தஞ்சைக்குச் செல்லும்பொழுதெல்லாம் தவறாமல் கரந்தை செயகுமார் அவர்களைச் சந்திப்பது உண்டு.
இந்தமுறையும் தஞ்சைப் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கியதும் என் வருகையைக் குறிப்பிட்டுச் செல்பேசியில் பேசினேன்.
அடுத்த பதினைந்து நிமையத்தில் கரந்தை செயகுமார் வந்துசேர்ந்தார்.
இருவரும் அருகில் இருந்த கடையில்
அமர்ந்து குளம்பி
அருந்தினோம். பயண நோக்கத்தைப் பகிர்ந்துகொண்டு, அவர்தம் வலைப்பதிவுப் பணிகளை வாயாரப் புகழ்ந்து பாராட்டினேன். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் கவினார்ந்த பணிகளை இருவரும் நினைவுகூர்ந்தோம்.
தஞ்சாவூரின்
புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேராசிரியர் சண்முக. செல்வகணபதியின் இல்லத்திற்குச் சென்றோம். வீடு பூட்டப்பட்டிருந்ததால் அருகில் இருந்தவர்களிடம்
செல்பேசி எண் பெற்று, பேராசிரியர் அவர்களின் துணைவியாரிடம்
எங்கள் வருகையைச் சொன்னோம். இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவேன் எனவும்
அதுவரை காத்திருக்கும்படியும் அவர் பணித்தார்; சொன்னபடி சற்று நேரத்தில்
வந்துசேர்ந்தார். பேராசிரியர் அவர்களைச் சந்திக்க விரும்புவதைச்
சொன்னோம். முன்பே நான் அவர்களின் இல்லத்திற்குச் சென்றுள்ளதால்
என்னை அம்மா அடையாளம் கண்டு கொண்டார்.
இன்று (06.08.2016) மாலை 7 மணி
முதல் 8 மணி வரை தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள மண்டபத்தில் பேராசிரியர்
செல்வகணபதி திருப்புகழ் தொடர்வகுப்பு நடத்துவதாகவும்,
8.30 மணிக்கு இல்லம் திரும்புவார் எனவும் பேராசிரியரின் நிகழ்ச்சி நிரலை அம்மா குறிப்பிட்டார். இல்லத்தில் காத்திருப்பதைவிடக்
கோவிலுக்குச் சென்றால் சற்று நேரம் திருப்புகழ்ப் பாடம் கேட்கலாம்
என்று நானும் கரந்தையாரும் புறப்பட்டோம்.
தஞ்சைப் பெரிய கோவிலின் மண்டபத்தை நாங்கள்
அடைவதற்கும் திருத்தவத்துறை (இலால்குடி) கோயில் இறைவன் மீது அருணகிரியார் பாடிய பாடலைப்
பேராசிரியர் விளக்கத் தொடங்குவதற்கும் நேரம் சரியாக இருந்தது.
திருத்தவத்துறையின் சிறப்பினையும், இத்தலம் குறித்தும்
சமய அடியார்கள் பாடிய பாடல்கள் குறித்தும் பேராசிரியர் முதலில் விளக்கினார்.
திருத்தவத்துறைக்கும் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களுக்கும் உள்ள தொடர்பினை இனிமையாக விளக்கத் தொடங்கினார்.
நாங்கள் வந்திருப்பதைக் கண்டதும் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.
பண்ணாராய்ச்சி வித்தகர் குறித்து நான் உருவாக்கிய ஆவணப்பட முயற்சி குறித்து
எடுத்துரைத்து, அரங்கில் இருந்தவர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார்.
பார்வையாளர்கள் என்ற வரிசையில் எண்மர் இருப்பர். எங்களையும் சேர்த்தால் பதின்மர் இருப்போம். பெரிய கோவிலுக்கு வந்துசெல்லும் சுற்றுலாக்காரர்கள் உரையரங்கம் நடைபெறும் மண்டப முகப்பில் வந்து நின்று பார்ப்பார்கள்; சற்று நேரத்தில்
வந்தவேகத்தில் செல்வார்கள். தமிழ் கற்றவர்களுக்கே திருப்புகழின்
சிறப்புகள் தெரியாமல் இருக்கும்பொழுது கல்லாக் கூட்டத்திற்கு எங்கே அதன் சிறப்பு தெரியப்போகின்றது?
நீண்ட நாளுக்குப் பிறகு ஒரு மாணவனைப் போல்
அமர்ந்து திருப்புகழ்ப் பாடலைப் பாடம் கேட்க அமைந்த வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தேன். இதுவரை 111 வகுப்புகள் திருப்புகழ் குறித்துத் தஞ்சைப் பெரியகோயில் நடந்துள்ளனவாம். நாங்கள் சென்று கேட்டது 112 ஆம் தொடர் வகுப்பு என்று அறிந்தபொழுது வியப்பு ஏற்பட்டது.
திருப்புகழை எவ்வாறு படித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை எளிய நிலை
அறிவுடையவர்களுக்கும் புரியும்படி பேராசிரியர் சண்முக. செல்வகணபதி
விளக்கியபொழுது அவர்தம் பாடஞ்சொல்லும் திறமை எனக்கு விளங்கியது.
தாம் நடத்தும் பாடப் பகுதியையும் அதற்குரிய
விளக்கத்தையும் கணினியில் தட்டச்சிட்டு,
அதன் படியைப் பார்வையாளர்களுக்கு வழங்கும் பேராசிரியரின் பாடத் தயாரிப்பு முறையைப் பாராட்டுதல் வேண்டும். மக்களுக்குப் பாடஞ்சொல்லும்பொழுது
கேட்போர்க்கு இடர்ப்பாடு இருத்தல்கூடாது என்று ஆயத்தமாகத் திட்டமிட்டு வந்த அவரின்
கடமையுணர்ச்சி பளிச்சிட்டது. இவரிடம் கல்லூரியில் பாடம்கேட்ட மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள்தான்!.
தொல்காப்பியம், நன்னூலைப் பார்க்காத சில அன்பர்கள்
பல்கலை- கல்லூரிகளில் பணியாற்றுவதைப் பற்றி ஐயா தமிழண்ணல் சொன்னதை
இங்கு நினைத்துக்கொண்டேன்.
திருப்புகழ்(திருத்தவத்துறை,
918)
தானன தந்தன தத்த தத்தன
தானன தந்தன தத்த தத்தன
தானன தந்தன தத்த தத்தன ...... தனதான
.........
பாடல் .........
காரணி யுங்குழ லைக்கு வித்திடு
கோகன கங்கொடு மெத்தெ னப்பிறர்
காணவ ருந்திமு டித்தி டக்கடு ......
விரகாலே
காதள வுங்கய லைப்பு ரட்டிம
னாதிகள் வஞ்சமி குத்தி டப்படி
காமுக ரன்புகு வித்த கைப்பொரு ......
ளுறவாகிப்
பூரண கும்பமெ னப்பு டைத்தெழு
சீதள குங்கும மொத்த சித்திர
பூஷித கொங்கையி லுற்று முத்தணி ......
பிறையான
போருவை யொன்றுநெ கிழ்த்து ருக்கிமெய்
யாரையும் நெஞ்சைவி லைப்ப டுத்திடு
பூவையர் தங்கள்ம யக்கை விட்டிட ...... அருள்வாயே
வீரபு யங்கிரி யுக்ர விக்ரம
பூதக ணம்பல நிர்த்த மிட்டிட
வேகமு டன்பறை கொட்டி டக்கழு ......
கினமாட
வீசிய பம்பர மொப்பெ னக்களி
வீசந டஞ்செய்வி டைத்த னித்துசர்
வேதப ரம்பரை யுட்க ளித்திட ......
வரும்வீரா
சீரணி யுந்திரை தத்து முத்தெறி
காவிரி யின்கரை மொத்து மெத்திய
சீர்புனை கின்றதி ருத்த வத்துறை ......
வரும்வாழ்வே
சீறியெ திர்ந்தவ ரக்க ரைக்கெட
மோதிய டர்ந்தருள் பட்ச முற்றிய
தேவர்கள் தஞ்சிறை வெட்டி விட்டருள்
...... பெருமாளே.
என்னும் திருப்புகழ்ப் பாடலை விளக்குவதற்கு முன்பாகப் பெரும்புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருப்பெருந்துறை இறைவி
மீது பாடிய, “மாமலர் நறுங்குழற் கொண்டலிடை நித்தில மணிப்பிறை
நிலாவெறிப்ப” எனும் பாடலைப் பெருந்திருப் பிராட்டியார் பிள்ளைத் தமிழிலிருந்து
எடுத்துக்காட்டி விளக்கினார். மேலும் சேக்கிழாரின் பெரியபுராணத்திலிருந்தும்
வரிகளை மேற்கோள்காட்டிப் பேசியமை எம் போலும் தமிழ்ப்பசியுடன் வந்து அமர்ந்தோருக்குப்
பெருவிருந்து என்று சொல்லலாம்.
திருப்புகழை எவ்வாறு படிக்கவேண்டும் என்று
இன்று சிறப்பாக அறிந்துகொண்டேன்.
முதலில் சந்தச் சிறப்பை விளக்கினார். சந்தம்தான்
திருப்புகழ்க் கோட்டையைத் திறக்கும் திறவுகோல் என்றார். சந்தத்தைப்
படித்துக்காட்டி, பாடலைப் பலமுறை படித்தார். பாட்டின் அமைப்பு எங்களின் மனத்தில் பதிந்தது. பிறகு
பிற்பகுதியிலிருந்து பொருள்சொல்லத் தொடங்கினார்.
காவிரியின் வளம், முருகபெருமானின் திறல்,
அருணகிரியாரின் இன்ப விழைவுநிலை என்று பேராசிரியர்
சண்முக. செல்வகணபதி விளக்கினார். சகானா
இராகத்தில் இப்பாடல் உள்ளது என்றார். இந்த இராகம் பாவேந்தருக்குப்
பிடித்தது என்று கூறி, பாவேந்தரின் இசையமுதிலிருந்து “நினையாரோ” என்ற பாடலைப் பாடிக்காட்டினார். ஒப்புமை கருதி, குறுந்தொகையிலிருந்து 16 ஆம் பாடலை மேற்கோள் காட்டினார்.
16 இடங்களில் திருப்புகழில்
தவில் ஓசை குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
பல்வேறு நூல்களிலிருந்து மேற்கோள்கள், பல்வேறு நுட்பங்கள்,
பல்வேறு செய்திகளை எடுத்துக்காட்டித் தம் உரையைச் சிறப்பாக அமைத்தார். பெருநிதியை வாரி வழங்கும் வள்ளல்போல் பேராசிரியர்
செல்வகணபதி தாம் நடத்திய திருப்புகழ் வகுப்பில் தமிழ்
அமிழ்தமாகச் செய்திகளை வாரி வழங்கினார்.
இவர்தம் செல்பேசியைத் திறந்துவைத்திருந்ததால், அதன் வழியாகத் திருச்சிராப்பள்ளி அன்பர்கள்
அவர்கள் இல்லத்திலிருந்து இந்த உரையைச் செவிமடுத்தமையை அறியமுடிந்த்து. மிகச் சரியாக எட்டுமணிக்கு நிகழ்ச்சி நிறைவுற்றது. ஐயாவிடம்
வந்த காரணம் சொல்லி, அழைப்புவிடுத்து, விடைபெற்றுக் கொண்டோம்.
வாரவிடுமுறைநாள் என்பதால் தஞ்சைச் சாலைகளில் சுற்றுலாக்காரர்களின்
எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மக்கள் கடலை நீந்தித், தொடர்வண்டி நிலையம் வருவதற்கும் உழவன் விரைவு வண்டி புறப்படுவதற்கும் சரியாக
இருந்தது.