நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 20 மே, 2015

பேராசிரியர் இலெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்களைச் சந்தித்தேன்…

பேராசிரியர் இலெ. . கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள்

சென்னையில் நடைபெற்ற (18,19 - 05 - 2015) திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொள்ள நம் நண்பர்கள் அயலகத்திலிருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் வருகின்றார்கள் என்று அறிந்து சென்றிருந்தேன்.

தொடக்கவிழாவில் தமிழ்நாடு அரசு செயலர் திரு. மூ.இராசாராம் இ... உள்ளிட்டவர்களின் உரை கருத்துச்செறிவாக இருந்தது. திரு. மூ. இராசாராம் இ... அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர். உலகின் பிறமொழிகளிலும் திருக்குறளின் உயரிய மொழிபெயர்ப்புகள் வெளிவரவேண்டும் என்று செயல்பட்டு, வினையாற்றி வருபவர். செயலர் அவர்களின் பெரும் ஒத்துழைப்பால் உலகத் தமிழ்ச்சங்கத்தின் தனி அலுவலர் முனைவர் க. பசும்பொன் அவர்கள் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அயலகத்திலிருந்து திரு. . மன்னர் மன்னன் (மலேசியா),முனைவர் மு. பரமசிவம், திரு. செல்வசோதி, முனைவர் ஆர்.  வேல்முருகன் (சிங்கப்பூர்), திரு. பற்றிமாகரன் (இலண்டன்) உள்ளிட்டோர் வந்திருந்தனர். அனைவரிடமும் உரையாடினேன்.

முதல்நாள் நிகழ்ச்சி நிறைவுக்கு வரும்நிலையில் பேராசிரியர் அரங்க. பாரி அவர்களும் நானும் விருகம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் இலெ. . கரு. இராமநாதன் செட்டியார் அவர்களைக் காணச் சென்றோம். நீண்ட தேடலுக்குப் பிறகு பேராசிரியர் அவர்களின் இல்லம் சென்றோம். மகிழ்வுந்தில் செலும்பொழுதே இலெ. . கரு. இராமநாதன் செட்டியார் குறித்த அனைத்து விவரங்களையும் பேராசிரியர் அரங்க. பாரி அவர்கள் சொல்லியவண்ணம் வந்தார்.

பேராசிரியர் இலெ..கரு. இராமநாதன் செட்டியார் அவர்களைப் பற்றி அறிஞர்கள் வழியாகவும் நூல்கள் வழியாகவும் நானும் அறிந்திருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆற்றல்மிகு பேராசிரியராக இலெ. . கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள் விளங்கிப் பல்கலைக்கழக வளர்ச்சிக்குப் பல வகையில் உழைத்துள்ளார் என்று பொதுவாக அறிந்து வைத்திருந்தேன். அவர்தம் கண்டிப்பும், உழைப்பும் குறித்து அவரின் மாணவர்கள் வழியாக அறிந்துள்ளேன். அதுபோல் அண்ணாமலை அரசர் ஏற்படுத்திய தமிழிசைச் சங்க வளர்ச்சியிலும் பேராசிரியர் இலெ. . கரு. இராமநாதன் செட்டியார் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு என்று அறிந்திருந்தேன். அதனால்தான் அண்மையில் மருத்துவர் ச. இராமதாசு ஐயா அவர்கள் திரு. செட்டியார் அவர்களை அழைத்து அவர்களின் தமிழிசைப் பணியைப் போற்றிப் பாராட்டியுள்ளார் என்பதைச் செய்தி ஏடுகளில் படித்துள்ளேன்.

பேராசிரியர் இலெ. . கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள் நூறு அகவை கடந்து நூற்றியொன்றாம் அகவையில் தமிழ் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். பன்னூலாசிரியராகவும், பல மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவும் விளங்கிய திரு. செட்டியார் அவர்களை நீண்ட நாட்களாகக் காணவேண்டும் என்று நினைத்திருந்தும் அந்த வாய்ப்பு பேராசிரியர் அரங்க. பாரி அவர்களால்தான் எனக்குக் கிடைத்தது.

விருகம்பாக்கம் பகுதியில் உள்ள மீனாட்சியகத்தில் எங்கள் மகிழ்வுந்து நின்றது. அழைப்பு மணியை அடித்து வாயிற்படியடுத்து, உள்ளே நுழைந்ததும் திருவாளர் ஆச்சி அவர்கள் எங்களை அன்பொழுக வரவேற்றார்கள். பேராசிரியர் அவர்களுக்கு எங்கள் வருகையைச் சொல்லி, மெதுவாக எழுப்பி அமரவைத்தார்கள். பேராசிரியர் செட்டியார் அவர்களும் அன்பொழுக எங்களை வரவேற்றார்கள்.

பேராசிரியர் அரங்க.பாரி அவர்கள் தம்மை அறிமுகம் செய்துகொண்டு, என்னையும் அறிமுகம் செய்துவைத்தார். பேராசிரியர் அரங்க. பாரியைப் பார்த்த உடனேயே அவரின் கல்வி பற்றியும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் பணியில் இணைந்த வரலாறு பற்றியும், 100 விழுக்காடு துல்லியமாக அறிந்துவைத்திருந்தார். அனைத்தையும் சொன்னபொழுது இருவரும் அதிர்ந்துபோனாம். இந்த அகவையிலும் பேராசிரியர் அவர்களின் நினைவாற்றலை வியந்தபடி அமர்ந்தோம்.
முனைவர் அரங்க.பாரி அவர்கள் பேராசிரியர் அவர்களுக்கு நூல்களை வழங்கி, வாழ்த்துப்பெறுதல்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தாம் பணியாற்றியபொழுது நடந்த நிகழ்வுகளை நினைவுமாறாமல் திரு. செட்டியார் அவர்கள் குறிப்பிட்டார்கள். திரு. செட்டியார் அவர்கள் நூற்று ஒரு அகவையிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தின் தோற்ற வரலாறு முதல் இன்று நடைபெறும் புதிய துணைவேந்தர் பதவி அமர்த்தம்வரை அறிந்துவைத்துள்ளார். தம் காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று அரசியல்துறையில் புகழ்பெற்ற நாவலர் நெடுஞ்செழியன், திரு. மதியழகன், பேராசிரியர் அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மாவீரன் பழ.நெடுமாறன் உள்ளிட்ட அனைவரையும் திரு. செட்டியார் அவர்கள் நினைவுகூர்ந்தார். தம்மைப்பறி பாவேந்தர் பாரதிதாசன் பாடியுள்ள வரலாற்றையும் நினைவுகூர்ந்தார்.

தம் காலத்தில் பணியாற்றிய பேராசிரியர்கள் பற்றியும், தமிழறிஞர்கள் பற்றியும் பல அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். யாழ்நூல் ஆசிரியர் விபுலாந்தர் பணியமர்த்தம், கா.சு.பிள்ளை பணியமர்த்தம், பண்டிதமணியார் மணியமர்த்தம், பண்டாராத்தார் பணியமர்த்தம் உள்ளிட்ட பழைய நிகழ்வுகளை எங்களுக்கு நினைவூட்டினார்.

தம்மை மிக உயர்வாகப் போற்றும் முனைவர் பொற்கோ போன்றவர்களையும் நினைவுகூர்ந்தார்.

பேராசிரியர் திரு. செட்டியார் அவர்களுக்கு அரங்க.பாரி அவர்கள் ஆடை அணிவித்து, தம் நூல்களைப் பரிசாக வழங்கினார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபொழுது பேராசிரியரைப் பல கோணங்களில் படமாக எடுத்துக்கொண்டேன். பேராசிரியர் அவர்களிடம் கேட்டுத் தெளிவுபெறவேண்டிய சில வினாக்களைப் பல ஆண்டுகளாக நான் வைத்திருந்தேன்.
மு.இளங்கோவன், பேராசிரியர் இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார், திருவாளர் ஆச்சி அவர்கள்.

பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் பற்றி திரு. செட்டியார் அவர்களின் கருத்து என்ன? என்று வினவினேன். ஏனெனில் திரு. செட்டியார் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிபொழுது பெருமழைப்புலவர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவர். பேராசிரியர் அவர்கள் ஓரளவுதான் பெருமழைப்புலவர் பற்றி சொன்னார். அடுத்துப் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் பற்றி வினவினேன். ஏனெனில் பேராசிரியர் பணிபுரிந்தபொழுதுதான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துப் பணியிலிருந்து பண்ணாராய்ச்சி வித்தகர் விலக நேர்ந்தது.  பொருத்தமான காரணங்களைப் பேராசிரியர் சொல்லவில்லை என்றாலும் பண்ணாராய்ச்சி வித்தகரின் இசைப்புலமையை ஒத்துக்கொண்டார். ஓதுவார்களின் பண்மரபு குறித்த முடிவுகளைப் பண்ணாராய்ச்சி வித்தகர் மறுத்துரைத்த வரலாற்றை நினைவுகூர்ந்தார்.

பேராசிரியர் இலெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள் எல்.பி.கே.ஆர் என்று கல்வியுலகில் அறியப்பட்டவர். நெற்குப்பை என்ற ஊரில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒன்பது முறை பொறுப்புத் துணைவேந்தராகவும் பணியாற்றியவர். அரசர் குடும்பத்திற்கு மிகவும் நம்பிக்கைக்குரியவாரக விளங்கியவர். நோக்கு, சோழவேந்தர் மூவர்(1957) உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

பேராசிரியர் அவர்களிடம் உரையாடியபடியே அவர்களின் வீட்டில் மாட்டப்பெறிருந்த படங்களைப் பார்த்தேன். பேராசிரியர் எல்.பி.கே.ஆர் அவர்களின் உழைப்பைப் போற்றும் வகையில் பல நினைவுகளையும் வரலாற்றையும் சொல்லும் படங்கள் இருந்தன. அதில் ஒன்று அண்மையில் மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் திரு. செட்டியார் அவர்களின் தமிழிசைப் பணியைப் போற்றிப் பாராட்டும் நிகழ்ச்சியை நினைவூட்டும் ஒரு படம் வரவேற்பறையில் மாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். உண்மையாகத் தமிழுக்கும், தமிழிசைக்கும் உழைப்போரைப் போற்றுவோர் அருகிக் காணப்படும் நிலையில் மருத்துவர் ச.இராமதாசு ஐயா அவர்கள் நூற்றாண்டு கண்ட பேராசிரியரை அழைத்துவந்து பாராட்டியமையைப் போற்றித்தானே ஆகவேண்டும்.

பேராசிரியர் அவர்களும் ஆச்சி அவர்களும் வழங்கிய தேநீரைப் பருகியபடி அவர்களின் குடும்பநிலை, பிறந்த ஊர், கல்வி குறித்த விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டோம். முதுமைநோக்கி அவர்களை ஓய்வெடுக்கும்படிக் கேட்டுக்கொண்டு, மகிழ்ச்சியுடன் விடைபெற்றுக் கொண்டோம். நூற்றாண்டு கண்ட ஒரு தமிழறிஞரைப் பார்த்த மனநிறைவும், அவர்களுடன் உரையாடிய நினைவுகளும் என்றும் என் உள்ளத்தில் பசுமையாக இருக்கும்.1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அரிய மனிதரைச் சந்தித்ததைப் பற்றிய தங்களின் பகிர்வு மூலமாக பல அரியனவற்றை அறிந்தேன். தங்களின் மூலமாகப் பல அறிஞர்களைப் பற்றி அறியும் வாய்ப்பு கிடைக்கிறது. நன்றி.