கள், நிகழ்வுகள், விருந்துகள் என்றால்
அழையா விருந்தாய் அவர்க்கும் உதவுவீர்!
இல்லம் வந்திடும் விருந்தினர் தம்மை
அல்லும் பகலும் ஆரத் தழுவிக்
கொடுப்பன கொடுத்து, கொள்வன கொண்டு,
சான்றோர் போலப் போற்றல் நும்கடன்!
தமிழர் மொழியும் தகைசால் வாழ்வும்
நிமையம் தோறும் நிமிர்தல் பொருட்டே
இயற்றிய பணிகள் எண்ணில வாகும்!
தமிழ்மணம் நடத்தித் தமிழராய் நிலைத்தீர்!
குறள்நூல் பதித்து அறப்பணி செய்தீர்!
இப்படிப் பற்பல ஈடில் பணிகளைச்
செப்படி போலும் செய்த ஏந்தலே!
பிறந்த நாளில் திருவடி தொழுதோம்!
சிறந்த நாளில் சிறப்புகள் எய்துகவே!

 நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளுடன்

முனைவர் மு.இளங்கோவன்

26.11.2016

குறிப்பு: கனடாவில் வாழும் திரு. சிவபாதசுந்தரம் வேலுப்பிள்ளை அவர்களின்  பிறந்தநாள் நினைந்து பாடியது.

வியாழன், 24 நவம்பர், 2016

தனித்தமிழ் இலக்கிய ஆய்வரங்க நினைவுகள்…


முனைவர் வி. முத்து அவர்கள் சிறப்பிக்கப்படுதல்

இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழிக்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. இவற்றைச் சமற்கிருத வல்லாண்மை, இந்திமொழித் திணிப்பு, ஆங்கிலத் திணிப்பு, ஊடகப் பெருக்கத்தால் ஏற்பட்டுவரும் மொழிச்சிதைவு என்று பட்டியலிடலாம். இவ்வாறு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டாலும் தனித்தமிழ் இயக்கத்தாரின் எழுச்சி இவற்றை அடையாளம் கண்டு, தடுத்து நிறுத்துவதில் துணைசெய்துள்ளது.

மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் எழுத்தாலும், பேச்சாலும் மக்களிடம் தனித்தமிழ் என்ற சுடரை ஏற்றி வைத்துள்ளனர். இவர்களின் வழியில் வந்த அறிஞர்கள் தொடர்ந்து ஆய்வுகளாலும், உரைகளாலும் தமிழ் மலர்ச்சிக்குப் பாடுபட்டு வருகின்றனர். நூற்றாண்டைக் கடந்து இப்பணி தொடர்ந்து நடந்து வருகின்றது.

அயலகத்தில் இருக்கும் தமிழர்கள் தனித்தமிழ் இயக்கப் பணிகளை நினைவுகூர்ந்து, தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடினாலும் நம் நாட்டில் இருக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தமிழாய்வு நிறுவனங்களில் பணிபுரிவோர்க்குத் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு குறித்த விழிப்புணர்வோ, ஆர்வமோ இருப்பதாகத் தெரியவில்லை. பல்லாயிரக்கணக்கில் தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர். பல்வேறு தமிழ் வளர்க்கும் அமைப்பினர் உள்ளனர்ஆனால் அங்கொன்றும் இங்கொன்றும் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு நிகழ்வுகள் நடந்து வருகின்றனவே தவிர ஒட்டுமொத்தமான தமிழகத்திலும் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு குறித்த நிகழ்வுகள் நடைபெறாமை எம் போலும் இளையரைக் கவலைகொள்ளவே செய்கின்றது.

தவத்திரு மறைமலையடிகளார் தம் அனைத்துத் துறை ஆராய்ச்சியையும் தமிழ் நலம் நோக்கி அமைத்தமையை இங்குக் கவனத்தில்கொள்ள வேண்டும். மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் பல்துறை ஆய்வுகளைபணிகளைச் செய்தமையை இங்கு எண்ணிப்பார்த்தல் வேண்டும். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் படைப்பிலக்கியங்கள் வழியாக, குறிப்பாகப் பாட்டு இலக்கியங்கள் வழியாக ஒரு மிகப்பெரும் தமிழ் எழுச்சியைத் தமிழகத்தில் உண்டாக்கியமையை இங்கு நினைத்துப் பார்த்தல் வேண்டும். தமிழுக்கு இவர்களால் மிகப்பெரும் அடித்தளம் அமைக்கப்பட்டாலும் தனித்தமிழ் என்னும் காலத்தேவைக்குரிய மொழிக்காப்புப் பணிக்கு மக்கள் முன்வராமைக்குரிய காரணத்தைக் கண்டுணரவேண்டும். அரசு இந்த முயற்சியில் கவனம் செலுத்த வேண்டும்; அரசுசார் நிறுவனங்கள் பன்மடங்கு முன்வந்து பணியாற்ற வேண்டும். தமிழமைப்புகள் ஒன்றுதிரண்டு தனித்தமிழின் தேவை குறித்துப் பொதுமக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும். ஊடகத்தில் இதுகுறித்த உரையாடல்கள் நிகழ்த்தப்பெற வேண்டும் என்று கூறத் தோன்றுகின்றது.

பண்பாடு காக்கும் நம் திருவிழாக்களைக் கல்வி நிறுவனங்கள் கொண்டாட முன்வருதல் போல மொழிக்காப்பு முயற்சியையும் ஆர்வமுடன் கொண்டாட முன்வரவேண்டும். அப்பொழுதுதான் தமிழ்மொழியின் வளர்ச்சி ஏறுமுகத்தில் இருக்கும். இந்த நினைவுகளுடன் புதுவையில் தனித்தமிழ் இலக்கியங்களை மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தனித்தமிழ் குறித்த ஆய்வரங்கம் நடைபெற்றது. புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள் இந்த நிகழ்ச்சிக்குத் திரளாக வந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து அவர்கள் தலைமையேற்க, ஆணையர் திரு. . தியாகராசன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். பாவலர் மு. பாலசுப்பிரமணியன் முன்னிலையுரையாற்றவும், பேராசிரியர் இரா..குழந்தைவேலனார் வாழ்த்துரை வழங்கினார். பெருஞ்சித்திரனாரின் பாவியங்கள் என்ற தலைப்பில் மு.இளங்கோவன் உரையாற்றினார். பெருஞ்சித்திரனாரின் ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து என்ற மூன்று நூல்களையும் அறிமுகம் செய்வதாக இவர் உரை அமைந்தது.

முனைவர் நிர்மலா கிருட்டினமூர்த்தி அவர்களின் உரை பாவேந்தரின் பாவியங்கள் என்ற தலைப்பில் அமைந்து, கண்ணகி புரட்சிக்காப்பியம், மணிமேகலை வெண்பா என்னும் இருநூல்களை அறிமுகம் செய்வதாக இருந்தது.

மேற்குறித்த பாவியங்கள் குறித்த வினாக்களுக்கு விடைபகரும் நிகழ்வும் இடம்பெற்றது.


முனைவர் க. தமிழமல்லன் அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது

முனைவர் க. தமிழமல்லன் உரை

மு.இளங்கோவன் உரை

முனைவர் நிர்மலா கிருட்டினமூர்த்தி உரை

புதுவைத் தமிழறிஞர்கள்

பார்வையாளர்கள்

திங்கள், 21 நவம்பர், 2016

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஆய்வரங்கம்!



தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவையொட்டிப் புதுச்சேரியில் தனித்தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆய்வரங்கில் அறிஞர்கள் ஆய்வுரை வழங்குகின்றனர். புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் அதன் தலைவர் வி. முத்து அவர்களின் தலைமையில் நடைபெறும் ஆய்வரங்கில் புதுச்சேரி மாநிலத்தின் சட்டப்பேரவைத் துணைத்தலைவர் திரு. வி. பி. சிவக்கொழுந்து அவர்களும் பொறியாளர் மு. பாலசுப்பிரமணியன் அவர்களும் முன்னிலை வகிக்கின்றனர். ஆணையர் திரு. த. தியாகராசன் அவர்கள் வரவேற்புரையாற்ற உள்ளார்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் பெருஞ்சித்திரனாரின் பாவியங்கள் என்ற தலைப்பிலும், முனைவர் நிர்மலா கிருட்டினமூர்த்தி அவர்கள் பாவேந்தரின் பாவியங்கள் என்ற தலைப்பிலும் ஆய்வுரை வழங்க உள்ளனர்.

முனைவர் க. தமிழமல்லன் நன்றியுரை வழங்க உள்ளார்.

நாள்: 22.11.2016 செவ்வாய்க் கிழமை, நேரம்: மாலை 6.30 மணி
இடம்: புதுவைத் தமிழ்ச் சங்கம், வேங்கட நகர், புதுச்சேரி-605 011

ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்!


தொடர்புக்கு: 0091 97916 29979

வியாழன், 10 நவம்பர், 2016

உழைப்பில் மலர்ந்த இசைக்கலைஞர் சமர்ப்பா குமரன்…

சமர்ப்பா குமரன்

அண்ணனுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுதுஉழைப்பின் ஒலிதான் இசைஎன்று கூறி, மனிதசாரம் நூலை எடுத்து, சார்ச்சு தாம்சனின் அந்த வரிகளைக் காட்டியபொழுது மகிழ்ச்சியடைந்தேன். அந்த நூலில் என் பெயர் எழுதித் தம் ஓவியக் கையெழுத்தால் அழகுபடுத்தி  வழங்கினார். அவர் நினைவாக அந்த நூலைப் பாதுகாப்பதுடன் அந்த வரிகளையும் அவ்வப்பொழுது நினைத்துப் பார்க்கும் வாய்ப்புகள் அமையும். நடவுப்பெண்களின் உழைப்பில் வெளிவரும் பாடல்களைச் சுவைக்கும்பொழுதும், கட்டுமரம் செலுத்துவோர் பாடும் இசையைச் செவிமடுக்கும்பொழுதும், உலக்கை இடிப்போர் விடும் மூச்சுக்காற்றை அருகிருந்து கேட்கும்பொழுதும் அந்த வரிகளின் பொருத்தப்பாட்டை நினைத்து நினைத்து மகிழ்வதுண்டு. எனக்கு நாட்டுப்புற இசையில் ஈடுபாடு வந்ததற்கு அண்ணனின் ஊக்கமொழிகள் முதல் காரணமாகும்.

பாவேந்தர் பாரதிதாசனின் பாட்டு வரிகளை உணர்வுபொங்க யாரேனும் மேற்கோள் காட்டிப் பேசினாலும், இசையமைத்துப் பாடினாலும் அதில் வெடித்துக்கிளம்பும் உணர்ச்சிகளைக் கண்டு வியந்து நிற்பேன். பாவேந்தர் வரிகளைத் தேனிசை செல்லப்பா ஐயாவின் குரலில் கேட்கும்பொழுது அந்தப் பாடல் மேலும் உயிர்பெறுவதை எத்தனையோ முறை உணர்ந்திருக்கின்றேன்.. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடல்களைச் சித்தன் செயமூர்த்தியின் குரலில் கேட்க, மலைத்து நிற்பேன்.

“கனியிடை ஏறிய சுளையும்” என்ற பாவேந்தரின் வரிகளைப் பனப்பாக்கம் நற்றேவன் ஐயா, நெறிமுடியார் என்ற இசையறிஞர் குரலில் பாடச் செய்து தந்த ஒலிவட்டைக் கேட்டு அந்தத் தமிழிசையில் கரைந்துபோன பட்டறிவு எனக்கு உண்டு.

“கனியிடை ஏறிய சுளையும்” என்ற அதே பாவேந்தர் பாடலை அண்மையில் இணையத்தில் ஒளிக்காட்சியாகப் பார்க்கும் பேறு எனக்கு வாய்த்தது. அந்தப் பாடலைப் பாடிய கலைஞரின் பெயர் யாது? என எனக்குத் தெரிந்த அன்பர்களை வினவிப் பார்த்தேன். ஒருவருக்கும் தெரியவில்லை. அண்மையில் சத்தியமங்கலம் சென்று திரும்பும் வழியில் அண்ணன் தேவா பிறந்த ஊரைப் பார்த்துவருவோம் என்று கோபிப்பாளையம் சென்றேன். அங்கு என்னை வரவேற்ற நல்லாசிரியர் அரசு தாமசு அவர்கள் தம் தந்தையாரின் தமிழ்ப்பணிகளை நினைவூட்டி, அப்பாவின் நினைவுநாள் விரைந்து வர உள்ளது என்ற குறிப்பைச் சொன்னார்கள். அந்த நாளில் தமிழ் உணர்வாளர்கள் ஒன்றுகூட உள்ளதையும் திரு. தாமசு அவர்கள் தெரிவித்தார்கள். அவர்கள் சொன்னவாறு விழாவும் நடந்து முடிந்தது. விழாவில் எடுக்கப்பெற்ற படங்களை எனக்கு அனுப்பியபொழுது அந்தப் படத்தில் நான் பலநாள் தேடிக்கொண்டிருந்த, “கனியிடை ஏறிய சுளையும்” என்ற பாடலால் என் உள்ளத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த இசைக்கலைஞரின் உருவம் தெரிந்தது. உடனடியாகத் திரு. தாமசு அவர்களுடன் தொடர்புகொண்டு படத்தில் உள்ள கலைஞரின் பெயர், முகவரி, தொடர்புஎண் பெற்றேன். உடன் அந்தப் பாடகரைத் தொடர்புகொண்டு, அவரைப் பற்றியும், அவரின் பணிகளைப் பற்றியும் செல்பேசியில் தெரிந்துகொண்டேன். உழைப்பில் மலர்ந்த, வியர்வையில் நனைந்த அந்தக் கலைஞரின் வாழ்வை அறிந்து அதிர்ந்துபோனேன்.

ஆம்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள மேட்டுக்கடை என்ற ஊரில் வாழ்ந்துவரும் குமரன் என்னும் இசைக்கலைஞர்தான் என்னை இசைவலைவீசிப் பிடித்தவர். 07.07.1965 இல் திருவாளர்கள் நாச்சிமுத்து, அலமேலு அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்த இவரின் இயற்பெயர் குமரேசன். குமரன் என்று இப்பொழுது அழைக்கப்படுகின்றார். நான்காம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபொழுது அம்மா இயற்கை எய்தினார் அத்துடன் படிப்பு நின்றது; மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தும், சவுளிக் கடையில் வேலைகள் பார்த்தும் இவரின் இளமைப் பொழுது கழிந்தது. அதனை அடுத்து தறித்தொழிலில் நுழைந்து தறி ஓட்டுதல், தறி கண்காணிப்பு, தறி வாடகைக்கு எடுத்து ஓட்டுதல் என அனைத்து வேலைகளையும் கற்று, அதில் உழன்றவர்.

இளம் அகவையில் உழைப்புடன் போராட்டக் குணமும் உடன் தொற்றிக்கொண்டது. குழந்தைத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்குக் குரல்கொடுத்து ஒன்றே முக்காலாக இருந்த ஊதியத்தை இரண்டு உருவாவுக்குக் கொண்டுவந்தவர். பொதுவுடைமை இயக்க ஈடுபாடு கொண்டவர். பலவாண்டுகள் அக்கட்சிப் பணிகளில் இருந்தவர். 1996 முதல் 2002 வரை சுமைதூக்கும் தொழிலாளியாக வாழ்ந்து பார்த்தவர். சுமை நிறைந்த மூட்டைகளைத் தூக்கியதால் உடல் மூட்டுகள் தேய்ந்தன.  சுமை தூக்கும் தொழிலிலிருந்து மெல்ல விடுபட்டு, பாடல்கள் பாடத் தொடங்கினார். இவர்தம் பாடல்கள் பொதுவுடைமை இயக்கத் தோழர்கள், தமிழ் உணர்வாளர்கள் நடுவே வரவேற்பைப் பெற்றன.

1995 இல் திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு மக்கட் செல்வங்கள் உள்ளனர்

பாவேந்தர் பாரதிதாசன்,  பெருஞ்சித்திரனார், காசி ஆனந்தன் ஆகியோரின் பாடல்களை உணர்வுபொங்கப் பாடும் இவர் தாமே பாட்டினைப் புனைந்து பாடும் ஆற்றலும் பெற்றவர். தம் இசைக்குழுவுக்குச் சமர்ப்பா இசைக்குழு என்று பெயர் அமைத்தவர். தமிழ் அமைப்புகளின் அழைப்பினை ஏற்று, மேடைகளில் பாடி வருபவர். போக்குவரவுக்கும், வழிச்செலவுக்குமாகக் கிடைக்கும் சிறு தொகையில்தான் இந்த மக்கள் பாடகர் வாழ்க்கை நடத்தி வருகின்றார்.

“கனியிடை ஏறிய சுளையும்” பாடலை இவர் குரலில் கேட்ட பிறகு கனியின் சுளையிலும், கரும்பின் சாற்றிலும், பனிமலர் ஏறிய தேனிலும், காய்ச்சும் பாகிலும் மட்டும் இனிமை இல்லை; சமர்ப்பா குமரன் குரலிலும் இனிமை இருக்கின்றது என்ற முடிவுக்கு வரலாம்.

கோடம்பாக்கத்தை அறிந்துவைத்துள்ள உலகத் தமிழர்கள் இந்தக் குமாரபாளையத்துத் தமிழ்த் தோழரைப் போற்றுவது கடமை!

சமர்ப்பா குமரனின் தேனினும் இனிய குரலில் கனியிடை ஏறிய சுளையும் பாடலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

தொடர்புக்கு: 9976334334



சனி, 5 நவம்பர், 2016

சென்னையில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஆய்வரங்கம்




தனித்தமிழ் இயக்கத்திற்கு அறிஞர்களின் பங்களிப்பு என்னும் தலைப்பில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஆய்வரங்கம் சென்னை, நீலாங்கரையில் 06.11.2016 (ஞாயிறு) காலை 10 மணிமுதல் மாலை வரை நடைபெறுகின்றது. 

திரு. இ. பி. கனகசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கவும், பாவலர் இரா. தேவதாசு அவர்கள் முன்னிலையுரையாற்றவும் பாவலர் செவ்வியன் அவர்கள் வரவேற்புரையாற்றவும் உள்ளனர்.  

காலை 10 மணிக்கு அமையும் முதல் அமர்வில் மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கப் பங்களிப்பு என்னும் தலைப்பில் முனைவர் க. தமிழமல்லன் அவர்களும், நீலாம்பிகையாரின் தனித்தமிழ் இயக்கப் பங்களிப்பு என்னும் தலைப்பில் முனைவர் மறை. திரு. தாயுமானவன் அவர்களும் உரையாற்ற உள்ளனர்.

பிற்பகல் 3 மணிக்கு அமையும் இரண்டாம் அமர்வில் தேவநேயப் பாவாணரின் தனித்தமிழ் இயக்கப் பங்களிப்பு என்னும் தலைப்பில் முனைவர் மு.இளங்கோவன் அவர்களும் தமிழ் மறவர் பொன்னம்பலனாரின் தனித்தமிழ் இயக்கப் பங்களிப்பு என்னும் தலைப்பில் முனைவர் பொற்கோ அவர்களும் உரையாற்ற உள்ளனர்.

தமிழ் ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

இடம்: அறிஞர் செவ்வியன் இல்லம், 311, 5 ஆம் தெற்குக் குறுக்குத் தெரு, கபாலீசுவரர் நகர், நீலாங்கரை, சென்னை- 600115

நிறுத்தம்: நீலாங்கரை காவல் நிலையம் நிறுத்தம் எதிரில்.


தொடர்புக்கு: 99624 61632 / 97916 29979