நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 24 அக்டோபர், 2015

ஆல்ப்சு மலையில் கிடைத்த அனுபவம்…ஆல்ப்சுமலைத்தொடர்

 எங்கள் ஐரோப்பியப் பயணத்தை முறையாகத் திட்டமிடாததால் பல இடர்ப்பாடுகளைச் சந்திக்க நேர்ந்தது. செனீவாவிலிருந்து புறப்பட்ட நாங்கள் இரண்டுமணி நேரத்தில் ஆல்ப்சு மலையின் அடிவாரத்தில் உள்ள இண்டர்லாகென் (Interlaken) என்ற நகரத்தை நெருங்கினோம். வண்டியில் வரும்பொழுதே பகலுணவை முடித்தோம். திருவாட்டி குணவழகி பாரதிதாசன் அவர்கள் பாரிசில் கட்டித் தந்திருந்த புளிச்சோறு நன்கு சுவையாக இருந்தது. இடையிடை குன்றுகளையும், மலைகளையும், காவினையும், ஏரிகளையும் கண்டு இயற்கை இன்பம் நுகர்ந்தோம்.

ஒழுங்கான சாலைகள்


சாலைகளின் ஒழுங்கும் தூய்மையும் எங்களுக்கு வியப்பூட்டின. சுவிசர்லாந்து நாடு கள்வர் அச்சம் இல்லாத நாடு. அங்குத் திருட்டு நடைபெற வாய்ப்பு இல்லை என்று நண்பர்கள் முன்பே கூறினர். அவரவர் போக்கில் வண்டிகளை நெறிமுறைகளுக்கு உட்பட்டு இயக்குகின்றனர். ஏரிகளில் படகுப் பயணம் செய்தும், மலைகளில் வான்குடைகளில் பறந்தும் மக்கள் பொழுதைக் கழிக்கின்றனர். நம் நாட்டுப் பாவலர்களான பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும், இயற்கைக் கவிஞர் வாணிதாசன் அவர்களும், பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா அவர்களும் இக்காட்சிகளைக் கண்டால் இன்னும் நூறு அழகின் சிரிப்பினையும், எழிலோவியத்தினையும், இயற்கை ஆற்றுப்படையினையும் தீட்டித் தீந்தமிழுக்குப் பெருமை சேர்த்திருப்பார்கள்.

ஆல்ப்சு என்ற இலத்தீன் மொழிச் சொல்லுக்கு வெள்ளை என்று பொருள். நிலையான பனிப்பொழிவுடன் வெண்மையாகக் காட்சி அளிப்பதால் ஆல்ப்சு மலை என்ற பெயர் நிலைத்துள்ளது. ஆல்ப்சு மலை மேற்கு ஆல்ப்சு எனவும் கிழக்கு ஆல்ப்சு எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆல்ப்சு மலைத்தொடர் 1200 கி.மீ. நீண்டு காணப்படுவதாகும். இம் மலைத்தொடரில் மொத்தம் 82 சிகரங்கள் உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். ஆல்ப்சு மலையில் ஏறிப்பார்க்க நினைக்கும் சுற்றுலாக்காரர்கள் பெரும்பாலும் இண்டர்லாகெனில் தங்கள் வண்டிகளை நிறுத்திவிட்டு அங்கிருந்து தொடர்வண்டி மூலம் சங்குபுரோச் (Jungfrauoch) சிகரத்துக்குச் செல்வது வழக்கம். இண்டர்லாகெனில் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் உள்ளன. இடையில்  வெங்கன்(Wengen), கிளெயன் (Kleine Scheidegg) உள்ளிட்ட இடங்களில் வண்டி மாற வேண்டியிருக்கும்.

வெங்கன் தொடர்வண்டிநிலையம்


வெங்கன் என்ற இடம் இடையில் உள்ள நகரமாகும்தங்குவதற்கு விடுதிகள் இருப்பதால் சுற்றுலாக்காரர்கள் அங்கும் தங்கி ஓய்வெடுத்து  மறுநாள் அமைதியாகத் தரையிறங்குவதும் உண்டு, ஆல்ப்சு பலநூறு கல் பரந்து விரிந்த மலை. எங்கும் பனிபடர்ந்து நம் இமயமலையை ஒத்துக் காணப்படுகின்றது. பலநாடுகளை இணைக்கும் மலையாகவும் இது உள்ளதுபல இடங்களுக்கும் தொடர்வண்டிகள் மலையில் போவதும் வருவதுமாக உள்ளன
மலைகளுக்கு இடையேசெல்லும் தொடர்வண்டி

ஆல்ப்சு மலைச்சிகரத்துக்குச் செல்லும் தொடர்வண்டிகள் இடையிடை குகைகளில் நுழைந்து செல்கின்றது. ஆல்ப்சு மலைக்குச் செல்ல நினைப்பவர்கள் முன்பே திட்டமிட்டு, இரண்டுநாள் தங்கிச் சுற்றிப்பார்ப்பதுபோல் பயணத்திட்டம் வகுப்பது நல்லது. எங்களுக்கு இதுபோல் ஆற்றுப்படுத்துவோர் யாரும் கிடைக்கவில்லை. சுவிசு சார்ந்த நண்பர்களைத் தொடர்புகொள்ள நினைத்தபொழுது யாரின் தொடர்பும் எங்களுக்குக் கிடைக்காமல் போனது ஒரு பெருங்குறையாகும்.
தொடர்வண்டி நிலையத் தூய்மை

 மக்கள் மலையுச்சியிலிருந்து திரும்புகிற நேரம்நாங்கள் அப்பொழுதுதான் மலையுச்சியை அடையத் தொடர் வண்டி குறித்து இண்டர்லாகெனில் வினவிக்கொண்டிருந்தோம். இப்பொழுது மணி பகல் 12.30. எங்கள் நிலையறிந்த தொடர்வண்டி நிலையத்துப் பணியாளர்கள் சில விவரங்களைச் சொல்லி எங்களை ஆற்றுப்படுத்தினார்கள். "மாலை 5.40 மணிக்கு மலையுச்சியிலிருந்து இறுதிவண்டி அடிவாரத்திற்குப் புறப்படும்; அதில் கட்டாயம் ஏறிவிட வேண்டும்; தவறினால் கடுங்குளிரில் மாட்டிக்கொள்ள நேரும்; அங்கு ஒருவரும் இருக்கமாட்டார்கள்," என்று எச்சரித்து, எங்களுக்குச் சலுகைக் கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கினார்கள். ஒருமணி நேரம்தான் நாங்கள் அங்கு இருக்கமுடியும் என்பதால் எங்களுக்கு உதவ முன்வந்தனர். ஒரு பயணச்சீட்டின் விலை 145 யூரோ ஆகும்(இந்திய மதிப்பு உருவா 10389 - 00).

இண்டர்லாகெனில் தொடர்வண்டி மலையுச்சி நோக்கிப் புறப்படுவதற்குத் தயாராக இருந்தது. எங்கள் ஓட்டுநர் அருள்  எங்களைத் தொடர்வண்டி இருக்கையில் அமர்வது வரை, உடன் வந்து உதவி செய்து வழியனுப்பிவிட்டுஓய்வெடுக்கச் சென்றார்.

முனைவர் கு.இளங்கோவனும் அவரின் துணைவியாரும்

மலைத் தொடர்வண்டி வனப்பாகவும், தூய்மையாகவும் இருந்தது. இருபுறமும் இருந்த இயற்கைக் காட்சிகளைச் சுவைத்த வண்ணம் பயணமானோம். இடைப்பட்ட இடங்களைப் படமாக்கிக்கொண்டு வந்தேன். காலையில் புறப்பட்டிருந்தால் இடையிடையில் உள்ள நிறுத்தங்களில் இறங்கி அங்குள்ள அழகுக் காட்சிகளைக் கண்டு களித்து, அடுத்து அடுத்து வரும் வண்டிகளில் ஏறிச் செல்லலாம். சில மணித்துளிகள் நிறுத்தங்களில் நின்றபொழுது அங்கும் இறங்கிப் பார்க்கலாம்; படம் பிடிக்கலாம்; ஓய்வெடுக்கலாம்.


மு.இ.

எனக்கு மலையுச்சிக்குச் செல்வதை விட எப்பொழுது இறங்குவோம் என்று இருந்தது. கடைசி வண்டியை விட்டுவிட்டால் ஆல்ப்சு மலையில் கை கால் விரைத்துவிடும் என்று சொன்னமை நினைவில் வந்து வந்து சென்றது. இரண்டு இடங்களில் வண்டி மாறினோம்.

பலநாட்டு மக்கள் வருவதும் போவதுமாக உள்ளனர். யாரேனும் இந்திய முகங்கள் தெரிகின்றனவா என்று பார்த்தேன். சீனர்களும், கொரியர்களும் சுற்றுலாக்காரர்களாக வந்தனர். பல வண்டிகளில் மாணவர்கள் சுற்றுலா வந்ததைப் பார்க்க முடிந்தது. அனைவரும் படம் பிடிப்பதும் உரையாடுவதுமாக வந்தனர். அங்கும் சில செல்பேசி நோயாளிகளைப் பார்த்தேன். முகநூலைத் திறப்பதும் ஏதோ பதிவிடுவதுமாக இருந்தனர். புதுவையில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள், நோயாளிகளை அழைத்து வந்தோர். தானி ஓட்டுநர் உட்பட முகநூலைத் தடவிக்கொண்டு இருப்பதைப் பார்த்துள்ளேன். இவர்களையொத்து அங்கும் முகநூலைப் பலர் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். முகநூலின் உலக ஆதிக்கத்தினை நினைத்துப் பெருமூச்சுவிட்டேன்.
கறவைகளுக்குக் காத்துக் கிடக்கும் புல்வெளிகள்

ஆநிரைகளுக்காக..

என் புகைப்படக் கருவியில் வேண்டியமட்டும் இயற்கைக் காட்சிகளைப் படமாக்கிக்கொண்டு வந்தேன். அண்ணன்அரவணைப்புகு. இளங்கோவன் அவர்களும் தம் செல்பேசியில் படம் பிடித்து வந்தார்கள். இருவரின் கருவிகளிலும் இப்பொழுது மின்கலத்திலிருந்த சேமிப்பு வற்றியது. படம் எடுக்க இனி வாய்ப்பு இல்லை என்ற நிலைக்கு வந்தோம்.

என் செல்பேசியை ஆர்வமாக எடுத்துப் பார்த்தேன். அதுவும்பாலில்லாக் குழந்தையாகஅமைதியில் கிடந்தது. படம் எடுக்கும் வாய்ப்பு இனி இல்லை என்ற முடிவுக்கு வந்தபொழுது சங்குபுரோச் (Jungfrauoch) மலையுச்சியில் தொடர்வண்டி வந்து நின்றது. பள்ளி விட்டதும் மாணவர்கள் வீட்டுக்குப் பறப்பதுபோல் அனைவரும் பலதிசை நோக்கி விரைந்தனர். எங்களை ஏற்றிவந்த தொடர்வண்டி எங்களை வேடிக்கைபார்த்தபடி நின்றுகொண்டிருந்தது.

சங்குபுரோச் தொடர்வண்டி நிலையம்(Jungfrauoch)


இப்பொழுது மணி மாலை 4.30. இன்னும் ஒரு மணிநேரம் சுற்றிப் பார்த்துவிட்டு 5.30 மணிக்கு வண்டியேறத் திரும்புவது என்று முடிவுசெய்தோம்.

தொடர்வண்டி செல்லும் பாதை காட்டும் வரைபடம். உச்சியில் சங்குபுரோச் (Jungfrauoch)


சங்குபுரோச் தொடர்வண்டி நிலையம் மலைக்குகையில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சற்றொப்ப 3500 மீட்டர் உயரமுள்ள ஆல்ப்சு மலையுச்சியில் இறங்கி நடந்தபொழுது அங்குத் தமிழ் உரையாடல் கேட்டது. யார் என்று பார்த்தபொழுது கோவைக்கார மருத்துவர்கள் கொங்குத் தமிழில் உரையாடிக்கொண்டிருந்தனர். எங்களை அறிமுகம் செய்துகொண்டோம். அண்ணன் அரவணைப்பு கு.இளங்கோவன் கோவை என்றதும் உள்ளம் குளிர்ந்தார். இப்பொழுது அவர்களின் கருவியால் ஒரு படம் பிடித்துக்கொண்டோம். கோவை மருத்துவர்கள் கணவன் மனைவியர். இடையில் பேச்சை முடித்துக்கொண்டு அடுத்த தொடர்வண்டியைப் பிடிக்க அவர்கள் விரைந்தார்கள்.

மெதுவாக ஆல்ப்சு மலையின் அழகைச் சுவைக்க நாங்கள் முன்னேறியபொழுது அண்ணன் அரவணைப்பு கு. இளங்கோவன்  சற்றுத் தலை சுற்றுவதுபோல் உள்ளது என்றார்கள். இதனைக் கேட்டதும் எனக்கு அச்சம் குடிகொண்டது. இன்றைய பயணத்தின் நிறைவில் இதுபோல் அமைந்துவிட்டதே! என்று நினைத்தேன். சிறிது தொலைவு நடந்த அண்ணன் அவர்கள் தமக்கு ஒரு குளம்பி வேண்டும் என்றார். உண்ணலாம் என்றதும், தாம் மட்டும் சென்று அருகில் உள்ள கடையில் உண்டு, ஓய்வெடுப்பதாகவும். நீங்கள் அருகில் உள்ள நிலைகளை மட்டும் பார்த்துவாருங்கள் என்றும் கூறி அண்ணியார் அவர்களுக்கும் எனக்கும் விடை கொடுத்தார்கள்.

50 மீட்டர் தூரம் சென்ற நாங்கள் இயற்கைக் காட்சிகளைப் பார்க்க மனம் இன்றி, அண்ணன் அமர்வதாகச் சொன்ன தேநீர்க் கடைக்குத் திரும்பி வந்து பார்த்தோம். அண்ணனைக் காணவில்லை. அங்கும் இங்கும் தேடினோம். தேடிய இடத்தையே மீண்டும் தேடினோம். கழிவறை, தொடர்வண்டி நிலையம் என்று அங்கிருந்த குகை முழுவதும் தேடினோம். எங்குப் பார்த்தும் அண்ணன் இல்லை. அண்ணியார் அவர்கள் கவலையில் தோய்ந்து அமர்ந்துவிட்டார்கள். காவலருக்கும் அங்குள்ள அதிகாரிகளுக்கும் தகவல் சொன்னேன். ஒலிபெருக்கியில் அழைத்தோம். எந்தச் செய்தியும் கிட்டவில்லை. மனத்தளவில் சோர்ந்துபோனோம். எங்களுக்கு உரிய பயணச்சீட்டும் அவரிடம் உள்ளது. செல்பேசியும் செயலிழந்துள்ளது. செய்வதறியாது நின்ற பொழுது ஒரு கூட்டமே அவரைத் தேடுவதற்குப் புறப்பட்டுவிட்டது.

தூரத்தில் You are my son, you are my daughter, you are my brother என்று உறவு சொல்லிப் பேசியபடி அண்ணன் கு.இளங்கோவன் அவர்கள் பக்கவாட்டிலிருந்து வந்தார். ஒரு கொரியநாட்டு இளைஞனும், ஒரு கொரியநாட்டுக் குமரியும் அண்ணன் அவர்களை இரண்டுப் பக்கமும் தாங்கிக், கைத்தாங்கலாக அழைத்து வருகின்றனர். ஓர் அரபு நாட்டுச் சுற்றுலாக்காரர் தம் குடும்பத்தாருடன் அண்ணனைப் புடைசூழ வந்தார்.

எனக்கு ஏற்பட்டிருந்த கவலை இப்பொழுதுதான்  தீர்ந்தது. அண்ணியார் அவர்களும் பழைய நிலைக்குத் திரும்பினார்கள். கடைசித் தொடர்வண்டி வருவதற்கும் நாங்கள் ஏறி அமர்வதற்கும் நேரம் சரியாக இருந்தது. அமைதியாக வண்டியில் அமர்ந்தபடி நிலைமையை வினவினோம்.

அண்ணன் கு.இளங்கோவன் குளம்பி அருந்தச் செல்லாமல் வேறு திசையில் சென்று ஆல்ப்சு மலையழகைப் பார்க்க ஒரு தூக்கியில்(LIFT) மேலே சென்று, நான்காவது நிலையில் நின்றபடி பார்க்க, கீழே கிடந்த பனிக்கட்டியில் சறுக்கி விழுந்துள்ளார். மண்டையில் அடிபட்டு, மயக்கமுற்றதைக் கண்ட அரபுநாட்டாரும் கொரியநாட்டாரும் அண்ணனைக் காப்பாற்றிக் கொண்டு வந்த செய்தியைப் பிறகு அறிந்தோம்.


அண்ணன் தலையைத் தடவிப் பார்த்தபொழுது சிறிது வீக்கமும், இரத்தக் கசிவும் இருந்தது. தொடர்வண்டியில் சற்று ஓய்வெடுக்கச் சொன்னோம். நல்ல நினைவு அவர்களுக்குத் திரும்பியது. மருத்துவரைப் பார்க்க நினைத்தோம். நம் ஊர்போல் திரும்பிய திசையில் மருத்துவமனைகள் இல்லை. முதலுதவிக்கும் அங்கு வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தது. இடையில் இரண்டு இடங்களில் தொடர்வண்டி மாறினோம். இரவு  எட்டரை மணிக்கு இண்டர்லாகென் தொடர்வண்டி நிலையத்தில் ஓட்டுநர் அருள் எங்களை அடுத்த நாட்டுக்கு அழைத்துக்கொண்டு செல்ல ஆர்வமாக நின்றுகொண்டிருந்தார்!

2 கருத்துகள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தங்கள் பயணத்தில் எங்களையும் அழைத்துச்சென்றமைக்கு நன்றி. பல புதிய இடங்கள், புகைப்படங்கள். என்றும் மனதில் நிற்பன.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

உடன் பயணித்த உணர்வு ஐயா
நன்றி