நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 26 அக்டோபர், 2016

தமிழால் போற்றப்பட்ட என் வாழ்க்கை!...


பாவலரேறு பெருஞ்சித்திரனார் மு.இளங்கோவனுக்குத் தங்கப்பதக்கம் சூட்டியும், சான்றிதழ் வழங்கியும் வாழ்த்தும் பொழுது(15.10.1989), 
இடம்: செயங்கொண்டம்(அரியலூர் மாவட்டம்)

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை மாணவனாக நான் பயின்றுகொண்டிருந்தபொழுது (1989), அருகில் உள்ள ஊரான செயங்கொண்டத்தில் அமைந்திருந்த தமிழோசை நற்பணி மன்றத்தின் சார்பில் ஓர் ஆய்வுக்கட்டுரைப் போட்டி மாநில அளவில் நடைபெறுவதாகவும், அதில் கலந்துகொள்பவர்களுள் முதல்பரிசுக்குரிய கட்டுரை வரைவோருக்குத் தங்கப்பதக்கம் சூட்டப்பெறும் எனவும் ஓர் அறிவிப்பு ஓலை எங்கள் கல்லூரி அறிக்கைப் பலகையில் ஒட்டியிருந்தது. பேராசிரியர்கள் அந்த அறிவிப்பினைச் சுட்டிக்காட்டிப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு ஊக்கப்படுத்தினார்கள். தாய்மொழிவழிக் கல்வி என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வரைய வேண்டும் எனவும் அறுபது பக்கங்கள் கட்டுரை இருக்க வேண்டும் எனவும் போட்டி நெறிமுறைகளை வகுத்திருந்தனர்.

ஆர்வமுடன் பல நூல்களைப் படித்தும், பேராசிரியர்களுடன் உரையாடியும் கட்டுரையை ஒருவாறு உருவம்கொடுத்து உருவாக்கி அனுப்பியிருந்தேன். பாவாணர் நூல்களையும், பெருஞ்சித்திரனார் நூல்களையும் நான் பத்தாம் வகுப்பு மாணவனாக இருந்தபொழுதே என் மாமனார் பேராசிரியர் கு. அரசேந்திரன் அவர்கள் எனக்கு அறிமுகம் செய்திருந்த கரணியத்தால் ஒரு தமிழாசிரியருக்கு உரிய தமிழ்த்தெளிவும், எழுத்துப் பயிற்சியும், தனித்தமிழ் நடையும் கைவரப் பெற்றிருந்தேன். கட்டுரை அனுப்பிய சிலநாள் கழித்துப், போட்டிக்கு வந்திருந்த கட்டுரைகளை அறிஞர்கள் மதிப்பிட்டு, என் கட்டுரை முதல்பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் 15. 10. 1989 அன்று நடைபெறும் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு பரிசினைப் பெற்றுக்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்திருந்தனர்.

செயங்கொண்டத்தில் தமிழுணர்வுடன் இயங்கிய திரு. மருத மு. நாவளவன், திரு. குமணன் உள்ளிட்ட தோழர்களின் முயற்சியால் விழா மிகச் சிறப்பாக நடந்தது. பரிசளிப்பு விழாவுக்கு மூத்த தமிழறிஞரும் மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் தலைமாணாக்கரும், தென்மொழி, தமிழ்ச்சிட்டு ஏடுகளின் ஆசிரியருமான பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் வந்திருந்தார். ‘ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழ விளங்கி…” எனத் தொடங்கும் தண்டியலங்கார எடுத்துக்காட்டுப் பாடலை நினைவுகூர்ந்து, தமிழின் சிறப்பினை எடுத்துரைத்து ஐயா அவர்கள் அரியதோர் உரை நிகழ்த்தினார்கள். சின்னஞ்சிறு மாணவர்களான எங்களுக்கு அந்த உரை உள்ளத்தில் மொழி, இன, நாட்டு உணர்வினை ஊட்டியது.

தமிழோசை நற்பணி மன்றத்து நிகழ்ச்சியின் நிறைவில் முதல்பரிசு பெற்ற எனக்குத் தமிழின் தலைமகனான பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயாவின் திருக் கையால் தங்கப் பதக்கம் சூட்டப்பெற்றது. என் தமிழார்வம் தழைத்து வளர இந்த நிகழ்வு ஓர் அடிப்படைக் காரணமாக அமைந்தது. கடந்த இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற விழாவில் எடுக்கப்பெற்ற அந்தப் படம் இன்று என் பேழைகளை ஒழுங்குசெய்தபொழுது கிடைத்தது. என் பணிகளை ஊக்கப்படுத்தி மகிழ்வூட்டும் நல் உள்ளங்களின் பார்வைக்கு இந்தப் படத்தை வைப்பதில் மகிழ்கின்றேன். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் திருமுன்னர் தலைவணங்கித் தங்கப் பதக்கம் சூடிக்கொள்வதை விடவும் வாழ்வில் வேறு என்ன உயர்வு இருக்கமுடியும்?
பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் ஒப்பம் தாங்கிய சான்றிதழ்

செவ்வாய், 25 அக்டோபர், 2016

“தாய்மைப் பண்பினை உயிர்களுக்கு வேர் என்போம்!” – மதுரை இராம. விசுவநாதனின் பொருள்பொதிந்த வாழ்க்கை நூலுக்குரிய அணிந்துரை




தமிழ்த் தொண்டர் துரை இராம. விசுவநாதன் ஐயா அவர்களை என் மாணவப் பருவத்திலிருந்து அறிவேன். இவர் காரைக்குடியில் வ.சுப. மாணிக்கனார், பேராசிரியர் இரா. சாரங்கபாணியார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களிடம் தமிழ் கற்ற பெருமைக்குரியவர். இயல்பிலேயே தமிழ்ப்பற்றும், நெறிநூல் பயிற்சியும் கொண்டவர். கடும் உழைப்பால் உயர்ந்து முன்னேறியவர். தம் தொழிலிலும், வாழ்விலும் தமிழைச் செழுமையாகப் பயன்படுத்தும் செவ்விய ஒழங்குடையவர். நாளும் பழகும் நண்பர்களாக இருந்தாலும் தமிழுடன் பிறமொழியைக் கலந்துபேசினால் பெருஞ்சீற்றம் கொள்வார். ஆண்டுதோறும் வ.சுப. மாணிக்கனார் நினைவாக ஏழிளந்தமிழ் உள்ளிட்ட நெறிநூல்களில் போட்டிவைத்து, நன் மாணாக்கரை உருவாக்குவதைத் தொண்டாக நினைந்து வாழ்ந்துவருபவர்.

மதுரை இராம. விசுவநாதனார் அவர்கள் கங்கை காவேரி வாணிகத் தொடர்பு என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதை அறிந்தபொழுது, இப்பெயரைக் கொண்டு இவரின் நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் வியந்தேன். நெல்லையில் நடைபெற்ற தனித்தமிழ் இலக்கியக் கழக ஆண்டு விழாவில் நம் ஐயா விசுவநாதனார் ஒருமுறை எனக்கு தங்கப்பதக்கம் சூட்டியமை(1994) என் வாழ்வில் நினைக்கத் தகுந்த பொழுதாகும். அன்று முதல் ஐயாவுடன் நல்ல தொடர்பில் இருந்து வருகின்றேன். ஐயாவின் அழைப்பில் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் உரையாற்றும் வாய்ப்பையும் பெற்றுள்ளேன்.

தமிழ்ப்பற்றும், நெறியார்ந்த வாழ்க்கையும் கொண்ட இப்பெருமகனார் தம் பட்டறிவுப் பயனாகப்பொருள் பொதிந்த வாழ்க்கைஎன்னும் பெயரில் இதுவரை 34 தொகுதகளை வழங்கியுள்ளார். இத்தொகுதிகள் மணிவாசகர் பதிப்பகம் வழியாக வந்து, மக்களைச் சென்றடைந்துள்ளது.

அண்மையில் முப்பத்தைந்தாம் தொகுதியை அவர்களின் அரிய கையெழுத்தில் எனக்கு அனுப்பியிருந்தார்கள். வழக்கம்போல் எனக்கிருந்த பல்வேறு பணிகளுக்கு இடையில் அவற்றைப் படிப்பதில் காலம் தாழ்ந்தது. ஒரு மழைப்பொழுதில் எடுத்து அந்தக் கையெழுத்துப் படியைப் படித்தபொழுது, அரிய வாழ்வியல் உண்மைகள் தெறித்துக் கிடப்பதை இனங்காண முடிந்தது.  

அகவலோசையில் அசைந்தோடும் இக்கவிதையாறு இயற்கை, தமிழ், இனிய வாழ்க்கை, உழைப்பின் உயர்வு, ஊக்கத்தின் சிறப்பு,  கடவுள் அன்பு, காதல், மழைநீர், காற்று, தோழமை, கவின்மிகு நட்பு எனப் பல பொருண்மைகளில் அமைந்துள்ளது.

அறிவின் நேயம், மனித நேயம்
நேயம் உடையார் நியாயம் தவறார்
வெளி உடம்பின் அழகு தேயும்
உள் உடம்பின் அழகு வளரும்
உள்ளத்தில் கள்ளம் இல்லையென்றால்
எல்லோரும் இன்புற்று வாழ்வர்

என்று இந்நூலில் இடம்பெற்றுள்ள வரிகளைக் கற்றபொழுது திருவள்ளுவமும், திரு.வி..வின் முருகு குறித்த கட்டுரையும் என் மனத்திரையில் தோன்றி மறைந்தன. ‘மனத்தின்கண் மாசற்ற வாழ்க்கையையே அறவாழ்க்கைஎன்று ஆசான் திருவள்ளுவன் சொன்னதை நம் இராம. விசுவநாதனார் இந்த நூலின் பல இடங்களில் நயம்பட உரைத்துள்ளார். திருக்குறள், புறநானூறு, தாயுமானவர், வள்ளலார் நூல்களின் வரிகள் இந்தப்பொருள்பொதிந்த வாழ்க்கைநூலில் தெளிசாறாக உள்ளன.

இளவயது உடம்பு உயர் கோபுரமாகும்
கிழவயதில் குருவிக் கூடாகி உருக்குலையும்

என்று முதுமை நிலையைக் கண்முன் கொண்டுவருவது இவரின் பட்டறிவாகும்.

மாந்தர்களைப் போல் உலகில் வாழும் பிற உயிர்களும் நெறியுடன் வாழ்கின்றன என்ற இயற்கை உண்மையை உணர்ந்த இராம. விசுவநாதனார் காக்கை, குருவிகளின் கவினார்ந்த வாழ்க்கையை வியக்கின்றார். ஆரவார உலகில் அல்லலுற்று அலையும் மாந்தர்களுக்குப் பின்வருமாறு இயற்கை வாழ்க்கையைக் காட்டுகின்றார்.

காக்கை குருவி
பறப்பதைப் பாரீர்!
பதற்ற மின்றிப் பார்ப்பீர்!
பக்குவம் பெறுவீர்!
பறப்பதைத் தொழிலாகக் கொண்ட பறவைகள்
எங்கெங்கோ பறக்கின்றன.
எவ்விடத்திலும் இளைப்பாறும்.
கிளைகளில் கூடுகள்;
முட்டையிடப் பொந்துகள்;
பொரிக்கும் குஞ்சுகளைக்
கொஞ்சுவது சில நாட்களே!
பறவைகள் குஞ்சுகளுக்கு
இரையூட்டும் காட்சி,
பெற்ற தாய் மகவுக்குப் பாலூட்டும் காட்சியே!
தாய்மைப் பண்பினை,
உயிர்களுக்கு வேர் என்போம்

என்று முடிக்கும் இவரின்  உயிர் நேயம் இந்த வரிகளால் புலப்படுகின்றது.

இயற்கையையும் வாழ்க்கையையும் மட்டும் இராம. விசுவநாதனார் பாடவில்லை. காவிரி நீரின் உரிமை, பாலாற்றின் உரிமை, திருப்பதியின் உரிமை, தேவிகுளம், பீர்மேட்டு உரிமை என்று தமிழர்களின் இழந்த உரிமைகளையும் இந்தப் பாட்டுப் பனுவலில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் வாழ்க்கை வாழ்ந்து, நிறைபுலமை பெற்ற திரு. இராம. விசுவநாதனாரின் தமிழ் உணர்வு இளைஞர்கள் பெற வேண்டிய உணர்வாகும். அவர்தம் வாழ்க்கைப் பாடம் நாம் படிப்பதற்கு மட்டுமன்று. பின்பற்றுவதற்கும் உரியது. இராம. விசுவநாதனார் பல்லாண்டு வாழ்ந்து பைந்தமிழுக்கு இன்னும் நிறைந்த நூல்களை வழங்க வேண்டுகின்றேன்.

பணிவுடன் / மு.இளங்கோவன் / 22.11.2015

நூல்: பொருள் பொதிந்த வாழ்க்கை
வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
விலை: 40 - 00 உருவா

புதன், 19 அக்டோபர், 2016

விபுலாநந்த அடிகளாரின் “வெள்ளைநிற மல்லிகையோ” இசைப்பாடல் உருவாக்கம்(காணொளி)…



தவத்திரு விபுலாநந்த அடிகளாரின் வாழ்வியலை ஆவணப் படமாக்கும் பணியில் கடந்த ஆறு திங்களாக உழைத்துவருவதை நெருங்கிய நண்பர்கள் பலரும் அறிவார்கள். பல்லாயிரம் கல் சுற்றுச்செலவு, பல நூல்களில் மூழ்கியமை, பல கையெழுத்துப்படிகளைக் கண்டுபிடித்தமை, பல நூறுபேரை நேர்காணல் செய்தமை, பல நூறு அறிஞர்களிடம் கருத்துரை பெற்றமை, துறவியர்கள் பலரின் நெறிகாட்டலைப் பெற்றமை, தவத்திரு அடிகளாரின் உறவினர்களைக் கண்டு உரையாடியமை, அடிகளார் திருவடி பதிந்த இடங்களைப் பார்வையிட்டமை என இதுவரை நடந்துள்ள பணிகள் எண்ணற்றனவாம்.

தவத்திரு விபுலாநந்த அடிகளார் இயற்றிய “வெள்ளைநிற மல்லிகையோ” எனத் தொடங்கும் பாடலை இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இசையார்வலர்களின் வாய்மொழியில் கேட்டுள்ளேன். இப்பாடல் பரவுவதற்குப் பலர் தொண்டுபுரிந்துள்ளனர்; ஆனாலும் இந்தப் பாடல் போதிய அளவு பரவலாக்கம் பெறாமல் உள்ளதை உணர்ந்தேன். எனவே உலகத் தமிழர்கள் நடத்தும் பெருவிழாக்களில் பாடியும், ஆடியும் மகிழத்தக்க வகையில் இந்தப் பாடல் பரவும்வகை செய்தல் வேண்டும் என்று எண்ணி, எங்களின் ஆவணப்படத்திற்காக இந்தப் பாடலைத் தக்க இசைக்கலைஞர்கள் வழியாகப் பாடச்செய்து, ஒலிப்பதிவு செய்ய நினைத்தேன்.

“வெள்ளைநிற மல்லிகையோ” பாடலுக்கான காட்சியமைப்புகளை இலங்கையில் படம்பிடித்தோம். தமிழகத்திலும் நாட்டியக் கலைஞர்களின் துணையுடன் இப்பாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் எங்களின் ஆவணப்படத்தில் இப்பாடல் உரிய வடிவில் வெளிவருவதற்கு முன்பாக, இதில் ஈடுபாட்டுடன் உழைத்துப் பாடலுக்கு இசையுயிர் ஊட்டிய இசைக்கலைஞர்களின் உழைப்பினை அனைவரும் அறிவதற்குப் பாடல் பதிவுக் காட்சியை முதலில் வெளிப்படுத்த நினைத்தோம். அவ்வகையில் பதிவுசெய்யப்பெற்ற காட்சியை உலகத் தமிழர்களின் பார்வைக்கு முதலில் வைக்கின்றோம்.

பாடலைப் பாடுவதற்குரிய முதல் கலந்துரையாடலில் இசையறிஞர் பி. கோவிந்தராசனார் (அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர்) கலைமாமணி இராஜமாணிக்கம், இரஞ்சனி இராஜமாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டு அரிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். மிகச் சிறந்த இசைக்கலைஞராக வளர்ந்துவரும் புல்லாங்குழல் வல்லுநர் தம்பி இராஜ்குமார் இராஜமாணிக்கம் “வெள்ளைநிற மல்லிகையோ” என்ற பாடலை இசையமைத்துப் பாடி உதவினார். அவருக்கு உதவியாக ‘இசைஞானமணி’ திருமுடி சே. அருண், கலைமாமணி அழகு. இராமசாமி, ப. பிரபாகரன் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் கருவியிசை கூட்டி எங்களுக்கு உதவினர். ரெட்மீடியா கலைக்கூடத்தினர் சிறப்பாகப் பதிவு செய்து எங்களுக்கு வழங்கினர்.

விபுலாநந்தரின் தமிழ்ப்பணிகளையும், வாழ்வியலையும் பதிவுசெய்வதற்கு அருந்துணையாக வாய்த்த திரு. சிவம் வேலுப்பிள்ளை (கனடா), திரு. காசுபதி நடராசா(இலங்கை) உள்ளிட்ட அன்பர்களுக்கும் கனடா, இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, குவைத்து உள்ளிட்ட நாடுகளில் இயங்கிவரும் பல்வேறு தமிழமைப்பினருக்கும், அறிஞர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம். “இசைத்தமிழின் இலங்கைமுகம்” என்ற தலைப்பில் தவத்திரு விபுலாநந்தரின் வாழ்வியலை விளக்கும் கட்டுரையை வெளியிட்டு உதவிய தி இந்து(தமிழ்) நாளிதழுக்கு எங்களின் மனம் நிறைந்த நன்றி உரியதாகும்.

தவத்திரு விபுலாநந்த அடிகளாரின் பாடலை வரவேற்று, எங்கள் முயற்சிக்கு வாழ்த்துரைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பாடலை உலகத் தமிழர்களின் காதுகளுக்கும் கண்களுக்கும் பெருவிருந்தாக வழங்குவதில் நெஞ்சம் நிறைவடைகின்றோம்.

காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்


தொடர்புக்கு: muelangovan@gmail.com

செவ்வாய், 18 அக்டோபர், 2016

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் இணையத் தமிழ் அறிமுகம்

பயிற்சியில் கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினர்


சத்தியமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனமான பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் இணையத்தமிழ் குறித்த பயிலரங்கம்17.10.2016 அன்று நடைபெற்றது. முத்தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற பயிலரங்கில் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் என அறுபதிற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்வமுடன் பயிற்சி பெற்றனர். முத்தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர் பேராசிரியர் மாலதி மகாலிங்கம் அவர்கள் வரவேற்று, நிகழ்ச்சி குறித்த நோக்கத்தினை எடுத்துரைத்தார். முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு, காலை அமர்விலும், பிற்பகல் அமர்விலுமாகச் சற்றொப்ப மூன்றரைமணி நேரம் தமிழ் இணைய வளர்ச்சி குறித்த செய்திகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்து அனைவரும் வலைப்பதிவில் எழுத வரும்படி வேண்டுகோள் விடுத்தார். தங்கள் துறைசார்ந்த செய்திகளை வலைப்பதிவில் பதிந்து வைக்கவேண்டியதன் தேவையை வலியுறுத்தியவுடன், பொறியியல் பயிலும் பல மாணவர்கள் தமிழில் வலைப்பதிவு செய்வதை அறிந்துகொண்டு, தங்கள் படைப்புகளை வலைப்பதிவில் பதிவுசெய்தனர்.

இணையத்தமிழ்ப் பயிலரங்கத்திற்கான ஏற்பாடுகளை செல்வி. யோக நந்தினி, செல்வன். தருண்குமார் உள்ளிட்ட முத்தமிழ் மன்றத்தின் மாணவப் பொறியாளர்கள் செய்திருந்தனர்.

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி கல்விக்கும் கட்டுப்பாட்டிற்கும் பெயர்பெற்ற கல்லூரியாகும்.  மிகச்சிறந்த கட்டடங்களும்,  ஆய்வுக்கூடங்களும்,  நூலகமும்விடுதிகளும், ஆசிரியர் குடியிருப்புகளும்,  தோட்டங்களும்,  சாலை வசதிகளும் கொண்டு சிறப்புடன் விளங்குகின்றது. சற்றொப்ப ஏழாயிரம் மாணவர்கள் கல்வி பயில்வதாக அறிந்தேன். ஒவ்வொரு ஆண்டும் இக்கல்லூரியில் மாணவர்கள் ஏற்பாடு செய்யும் பொங்கல் விழா குறிப்பிடத்தக்க ஒருநிகழ்வாக  நடைபெறுகின்றது.  பொறியியல் கல்லூரியில் தமிழ்ப்பற்றுடன் மாணவர்கள் விளங்கி, முத்தமிழ் மன்றத்தைச் சிறப்பாக நடத்துவதும் பொங்கல் விழாவை அனைவரும் உணர்வுபூர்வமாகப் பங்கேற்கும் விழாவாக மாற்றியிருப்பதும் பாராட்டிற்கு உரியனவாகும். இத்தகு பெருமைக்குரிய கல்வி நிறுவனத்தைச் சிறப்பாக நிர்வகித்து,  மாணவர்களின் கல்விக்கண் திறக்கும் கல்லூரியின் தலைவர் திரு.எஸ்.வி. பாலசுப்பிரமணியம் ஐயா நம் வணக்கத்திற்கும் பாராட்டிற்கும் உரியவர் ஆவார்கள்.
பார்வையாளர்(ஒருபகுதியினர்)

மு.இ. பயிற்சி


தொடக்க விழாவில்...

செவ்வாய், 11 அக்டோபர், 2016

இயற்கை மருத்துவர் மதுரம் சேகர்

மருத்துவர் மதுரம் சேகர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரிக்குச் செல்வது இது முதல்முறை என்பதால் நண்பர்களிடம் வழி வினவிக்கொண்டு, நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முதல்நாள் சென்று சேர்வதற்குத் திட்டமிட்டிருந்தேன். காலையில் புதுவையில் புறப்பட்ட நான் பகலுணவுக்குத் திருவண்ணாமலை சென்று சேர்ந்தேன். உணவகத்தில் பகலுணவு முடித்து, அங்கிருந்து பேருந்தேறி மாலையில் திருப்பத்தூர் சென்று சேர்ந்தேன். அருகில் உள்ள நாட்டறம்பள்ளியில் ஆய்வுத்தொடர்பாக ஒரு வேலை இருந்தது. அந்த வேலையை ஆறு மணியளவில் முடித்துக்கொண்டு மீண்டும் திருப்பத்தூர் பேருந்து நிலையம் வந்து, ஏலகிரிப் பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டேன்.

சற்றொப்ப ஒன்றரை மணிநேரத்தில் ஏலகிரியைப் பேருந்து அடையும் என்று சொன்னார்கள். இரவு நேரம் என்பதால் மலையிலிருந்து சுற்றுப்புற ஊர்களைப் பார்வையிடும்பொழுது, வண்ண விளக்கொளி கண்ணுக்கு இனிய விருந்தளித்தது. இரவுக்காட்சியைச் சுவைத்தவண்ணம் சென்றுகொண்டிருந்தேன். மலைமீதிருந்த 14 வளைவுகளை ஊர்ந்து, ஏறிக் கடந்து, பேருந்து ஏலகிரியை அடையும்பொழுது சிறிதளவு சாரல் காற்று வீசத் தொடங்கியது. ‘நிக்ரிஸ்என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளதைச் சொன்னவுடன் வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரிப் பேராசிரியர் ப. சிவராஜி அவர்கள் அடுத்த ஐந்து நிமையத்தில் என்னை எதிர்கொண்டு அழைத்தார்.

அருகிலிருந்த விடுதிகளில் பாட்டும் கூத்துமாக அமர்க்களப்பட்டது. குடும்பம் குடும்பமாக மக்கள் அமர்ந்து விடுதிகளில் உண்பதும் உரையாடுவதுமாக இருந்தனர். ஊர்வன, பறப்பன எல்லாம் மக்கள் வயிற்றில் அடைக்கலம் புகுந்தவண்ணம் இருந்தன. இட்டளியும், தோசையும் கிடைக்குமா? என்று வினவினேன். இல்லை என்று கைவிரித்தனர். வேறு கடையில் வாங்கிக்கொண்டு வருகின்றோம் என்று நண்பர்கள் சொல்லி, அருகில் இருந்த வளமனை அறையில் தங்க வைத்தனர்.

வளமனையின் உரிமையாளர் திரு. சேகர் அவர்களும் அவர்களின் துணைவியார் மருத்துவர் மதுரம் அம்மாவும் அன்புடன் வரவேற்று உரையாடினார்கள். ஓய்வெடுக்கும்படி விடைகொடுத்தனர். இருட்டில் வளமனையின் முழு வனப்பும் தெரியவில்லை. காலையில் பார்த்துக்கொள்வோம் என்று அறைக்குச் சென்று, குளித்து முடிப்பதற்கும் உணவு வருவதற்கும் சரியாக இருந்தது. உண்டு முடித்து, நண்பர்களுடன் செல்பேசியில் என் ஆய்வுத்தொடர்பாக உரையாடிக்கொண்டிருந்தேன். நள்ளிரவில் கண்ணயர்ந்தேன்.

காலையில் எழுந்து ஏலகிரியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டோம். குளிர்ந்த காற்றும், அமைதியும் உள்ளத்தை அமைதிப்படுத்தின. நெடுமரங்களும் பசுமை போர்த்திய குறிஞ்சிநில வனப்பும் கண்ணையும் கருத்தையும் மயக்கின. அண்டை மாநிலத்தார் ஓய்வுப்பொழுதைக் கழிக்க வந்து போவதும் நம் மக்கள் இதுபோன்ற சுற்றுலா இடங்கள் குறித்து அறியாமல் இருப்பதும் எண்ணி எண்ணிக் குமைந்தேன். அங்கிருந்த தொன்போசுகோ கல்லூரிக்குப் பேராசிரியர் சு. இராஜா அழைத்துச் சென்று அருட்தந்தையர்களால் நிருவகிக்கப்படும் கல்லூரியின் வனப்பையும் அங்கிருந்த மழைநீர்ப் பாதுகாப்பு அமைப்பையும் காட்ட, கண்டு மகிழ்ந்தோம்.

நான் தங்கியிருந்த வளமனைக்கு எதிரில் அமைந்திருந்த அரங்கில் முனைவர் மு. தமிழ்க்குடிமகனார் படைப்புகள் குறித்த கருத்தரங்கம் திட்டமிட்டவாறு காலைப்பொழுதில் மிகச் சிறப்பாக நடந்தது. தனித்தமிழ் ஈடுபாடும் ஆய்வார்வமும் கொண்ட பேராளர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஒரு மூத்த பேராசிரியரின் தமிழ் வாழ்க்கையை அனைவரும் நினைவுகூர்ந்தோம். பகலுணவு வாணியம்பாடிப் புலவுச்சோற்றால் மணந்தது. நிகழ்ச்சிக்கு வந்த அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட அணியமானேன்.

மருத்துவர் மதுரம் சேகர் அவர்கள் தாம் குடும்பத்தாருடன் சென்னை செல்வதாகவும், விரும்பினால் தம் வண்டியில் மலையடிவாரம் வரை வரலாம் என்று கூறியவாறு, உணவு செரிப்பதற்கு ஒரு சாற்றினை வழங்கினார்கள். சுவை கருதி மீண்டும் அச்சாற்றினைக் கேட்டு வாங்கி உண்டேன். இயற்கைப் பொருளால் அமைந்த அந்தச் சாற்றினைப் பற்றிச் சொன்ன மருத்துவர் மதுரம் சேகர் அவர்கள் தம் வளமனையில் உள்ள மூலிகைச் செடிகள் இருந்த தோட்டத்தைப் பார்க்க வருமாறு ஓர் அன்பு அழைப்பு விடுத்தார்.  

நானும் அதனைப் பார்க்கும் பெரு விருப்பத்துடன் தயாரானேன். மூலிகைச் செடிகள் இருந்த பகுதியின் கதவினைத் திறந்து, உள்ளே பாதுகாக்கப்படும் ஒவ்வொரு செடியையும் ஒரு குழந்தையைப் போல் பாதுகாத்து வருவதைக் கண்டு வியப்புற்றேன். இது மிளகுச்செடி என்றார்; அது ஏலச்செடி என்றார்: அது அதிமதுரம் என்றார்: அதன் அருகே இருப்பது நீரிழிவு நோயைக் குறைக்கும் மூலிகை என்று ஒரு தழையைப் பறித்துத் தந்தார். இதனை உண்ணுங்கள் என்று ஆர்வமாக வழங்கவும், வாயில்போட்டேன். புளிச்சைக் கீரையின் சுவை இருந்தது. மீண்டும் ஓர் இலையைக் கேட்டு வாங்கி உண்டேன். ஒரு செடியை எடுத்துக்கொடுத்து இதனை வீட்டில் கொண்டுபோய் நட்டுவையுங்கள் என்று அன்புக் கட்டளை போட்டார்கள். வாங்கிக்கொண்டேன். அது சந்தனச்செடி; இது கற்றாழை; இது நிலவேம்பு; இது வில்வம்; என்று அனைத்தையும் இனம்காட்டியதுடன் ஒவ்வொரு மூலிகையின் நோய்நீக்கும் தன்மைகளையும் மருத்துவர் மதுரம் சேகர் விளக்கினார். இவரின் இயற்கை மருத்துவப் பேரறிவு என்னைத் திக்குமுக்காட வைத்தது. தமிழர்கள் வாழ்ந்த இயற்கை வாழ்க்கையை நன்கு அறிந்து வைத்துள்ள மருத்துவர் மதுரம் சேகர் சென்னையில் புகழ்பெற்ற இயற்கை மருத்துவராகத் தம் மருத்துவப் பணியை இருபத்தைந்து ஆண்டுகளாகச் செய்துவருகின்றார்.



மருத்துவர் மதுரம் சேகர் திருப்பத்தூர் மாவட்டம் செலந்தம்பள்ளி என்ற ஊரில் 31.07.1962 இல் பிறந்தவர். பெற்றோர் தேவராஜன், செந்தமிழ்ச்செல்வி. ஐந்தாம் வகுப்பு வரை பிறந்த ஊரிலும், மடவளம் பள்ளியில் 11ஆம் வகுப்பு வரையிலும் பயின்றவர். புகுமுக வகுப்பினைச் சேலத்தில் பயின்றவர். ஆய்வுக்கூடத் தொழில்நுட்பம், இயற்கை மருத்துவம் உள்ளிட்டதுறைகளில் பட்டயச் சான்று பெற்றவர். திருப்பத்தூரில் மருத்துவப்பணியைத் தொடங்கிய மதுரம் சேகர் பல முகாம்கள் நடத்தி மருத்துவத்தை மக்கள் மருத்துவமாக மாற்றியவர். செய்தி ஏடுகளில் இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதியதால் மக்கள் நடுவே செல்வாக்குப் பெற்றார். தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் இவர் உரை விரும்பி ஒலி-ஒளிபரப்பானது.


“செய்வதைச் சொல்வோம், சொல்வதைச் செய்வோம்” என்ற மூலமந்திரத்தைப் பின்பற்றி மருத்துவம் பார்த்ததால் உலகப் புகழ் இவர்களைத் தேடி வந்தது. மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல நோயர்கள் இவர்களின் இயற்கை மருத்துவத்தால் குணமடைந்தனர். பல ஆங்கில மருத்துவர்கள் இவர்களின் மருத்துவமுறைகளைப் பரிந்துரைத்தனர்.

“இல்லந்தோறும் இயற்கை உணவுகள்” (தமிழ் வளர்ச்சித் துறை பரிசுபெற்ற நூல்) என்ற மதுரம் சேகரின் நூல் புகழ்பெற்ற நூலாகும். மதுரம் அவர்களின் கணவர் சேகர் இயற்கை ஆர்வலர். தம் மனைவியின் மருத்துவப் பணிகளில் இணைந்து உதவி வருபவர். இவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள் வாய்த்தனர்; இருவரும் மருத்துவர்கள்.



‘பிறந்தது முதல் இறப்பது வரை உணவு தேவை! மருந்து தேவையா?’ என்று வினா எழுப்பும் மருத்துவர் மதுரம் சேகர், “ஆகாததும் அருகம்புல்லில் ஆகும்” என்கின்றார். பழைய சோற்றினை ‘அன்ன ரச சஞ்சீவி’ என்று கூறி அதன் மருத்துவ குணத்தினை விளக்கிக்கொண்டு வருவதற்கும் ஏலகிரி மலையடிவாரம் வருவதற்கும் சரியாக இருந்தது.
மருத்துவர் குடும்பத்தினருடன் மு.இ.

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி, சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம்



திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி, சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையுடன் இணைந்து தமிழ் இலக்கியங்களில் சமுதாயச் சிந்தனைகள் என்னும் பொருளில்  பன்னாட்டுக் கருத்தரங்கினை நடத்துகின்றது. பேராசிரியர்கள், ஆய்வறிஞர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்கலாம்.

ஜமால் முகமது கல்லூரியின் வரலாறு

1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜமால் முகம்மது கல்லூரி அரசு உதவி பெறும் தன்னாட்சிக் கல்லூரியாகும். இது பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது. 19 இளநிலை மற்றும் 21 முதுநிலைப் பட்டப்படிப்புகள் உள்ளன. 13 துறைகள் ஆய்வுத் துறைகளாகத் திகழ்கின்றன. கல்லூரியில் பயிலும், மொத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 11,205. மேலும் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் 131, நிர்வாக ஊதியம் பெறும் ஆசிரியர்கள் 297 என்ற சிறப்பு நிலைகளைப் பெற்றுத் திகழ்கிறது இக்கல்லூரி.

இக்கல்லூரி 1975-இல் வெள்ளி விழாவையும், 2001-இல் பொன்விழாவையும் 2011 – இல் வைர விழாவையும் கொண்டாடி மகிழ்ந்தது. 2001 – இல் NAAC குழுவால் ஐந்து நட்சத்திரத் தகுதி வழங்கப் பெற்றது. 2004-2005 கல்வி ஆண்டு முதல் தன்னாட்சிக் கல்லூரியாக விளங்குகின்றது. 2009 அக்டோபரில் இக்கல்லூரி NAAC குழுவால் (CGPA 3.6 out of 4.0) ‘A’ தகுதி கல்லூரியாக அங்கீகரிக்கப்பெற்றது. 2011-2012 கல்வியாண்டு முதல் பல்கலைக்கழக மானியக் குழுவால் ஆற்றல்வளத் தனித்தகுதி பெற்ற கல்லூரியாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இச்சிறப்புகளைப் பெற்ற ஜமால் முகம்மது கல்லூரி சமூகத்திற்கு உயர்கல்வியை வழங்கும் தன்மையால் சிறந்த நிர்வாகிகளையும், சிறந்த கல்வியாளர்களையும், சிறந்த அறிவியலாளர்களையும், சிறந்த சமூக ஆர்வலர்களையும், அறிவுத் திறன்மிக்கோர்களையும், கணினி வல்லுநர்களையும் மற்றும் ஆளுமைத் திறன்மிக்கோர்களையும் உருவாக்கி வருகிறது.

தமிழாய்வுத்துறை

               பேராசிரியர் M.கோவிந்தசாமி தேவர் அவர்களை முதல் ஆசிரியராகப் பெற்ற இத்துறையில் 1957 முதல் பகுதி I தமிழும், 1979 முதல் முதுகலைத் தமிழும் பயிற்றுவிக்கப்படுகின்றன. 2003-2004 கல்வி ஆண்டில் ஆய்வுத்துறையாக உயர்ந்தது. இதுவரை 31 ஆய்வாளர்கள் முனைவர் பட்டங்களையும் 100 ஆய்வாளர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களையும் பெற்றுள்ளனர். தற்பொழுது 38 முனைவர்பட்ட ஆய்வாளர்களும், 48 ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இறையருட்கவிமணி கா. அப்துல் கபூர் அவர்களை முதல் தமிழ்த்துறைத் தலைவராகக் கொண்டு செயல்படத் தொடங்கியது இத்துறை. பெரும் புலவர் முனைவர் சி. நயினார் முகமது அவர்கள் துறைத்தலைவராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார். முனைவர் அர.அப்துல் ஜப்பார், முனைவர் பீ.மு. மன்சூர் ஆகியோர் துறைத் தலைவர்களாகவும், துணை முதல்வர்களாகவும் பணியாற்றினர்.

இத்துறையில் சமய நல்லிணக்க அறக்கட்டளை (நிறுவனர் முனைவர் சி. நயினார் முகமது), மீனாட்சி வைரவன் அறக்கட்டளை (நிறுவனர் பேரா. வை. சாத்தையா), சம்சுதீன் அறக்கட்டளை (நிறுவனர் பேரா. . சதகத்துல்லா), சிற்பி பாலசுப்பிரமணியம் அறக்கட்டளை (நிறுவனர் கவிஞர் சிற்பி) சொற்பொழிவுகள் மற்றும் UGC நிதியுதவியுடன் வருடம் பத்துச் சிறப்புச் சொற்பொழிவுகள் வழியாக ஆண்டுதோறும் சான்றோர் பலர் உரை நிகழ்த்துகின்றனர். இத்துறை கணினி ஆய்வுக் கூடத்தையும், 20,000 நூல்கள் கொண்ட நூலகத்தையும் பெற்று சிறந்து விளங்குகின்றது.

முஸ்தபா தமிழ் அறக்கட்டளை

சிங்கப்பூருக்கும், தமிழகத்துக்கும் இடையிலான இலக்கியத் தொடர்பினை மேம்படுத்தும் வகையில் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை என்ற அமைப்பு 2007 – இல் தமிழ் ஆர்வலர் எம். எ.  முஸ்தபா அவர்களால் தொடங்கப்பெற்றது. இவ்வறக்கட்டளை பல நல்ல செயல் திட்டங்களைத் தீட்டி இலக்கியப்பணியாற்றி வருகின்றது.

தமிழ்ப்பணி

இவ்வறக்கட்டளை தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சிக்கு உதவிசெய்து வருகின்றது. மேலும், மேல்நிலை தமிழ்க்கல்வி பயில்பவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், சிங்கப்பபூர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் பெயரில் ஆய்விருக்கை ஒன்றை நிறுவி உள்ளது. இந்த ஆய்விருக்கையில் தொடர்ந்து சிறப்பாக ஆய்வு நடைபெற இருபது இலட்சம் உரூபாவினுக்குத் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பங்குகளை வாங்கித் தந்து அத்தொகை வழியாகக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சிங்கைமலேசிய நாட்டு தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள மலேசியா அமரர் திரு. ஆதி குமணன் நூலகத்திற்குச் சிங்கப்பூர் மலேசிய மண்ணில் தோன்றிய அறிஞர்கள் எழுதிய 1940 முதல் கிடைப்பதற்கரிய 3000 நூல்களை இவ்வறக்கட்டளைத் தேடித்தொகுத்து அன்பளிப்பாக வழங்கியிருக்கிறது.

தமிழ் இலக்கியங்களைப் பரப்பும் முயற்சிகளை மேற்கொள்ளுதல், தமிழறிஞர்களுக்கு உதவி செய்தல், ஆய்வு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குதல் போன்றவை இந்த அறக்கட்டளையின் பணிகளில் குறிப்பிடத்தகுந்ததாகும்.

சிங்கப்பூர், மலேசியத் தமிழர்களின் வாழ்கையைப் பற்றியும், தமிழ் அறிஞர்களின் நூல்கள் குறித்தும் ஆய்வு செய்யும் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை இவ்வறக்கட்டளை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழியாக வழங்கி வருகிறது.

சிங்கப்பூரில் நடக்கும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கு இயன்ற வகையில் பொருளுதவி செய்து வருகின்றது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த படைப்பை ஆண்டுதோறும் தேர்வு செய்து கரிகாற்சோழன் தங்கப் பதக்க விருதையும் இவ்வறக்கட்டளை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழியாக வழங்கி வருகிறது.

தி சிராங்கூன் டைம்ஸ் என்ற தமிழ் மாத இதழையும் நடத்தி வருகின்றது. சிங்கப்பூரில் வெளிவரும் ஒரே தமிழ் மாத இதழ் என்ற சிறப்பு இதற்குண்டு. இது சிங்கை அரசில் பதிவு செய்யப்பட்ட மாத இதழ் என்பது குறிப்படத்தக்கது.
              
இலங்கை, யாழ்பாண தமிழ் நூலகத்திற்கு 2011 முதல் இன்று வரை பல நூல்களைத் திரட்டி அனுப்புவதில இவ்வறக்கட்டளை முன்னிலை வகிக்கின்றது.
              
இஸ்லாமிய மார்க்கப் பெருநூல்களான திருக்குர்ஆன் விரிவுரை தஃப்சீர் இப்னு கஸீர், புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸாயீ, இப்னுமாஜா போன்ற பிரசித்திப் பெற்ற ஆறு நபிமொழித் தொகுப்புகளையும் மிகச்சிறந்த மார்க்க அறிஞர்களைக் கொண்டு நல்ல தமிழில் மொழியாக்கம் செய்தும் சிறந்த தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்கும் நிலையமாக சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் ரஹ்மத் பதிப்பகமும், எம். எ. முஸ்தபா அவர்களால் சென்னையில் 1993 – இல் நிறுவப்பெற்று, இன்று வரை சிறப்பாக இயங்கி வருகிறது. இதில் தமிழாக்க மேற்பார்வையாளராக கவிக்கோ அப்துல் ரகுமான் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பெண்களுக்காக  மார்க்கக் கல்வி மற்றும் தங்கும் வசதியுடன் 1300 மாணவிகள் கல்வி பயின்று கொண்டிருக்கும் ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப் பள்ளியையும், சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் மூலம் நிறுவி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இங்கு LKG முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. பெண்கள் மட்டும் தொழுவதற்காக ஒரு தனி பள்ளிவாசல் இருப்பது இந்த பள்ளியின் சிறப்புக் கூறாகும்.

இந்தப் பள்ளியின் தமிழ்த்துறை சார்பில் .வே.சா. பெயரில் இலக்கிய மன்றம் ஒன்றை நிறுவப்பட்டு 14 ஆண்டுகளாகத்  தொடர்ந்து விருதுகள்வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் தமிழகத்தின் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் மற்றும் .வே.சா விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பன்னாட்டுக் கருத்தரங்கம்

ஜமால் முகம்மது கல்லூரி (தன்னாட்சி), முதுகலை & தமிழாய்வுத்துறையும் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம்தமிழ் இலக்கியங்களில் சமுதாயச் சிந்தனைகள் என்னும் பொருண்மையில் 2016 திசம்பர் திங்களில் நடைபெறவுள்ளது.

பொருண்மை

               எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், பிற்கால இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், வைணவ இலக்கியங்கள், சைவ இலக்கியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், சமண இலக்கியங்கள், பௌத்த இலக்கியங்கள், சித்தர் இலக்கியங்கள், இடைக்காலப் புலவர்களின் இலக்கியங்கள், அறநெறி நூல்கள், இசுலாமிய இலக்கியங்கள், கிறித்துவ இலக்கியங்கள், மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், புதுவகைக் கவிதைகள், நாடக இலக்கியங்கள், நாவல் இலக்கியங்கள், சிறுகதை இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், குழந்தை இலக்கியங்கள், கட்டுரை இலக்கியங்கள் போன்ற இலக்கியங்களில் காணலாகும் அரசியல், கலை, பொருளாதாரம், பண்பாடு, நாகரிகம், மதம், இனம், சாதிப்பாகுபாடுகள், சமுதாயப் பிரதிபலிப்புகள் ஆகியவற்றைக் கண்டறியும் வகையில்தமிழ் இலக்கியங்களில் சமுதாயச் சிந்தனைகள்என்னும் தலைப்பில் இக்கருத்தரங்கு அமைகிறது. இதனை அடியொற்றிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வாளர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

கட்டுரைகள் 4 தாளில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பாமினி எழுத்துருவில் கணினி அச்சிட்டு, அச்சுப்படியோடு குறுவட்டிலும் (CD) பதிவு செய்து அனுப்புதல் வேண்டும். jmctins2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம். கருத்தரங்கிற்கு வருகை புரியும் கட்டுரையாளர்களுக்குப் பயணப்படி வழங்க இயலாது. கட்டுரைகளைத் திருத்தம் செய்யவோ, மாற்றவோ அமைப்புக் குழுவிற்கு உரிமை உண்டு

கட்டுரை, பதிவுப்படிவம், கட்டணம் ஆகியவற்றை அனுப்ப நிறைவுநாள்  01.12.2016.

பேராளர் கட்டணம்ரூ.750.00 (US $.12)
ஆய்வாளர் கட்டணம்ரூ. 500.00 (US $.8)

கட்டணம்திருச்சியில் மாற்றத்தக்கதாக Head, Department of Tamil, Jamal Mohamed College, Trichy – 20 என்ற பெயரில் வரைவோலை (DD) அனுப்பவும்.

கட்டுரைகள் அனுப்ப வேண்டிய முகவரி & தொடர்புக்கு

முனைவர் . சிராஜுதீன்,
உதவிப்பேராசிரியர்
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் & செயலர்
முதுகலை & தமிழாய்வுத்துறை
ஜமால் முகம்மது கல்லூரி (தன்னாட்சி)
திருச்சிராப்பள்ளி – 620 020
அலைபேசி – 9865721142