நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 21 ஏப்ரல், 2014

சிதம்பரம் நடராசர் கோயிலில் 108 கரணச் சிற்பங்கள்





   தில்லையம்பலத்திற்குப் பலமுறை சென்றிருந்தாலும் முன்பெல்லாம் பார்க்காத பார்வை இப்பொழுது கிடைத்தது. நடராசர் கோயிலின் அமைப்பும் கல்சிற்பங்களின் நேர்த்தியும் தமிழர்களின் கட்டடக்கலை, பொறியியல் துறை சார்ந்த அறிவுக்குச் சான்றுகளாக நூற்றாண்டைக் கடந்து நின்றுகொண்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முகம் கொடுத்தும், பல்வேறு படையெடுப்புகளுக்கு ஈடுகொடுத்தும் நிற்கும் இந்த அரிய கருவூலத்தின் அழகினை நாள்முழுவதும் நின்றும், இருந்தும் கண்டு மகிழவேண்டும்.

   நேற்று நான் பருந்துப் பார்வையாக அனைத்தையும் பார்த்துவிட்டுக் கீழை வாயிலில் நிலைகொண்டு, அங்கிருந்த கரணச் சிற்பங்களைப் பார்த்தேன். 108 கரணக் காட்சிகள் சிற்பியால் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சிற்பிக்கு நாட்டிய அறிவும், சிற்ப அறிவும் நிறைந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் இவை போன்ற சிற்பங்களைச் செதுக்கமுடியும்.

ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு வரிசையில் அடுக்கிய சிற்பங்களாக இக் கரணச் சிற்பக் காட்சிகள் உள்ளன. சிதம்பரம் கோயிலில் கீழைக்கோபுரத்தின் கிழக்குப்பகுதியில் தெற்குச் சுவரிலும் வடக்குச் சுவரிலும்  நான்கு வரிசையாக வரிசைக்கு 8 சிற்பங்கள் என்ற வகையில் 32 + 32 = 64 சிற்பங்கள் உள்ளன. மேற்குச் சுவரில் தெற்குப் பகுதியில் 3 X 8 = 24 சிற்பங்களும், வடக்குப் பகுதியில் 8+5+7(?) = 20 ஆக 24 + 20(?) = 44  சிற்பங்களும் உள்ளன.


மேற்குப் பகுதியில் வடபுறச்சுவரில் உள்ள சிற்பங்களுடன் கூடுதல் சிற்பங்களும் முறைமாற்றி வைக்கப்பட்டுள்ள சிற்பங்களும் உள்ளன. ஒவ்வொரு சிற்பங்களின் மேலே கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இவற்றை முறையாக யாரேனும் ஆவணப்படுத்தியுள்ளனரா என்று இனிதான் பார்க்க வேண்டும். இல்லையென்றால் இனி ஆவணப்படுத்த வேண்டும். 

பரதமுனிவர் வழியாகத்தான் இக்கரணங்கள் வந்துள்ளன என்று வேதங்களைச் சான்றுகாட்டி ஆங்கிலத்தில் பல கட்டுரைகளும், நூல்களும் வந்துவிட்டன. தமிழர்கள் வழக்கம்போல் என்ன நடக்கின்றது என்ற விழிப்புணர்வு இல்லாமல் ஆய்வுத்துறைகளுக்கு மூடுவிழா நடத்திவருகின்றனர். கல்வெட்டு அறிவும், கட்டடக்கலையறிவும் நிரம்பப்பெற்றவர்கள், சிற்ப நூல் வல்லுநர்களுடன் சென்றால் புதிய செய்திகளைப் பெறமுடியும். நடராசர் கோயிலின் உள்ளே உள்ள வேலைப்பாடுகள் அமைந்த தூண்களையும், மண்டபங்களையும் கண்டால் பழங்காலத்தில் இருந்த சிற்பிகளின், கோயிற்கலை வல்லுநர்களின் மிகப்பெரிய பொறியியல் அறிவை வியக்காமல் இருக்கமுடியாது. அத்தகு பேரறிவுபெற்ற சிற்பிகள் தமிழ்க்குடியினர் என்பதை மனங்கொண்டால் அத்தகு சிற்ப இலக்கண நூல்கள் தமிழர்களிடம் இருந்தது என்று உளம்கொண்டால் கரணங்கள் வேதத்திலிருந்துதான் தமிழுக்கு வந்தது என்றோ, நாட்டியம் பரதமுனிவர் தந்தது என்றோ எழுதுவதற்குத் தயங்குவார்கள். கரணம் குறித்த முறையான ஆய்வுகளைப் பலதுறை அறிவுடன் மேற்கொள்ளும்பொழுது உண்மை புலனாகும்.

கராத்தே வல்லுநர் சிதம்பரம் திரு. இளங்கோவன் ஐயா அவர்களுடன் இக்கரணங்களைக் காணச் சென்றிருந்தேன். கராத்தே அடவுமுறைகளும் பரதநாட்டிய அடவுமுறைகளும் பல இடங்களில் ஒத்துள்ளன என்ற கருத்தை முன்வைத்தார். தமிழர் நாட்டியத்திலிருந்து கராத்தே வளர்க்கப்பட்டதா அல்லது தமிழர்களின் போர்முறையிலிருந்து நாட்டியம் உள்ளிட்டவை தோற்றம் பெற்றனவா என ஆர்வலர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
















1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

ஒரு நல்ல, தேவையான, கலைப்பெட்டகத்தினை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.